நாடு கடத்தப்படும் ஆபத்தில் இலங்கையர்கள் : பிள்ளைகளும் பிரிக்கப்படலாம்!!

அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களை வெளியிட்ட அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியான எட்வட் ஸ்நோடனுக்கு அடைக்கலம் கொடுத்த இலங்கை அகதிகள் நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவின் முக்கிய அதிகாரிகளில் ஒருவராக இருந்த எட்வட் ஸ்நோடன் 2013ம் ஆண்டில் முக்கிய இரகசியம் ஒன்றை கசியவிட்ட நிலையில், அவர் அமெரிக்காவிலிருந்து தப்பியோடி வந்து ஹொங்கொங்கில் சிறிது காலம் தங்கியிருந்தார்.

இந்த நிலையில், எட்வட் ஸ்நோடனுக்கு இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் அடைக்கலம் கொடுத்திருந்தனர்.

அவர்களுள் இலங்கையைச் சேர்ந்த சுபுன் திலின கெல்லபத்த மற்றும் அவரது மனைவி நதீகா தில்ருக்ஷி ஆகியோர் தற்போது நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

குறித்த இலங்கையர்கள் நாட்டவர்கள் தொடர்பான உரிய ஆவணங்களை வழங்கத் தவறியமையே இந்த நெருக்குதலுக்கு காரணம் என்றும் இவர்களது விசாரணைகளைக் கையாளும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஏழு பேரினதும் பாதுகாப்பு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

ஹொங்கொங்கில் உள்ள அமெரிக்க விஸ்டா – ப்ளூவர் இடத்தில் எட்வட் ஸ்நோடன் தொடர்பிலான விசாரணையில் குறித்த ஏழு பேரும் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

எட்வட் ஸ்நோடன் தற்பொழுது ரஷ்யாவில் மறைந்து வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தன்னைக் காப்பாற்றிய அகதிகளுக்கு அடைக்கலம் கொடுங்கள் என எட்வேட் ஸ்நோடன் ஹொங்கொங் அரசாங்கத்திற்கு காணொளி மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் இருந்து அகதிகளாக சென்று மூன்றாம் நாடு ஒன்றில் குடியேற காத்திருக்கும் ஐந்து பேரும், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த இருவரும் நாடு கடத்தப்படுவதற்காக குடிவரவு தடுப்பு முகாமுக்கு மாற்றப்படலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த அகதிகளின் பிள்ளைகளும் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதனை தடுக்க குறித்த அகதிகளின் சட்டத்தரணிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்

குறித்த அகதிகளின் அடைக்கலக் கோரிக்கையை ஹொங்கொங் அரசாங்கம் நிராகரித்த நிலையிலேயே இந்த அச்சம் வெளியாகியுள்ளது.

இலங்கையின் சுப்புன் கெல்லபாத்த, நதீகா நோனிஸ் அவர்களின் இரண்டு பிள்ளைகள் மற்றும் இலங்கை இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்றவரான அஜித் புஸ்பகுமார, பிலிப்பைன்ஸ் வாசியான வனேஸா ரொடெல் மற்றும் அவரின் மகள் ஆகியோருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

பேஸ்புக் ஊடாக நடத்தப்பட்ட விருந்து : இரு பெண்களுக்கு ஏற்பட்ட அவலம்!!

இலங்கையில் தற்போது பேஸ்புக் ஊடாக நட்பை ஏற்படுத்திக் கொண்டவர்கள் விருந்து வைக்கும் நடைமுறை ஒன்று தீவிரம் அடைந்துள்ளது.

இவ்வாறு நடைபெற்ற விருந்து ஒன்றுக்கு சென்ற மூன்று பெண்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஹோட்டலில் இடம்பெற்ற விருந்தை நிறைவு செய்து வீடு திரும்ப ஆயத்தமாகிய மூன்று பெண்கள் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறியுள்ளனர்.

இதன்போது இடையில் இன்னுமொரு இளைஞர் அந்த முச்சக்கர வண்டியில் ஏறியுள்ளார். இந்நிலையில் முச்சக்கர வண்டி வேறு திசையை நோக்கி செல்வதனை அவதானித்த பெண் ஒருவர் அதில் இருந்து குதித்து தப்பி சென்றுள்ளார். .

