கிளிநொச்சியை சூழும் அபாயம் : 815 பேருக்கு இதுவரை டெங்கு நோய் தொற்று!!

கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் சடுதியாக அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட ஆராய்ச்சியியல் ஆய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

இவ்வாறு அதிகரித்துள்ள நுளம்புகள் டெங்குநோயாளிகளைக் கடிக்கநேரிட்டால் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிதீவிரமாக டெங்குநோய்த்தாக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வுப்பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

தை மாதத்திலிருந்து நேற்று வரையான 227 நாட்களில் கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் மொத்தம் 815 பேர் டெங்குகாய்ச்சலால் பீடிக்கப்பட்டு, சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுள் 585 நோயாளர்கள் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஏனையோர் பிறமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் உள்ள 585 கிளிநொச்சி மாவட்ட நோயாளர்களில் அனேகமானோர் கொழும்பு உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்து டெங்குநோய் தொற்றிய நிலையில் கிளிநொச்சிக்கு வந்து சிகிச்சைபெற்றவர்களாவர். இவர்களுள் ஒருவர் டெங்குநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் சராசரியாக நாளொன்றிற்கு டெங்குநோய்த்தொற்றுக்கு ஆளாகிய நிலையில் குறைந்தது 3 பேர் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குத்தினமும் வெளிமாவட்டங்களிலிருந்து வந்துகொண்டிருக்கிறார்கள்.

இவ் நெருக்கடியான நிலையில் மாவட்டத்தின் மக்களைப் பாதுகாக்கும் வகையில் கிளிநொச்சி சுகாதாரப் பிரிவினர் சிறு செய்திக் குறிப்பு ஒன்றினையும் வெளியிடுள்ளனர்.

குறித்த செய்திக் குறிப்பில், புகையிரத நிலையங்கள், பேரூந்து நிலையங்கள், வைத்தியசாலைகள், உணவகங்கள் ஆகிய இடங்களை பொதுமக்கள் பாவிக்கும்போது அவ்விடங்களில் டெங்கு நுளம்புகள் காணப்படுமாயின் அவை டெங்கினால் பாதிக்கப்பட்டநோயார்களின் டெங்கு வைரஸ் கலந்த இரத்தத்தினை உறிஞ்சிக்கொள்ளலாம்.

இவ்வாறு டெங்கு வைரஸின் தாக்கம் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களிடம் இருந்து டெங்கு வைரஸ் கலந்த இரத்தத்தினைக் கிளிநொச்சியில் காணப்படும் டெங்கு நுளம்புகள் உறிஞ்சுமாயின், அந்த நுளம்புகளினால் கடிக்கப்படும் அனைவரும் டெங்குநோயாளிகளாக நேரிடும். இதனால் கிளிநொச்சி மாவட்டத்தினுள்ளே டெங்கு காட்டுத் தீ போல அதிதீவிரமாக பரவத்தொடங்கும்.

இந்த அபாய நிலையைக் கருத்தில் கொண்டு இன்றும் நாளையும் நாளை மறுதினமும் கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நுளம்புகள் இனங்காணப்பட்ட பொது இடங்களில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகள் தத்தமது பகுதி பொதுச்சுகாதார பரிசோதகர்களுடன் தொடர்புகொண்டு இந்த உயிர்க்காப்புப் பணியில் ஈடுபட முன்வருமாறு வேண்டுகிறோம் என அச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இணையவாசிகள் அதிகம் தரவிறக்கம் செய்யும் சரஹா : ஓர் அறிமுகம்!!

இணையவாசிகள் தற்போது அதிகம் தரவிறக்கம் செய்யும் குறுஞ்செய்தி செயலியாக ‘சரஹா’ (Sarahah ) மாறியிருக்கிறது. இதன் மூலம் யாரும் யாருக்கும் அநாமதேய தகவல்களை அனுப்ப முடியும்.

சரஹா மெசஞ்சர் அப் 2016 ஆம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டிருந்தாலும் இணையவாசிகள் மத்தியில் தற்போது தான் பிரபலமடைந்திருக்கிறது.

ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாகவே ‘சரஹா’ அறியப்பட்டு, தரவிறக்கம் செய்யப்படுகிறது.

“ஆக்கப்பூர்வமான, அநாமதேயக் கருத்துகளின் மூலம் மக்களை சுய வளர்ச்சிக்கு ஆட்படுத்தும் செயலி சரஹா” என சுயவிபரக் குறிப்பில் தன்னைப் பற்றி சரஹா கூறியிருக்கிறது.

‘சரஹா’ செயலியைப் பயன்படுத்துவது மிகவும் சுலபம். யார் வேண்டுமானாலும் உங்களின் ‘சரஹா’ பக்கத்தைப் பார்க்க முடியும்; குறுஞ்செய்தியை அனுப்ப முடியும். இதற்காக அவர்கள் தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டியதில்லை. தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பும் நபர்கள், தம் பெயரை வெளிப்படுத்தவும் முடியும்.

செய்திகளைப் பெறும் பயனர்களின் இன்பொக்ஸில் மற்றவர்கள் அனுப்பிய செய்திகள் நிறைந்திருக்கும். அவற்றுக்கு நீங்கள் பதிலளிக்கலாம். முக்கியக் குறியிட்டு வைத்துக் கொள்ளலாம் அல்லது நீக்கியும் விடலாம்.

iOS மற்றும் அன்ட்ரொ ய்ட் இயங்குதளம் மூலம் ‘சரஹா’ செயலியைப் பயன்படுத்த முடியும். தற்போது ஆங்கிலம் மற்றும் அரபு மொழிகளில் மட்டுமே ‘சரஹா’ செயற்படுகிறது

பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள் இடையே மோதல் : 25 பேர் பலி!!

பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானாவ் தீவில் சுமார் 2¼ கோடி மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ராணுவ சட்டம் அமலில் இருக்கும் சூழலில், இந்த தீவில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக ஐ.எஸ். இயக்கத்தினரின் ஆதரவு பெற்ற பயங்கரவாத இயக்கம் ஒன்று இந்த தீவை வெளிநாட்டு பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக மாற்ற முயன்று வருகிறது.

எனவே இந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக உள்ளூரை சேர்ந்த மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணி (மில்ப்) என்ற பிரிவினைவாத இயக்கத்தினர் போரிட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு பிலிப்பைன்ஸ் அரசும், ராணுவமும் ஆதரவு அளித்து வருகின்றன. இது தொடர்பாக அரசுக்கும், இந்த முன்னணியினருக்கும் இடையே ஒப்பந்தமும் போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மகுயின்டானாவ் பகுதியில் உள்ள 2 கிராமங்களில் கடந்த 7ம் திகதி பயங்கரவாதிகள் நாட்டு வெடிகுண்டுகளால் தாக்குதல் நடத்தினர். இதில் மில்ப் போராளிகள் 5 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு ராணுவத்தினரின் உதவியுடன் மில்ப் படையினர் பதிலடி கொடுத்ததால் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

கடந்த 6 நாட்களாக நடந்த இந்த சண்டையில் 20 பயங்கரவாதிகள் உள்பட 25 பேர் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்து உள்ளது

எம்மீது நம்பிக்கை வையுங்கள் : உபுல் தரங்க நாட்டு மக்களிடம் விடுக்கும் வேண்டுகோள்!!

இலங்கை கிரிக்கட் வீரர்கள் மீது நம்பிக்கை வைக்குமாறு இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்க அறிக்கை ஒன்றின் மூலம் கூறியுள்ளார்.

சில விடயங்களை வௌிப்படையாக பேச முடியாது என்ற போதிலும் இலங்கை கிரிக்கட் வீரர்கள் மீது நம்பிக்கை வைக்குமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

அனைத்து அணிகளும் பின்னடைவை சந்திப்பதாகவும், டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளில் பலமாக இருந்த அணி தற்போது முகங்கொடுக்கின்ற கசப்பான நிலைமையில் அதனை மறக்க வேண்டாம் என்று அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

அத்துடன், சற்று பொறுமையாக இருங்கள், எங்கள் மீது நம்பிக்கை வைப்பதை முக்கிய விடயம். மீண்டும் எழுவதற்கு எமக்கு பலமாக இருங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இலங்கை வீரர்களின் பெயர்ககளை வௌியிட்டு வௌியிடப்பட்ட ஊடக அறிக்கையுடன் அவர் இந்த அறிக்கையையும் வௌியிட்டுள்ளார்.

