முல்லைத்தீவில் குளங்களின் நீர்மட்டம் குறைவு : மக்கள் பாதிப்பு!!

முல்லைத்தீவில் குளங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைவடைந்து செல்வதனால் விவசாயம் நன்னீர் மீன்பிடி நிலத்தடி நீர், விலங்குகளுக்கான குடிநீர், உள்ளிட்ட நீர்த்தேவைகளை பூர்த்தி செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனா்.

முல்லைத்தீவின் முக்கிய குளங்களான முத்தையன்கட்டுக் குளம், வவுனிக்குளம் என்பவற்றின் நீர் மட்டம் அடிநிலையினைச் சென்றடைந்துள்ளதன் காரணமாக இக்குளங்களின் கீழான விவசாயச் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது

அத்தோடு இக்குளங்களை நம்பியுள்ள ஆயிரத்துக்கும் மேலான நன்னீர் மீன்பிடி குடும்பங்கள் வறுமை நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்திலே தொடர்கின்ற வறட்சி காரணமாக பல குளங்களின் நீர் மட்டம் கீழ் நிலையினைச் சென்றடைந்திருப்பதன் காரணமாக நன்னீர் மீன்பிடி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன் கால்நடைகளும் குடிநீருக்கு அலைகின்ற அவலம் காணப்படுகின்றது.

இந்நிலையில் இக்குளங்களில் பிடிக்கின்ற மீன்களை நம்பி பல குடும்பங்கள் வாழ்கின்ற நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக குளங்களில் இருந்து மீன்களை பிடிக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது.

சிறுபோக நெற்செய்கை கைவிடப்பட்டுள்ளது. நன்னீர் மீன் பிடி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல குடும்பங்கள் வறுமை நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளதுடன் காரணமாக வறட்சி நிவாரணத்தினை வழங்குவதற்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல பொது அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் ஸ்கூட்டரில் சென்ற போது கீழே விழுந்ததில் லொறி டயரில் சிக்கி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி மாணிக்கம்- சண்முகவள்ளி, இவர்களின் மகள் இந்துமதி (24)

இந்துமதி தனியார் செல்போன் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். கடந்த 3ஆம் திகதி இந்துமதிக்கும் மகுடஞ்சாவடியை சேர்ந்த ஒருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

அடுத்த வருடம் ஜனவரியில் திருமண நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சண்முகவள்ளியின் அக்காள் வீட்டுக்கு நேற்று முன்தினம் இந்துமதி தனது தாயாருடன் ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.

பின்னர், நேற்று காலை இந்துமதி மட்டும் தனியாக ஸ்கூட்டரில் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக லொறி ஒன்று சென்று கொண்டிருந்தது. அங்குள்ள வேகத்தடையில் ஏறி இறங்கும் போது இந்துமதியின் துப்பட்டா லொறியின் பக்கவாட்டில் இருந்த கொக்கியில் சிக்கியது.

இதனால் ஸ்கூட்டரில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்த அவர் லொறியின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார், சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். விபத்து தொடர்பாக லொறி ஓட்டுனரை பிடித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

 

வவுனியாவில் 28வது வீரமக்கள் தின நிகழ்வுகள்!!

 
வவுனியா கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தோழர் க.உமாமகேஸ்வரன் நினைவுத்தூபியில் இன்று (16.07.2017) மாலை 4.30 மணியளவில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 28வது வீரமக்கள் தின நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தாத்தன், வடமாகாண சுகாதார அமைச்சரும் வவுனியா மாவட்ட தமிழரசுக்கட்சியின் தலைவருமான வைத்தியர் ப.சத்தியலிங்கம், தமழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜனா, வடக்குமாகாண சபை உறுப்பினர்களான சிவநேசன், ஜி.ரி. லிங்கநாதன்,

மற்றும் தமிழீழ விடுதலைக்கழகத்தின் யாழ், மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஆகிய மாவட்ட பொறுப்பாளர்கள், தோழர்கள், பொதுமக்கள், என பலரும் கலந்து கொண்டு உயிரிழந்த தமது உறவுகளின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

அத்துடன் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் கனடா கிளையினரால் வறிய மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் வீரமக்கள் நினைவு தினத்தை முன்னிட்டு விளையாட்டுக் கழகங்களுக்கிடையே நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற கழகங்கள், விளையாட்டு வீரர்களுக்கு நினைவுப் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

வடக்கில் சிறுவர் இல்லங்களை மூட முடியாது : ப.சத்தியலிங்கம்!!