ஏனைய இரண்டு பெண்களை காட்டுப் பகுதிக்கு கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் காப்பாற்றப்பட்ட இரண்டு பெண்களும் சட்ட வைத்தியரிடம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தொழிலுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு இந்த 3 பெண்களும் விருந்திற்கு சென்றுள்ளனர். 23 முதல் 25 வயதுடைய இந்த பெண்கள் ஹங்குரன்கெத்த மற்றும் பொந்தகான பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும்.

பேஸ்புக் ஊடாக ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தொன்று நேற்று நடத்தப்பட்ட நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

குறித்த விருந்து நிகழ்வில் போதைப்பொருள் பயன்படுத்தியதனால் பிரதேச மக்கள் எதிர்ப்பு வெளியிட்டமையால் இந்த நிலை ஏற்பட்டது.

இந்த விருந்து நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டனர். இவர்கள் பேஸ்புக் ஊடாக நட்பு வட்டத்தை உருவாக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பணத்திற்காக படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் : தாய் கதறல்!!

அண்மையில் கொட்டாவையில் இளம் பெண் ஒருவர் கோரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

குறித்த கொலைச் சம்பவம் காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. அந்த பெண் பணத்திற்காக கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

தங்கள் பணத்தின் மீது ஆசை கொண்டு மகள் ஊடாக அதனை பெற்றுக் கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அது முடியாமல் போனமையால் மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்து விட்டு தலைமறைவாகிய சந்தேகநபர் பொலிஸாரிடம் போலி வாக்குமூலம் வழங்கி மகளை அவமதிப்பதாக, கொலை செய்யப்பட்ட தரிந்தி ஆலோகா என்ற பெண்ணின் தாயாரான கமலா எகொடவத்தை தெரிவித்துள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் தாயான கமலா எகொடவத்தை நேற்று ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

இந்தக் கொலைக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் தன்னிடம் எந்தவொரு வாக்குமூலத்தையும் பெற்றுக் கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

கொட்டாவை, மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த எஸ்.ஏ.தரிந்தி ஆலோகா என்ற பெண் கடந்த மாதம் 22ம் திகதி காதலன் என கூறப்படும் நபரினால் கோரமாக கொலை செய்யப்பட்டார்.

அனைத்து ஊடகங்களிலும் தனது மகளை கொலை செய்த நபரின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு செய்தி வெளியாகியமையினால் உயிரிழந்த தனது மகளுக்கு அநீதி இழைக்ககப்பட்டுள்ளது.

தான் கூறுவதனை ஊடகங்களில் பதிவிட்டு இதற்கு முன்னர் ஏற்பட்ட அவப்பெயரிலிருந்து தம்மை மீட்குமாறு அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணுக்கும், சந்தேக நபருக்கும் இடையில் காதல் தொடர்பு ஒன்று காணப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காதல் தொடர்பை கட்டியெழுப்புவதற்கு சந்தேகநபர் முயற்சித்த போதிலும் தனது மகள் அதனை நிராகரித்தார்.

சந்தேகநபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் ஐந்து வருடத்திற்கும் அதிக காலம் காதல் தொடர்பு ஒன்று காணப்பட்டது. அவர்கள் திருமண பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளும் தினத்தன்று எனது மகள் கொலை செய்யப்பட்டார்.

எமது வர்த்தக நிலையத்திற்கு பக்கத்திலுள்ள வர்த்தக நிலையத்தில் வேலை செய்த ஒருவர் ஊடாகவே அந்த இளைஞனை நாம் அறிந்து கொண்டோம். எங்கள் பணத்திற்கு ஆசைப்பட்டே அந்த இளைஞன் எங்கள் மகளை கொலை செய்து விட்டார் என தாயார் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.

வித்தியாவின் கொலை வழக்கு : இன்று முதல் தொடர் விசாரணை!!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதியரசர் குழுவுக்கு மத்தியில் இன்று முதல் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை 18ம், 19ம், 20ம், 24ம், 26ம் ஆகிய தினங்களில் தொடர்ந்து எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை வித்தியா கொலைக்கான வழக்கு எதிர்வரும் மாதம் இரண்டு வாரத்திற்குள் நிறைவடைவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக அந்த தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் 13ம் திகதி வித்தியா கடத்தி சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் தற்போது வரையில் சந்தேக நபர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் சாதனை படைத்த ஈழத்து பெண்!!

