வாகன உதிரிப்பாகங்கள் கடையொன்றில் தீ விபத்து!!

நீர்கொழும்பு கட்டுவபிட்டிய பால்தி சந்தியில் உள்ள வாகன உதிரிப்பாகங்கள் கடையொன்றில் தீ பரவியுள்ளது. நேற்று இரவு 7.30 மணியளவில் தீ பரவியுள்ளது.

இத் தீயில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் தீக்கிரையாகியுள்ளன. சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த தீயை, நீர்கொழும்பு மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

தீயினால் ஏற்பட்ட நட்டம் தொடர்பில் இதுவரை கணக்கிடப்படவில்லை.

பிரபல வர்த்த நிலையத்தில் கொள்ளை : மோப்பநாய் உதவியுடன் சோதனை!!

ஹட்டன் நகரிலுள்ள பிரபல வர்த்தக நிலையமொன்று உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் நகர பிரதான வீதியிலுள்ள பல்பொருள் மொத்த விற்பனை நிலையமே நேற்று (14.08) இனம்தெரியாதோரால் உதைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக நிலைய உரிமையாளர் இன்று வர்த்தக நிலையத்தை திறந்து உள்ளே சென்று பாரத்த போதே வர்த்தக நிலையத்தின் மேல்மாடியின் பின்புறம் வழியாக உடைத்துகொண்டு உள் நுளைந்து கொள்ளைடித்து சென்றுள்ளமை தெரியவந்துள்ளது

உரிமையாளரினால் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்

மேலும் பணம், சிகரெட் பக்கட்டுக்கள், மற்றும் கைபேசி மீள்நிரப்பு அட்டைகள் என்பன கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.

கொள்ளையடுக்கப்பட்ட பெறுமதி தொடர்பில் இதுவரையில் கண்டறியப்பவில்லை எனவும் சம்பவம் தொடர்பில் விசாரணையை முன்னெடுத்து வருவதாகவும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

கமலின் மகளைக் கடத்த திட்டம் : பரபரப்புத் தகவல்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்த பின்னர் நடிகர் கமல்ஹாசன் பற்றித்தான் ரசிகர்கள் மத்தியில் பேச்சு. அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்ற ஒரு எதிர்பார்ப்பும் உள்ளது.

இந்நிலையில் அவர் தன் வீட்டு வேலைக்காரர்கள் தன் மகளை கடத்த திட்டமிட்டனர், ஆனால் நான் அதை தெரிந்துகொண்டு காப்பாற்றிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

“அப்போது எனக்கு வந்த கோபத்திற்கு கொலை கூட செய்திருப்பேன். ஆனால் அப்படி நடந்துகொள்ளவில்லை” என கூறிய அவர், அதை மையமாக வைத்து தான் மகாநதி படத்தின் கதையை எழுதியதாக மேலும் தெரிவித்துள்ளார்.

கமலுக்கு ஸ்ருதி, அக்ஷரா என இரு மகள்கள் இருக்கும் நிலையில், அவர்கள் எந்த மகளை கடத்த திட்டமிட்டார்கள் என்பதை குறிப்பிடவில்லை.

நீதிபதி இளஞ்செழியனின் உயிர் காத்தவரின் மனைவிக்கு கிடைத்த மறுவாழ்வு!!

யாழில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் மனைவி நேற்றையதினம் பொலிஸ் சேவையில் மீண்டும் இணைந்துள்ளார்.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனுக்கு பாதுகாப்பு வழங்கும் போது, இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்டின் மனைவியை மீண்டும் பொலிஸ் சேவையில் இணைத்து கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

உயிரிழந்த பொலிஸ் அதிகாரியை கௌரவிக்கும் வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவரால் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மனுவை ஆராய்ந்த பின்னரே அவரை மீண்டும் சேவையில் இணைத்து கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய அவரது வீடு அமைந்துள்ள பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையமான பள்ளம பொலிஸ் நிலையத்தில் சேவை செய்வதற்கு அவருக்கு நேற்றைய தினம் முதல் சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 22ஆம் திகதி யாழ். நல்லூர் கோயிலுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் குறித்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

எச்சரிக்கை : நாட்டில் இன்றுமுதல் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை!!

