இலங்கைக்கு அருகில் ஆபத்தான தீவு!!

இந்தியப் பெருங்கடலில், இலங்கைக்கு கிழக்கு பக்கத்தில் அழகான சிறிய தீவு ஒன்று அமைந்துள்ளது.

இலங்கைக்கு அருகிலேயே இந்த தீவு உள்ள போதிலும் அங்கு எந்தவொரு சுற்றுலா பயணிகளும் செல்ல முடியாதென தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுலா பயணிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ள இந்த தீவு, சர்வதேச ரீதியாக சுற்றுலாவுக்கான ஆபத்தான தீவாக பெயரிடப்பட்டுள்ளது.

நோர்த் சென்டினேல் (North Sentinel) என பெயரிடப்பட்டுள்ள இந்த தீவில் ஒரு சில பழங்குடியின குழுக்கள் வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுலா பயணிகள் அல்லது பார்வையாளர்களுடன் நட்புறவை ஏற்படுத்தி கொள்ளாத இந்த தீவின் பழங்குடியினர் பார்வையாளர்களை தாக்குவதற்கு அஞ்சுவதில்லை என குறிப்பிடப்படுகின்றது.

உணவு அல்லது வேறு எந்தவொரு பொருள் வழங்கினாலும் பார்வையாளர்களுடன் நட்புறவை ஏற்படுத்தி கொள்ளாத அவர்கள் கட்டுக்கடங்காத குழுக்களாகும் என குறிப்பிடப்படுகின்றது.

வவுனியாவில் ரயில் தண்டவாளத்தில் ஒருவர் தற்கொலை முயற்சி!!

 
வவுனியா மன்னார் வீதி புகையிரதக் கடவைக்கு அண்மித்ததாக புகையிரதத்தில் தற்கொலை செய்ய முன்ற குடும்பஸ்தர் ஒருவரை அப்பகுதியில் கடமையில் இருந்த புகையிரத கடவைக் காப்பாளர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு 7.20 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா – மன்னார் வீதியில் காமினி மகாவித்தியாலயத்திற்கு அண்மித்ததாக அமைந்துள்ள புகையிரததக் கடவைக்கு அண்மித்ததாக உள்ள புகையிரதப் பாதையில் வயது முதிர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நீண்ட நேரமாக படுத்திருந்திருந்துள்ளார்.

இதனை அவதானித்த அயலில் வசிப்பவர்கள் அவரை அவ்விடத்தில் இருந்து அகற்ற முயன்ற போது அவர் மறுப்பு தெரிவித்ததுடன், தான் தற்கொலை செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா – மன்னார் வீதி புகையிரதக் கடவையில் கடமையில் இருந்த உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற உத்தியோகத்தர் அவரை அங்கிருந்து கட்டாயப்படுத்தி அகற்றி புகையிரதக் கடவை காப்பாளரின் அறைக்கு அழைத்து வந்தார்.

இதன்போது அங்கு நின்றவர்கள் இது தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையம் மற்றும் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் உள்ள தமிழ் மொழி மூல அவசர தொலைபேசி இலக்கம் என்பவற்றுக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வவுனியா பொலிசார் குறித்த நபரை மீட்டதுடன் அவர் தற்கொலை செய்யப் போவதாக தெரிவித்தையடுத்தும் மது போதையில் இருந்தமையினாலும் அவரை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

இதேவேளை தனது மகளின் கணவர் தன்னை மதிப்பதில்லை எனத் தெரிவித்தே குறித்த குடும்பஸ்தர் தற்கொலை செய்யப் போவதாக தெரிவித்ததுடன், வவுனியா, கல்நாட்டியகுளம் பகுதியில் வசித்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முட்புதருக்குள் கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை : பெற்றோருக்கு வலைவீச்சு!!

 
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் முட்புதருக்குள் கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை ஒன்றை வழிபோக்கர் ஒருவர் கண்டு மீட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் உனா பகுதியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது, சம்பவம் நடந்த பகுதியில் முட்புதருக்குள் பெண் குழந்தை ஒன்று பழந்துணியால் சுற்றப்பட்டு விட்டுச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் அப்பகுதி வழியாக சென்ற வழிபோக்கர் ஒருவர் குழந்தையின் அழுகுரல் கேட்டு அதிர்ச்சியடைந்து அந்த முட்புதருக்குள் இருந்து குழந்தையை மீட்டுள்ளார்.