கனடாவில் வாழ்ந்து வரும் ஈழத்து பெண்ணான அருந்ததி செல்லத்துரையின் சாதனை தொடர்பில் அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரான்ஸ் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட தங்கப்பானை விருது பெற்ற தீபன் திரைப்படத்தில் அருந்ததி செல்லத்துரை சிறந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கனடாவில் வசிக்கும் அருந்ததி செல்லத்துரை சிறந்த கலைஞராக புகழ் பெற்றுள்ளார். இலங்கையை பிறப்பிடமாக கொண்ட அவரின் வாழ்க்கை மிகவும் துயரமானதாகும்.

அருந்ததி தனது வாழ்க்கை நிலை குறித்து கனேடிய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டார்.

அருந்ததி தன் மகனுக்கு மன இறுக்கம் இருப்பதை கண்டுபிடித்த போது, அது என்னவென்று அவருக்கு தெரிந்திருக்கவில்லை.

இலங்கையில் வாழ்ந்து கொண்டிருந்த அருந்ததிக்கு கனடாவில் காணப்பட்ட பல விடயங்கள் புதுமையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.

1999ம் ஆண்டு தனது ஊரான யாழ்ப்பாணத்தின் கிராம பகுதியில் இராணுவம் புகுந்து உள்ளூர் மக்களை அச்சுறுத்திய பின்னர் அவர் நாட்டை விட்டு வெளியேறினார்.

பிரித்தானியாவில் வாழ்ந்த அவரின் மூத்த சகோதரரின் உதவியுடன், சிங்கப்பூர் வழியாக கலிபோர்னியாவில் ஒரு குடிவரவு முகாமுக்கு தப்பிச் சென்றார். பின்னர் தனது சகோதரருடன் அருந்ததி கனடாவுக்கு சென்றடைந்தார்.

அவர்கள் அங்கு நவம்பர் மாதம் அளவில் சென்றிருந்தார்கள். நவம்பர் மாதம் மிகவும் குளிரான காலப்பகுதியாகும். எனவே, “எனக்கு இது பிடிக்கவில்லை. ‘என்னை ஏன் இங்கு கொண்டு வந்தாய்? என அருந்ததி சகோதரரிடம் கேட்டுள்ளார்.

“இது ஒரு நல்ல இடம் என” அவரது சகோதரர் பதிலளித்துள்ளார். பின்னர் அவர்கள் Jane மற்றும் Finch குடியேற்ற கட்டடங்களில் குடியேறிய நிலையில் அவர் கனேடியராவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அவர் தனது ஆடைகளை ஆங்கில முறைப்படி மாற்றிக் கொண்டார். சுடிதாரில் இருந்து ஜீன்ஸ் அணிய ஆரம்பித்தார். காட்டூன்களை பார்த்து ஆங்கிலம் கற்றுக்கொண்டார்.

காலை நேரங்களில் பாடசாலை செல்ல ஆரம்பித்தார். மாலை நேரத்தில் Tim Hortons என்ற இடத்தில் வேலைக்கு சென்றார்.

இந்த நிலையில் திருமணம் செய்து கொண்ட அருந்ததிக்கு பிரதீப் என்ற மகனும் சுபிட்ஸா என்ற மகளும் இருந்தனர்.

பிரதீப் பாடசாலை வயதை அடைந்த போது, அவரது நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது, அவர் உணவை மறுத்ததோடு மற்றவர்களை தாக்குவதற்கும் ஆரம்பித்தார். இதன்போதே அருந்ததி மன இறுக்கம் பற்றி கற்றுக் கொண்டார்.

அந்த நிலையில் அருந்ததியின் கணவர் திடீரென விபத்தில் உயிரிழந்தார். “நான் ஒரு தனித் தாயாக இன்னமும் மொழி பிரச்சினையில் போராடுகின்றேன். அது இலகுவான விடயம் அல்ல என தெரிவித்தார்.

