13 ஆண்டுகளுக்கு முன்பு தொலைத்த வைர மோதிரத்தை மீட்டுக்கொடுத்தது கரட்!!

 
கனடா நாட்டுப் பெண்மணி மேரி கிராம்ஸ் 13 ஆண்டுகளுக்கு முன்பு தொலைத்த வைர மோதிரத்தை அவருக்கு மீட்டுக் கொடுத்துள்ளது கரட் ஒன்று.

2004ம் ஆண்டு அல்பெர்டாவில், தனது காய்கறி பண்ணையில் களையெடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மேரி கிராம்ஸ், தனது திருமணத்தின் போது கணவரால் அணிவிக்கப்பட்ட வைர மோதிரத்தைத் தவறவிட்டார்.

ஆனால் மோதிரம் தொலைந்த சம்பவத்தை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மிகவும் ரகசியமாக வைத்திருந்தார் மேரி கிராம்ஸ். தன் கணவரிடமும் கூறாமல் மறைத்த இந்த ரகசியத்தை அவர் தம் மகனிடம் மட்டும் கூறியிருந்தார்.

தொலைந்த மோதிரத்திற்குப் பதிலாக மலிவு விலை கொண்ட மோதிரம் ஒன்றை வாங்கி அணிந்து கொண்ட மேரி, அதுபோன்ற ஒரு சம்பவமே நடக்காததைப் போன்று சமாளித்து வந்தார்.

கடந்த திங்கட்கிழமையன்று, மேரி கிராம்ஸின் மருமகள் கொலீன் டேலீ தங்கள் காய்கறி தோட்டத்தில் நல்ல தடிமனான கேரட் ஒன்றை பிடுங்கியபோது, அத்தோடு சேர்ந்து மோதிரம் காணாமற்போன ரகசியமும் வெளேியே வந்தது!

ஆம், அந்தக் கேரட்டுக்கு நடுவே காணாமற்போன வைர மோதிரம் சிக்கிக்கொண்டிருந்தது.

மண்ணுக்குள் பல ஆண்டுகளாக மறைந்திருந்த அந்த வைர மோதிரத்தின் ஊடாக வளர்ந்த அந்தக் கேரட், பல ஆண்டுகளுக்குப் பிறகு மோதிரம் கண்டுபிடிக்கப்படக் காரணமாக அமைந்துவிட்டது.

கேரட்டோடு கண்டெடுக்கப்பட்ட மோதிரம் யாருடையது என்பதைத் தெரிந்து கொண்ட மேரியின் மகன் உடனடியாக தம் தாயைத் தொலைபேசியில் அழைத்து தகவலைத் தெரிவித்தார்.

பழைய சம்பவங்களை நினைவுகூரும் மேரி, மோதிரம் தொலைந்ததை தனது கணவரிடம் அப்போதே சொல்லியிருக்கலாம், என கூறியுள்ளார்.

மேரியின் கணவர் தற்போது உயிருடன் இல்லை. ஐந்தாண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். மேரிக்கு தற்போது 84 வயதாகிறது.

கேரட் ஒன்றில் வைர மோதிரம் கிடைக்கும் சம்பவம் முதன்முறையாக நடக்கவில்லை.

ஸ்வீடன் நாட்டுப் பெண் ஒருவர் தான் தவறவிட்ட திருமண மோதிரத்தை 16 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டெடுத்த சம்பவம் 2011 இல் நடந்ததும் குறிப்பிடத்தக்கது.

முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!!

தலவாக்கலை – திவ்சிறி பகுதியில் முதியவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் நேற்று முன்தினம் மாலை மீட்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த நபர் 63 வயதுடைய பிச்சமுத்து தங்கவேல் என தெரியவந்துள்ளது.

அத்துடன், முதியவர் வசித்து வரும் வீட்டுக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உறவினர்களால் தேடப்பட்டு வந்த நிலையில் இந்த முதியவரிடன் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் யாழ் பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாகத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவு விழா!!