குழந்தை அந்த புதருக்குள் குப்புற படுத்த நிலையில் இருந்துள்ளது. முட்கள் கீறியதால் குழந்தையின் உடம்பில் பல பகுதியில் இருந்து ரத்தம் வழிந்த வண்ணம் இருந்துள்ளது. அந்த குழந்தையை அதன் பெற்றோர் இறக்க வேண்டும் என்றே கைவிட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

குழந்தையை மீட்ட அந்த நபர் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு நடந்தவற்றை எடுத்துக் கூறியுள்ளார். இதனையடுத்து விரைந்து வந்த அவசர சிகிச்சைப்பிரிவினர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

முட்புதருக்குள் வீசப்பட்டிருந்ததால் குழந்தையின் உடம்பில் உள்ள காயங்கள் ஆறி வருவதாகவும் தற்போது உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குழந்தையை முட்புதருக்குள் வீசிச் சென்ற அதன் பெற்றோரை பொலிசார் தேடி வருகின்றனர். குழந்தையை வேண்டும் என்றே புதருக்குள் கைவிட்டிருப்பதாக கூறும் சமூக ஆர்வலர்கள் குஜராத் உள்ளிட்ட இந்தியாவின் வட மாநிலங்களில் இது வாடிக்கையாகவே நடைபெற்று வருவதாக கூறுகின்றனர்.

கொழும்பில் திறக்கப்படும் மிகப் பிரமாண்டமான ஹோட்டல்!!

 
கொழும்பு நகரின் காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற சீனாவின் மிகப்பெரும் ஹோட்டல் திறக்கப்படவுள்ளது.

ஷங்கிரிலா ஹோட்டல் செயற்றிட்டம் எதிர்வரும் 16ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து ஹோட்டலில் அறைகளை ஒதுக்கிக் கொள்ள முடியும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அரசியல் ரீதியாக மிகவும் விமர்சனத்திற்கு உட்பட்ட நிலப்பரப்பில் ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஷங்கிரிலா ஹோட்டலில் 500 அறைகள் உள்ளன. கொழும்பு நகரில் அமைந்துள்ள மிகப்பெரிய நீச்சல் தடாகம் இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நிகழ்வுகளுக்காக ஹோட்டலை ஒதுக்கிக் கொள்ள முடியும் எனவும், அங்கு 2000 பேர் அமர்வதற்கான வசதிகள் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கமராவின் காட்சிப்பதிவினால் சிக்கிக் கொண்ட சந்தேகநபர்!!

 
ஹற்றனில் பிரபல வர்த்தக நிலையமொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கண்காணிப்பு கமராவின் உதவியுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று முன்தினம் அதிகாலை ஹற்றன் நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் கொள்ளைச் சம்வமொன்று இடம்பெற்றிருந்தது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரொருவர் நேற்று நாவலப்பிட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த நபர் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற வர்த்தக நிலையத்தில் பதிவாகியிருந்த கண்காணிப்பு கமராவின் காட்சிகளைக் கொண்டே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 10,000 ரூபா பணமும், ஒருதொகை கைபேசி மீள் நிரப்பு அடைகளும் கைப்பற்றப்பட்டதாக ஹற்றன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று ஹற்றன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக ஹற்றன் பொலிஸார் கூறியுள்ளனர்.

மின்சாரம் தாக்கி தாயும் மகனும் பலி!!

லங்காபுர – தல்பொத்த பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் தாய் மற்றும் மகன் உயிரிழந்துள்ளதாக புளஸ்திகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், தயந்தி என்ற பெண்ணும், தஹாம் செத்சர என்ற 7 வயது சிறுவனுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

தாயும், மகனும் பகுதி நேர வகுப்பு நடக்கும் வீட்டுக்கு அருகில் இருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

மின் கம்பத்தில் இருந்து தொங்கிய வயரை சிறுவன் பிடித்துள்ளார். அப்போது சிறுவனை மின்சாரம் தாக்கியுள்ளது.

மகனை காப்பாற்ற முயற்சித்த தாயும் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் குறித்து புளஸ்திகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படியும் ஒரு திருடனா?

கேரளாவில் வீட்டில் திருடிய பொருட்களை அப்படியே கொண்டுவந்து வைத்துவிட்டு கடிதம் ஒன்றையும் அதில் வைத்துவிட்டு சென்றுள்ளார் திருடன்.

திருவனந்தபுரத்தில் உள்ள நஸீம் என்பவரது வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை திருடன் ஒருவன் திருடி சென்றுள்ளான்.

