இருதரப்பு மோதலில் தந்தை, மகன் கொலை!!

மினுவாங்கொடை கம்மன்கெதர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலையுண்டவர்கள் தந்தையும் மகனும் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமான மோதல் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த அசம்பாவிதத்திற்கு காரணம என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய கொடியேற்றம்!!

 
ஈழ வள நாட்டின் நீர் வளமும், நில வளமும் நிறைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வவுனியா மாநகரின் வேண்டுவோருக்கு வேண்டும் வரங்களை அள்ளி, வழங்குகின்ற ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்க பெருமானுக்கு நிகழும் சர்வ மங்களங்களும் நிறைந்த ஏவிளம்பி வருடம் ஆவணி மாதம் 09ம் நாள் (25.08.2017) வெள்ளிக்கிழமை சதுர்த்தித் திதியும் அத்த நட்சத்திரமும் கூடிய சுபதினத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

இன்றய கொடியேற்றத்தில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் ஆவணி திங்கள் 17ம் நாள் (02.09.2017) சனிக்கிழமை தேர்த்திருவிழாவும், 03.09.2017 ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேக தினமாகிய திருவோண நட்சத்திரத்தில் நவோத்திர சஹஸ்ர சங்காபிஷேகமும் தீர்த்தோற்சவமும் மாலை கொடியிறக்க வைபவமும் நடைபெறும்.

பக்த அடியார்கள் அனைவரும் வருகை தந்து நரசிங்கப் பெருமானின் திருவருள் பெற்றுய்யுமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.

      

வவுனியா குருமன்காட்டில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு : அறுவர் கைது!!

வவுனியா காளிகோவில் வீதியில் கடந்த 21.08.2017 இரவு 11 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத்தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் வவுனியாவை சேர்ந்த 20 தொடக்கம் 28வயதுடைய இளைஞர்கள் ஆறு பேரை நேற்று (24.08.2017) இரவு கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இச் சந்தேக நபர்கள் மீது பல முறைப்பாடுகள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் காணப்படுவதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா பொது வைத்தியசாலை விநாயகர் ஆலயத்தில் மஹாகும்பாபிஷேகம்!!

 
வவுனியா பொது வைத்தியசாலை வளவிலுள்ள விநாயகர் ஆலயத்தில் மஹாகும்பாவிஷேக விஞ்ஞாபனம் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர்.

சிவஸ்ரீ முத்து ஜெயந்தி குருக்கள் தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் 26ஆம் திகதி எண்ணைக்காப்பும், 27ஆம் திகதி கும்பாவிஷேகம் அதனைத் தொடர்ந்து 10 நாட்கள் திருவிழாவும் இடம்பெறவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவிலிருந்து புகையிரதக் கடவை காப்பாளர்கள் ஜனாதிபதியை சந்திப்பதற்காக நடைபயணம்!!

 
வடக்கு புகையிரத கடவை காப்பாளர்கள் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று (25.08) பகல் 12 மணிக்கு வவுனியாவிலிருந்து ஜனாதிபதியை சந்திக்கும் நோக்கத்துடன் நடைபயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

வடக்கு கிழக்கு புகையிரதக் கடவை காப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.ஜே.ராஜ்குமார் தலைமையில் ஏழு உறுப்பினர்கள் இந்த நடைபயணத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்திற்கு முன்னாலிருந்து ஆரம்பமான இந்நிகழ்வினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆரம்பித்து வைத்தார். இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு புகையிரதக்கடவை ஊழியர்களின் பிரச்சனைகள் மற்றும் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என மத்திய போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டபோதும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அத்துடன் 250 ரூபா ஊதியத்திற்கு அரசாங்கம் இந்த ஊழியர்களை அடிமைகள் போல் நடத்தி வருகிறது என குற்றஞ்சாட்டினார்.

நடைபயணத்தின் முன்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு புகையிரதக் கடவை காப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.ஜே.ராஜ்குமார்,

கடந்த நான்கு ஆண்டு காலமாக பொலிசாரினதும் புகையிரத திணைக்களகத்தின் அதிகாரிகளின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றப்பட்டுள்ளோம் என குறிப்பிட்ட அவர் எமது நாட்டின் ஜனாதிபதியை சந்தித்து எங்களுக்கு நீதி வழங்க வேண்டும் எங்கள் வாழ்கையை நடத்துவதற்கு நிரந்தர நியமனம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வவுனியாவிலிருந்து கொழும்புக்கு எமது நடைபயணத்தை ஆரம்பித்துள்ளோம் என தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம்!!