 
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழா வவுனியா வளாகத்தில் முதல்வர் த.மங்களேஸ்வரன் தலைமையில் இன்று (17.08.2017) காலை 10 மணிக்கு பம்பைமடுவில் உள்ள வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

வவுனியா வளாகத்தின் 25ஆவது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே விஞ்ஞான, கணித பாடங்களில் நடத்தப்பட்ட புதிர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், வவுனியா வளாகத்தில் கடந்த 20 வருடங்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற முதல்வர்கள், உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு, கலை நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல, விஷேட விருந்தினராக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மோகன்லால் கிரேரே, வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, காதர் மஸ்தான், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியா வளாகம் விரைவில் வன்னிப் பல்கலைக்கழகமாக மாற்றம்பெறவுள்ளது!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமானது வன்னி பல்கலைக்கழகமாக பெயரிடப்பட்டு தனியான பல்கலைக்கழகமாக மாற்றப்படும் என உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கடந்த 25 ஆண்டுகளாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கீழ் பிரயோக கணிதம் மற்றும் முகாமைத்துவ பீடங்கள் நடத்திச் செல்லப்பட்ட வவுனியா வளாகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவு விழா இன்றைய தினம் (17.08) பம்பைமடுவில் உள்ள வளாகத்தில் இடம்பெற்றது.

குறித்த, நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இதனை பல்கலைக்கழகமாக மாற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பாராளுமன்றத்தில் யோசனை ஒன்று கொண்டு வரப்பட்டது. இது தொடர்பில் அவதானம் செலுத்தி அமைச்சரவையின் அனுமதியின் கீழ் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னி பல்கலைக்கழகமாக மிக விரைவில் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதனை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ளோம். தற்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளோம்.

தற்போது பல்கலைக்கழகத்திற்கான கட்டிடங்களை கட்டும் நடவடிக்கையும் இறுதித் தருவாயில் இருக்கின்றது. வன்னி பல்கலைக்கழகத்தை அனைத்து வசதிகளையும் கொண்ட பல்கலைக்கழகமாக அமைப்பதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இணைய சேவைக்கான வரி நீக்கம் : மோட்டார் சைக்கிள் மீதான வரி குறைப்பு!!

இணைய சேவைக்காக இதுவரை விதிக்கப்பட்டு வந்த 10 வீத தொலைத்தொடர்பு வரி வரும் செப்டம்பர் மாதம் 01ம் திகதி முதல் குறைக்கப்படும் நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

இந்த வரி நீக்கமானது முற்கொடுப்பனவு இணைய சேவைக்கே அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் நூற்றுக்கு 25 வீதமான பிரதிபலனை மக்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

அதேவேளை 150 சீசீ இற்கு குறைவான அளவுடைய மோட்டார் சைக்கிள்கள் மீதான வரியை, இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் நூற்றுக்கு 90 வீதத்தால் குறைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

விஷேடமாக ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற மோட்டார் சைக்கிள்களுக்கான விலைகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே நிதியமைச்சர் மங்கள சமரவீர இதனைக் கூறினார்.

இதுதவிர சிறிய ரக லொறி மற்றும் சிங்கள் கெப் ரக வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியில் 3 இலட்சம் ரூபா குறைக்கப்படுவதாகவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

மர்மமான முறையில் இறந்து கிடந்த 20 வயது விமானப் பணிப்பெண்!!

இந்தியாவில் விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக இருந்த 20 வயது இளம்பெண் அடுக்குமாடி குடியிருப்பில் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேகாலயா தலைநகரான ஷில்லாங் பகுதியைச் சேர்ந்தவர் கோங்கிஸ்ட் கிளாரா பன்ஷா ராய்(20). தனியார் விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வரும் இவர், கொல்கத்தா நகரின் கேஷ்டோபூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவரது வீட்டில் நேற்று இரவு முதல் காலை வரை மது விருந்து நடந்துள்ளது. இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் இவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்ட சிலர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் உடலை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ள பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூன்றாவது மாடியில் உள்ள தனது வீட்டின் ஜன்னல் வழியாக அவர் கீழே குதித்தோ, விழுந்தோ உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

காதலியை குத்திக் கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற காதலன்!!

மாவனெல்ல பகுதியில் இளைஞன் ஒருவன் தனது காதலியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தானும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் கத்திக்குத்துக்கு இலக்காகிய யுவதி உயிரிழந்துள்ளதுடன், இளைஞன் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

உயிரிழந்த 17 வயதான யுவதியின் சடலம் கேகாலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கொலை தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளன.