நாங்கள் தற்போது திடீரென சிறுவர் இல்லங்களை மூட முடியாது என வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். அத்துடன், சிறுவர் இல்லங்கள் இருக்க வேண்டிய தேவை எங்களுடைய மாகாணத்திற்கு உள்ளது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன்போது அண்மையில் அன்பக சிறுவர் இல்லத்தில் சிறுமியொருவர் இறந்தமை மற்றும் வவுனியாவில் சிறுவர் இல்லங்களின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

சிறுவர் இல்லங்கள் பதிவு செய்வது தொடர்பாக நியதிச்சட்டம் கடந்த வருடம் வட மாகாண சபையில் கொண்டு வரப்பட்டு 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சிறுவர் இல்லங்களை சட்ட ரீதியாக மூடுவதாக இருந்தால் அந்த நிதிய சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போது சிறுவர் இல்லங்களில் விடப்படும் சிறுவர்களுக்கு பெற்றோர்கள் உள்ளனர்.

நீதிமன்றத்தினால் அனுப்பி வைக்கப்படும் சிறுவர்களுக்கு இல்லங்கள் போதாமல் உள்ளன. இல்லங்களில் சமூக சேவைகள் மேற்கொள்ளப்படுவதால் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் சிறுவர்கள் அங்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்கள்.

நாங்கள் தற்போது திடீரென சிறுவர் இல்லங்களை மூட முடியாது. சிறுவர் இல்லங்கள் இருக்க வேண்டிய தேவை எங்களுடைய மாகாணத்திற்கு உள்ளது.

வட மாகாணத்தில் 12ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள், பெற்றோர்கள் அற்ற நிலையில் உள்ளனர். அதனால் சிறுவர் இல்லங்களை மேம்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.

100 இற்கும் மேற்பட்ட சிறுவர் இல்லங்கள் வடக்கில் இருந்த போதிலும் தற்போது 58 சிறுவர் இல்லங்களே இயங்குகின்றன. அவற்றில் 20 சிறுவர் இல்லங்கள் வரையில் பதிவு செய்யப்படவில்லை. ஆகவே அந்த வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு குறிப்பிட்ட சில காலம் செல்லும்.

சிறுவர் இல்லங்களில் சிறுவர்கள் சீராக பராமரிக்கப்படாமையினால் உயிராபத்துகள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்ட போது,

வவுனியா சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் தமது திணைக்களத்தின் செயற்பாடுகளை எடுத்துக்கூறியிருந்தார். பல சிறுவர்களை பெற்றோருடனோ அல்லது உறவினர்களுடனோ இணைக்க முடியாதுள்ளது.

ஒரு சிறுவரை பெற்றோருடன் இணைத்தால் 5 சிறுவர்களை காப்பகத்தில் இணைப்பதற்கான கோரிக்கைககள் கிடைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இவ்வாறு வரும் சிறுவர்களை காப்பது தொடர்பாக தீர்மானத்தினை வழங்கும் பட்சத்தில் சிறுவர் காப்பகங்களை மூடுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கலாம்.

பல சிறுவர் இல்லங்கள் விதிமுறைக்கு அமைய அமைந்திருக்கவில்லை. எனினும் சேவை அடிப்படையில் அவை இயங்குவதால் அதனை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனினும் தற்போது இவை தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளோம். குறிப்பாக சிறுவர் இல்லங்களை பதிவதற்கு காணி உரிமம் முக்கியமானது.

ஆனால் அன்பகம் சிறுவர் இல்லத்திற்கு காணி உரிமம் இல்லை. இதனால் அதனை பதிவு செய்வதில் சிறு தடங்கல் உள்ளது என ப.சத்தியலிங்கம் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியாவில் டெங்கை கட்டுப்படுத்த சிரமதானம்!!

 
வவுனியாவில் அண்மைக்காலமாக அதிகளவான டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் பிரண்ட்ஸ் விளையாட்டுக்கழகமும் சமூக ஆர்வலர்களும் இணைந்து வவுனியாவில் சிரமதானப்பணியினை முன்னெடுத்தனர்.

நாட்டில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இறந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் வரும் நிலையில் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு முழுநாள் சிரமதானத்தினை முன்னெடுத்த பிரண்ட்ஸ் விளையாட்டுக்கழகமானது குட்செட்வீதி, புகையிரத நிலைய வீதி என்பவற்றில் இச்சிரமதானத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியா பிரதேச செயலகத்தில் நிலவும் வெற்றிடம் நிரப்ப நடவடிக்கை : ப. சத்தியலிங்கம்!!

வவுனியா பிரதேச செயலகத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வடமாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா பிரதேச செலயக அபிவிருத்தி குழுக்கூட்டம் நேற்று பிரதேச செலயக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்..