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் துவிச்சக்கர வண்டியும், மோட்டர் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று மதியம் இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

கனகராயன்குளம் குறிசுட்டகுளம் சந்திக்கருகில் ஏ9 வீதியில் பயணித்த மோட்டார் வண்டியும், துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது துவிச்சக்கர வண்டியில் சென்ற குறிசுட்டகுளத்தில் வசித்து வரும் இராசரத்தினம் பாலசிங்கம் (வயது 62) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் வண்டியில் சென்ற இரு இளைஞர்களில் ஒருவர் காயமடைந்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் 214வது பண்டாரவன்னியன் ஞாபகார்த்த தினம் அனுஸ்டிப்பு!!

 
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள பண்டாரவன்னியனின் உருவச்சிலை முன்றலில் இன்று (25.08.2017) காலை 8.30 மணியளவில் பண்டாரவன்னியன் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மாலை சூடி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோஹன புஸ்பகுமார, வடமாகாண சபை உறுப்பினர்களாக ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வவுனியா வர்த்தகர் சங்க செயலாளர் ஜி.ஸ்ரீஸ்கந்தாராஜா, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீ.பிரதீபன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.ஸ்ரீநிவாசன், பொது அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் 10.30 மணியளவில் வவுனியா கலாச்சாரமண்டபத்தில் பண்டாரவன்னியன் நினைவுப்பேருரை, பண்டாரவன்னியன் நாடக இறுவட்டு வெளியீடு, பாடசாலை மாணவர்களின் நடனம், மாணவர் கல்வி நலநிதி உதவிகள் வழங்கல் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

1982ம் ஆண்டு வவுனியா மாவட்ட சபைத்தலைவராகவிருந்த மு.சிற்றம்பலம் அவர்களின் அழைப்பின் பேரில் பண்டாரவன்னியனுடைய இவ்வுருவச்சிலையினை 1982ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த தா.சிவசிதம்பரம் அவர்களினால் 1982ம் ஆண்டு ஆடி மாதம் 16ம்திகதி திரைநீக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் விஷேட தேவைக்குட்பட்ட சிறுவனுக்கு வீடு கையளிப்பு!!

 
வவுனியாவில் வர்த்தக பிரமுகர்களினால் விஷேட தேவைக்குட்பட்ட சிறுவனுக்கு மலசலகூடத்துடன் படுக்கை அறை அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா வர்த்தகர் சங்கத்திலுள்ள வர்த்தகப்பிரமுகர்கள் ஒன்றிணைந்து விஷேட தேவைக்குட்பட்ட 15வயதுடைய சிறுவன் ஒருவனுக்கு படுக்கை அறையுடன் கூடிய மலசலகூட கட்டடத் தொகுதியை அமைத்துக்கொடுத்துள்ளனர்.
இந் நிகழ்வு நேற்று (24.08) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா மாமடு, நெலுங்குளம் பகுதியில் வசித்து வரும் அனோமாகுமாரி என்ற பெண்மணிக்கு நிலுச லக்மால் என்ற 15வயதுடைய வயது குன்றிய விஷேட தேவைக்குட்பட்ட சிறுவனை கணவனின் உதவி இன்றி வைத்து பராமரித்து வருவதில் பெரும் சிரமத்தினை எதிர்கொண்டுள்ளதாகவும் அதற்காக தனியான படுக்கை அறையுடன் கூடிய மலசல கூட கட்டடத் தொகுதி ஒன்றினை அமைத்துத்தருமாறு வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனிடம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னார் கோரியுள்ளார்.

இதையடுத்து வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் வவுனியா வர்த்தக சங்க பிரமுகர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து வர்த்தக பிரமுகர்கள் 4பேர் ஒன்றிணைந்து இரண்டு இலட்சத்தி ஜம்பதினாயிரம் ரூபா பெறுமதியான படுக்கை அறையுடன் கூடிய மலசல கட்டடத்தினை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கலந்து கொண்டு பயனாளிகளிடம் புதிய கட்டிடத்தினைக் கைளித்து வைக்கப்பட்டது. வர்த்தக பிரமுகர்களுக்கு நினைவுப்பரிசும் வழங்கிவைக்கப்பட்டது. விஷேட தேவைக்குட்பட்ட சிறுவனின் தேவைக்கென பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா வர்த்தகர் சங்க செயலாளர் ஜி.ஸ்ரீஸ்கந்தராஜா. எம்.கே.லியாகத் அலி,  ஆ.அம்பிகைபாகன், எஸ். ஆனந்தராஜா, ரி.சிவரூபன், எஸ்.சுஜன், வர்த்தக நிலைய உரிமையாளர்கள், பொதுமக்கள் பௌத்த சமயத்தலைவர்கள், மாமடு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இறுதிச்சடங்கு செய்யும் ரோபோ!!