நாமல்கம – தீவெல பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான நபரே விஷமருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனும் யுவதியும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், இரு குடும்பத்தாருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞன் யுவதியின் வீட்டிற்குச் சென்று அவரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக மாவனெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இனவெறிக்கு எதிரான ஒபாமாவின் கருத்து டுவிட்டரில் புதிய சாதனை படைத்தது!!

அமெரிக்காவில் 1861ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் யுத்தத்தின் போது விர்ஜினியா மாநிலத்தில் அடிமைகள் சார்புப் படையை ராபர்ட் இ லீ என்பவர் வழிநடத்திச் சென்றார்.

சார்லொட்டஸ்வில்லி நகரில் உள்ள ஒரு பூங்காவில் ராபர்ட் இ லீ சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது சிலை அகற்றப்பட இருப்பதாக அங்குள்ள மக்களுக்கு தகவல் கிடைத்தது.

இதனைக் கண்டித்து கடந்த வாரம் வலதுசாரி வெள்ளை இனத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் சார்லொட்டஸ்வில்லி நகரில் பேரணி நடத்தினர்.

இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு பிரிவினரும் எதிர்ப்பு பேரணி நடத்தினர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

மோதல் கலவரமாக மாறிய சூழ்நிலையில், பேரணி கூட்டத்துக்குள் தாறுமாறாக புகுந்த ஒரு கார் பலர் மீது வேகமாக மோதியது. இதில், 32 வயது பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 15இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

கலவரம் மேலும் பரவாமல் தடுக்க விர்ஜினியாவில் அவசர நிலை பிரகடனம் செய்து கவர்னர் உத்தரவிட்டார். மேலும், பிரச்சினை தீவிரமாகாமல் தடுப்பதற்காக சார்லொட்டஸ்வில்லி நகரம் முழுவதும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.

பலியான பெண்ணுக்கு இரங்கல் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இனத் துவேஷங்களை புறந்தள்ளி அனைவரும் அமெரிக்கர்களாக ஒன்றிணைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

நடந்த சம்பவத்துக்கு இருதரப்பினருமே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், அந்நாட்டின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா சார்லொட்டஸ்வில்லி கலவரம் தொடர்பாக அதிருப்தி தெரிவித்து கடந்த சனிக்கிழமை டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.

மற்றவரின் நிறம், பின்னணி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் அவரை வெறுப்பதற்காக யாருமே பிறக்கவில்லை என ஒபாமா குறிப்பிட்டிருந்தார்.

பல்வேறு இனம், நிறம், மதங்களை சேர்ந்த பிள்ளைகள் ஒன்றுகூடி விளையாடுவதை ஜன்னல் வழியாக ஒபாமா பார்த்து ரசிப்பது போன்ற புகைப்படத்துடன் வெளியானது. சில மணி நேரங்களில் 12 லட்சம் பேர் அவரது கருத்தை ரீ-டுவீட் செய்திருந்தனர்.

திங்கட்கிழமை காலை பத்து மணி நிலவரப்படி, 30 லட்சம் பேர் அவரது கருத்தை ஆமோதித்து லைக் செய்திருந்தனர். டுவிட்டர் வரலாற்றில் மிகவும் விரும்பப்பட்ட ஐந்தாவது டுவீட்டாக ஒபாமாவின் கருத்து புதிய சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்னதாக, இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் பிரபல பொப் பாடகி அரியானா கிரான்டே கடந்த மே மாதம் நடத்திய இசை நிகழ்ச்சியின் போது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர்.

நெஞ்சைப் பிழியும் இந்த சோகம் தொடர்பாக அரியானா கிரான்டே அப்போது டுவீட் செய்திருந்தார். 27 லட்சம் லைக்களுடன் அவரது டுவீட் இதுவரை முதலிடம் பிடித்திருந்தது.

மறைந்த தென்னாபிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாற்று வரிகளை மேற்கோள் காட்டி தற்போது ஒபாமா வெளியிட்ட இந்த டுவீட், அரியானா கிரான்டேவின் டுவீட்டை பின்னுக்குத் தள்ளி 30 லட்சம் லைக்குகளுடன் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது.

