கிளிநொச்சி – பளையைச் சேர்ந்த 23 வயதான தமிழ் வேகப்பந்து மற்றும் கடினப்பந்து வீச்சாளரை வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அழைத்து கலந்துரையாடியுள்ளார்.
செபஸ்ரியாம்பிள்ளை விஜயராஜ் என்ற குறித்த இளைஞனின் பயற்சிகளுக்குத் தேவையான உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதாகவும், இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் இணைத்துக் கொள்வதற்கு வசதிகளையும் வழங்க தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த இளைஞர் விரும்பும் பட்சத்தில் அவரை பொலிஸ் கிரிக்கட் அணியில் உள்வாங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது அவர் விஜயராஜிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், மேலும் அவரது திறமைகளை வளர்த்துக் கொள்ளத் தேவையான வசதிகளையும் பயிற்சிகளையும் வழங்க முன்வந்துள்ளார்.
வவுனியாவில் கடந்த 2016.02.16 அன்று வவுனியா விபுலானந்தாக்கல்லூரி மாணவியான கெங்காதரன் ஹரிஸ்ணவி உக்கிளாங்கும் பகுதியில் தனது வீட்டில் வைத்து பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
அவரது படுகொலை இடம்பெற்று ஒருவருடத்திற்கு மேலாகியும் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதே தவிர எவ்வித முன்னேற்றமும் எற்படவில்லை.
சந்தேகத்தில் அடிப்படையில் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு தற்போது மேல் நீதிமன்ற பிணையுடன் வெளியே வந்துள்ளார்.
எனது மகளை பாலியல் வன்புணர்விற்குட்படுத்தியவருக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும். எனது மகளின் மரணத்திற்கு நீதி வழங்கவேண்டும். 13 வயதில் எனது மகளின் வாழ்வினை சிதைத்து சின்னாபின்னமாக்கிய கயவனை கைது செய்து தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
எனது மகளின் ஆசைகள் நிறைவேற்றப்படவில்லை. நினைத்துப்பார்க்க முடியாத துன்பத்தை அவள் எமக்குத் தந்துவிட்டுச் சென்றுள்ளார்.
எனவே எனது மகளின் வழக்கு விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க உரியவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஹரிஸ்ணவியின் தயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இம் மாதம் 28ம் திகதி வழக்கு விசாரணைகள் இடம்பெறவுள்ளது.
வவுனியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 15 வயது பிரிவுக்குட்பட்ட மாவட்ட மட்ட துடுப்பாட்ட அணித் தெரிவானது நேற்று தெரிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட மட்ட பயிற்சியாளர் தலைமையில் வடதாரகை வலைப்பந்து பயிற்சிக் கூடத்தில் இத்தெரிவு இடம்பெற்றது.
இத் தெரிவுக்காக மாவட்ட மட்டத்தில் துடுப்பாட்ட அணிகளைக் கொண்ட வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம், கோவில்குளம் இந்துக் கல்லூரி, செட்டிக்குளம் மகா வித்தியாலயம், புதுக்குளம் மகா வித்தியாலயம், பூவரசங்குளம் மகா வித்தியாலயம், நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயம், விபுலானந்தா கல்லூரி, மடுக்கந்தை மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
2004 உயர்தர மாணவர் குழுவின் பூரண அனுசரணையுடன் மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தினால் நடாத்தப்பட்டு வரும் ஒருநாள் துடுப்பாட்ட போட்டித்தொடரின் முதல் சுற்றுப் போட்டிகளின் போது தமது திறமைகளை வெளிப்படுத்திய 50ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இவ்வீரர்களிலிருந்து மாவட்ட பயிற்சியாளர், மற்றும் மாவட்ட துடுப்பாட்ட சங்கத் தெரிவுக்குழு உறுப்பினர்களால் 24 பேர் கொண்ட 15 வயது பிரிவுக்குட்பட்ட மாவட்டத் துடுப்பாட்ட வீரர்கள் குழாம் தெரிவு செய்யப்பட்டது.