 
மனித உருவிலான ரோபோ பூசாரியை ஜப்பான் நிறுவனமொன்று உருவாக்கியுள்ளது.

புத்த மத கோட்பாடுகளின் அடிப்படையில் இறுதிச்சடங்கை செய்து முடிக்கும் ரோபோவுக்கு பெப்பர் என பெயரிடப்பட்டுள்ளது.

டோக்கியோ சர்வதேச கண்காட்சி மையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த ரோபோ, பூசாரிகளின் தேவைகளை நிறைவுசெய்யும் என நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மிச்சியோ நாமுரா கூறியுள்ளார். மேலும் பூசாரிகளுக்கு செலவிடப்படும் தொகை குறையும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆண் வேடமிட்ட சவுதி இளம்பெண் : பொலிஸ் அதிரடி நடவடிக்கை!!

சவுதி அரேபியாவில் ஆண்கள் போன்று உடை அணிந்து வாகனம் ஓட்டிச் சென்ற இளம்பெண் ஒருவரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

குறித்த இளம்பெண் அரேபிய ஆண்கள் அணியும் நீண்ட அங்கி மற்றும் தலைப்பாகை அணிந்து கொண்டு வாகனம் ஓட்டியுள்ளார்.

இளம்பெண்ணின் இந்த வீடியோவானது சமூக வலைதளத்தில் வைரலாகவே, பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மட்டுமின்றி சவுதி அரேபியாவில் பெண்கள் தனியாக வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், குறித்த வீடியோவை பார்த்த ஆண்கள் பலர் இந்த விவகாரம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க நிர்பந்தித்துள்ளனர்.

இதனையடுத்தே பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து அந்த வாகனத்தின் உரிமையாளரையும், ஆண் வேடமிட்டு வாகனம் ஓட்டிய அந்த இளம்பெண்ணையும் பொலிசார் விசாரித்துள்ளனர்.

மட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பில் வேறு இளம்பெண்கள் இருவரையும் பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். அவர்களும் அரேபிய பெண்கள் என்ற போதும் எந்த நாட்டினர் என தகவலை வெளியிட பொலிசார் மறுத்துள்ளனர்.

சவுதி அரேபியா அரசியல் சாசனத்தின்படி பெண்கள் வாகனம் ஓட்டுவதில் விலக்கு இல்லை. ஆனால் மத்திய கிழக்கு நாடுகளின் சமூக மரபுகளுக்கு எதிரானதால் பெண்களை தனியாக வாகனம் ஓட்ட எவரும் அனுமதிப்பதில்லை.

இருப்பினும் காலா காலமாக இருந்துவரும் இதுபோன்ற சமூக மரபுகளை உடைத்தெறியும் நோக்கில் பல பெண்களும் துணிச்சலாக வாகனம் ஓட்ட முயன்று தண்டனைக்கு உள்ளானதுண்டு.

நிலச்சரிவில் சிக்கி 500 பேர் பலி, 810 பேர் மாயம்!!

மேற்கு ஆபிரிக்க நாடானா சியரா லியோனில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 810க்கும் மேற்பட்டவர்கள் மாயமகியுள்ளதாகவும் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சியரா லியோனில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால், அந்நாட்டின் தலைநகரில் உள்ள மலைப்பகுதியில் பெருமளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், சுமார் 2000 க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாகவும், 300க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் 500க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், 800க்கும் அதிகமானோரின் நிலை இன்னும் தெரியவில்லை எனவும் அறிவித்துள்ளது.

பலியானவர்களில் 159 குழந்தைகளும் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயமானவர்களின் கதி என்னவென்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மீட்ப்புப்பணிகளுக்காக சர்வதேச உதவிகளை அந்நாட்டின் ஜனாதிபதி பட்மடா கமரா கோரியுள்ளார்.

விலங்கு போன்று 5 வருடங்களாக மரத்தில் கட்டிவைக்கப்பட்ட சிறுவர்கள்!!