வயிற்று வலியால் துடிதுடித்து இறந்த பெண்ணின் சாம்பலில் வெளிவந்த உண்மை!!

வயிற்று வலியால் துடிதுடித்து இறந்த பெண்ணின் சாம்பலில் இருந்து கத்தரிக்கோல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று அண்மையில் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது.

இந்தியா, ஹரியான மாநிலத்தில் நிர்மலா என்னும் 50 வயதுடைய பெண் வயிற்றுவலியால் துடித்துள்ளார். அவருடைய குடும்பத்தினர் அந்த பெண்ணின் வயிற்றுவலியை கண்டுகொள்ளவில்லை.

சிறிது நேரத்தில் அப்பெண் அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்து போயுள்ளார்.

அப்பெண்ணை யாரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமையினாலேயே அவர் இறந்து போயுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்பிறகு உயிரிழந்த குறித்த பெண்ணின் இறுதி சடங்குகள் நிறைவுற்றதன் பின்னர் அந்த பெண்ணை எரித்த இடத்தில் ஒரு அளவிலான கத்தரிக்கோல் சாம்பலுடன் காணப்பட்டுள்ளது.

பிறகுதான் தெரியவந்துள்ளது உயிரிழந்த பெண் கத்தரிக்கோலை விழுங்கியதாலேயே உயிரிழந்துள்ளார் என்று.

தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் கனடிய தம்பதி செய்த மோசமான செயற்பாடு அம்பலம்!!

கனடாவில் காப்புறுதி பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நகைகள் திருட்டு போனதாக பொய்யான முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுமார் 51 லட்சம் பெறுமதியான 89 பவுண் நகைகள் களவு போனதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பொய் முறைப்பாடு செய்த கனேடிய தம்பதிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

கனேடிய தம்பதியின் மோசடி தொடர்பில் சாவகச்சேரி நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு மாவட்ட நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

நகை களவு போனதாக பொய் முறைப்பாடு செய்த தம்பதியும் நீதிமன்றில் ஆஜராகி இருந்தனர்.

இதன்போதே நகைகள் களவு போனதாக பொய் முறைப்பாட்டினை மேற்கொண்ட குற்றத்தை நீதிமன்றில் கனேடிய தம்பதிகள் ஏற்றுக்கொண்டனர்.

குற்றத்தை ஒப்புக்கொண்டவர்களை பிணையில் செல்ல அனுமதித்த நீதிவான், அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை எதிர்வரும் 23 ம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஏழாம் திகதி வரணியில் உள்ள வீட்டில் வைத்து சுமார் 51 லட்சம் பெறுமதியான 89 பவுண் நகைகளை கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டதாக கொடிகாமம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

நீதிமன்ற விசாரணையின் போது காப்புறுதிப் பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ்வாறு பொய் முறைப்பாடு பதிவு செய்ததாக கனேடிய தம்பதிகள் நீதிமன்றில் ஏற்றுக் கொண்டனர்.

போதைப்பொருள் கடத்தல் : பிலிப்பைன்ஸில் ஒரே நாளில் 32 பேர் சுட்டுக்கொலை!!

பிலிப்பைன்ஸில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சந்தேகத்தின் பெயரில் 32 பேரை அந்நாட்டு பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர்.

பிலிப்பைன்ஸின் வடக்கு பகுதியிலுள்ள புலகான் மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தியவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் ஒரே நாளில் 32 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரொட்ரிகோ டியுடெர்ட் (Rodrigo Duterte) பிலிப்பைன்ஸின் அதிபராக கடந்த 2016 ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் திகதி பதவியேற்றது முதல் போதைப்பொருளுக்கு எதிராக தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

டியுடெர்ட்டின் அழுத்தத்தின் பேரில் கடந்த ஆண்டில் 5,000 பேர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கொல்லப்பட்டனர்.

இந்த செயலுக்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் அமெரிக்கா போன்ற உலக நாடுகளும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தன.