இந்நிகழ்வின் போது துடுப்பாட்ட சங்கத்தின் தலைவர் யோ.ரதீபன், பாடசாலை துடுப்பாட்ட அபிவிருத்திக் குழு தலைவர் டீ.சுந்தராங்கன், துடுப்பாட்ட சங்க நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை துடுப்பாட்ட பொறுப்பாசிரியர்கள் ஆகியோரும் பிரசன்னமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
சமூக சேவைகள் அமைச்சு, தேசிய முதியோர் செயலகம், மாகாண சமூக சேவைகள் திணைக்களம் என்பன இணைந்து வவுனியா மாவட்ட சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்துடன் இணைந்து பிரதேச செயலக மட்ட பாடசாலை மாணவரிடையே பொது அறிவு வினாடி வினாப்போட்டியை வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடாத்தினர்.
மாவட்ட சமுர்த்தி அவிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர் திருமதி எஸ்.பத்மரஞ்சன் தலைiமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செட்டிகுள பிரதேச செயலக பாவற்குளம் கனேஸ்வரா வித்தியாலய மாணவிகளும் , வவுனியா வடக்கு பிரதேச செயலக நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவிகளும் , வவுனியா நகர பிரதேசம் சார்பில் வவுனியா தமிழ் மகாவித்தியாலயம், CCTMS பாடசாலை, வவுனியா மதீனா வித்தியாலயம் , சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவர்களும் பங்கு கொண்டனர் .
இறுதிப்போட்டியில் வவுனியா நகர பிரதேச செயலக அணியுடன் செட்டிகுள பிரதேச செயலக அணி சிறப்பாக போட்யிட்டத்தில் செட்டிகுளபிரதேச செயலக அணி 35 மேலதிக புள்ளிகளால் வெற்றி பெற்றது.
சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளே இதில் பங்குபற்றி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள கணக்காளர் எஸ்.பால்ராஜ் விசேட விருந்தினராக இதில் கலந்து கொண்டார் . மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.ஸ்ரீநிவாசன் வினாடிவினா நிகழ்வை சிறப்பாக நடத்திவைத்தார்.
மாவட்ட முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி தனுசியா பாலேந்திரன் போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டார் . நிகழ்வில் மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், மாவட்ட செயலக சமூகசேவை உத்தியோகத்தர் கே.இராஜசேகர், திருமதி சந்திரிக்கா ரட்னாயக்கா ஆகியோர் நடுவர்களாக கடமையாற்றினர்.
இவர்களுடன் சமுர்த்தி திணைக்கள முகாமையாளர்களான திரு வில்வராஜா, திரு இராஜசேகர் ,திரு சுசீந்திரராஜா , திருமதி சந்திரகுமார் , திரு சிவகுமார் ,திரு நிரஞ்சிதகுமார், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு அமல்ராஜ் திரு யூடிக்குமரன் செல்வி தேவநந்தினி திரு விமலகாந் பாடசாலை அதிபர் சிசில் ராஜகுமார ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தில் நேற்று மதியம் இலங்கை பிரதமரின் அரசியல் பிரவேசத்தின் 40 வருட பூர்த்தியை முன்னிட்டு சிறப்புப் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.
வவுனியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் கா.உதயராசா, பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீ.பிரதீபன், சிவன் ஆலயத்தின் செயலாளர் ஆறுமுகம் நவரட்ணராஜா, கிராமசேவையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் ஐக்கிய தேசியக்கட்சியின் வன்னி மாவட்ட இணைப்பாளர் சிவலிங்கம், கருணதாச எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர்.
அம்பாந்தோட்டை பிரதேசத்திலுள்ள காடு ஒன்றில் தலை மற்றும் வாய்ப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவதியுற்ற காட்டு யானை ஒன்றை காப்பாற்றுவதற்கான முயற்சியில் வன இலாகா அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான குறித்த யானை சில நாட்களாக துறைமுகத்திற்கு அண்மையிலுள்ள காட்டுப் பகுதியில் சிரமப்பட்டு வருவதை துறைமுக பணியாளர்கள் கண்காணித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து வன உயிரின இலாகா அதிகாரிகளுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர் உட்பட வன உயிரின இலாகாவினர் குறித்த இடத்திற்கு விரைந்து யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தற்போது யானை எழுந்து நடமாட முடியாத ஆபத்தான நிலையில் இருப்பதன் காரணத்தினால் இதனை யானைகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
3 வயது மதிக்கத்தக்க இந்த யானையின் வாயிலும், தலையிலும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்து, அதற்கு உகந்த சிகிச்சைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக வன விலங்கு மருத்துவ அதிகாரி வைத்தியர் மாலக்க அபேயவர்தன தெரிவித்துள்ளார்.