 
மனநலம் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களை அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கடந்த 5 வருடங்களாக மரத்தில் விலங்குகளை போன்று கட்டி வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இரு வெவ்வேறு கிராமங்களில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

உதய்பூர் நகரில் உள்ள Baydi என்ற கிராமத்தை சேர்ந்த ஜீவா ராம்(11) என்ற சிறுவன் போலியோ மற்றும் மனநல குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளான்.

இவனை சரியாக கவனிக்க முடியாத காரணத்தால் இவரது தந்தை ஹர்மா ராம் பணிக்கு செல்லும் போது, வீட்டின் வெளியில் ஒரு மரத்தில் தனது மகனை கட்டி வைத்துவிட்டு சென்றுவிடுவார்.

மனநல குறைபாட்டோடு இருப்பதால் வெளியில் விட்டால் ஏதேனும் பிரச்சனைகள் வந்துவிடுமோ என்ற காரணத்தினால் தான் வெளியில் விடுவதில்லை என்று ஹர்மா கூறியுள்ளார்.
இதேபோன்று Kolyari கிராமத்தை சேர்ந்த உமேஷ்(8) என்ற சிறுவனின் பெற்றோர் எச்ஐவி பாதிப்பால் இறந்துவிட்டனர். இதனால் உமேஷை அவரது பாட்டி பீபி பாய்(75) வளர்த்து வருகிறார்.

மூன்று வயது வரை நன்றாக இருந்த உமேஷ், தங்களது பெற்றோர்களின் மரணத்திற்கு பின்னர் புத்தி பேதலித்தது போன்று ஆகிவிட்டான், இவனை பராமரிப்பது எனக்கு மிகவும் சிரமமாக உள்ளது, அவனை வெளியில் விட்டால் அங்கும் இங்கும் ஓடுகிறான், அவனது பின்னால் ஓட இயலவில்லை, மேலும் அவனை வெளியில் விட்டால் மற்றவர்களோடு சண்டையிட்டு பிரச்சனையை ஏற்படுத்துகிறான் என்பதால் இவ்வாறு மரத்தில் கட்டிவைத்துள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும், அவனுக்கு சிகிச்சை செய்வதற்கு ஏற்ற பணமும் எங்களிடம் இல்லை என்பதால் நாங்கள் அப்படியே விட்டுவிட்டோம் என தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு சிறுவர்களை விலங்கினங்கள் போன்று இப்படி மரத்தில் கட்டி வைத்து கொடுமைப்படுத்தியது மனிதாபிமானமற்ற முறை என்று கூறியு தன்னார்வ தொண்டு அமைப்பு, இவர்கள் இருவரையும் மீட்டு தங்கள் பாதுகாப்பில் எடுத்துக்கொண்டனர்.

மகனின் கண்ணெதிரே அடித்துக் கொல்லப்பட்ட தாய் : பதற வைக்கும் சம்பவம்!!

சிறுவனின் கண்ணெதிரே அவனது தாயார் அடித்துகொலை செய்யப்பட்ட சம்பவம் வட இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மனித நேயத்தையே பதற வைக்கும் இச்சம்பவம் இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

அம்மாநிலத்தில் உள்ள சாகிப்கஞ்ச் மாவட்டத்தில் உள்ளது ராதாநகர் என்ற இடத்தில் 9வயது சிறுவன் உள்ளிட்ட நான்குபேர் பிச்சை எடுத்துவந்துள்ளனர்.

அதே நேரம், அந்த மாவட்டத்தின் பல பகுதிகளில் பெண்களின் தலைமுடியை மர்ம நபர்கள் மிகவும் மர்மமான முறையில் வெட்டி எடுக்கப்படுவதாக தகவல்கள் பரவியிருந்தது.

இந்நிலையில், குறித்த சிறுவன் உள்ளிட்ட இந்த பிச்சைக்காரக் குழுவினர் வைத்திருந்த பையில் தலைமுடி இருந்ததாக தெரியவந்தது. கத்தரிக்கோல் உள்ளிட்ட மர்மமான பொருட்களும் அப்பெண் வைத்திருந்த பையில் இருந்ததாகச் சொல்லப்பட்டது.

பெண்களின் தலைமுடியை வெட்டிவந்த அந்த மர்மக் குழு இவர்கள் தான் என்று சந்தேகமுற்ற அப்பகுதி மக்கள் இக் குழுவினரை மோசமாகத் தாக்க தொடங்கினர். அவர்கள்மீது பொல்லுகளாலும் கற்களாலும் கொலைவெறித்தனத்துடன் தாக்கிக்கொண்டே இருந்தார்கள்.

