வவுனியாவில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள்!!

 
வவுனியாவில் இன்று (17.07) காலை 8.30 மணியளவில் தர்மலிங்கம் வீதியிலுள்ள சோமசுந்தரப்புலவர் நினைவுச்சிலையடியில் வடமாகாணகல்வி பண்பாட்டலுவலக்கள் திணைக்களத்தினால் வவுனியா மாவட்ட செலயகத்தின் ஏற்பாட்டில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சோமசுந்தரப்புலவரின் நினைவுரையினை தமிழ்மணி அகளங்கள் நிகழ்த்தியதுடன் வவுனியா விபுலானந்தக்கல்லூரி மாணவர்களின் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை பாடசாலைப்பாடியதுடன் சோமசுந்தரப்புலவரின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன் ஆடிப்பிறப்பை முன்னிட்டு ஆடிக்கூழ், கொளுக்கட்டை பரிமாறப்பட்டது.

இந்நிகழ்விற்கு பிரதான அனுசரணையினை முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.ரவீந்திரன், நகர வரியிறுப்பாளர் சங்கத் தலைவரும் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவருமான எஸ்.சந்திரகுமார் கண்ணன், செயலாளர் மாணிக்கம் ஜெகன், ஆர் கதிர்காமராஜர் ஆகியோரால் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் கா உதயராசா , பிரதம கணக்காளர் எஸ்.பாலகுமார் , திவிநெகும பணிப்பாளர் திருமதி பத்மரஞ்சன், விவசாயப்பணிப்பாளர் திருமதி ஈஸ்வரன், கணக்காளர் ரஞ்சித்குமார் , நிர்வாக உத்தியோகத்தர் திருமதி சாந்தி, மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் , மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன், பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீ.பிரதீபன்,

தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், செயலாளர் மாணிக்கம் ஜெகன் , வர்த்தக சங்கத் தலைவர் ரி.இராஜலிங்கம் , முன்னாள் நகரபிதா சந்திரகுலசிங்கம் மோகன், ஆட்டோ உரிமையாளர் சங்கத்தலைவர் ரவி சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தலைவர் சேனாதிராசா மற்றும் பல சமூக ஆர்வலர்கள் வர்த்தகர்கள் விபுலானந்தாக்கல்லூரி, சி.சி.ரி.எம்.எஸ் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா பிரதேச செலயகத்தில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள்!!

 
வவுனியாவில் இன்று(17.07.2017) காலை 10.30 மணியளவில் வவுனியா பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீ. பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, நகர வரியிறுப்பாளர் சங்கத் தலைவரும் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவருமான எஸ். சுந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், சமூக ஆர்வலர்கள், பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அன்பக மாணவிகளின் கலை நிகழ்வுகளும், வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவர்களின் ஆடிப்பிற்ப்பிற்கு நாளை விடுதலை என்ற பாடலும் இசைக்கப்பட்டு ஆடிக்கூழ், கொளுக்கட்டை என்பன பரிமாறப்பட்டதுடன் சோமசுந்தரப்புலவரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

வவுனியாவில் வயோதிபரை தாக்கி கொலை செய்த இளைஞன்!!

வவுனியாவில் இளைஞரின் தாக்குதலுக்கு உள்ளான வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா – நேரியகுளம் பகுதியில் நேற்று இரவு வயோதிபர் ஒருவருக்கும், இளைஞர் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் அது கைகலப்பாக மாறியுள்ளது.

இதன்போது இளைஞன் தனது கையிலிருந்த தலைக்கவசத்தினால் வயோதிபரை தாக்கியதில் வயோதிபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வயோதிபர் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் மாங்குளம் நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த சிமைல் தாம்டீன் (64 வயது) எனும் வயோதிபரே உயிரிழந்துள்ளார்.

வயோதிபர் மீது 18 வயதான இளைஞரே தாக்குதல் நடத்தியுள்ளதுடன், தற்போது அவரை கைது செய்து விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரத்தை திரட்டுவதற்காக திலீப்பை விட்டு பிடித்தோம் : பொலிஸ் அதிரடி!!