இருப்பினும், அதற்கெல்லாம் சற்றும் செவி சாய்க்காமல் குற்றவாளிகளுக்கு எதிரான மிகக்கடுமையான தண்டனைகளை டியுடெர்ட் செயற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

மரக்கட்டை மூலம் கார் தயாரிக்க ஜப்பான் நிறுவனங்கள் திட்டம்!!

எஃகு உலோகத்திற்குப் பதிலாக மரக்கட்டை மூலம் கார் தயாரிக்க ஜப்பான் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

தற்போது கார்கள் ஸ்டீல் எனப்படும் எஃகு உலோகப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுகின்றன. அதனால் கார்கள் அதிக எடையுடன் உள்ளன.

கார்களின் எடையைக் குறைப்பதற்காக மரக்கட்டைகள் மூலம் கார் தயாரிக்க ஜப்பான் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

மரத்தில் உள்ள ஃபைபர் எனப்படும் நாரிழைகள் மூலம் கார் தயாரிக்க பயன்படும் உலோகக்கலவை உருவாக்கப்படவுள்ளது. அது எஃகு உலோகத்தை விட ஐந்தில் ஒரு பங்கு எடை மட்டுமே கொண்டது. அதே நேரத்தில் 5 மடங்கு பலம் வாய்ந்தது.

அதற்கான ஆய்வை ஜப்பானின் கியோடோ பல்கலைக்கழக நிபுணர்கள் மேற்கொண்டுள்ளனர். அதை ஜப்பானின் டென்கோ கார்ப்பரேசன், டொயோட்டோ, டய்க்கோ நிஷிகவா கார்ப்பரேசன் உள்ளிட்ட நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளவுள்ளன.

மரக்கட்டைகள் மூலம் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் பணி 2020 ஆம் ஆண்டிற்குள் முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் தடையில் எவ்வித மாற்றமும் இல்லை!!

பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் தடை சம்பந்தமாக அரசாங்கம் எடுத்துள்ள கொள்கை ரீதியான தீர்மானத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

அரசாங்கம் எடுத்துள்ள கொள்கை ரீதியான தீர்மானத்தை முறையாக மற்றும் விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான பின்னணியை வகுக்கும் பொறுப்பு சுற்றாடல் அதிகாரசபைக்கு காணப்படுவதாக ஜனாதிபதி கூறுகின்றார்.

எஸ்பெஸ்டாஸ் மற்றும் புகையிலை தடை சம்பந்தமாக அரசாங்கம் செயற்படுகின்ற விதத்தில், சூழலை பேணுவதற்காக பாரிய சவாலான பொலிதீன் சம்பந்தமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று மாலை இடம்பெற்ற மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் முன்னேற்ற பரிசீலனை கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதி இவ்வாறு உரையாற்றியுள்ளார்.

உணவுக்காக குப்பைகளை நாடிச் செல்லும் காட்டு யானைகள்!!

இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகள் நடமாடும் வனப்பகுதியில் குப்பைகளும் கழிவுகளும் கொட்டப்படுவதால் அந்த இடத்திற்கு யானைகள் உணவு தேடி வருவதை தினமும் காண முடிகிறது.

வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச உள்ளுராட்சி சபைகளினால் சேகரிக்கப்படும் குப்பைகளும், கழிவுகளும் கொட்டப்படும் திறந்த வனப்பகுதியில் இந்த யானைகள் வருகின்றன.

தினமும் பகல் நேரங்களில் 5 -7 காட்டு யானைகளை கூட்டம் கூட்டமாக அந்த இடத்திற்கு வருவதாகவும், இரவு வேளையில் காட்டுக்கு திரும்பும்போது பயிர்களையும், உடமைகளையும் சேதமாக்குவதாகவும் இந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

கழிவுகளையும், குப்பைகளையும் யானைகள் உணவாக உட்கொள்வது அவற்றின் உயிருக்கே ஆபத்து. இது போன்ற சந்தர்ப்பங்களில் வேறு இடங்களில் நிகழ்ந்துள்ள யானைகளின் உயிரிழப்புகள் ஏற்கனவே பதிவாகியுள்ளதாக வன உயிரினத்துறை அமைச்சக தகவல்கள் மூலம் தெரிய வருகிறது.