ஆனாலும் தாங்கள் பிச்சைக்காரர்கள் என்றும் தங்களுக்கு ஏதும் தெரியாது என்றும் அக்குழுவிலிருந்த இருந்த பெண்கள் கதறினர். ஆனால் அதனைக் காதுகொடுத்துக் கேளாமல் ஆத்திரத்தில் இருந்த இளைஞர்கள் பெண் ஒருவரின் தலையை கல்லால் எறிந்து சிதைத்தனர்.

இதனால் 45வயது மதிக்கத்தக்க அப்பெண் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

அவரது 9வயது மகனுக்கும் கடுமையான காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களுடன் சேர்ந்துவந்த மற்ற இரு பெண்களும் தப்பித்து ஓடிவிட்டனர்.

சிருவனின் முன்னே அவனது தாயை மோசமாகக் கொலை செய்த சம்பவம் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கார் விபத்தில் பிரபல நடிகர், நடிகை மரணம்!!

கார் விபத்தில் கன்னட தொலைக்காட்சி நடிகர் மற்றும் நடிகை உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட தொலைக்காட்சி தொடர்கள் பலவற்றில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ரச்சனா (23), கன்னடத்தில் சிரிப்பு நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஜீவன் சுரேஷ்.

இவர்கள் இருவர் மற்றும் அதனுடன் நான்கு நண்பர்கள் சேர்ந்து கர்நாடக மாநிலத்தின் Dakshina Kannada மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு அதிகாலை காரில் சென்று கொண்டிருந்தனர்.
ஜீவன் காரை ஓட்டினார், காரின் இடது பக்கத்தில் ஒரு பேருந்து வேகமாக வந்த நிலையில் காரை ஜீவன் வலது பக்கமாக திருப்பினார்.

அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு டிரக் லொறி மீது கார் படுபயங்கரமாக மோதியது, இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ரச்சனாவும், ஜீவனும் உயிரிழந்தார்கள்.

அவர்களின் நண்பர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள், அவர்களுக்கு சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளது, இது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நீங்கள் கூகுளில் தேடக்கூடாத 5 முக்கிய வார்த்தைகள்!!

கூகுள் வலைத்தளத்தில் நீங்கள் தேடக்கூடிய அனைவற்றிற்கும் நீங்கள்தான் பொறுப்பு. இதனால் உங்கள் IP முகவரி கண்காணிக்கப்படுவது மட்டுமில்லாமல் குற்றவியல் தேடல்கள் காரணமாக 5 முதல் 10 ஆண்டுகள் வரை இதற்கு சிறை தண்டனையும் ஒதுக்கப்பட்டும் இருக்கிறது. குற்றவியல் தேடல்கள் என்ன என்பதையும், உங்கள் பொதுநலன் கருதி நீங்கள் பார்க்கக்கூடாத தேடல்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.

1 . How To Make A Bomb
குண்டு தயாரிப்பது, குண்டு வீச்சு வழிமுறைகள் போன்ற குற்றச்செயல்களுக்கான தேடல்கள் பாதுகாப்பானது அல்ல. இந்த மாதிரியான வார்த்தைகளை விளையாட்டாக தேடுவதும் ஆபத்தான செயல்முறையாகும்.

2 . Killer Kids
குழந்தைகள், இயற்கையின் மிக பெரிய வரம் மட்டுமில்லாமல், அப்பாவி குணம் கொண்டவர்கள். இந்நிலையில், கொலையாளி குழந்தைகள் என்று சமூக வலைதளத்தில் நாம் பயன்படுத்தக்கூடாது.

3 . Searching For Medical Help
கணக்கிலடங்கா தகவல்களை கூகுள் பெற்றிருக்கிறது. ஆனால் உங்கள் உடல் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் அளவிற்கு அது ஒரு மருத்துவர் கிடையாது. உங்கள் உடல் குறைகளை பற்றி கூகுளில் தேடும்பொழுது அது ஒரு சிறிய பிரச்சனையாக இருந்தாலும் கொடிய நோயின் அறிகுறி என்று அது ஒரு முடிவை தரும். இது அச்சத்தை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல் மன உளைச்சலையும் உண்டாக்கும்.