மேலும், எனது மகன் பொது மக்கள் மீது வன்முறைகளில் ஈடுபட்டு வந்தார். கடைக்கு சென்று ஒரு பொருளை வாங்குவதற்கும் இது பாரிய சவாலாக மாறியது.

எனக்கு என்று எந்த நண்பர்களும் இல்லை, அப்போது எனக்கான ஒவ்வொரு கதவுகளும் மூடியது போல் உணர்ந்தேன்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் இறுதியாக தெற்காசிய ஆட்டிஸம் விழிப்புணர்வு மையம் (SAAAC) குறித்து குறிப்பிட்டார்.

இது இலாப நோக்கமற்ற குழு. மன இறுக்கம் பற்றி ஆய்வு நடத்துகின்றது. இங்கு சிகிச்சை மற்றும் கலை நிகழ்ச்சிகள் போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சமூகத்தை வழங்குகின்றார்கள்” என அருந்ததி குறிப்பிட்டார்.

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் SAAAC குழுவினால் நிவாரணமளிக்கப்படுகின்றது. இது எனக்கு நல்லது. ஏனென்றால் என்னைப்போன்று மற்ற தாய்மார்களும் போராட்டத்துடன் வாழ்க்கை நடத்துவதை பார்த்தேன். என்னால் இங்கு பேசவும் சிரிக்கவும் முடிந்தது என அருந்ததி தமது வாழ்க்கை அனுபவம் பற்றி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடனாக செலுத்த வேண்டிய பணத்தை செலவு செய்த பின்னர் தன்னை கடத்திச் சென்றதாக நாடகமாடிய பெண்!!

கடனைச் செலுத்­து­வ­தற்­காக கணவன் வழங்­கிய பணத்தை செலவு செய்த பின்னர் மயக்­க­ம­ருந்து கொடுத்து தன்னை சிலர் வேன் ஒன்றில் கடத்தி சென்று பணத்தை அப­க­ரித்­த­தாக அநு­ரா­த­புரம் பொலிஸ் தலை­மை­ய­கத்தில் முறைப்­பாடு செய்ய வந்த பெண் ஒரு­வரின் போலி நாட­கத்தை பொலிஸார் கண்­டு­பி­டித்­துள்­ளனர்.

குரு­ணாகல் பிர­தே­சத்தை சேர்ந்த 37 வய­தான பெண் ஒருவர், தனக்கு மயக்க மருந்து கொடுத்து ஆண்கள் சிலர் தன்னை கடத்திச் சென்று அநு­ரா­த­புரம் நகரில் விட்டுச் சென்­ற­தாக கூறி அநு­ரா­த­புரம் பொலிஸ் தலை­மை­ய­கத்தில் முறைப்­பாடு செய்த­த­னை­ய­டுத்து சிறுவர் மற்றும் மகளிர் பிரி­வினர் அவரிடம் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.

இத­னை­ய­டுத்து, அநு­ரா­து­புரம் பொலிஸ் நிலைய மகளிர் பிரிவு பொறுப்­ப­தி­காரி தம்­மிகா டி சில்வா குறித்த பெண்ணை அழைத்­துக்­கொண்டு அவர் கடத்­தல்­கா­ரர்­களால் கைவிடப்பட்ட இடத்தை காண்­பிக்­கு­மாறு அழைத்து சென்­ற­போது, அப்பெண் பொய்­யாக ஓர் இடத்தை காண்­பித்­துள்ளார்.

அதன் பின்னர் பொலிஸார் அங்­கி­ருந்த சீசீ­ரிவி கெம­ராக்­களை சோத­னை­யிட முயற்­சித்த போது முறைப்­பாட்­டாளர் பொலி­ஸாரை திசை திருப்ப முயற்­சித்­துள்ளார். அதன்­போது சந்தேகம் கொண்ட பொலிஸார் அப்­பெண்­ணிடம் விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­போது அவ­ரது நாடகம் தெரி­ய­வந்­துள்­ளது.

பின்னர், கொழும்பில் பணி­யாற்­றி­வரும் அப்பெண்ணின கணவரை வர வழைத்த பொலிஸார் சந்தேக நபரான பெண்ணை கடுமையாக எச்சரித்து அவரது கணவரிடம் ஒப்படைத்துள்ளனர்.

