அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை!!

ஐ.நா. மற்றும் அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

கடந்த 4ம் திகதி வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.

அது அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் உள்ள ராணுவ தளத்தை தாக்க குறி வைத்து எச்சரிக்கை விடுக்கும் விதமாக இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக சர்வதேச போர்க்கலை வல்லுனர்கள் கருதுகின்றனர்.

இதற்கிடையில், தென் கொரியாவில் அமெரிக்கா விமானப்படை கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த பயிற்சியில் தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் விமானப் படைகள் ஈடுபட்டுள்ளன.

நேற்று வடகொரியா எல்லையில் அமெரிக்காவின் அதிவேக ‘பி-1 பி லாஞ்சர்ஸ்’ ரகப் போர் விமானங்கள் தாழ்வாக பறந்து எச்சரிக்கை விடுத்தன.

தென் கொரியாவின் குவாம் பகுதியில் உள்ள ஆன்டர்சன் விமானப்படை தளத்தில் இருந்து இந்த போர் விமானங்கள் பறந்து சென்றன.

அமெரிக்க போர் விமானங்களுடன் தென் கொரியா மற்றும் ஜப்பான் போர் விமானங்களும் பறந்து பயிற்சியில் ஈடுபட்டன.  சுமார் 10 மணி நேரம் இப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

அமெரிக்காவின் ‘பி-1பி’ லாஞ்சர் அதிவேக போர் விமானங்கள் நீண்ட தூரம் பறந்து சென்று 900 கிலோ எடையுள்ள அணு குண்டுகளை வீசும் திறன் கொண்டது.

இதன் மூலம் தாங்கள் எந்த வித தாக்குதலுக்கும் தயார் என வட கொரியாவுக்கு அமெரிக்கா மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் இந்த அசத்தலான சாகசத்தை தொடர்ந்து கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவுகிறது.

பாடலாசிரியர் சினேகனின் கார் கண்ணாடி உடைப்பு!!

சென்னையில் பிரபல திரைப்பட பாடலாசிரியர் சினேகன் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது, தமிழ் திரைப்பட பாடலாசிரியர் சினேகன், சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஷ்வரா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அவர், தனது வீட்டின் முன் பகுதியில் சனிக்கிழமை காரை நிறுத்தியிருந்தார்.

இந்நிலையில், சனிக்கிழமை நண்பகலில் சினேகனின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பியோடினர்.

இந்தச் சம்பவத்தால் சினேகனின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக விருகம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பருத்தித்துறை துப்பாக்கிச் சூடு : இரு பொலிஸார் கைது!!

யாழ் – பருத்தித்துறை பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், இரு பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும், உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபில் ஒருவருமே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

மேலும், இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அத்துடன், சந்தேகநபர்கள் இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

பொலிஸாரின் உத்தரவை மீறி நிறுத்தாமல் சென்ற லொறி மீது மணல்காட்டு பகுதியில் வைத்து நேற்று துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த லொறியில் மணல் ஏற்றிச் செல்லப்பட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

வவுனியாவில் தனியார் பேரூந்து நடத்துனருடன் கைகலப்பு : மாணவி வைத்தியசாலையில்!!

வவுனியா பம்பைமடுவில் இன்று (09.07.2017) இரவு 6.30 மணியளவில் தனியார் பேரூந்து நடத்துனருக்கும் பல்கலைக்கழக மாணவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு கைகலப்பாக மாறியதில் மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில்..

இன்று இரவு 7.30 மணியளவில் வவுனியாவிலிருந்து தனியார் பேருந்தில் பம்பைமடு பல்கலைக்கழகம் நோக்கிச் சென்ற 22 வயது மாணவி பம்பைமடு பல்கலைக்கழத்தை அடைந்ததும் இறங்க முற்பட்டுள்ளார்.

