வுவனியாவில் சமூகசேவை செய்துவரும் பகவான் ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலையம்!!

 
வவுனியா பகவான் ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலையம் பல்வேறு வகையான சமூக சேவைகளை சத்தமின்றி சிறப்பாக ஆற்றி வருகின்றது என வவுனியா மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.

சாயி நிலையம் கூமாங்குளத்தில் உள்ள சாயி சிறுவர் இல்லம் என்பன இதில் குறிப்பிடத்தக்கன . இவை தவிர புட்டபர்த்தியில் உள்ள நதியான சித்ராவதி நதியின் பெயரில் நன்னீர் குடிநீர்த்திட்டத்தை கூமாங்குளத்தில் இலவசமாக ஆற்றிவருகின்றனர்.

ஈச்சங்குளம் மறவன் குளம் பகுதியில் இலவச மருத்துவ முகாம்களை கிரமமாக நடாத்தி வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் பயன் பெற்று வருகின்றனர். பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் கல்வி திட்டத்திற்கு நிதி பங்களிப்பு வழங்குதல், மனநலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர்உணவு விநியோகம் என பலதிட்டங்களை இந்நிலையம் செய்து வருகின்றது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

பலர் விசேட உணவுகளை வழங்கி இங்குள்ள சிறுவர்களை மகிழ்வித்து வரும் நிலையில் இன்று நோர்வே வாழ் கொக்குவிலைச் சேர்ந்த சோமரவீந்திரன் அருண் தனது பிறந்த நாளை இங்குள்ள சிறார்களுக்கு விசேட உணவு வழங்கி கொண்டாடியுள்ளார் .

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.ஸ்ரீநிவாசன் பகவான் ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலையத்தின் தற்போதைய தலைவர் அ.தவீசன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே.வசந்தரூபன் ஆகியோருடன் இல்ல காப்பாளர் மகேந்திரன், இந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஆத்மீக சுற்றுலா!!

 
வவுனியாவில் இயங்கும் முதியோர் சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று (17.08.2017) வியாழக்கிழமை V3 அமைப்பின் அனுசரணையில் மாவட்ட சமூகசேவை அலுவலகமூடாக யாழ்ப்பாணம் அழைத்துச் செல்லப்பட்டார்கள். கூமாங்குளம் , வெளிக்குளம், பூந்தோட்டம் , வவுனியா நகரம் ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகளே இவ்வாறு பயணித்தனர்.

மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.ஸ்ரீநிவாசன் தலைமையில் மாவட்ட சமூகசேவை அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எஸ்.கே.வசந்தன் உளசமூகப் பணியாளர்கள் செல்வி இ.கிஸாந்தினி ஆகியோர் இதில் கலந்து மூத்தோருக்கு வழி காட்டிகளாக சேவை ஆற்றினர்.

வவுனியாவில் புளொட் இளைஞரணியினால் வாழ்வாதார உதவிகள்!!

 
வவுனியாவில் புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட இளைஞரணியின் சார்பான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நேற்று (17.08.2017) புளொட் அமைப்பின் இளைஞரணியின் செயலாளர் சு.காண்டீபன் தலைமையில் வவுனியா பாலமோட்டை பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்டு மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டது.