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் ஆதாரத்தை திரட்டுவதற்காக திலீப்பை விட்டு பிடித்தோம் என்று டி.ஜி.பி. லோக்நாத்பெக்ரா பேட்டியில் கூறியுள்ளார்.

கேரள போலீஸ் டி.ஜி.பி. யாக லோக்நாத் பெக்ரா பதவி ஏற்றபிறகு தான் பாவனா கடத்தல் வழக்கில் போலீசாரின் விசாரணை தீவிரமடைந்தது. நடிகர் திலீப்பும் போலீஸ் வலையில் சிக்கினார். இந்த வழக்கில் போலீசார் நடத்தி வரும் விசாரணை தொடர்பாக டி.ஜி.பி. லோக்நாத்பெக்ரா கூறியதாவது:-

நடிகை கடத்தல் வழக்கில் முதல்கட்ட விசாரணையிலேயே குற்றவாளிகள் யார் என்பதும், அவர்களை போலீசாரால் கைது செய்ய முடியும் என்பதை கண்டறிந்தோம். ஆனால் போலீஸ் எப்போதும் குற்றவாளிகளை விட்டுதான் பிடிக்கும். எந்த வழக்கிலும் ஆதாரம் என்பது மிகவும் முக்கியம். இந்த வழக்கிலும் வலுவான ஆதாரங்களை திரட்டுவதற்காக நாங்கள் தீவிர விசாரணை நடத்தினோம். ஆதாரங்கள் சிக்கிய பிறகு குற்றவாளியை கைது செய்தோம்.

இந்த வழக்கில் போலீசார் திறமையாக செயல்பட்டு வருகிறார்கள். ஓரிருநாளில் மற்ற குற்றவாளிகளும் போலீஸ் பிடியில் சிக்குவார்கள். இந்த வழக்கு தொடர்பான எல்லா தகவல்களையும் இப்போதே தெரிவிக்கமுடியாது. தேவை இல்லாத தகவல்களை வெளியிட முடியாது. அதே சமயம் குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்பதை உறுதியாக கூறுகிறேன். இந்த வழக்கில் முக்கிய கட்டத்தை நெருங்கிவிட்டதால் எங்களிடம் உள்ள அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைப்போம் என்று அவர் கூறினார்.

கேரள மாநில கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் கோடியேறி பாலகிருஷ்ணன் போலீசாரின் விசாரணையை பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது கேரள போலீசார் நடிகை கடத்தல் வழக்கில் திறமையாக செயல்பட்டு வருகிறார்கள். போலீஸ் பிடியில் இருந்து எந்த குற்றவாளியும் தப்ப முடியாது. போலீசாரின் விசாரணை சரியான கோணத்தில் சென்று கொண்டு இருக்கிறது என்றார்.

 

அடிக்கடி செல்பி எடுப்பது ஆபத்தானதா?

அளவுக்கும் மீறினால் எதுவாக இருந்தாலும் நஞ்சு என்பது போல நாம் அளவுக்கு அதிகமாக செல்பி புகைப்படங்களை எடுத்துக் கொள்வதினால், உடல் மற்றும் மனம் ரீதியாக பலவகையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.

மேலும் ஒருசில நிகழ்வுகளின் போது நமது உயிரை பாதிக்கும் வகையிலும் சூழ்நிலைகள் அமைகின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

செல்பி எடுப்பதால் வரும் விளைவுகள்

சமூக வலைத் தளங்களில் தொடர்ந்து அதிகமாக செல்பி எடுத்து போடுவதினால் அதற்கு மட்டும் அடிமையாகி மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த முடியாமல் மன ரீதியாக பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

வித்தியாசமான செல்பி எடுக்க வேண்டும் என்று மிகப் பெரிய கட்டிடங்கள், அருவிகள் மற்றும் மலைகள் ஆகியவற்றின் மீது எடுக்கும் போது கவனச் சிதறல் காரணமாக மரணம் கூட நிகழலாம்.

நண்பர்களுடன் சேர்ந்து தலையை ஒன்றாக ஒட்டிக் கொண்டு செல்பி எடுக்கும் போது, ஒருவரின் தலையில் இருக்கும் பேன் அடுத்தவர்களுக்கு பரவுகிறது.