4 . Smokers Lungs
உலகத்தில் புகை பிடிப்பவர்களில் 60 முதல் 70 சதவீதம் வரை நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை பற்றி தேடும்பொழுது கூகுள் பயங்கரமான படங்களை காட்டும். இது புகைபிடிப்பவர்களை மட்டுமில்லாமல் உடன் இருப்பவர்களையும் அச்சுறுத்தும்.

5 . Skin Condition
இவ்வுலகில் மில்லியன் கணக்கான தோல் பிரச்சனைகள் இருக்கிறது. உங்கள் தோல் பிரச்சனைக்கு தேவையான மற்றும் சரியான தீர்வை கணினி போன்ற இயந்திரம் கொடுக்காது. அந்தந்த உடல் பிரச்சனைகளுக்கு ஏற்ற மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

இலங்கை கிரிக்கெட் தொடர்பில் விசாரணை!!

இலங்கை கிரிக்கெட் சம்பந்தமாகக் காணப்படும் நிலைமைகள் தொடர்பாக, விசாரணைகள் நடத்தப்படவுள்ளன என, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, நேற்று (24.08) அறிவித்தார்.

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டி, நேற்று மதியம் 2.30க்கு ஆரம்பித்த நிலையில், நேற்றுக் காலையில், அமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியானது.

தொடர்ச்சியாகக் கிடைக்கும் மோசமான தோல்விகள், நிர்வாக மட்டத்தில் மாற்றங்கள் தேவைப்படுகின்றன என்ற கோரிக்கைகள் ஆகியவற்றுக்கு மத்தியிலேயே, இந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றிக் கலந்துரையாடுவதற்காக, முன்னாள் நிர்வாகிகள், முன்னாள் வீரர்கள், விளையாட்டு நிபுணர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரை அழைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“இந்த நிபுணர்கள் அனைவரையும் ஒரே மன்றத்தில் அமைந்து, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நான் எதிர்பார்க்கிறேன். ஆழமான ஆராய்ச்சிகள் இன்றி, நிர்வாகிகள் மீதோ அல்லது வீரர்கள் மீதோ குற்றஞ்சுமத்துவதில் பயனில்லை.

“குற்றத்தைச் சுமத்துவது எண்ணம் கிடையாது, மாறாக, பிரச்சினைகளைத் தீர்த்து, தேசிய அணியின் பின்னால் ஒன்றுசேர்வதே எண்ணமாகும்” என்று குறிப்பிட்டார்.

எழுத்துமூலமான சமர்ப்பிப்புகளை மேற்கொள்ளுமாறு கோரியுள்ள அவர், இதற்கான மன்றம், 2 வாரங்களுக்குள் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் குழப்பங்களுக்கு மத்தியில், இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகத்தைக் கலைக்க வேண்டுமென்ற கோரிக்கையை, அமைச்சர் ஜயசேகர நிராகரித்தார். இந்தக் கோரிக்கையை, உலகக் கிண்ணத்தை இலங்கைக்குப் பெற்றுக் கொடுத்த தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க, நீண்டகாலமாகக் கோரி வருகிறார்.

“நிர்வாகத்தில் தலையிடுவதற்கு நான் விரும்பவில்லை. அது, சர்வதேச கிரிக்கெட் சபையால் தனிமைப்படுத்தப்படும் நிலையை ஏற்படுத்தும்” என்று அவர் குறிப்பிட்டார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகம், கடந்த பல ஆண்டுகளாக, அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட இடைக்கால நிர்வாக சபைகளாலேயே நியமிக்கப்பட்டு வந்தது. ஆனால், சர்வதேச கிரிக்கெட் சபையின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டில், ஜனநாயக ரீதியான தேர்தல் நடத்தப்பட்டது. அதில் போட்டியிட்ட அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, தற்போதைய தலைவர் திலங்க சுமதிபால தலைமையிலான குழுவால் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வீரர்களின் உடற்றகுதியும் பிரச்சினையாக உள்ளதாக, அமைச்சர் ஜயசேகர தெரிவித்துள்ளார். இது, இலங்கை அணியின் மோசமான பெறுபேறுகளுக்குப் பங்களித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஏற்கெனவே, இலங்கை வீரர்களின் உடற்றகுதி தொடர்பாகவும் அவர்களின் தொப்பை தொடர்பாகவும் அமைச்சர் தெரிவித்த கருத்து, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. தற்போது, மீண்டும் அதே கருத்தை, அவர் வெளியிட்டுள்ளார்