இவ் வாழ்வாதார உதவியினை புளொட் அமைப்பின் லண்டன் கிளை இளைஞரணி உறுப்பினர் எ.முரளிதரனின் ஒழுங்கமைப்பில் அவரின் தந்தை அமரர் திரு.சுப்பிரமணியம் எதிர்வீரசிங்கம் அவர்களின் நினைவாக வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய வாழ்வாதார உதவியினை புளொட் அமைப்பின் உப தலைவர்களில் ஒருவரும் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகரபிதாவுமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) , புளொட் அமைப்பின் வவுனியா முன்னாள் நகர சபையின் உறுப்பினர் திரு.பார்த்தீபன், வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் திரு.லம்போதரன், ஆசிரியர் திரு சுதர்சன், பாலமோட்டை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பொருளாளர் திரு.சுகுமார், புளொட் இளைஞரணியின் பொருளாளர் த.நிகேதன், புளொட் இளைஞரணி மற்றும் நங்கூரம் விளையாட்டுக் கழகத்தின் அமைப்பாளர் வ.பிரதீபன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் உப தலைவர் பி.கெர்சோன், புளொட் இளைஞரணின் உறுப்பினர்களான திரு. கஜீபன்,
திரு. இந்துஜன், திரு சன்சைன், திரு.ரூபன், திரு. லில்ஷென் ஆகியோருடன் கிராம மக்களும் கலந்து வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களை சர்வதேச பிரதிநிதிகள் சந்திப்பு!!

 
வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களை சர்வதேச பிரதிநிதிகள் நேற்று (17.08.2017) இரவு 7 மணி தொடக்கம் 7.45மணிவரை சந்தித்து கலந்துரையாடினார்கள்.

ஐ.நா அலுவலக விசேட பணியாளர் சோமஸ், தாயக தாய்மார், வவுனியா பிரஜைகள் குழு தலைவர் கோ.ராஜ்குமார் ஆகியோருடன் சுமார் 45 நிமிடங்கள் இடம்பெற்ற இச் சந்திப்பின் போது ஜனாதிபதியுடன் இருக்கும் காணாமல் ஆக்கப்பட்ட பெண்பிள்ளைகள் சம்பந்தமாவும், எவ்வாறு உங்களது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்ற விபரங்களை பெற்றுக்கொண்டார்.

நாங்கள் அரசாங்கத்திற்கு இதுவரையில் அழுத்தம் குடுத்துக்கொண்டு இருக்கின்றோம். இதற்கு முறையான திட்டங்களை நாங்கள் அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளோம். வெகு விரைவில் இதற்கு தீர்வினை பெற்றுத்தருவோம் என தெரிவித்தார்.

இன்றுடன் 170 நாட்களாக வீதியில் தங்களது பிள்ளைகளை தேடி சுழற்சி முறையில் உண்ணாவிரத போராட்டத்தில் இருக்கும் இவர்களின் போராட்டத்திற்கு தீர்வு எப்போது?

வவுனியாவில் வயலின் சிறப்பு இசை நிகழ்வும் பயிற்சிப்பட்டறையும்!!

 
வடமாகாண கல்விபண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தலைமையில் யாழ். இந்திய துணைத்தாரகமானது இந்தியக்கலாச்சார உறவுகளுக்கான பேராயம் ஜ.சி.சி.ஆர் (ICCR) மற்றும் வடமாகாண கல்வி பண்ணபாட்டலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து வழங்கிய இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள பிரால வயலின் இசைக்கலைஞர்களான மைசூர் கலாநிதி மஞ்சுநாத் மற்றும் நாகராஜ் சகோதரர்களின் வயலின் சிறப்பு இசை நிகழ்வும் பயிற்சிப்பட்டையும் நேற்று (17.08.2017) காலை 10.30 மணிக்கு வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் யாழ். இந்தியத்தணைத்தூதுவர் ஆ.நடராஜ், வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் இ.இராதாகிருஷ்னண், கோட்டக்கல்விப்பணிப்பாளர் எம்.பிநடராஜ் , மாவட்ட செயலக கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீ.பிரதீபன், வவுனியா அன்பக சிறுவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

​வடமாகாணத்தில் இசை பயிலும் விஷேடமாக வயலின் பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.​

சம்சுங் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு சரிவு : Galaxy Note 4 மின்கலங்கள் மீள் அழைப்பு!!

சம்சுங் நிறுவனம் அண்மையில் எதிர்பாராத விளைவாக பாரிய சரிவு ஒன்றினை எதிர்நோக்கியிருந்தது. அதாவது Galaxy Note 7 கைப்பேசியின் மின்கலங்கள் வெடித்து சிதற ஆரம்பித்ததனால் உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான மின்கலங்களை மீளப்பெற்றிருந்தது.