செல்பி எடுக்கும் போது, மிகவும் அருகில் மொபைல் வைத்து எடுப்பதால், குண்டாக இருப்பதாக தெரியும். இதனால் ஒரு சிலர் உடல் பருமன் அதிகரித்து விட்டது என்று நினைத்துக் கொண்டு உணவுகளை குறைப்பதால் உடல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இலங்கையில் 23 நாய்கள் கொலை : விலங்கு ஆர்வலர்கள் கண்டனம்!!

மொரட்டுவை பல்கலைக்கழக வளாகத்துக்குள், 23 தெரு நாய்களுக்கு நஞ்சு கொடுத்து கொன்றமை தொடர்பான காணொளி வெளியாகியுள்ள நிலையில், விலங்கு ஆர்வல்கள் இது குறித்துக் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்களே சனிக்கிழமை (15.07) இந்தக் காணொளியை வெளியிட்டுள்ளதோடு, இதற்குக் கண்டனம் தெரிவித்து, ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

மொரட்டுவை பல்கலைக்கழக அதிகாரிகளும் வேறு சிலரும் சேர்ந்து, நாய்களுக்கு அதிக போதை அடங்கிய மருந்துகளைக் கொடுத்து, சித்திரவதை செய்து​ கொல்லுவதாக அமைந்துள்ள அந்தக் காணொளி, வெளியிடப்பட்ட பின்னர், அதை அகற்றுமாறு அழுத்தங்கள் ஏற்பட்டதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, மொரட்டுவை மாநகர சபை மருத்துவ அதிகாரி ஜயவர்தன மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழக அதிகாரிகளைத் தொடர்புகொள்ள முயற்சித்த போதும், அது பயனளிக்கவில்லை.

எனினும், இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள விலங்கு ஆர்வலர் ​ஒட்டாரா குணவர்த்தன, விலங்குகளைப் பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் முறை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறினார்.

“அனைத்து நாய்களுக்கும், இருப்பதற்கும் உறங்குவதற்கும், உண்ணுவதற்கும், அன்பு காண்பிப்பதற்கும் என்று தேவை உண்டு. விலங்குகளை ஆதரிக்காத பலர் இருக்கும்போது, விலங்குகளை ஆதரிக்கும் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர்.

ஆனால், அனைவருக்கும் வாழும் சுதந்திரமும் சுதந்திரமாக இருக்கும் சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் கொடூரமான சம்பவங்களை அரங்கேற்றவேண்டிய கட்டாயம் என்ன?” என்று அவர் கேள்வியெழுப்பினார்.

மேலும், இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த விலங்கு ஆர்வலர், சட்டதரணி லலனி பெரேரா, “தெரு நாய்களைக் கொல்லும் கொள்கை இனி இல்லை என்று, கடந்த 2006ஆம் ஆண்டு, முன்னாள் ஜனாதிபதி ​மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார்.

அப்படியிருக்கையில், நாய்களைக் கொன்ற சம்பவத்துக்கு நாம் கண்டனம் தெரிவிக்கின்றோம். இதற்கு, சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையே நாம் எதிர்பார்க்கின்றோம். முன்னாள் ஜனாதிபதியிடமிருந்த கொள்கையை தற்போதும் நடைமுறைப்படுத்துமாறே நாம் கோருகின்றோம்” என்று அவர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்துக்கு, பல விலங்கு ஆர்வலர்கள் குழு, சமூக ஆர்வலர்கள், மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

வீழ்ச்சியடைந்த ரூபாவின் பெறுமதியால் வாகன இறக்குமதி சரிவு!!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையானது கடந்த ஜூன் மாதத்தில் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அண்மைக் காலமாக நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாரிய பின்னடைவு இந்த இறக்குமதி வீழ்ச்சிக்கும் ஒரு காரணம் எனக் குறிப்பிடப்படுகிறது.

முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் தவிர வேறு வாகன வகைகள் 39 ஆயிரத்துக்கும் 40 ஆயிரத்துக்கும் இடைப்பட்ட அளவில் இறக்குமதி செய்யப்பட்டு வந்ததாகவும் இது கடந்த மாதத்தில் 13 ஆயிரமாக குறைந்துள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அண்மைக் காலமாக நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாரிய பின்னடைவுகள் இதன் பிரதானமான காரணமாக இருப்பதுடன், வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகூடிய இறக்குமதி வரி மற்றும் ரூபாயின் பெறுமதி குறைந்துள்ளமை போன்ற காரணங்களினாலும் வாகன இறக்குமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த இந்தியா!!

முகநூல் சமூக வலைத்தளத்தை பயன்படுத்துபவர்கள் இந்தியாவில்தான் மிக அதிகமாக இருப்பதாக சமீபத்திய புள்ளிவிவரத்தில் தெரியவந்துள்ளது.

ஹூட்சூட் சமூக வலைத்தள ஆய்வு நிறுவனம் முகநூல் பயனாளர்கள் எண்ணிக்கையை நாடுகள் வாரியாக வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவில் 241 மில்லியன் பேர் பேஸ்புக் கணக்கு வைத்திருக்கிறார்கள். அடுத்த இடத்தில் இருப்பது அமெரிக்கா எனவும் அமெரிக்கர்கள் பெயரில் 240 மில்லியன் முகநூல் கணக்குகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது இடத்தில் இருந்த இந்தியா இப்போது அமெரிக்காவை முந்தியுள்ளது. இவ்விரு நாடுகளில் மட்டுமே முகநூலில் சுமார் கால் பங்கு பயனாளர்கள் இருக்கிறார்கள்.

மேலும், இரு நாடுகளிலும் தலா 11 சதவீதம் முகநூல் கணக்குகள் உள்ளன. பிரேசில், இந்தோனேஷியா, மெக்சிகோ ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.

இதேவேளை. கடந்த 6 மாதங்களில் இந்தியாவில் புதிய முகநூல் கணக்குகள் தொடங்குவது 27 சதவீதம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாலம் இல்லாததால் உயிரை பணயம் வைக்கும் கிராம மக்கள்!!

கிராமம் ஒன்றில் பாலம் இல்லாததால் பொதுமக்கள் உயிரை பணயம் வைத்து தினமும் ஆற்றை கடந்து வருகிறார்கள்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உதம்பூர் மாவட்டத்தில் தவி நதி அமைந்துள்ளது, இதன் ஒருபக்கம் 4 கிராமங்கள் உள்ளன.

இங்குள்ள கிர்ச்சி என்ற கிராமத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் வெளியிடங்களுக்கு செல்லவும், பள்ளிக்கூடத்துக்கு செல்லவும் அங்குள்ள ஆற்றை கடக்க வேண்டியுள்ளது.

ஆனால், இங்கு பாலம் இல்லாததால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உயிரை பணயம் வைத்து தினமும் ஆற்றை கடக்கிறார்கள்.

மழையால் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால் கிராம மக்களின் நிலை அவ்வளவு தான். தங்களின் பிரச்சனையை தீர்த்து பாலம் கட்டி தர மத்திய, மாநில அரசுகள் உடனடியாக முன் வரவேண்டும் என கிர்ச்சி கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

வீதியில் காத்திருந்த சிறுமி : மைத்திரி கொடுத்த இன்ப அதிர்ச்சி!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி அந்த நிகழ்விற்கு நேற்று சென்று கொண்டிருக்கும் போது நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அஸ்கிரிய மைதானத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் வசிக்கும் சிறுமி ஒருவர் வீதி அருகே வந்து ஜனாதிபதி செல்லும் வாகனங்களை நோக்கி பார்வையிட்டுள்ளார்.

ஜனாதிபதி தனது நிகழ்வுகளை நிறைவு செய்து விட்டு திரும்பி செல்லும் போதே அந்த சிறுமி வீதிக்கு அருகில் வந்து ஜனாதிபதியின் வாகனத்தை பார்வையிட்டுள்ளார்.