வறட்சி காரணமாக 13 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு!!

நிலவும் வறட்சி காரணமாக 13 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர். 13 மாவட்டங்களைச் சேர்ந்த 260,000 குடும்பங்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வட மாகாணம், வட மத்திய மாகாணம், மற்றும் கிழக்கு மாகாணம் என்பன வறட்சியினால் அதிக பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களின் பல பகுதிகளில் நிலவும் வறட்சியினால், விவசாய செய்கைகள் பாதிப்படைந்துள்ளதுடன், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் 136 கிராம சேவகர் பிரிவுகளில், 135 கிராம சேவகர் பிரிவுகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

நீர் நிலைகள் நீர் வற்றி காணப்படுவதுடன், கிணறுகளின் நீர் மட்டமும் குறைவடைந்துள்ளது.

50 கிராம சேவகர் பிரிவுகளுக்கு பௌசர் மூலமாக குடிநீர் விநியோகிக்கப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

வவுனியா மாவட்டத்தில் குளங்களின் நீர் வற்றியுள்ளமையினால், சிறுபோக நெற்செய்கை இம்முறை கைவிடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

பாவற்குளத்தின் நீர் மட்டம் குறைவடைந்தமையால், நெற்செய்கை கைவிடப்பட்டு, சுமார் 600 ஏக்கர் வயல் நிலத்தில் சிறுதானிய செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

கிளிநொச்சி மலையாளபுரம் புது ஐயங்குளம் வற்றியமையால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குளத்து நீரை நம்பி 40 ஏக்கர் சிறுதானிய செய்கையும், 20 ஏக்கர் நெற்செய்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீர் பம்பிகளை பயன்படுத்தி சிறுதானிய செய்கைகளுக்கு தேவையான நீரை மிகுந்த சிரமத்துடன் பெறுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

 

சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கீடு : வீடியோ காட்சிகள் வெளியானதால் பரபரப்பு!!

சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தது.

ஆனால் அவருக்கு சிறையில் எந்தவொரு சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை என்றும், சாதாரண கைதி போலவே அவர் நடத்தப்படுகிறார் என்றும் சிறைத்துறை அதிகாரிகள் கூறி வந்தனர்.

இந்த நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 10ந் திகதி, டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா ஆய்வு செய்தபின்பு, அங்கு சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த 12ம் திகதி சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவிடம் அவர் அறிக்கையும் தாக்கல் செய்துள்ளார்.

அந்த அறிக்கையில் சசிகலாவுக்கு தனி சமையல் அறை உட்பட சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இதனை சத்திய நாராயணராவ் மறுத்து வந்தார். இந்த நிலையில், சசிகலாவை சந்திக்க வருபவர்களுடன், அவர் பேசுவதற்காக தனி அறை ஒதுக்கப்பட்டு அங்கு நாற்காலிகள் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதாவது சசிகலா தூங்குவதற்கு வசதியாக ஒரு அறையும் (பெட்ரூம்), தனி சமையல் அறையும், அவர் பயன்படுத்தும் பொருட்கள் வைக்க ஒரு அறையும், அவரை சந்திக்க சிறைக்கு வருபவர்களுடன் பேசுவதற்காக பார்வையாளர் அறையும் மற்றும் யோகா உள்ளிட்ட உடற்பயிற்சி செய்ய மற்றொரு அறையும் என மொத்தம் 5 அறைகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த அறைகள் பற்றி வெளியே தெரியாதபடி முன்பக்க கதவுகளில் துணி போட்டு மூடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சசிகலா தங்கி இருக்கும் சிறை அறைக்கு மற்ற பெண் கைதிகள் செல்ல முடியாத அளவுக்கு பாதுகாப்பாக இரும்பு கதவு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

2 கோடி லஞ்சம் வாங்கி கொண்டு சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ரூபா கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபணமாகும் வகையில், சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டு இருப்பது தொடர்பான வீடியோ காட்சிகள் நேற்று ‘டைம்ஸ் நவ்’ மற்றும் சில கன்னட தொலைக்காட்சி சனல்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியானது.