இதனால் கொரிய நிறுவனத்திற்கு பில்லியன் கணக்கில் இழப்பு ஏற்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது Galaxy Note 4 கைப்பேசியின் மின்கலங்களையும் மீள பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

United States Consumer Product Safety Commission அமைப்பினாலேயே பாதுகாப்பு கருதி சுமார் 10,000 மின்கலங்களை மீளப்பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மீள்புதிப்பிக்கும் நோக்கத்திற்காக AT&T நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் மின்கலங்களில் அசாதாரண செயற்பாடு அவதானிக்கப்பட்டமையினாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை அமெரிக்காவில் மட்டுமே தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடகொரிய ஜனாதிபதியை பாராட்டிய டிரம்ப்!!

வடகொரிய அதிபரான கிம் ஜங் உன் தாக்குதலை தற்போதைக்கு தள்ளி வைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளதால், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இது ஒரு புத்திசாலித்தனமான முடிவு என்று கூறியுள்ளார்.

வடகொரியாவின் செயல்களால் கடும் அதிருப்தியான அமெரிக்கா, அந்நாட்டின் மீது ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது. அந்த தீர்மானமும் ஐ.நாவில் ஏற்றுக் கொள்ளப்பட்டதால், வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிக்கப்பட்டது.

இதற்கு வடகொரியா இறையாண்மைக்கு எதிரானது என்று கூறியது, அதுமட்டுமின்றி அமெரிக்காவுக்கு சொந்தமான வடகொரியாவிற்கு அருகேயுள்ள குவாம் தீவை 4 ஏவுகணைகளை வைத்து தாக்கப் போவதாக கூறியது. இதனால் அங்கிருக்கும் மக்கள் பீதியில் உள்ளனர்.

இந்நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் குவாம் தீவை தாக்குவதற்கு தயாராக நிறுத்தப்பட்டு இருந்த 4 ஏவுகணைகளையும் வாபஸ் பெறும்படி உத்திரவிட்டுள்ளதாகவும், தாக்குதலை தள்ளி வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

 

65 வயது முதியவரை திருமணம் செய்த 16 வயதுச் சிறுமி!!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் 65 வயது ஷேக்கை 16 வயது சிறுமி திருமணம் செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத் அருகே உள்ள நவாப் சாஹெப் குண்டாவைச் சேர்ந்த சையதா உன்னிசா என்பவரது 16 வயது மகளை ஓமானைச் சேர்ந்த ஷேக் அஹமது(60) என்பவர் விலைக்கு வாங்கி திருமணம் செய்துகொண்டதாக சிறுமியின் தாயார் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள புகாரில், இந்த திருமணத்திற்கு நாத்தனார் கவுசியா மற்றும் அவரது கணவர் சிக்கந்தர் உடந்தையாக இருந்துள்ளனர்.

ரம்ஜானிற்கு முன்பு ஐதராபாத் வந்த ஷேக், எனது மகளை திருமணம் செய்துகொள்ள கேட்டார், அதற்கு எனது மகள் மறுத்துவிட்டார்.

பின்பு, ஓமனில் சொகுசான வாழலாம் என்று கூறி சில வீடியோக்களை சிக்கந்தர் எனது மகளிடம் காட்டி அவளை ஏமாற்றியுள்ளார்.

இந்நிலையில் ஐதராபாத் அருகே பர்காசில் உள்ள ஓட்டல் ஒன்றில் சிக்கந்தர் திருமண ஏற்பாடுகளைச் செய்துள்ளார், அவர் ரூ.5 லட்சம் கொடுத்து எனது மகளை வாங்கியுள்ளார்.