இதுகுறித்து பொலிசில் புகார் அளித்துள்ள நஸீம், தனது வீட்டில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளையும் அளித்துள்ளார்.

அந்த வீடியோ காட்சியை எஸ் அருண் என்பவர் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார், இதனைப்பார்த்த திருடன் தான் திருடிய பொருட்கள் அனைத்தையும் நஸீம் வீட்டில் வைத்துவிட்டு ரத்தத்தால் எழுதப்பட்ட கடிதத்தையும் அதில் வைத்துள்ளான்.

அந்த கடிதத்தில், நான் ஒரு மாணவன், என்னை மன்னித்துவிடுங்கள், தயவுசெய்து அந்த வீடியோவை நீக்கிவிடுமாறு பொலிசிடம் கூறுங்கள்.

இல்லையெனில், நிலுவையில் உள்ள அத்தனை வழக்குகளையும் என் மீது போட்டு விடுவார்கள், அந்த பதட்டமே என்னை கொன்று விடும் என்று கூறியுள்ளார்.

ஆனால், இந்த திருடனை பொலிசார் கண்டுபிடித்துவிட்டனரா என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

சினிமா படப்பிடிப்பில் பயங்கரம் : டூப் போடாமல் சண்டையிட்ட நடிகை பலி!!

 
கனடா நாட்டில் சினிமா படப்பிடிப்பு ஒன்றில் டூப் போடாமல் சண்டைக்காட்சியில் ஈடுபட்ட நடிகை ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தில் உள்ள வான்கூவர் நகரில் Deadpool 2 என்ற ஹாலிவுட் படத்தில் படப்பிடிப்பு கடந்த யூன் மாதம் முதல் நடைபெற்று வருகிறது.

நேற்று காலை நேரத்தில் ஷா டவர் என்ற பகுதியில் சண்டைக்காட்சி ஒன்று படமாக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது.

காட்சியின் அடிப்படையில், மோட்டார் சைக்கிளில் ஒருவர் அசுர வேகத்தில் சாலையில் செல்ல வேண்டும். இதற்கு Joi SJ Harris என்ற நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டு அதற்கான ஒத்திகைகளிலும் அவர் ஏற்கனவே ஈடுப்பட்டுள்ளார்.

இப்படத்தில் டோமினோ என்ற கதாபாத்திரத்தில் Joi SJ Harris நடித்துள்ளார். இந்நிலையில், படப்பிடிப்பு தொடங்கியதும் சில மீற்றர் தொலைவில் இருந்து அவர் மோட்டார் சைக்கிளில் அசுர வேகத்தில் வந்துள்ளார்.

அப்போது, தரையில் இருந்து மோட்டார் சைக்கிள் காற்றில் பறந்தபோது திடீரென நடிகை தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

மோட்டார் சைக்கிள் மீண்டும் தரையில் இறங்காமல் அதே வேகத்தில் அருகில் இருந்த ஷா டவர் கண்ணாடி ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே விழுந்துள்ளது.

நடிகை தலைக்கவசம் அணிந்திருந்த நிலையிலும் படுகாயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நடிகையின் இறப்பிற்கு படிப்பிடிப்புக்குழு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகிறது.

மேலும், படிப்பிடிப்பின்போது தேவையான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றப்பட்டதா என்பது குறித்து கனேடிய பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உலகை திரும்பி பார்க்க வைத்த சார்லியின் பெற்றோர் எடுத்த முடிவு!!

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Bedfont பகுதியைச் சேர்ந்த தம்பதி Chris Gard(32)- Connie Yates(31).

இவர்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு Charlie என பெயரிட்டனர்.

பிறக்கும் போதே மரபணு குறைபாட்டுடன் பிறந்த Charlie-க்கு மூளை சேதம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக அவரது பெற்றோர் சமூகவலைத்தளங்களில் உதவிகளை நாடினர்.

இதனால் சார்லி உலகில் உள்ள அனைத்து மக்களாலும் அறியப்பட்டார். இருந்த போதிலும் 11 மாத குழந்தையான சார்லிக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய காலம் கடந்துவிட்டதால், அவருக்கு சிகிச்சை அளித்தும் பலனில்லை என்பதால், சமீபத்தில் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சார்லிக்கு சிகிச்சை நிறுத்தப்பட்டதால், சார்லி இறந்துவிட்டான்.