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் சட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல், அங்கீகரிக்கப்பட்ட காப்புறுதி இன்மை, சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவரை சாரதியாக பணிக்கு அமர்த்துதல், மதுபோதையில் வாகனம் செலுத்துதல் மற்றும் தொடருந்து கடவைகளில் ஒழுங்கற்ற முறையில் வாகனத்தை செலுத்தல் ஆகிய குற்றங்களுக்கு எதிராக இந்த அபராதம் விதிக்கப்படவுள்ளது.

 

வவுனியாவில் ரயிலினை மறித்து மக்கள் போராட்டம் : பொலிசார் குவிப்பு!!

 
வவுனியா தாண்டிக்குளத்தில் இன்று (15.08.2017) காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்தினை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்றைய தினம் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியாவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடந்து செல்ல முற்பட்ட முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் மரணமடைந்தார்.

எனவே இவ்விடத்தில் பாதுகாப்பான புகையிரத கடவையினை அமைக்கக்கோரி அக்கிராம மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரத்தினை இன்று காலை 8.30 மணியளவில் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்ட இடத்திற்கு விரைந்த முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் ம.தியாகராஜா, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த ஆகியோர் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்கள்.

இப் பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு தற்காலிகமாக மூவரை மாதந்தம் 7500 ரூபா சம்பளம் அடிப்படையில் நியமிப்பதாகவும் உங்கள் கிராமத்திலிருந்து மூவரை தருமாறு வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த தெரிவித்தார். அதனையடுத்து பொதுமக்கள் புகையிரத்திற்கு முன்னாள் நின்று அகன்று புகையிரதம் செல்வதற்கு வழிவிட்டனர்.

​இதனால் சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக புகையிரம் சென்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.​

​விரைவில் இவ்விடத்திற்கு பாதுகாப்பான புகையிரத கடவையினை அமைக்காவிட்டால் போராட்டம் தொடருமென பொதுமக்கள் தெரிவித்தனர்.​

6000 கோடி சொத்துக்கள் கொண்ட கோடீஸ்வர அப்பா : ஏழையாக வாழும் மகன்!!

 
கோடீஸ்வர தொழிலதிபரின் மகன் ஒரு மாதம் ஏழ்மையான வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் செயல்படும் ஹரேகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கணேஷ்யாம் தோலாக்கியா.

இவர் நிறுவனத்தின் மதிப்பு 6000 கோடி ரூபாயாகும், இதோடு கணேஷ்ராம் வைர வியாபாரமும் செய்து வருகிறார்.

இவரின் மூத்த மகன் திராவ்யா தோலக்கியா (21) கடந்த ஆண்டு தந்தையின் உத்தரவை ஏற்று ஒரு மாதம் பல்வேறு கடைகளில் வேலை செய்து, சொற்ப வாடகை கொண்ட அறையில் ஏழை மக்களுடன் தங்கி பல்வேறு அனுபவங்களை பெற்றார்.

அதே போல கணேஷ்ராமின் இளைய மகன் ஹிதார் தோலாக்கியாவும் ஒரு மாதம் ஏழையாக வாழ்ந்து பார்த்துள்ளார்.

ஐதராபாத்துக்கு விமானம் மூலம் வந்த ஹிதார், அங்கிருந்து பேருந்து மூலம் செகந்திராபாத்திற்கு சென்றார்.

அங்கு 100 ரூபாய் வாடகை அறையில் தங்கிய அவர் காலணி கடைகளில் பணியாற்றினார்.

அதன் பின்னர், அட்டை தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிய ஹிதார் சில நாட்கள் ரிக்க்ஷா தொழிலாளிகள் மற்றும் சாமியாருடன் ஒன்றாக தங்கினார்

ஒரு மாதம் முடிந்துள்ள நிலையில், ஏழை மக்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டதோடு ஏராளமான அனுபவங்களை பெற்றதாகவும் கூறியுள்ளார்.

 

பிறந்தவுடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையின் சடலம் தோண்டி எடுப்பு!!

 
லிந்துலை – மட்டுக்கலை 7ஆம் இலக்க கொலணி பிரிவில் மரக்கறி தோட்டத்தில் புதைக்கப்பட்ட பெண் சிசுவின் சடலமொன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று தோண்டி எடுக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்ட நீதிமன்ற பதில் தயா நாணயக்கார முன்னிலையில் லிந்துலை பொலிஸார், பொது மக்கள் உதவி கொண்டு மதியம் 2 மணியளவில் சிசுவின் சடலத்தை தோண்டி எடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

மட்டுக்கலை 7ஆம் இலக்க கொலனி பகுதியில் 23 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் சிசு ஒன்றை பிரசவித்துள்ளார்.