மட்டக்களப்பு – பொலநறுவ நெடுஞ்சாலையோரமாக காணப்படும் ஆலங்குளத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதியில் சுமார் 5 வருடங்களாக குறிப்பிட்ட உள்ளூராட்சி சபைகளினால் குப்பைகளும், கழிவுகளும் கொட்டப்படுவதாக கூறப்படுகின்றது.

இதனால் வன உயிரினங்கள் மட்டுமல்ல, அந்த பகுதி சுற்றுச்சூழலுக்கும் சுகாதாரத்திற்கும் அச்சுறுத்தல் காணப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஓட்டமாவடி பிரதேசத்தில் குப்பைகளை தரம் பிரிக்கும் மையமொன்று ஐரோப்பிய ஓன்றியத்தின் உதவியுடன் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் திறக்கப்பட்ட போதிலும், தொடர்ந்தும் அந்த இடத்திலே குப்பைகளும் கழிவுகளும் கொட்டப்படுவதை பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையில் வன உயிரின வலயங்களில் 54 இடங்களில் கழிவுகள் கொட்டப்படுவதாகவும், அந்த இடங்களில் சுமார் 300 யானைகள் வரை நடமாடுவதாகவும் வன உயிரின அமைச்சகம் கூறுகின்றது.

இந்த இடங்களில் யானைகளின் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் மின்சார வேலிகளை அமைப்பதற்கு இந்த அமைச்சகத்திற்கு ஜுன் மாதம் அமைச்சரவையின் அனுமதியும் கிடைத்துள்ளது.

இருந்தபோதிலும், வன உயிரின இலாகாவினால் இது போன்ற இடங்களும் அடையாளங்களும் காணப்பட்டிருந்தால் இந்த எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருக்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

-பிபிசி-

தேசியக் கொடி ஏற்றிய குரங்கு : வைரலாகும் வீடியோ!!

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 15ம் திகதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 4வது ஆண்டாக மூவர்ண கொடியை ஏற்றிவைத்தார்.

மாநில தலைநகரங்களில் நடந்த சுதந்திரதின விழாவில் அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் தேசிய கொடியை ஏற்றினார்கள். டெல்லியில் தேசிய கொடியை ஏற்றிவைத்து குண்டு துளைக்காத மேடையில் நின்றபடி நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றினார்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பள்ளியில் சுதந்திர தின விழ கொண்டாட்டத்திற்காக கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக கொடி கம்பத்தில் கொடி கட்டி வைக்கப்பட்டிருந்தது. கொடி ஏற்ற சிறப்பு விருந்தினர் வருவதற்காக பள்ளி நிர்வாகம் காத்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த ஒரு குரங்கு கொடியை ஏற்றி விட்டு ஓட்டிவிட்டது.

இதை அங்கிருக்கும் நபர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

பெல்ஜியம் ஆண்டு விழாவில் 10000 முட்டைகளைக் கொண்டு ராட்சத ஆம்லெட் தயாரிப்பு!!(காணொளி)

 
பெல்ஜியத்தில் ஆண்டுதோறும் வசந்த காலத்தில் கொண்டாடப்படும் ஆண்டு விழாவில் மக்கள் 10,000 முட்டைகளைக் கொண்டு ராட்சத ஆம்லெட் தயாரித்து, பகிர்ந்து உண்டமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுதோறும் பெல்ஜியம் மக்கள் வசந்தகால விழாவில் வித்தியாசமாக ஏதாவது செய்து, கொண்டாடுவது வழமை.
இந்த ஆண்டு பெல்ஜியத்தில் உள்ள மால்மேடி கிராம மக்கள் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டனர்.

அவர்கள் ராட்சத அளவில் ஆம்லெட் தயாரித்து அதனை அனைவருக்கும் பகிர்ந்து வழங்க முடிவு செய்தனர்.பத்திற்கும் மேற்பட்ட சமையற்காரர்களும் மக்களில் சிலரும் இணைந்து அதற்கு உதவி புரிந்தனர்.

அவர்கள் மிகப்பெரிய பாத்திரத்தில் 10,000 முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் வெங்காயம் மற்றும் இறைச்சியைக் கலந்து ஆம்லெட் செய்து, அந்த ராட்சத ஆம்லெட்டை விழாவில் பங்கு பெற்ற அனைத்து மக்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.