சார்லியின் இறப்பை தாங்க முடியாமல் பெற்றோர் மிகுந்த சோகத்தில் இருந்தனர். இந்நிலையில் அவர்கள் தற்போது ஒரு பவுண்டேசன் ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளனர். அதாவது The Charlie Gard Foundation, இந்த பவுண்டேசன் மூலம் வரும் பணங்களை, பணமின்றி சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் இருக்கும் குழந்தைகளுக்கு உதவப் போவதாகவும், உலகில் கணக்கிலடங்காத குழந்தைகள் வாழ்வதற்காக போராடிக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களுக்கு உதவுவதற்காகவே இந்த முயற்சியை சார்லியின் பெற்றோர் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், தங்கள் குழந்தை சார்லிக்கு சிகிச்சை அளிப்பதற்கு உலகில் பல பகுதிகளிலிருந்து நிதி கிடைத்தது. தங்கள் குழந்தை சார்லி போன்று உலகில் பல குழந்தைகள் நோயை எதிர்த்து போராடி வருகின்றனர்.

நோயை குணப்படுத்த முடியும் என்ற போதிலும், அதற்கான போதிய பணம் இல்லாமல் தவிக்கின்றனர். அது போன்றவர்களுக்கு உதவுவதற்கே இது போன்ற முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் 3 பிரித்தானியர்களுக்கு சிறைத் தண்டனை!!

குடிபோதையில் இருந்த பெண்ணை 3 நண்பர்கள் சேர்ந்து பலாத்காரம் செய்ததையடுத்து அவர்களுக்கு தலா 6½ ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த கோங் தாம் தான், வு தாய் சன் மற்றும் மைக்கேல் லி ஆகிய மூன்று நண்பர்களும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிங்கப்பூரில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர்.

அப்போது இரவு விடுதி ஒன்றில் அவர்களது நண்பர் ஒருவர் இளம் பெண்ணின் சம்மதத்துடன் அவருடன் உடலுறவு கொண்டுள்ளார்.

இதையறிந்த அவரின் மூன்று நண்பர்களும் குடிபோதையில் இருந்த அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

குறித்த பெண்ணுக்கு நினைவு திரும்பிய போது அருகில் மைக்கேல் படுத்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

மூவரும் சேர்ந்து தன்னை பலாத்காரம் செய்ததை உணர்ந்த பெண் இது குறித்து பொலிசில் புகார் அளித்தார்.

வழக்கானது நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த நிலையில் இதில் சம்மந்தப்பட்ட கோங், சன், மைக்கேல் ஆகிய மூவருக்கும் தலா 6½ ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார். மேலும், அவர்களுக்கு தலா 8 பிரம்படி தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கட்டார் விமானங்களை தாக்கி அழிப்போம் : சவுதி அரேபியா எச்சரிக்கை!!

கட்டார் விமானங்கள் தங்கள் விமான எல்லைக்குள் நுழைந்தால், தாக்குதல் மேற்கொள்வதற்கான உரிமை உள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

கட்டார் அரசாங்கத்துடன் தொடர்பை நிறுத்தியுள்ளதன் பின்னர், சவுதி விமான எல்லைக்குள் கட்டார் விமானங்கள் பறப்பதனை தவிர்க்குமாறு சவுதி அறிவித்துள்ளது.

கட்டார் அதனை செவி கொடுக்காமல் செயற்பட்டால் அந்நாட்டு விமானங்களை தாக்குதல் நடத்தி வீழ்த்துவதாக சவுதி எச்சிரிக்கை விடுத்துள்ளது.

தங்கள் விமானங்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகள் சீராக வைக்கப்பட்டுள்ளதாக சவுதி அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

அண்மைக்காலமாக கட்டார் மற்றும் அதன் பிராந்திய நாடுகளுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளன. பயங்கரவாதிகள் மற்றும் ஈரானுடன் கட்டார் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருப்பதாக குற்றம் சாட்டி சவுதி அரேபியா தலைமையிலான நான்கு நாடுகள் இராஜதந்திர உறவுகளை துண்டித்துள்ளன.

இந்நிலையில் பிராந்திய நாடுகளினால் முன்வைக்கப்பட்டுள்ள சில கோரிக்கைகளை கட்டார் ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறது. இவ்வாறான நிலை தொடருமாயின் வளைகுடாவில் மற்றுமோர் போர் வெடிக்கும் அபாயம் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

 

ஜேர்மனியில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் யுவதி!!

ஜேர்மனியில் தமிழ் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஜேர்மனியில் புகலிடம் கோரிய நைஜீரிய நாட்டவர் ஒருவர் தனது காதலியான தமிழ் பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். என்டனி எனப்படும் நைஜீரிய நாட்டவரே இந்த கொலை செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

22 வயதான ஜேர்மன் மாணவியான சோபிக்கா பர்மநாதன், 28 வயதான என்டனியினால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதாக நேற்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார்.