இலங்கையில் சுதந்திர தினத்தை கொண்டாடிய இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள்!!

 
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் இந்தியாவின் மூவர்ண கொடியை ஏற்றி கண்டியில் சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளார்கள்.

இந்தியாவின் 71ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. இதை முன்னிட்டு இலங்கையிலுள்ள இந்திய வீரர்கள் தமது நாட்டின் சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

இந்த செய்தியை பிசிசிஐ தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

5 ஒரு நாள், T20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக கோலி தலைமையிலான இந்திய அணியினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இவர்கள் தற்போது கண்டியில் தங்கியுள்ளனர். இதன்போது, கோலி இந்திய நாட்டின் தேசியக் கொடி ஏற்ற, பின்னர் அனைத்து வீரர்களும் மரியாதை செலுத்தினர்.

வவுனியாவில் இந்தியாவில் இருந்து திரும்பியவர்களை சமூகத்தில் இணைக்கும் கிரிக்கட் போட்டி!!

 
நாடு திரும்பிவரும் இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களை அரவணைத்து ஆற்றுப்படுத்தும் செயற்திட்டங்கள் பலவும் இன்று வடக்கு கிழக்குப் பகுதிகளில் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகின்றன.

நாடு திரும்பும் மக்களை சமூகத்துடன் இணைக்கும் இவ்வாறான செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக விளையாட்டுப்போட்டிகளில் நாடு திரும்பிய இளைஞர் யுவதிகளை இணைக்கும் நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன.

இந்த வகையில் கடந்த 13.08. 2017 ஞாயிற்றுக்கிழமை வவுனியா யங் ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் 8 கழங்களிடையே கூமாங்குளம் அஸ்திரம் நற்பணி மன்றத்தினர் இவ்வாறான நாடு திரும்பிய இளைஞர்களை உள்ளடக்கி கிரிக்கட் சுற்றுப்போட்டியினை மிக சிறப்பாக நடத்தி முடித்தனர்.

அஸ்திரம் நற்பணி மன்றத் தலைவர் ஸ்ரீகரன் தலைமையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முன்னாள் சுகாதார அமைச்சர் மாகாண சபை உறுப்பினர் பா.சத்தியலிங்கம் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார் .

சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், சிறுவர் நிதியத்தின் செயல்திட்ட அதிகாரி திருமதி கல்யாணி, மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ். .ஸ்ரீநிவாசன், ஜ.தே.கட்சி இளைஞர் அமைப்பைச் சேர்ந்த சந்திரகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் .

மேலும் அஸ்திரம் நற்பணி மன்ற பொருளாளர் கிருஸ்ணமூர்த்தி மற்றும் சுரேந்திரன் ஆகியோரும் போட்டிகளை ஒழுங்கமைத்து நடத்தினர் .

இறுதிப் போட்டியில் கூமாங்குளம் சுப்பர் ஸ்ரார் விளையாட்டுக்கழகமும் பூந்தோட்டம் சார்ள்ஸ் விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன. மிக சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட 6 ஓவர்களைக் கொண்ட இப்போட்டி இறுதியில் ஒரு பக்கம் சார்ந்ததாக அமைந்தது.

சார்ள்ஸ் அணியினர் 6 ஓவரில் 95 ஓட்டங்களைப் பெற்றனர் . இதில் சங்கர் மட்டும் 65 ஓட்டங்களை அணிக்காகப் பெற்றுக்கொடுத்தார் .