இதனை அவதானித்த ஜனாதிபதி உடனடியாக வாகனத்தை நிறுத்துமாறு பாதுகாப்பு பிரிவிற்கு அறிவித்துள்ளார். பின்னர் வாகனத்தில் இருந்து இறங்கி அந்த சிறுமிக்கு அருகில் சென்ற ஜனாதிபதி அவரது நலன் விசாரித்துள்ளார்.

அவ்விடத்திற்கு சென்ற அந்த சிறுமியின் பெற்றோருக்கு இந்த சம்பவம் நம்ப முடியாத விடயமாக உள்ளதென தெரிவித்துள்ளனர்.

கனடாவில் இலங்கையர் மீது கொலைக் குற்றச்சாட்டு : திட்டமிட்டு தாமதப்படுத்திய நீதிமன்றம்!!

கனடாவில் கொலை குற்றம் சாட்டப்பட்ட இலங்கையரது வழக்கு விசாரணைகள் வேண்டுமென்றே தாமதப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கனடாவில் குடியுரிமை பெற்ற இலங்கையரான தனபாலசிங்கம் சிவலோகநாதன் என்பவரின் வழக்கு விசாரணையே இவ்வாறு தாமதப்படுத்தப்பட்டுள்ளது.

கொலை குற்றச்சாட்டுக்கு முகங்கொடுத்த இலங்கையர் தொடர்பான வழக்குகளில், பாதுகாப்புக் குழு தனது குற்றச்சாட்டுகளை தாமதப்படுத்துவதில் முக்கிய பங்கை வகித்ததாக கியூபெக்கின் குற்றவியல் மற்றும் குற்றவியல் வழக்குகளின் இயக்குனர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சமீபத்தில் நாடு கடத்தப்பட்ட சிவோலோகநாதன் தனபாலசிங்கத்தின் மீது கொலைக் குற்றச்சாட்டுக்களை தக்க வைத்துக் கொள்ளுவதற்கான முடிவை எடுக்கும் வகையில் Crown நீதிமன்றத்தின் வாதங்கள் காணப்பட்டதாக கனடா வானொலி ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

தனபலிசிங்கம் மற்றும் அவரது சட்ட குழுவினரால் ஏற்பட்டுள்ள தாமதங்களை உச்சநீதிமன்ற நீதிபதி Justice Alexandre Boucher கருத்திற்கொள்ளாமல் தவறிழைத்துள்ளார். அதேபோல் வழக்கு தொடர்பான சிக்கல் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளவில்லை எனவும் வழக்கின் சுருக்கம் கூறுகின்றது.

தனபாலசிங்கம் 2012 ஆம் ஆண்டு அவரது மனைவி அனஜா பாஸ்கரனை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டார். எனினும் இந்த வழக்கினை விசாரிப்பதற்கு நீதிபதி Boucher 55 மாதங்களை எடுத்து கொண்டார்.

கொலை குற்றம் சுத்தப்பட்டவர் ஒருவரின் வழக்கு கனடா உச்ச நீதிமன்றத்தில் இந்த அளவு தாமத்தை ஏற்படுத்துவது நியாயமற்ற ஒரு விடயமாகும்.

குறைந்த அளவிலான கடுமையான குற்றம் சுமத்தப்பட்ட வழக்கு விசாரணைகள் 18 மாதங்களுக்குள் நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் கொலை உட்பட, பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்டவை, 30 மாத காலப்பகுதிக்குள் நிறைவு செய்திருக்க வேண்டும்.

2018ஆம் ஆண்டு முதல் தனபாலசிங்கத்தின் விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக Crown நீதிமன்ற ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் இன்னும் ஒரு நீதிபதி 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றும் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த வழக்கிற்கான திகதிகளை முன்வைத்தார்.

இந்த நிலையில் தணபாலசிங்கம் தானாகவே நாடு கடத்தலை விரும்பி ஏற்று கொண்டதற்கமைய அவர் அண்மையில் கனடாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

-தமிழ்வின்-

திருமணமான பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி : இரு மாதங்களில் ஏற்பட்ட சோகம்!!

 
திருமண பந்தத்தில் இணைந்து இரு மாதங்களில் டெங்கு நோய் தாக்கம் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 27 வயதான ரங்க என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பெற்றோரின் ஆசிர்வாதத்துடன் கடந்த மே மாதம் 18ம் திகதி திருமண பந்தத்தில் ரங்க மற்றும் மஹேஷா என்ற தம்பதியினர் இணைந்தனர்.