வவுனியாவிலிருந்து பம்பைமடுவிற்கு பேருந்து கட்டணமாக 20 ரூபாவே அறவிடப்பட்டு வந்துள்ளது. எனினும் குறித்த மாணவி 50 ரூபாவினைக் கொடுத்து மிகுதி 30 ரூபாவினைக் கேட்டுள்ளார்.

இதையடுத்து தனியார் பேருந்து நடத்துனர் 30 ரூபா பெற்றுக்கொண்டு 20 ரூபாவினைக் கொடுத்துள்ளார். இதையடுத்து குறித்த மாணவி 20 ரூபாவே பேருந்து கட்டணமாக அறவிடப்படுவது என்று தெரிவித்து ஏன் 30 ரூபா பெறப்படுகின்றது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையடுத்து நடத்துனருக்கும் குறித்த பல்கலைக்கழக மாணவிக்கும் வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது. வாக்குவாதம் கைகலப்பாக மாறி குறித்த மாணவியை நடத்துனர் பேருந்திலிருந்து வெளியே தள்ளியுள்ளார்.

இதனால் காயமடைந்த மாணவி சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசன்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவிற்கு இலங்கை போக்குவரத்து சபையினால் ஏற்பட்ட சோதனை!!

 
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகளில் வவுனியா மாவட்டத்தின் பெயரினை வவ்நியா மற்றும் வவுனி என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டியிலிருந்து வவுனியா நோக்கி புறப்படுவதற்கு கண்டி பேரூந்து நிலையம் சென்ற பொதுமகன் ஒருவர் வவுனியா செல்லும் பேரூந்தினை தேடியுள்ளார்.

பேரூந்து அவருக்கு முன்னால் தரித்து நின்ற போதும் வவுனியாவின் பெயர் வவ்நியா என பெயரிடப்பட்டுள்ளதால் அவ் பேரூந்து சிங்கள இடத்திற்கு செல்லும் பேரூந்து என நினைத்து வவுனியா பேரூந்தினை தேடிய சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

கண்டி மற்றும் மஹியங்கனை சாலை பேரூந்திலே இவ்வாறு எழுத்துப்பிழைகள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.வடமராட்சியில் அசாதாரண நிலை! பொலிஸார் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி!!

யாழ். வடமராட்சி கிழக்குப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பகுதியில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் தற்போது மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்தப்பகுதியில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பொலிஸாரின் வாகனம் மீது பொது மக்கள் கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோதமான முறையில் மணல் ஏற்றி வந்தவர்களை இடை மறித்த போது நிற்காததன் காரணமாகவே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய தேர்த் திருவிழா!!

 
வரலாற்றுச் சிறப்புமிக்க வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய முதலாவது மகோற்சவப் பெருவிழாவின் தேர்த்திருவிழா நேற்று (08.07) மிகக் சிறப்பாக இடம்பெற்றது.

பெருந்திரளென மக்கள் திரண்டு வடம்பிடித்து தேர் இழுக்க அம்பாளது ரதம் இனிதே ஆலயத்தை வந்தடைந்தது. மேலும் அடியார்கள் தூக்குக்காவடி, காவடி மற்றும் பாற்செம்பு எடுத்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

வவுனியாவிற்கு கொழும்பிலிருந்தே டெங்கு பரவுகின்றது : வைத்தியசாலைப் பணிப்பாளர்!!

கொழும்பிலிருந்து வருபவர்களினாலேயே வவுனியாவில் டெங்கு தாக்கம் அதிகமாக காணப்படுகிறது என வுவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் நேற்று (08.07) தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.அகிலேந்திரன்,

கொழும்புக்கு சென்று வருபவர்களாலேயே டெங்கு நோய் வவுனியாவில் பரவி வருகின்றது. ஆகவே கொழும்பிற்கு அனாவசியமான பயணங்களைத் தவிர்குமாறும் கொழும்பிலிருந்து வருபவர்கள் காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையில் இரத்தப்பரிசோதனை செய்துகொள்ளுமாறும் தெரிவித்தார்.