சுப்பர் ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தால் 35 ஓட்டங்ளை மட்டுமே பெற முடிந்தது. பூந்தோட்டம் சார்ள்ஸ் அணியினர் சம்பியன் கிண்ணத்தை பெற்றுக்கொண்டனர் . சிறந்த ஆட்ட நாயகனாக சார்ள்ஸ் அணியின் சங்கர் தெரிவாகினார் .

வவுனியாவில் பதிவு செய்யப்படாத வைத்தியசாலை சுகாதாரப் பரிசோதகர்களால் சுற்றிவளைப்பு!!

 
வவுனியா சிந்தாமணிப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இயங்கிவந்த பதிவு செய்யப்படாத வைத்தியசாலை ஒன்றை இன்று (15.08.2017) மதியம் 12.30 மணியளவில் வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.லவன் தலைமையில் சென்ற குழுவினர் அதிரடியாக சுற்றிவளைத்து சோதனையில் ஈடுபட்டனர்.

குறித்த வைத்தியசாலை சில காலமாக வவுனியாவில் இயங்கி வந்த நிலையில் சுகாதாரப் பரிசோதகர்களால் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளதுடன் மருந்துப்பொருட்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சுற்றிவளைப்பு குறித்து கருத்து தெரிவித்த வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.லவன், குறித்த வைத்தியசாலையானது எமது திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை. அடுத்து இந்த மருந்து வகைகள் எவ்வாறானவை என்று தெரியவில்லை. அதன் காரணமாக மருந்துகள் அனைத்தும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதுடன் மருந்துகள் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்படவுள்ளது என குறிப்பிட்டார்.

குறித்த வைத்தியசாலையின் மருத்துவர் கே.கோகுல்ராஜ் கருத்து தெரிவிக்கையில், எனது வைத்தியசாலை கோமியோபதி வைத்திய நிறுவனத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசாங்க வர்த்தமானியில் பெயர் இருப்பதாக குறிப்பிட்ட வைத்தியர் கிளிநொச்சி மற்றும் குருநாகல் போன்ற பகுதிகளில் தங்கள் கோமியோபதி வைத்தியசாலை இயங்கிவருவதாகவும் சட்ட நடவடிக்கைக்கு முகங்கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அபார திறமையிருந்தும் அங்கீகாரத்துக்கு போராடும் சாதனை தமிழச்சி!!

 
ஆசியாவிலேயே கால்பந்து போட்டிகளுக்கான முதல் பெண் நடுவர் என அடையாளம் காணப்பட்ட தமிழக வீராங்கனை முறையான அங்கீகாரம் கிடைக்காமல் போராடி வருகிறார்.

தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ரூபாதேவி, பெற்றோர் இல்லாத இவர் சகோதரியின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார்.

ஆறாம் வகுப்பு முதலே கால்பந்து போட்டிகளில் ஆர்வம் கொண்டு விளையாட தொடங்கிய ரூபாதேவி பிறகு குடும்ப வறுமை காரணமாக அதை நிறுத்தினார்.

ரூபாதேவியின் ஆர்வத்தை புரிந்து கொண்ட பயிற்சியாளர் ஜஸ்டின் அவருக்கு கால்பந்து பயிற்சி கொடுத்து வீராங்கனையாக்கினார்.

ரூபாதேவி மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று தன்னுடைய திறமையை நிரூபித்த நிலையில், அடுத்து கால்பந்து நடுவர் ஆகலாம் என முடிவெடுத்தார்.

இதற்கான இரண்டு தேர்வுகளை எழுதிய ரூபா அதில் தேர்ச்சியும் பெற்றார். பிறகு 2010ல் பட்டப்படிப்பை முடித்த அவர் தனியார் பள்ளி ஒன்றில் வேலை செய்து கொண்டிருக்கும் போது கால்பந்து நடுவர் வாய்ப்பு ரூபாவை தேடி வந்தது.

முதலில் இலங்கையில் நடந்த ஆசிய கால்பந்து போட்டி தொடரில் ரூபா நடுவராக பணியாற்றினார். ரூபாவின் திறமையை பார்த்து ஆசிய கால்பந்து கழகங்கள் அவரை சர்வதேச நடுவராக FIFA கால்பந்து அமைப்புக்கு பரிந்துரைத்தன.