மகிழ்ச்சியுடன் திருமண வாழ்க்கைகயை ஆரம்பித்த ரங்க மற்றும் மஹேஷாவின் திருமண வாழ்க்கை ஒன்றரை மாதமே நீடித்துள்ளது.

டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டிருந்த ரங்க சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மாவனல்ல, உடுமஹனே பிரதேசத்தை சேர்ந்த ரங்க மோட்டார் வாகன மேலதிக பகுதி விற்பனை செய்யும் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

தனது தாய், தங்கை மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த ரங்க தினமும் வீட்டில் இருந்து தொழிலுக்கு செல்வதனை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்த நிலையில் திடீரென ரங்க டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனை பெரிதாக கண்டுக்கொள்ளாத ரங்க தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுக் கொண்டு மீண்டும் வழமை போன்று தொழிலுக்கு செல்ல ஆரம்பித்துள்ளார்.

எனினும் அவரது டெங்கு நோய் தீவிரமடைந்து மாவனல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்ற ரங்க சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

படைகளை திரும்ப பெறாவிட்டால் நிலைமை மோசமாகும் : இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை!!

எல்லையில் நிறுத்தியுள்ள இந்திய படைகளை திரும்ப பெறாவிட்டால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா-பூடான்- திபெத் ஆகிய மூன்று நாடுகளின் சந்திப்பில் உள்ள டோக்லாம் பீடபூமியில் சாலை அமைக்கும் பணியை சீனா கடந்த 4 வாரங்களுக்கு முன்னர் தொடங்கியது.

பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அந்த பகுதி நம் கட்டுப்பாட்டில் உள்ளதாலும் இந்திய இராணுவம் அப்பணியை தடுத்து நிறுத்தியது. இதனால் சீன ராணுவம் நம் மீது கடுங்கோபத்தில் உள்ளது.

இந்த பதற்றம் காரணமாக, அந்த எல்லையில் இரு நாட்டு படைகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. படைகளை திரும்ப பெற இரு நாடுகளும் பரஸ்பரம் எச்சரிக்கை விடுத்தன.

இந்த விவகாரத்தில் இரு நாட்டு இராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதை காட்டிலும் தூதரக ரீதியிலான பிரச்சினையையே இந்தியா விரும்புகிறது. இந்த நிலையில் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனா நாட்டின் அதிகாரப்பூர்வ ஊடகமான ஷின்ஹுவாவில், எல்லை பிரச்சினையில் பேசி தீர்த்துக் கொள்ளும் பேச்சுக்கே இடம் இல்லை.

டோக்லாமில் எல்லை தாண்டி நிறுத்தப்பட்டுள்ள படைகளை இந்தியா திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும். இந்தியா கடும் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும்.

சீனாவை பொறுத்தமட்டில் எல்லை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தற்போதைய சூழல் அப்படியே இருக்கும் என்றோ அல்லது கடந்த 2013 மற்றும் 2014ல் லடாக்கில் நடந்த எல்லை பிரச்சினையை போன்றது என்றோ இந்தியா கருத வேண்டாம்.

பொதுவாக எல்லைகளில் பிரச்சினை ஏற்பட்டால் தூதரக ரீதியிலான தீர்வே பெரும்பாலும் நடைபெறும். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள விவகாரம் முற்றிலும் மாறுபட்டது என்று ஷின்ஹுவாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

செவ்வாய் கிரகத்தில் 2030 இற்குள் மனிதர்களை குடியேற்ற முடியாது : நாசா!!

செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றம் செய்யும் திட்டம் 2030 இற்குள் சாத்தியமில்லை என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

சூரியக் குடும்பத்தில் பூமிக்கு அடுத்த படியாக இருக்கும் செவ்வாய் கிரகத்தில் உள்ள சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்யும் பணியில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா உள்ளது.

மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் சாத்தியமாகும் பட்சத்தில் அங்கு மனிதர்களை அனுப்பி பரிசோதனை செய்வது மற்றும் எதிர்காலத்தில் மனிதர்களை அங்கு குடியேற்றம் செய்வது குறித்த திட்டமும் நாசாவின் பரிசீலனையில் உள்ளது.

இந்நிலையில், நாசாவின் விண்வெளி ஆய்வு பிரிவின் தலைவர் வில்லியம் ஜெர்ஸ்டன்மையர் 2030 இற்குள் மனிதர்களை செவ்வாயில் குடியேற்றம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பல்வேறு ஆளில்லா செயற்கைக்கோள்களை பல பில்லியன் டொலர்களில் உருவாக்கி செவ்வாயில் நாசா ஆய்வு செய்து வரும் நிலையில், மனிதர்களை அங்கு குடியேறச் செய்யும் திட்டம் நாசாவின் முக்கிய கனவுகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

செவ்வாயில் மனிதர்களை குடியேறச் செய்யும் திட்டம் அதிக செலவு பிடிக்கக் கூடியது, எனவே தற்போதைய பட்ஜெட்டை கொண்டு இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாது என வில்லியம் ஜெர்ஸ்டன்மையர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

நாசா மட்டுமல்லாமல் பல்வேறு தனியார் நிறுவனங்களும் பல பில்லியன் டொலர்களை கொட்டி விண்வெளியில் மனிதர்கள் குடியேற்றம் செய்யும் திட்டத்திற்கு இரவு பகலாக உழைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்றுச் சாதனை படைத்த  பெடரர்!!

சுவிற்ஸர்லாந்து நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரரான ரொஜர் பெடரர் 8 ஆவது தடவையாக விம்பிள்டன் பட்டத்தைச் சுவீகரித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் குரோஷியா நாட்டைச் சேர்ந்த மரீன் செலிக்கை  6-3, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிக்கொண்ட ரொஜர் பெடரர் 8 ஆவது தடவையாக விம்பிள்டன் பட்டத்தை சுவீகரித்துள்ளார்.

லண்டனில் நேற்று இடம்பெற்ற விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ரொஜர் பெடரர் மரீன் செலிக்கை எதிர்கொண்டார்.

ஏற்கனவே 7 தடவைகள் விம்பிள்டன் பட்டத்தை சுவீகரித்துள்ள இம்முறை 8 ஆவது தடவையாகவும் விம்பிள்டன் பட்டத்தை சுவீகரித்துள்ள நிலையில், 19 தடவைகள் கிராண்ஸ்லாம் பட்டத்தையும்  வென்று சாதனைப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு மணி நேரத்தில் 2200 புஷ் அப்ஸ் : 52 வயது தொழிலாளியின் சாதனை!!

பிரிட்டனைச் சேர்ந்த ஒரு கட்டுமானத் தொழிலாளி, ஒரு மணி நேரத்தில் அதிக புஷ் அப்ஸ் எடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

பிரிட்டனின் வேல்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்தவர் கார்ல்டன் வில்லியம்ஸ்(வயது52). கட்டுமானத் தொழிலாளியான இவர், தொடர்ந்து உடற்பயிற்சி செய்து உடலை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். குறிப்பாக புஷ் அப் எடுப்பதில் வல்லவர்.

தீவிர பயிற்சி எடுத்த அவர், கடந்த 2015-ம் ஆண்டு ஒரு மணி நேரத்தில் 2220 புஷ் அப்ஸ் எடுத்து உலக சாதனை படைத்திருந்தார்.

இந்த சாதனையை இதுவரை யாரும் முறியடிக்காத நிலையில், வில்லியம்ஸ் தனது சாதனையை தானே முறியடித்து கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கின்னஸ் அதிகாரி முன்னிலையில், புஷ் அப்ஸ் எடுக்கத் தொடங்கிய வில்லியம்ஸ், ஒரு மணி நேரத்தில் 2682 புஷ் அப்ஸ் எடுத்து புதிய உலக சாதனை படைத்தார்.

இடையிடையே மூச்சு விடுவதற்காக அவர் சற்று நிறுத்தியபோதும்கூட, கடிகாரம் நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.