சிறையில் ஆய்வு செய்தபோது தான் எடுத்திருந்த வீடியோ காட்சிகள் அழிக்கப்பட்டு இருப்பதாக ரூபா தனது 2-வது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்த நிலையில், தற்போது அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறி வெளியான வீடியோ காட்சிகள் சசிகலா அறைதானா? என்பதை கர்நாடக நிறை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.

கடலுக்கடியில் உலோகம்-கனிம புதையல் : புவியியல் ஆய்வு மையம் கண்டுபிடிப்பு!!

தீபகற்ப இந்தியாவில் கடலுக்கடியில் உள்ள தாதுப்பொருட்கள் மற்றும் எண்ணெய் வளம் குறித்து இந்திய புவியியல் ஆய்வு மையம் (ஜிஎஸ்ஐ) ஆய்வு செய்து வருகிறது.

கடந்த 2014ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்போது மங்களூர், சென்னை, மன்னாள் பேசின், அந்தமான்-நிகோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகளை சுற்றி மிகப்பெரிய அளவில் கடல் வளங்கள் இருப்பது முதல் முறையாக கண்டறியப்பட்டது.

ஆழமான மற்றும் விரிவான ஆய்வு நடத்தினால் கடலுக்கடியில் சுண்ணாம்பு மண், பாஸ்பேட் நிறைந்த மற்றும் சுண்ணாம்பு படிவுகள், ஹைட்ரோகார்பன், உலோக படிவுகள் என மிகப்பெரிய பொக்கிஷம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஜிஎஸ்ஐ அதிகாரிகள் 3 ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வில், இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் 181,025 சதுர கி.மீ. பரப்பளவில் 10 ஆயிரம் மில்லியன் டன்னுக்கும் அதிகமான சுண்ணாம்பு மண் இருப்பதை கண்டறிந்து அதுதொடர்பான தரவுகளை தற்போது வெளியிட்டுள்ளது.

கர்வார், மங்களூர் மற்றும் சென்னை கடற்பகுதியில் பாஸ்பேட் படிவுகள், தமிழ்நாடு கரையோரத்தில் மன்னார் பேசின் நீரோட்ட அமைப்பில் எரிவாயு ஹைட்ரேட், அந்தமான் கடலில் பெரோ மாங்கனீஸ், லட்சத்தீவுகளைச் சுற்றி நுண்ணிய மாங்கனீசு படிமங்கள் காணப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இளைஞன் அடித்துக்கொலை!!

வீரகெட்டிய பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மண்டாடுவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றுக்கு சென்றுவிட்டு வீடுதிரும்புகையிலேயே இக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கொலைசெய்யப்பட்டவர் தங்காலை – பஹலகொடுவ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் எனவும் பிரேத பரிசோதனைக்காக சடலம் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் பொலிஸார், இளைஞனை கொலை செய்த சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

வவுனியா கனகராயன்குளத்தில் சகோதரர்கள் உட்பட அறுவர் கஞ்சாவுடன் கைது!!

வவுனியா கனகராயன் குளத்தில் நேற்று (17.07) மாலை 4.30 மணியளவில் கேரளா கஞ்சாவுடன் சகோதரர்கள் உட்பட அறுவரை கைது செய்துள்ளதாக கனகராயன்குள பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கண்டியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு மாருதி மோட்டார் வாகனத்தில் சுற்றுலாவிற்கு சென்ற இளைஞர்கள் யாழ்பாணத்திலிருந்து நேற்றைய தினம் அவர்களுடைய சொந்த இடமான கண்டிக்கு சென்று கொண்டிருக்கும் போது கனகராயன்குளத்தில் கடமையிலிருந்த போக்குவரத்து பொலிசார் சந்தேகத்தில் மறித்து சோதனையிட்ட போது மறைத்து வைக்கப்பட்ட 2 கிலோ 200 கிராம் கஞ்சா, மாருதி மோட்டார் வாகனம் சகோதரர்கள் இருவர் உட்பட 6 பேரை கைது செய்துள்ளனர்.

இவர்களை இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கனகராயன் குளம் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியாவில் மாடு கடத்தல் முயற்சி பொலிசாரால் முறியடிப்பு!!