சோபிக்கா பர்மநாதன் அகதிகளுக்கான தன்னார்வ பணியில் ஈடுபடுவதால் “Angel of Ahaus” என உள்ளூர் மொழியில் அழைக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

என்டனியின் முழு பெயரை ஜேர்மன் பொலிஸார் வெளியிடவில்லை. ஜேர்மன் பத்திரிகை ஒன்று வெளியிட்ட அறிக்கைக்கமைய, என்டனி நீதிமன்றத்தில் ஊமையாக இருந்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி சோபிக்காவை என்டனி தாக்கியுள்ளார். அதன் பின்னர் சோபிக்கா என்டனியுடனான உறவை துண்டித்துள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து என்டனி நீண்ட கத்தியால் சோப்பிக்காவின் தலை, கழுத்து மற்றும் மார்பகங்களில் குத்தி கொலை செய்துள்ளார். 22 தடவைகள் சோபிக்காவை என்டனி கத்தியால் குத்தியுள்ளதாக வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தெரு ஒன்றில் என்டனி ஒரு பெரிய சூட்கேஸில் சோபிக்காவின் சடலத்தை மறைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து தப்பி சென்று இரண்டு நாட்களின் பின்னர் சுவிட்ஸர்லாந்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜேர்மன் பத்திரிகை தகவல்களுக்கமைய இந்த கொலை சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் தனது மகள், என்டனியினால் அச்சுறுத்தப்பட்டதாக சோபிக்காவின் தந்தை சிவசாம்போ தெரிவித்துள்ளார்.

என்டனி மற்றும் சோபிக்க ஜோடி 2016 ஆம் ஆண்டு ஜேர்மனியில் அஹோஸ் நகரில் உள்ளூர் அகதிகள் இல்லத்தில் சந்தித்துள்ளனர். அங்கு என்டனி வாழ்ந்து வந்துள்ளார். சோபிக்கா அங்கு தன்னார்வ தொண்டு செய்து வந்துள்ளார்.

இத்தாலியில் மூன்று ஆண்டுகள் வாழ்த்துள்ள நிலையில் 2015 ஆம் ஆண்டில் என்டனி ஜேர்மனிக்கு சென்றுள்ளார்.

ஓரினச்சேர்க்கையாளராக இருப்பதனால் 2012 இல் தனது நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், நைஜீரியாவில் உள்ள இஸ்லாமிய பயங்கரவாத குழுவான போகோ ஹராமுக்கு எதிராக தான் போராடியதாகவும், என்டனி தனது புகலிட கோரிக்கை விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அவர் போலியான தகவல்களை குறிப்பிட்ட காரணத்தினால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி அன்று அவருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சோபிக்கா ஒரு சிறந்த பெண்ணாக காணப்பட்டுள்ளார். தனது பிறந்த நாள் அன்று இலங்கையில் வாழும் வீடற்ற மக்களுக்கு உதவி பொருட்களை அவர் அனுப்பி வைத்ததாக சோப்பிக்காவின் வழக்கறிஞர் Hans-Peter Maas தெரிவித்துள்ளார்.

தனது குடும்பத்துடன் இலங்கையிலிருந்து ஜேர்மனிக்குச் சென்றிருந்த சோபிக்கா பல வருடங்களாக அஹோஸ் நகரில் வசித்து வந்துள்ளார். குழந்தைகளுடன் வேலை செய்ய வேண்டிய அவசியம் அவருக்கு காணப்பட்டதாகவும் ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

-தமிழ்வின்-

 

சட்டவிரோதமாக வெளிநாடு செல்வோருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருக்கும் ஆபத்து!!

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்வோரை தடுப்பதற்கான நடவடிக்கையில் முன்னேற்றம் கண்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

செல்லுபடியான கடவுச்சீட்டு மற்றும் விசா இன்றி மக்கள் சட்டவிரோத விமான பயணங்களை மேற்கொள்வதன் ஊடாக ஒவ்வொரு ஆண்டும் பாரியளவான தண்டப் பணத்தை செலுத்த வேண்டி ஏற்படுகின்றது.

இதனால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இவ்வாறான சட்டவிரோதமாக பயணங்கள் மேற்கொள்வதை நிறுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளுக்கு வெற்றி கிடைத்துள்ளன.