இதற்கான தேர்விலும் வெற்றி பெற்ற ரூபா தென் இந்தியாவின் முதல் சர்வதேச பெண் நடுவராக தெரிவானார்.

2020ல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் உலக கால்பந்து போட்டிகளில் நடுவராக பங்கேற்க வேண்டும் என்பதே ரூபாவின் லட்சியமாக உள்ளது.

இவ்வளவு திறமை இருந்தும் அரசு அவருக்கான அங்கீகாரத்தை வழங்கவில்லை, ரூபாவுக்கு நிரந்த வேலை என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.

விரைவில் அரசு ரூபாவின் பொருளாதார பிரச்சனையை தீர்க்க நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்பது அவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

13 வருடங்களுக்கு பின் சொந்த மண்ணில் இலங்கை அணி படைத்த மோசமான சாதனை!!

இந்தியாவுடனான மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியிலும் இன்னிங்ஸ் மற்றும் 171 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்த இலங்கை அணி இந்த டெஸ்ட் தொடரை 0-3 என முழுமையாக பறிகொடுத்தது.

இதன்மூலம் 13 ஆண்டுகளின் பின் இலங்கை அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர் ஒன்றின் அனைத்து போட்டிகளிலும் தோற்றிருப்பது இது முதல் முறையாகும்.

மறுபுறம் இந்திய அணி பல்லேகல டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இலங்கை மண்ணில் அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்ற வெளிநாட்டு அணி என்ற பாகிஸ்தானின் (8) சாதனையை முறியடித்துள்ளது.

இலங்கையில் இந்திய அணியின் 9 ஆவது டெஸ்ட் வெற்றி இது என்பதோடு இதில் ஐந்து வெற்றிகள் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக பெற்ற வெற்றிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந்திய அணி 1967க்குப் பின்னர் வெளிநாட்டு மண்ணில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் வென்றது இது முதல் முறையாகும். அடுத்து இலங்கை மற்றும் இந்திய அணிகள் ஆடும் ஒருநாள் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் 20ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

மனிதக் கழிவுகளை உண்ண வைத்து பெண்ணை துன்புறுத்திய உறவினர்கள்!!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் ஒருவரை சூனியக்காரி என முத்திரை குத்தி அவரது உறவினர்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் கேக்ரி பகுதியில் கடந்த 3ஆம் திகதி குறித்த சம்பவம் நடந்துள்ளது.

40 வயதான பெண்மணியை அடித்து துன்புறுத்திய அவரது உறவினர்கள் மனித கழிவுகளை உண்ணும்படி நிர்பந்தித்துள்ளனர்.

அவரை சூனியக்காரி என முத்திரை குத்திய உறவினர்கள் பின்னர் அடித்தே கொலை செய்துள்ளனர். 6 பேர் கொண்ட கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த அவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள பொலிசார், தாக்குதல் நடத்திய 6 பேரை கைது செய்துள்ளனர்.

காசநோய் காரணமாக கடந்த மாதம் குறித்த பெண்ணின் கணவர் மரணமடைந்துள்ளார், இதனால் தமது மகள் மற்றும் மகனுடன் அவர் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 8 ஆம் திகதி பொலிசாருக்கு தொலைபேசி அழைப்பில் இந்த விவகாரம் தொடர்பில் புகார் வந்துள்ளது.

இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில், குறித்த பெண்மணியின் பேரில் உள்ள சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

தற்போது இந்த வழக்கு தொடர்பாக கைதான 6 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

நடு வீதியில் குழந்தையை பெற்றெடுத்த தாய்!!

 
இந்தியாவில் பெண் ஒருவர் நடு வீதியில் குழந்தை பெற்றேடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியின் Mau மாவட்டத்தின், Ailakh கிராமத்தைச் சேர்ந்தவர் வசுந்தரா. கர்ப்பிணியான இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் உடனடியாக அம்புலன்சிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்புலன்சில் வசுந்தரா பெற்றோருடன் சென்றுள்ளார். மருத்துவமனை அருகே அடைந்தவுடன், உள்ளே இருக்கும் மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர்கள் தெரிந்தும் தெரியாதது போல் இருந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனை சார்பில் யாரும் உதவிக்கு வராததால், நடுரோட்டில் குழந்தையை பெற்றேடுத்துள்ளார்.