தென்னிலங்கையில் கொழும்புப் பகுதியில் டெங்கின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அத்துடன் டெங்கு வைரஸ் வழமையான வைரஸ்சை விட வீரியங்கொண்டதாக உள்ளதால் டெங்கு நோயை தவிர்ப்பதற்கான வழிவகைகளை மக்கள் கைக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

கொழும்புக்கு பயணிப்பவர்கள் டெங்கு நுளம்பு தாக்காதவாறு உடலை மூடி உடையணிவதுடன் நுளம்புகள் அணுகாதவாறு கிறீம் மற்றும் எண்ணைகளை பயன்படுத்துமாறு தெரிவித்தார்.

அத்துடன் இரண்டு தினங்களுக்கு முன் டெங்கின் காரணமாக மரணித்தவர் கூட கொழும்பிலிருந்து டெங்கு தாக்கத்திற்கு உள்ளாகி வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி மரணித்ததாக குறிப்பிட்ட அவர் வவுனியாவில் 16 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் வவுனியா மாவட்டத்திலிருந்து இருவர் மாத்திரமே டெங்கு தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவித்தார்.

வீட்டு சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதுடன் நீர் தேங்கி நிற்கக் கூடிய இடங்களை இனங்கண்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

வவுனியாவில் 28வது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு விளையாட்டு மற்றும் சமூக நிகழ்வுகள்!!

 
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) மறைந்த தோழர்களின் ஞாபகார்த்தமாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(DPLF) இளைஞரணியின் ஒழுங்கமைப்பில், நங்கூரம் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அந்த வகையில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உபதலைவர் அமரர் தோழர் நா.மாணிக்கதாசன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்திற்கான அணிக்கு 07 பேர் கொண்ட கால்பந்தாட்ட திறந்த சுற்றுப் போட்டி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் விளையாட்டுக் கழகங்கள், இளைஞர் கழகங்கள், பாடசாலை அணிகள், மற்றும் திணைக்கள அணிகள் என அணிக்கு 07 பேர் கொண்ட திறந்த சுற்றுப்போட்டியாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் பங்கு பற்ற விரும்பிய அணிகள் 10.07.2017 ம் திகதிக்கு முன்னதாக பதிவுகளை மேற்கொள்ள முடியும். பாடசாலை அணிகளுக்கு பதிவுக் கட்டணம் இலவசம் என்பதுடன் ஏனைய அணிகளுக்கு பதிவுக்கட்டணம் 1000 ரூபா ஆகும்.

அத்துடன் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் தோழர் ச.சண்முகநாதன்(வசந்தன்) ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்திற்கான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கால்பந்தாட்ட மற்றும் கரப்பந்தாட்ட போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு 13.07.2017 அன்று மாலை 03.30 மணிக்கு நெளுக்குளம் ஊர்மிளா கோட்டம் நியூ பைட் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.

மேற்படி நிகழ்வுகள் தொடர்பாக பதிவுகளுக்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞரணி செயலாளர் சு.காண்டீபன் (0763806990) அல்லது நியூ பைட் விளையாட்டுக் கழக தலைவர் ஏ.ஜோன்சன் (776152097) ஆகியோருடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

தொடர்ந்து சமூக நிகழ்வுகளின் வரிசையில் பாத்தீனியம் ஒழிப்பு சிரமதான பணி 15.07.2017 அன்று காலை 08 மணிக்கு தோழர் க.உமாமகேசுவரன் இல்லத்தில் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெறும்.

உயிர் காக்கும் உன்னத பணியான இரத்த தான முகாம் 16.07.2017 அன்று காலை 08 மணிமுதல் மாலை 02 மணி வரை வவுனியா பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் (கச்சேரி முன்பாக) ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இரத்த தான முகாமில் பங்கு பற்ற விரும்பியவர்கள் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட இளைஞரணியின் செயலாளர் ஸ்ரீ.கேசவன்(0775058672), பொருளாளர் வி.சஜீவ்நாத்(0774154631), அமைப்பாளர் வ.பிரதீபன்(0770779434), உப தலைவர் பி.கெர்சோன்(0767096654) ஆகியோருடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

28 ஆவது வீரமக்கள் தினத்தின் இறுதி நிகழ்வான அஞ்சலி நிகழ்வுகள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்) மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் 16.07.2017 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 04.30 மணிக்கு கோவில்குளத்தில் அமைந்துள்ள அமரர் தோழர் க.உமாமகேசுவரன் நினைவு இல்லத்தில் நடைபெறும்.