திருமணம் முடித்த பின்னர் அவர்கள் இருவரும் ஓமனிற்கு சென்றுள்ளனர். எனது மகளை என்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டால், கொடுத்த பணத்தை திருப்பி கொடுங்கள் என கூறிகிறார்கள், எனவே எனது மகளை மீட்டுத்தரவேண்டும் என கூறியுள்ளார்.

 

இலங்கையில் வாகனங்களின் விலைகள் குறைப்பு!!

150 சீ.சீக்கும் குறைவான வலு கொண்ட இயந்திரங்களைக் கொண்ட மோட்டார் சைக்கிள்களின் இறக்குமதி வரியை 90 வீதமாக குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் இது அமுலுக்கு வரும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.

இதனைத் தவிர சிறிய லொறிகள், சிங்கிள் கெப் வண்டிகளுக்கான வரி 3 லட்சம் ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளதை முன்னிட்டு இந்த வரி நிவாரண அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

டாக்ஸி சாரதியின் மகள் லண்டனில் செய்த சாதனை!!

பிரித்தானியாவில் உபர் டாக்ஸி சாரதியாக பணியாற்றும் நபரின் மகள் லண்டனில் உள்ள மிக சிறந்த பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளார்.

லண்டன் School of Economics என்ற பாடசாலையில் சட்டம் பயிலும் Saadia Sajid என்ற மாணவி முதல் தர சித்தியை பெற்றதன் காரணமாக பல்கலைக்கழக வாய்ப்பை பெற்றுள்ளார்.

18 வயதான குறித்த மாணவி பொருளாதார பாடத்தில் A சித்தியையும், வரலாறு பாடத்தில் A சித்தியையும் அரசியல் பாடத்தில் A சித்தியையும் பெற்றுள்ளார்.

இந்த மாணவி செப்டெம்பர் மாதம் தனக்கான இடத்தை பெற்றுக் கொள்ளும் போது நாட்டிலுள்ள பிரகாசமான மாணவர்களுடன் தோள் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Saadia கிழக்கு லண்டனில் உள்ள நியூஹாம் கல்லூரியின் ஆறாவது பிரிவு மாணவியாகும்.

அந்த பாடசாலையின் குறிப்பிடத்தக்க 95 சதவீத மாணவர்களில் அமெரிக்காவிலுள்ள MIT மற்றும் Oxbridge பல்கலைக்கழங்களிலும் அந்த மாணவி இடங்களை வென்றுள்ளார்.

அந்த மாணவி டாக்ஸி சாரதியான 64 வயதுடைய Sajid என்பவரின் மகளாகும். பிரபல பல்கலைக்கழகத்திற்கு மகளை அனுப்பும் இலட்சியத்திற்காக நீண்ட நேரம் அவரது தந்தை பணி செய்து வருகின்றார்.

“எனது தந்தை எனக்காக முழுமையான ஆதரவுகளை வழங்கினார். பணம் மற்றும் நேரத்தை எனது கனவிற்காக முழுமையாக தியாகம் செய்தார்.

எனது அம்மாவை போன்று எனது தந்தை என்னால் தற்போது பெருமையடைந்துள்ளார். என்னால் இந்த வாய்ப்பினை நம்ப முடியவில்லை்” என குறித்த மாணவி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

 

டெங்கு மரணம் 350ஆக அதிகரிப்பு : ஓகஸ்ட் இரு வாரங்களில் 10,500 நோயாளர்கள்!!

2017ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 350 பேர் பலியானதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

அத்துடன், கடந்த 7 மாதங்களில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 37 ஆயிரத்து 279 பேராக அதிகரித்துள்ளதாகவும் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.

ஓகஸ்ட் மாதத்தின் கடந்த இரு வாரங்களில் 10 ஆயிரத்து 500 இற்கும் அதிகமானோர் டெங்கு நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையின் கடற்படை தளபதியாக தமிழர்?

இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்த கால யுத்தத்திற்குப் பின்னர் முதன்முறையாக இலங்கையின் முப்படைகளில் ஒன்றான கடற்படைக்கு தமிழர் ஒருவரை தளபதியாக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கடற்படையின் கிழக்கு பிராந்திய கட்டளைத் தளபதியாக கடமையாற்றி வரும் ரியர் அட்மிரல் ட்ரெவிஸ் ஜெரமி லியான்ந்துரு சின்னையாவை நியமிக்க இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் பெயரைக் குறிப்பிட விரும்பாத உயர் மட்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இலங்கை மத்திய பிரதேசமான கண்டியை சொந்த இடமாகக் கொண்ட ரியர் அட்மிரல் ட்ரெவிஸ் ஜெரமி லியான்ந்துரு சின்னையா கண்டி ரினிட்டி கல்லூரியில் ஆரம்பக் கல்வியை கற்றுள்ளார்.

இதனையடுத்து கடற்படையின் திருகோணமலை கல்லூரியில் கெடட் அதிகாரியாக 1982 ஆம் ஆண்டு இணைந்து கொண்டு 1984 ஆம் ஆண்டு தனது கடற்படை அதிகாரி பட்டப்படிப்பை முடித்துக் கொண்டுள்ளார்.

பிரித்தானியாவின் டார்ட்மவுத் ரோயல் கடற்படைக் கலாசாலைக்கு தெரிவான அவர் கடற்படை அதிகாரிக்கான விசேட பயிற்சிகளையும் பட்டப்படிப்பையும் முடித்துள்ளார்.

இதன்போது பிரித்தானிய கடற்படையின் போர்க் கப்பல்கள் பலவற்றிலும் களநிலைப் பயிற்சிகளை முடித்துள்ளார். இதற்கமைய பிரித்தானிய போர்க் கப்பலான டெனரில் நில காலம் கடமையாற்றியும் உள்ளார்.

அதேவேளை கப்பல்களுக்கிடையிலான தகவல் பரிமாற்றம் மற்றும் அதிநவீன இலத்திரனியல் யுத்தம் குறித்தும் சிறப்புப் பயிற்சிகளை பிரித்தானிய கடற்படையிடம் பெற்றுக் கொண்டுள்ள ட்ரெவஸ் சின்னையா இறுதிக்கட்ட போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடற்படை நடத்திய பெரும்பாலான தாக்குதல்களிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

அதேவேளை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் ஓரம் கட்டப்பட்டிருந்த சின்னையாவிற்கு, இலங்கையின் தற்போதைய மைத்திரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியதும் முக்கிய பதவி வழங்கப்பட்டது.

இதற்கமைய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட்டிற்கும் – கிழக்கு மாகாண கடற்படைத் தளபதிக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலை அடுத்து கிழக்கு மாகாண கடற்படைத் தளபதியாக 2016 ஆம் ஆண்டு மே மாதம் ரியர் அட்மிரல் ரெவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டிருந்தார்.

 

தனது உயிலை மாற்றி எழுதுகிறார் ப்ரிட்னி ஸ்பியர்ஸ்!!

பிரபல பொப் பாடகி ப்ரிட்னி ஸ்பியர்ஸ் தனது உயிலை மாற்றி எழுதப்போவதாக அறிவித்துள்ளார். தனது இரண்டு மகன்களுக்கும் சரியான வயதில் உரிய ஆதாயம் கிடைக்குமாறு உயில் மாற்றியமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

90களின் இறுதியில் அமெரிக்க பொப் உலகை அசரடித்தவர் ப்ரிட்னி ஸ்பியர்ஸ். குறைந்த வயதில் பல மில்லியன் டொலர்களை சம்பாதித்த ப்ரிட்னியின் வாழ்க்கையில் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை.

மகன்கள் ஷான் மற்றும் ஜேடன் பிறப்பதற்கு முன்னாலேயே தனது உயிலை எழுதியிருந்தார் ப்ரிட்னி. அதன்படி 18 வயதிலேயே அவர்களுக்கு ப்ரிட்னியின் அனைத்து சொத்துகளும் போய்ச்சேரும்.