இதனையடுத்து அப்பெண்ணுக்கு அதிக குருதிப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக அவர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்பின் அவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அங்கு இந்த பெண்ணிடம் விசாரணையை மேற்கொண்ட வைத்திய அதிகாரிகள் சிசுவை பிரசவித்ததால் அவருக்கு குருதி போக்கு ஏற்பட்டு இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

பிரசவிக்கப்பட்ட சிசு தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட போது, சிசுவொன்று தோட்டத்தில் புதைக்கப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து வைத்தியர்கள் நுவரெலியா பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் முன்னெடுத்த நடவடிக்கையில், சிசுவை பெற்றெடுத்த தாய் மற்றும் சிசுவை தோட்டத்தில் புதைக்க உதவி புரிந்த பெண் ஆகியோரையே லிந்துலை பொலிஸாரின் ஊடாக கைது செய்தனர்.

சம்பவத்தில் சிசுவை புதைத்த இடத்திலிருந்து மீட்பதற்கு லிந்துலை மற்றும் நுவரெலியா பொலிஸார் நீதிமன்ற உத்தரவினை நேற்று பெற்றிருந்தனர்.

இதனடிப்படையில் நுவரெலியா மாவட்ட பதில் நீதவான் தயா நாணயக்கார தலைமையில் சிசு புதைக்கப்பட்ட இடத்திலிருந்து இன்று தோண்டி எடுக்கப்பட்டது.

இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட சிசுவின் சடலத்தை நீதிமன்ற அனுமதியுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரிடமும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த லிந்துலை பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய உலகின் பிரமாண்டம்!!

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சற்றுமுன்னர் வருகை தந்துள்ளது.

எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான A-380 விமானமே இவ்வாறு வந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளன்.

அதற்கமைய டுபாயில் இருந்து இன்று மாலை 4.30 மணியளவில் வருகை தந்த இந்த விமானம் எவ்வித சிரமமும் இன்றி தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைக்கப்பட்டது. இதன் காரணமாக பாரிய விமானங்கள் தரையிறக்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

இன்றையதினம் பாரிய விமான வெற்றிகரமாக தரையிறங்கியதன் மூலம், மிகப்பெரிய விமானங்கள் தரையிறக்க முடியும் என சர்வதேசத்திற்கு அறிவிப்பதற்கான சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்தி கொள்வதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்காகவா காதலித்தேன் : கதறும் கர்ப்பிணி மனைவி!!

ஜம்மு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் இளையராஜா வீரமரணமடைந்தார். இவரது உடல் இன்று சொந்த ஊரான காளையார்கோயில் அருகே கண்டனியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இன்று கோகுலாஷ்டமி திருவிழாவுக்காக ஊரே மகிழ்ச்சியாய் தயாராகிக் கொண்டிருந்த வேளை இளையராஜாவின் மரணம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிறுவயது முதலே கஷ்டப்பட்ட இளையராஜாவின் குடும்பம், தற்போது தான் முன்னேறத் தொடங்கியதாம். ராணுவத்தில் சேர்ந்து நான்கு வருடங்கள் ஆன நிலையில், திருமணம் முடிந்து வெறும் ஒரு வருடமே.

இவரது மனைவி செல்வி கர்ப்பிணியாக இருக்கிறார், சனிக்கிழமை காலையன்று போன் செய்து ஊர் திருவிழாவை சிறப்பாக கொண்டாடுங்கள், இங்கே சண்டை நடக்கிறது என கூறினாராம்.

அன்றிரவே குண்டடிப்பட்டு பரிதாபமாய் பலியாகினார், அவர் மனைவி கூறுகையில், கடந்த மாதம் ஊருக்கு வந்த போது கூட என்னை அழைத்து செல்வதாய் கூறினார்.

இப்படி தவிக்கவிட்டு சென்றுவிட்டாரே, இதற்காக தான் காதலித்து திருமணம் செய்தேனா? என அவர் கதறி அழுதது ஊர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

இலங்கையில் பல மர்மங்கள் நிறைந்த பகுதி கண்டுபிடிப்பு!!