வாயில் ஏற்பட்டுள்ள துப்பாக்கிச் சூட்டுக் காயம் காரணமாக யானை உணவு உண்ண முடியாமல் சிரமப்படுவதாகவும், இந்த யானைக்கு ஏற்கனவே தும்பிக்கையில் அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா இராசேந்திர குளம் பகுதியில் நேற்று (08.08 மாலை மின் கம்பத்துடன் மோதி விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
வவுனியா செட்டிகுளம் பகுதியிலிருந்து நெளுக்குளம் பகுதியை நோக்கி பயணித்த மகேந்திரா வாகனம் ஒன்று இராசேந்திர குளம் பகுதியை அண்மித்த வேளையில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மின் கம்பம் முறிந்து மின்சாரம் தாக்கியதில் வாகனத்தில் பயணித்த வவுனியா பூவரசங்குளம் பகுதியை சேர்ந்த முகமட் வயது 30 என்ற நபர் பலியாகியுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கெப்பிற்றிக்கொல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முஸ்லிம் அற்றாவ பகுதியில், மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி சிறுவனொருவன் இன்று மாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கெப்பிற்றிக்கொல்லாவ, அற்றாவ புதிய வளவைச் சேர்ந்த சபீர் றுஸைத் என்ற 14 வயதுடைய சிறுவனே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் தனது வீட்டிலுள்ள மலசலகூடத்துக்குச் சென்ற போது, மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கெப்பிற்றிக்கொல்லாவ வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாடொன்றின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணொருவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் அறிவிக்குமாறு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடொன்றின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் இலங்கை பெண் தொடர்பிலேயே அவசரமாக தகவல் தேவைப்படுவதாக பணியகம் தெரிவித்துள்ளது.
பஹ்ரைன் சல்மானியா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பெண், அந்த நாட்டு இலங்கை தூதரக அலுவலகத்தின் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.
பஹ்ரைன் நாட்டு பொலிஸாரினால் சல்மானியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த பெண் நினைவற்ற நிலையில் உள்ளதால் அவர் தொடர்பான தகவல்கள் கோரப்பட்டுள்ளது.
கனேமுல்ல பகுதியை சேர்ந்த இனோக்கா தமயந்தி என்ற பெண்ணே இவ்வாறான நெருக்கடி நிலையில் உள்ளார். அவரிடம் விமான கடவுச்சீட்டு அல்லது அடையாளத்தை உறுதி செய்ய கூடிய வகையில் எந்த ஒரு ஆவணமும் இல்லை என குறிப்பிடப்படுகின்றது.
அவருக்கு இலங்கையில் வசித்தமை தொடர்பில் உரிய நினைவில்லை என தூதரக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அவர் தொடர்பில் தகவல் தேடி பார்ப்பதற்கு அவசியம் என்பதனால் பொது மக்களின் உதவி நாடப்பட்டுள்ளது.
விசேடமாக அவர் தொடர்பில் தகவல் அறிந்தால் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 011 2 864 100 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அரசாங்க வைத்தியசாலை ஒன்றின் கழிப்பறைக்குள் சீ.சீ.டீ.வி கமரா பொருத்தியதாக வைத்தியர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியருக்கு எதிராக அனுராதபுரம் தலைமை பொலிஸார், அந்தப் பகுதி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
வைத்தியருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு போதுமான காரணங்கள் உள்ளதாக, சட்ட மா அதிபருக்கு கிடைத்த தகவல்களுக்கமைய இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சுமத்தப்பட்டுள்ள வைத்தியரை எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி அனுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அனுராதபுரம் வைத்தியசாலையின் பெண்கள் கழிப்பறையில் இவ்வாறு சீ.சீ.டீ.வி பொருத்தப்பட்டதாக வைத்தியர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பலப்பிட்டிய வைத்தியசாலையில் ஆறு கிலோ கிராம் எடையுடைய சிசுவொன்று பிரசவிக்கப்பட்டுள்ளது.
பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் இவ்வாறு அதிக எடையுடைய சிசுவொன்று பிரசவிக்கப்பட்டுள்ளது. பென்தொட்ட ஹபுருகல பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான தாய் ஒருவர் இந்த சிசுவை பிரசவித்துள்ளார்.