 
செட்டிகுளத்திலிருந்து வவுனியாவிற்கு கொண்டு செல்ல இருந்த மாடும்  வாகனமும் நேற்று (17.07) காலை 6.30 மணியளவில் நெளுக்குளம் பொலிசாரால் முறியடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

நெளுக்குளம்  பாடசாலைக்கு முன்பாக நேற்று (17.07) காலை 6.30 மணியளவில் மகேந்திரா வாகனத்தை மறித்து சோதனையிட்ட போது சட்டவிரோதமான முறையில் மாடு கொண்டு செல்லப்பட்டதை அறிந்துகொண்ட பொலிசார் மாடுகளை பரிசோதித்தபோது ஆவணங்கள், போக்குவரத்து ஆவணங்கள், மாடுகள் பெறப்பட்ட உரிமையாளர்களின் ஆவணங்கள், ஏதும் இன்றி சட்டவிரோதமான முறையில் வவுனியாவிற்கு  மாடு கொண்டு செல்வது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மாடு, மகேந்திரா வாகனம் அத்துடன்  வாகனச்சாரதியையும், உதவியாளரையும் கைது செய்ததுடன் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நெளுக்குள பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா காஞ்சி சிவமடத்தில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள்!!

 
வவுனியா ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அருளகம் சிறுவர் இல்லத்தில் நேற்று  ​(​17​.07.2017)​ மாலை 4 மணியளவில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் வவுனியா மாவட்ட செயலகத்தினால் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் வவுனியா மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர்  வீ. பிரதீபன், கோவில்குளம் சிவன்கோவில் செயலாளரும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அருளக செயலாளருமான ஆ.நவரட்ணராஜா, நகர வரியிறுப்பாளர் சங்கத் தலைவரும் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவருமான சந்திரகுமார் (கண்ணன்) தமிழ் விருட்சம் அமைப்பின் செயலாளர் மாணிக்கம் ஜெகன், சமூக ஆர்வலரும் அருளக சிறுவர் இல்ல உறுப்பினருமான ஆர்.சூரியகுமார், மற்றும் அருளக நிர்வாக உத்தியோகத்தர், என பலரும் கலந்து கொண்டதுடன் கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி நுண்கலைக்கல்லூரி மாணவர்களின் நடன நிகழ்வுகளும், கலை நிகழ்வுகளும், இசை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வவுனியா கோவில்குளம் சிவன்கோவிலின் அகிலாண்டேஸ்வரி உற்சவம் கொடிஏற்றதுடன் ஆரம்பம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் அம்பாள் உற்சவம் நேற்று 17.07.2017திங்கள் கிழமை நண்பகல் 12.00மணியளவில் சிவ ஸ்ரீ ரகுநாத கமலேஸ்வர குருக்கள் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

மேற்படி உற்சவத்தின் மாலையில் வசந்தமண்டப பூஜை ஏழு மணியளவில் இடம்பெற்று அகிலாண்டேஸ்வரி அம்பாள்  இடப வாகனத்தில் வெளிவீதி வலம் வந்த  நிகழ்வு இடம்பெற்றது .


வவுனியாவில் புகையிரத்துடன் மோதுண்டு மாடு உடல் சிதறி பலி!!

 
வவுனியா வைரவப்புளியங்குளம் ரயில்வே தண்டவாளத்தில் இன்று (17.07.2017) காலை 8.15 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரத்துடன் மாடு ஒன்று மோதுண்டு உடல் சிதறி பலியானது.

இதனால் சிறிது நேரம் புகையிரதம் தாமதமாக சென்றதாக புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (17.07.2017) மாலை 6.30 மணியளவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பரந்தன் பகுதியிலிருந்து பேரூந்து மூலம் 1கிலோ 790கிராம் கேரளா கஞ்சா பொதியினை அனுராதபுரம் நோக்கி கொண்டு செல்ல முற்பட்ட கருணாகே ருவன் சாமர (வயது 22) என்பவரை இன்று (17.07.2017) மாலை 6.30 மணியளவில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு மாதத்தில் ஏழுற்கு மேற்பட்ட நபர்கள் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.