 
இலங்கையில் மர்மங்கள் பல நிறைந்த பகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 150 வருடங்கள் பழமையான பகுதி தொடர்பில் இவ்வாறு தகவல் வெளியாகியுள்ளது.

அந்தப் பகுதியில் பேய்கள் மற்றும் மர்ம நிகழ்வுகளுக்கு பிரபலமான இடம் ஒன்று இன்னமும் இலங்கையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த இடம் தொடர்பில் ஆர்வம் காட்டு நபர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் அந்த இடத்தை தேடிச் சென்றாலும் அந்த நபர்களின் அவதானத்திற்கு உட்படாத சில விடயங்கள் தெரியவந்துள்ளது.

திக்கந்த வலவ்வ என்ற இந்த இடம் அமானுஷ்ய சம்பவங்களுக்கு மிகவும் பிரபலமான ஒரு இடமாகும்.

கம்பஹா கிரின்தவெல 231 பஸ் வீதி திக்கந்த என்ற கிராமத்தில் இந்த வலவ்வ அமைந்துள்ளது.

1000 ஏக்கருக்கும் அதிமாக பாரிய இடம் மலையின் மேல் அமைந்துள்ளது. அதனை பார்க்கும் போதே அமானுஷ்யம் நிறைந்தவையாக காணப்படுகின்றன.

திக்கந்த வலவ்வவின் தற்போதைய உரிமையாளர் வெளிநாட்டில் உள்ளமையினால் அந்த இடம் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகிறது.

கண்டுபிடிப்பாளர்களுக்கு அந்த இடத்திற்குள் நுழைய அனுமதி கிடைக்காமையினால் திக்கந்த வலவ்வ இலங்கையில் அமானுஷ்ய சம்பவங்கள் தொடர்பில் பேசப்படும் இடங்களில் முன்னணியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவிலிருந்து நல்லூர் நோக்கிய நடைபவனி பாதயாத்திரை ஆரம்பம்!!

 
வருடாந்தம் நடைபெறும் வவுனியா வேப்பங்குளம் பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இருந்து பக்தர்களின் பாதயாத்திரை நடைபவனி இன்று (14.08.2017) ஆலய தர்மகர்த்தா செல்வி ஜெயராணி தலைமையில் ஆரம்பமானது.

20.08.2017 ஞாயிற்றுக்கிழமை இரதோற்சவ பெருநாளில் இப் பாதயாத்திரை நல்லூர் ஆலயத்தை சென்றடைய உள்ளது.

இன்று காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

அந்தனர் ஒன்றியசெயலாளர் சிவஸ்ரீ நா.பிரபாகரக்குருக்கள் , சிவஸ்ரீ சிவகுருநாதக்குருக்கள், சிவஸ்ரீ கிரிதரக்குருக்கள் எனப் பல சிவாச்சாரியார்களும் நிகழ்வில் கலந்து ஆசியுரைகளை வழங்கினர் .

மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.ஸ்ரீநிவாசன், பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் பண்டிதர் பிரதீபன், இந்து கலாச்சார உத்தியோகத்தர்கள் திருமதி கிரிஜா ,சிவஸ்ரீ குகனேஸ்வர சர்மா, சிவகஜன், கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தாட்சாயினி, வைத்தியர் இராமச்சந்திரன், திரு.தர்மபாலன், சைவமணி சண்முகரட்ணம் ஆகியோர்உரை நிகழ்த்தினர் .

தமிழ் விருட்சம் சந்திரகுமார் கண்ணன் , வாடி வீடு உரிமையாளர் கதிர்காமராஜா, புதூர் நாகதம்பிரான் தலைவர் கிருபாகரன், அன்பக உறுப்பினர் கனேஸ், சசிகரன் ஆலய நிர்வாக உறுப்பினர்கள் அன்பக சிறுவர் இல்ல நிர்வாக உறுப்பினர்கள் பக்தர்கள் எனப்பலரும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர் .

வவுனியா தாண்டிக்குளத்தில் புகையிரத்துடன் முச்சக்கரவண்டி கோரவிபத்து!!