இது குறித்து அவர் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது, மருத்துவமனை அருகே வந்தவுடன் தனக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுவிட்டதாகவும், இதனால் நான் சுயநினைவை இழக்கும் அளவிற்கு சென்று விட்டதாகவும், ஆனால் இதை அறிந்தும் மருத்துவமனை ஊழியர்கள் உதவ முன்வராத காரணத்தினால், தானே மருத்துவமனைக்கு நடந்து சென்றதாக கூறினார்.

அப்போது நான் முழுமையாக சுயநினைவை இழந்துவிட்டதால், அங்கிருந்த சாலையிலே படுத்துவிட்டதாகவும், அப்போது குழந்தை பிறந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

குழந்தை பிறந்ததை அறிந்த மருத்துவமனை உடனடியாக வந்து குழந்தையின் பிறப்பை பதிவு செய்துவிட்டதாகவும், அதன் பின் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவரின் தந்தை கூறியுள்ளார்.

கோரக்பூரில் அண்மையில் தான் அரசால் நடத்தப்படும் பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமைனையில் 63 குழந்தைகள் உயிரிழந்தனர்.

குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவில் ஒக்சிஜன் குழாய் சிகிச்சைக்கு இல்லாததே அடுத்தடுத்து குழந்தைகள் உயிரிழந்ததற்கு காரணம் என்று கூறப்படும் நிலையில், இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

150 அடி பள்ளத்தாக்கில் விழுந்த நிறை மாத கர்ப்பிணி : அடுத்து நிகழ்ந்த அதிசயம்!!

இந்தியாவில் 150 அடி பள்ளத்தாக்கில் விழுந்த நிறை மாத கர்ப்பிணி பெண் அதிசயமாய் உயிர் பிழைத்துள்ளார்.

புனே, சிங்காகட் கோட்டையிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. நிறை மாத கர்ப்பிணியான ப்ரநிதா, தனது கணவர் லாஹு இன்வேல் மற்றும் சகோதரர் சுரேஷ் உடன் சிங்காகட் கோட்டைக்கு சென்றுள்ளார்.

கோட்டையின் மீது ஏறிய ப்ரநிதா உச்சியிலிருந்து செல்பி எடுக்க முயன்ற போது தவறி 150 அடி பள்ளத்தாக்கில் விழுந்துள்ளார், அதிர்ஷ்டவசமாக கீழே உள்ள தடித்த புதர்கள் மேல் அவர் விழுந்ததால் உயிர் தப்பியுள்ளார்.

அழுகை சத்தம் கேட்ட சம்பவயிடத்திற்கு விரைந்த உள்ளூர் மக்கள் சிறிய காயங்களுடன் இருந்த ப்ரநிதாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ப்ரநிதாவை சோதனை செய்த மருத்துவர்கள் அவரது குழந்தைக்கும், அவருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என கூறியுள்ளனர்

அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழ்ப் பெண்!!

அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஆளுநருக்கான தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெண்ணொருவர் போட்டியிடவுள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண் மிஷேல் ஒபாமாவின் கொள்கை இயக்குனராக செயற்பட்ட, கிரிஷாந்தி விக்னராஜா, மேரிலாந்து ஆளுநருக்கான போட்டியில் நுழைவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க பெண்ணான கிரிஷாந்தி பிறந்த 9 மாதங்களாக இருந்த போது, இலங்கையின் உள்நாட்டுப் போரின் காரணமாக தப்பிச் சென்ற அவரது குடும்பத்தினர் மேரிலாந்தில் குடியேறினர்.