மேற்படி 28ஆவது வீரமக்கள் தினத்தின் அஞ்சலி நிகழ்வு மற்றும் ஏனைய விளையாட்டு, சமூக நிகழ்வுகளில் கழகத்தின் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள முடியும்.

இளைஞரணி ஊடகப் பிரிவு மற்றும்
திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்)
உப தலைவர்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF)

வவுனியாவில் தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

 
பழமையான தொல்பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதை கண்டித்தும், தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராகவும் வவுனியாவில் நேற்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில்,

வவுனியா – மாமடு, அக்போவவில் மிகவும் பழமையான மயானம் ஒன்றுள்ளது. இது தொல்பொருள் திணைக்களத்தாலும் அடையாளப்படுத்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் மயானப் பகுதியில் காணப்பட்ட தேக்கு மரங்களை வெட்டுவதற்கான நடவடிக்கை கடந்த மே மாதம் நடைபெற்றுள்ளது.

இந்த நடவடிக்கையின் போது கனரக இயந்திரங்களினால் தொல்பொருட்கள் உடைக்கப்பட்டு முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பில் தொல்பொருள் திணைக்களம் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதுடன், அவற்றை பாதுகாப்பதற்கான முயற்சிகளையும் திணைக்களம் எடுக்காமையினாலேயே போராட்டம் மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதயம் மாற்றுச் சிகிச்சை இலங்கையில் முதன்முறையாக வெற்றி!!

இலங்கையில் முதலாவது இருதய மாற்று அறுவை சிகிச்சை கண்டி வைத்தியசாலையில் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது.

34 வயதுடைய பெண்ணுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்திய பணிப்பாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அவரது இருதய நூற்றுக்கு 12 வீதம் செயலற்ற நிலையில் காணப்பட்டது. எனினும் மூளைச் சாவடைந்த 24 வயதுடைய இளைஞரின் இருதய அந்த பெண்ணுக்கு பொருத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த இளைஞனின் சிறுநீரகங்கள் இரண்டும் மேலும் இரண்டு நோயாளர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதயம் மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண்ணும் சிறுநீரகம் பொருத்தப்பட்ட இரண்டு நோயாளர்களும் தற்போது கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்கள் ஆரோக்கியமாக உள்ளதாகவும், வைத்தியர்கள் தொடர்ந்து அவதானத்துடன் கண்காணித்து வருவதாக கண்டி வைத்தியசாலை வைத்திய பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

விபத்தில் இளம் பெண் பலி!!

ஹசலக பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் பெண் உயிரிழந்துள்ளார். மஹஸ்வெவ, இபலுவ பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய நிரோஷினி குமாரி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மஹியங்கனை – கண்டி பிரதானி வீதியில் மணல் போக்குவரத்தில் ஈடுபட்ட லொறி வண்டி சாரதி, லொறியை வீதியில் நிறுத்தி வைத்து விட்டு அருகிலுள்ள கடைக்கு சென்றுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் வீதிக்கு அருகில் இருந்த லொறியின் பிரேக் விடுவிக்கப்பட்டு பின் பக்கமாக பயணிக்க ஆரம்பித்துள்ளது.

பின்னால் வந்த லொறி கடைக்கு வந்த இரண்டு பெண்கள் மீது மோதியுள்ள நிலையில் ஒரு பெண் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதன்போது படுகாயமடைந்த மற்ற பெண் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனை மஹியங்கனை வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது. சம்பவம் தொடர்பில் சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் இன்று அடைமழை!!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறித்துள்ளது.