சிசேரியன் சத்திர சிகிச்சை ஊடாக இந்த சிசு பிரசவிக்கப்பட்டதாகவும் தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சிசுவின் எடை ஐந்து கிலோ மற்றும் 980 கிராம் என தெரிவிக்கப்படுகிறது. சாதாரணமாக பிறக்கும் குழந்தை ஒன்றின் நிறை 3.5 கிலோகிராம் என்பது குறிப்பிடத்தக்கது.
நாவுல அளுகொல்ல பிரதேசத்தில் வேர்க்கடலை அறுவடை செய்வதற்காக புதிய இயந்திரம் ஒன்றை இளைஞர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். 28 வயதான கே.ஜீ.சந்திகஜயந்த சேனாதீர என்ற இளைஞரே இந்த இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.
பயன்படுத்தப்படாத நெல் அறுவடை செய்யும் இயந்திரம் ஒன்றின் உதவியுடன் இந்த இயந்திரத்தை அவர் தயாரித்துள்ளார். பயன்படுத்த முடியாத பல பொருட்களை கொண்டு புதிய விடயங்களை உருவாக்குவதில் இந்த இளைஞர் திறமையான ஒருவராவார்.
இந்த இளைஞனின் பல நாள் முயற்சியின் பலனாக இந்த இயந்திரம் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மிகவும் இலகுவாக இலகுவாக வேர்க்கடலை அறுவடை செய்ய முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு ஏக்கர் வேர்க்கடலை அறுவடை செய்வதற்கு 10 பேர் தேவைப்படுகின்றனர். இது குறித்து சிந்தித்த பின்னரே இந்த இயந்திரம் தயாரிக்கப்பட்டதாக அந்த இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இயந்திரத்தின் ஊடாக சுத்தமான வேர்க்கடலைகளை பெற்றுக் கொள்ளலாம். மணல் அகற்றுவதற்கும் அந்த இயந்திரத்தினால் முடியும். இந்த இயந்திரத்தில் இரண்டு பேர் வேலை செய்ய முடியும். உதவிகள் கிடைத்தால் இது போல் பல இயந்திரங்களை உருவாக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்..
பிரேமம் படத்தின் மூலமாக அறிமுகமாகி தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள சாய் பல்லவியின் நடிப்பைப் பார்த்து நடிகை சமந்தா பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
தற்போது தெலுங்கில் சாய் பல்லவி நடித்த பிடா படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் தெலுங்கு பட உலகில் சாய் பல்லவிக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது.
பிடா படம் சிறிய பட்ஜெட்டில் தயாராகியிருந்தாலும் வசூலில் ஒரே வாரத்தில் 40 கோடி ரூபாவைக் கடந்து மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் தயாரிப்பு தரப்பினருக்கு 25 கோடி ரூபா வரை பங்குத்தொகையாக கிடைத்திருக்கிறது.
முன்னணி நடிகை சமந்தா அண்மையில் இந்த படத்தைப் பார்த்துவிட்டு சாய் பல்லவியை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
பிடா படம் மிகவும் புத்துணர்வைத் தருகிறது. படக்குழுவிற்கு எனது பாராட்டுக்கள். பிடாவில் சகலமும் சாய் பல்லவி தான். இதற்கு மேல், இனி ஒரு படத்தில் சாய் பல்லவி இருக்கிறார் என்றால் நிச்சயம் அதைப் பார்க்கலாம். அருமையான நடிப்பு வாழ்த்துக்கள் என்று புகழ்ந்திருக்கிறார் சமந்தா.
யூடியூபில் குழந்தைகள் பாதுகாப்பை நிர்வகிக்கும் அமைப்பு தோல்வியடைந்து விட்டதாக அந்த நிறுவனத்தின் தன்னார்வக் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்யும் நபர்கள் அல்லது அதற்கு விரும்பும் நபர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவார்கள் என்ற மனப்பான்மை இருந்து கொண்டேதான் இருக்கிறது. யூடியூபும் அதைத் தெரிந்து வைத்துள்ளது.