இந்நிலையில் பல உயர் பதவிகளை வகித்த கிரிஷாந்தி, மேரிலாந்தின் ஆளுநருக்காக தான் போட்டியிடுவது குறித்து அண்மையில் அறிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கு போட்டியிடும் முதல் பெண் கிரிஷாந்தி என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

கிரிஷாந்திக்கு அரசியல் புதிய விடயமல்ல. கடந்த ஒபாமா நிர்வாகத்தின் போது, அவர் முதல் பெண்மணி மிஷேல் ஒபாமாவின் கொள்கை இயக்குனராகவும், வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் மாநில செயலாளர் ஜோன் கெரி ஆகியோரின் மூத்த ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

யேல் கல்லூரியில் மூலக்கூறு உயிரியல் மற்றும் அரசியல் விஞ்ஞானம் ஆகியவற்றில் அவர் பட்டம் பெற்றுள்ளார்.

அரசியலுக்கு வருவதற்கு முன்னர் McKinsey & Company மற்றும் சட்ட நிறுவனமான Jenner & Block என்பவற்றில் அவர் நேரம் செலவிட்டுள்ளார்.

கிரிஷாந்தி மற்றும் அவரது கணவர் Collin O’Mara புதிதாக பிறந்த தங்கள் மகள் Alanaவை ஜுன் மாதம் வரவேற்றனர். மேலும் அவர் ஆளுநருக்கான போட்டியில் ஈடுபடுவதற்கான காரணங்களில் ஒன்றாக தனது மகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நான் ஒரு குழந்தையாக இருந்த போது எங்கள் குடும்பம் இங்கு வந்தது. குறித்த சந்தர்ப்பத்தில் எனது அம்மா எனக்கு கொடுத்த சவால்கள், வாய்ப்புகள் எனது மகளுக்கு கிடைக்காதென்பது குறித்து வருத்தமாக உள்ளது. அதற்காகவே தான் ஆளுநர் போட்டியில் போட்டியிட விரும்புகின்றேன்.

மேரிலாந்து மக்கள் சிறந்த ஆணின் சேவையை ஒரு பெண்ணிடம் இருந்து பெற்று கொள்வதை ஏற்றுக் கொள்வார்கள் என நான் நம்புகின்றேன்” என கிரிஷாந்தி தெரிவித்துள்ளார்.

இந்திய – சீன எல்லைப் பகுதியில் நீடிக்கும் போர் பதற்றம்!!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் எல்லையோர பகுதியான லடாக்கில், மனிதர்கள் இல்லாத பகுதியில் சீனா பாலம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இது தொடர்பாக இந்திய இராணுவ வட்டாரங்கள் கூறுகையில், டோக்லாம் எல்லை பிரச்சினை இன்னமும் தீரவில்லை. அதைத் தீர்க்க இந்தியா மற்றும் சீனா இராணுவ தரப்புகள் எடுத்த எல்லா இராஜதந்திர முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன. இதனால் டோக்லாம் பகுதியில் நிலவும் போர்ப் பதற்றம் குறையவில்லை.

இந்த நிலையில் லடாக் பகுதியில் மனிதர்கள் இல்லாத நிலப்பகுதியில் சீனா பாலம் அமைக்க, நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனால் அது உண்மையில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இருந்த போதிலும் டோக்லாம், லடாக், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட எல்லா எல்லையோர பகுதிகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்திய இராணுவம் எப்போதும் விழிப்போடு இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் சீனாவுக்கு லடாக் மட்டும் நோக்கமில்லை. சிக்கிம் எல்லைப் பகுதியும் சீனாவின் இலக்குதான்.

எனவே உச்சபட்ச எச்சரிக்கை நமது இராணுவ வீரர்களுக்கு, உளவுத்துறை கொடுத்த தகவல்களின் அடிப்படையில் விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தன.

இந்த நிலையில், நேற்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,

டோக்லாம் எல்லையில் ஓர் அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம். சீன எல்லைக்குள் இந்திய வீரர்கள் ஊடுருவியுள்ளனர். அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும். இந்தியாவின் வாதம், கோரிக்கை ஏற்கக்கூடியது அல்ல என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவும் சீனாவும் ஒரே நேரத்தில் எல்லைப் பிரச்சினையை தீர்க்க முடிவெடுக்க வேண்டும், இரு நாடும் யார் முதலில் படைகளை வாபஸ் பெறுவது என்று போட்டிபோட்டால் போர்ப் பதற்றம் நீடிக்கத்தான் செய்யும் என்கின்றன சர்வதேச ஊடகங்கள்.