அதற்கமைய, சபரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் இன்று அடைமழை எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளின் சில இடங்களில் மாலை 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என குறிப்பிடப்படுகின்றது.

 

மன்னாரில் பதற்றம் : பொலிஸார் குவிப்பு!!

 
மன்னார் – கருசல் கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இன்று காலை திருப்பலி இடம்பெற்றுக்கொண்டிருந்த போது இனம் தெரியாத நபர்கள் ஆலயம் மீது கற்களினால் வீசி தாக்குதல்களை மேற்கொண்டதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கருசல் கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இன்று காலை அருட்தந்தை இ.செபமாலை தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இதன்போது ஆலயத்தின் மீது இனம் தெரியாத நபர்கள் கற்களினால் எறிந்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இதனால் அவ்விடத்தில் அசாதாரணை சூழல் ஏற்பட்டுள்ளதுடன், இதனைத்தொடர்ந்து உடனடியாக கருசல் கப்பலேந்தி மாதா ஆலய பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம் பிள்ளை ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.குணசீலன் ஆகியோர் அப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

மேலும், மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் உள்ளடங்களாக மன்னார் மாவட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 66 நாட்களாக போராடும் நாங்கள் டெங்கு ஏற்படக்கூடிய இடங்களை அகற்றத் தயார்!!

 
நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கடந்த 04.05.2017 தொடக்கம் வவுனியா பிராந்திய வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு முன்பாக கொட்டகை அமைத்து வவுனியா சுகாதார தொண்டர்கள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டமானது இன்றுடன் (08.07.2017) 66 நாட்களாகத் தொடரும் நிலையிலேயே சுகாதாரத் தொண்டர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்..

வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களாகிய நாங்கள் 66 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நிலையில் கடந்த காலங்களில் 820 சுகாதாரத் தொண்டர்களும் சுகாதாரப் பனிமனையியூடாக டெங்கு தொடர்பான விழிப்புணர்களை மக்களுக்கு ஏற்படுத்தி டெங்கு ஏற்படக்கூடிய இடங்களை அகற்றியிருந்தோம்.

அதன் காரணமாக வடக்கில் கடந்த காலத்தில் டெங்கின் தாக்கம் குறைவாக காணப்பட்டது. இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் நாங்கள் பணியாற்றக் காத்திருக்கின்றோம். எங்கள் நியமனம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் மத்திய சுகாதார அமைச்சர் கவனம் எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

வடக்கில் யுத்தகாலத்திலும் மற்றும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களிலும் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய சுகாதார தொண்டர்களே சேவைக்கால அடிப்படையில் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுகாதாரத் தொண்டர்கள் வெயில் மழை பாராது ஊதியம் இல்லாமல் பணியாற்றிய எங்களுக்கு நிரந்தர நியமனம் இல்லையா? வடமாகாணசபையே லஞ்ச ஊழலை கைவிடு, தொண்டர்களுக்கு நியாயமான முறையில் நியமனத்தை தா! போன்ற பதாதைகளை தாங்கி நின்றனர்.

வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தனர்.

வவுனியாவில் வெப்பத்தைத் தணித்த மழை!!

 
வவுனியாவில் இன்று (08.07) மதியம் 12 மணியளவில் திடீரென மழை பெய்தததைக் காண்கூடியதாக இருந்தது.

வவுனியாவில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக கடும் வெப்பம் நிலவிவந்த நிலையில் இன்று திடீரென பெய்த மழையால் மக்கள் ஆறுதலடைந்துள்ளனர்.

வவுனியாவில் கடும் வறட்சி காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டதுடன் குடிநீருக்கும் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில் இன்று சுமார் இரண்டு மணிநேரம் பெய்த கனமழை காரணமாக வீதிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியதை காணக்கூடியதாக இருந்ததுடன் திடீர் மழையால் மக்கள் தங்களை காத்துக்கொள்ள அவதிப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.

அதே நேரம் வவுனியாவில் தொடர்ந்தும் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.