பிரதேச செயலாளரால் முன்வைக்கப்பட்ட பிரதேச செயலகத்தில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை குறிப்பாக காணிக் கிளையில் நிலவுவதாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து குறித்த விபரங்கள் எங்களிடம் பெற்றுத்தரப்பட்டால் அமைச்சரவையில் கலந்துரையாடி இங்கு நிலவும் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வசதி படைத்தவர்களுக்கு வீட்டுத்திட்டம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!!

வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட புதிய சாளம்பைக்குளம் பகுதியில் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சரியான முறையில் பயனாளிகளைத் தெரிவு செய்து வீட்டுத்திட்டத்தினை வழங்கவில்லை என வன்னி மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் எம்.ஆர்.பிரியதர்சன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்துள்ள அவர்,

வவுனியாவில் புதிய சாளம்பைக்குளம் பகுதியில் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் உதவியுடன் அவர்களின் உறவினர்களுக்கும் ஏனைய வசதி படைத்தவர்களுக்கும் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து சரியான முறையில் விசாரணைகள் மேற்கொள்ளுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட புதிய சாளம்பைக்குளம் பகுதியில் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சரியான முறையில் பயனாளிகளைத் தெரிவு செய்து வீட்டுத் திட்டத்தினை வழங்கவில்லை.

மாறாக வசதி படைத்தவர்கள், பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் உதவியுடன் அவர்களின் உறவினர்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் பல முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக பொதுமக்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வன்னி மாவட்ட இணைப்பாளர் வவுனியா பிரதேச செயலாளர், கிராமசேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் மீளாய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு, வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்படாதவர்களின் விபரங்கள், வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டவர்களின் விபரம், வீட்டுத்திட்டம் நிராகரிக்கப்பட்டவர்களின் விபரங்களை கேட்டு அறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக தொடந்து அவதானிப்புக்களை மனித உரிமைகள் ஆணைக்குழவினர் மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தலைமன்னாருக்கான புகையிரத சேவைகள் இடைநிறுத்தம்!!

கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான புகையிரத சேவைகள் நாளை முதல் எதிர்வரும் 23ம் திகதி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பிலிருந்து பயணிக்கும் இரயில் மதவாச்சி வரை சேவையில் ஈடுபடும் என புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மதவாச்சி மற்றும் செட்டிக்குளம் பகுதிக்கு இடையில் உள்ள பழைய பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் அமைக்கப்படுவதன் காரணமாகவே தலைமன்னாருக்கான புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வவுனியா A9 வீதியில் விபத்து : இருவர் படுகாயம்!!

வவுனியா ஏ9 வீதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளுடன் பேருந்து மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்து பற்றி தெரியவருவதாவது,

கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்தும் வவுனியாவில் இருந்து தாண்டிக்குளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்தில் படுகாயமடைந்த இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெறுமதியான வானுடன் பெண் ஒருவர் மாயம்!!

வான் ஒன்றுடன் 47 வயதான ஒருவர் கடந்த 5 நாட்களாக காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி ஹெம்மாத்தகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பட்டன்கலவத்த, கினிஹப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான வத்தேகெதர உதயலத் காமினி சேனாதீர என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கடந்த 11ம் திகதி அவர் 26 லட்சம் பெறுமதியான வானில் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றதாக மனைவி கூறியுள்ளார்.

காணாமல் போன தினம் மாலை தனது வாகனத்தை கோபிவத்த பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாகவும் வாகனத்தை கொள்வனவு செய்தவரை சந்திக்கச் சென்றதாகவும் இது குறித்தும் தனக்கு சந்தேகம் உள்ளதாகவும் மனைவி தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் நபர் காணாமல் போன தினத்தில் அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வந்த திருமணமான பெண் ஒருவரும் காணாமல் போயுள்ளதால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அயல் வீட்டுப் பெண் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடன் அட்டை மோசடி : இலங்கையர் உட்பட மூவர் கைது!!

போலியான வங்கி கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் உட்பட இரண்டு பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த நிலையில், கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு சென்று வசித்து வந்த திவ்யன் என்ற இலங்கையரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையரும் இரண்டு இந்தியர்களும் பல்வேறு நபர்களின் கடன் அட்டைகளின் விபரங்களை மோசடியாக பெற்று, போலி கடன் அட்டைகளை தயாரித்து இணையத்தளம் வழியாக பொருட்களை கொள்வனவு செய்து வந்துள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 144 போலி கடன் அட்டைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் இணையத்தளம் வழியாக கொள்வனவு செய்த ஒரு லட்சம் இந்திய ரூபாவுக்கும் மேல் மூன்று தொலைக்காட்சி பெட்டிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்களுக்கு எதிராக சைபர் குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

அமெரிக்காவில் திடீரென ஏற்பட்ட பிளவில் பூமிக்குள் புதைந்த கட்டிடங்கள்!!