 
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியாவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடந்து செல்ல முற்பட்ட முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இன்று பிற்பகல் 4.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் பயணித்தபோது அப் பகுதியில் இருந்த பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடந்து சென்ற முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்து இடம்பெற்ற இடத்தில் இருந்து முச்சக்கர வண்டி 500 மீற்றர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது. இவ்விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியான ஈச்சங்குளம் பகுதியைச் சேர்ந்த எஸ்.கிருபா(வயது 28) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இதேவேளை குறித்த பகுதியில் பாதுகாப்பான புகையிரதக் கடவையை முன்னர் இருந்ததுடன், புகையிரத சமிக்ஞை பொருத்தப்பட்ட பின்னர் அது அகற்றப்பட்டிருந்தமையும், வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் அப்பகுதி மக்களும் பாதுகாப்பான புகையிரத கடவையாக அதனை மாற்றுமாறு புகையிரத திணைக்களத்திடம் கோரிக்கை விட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா கோவிற்குளம் பகுதியில் விடுதியிலிருந்து சடலம் மீட்பு!!

 
​வவுனியா கோவிற்குளம் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (14.08.2017) காலை 10 மணியளவில் சடலமொன்று வவுனியா பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா கோவிற்குளம் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியின் மதுபானசாலை பகுதியில் கடைமையாற்றும் மூன்று பிள்ளைகளின் தந்தையான அலேசு அருளப்பு ( வயது 58) என்பவர் நேற்றைய தினம் இரவு 10.30 மணியளவில் அவரது கடமைகளை முடித்து விட்டு குறித்த விடுதியில் தங்கியுள்ளார்.

இன்று காலை குறித்த விடுதி அறைக்கு சக ஊழியர் ஒருவர் சென்ற சமயத்தில் நாட்காலியில் இறந்த நிலையில் இருந்துள்ளார்.

உடனடியாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இவர் நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கிருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரியவருகின்றது.​

ராஜாவாக முடிசூட்டப்பட்ட மலை ஆடு : அயர்லாந்தில் வினோதம்!!

 
அயர்லாந்தின் தென் மேற்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றின் ராஜாவாக காட்டு மலை ஆட்டிற்கு முடிசூட்டப்பட்டுள்ளது வினோதத்தை ஏற்படுத்தியுள்ளது. கில்ர்கின் நகர மக்களே இவ்வாறு ஆட்டை ராஜாவாக முடிசூட்டியுள்ளனர்.

அயர்லாந்தின் பழமையான திருவிழாக்களில் ஒன்றான பக் பேர் பண்டிகைக்காக, கில்ர்கின் நகரத்தில் உள்ள மக்கள், காட்டு மலை ஆட்டை அழைத்து வந்து ராஜாவாக முடிசூட்டியுள்ளனர்.

இதற்கு முன்பாக ஆட்டை நகரம் முழுவதும் ஊர்வலமாக கொண்டு சென்ற மக்கள் பக் திருவிழாவின் ராணியான உள்ளூர் பள்ளி சிறுமி கையால் ஆட்டிற்கு ராஜாவாக முடிசூட்டியுள்ளனர்.

திருவிழா முடியும் வரை ராஜாவாக முடிசூட்டப்பட்டுள்ள ஆட்டிற்கு அரச மரியாதை வழங்கப்படும், ஆட்டிற்கு சாம்பல் மர கிளைகள், நீர் மற்றும் முட்டைக்கோசு ஆகியவை உணவாக வழங்கப்பட்டுள்ளது.

திருவிழா முடிந்த பின்னர் ஆடு அதன் மலை வீட்டிற்குத் திரும்பி அனுப்பப்படும் என கில்ர்கின் நகர மக்கள் தெரிவித்துள்ளனர்.

மண்ணுக்குள் அப்படியே புதைந்த இரண்டு பேருந்துகள் : பயணிகளின் கடைசி நிமிடங்கள்!!

 
நிலச்சரிவு ஏற்பட்டதில் சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு பேருந்துகள் மண்ணில் புதைந்ததையடுத்து 46 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாண்டி- பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது.

நேற்று அந்த வழியாக சென்று கொண்டிருந்த இரண்டு பயணிகள் பேருந்துகள் மண்ணில் அப்படியே புதைந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு குழுவினர் மண்ணில் புதைந்த 46 பேரின் சடலங்களை மீட்டனர்.

நிலச்சரி‌வில் மேலும் சில வாகனங்கள் புதையுண்டு போயிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது, தொடர்ந்து மீட்பு பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட முதல்வர் வீர்பத்ர சிங், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.