இதற்காக ஆவணங்களை பரிசோதனை செய்ய விஷேட பயிற்சி பெற்ற அலுவலர்கள் இலங்கை விமான நிறுவனத்தில் இருக்கின்றனர்.

போலி பயண ஆவணங்களை கண்டறிவதற்காக வெளிநாட்டு தூதரகங்கள் ஊடாக விஷேட பயிற்சிகள் பெறப்பட்டுள்ளதாகவும், இதனால் சட்டவிரோதமாக செல்ல நினைப்போருக்கு இனி சந்தர்ப்பம் கிடைக்காது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை விமான நிறுவனத்தின் பணியாளர்கள், பொலிஸார், சுங்கப் பிரிவு மற்றும் குடிவரவு, குடியகல்வு பிரிவினர் என அனைவரும் இணைந்து சட்டவிரோத பயணிகளை கண்டறிவதற்காக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க வந்த மிகப் பெரிய விமானத்தின் சிறப்பு : இலங்கை விமானிக்கு கிடைத்த கௌரவம்!!

 
உலகின் மிகப் பெரிய விமானம் நேற்று முதல் இலங்கையிலும் செயற்பட ஆரம்பித்துள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட பின்னர், மிகப் பெரிய விமான நேற்று தரையிறங்கியது.

எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் உலகின் மிகப்பெரிய விமானம் நேற்று மாலை டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

அந்த விமானத்தை வரவேற்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கலந்து கொண்டார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த மிகப் பெரிய விமானத்தின் பிரதான விமானியாக, இலங்கையை சேர்ந்த ஒருவரே செயற்பட்டுள்ளார். உதய திலகரத்ன என்ற இலங்கையரும், அவருக்கு உதவி விமானயாக அல் மிஹாரி என்ற விமானியும் செயற்பட்டுள்ளனர்.

பிரதான விமானி உதய திலகரத்ன, முன்னாள் நாடாளுன்ற உறுப்பினராக எட்வின் திலகரத்னவின் மகன் ஆவார். திலகரத்ன இதற்கு முன்னர் ஸ்ரீலங்கன் விமான சேவையில் கடமையாற்றியுள்ளார். பின்னர் அவர் எமிரேட்ஸ் விமான நிறுவனத்துடன் இணைந்துள்ள நிலையில் தற்போது அவர் அங்கு செயற்பட்டு வருகின்றார்.

உலகின் மிகப்பெரிய விமானமான A-380 விமானத்தில் ஒரே நேரத்தில் 540 பயணிகள் பயணிக்க முடியும்.

தற்போது எமிரேட்ஸ் நிறுவனத்திடம் இவ்வாறான 96 விமானங்கள் உள்ளதாகவும், மேலும் 48 விமானங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் 20ம் திகதி வரையில் தரம் ஐந்து புலமைப் பரிசில் கருத்தரங்குகள், வகுப்புக்கள் நடத்தத் தடை!!

எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான கருத்தரங்குகள் மற்றும் வகுப்புக்களை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் தரம் ஐந்துக்கான புலமைப் பரிசில் பரீட்சை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 20ஆம் திகதி தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நடத்தப்படும் வரையில் கருத்தரங்குகள், முன்னோடிப் பரீட்சைகள், மாதிரித் வினாத்தாள்களை வழங்குதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

எந்தவொரு நபர் அல்லது நிறுவனமொன்று இந்த உத்தரவினை மீறிச் செயற்பட்டால் அது குறித்து அறிவிக்குமாறு பரீட்சைத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் ரசிகர்களுடன் கோஹ்லியும் அனுஷ்கா சர்மாவும்!!

இந்திய கிரிக்கட் அணித் தலைவர் விராட் கோஹ்லி இலங்கைக்கு கிரிக்கட் சுற்றுலா மேற்கொண்டுள்ள நிலையில், அவரது காதலி அனுஷ்கா சர்மாவும் இலங்கை வந்துள்ளார்.
அவர்கள் இருவரும், விராட் கோஹ்லியின் இலங்கையிலுள்ள சில ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இது தொடர்பான புகைப்படமொன்று viratkohli.club எனும் இன்ஸ்டகிராம் தளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

விராட் கோஹ்லி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடி தாம் பணியாற்றும் இடங்களில் இவ்வாறு சந்திப்பதாகவும், இறுதியாக அவர்களை நியூயோர்க்கில் இடம்பெற்ற IIFA விருது வழங்கும் நிகழ்வில் காணக்கிடைத்தாகவும் ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.