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புளோரிடா மாநிலத்தில் பூமியில் ஏற்பட்ட பிளவில் இரண்டு கட்டடங்கள் பூமியில் புதைந்துள்ளன.

திடீரென பூமியில் ஏற்பட்ட பிளவு கட்டடங்கள் முழுமையாக பூமியினுள் புதைந்ததைத் தொடர்ந்து அருகாமையில் உள்ள வீடுகளில் வசிப்போர் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

சிறியதாக ஏற்பட்ட பிளவு சிறிது நேரத்தில் பெரியதானதால் இரண்டு கட்டடங்கள் பூமிக்கடியில் செல்ல காரணமாகி விட்டதாக கூறப்படும் நிலையில், தற்சமயம் பூமியில் ஏற்பட்ட பிளவு நின்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இரு கட்டிடங்களை முழுமையாக அழித்துள்ள பிளவு, முழுக்க கழிவு நீர் சூழ்ந்துள்ளது. அருகில் உள்ள ஏரி வரை இந்த பாதிப்பு நீளும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.

பிளவு நின்றிருப்பதைத் தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் ஏற்பட்ட பகுதி வாசிகள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதோடு, அப்பகுதியில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இறக்கக்கண்டி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நேற்று மீட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு, களனிப் பகுதியிலிருந்து இறக்கக்கண்டிக்கு தொழிலுக்காக சென்று ஜயந்த செனவிரட்ன என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும், இவர் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவரவில்லை என்பதுடன், இது தொடர்பில் குச்சவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு எதிராக 25000 ரூபாய் அபராதம்!!

போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக 25000 ரூபாய் அபராதம் விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சில போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் அறிமுகப்படுத்தவுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் கீழ் இயங்கும் வீதி பாதுகாப்புக்கான தேசிய சபை தெரிவித்துள்ளது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், காப்புறுதியின்றி வாகனம் ஓட்டுதல், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், வயதை பூர்த்தி செய்யாது வாகனம் ஓட்டுவோருக்கு எதிராக இவ்வாறு 25000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளதாக சபையின் தலைவர் சிசிர கொதாகொட தெரிவித்துள்ளார்.

இடமிருந்து முந்தி செல்லும் மீறல்களுக்கு 3000 ரூபாய் அபராதம் விதிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்த அபராதத்தை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இலங்கையில் வாகன இறக்குமதியில் பாரிய வீழ்ச்சி!!

இலங்கைக்கு மாதாந்தம் இறக்குமதி செய்யும் வாகனங்களின் எண்ணிக்கை கடந்த ஜூன் மாதம் பெருமளவில் குறைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலத்தில் வாகனங்களின் இறக்குமதி பெருமளவில் அதிகரித்து காணப்பட்டது. சாதாரணமாக ஒரு மாதத்திற்கு 39 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இதில் முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளடங்காது.

எனினும் கடந்த ஜூன் மாதம் 27 ஆயிரம் வாகனங்களே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 13 ஆயிரமாக வாகன இறக்குமதி குறைந்தது என வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

இறக்குமதி செய்யும் வாகனங்களுக்கான வரி அதிகரிப்பு, ரூபாவின் பெறுமதி குறைந்தமை, வாகனங்களின் விலை அதிகரித்தமை உட்பட பல பொருளாதார கஷ்டங்கள் காரணமாக வாகனங்களின் விற்பனை குறைந்ததால், வாகனங்களின் இறக்குமதியும் குறைந்துள்ளது.

வவுனியா ஓமந்தை இறம்பைக்குளம் நடராஜானந்த வித்தியாலயத்தில் புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டல்!

ஓமந்தை இறம்பைக்குளம் நடராஜா வித்தியாலயத்தின் வகுப்பறை அடிக்கல் நாட்டல் வைபவம் 15.07.2017 நேற்று  பகல் 12.00 மணியளவில் பாடசாலை அதிபர் திருமதி  சந்திராவதி  தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஜி .ரி .லிங்கநாதன் அவர்களும்  வவுனியா வடக்கு  வலய ஆசிரிய ஆலோசகர் பகிரதன் அவர்களும் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களும் கலந்து கொண்டனர் .

யாழ் கண்டி வீதியில்   ஓமந்தை  இராணுவ சோதனைச்சாவடி    அமைந்துள்ள பகுதியில் மிக நீண்டகாலமாக தற்காலிக கொட்டகையின் கீழ் இயங்கி வந்த மேற்படி பாடசாலைக்கு PSDG-2017  செயல்திட்டத்தின் கீழ் 60*25 என்னும் அளவுகொண்ட வகுப்பறை கட்டிடம்  அமைப்பதற்கான  நிதியொதுக்கீடு   கிடைக்கப் பெற்றுள்ளமை  குறிப்பிடத்தக்கது .