ஆனால் இந்த புதிய உயிலின் படி, புதிதாக அறக்கட்டளை ஒன்றை ப்ரிட்னி உருவாக்கியுள்ளார். இதில் ப்ரிட்னியின் முன்னாள் கணவர் கெவின் ஃபெடர்லைனும் உள்ளார்.

இந்த அறக்கட்டளையின் மூலம் ப்ரிட்னியின் சொத்து பகுதி பகுதியாக அவரது மகன்களைப் போய்ச்சேரும். அவர்கள் 35 வயதை எட்டிய பிறகே முழு சொத்தையும் அனுபவிக்க முடியும்.

இளம் வயதிலேயே ஏகப்பட்ட பணம் மகன்களுக்கு போக வேண்டாம் என்பதாலேயே ப்ரிட்னி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

இலங்கையில் கழிவுகளைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தி!!

கழிவுகளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் இரண்டாவது திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

கரதியான கழிவு மீள்சுழற்சி நிலையத்தில் இந்த திட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் 10 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது.

மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் மாநகரசபைகள் அமைச்சர், மேல் மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மின் உற்பத்தி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டனர். 500 தொன் கழிவுகளை மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இளம் பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரருக்கு எமனாக வந்த பந்து!!

கிரிக்கெட் பந்து தலையில் தாக்கி பாகிஸ்தானின் பிரபலமான இளம் கிரிக்கெட் வீரரான சுபய்ர் அகம்மட் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பிராந்தியங்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிக்கொண்டிருந்த போதே குறித்த வீரர் உயிரிழந்துள்ளார் என அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவத்தின் போது கிரிக்கெட் வீரர்கள் தங்களது பாதுகாப்புக்கென அணியும் தலைக்கவசத்தை சுபய்ர் அகம்மட் அணிந்திராமையினாலேயே பந்து நேரடியாக தலையில் பட்டு உயிரிழந்துள்ளார்.

இச் சோக சம்பவம் தொடர்பாக பாகிஸ்தன் கிரிக்கெட் சபை “சுபய்ரின் உயிரிழப்பு மிகவும் கவலைக்குரியது. கிரிக்கெட் விளையாடும் போது வீரர்களுக்கு தலைக்கவசம் கட்டாயம் என எமக்கு மற்றுமொரு முறை உணர்த்தியுள்ளது. எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை சுபய்ரின் குடும்பத்தாருக்கு தெரிவித்துக்கொள்கிறோம்” என இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்பெயினில் தீவிரவாதத் தாக்குதல் : 13 பேர் பலி, 50 பேர் படுகாயம்!!

 
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் மக்கள் கூட்டத்திற்குள் வேனால் மோதி தாக்குதல் மேற்கொண்டதில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரின் முக்கிய சுற்றுலாத் தலம் லாஸ் ராம்பலாஸ். இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், அந்நாட்டு மக்களும் குவிந்திருப்பது வழக்கம்.

மாலை நேரம் என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்ட நிலையில், திடீரென கூட்டத்திற்குள் வேன் ஒன்று புகுந்தது.

கண்மூடித்தனமாக மக்கள் கூட்டத்திற்குள் நுழைந்த வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தாக்குதலை மேற்கொண்ட வேனின் சாரதியை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபர் 1989 ஆண்டு மொரோக்கோவில் பிறந்துள்ளதாகவும் குறித்த நபர் தனது பேஸ்புக் பக்கத்தில் கடற்கரையில் பிரதேசத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படமொன்றை கடந்த செவ்வாய்க்கிழமை தரவேற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து, லாஸ் ராம்பலாஸ் பகுதிக்கு யாரும் செல்ல முடியாத வண்ணம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் எவரும் குறித்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் ஒரு தீவிரவாத தாக்குதல்தான் என்று பெலிஸார் உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.