வடக்கு கிழக்கு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

வடக்கு, கிழக்கில் வீடுகள் இல்லாதோருக்காக 50 ஆயிரம் கல் வீடுகள் அமைக்கப்படவுள்ளன. ஒப்பந்த நிறுவனங்கள் ஊடாகவே இந்த வீடுகள் கட்டப்படவுள்ளன. இந்தத் திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சு தலைமையில் ஏனைய சில அமைச்சுக்கள் இணைந்து இதனை முன்னெடுக்கவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இது தொடர்பான திட்டம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது.

இத்தகைய ஒரு திட்டத்துக்கு அனுமதி பெறப்பட்டிருக்கிறது என்பதையும் அது தொடர்பிலான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்பதையும் தேசிய நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி உறுதிப்படுத்தினார்.

வடக்கு, கிழக்கில் 60 ஆயிரம் பொருத்து வீடுகளைக் கட்டுவதற்கு முயற்சி எடுக்கப்பட்டது. அதற்கு மக்களிடம் இருந்தும் அரசியல் கட்சிகளிடம் இருந்தும் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது.

பொருத்து வீடுகள் வடக்கு, கிழக்குக் காலநிலைக்கு உகந்தவையல்ல என்று நிராகரிக்கப்பட்டன. அத்துடன் அதற்கான செலவில் குறைந்தது இரண்டு கல் வீடுகளை அமைக்கலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

கடும் எதிர்பை அடுத்து இந்தத் திட்டம் கைவிடப்படும் நிலையை எட்டியது. எனினும், அதில் 6 ஆயிரம் வீடுகளையாவது அமைப்பதற்கு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் விடாப்பிடியாக முயன்ற வருகிறார்.

இந்த நிலையில், வடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் கல் வீடுகளை நிறுவுவதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டு அதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

கல்வீடுகளை அமைக்கத் தகுதியுள்ள ஒப்பந்த நிறுவனங்கள், இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்குரிய நிதியையும் கொண்டு வர வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை அரசு நீண்ட காலக் கடன் அடிப்படையில் செலுத்தும்.

இதற்கு அமைவாகக் கேள்விகோரலை விளம்பரப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் அது வெளியிடப்படும் என்று தெரியவருகின்றது. கேள்விகோரல் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

கல்வீட்டுத் திட்டம் ஜனாதிபதியின் கீழுள்ள தேசிய ஒன்றிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சால் முன்னெடுக்கப்படும். இந்த அமைச்சுடன் இணைந்து வேறு சில அமைச்சுக்களும் பணியாற்றும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

 

சவுதிக்கு பணிப் பெண்ணாக சென்ற மற்றுமொரு பெண் சடலமாக நாடு திரும்பினார்!!

சவுதிக்கு பணிப் பெண்ணாக சென்று உயிரிழந்த மற்றுமொரு பெண்ணின் சடலம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

குருநாகல் மொரகொல்ல பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஆர்.டப்ளியூ .சோமலதா என்ற பெண்ணின் சடலமே கொண்டுவரப்பட்டுள்ளது.

வௌிநாட்டு வேலைவாய்பு முகவர் நிலையமொன்றினூடாக கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி இந்த பெண் வௌிநாட்டிற்கு சென்றுள்ளார்.

தனது தாயின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக உயிரிழந்த பெண்ணின் மகன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடம் வினவியபோது, குறித்த பெண் சுகவீனமடைந்ததன் பின்னர் வீட்டுரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதித்ததாக இலங்கைக்கான சவுதி தூதரகம் அறிவித்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் உபுல் தேஷப்பரிய குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே அவர் உயிரிழந்துள்ளதாகவும், அவருக்கான நட்ட ஈட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தள்ளார்.