காணொளிகளைப் பகிரும் இந்தத்தளமானது தன்னுடைய வலைத்தளத்தில் வேண்டத்தகாத பதிவுகள் மற்றும் கருத்துக்களை இடுவதைக் கண்டறிவதற்காக ட்ரஸ்டட் ஃப்ளாக்கர்ஸ் என்ற சிறப்பு வாய்ந்த தன்னார்வக் குழுவைக் கொண்டுள்ளது.
ட்ரஸ்டட் ஃப்ளாக்கர்ஸ் என்ற இந்த அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் சில மாதங்களுக்கு முன் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளதாக பி.பி.சி. யிடம் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய சில பதிவுகள் இருப்பதாக அனுப்பிய பல்வேறு புகார்களில் குறைந்த அளவு புகார்களுக்கு மட்டுமே பதிலளித்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 9,000-க்கும் மேலான புகார்களை தான் அனுப்பியதாகவும், ஆனால் இதுவரை எதுவுமே தீர்க்கப்படவில்லை என்றும் ஒரு தன்னார்வலர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அளிக்கப்பட்டுள்ள 526 புகார்களில் 15 பதில்கள் மட்டுமே திரும்பி வந்துள்ளது என்று கூறும் தன்னார்வலர்கள், இந்தத் தளத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு இல்லை என்ற பெரிய பிரச்சனையை இது அடையாளப்படுத்தும் கணக்கீடாகவே இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
பதின்ம வயதுள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் பகிரும் சில காணொளிகளில் விரும்பத்தகாத, ஆட்சேபனைக்குரிய வகையில் கருத்துக்களை இடும் நபர்களின் கணக்குகளின் மீதும் புகாரளிக்கப்பட்டுள்ளன.
குழந்தைகள் வெளியிடும் இந்த காணொளிகளில் ஆபாசமோ அல்லது நிர்வாணத்தை வெளிப்படுத்தும் எந்த வித காட்சிகளும் இல்லாத போதிலும், பாலியல் ரீதியான கருத்துகள் வெளியிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பதின்ம வயது குழந்தைகளை உடைகள் இல்லாத காணொளிகளை பகிருமாறும், தங்களின் தேகங்கள் குறித்து உரையாடத்தூண்டும் வகையிலும் காணொளிகளின் கீழ் கருத்துகள் இடப்படுகின்றன.
சில நேரங்களில் குழந்தைகளை தனிச்செய்தியில் உரையாட வருமாறும் அழைப்பு விடுக்கின்றனர்.
குழந்தைகள் மீது பாலியல் துஷ்பிரயோகத்தை வெளிப்படுத்தும் அல்லது பாலியல் துன்புறுத்தலை மேற்கொள்ள விரும்பும் பெடொஃபைல் எனப்படும் நோயுடைய நபர்கள் இந்த வலைத்தளத்தில் உலவுவதாகவும் புகாரளிக்கப்பட்டுள்ளது.
”எங்களுடைய தளத்தில் குழந்தைகள் மீது பாலியல் வக்கிரத்தை வெளிப்படுத்தும் எந்தவித உள்ளீடுகள் மற்றும் கருத்துகள் இடுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அவ்வாறு முறையற்ற செயலில் ஈடுபடும் நபர்களின் கணக்கை நீக்கிவிடுவோம்,” என கடந்த மார்ச் மாதம் யூடியூப் நிறுவனம் தெரிவித்தது.
ஆனால், அவர்கள் தங்கள் கொள்கைகளை நடைமுறையில் செயற்படுத்தவில்லை என தன்னார்வலர்கள் பிபிசி-க்கு தெரிவித்துள்ளனர்.
சீனாவின், சிச்சுவானில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் பதிவாகிய 7 ரிக்டர் நில அதிர்வில் 70 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இதேவேளை, நில நடுக்கத்தினால் காயமடைந்த மக்களுக்கான சிகிச்சைகளை வழங்கவும், பாதிப்படைந்த மக்களுக்கான நிவாரணங்களை துரித கதியில் வழங்குமாறும் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
நிலநடுக்கத்தின் தாக்கத்திற்கு உட்பட்ட பொது மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்க்கப்பட்டுள்ளதாக சி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
ஏனைய இயற்கை அனர்த்தங்களிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில், நாட்டின் வளிமண்டலவியல் திணைக்களம் அவதானத்துடன் செயற்படுமாறும் சி ஜின்பிங் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மேலும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் மற்றும் ஏனைய உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்காக சீன அமைச்சரவையினால், விசேட குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.