டொனால்ட் டிரம்பை விட சிறப்பாக செயற்படுவேன் என்கிறது ரோபோ சோபியா!!(வீடியோ)

 
ஜெனிவாவில் மனிதனைப்போன்ற உருவமுள்ள ரோபோ ஒன்று விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோபியா என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ரோபோ, ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை விட தான் சிறப்பாக செயற்படுவேன் என சவால் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிரிக்கும் ஆற்றல் கொண்ட இந்த ரோபோவின் கண்கள் மிகவும் கவர்ச்சிகரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரோபோ 60 வகையான முகபாவனைகளை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

இந்த ரோபோவிற்கு மிகவும் மேம்பட்ட செயற்கை நுண்திறன் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கை நுண்திறன் காரணமாக ரோபோவினால் மக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது என கூறப்பட்டுள்ளது.

Hanson Robotics இன் நிறுவனரும் டிஸ்னியில் பணியாற்றியவருமான இந்த ரோபோவை உருவாக்கியுள்ளார்.

உயிரிழந்த முன்னாள் ஹொலிவுட் நடிகையான Audrey Hepburn ஐப் போன்ற தோற்றத்தில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

விபத்தில் சிக்கிய பாலஸ்தீன குழந்தைக்கு பாலூட்டிய யூதப்பெண்!!

விபத்திற்குள்ளான பாலஸ்தீனப் பெண்ணின் கைக்குழந்தைக்கு யூதப்பெண் ஒருவர் பாலூட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கைக்குழந்தையுடன் உள்ள அந்தப் பெண்ணுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இஸ்ரேல் நாட்டில் உள்ள இன் கரீம் என்னும் பகுதியில் பாலஸ்தீன பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் சென்ற கார் விபத்திற்குள்ளானது.

விபத்தில் அந்த பெண் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். அவரின் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர்களின் பச்சிளங் குழந்தை சிறிய காயங்களுடன் உயிர் தப்பியது.

படுகாயமடைந்த பாலஸ்தீனப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் குழந்தையை அந்த மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனிடையே பசி தாங்க முடியாமல் அக்குழந்தை அழத் தொடங்கிவிட்டது. குழந்தையின் தாய் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததால், அவரால் தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை. இதனால் பசியில் துடிக்கும் குழந்தைக்கு செவிலி போத்தலில் பால் கொடுக்க முயன்றுள்ளார்.

ஆனால், அதைக் குழந்தை குடிக்க மறுத்துவிட்டதால், அவரே அந்த குழந்தைக்குப் பாலூட்டியுள்ளார்.

நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் இந்தக் காட்சியைப் பார்த்த குழந்தையின் உறவினர்கள் கண்கலங்கி குறித்த செவிலிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் யூத இனத்தவரான உலா என்ற பெயருடைய அந்த செவிலி, பாலஸ்தீன பெண்ணின் குழந்தைக்குப் பாலூட்டிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

புதிய கடவுச்சீட்டு அறிமுகப் படுத்தப்படவுள்ளது!!

புதிய கடவுச்சீட்டை அறிமுகப்படுத்துவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

புதிய கடவுச்சீட்டை அடுத்த வருடத்தில் இருந்து அறிமுகப்படுத்தவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்.எம்.ரணசிங்க குறிப்பிட்டார். புதிய கடவுச்சீட்டு தயாரிப்பு தொடர்பில் தற்போது கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

தற்போதுள்ள கடவுச்சீட்டு 2003 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அந்த கடவுச்சீட்டு அடுத்த வருடம் டிசம்பர் மாதம் வரை செல்லுபடியாகும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்.எம்.ரணசிங்க சுட்டிக்காட்டினார்.

எம்முடனான போட்டியை பயிற்சிப் போட்டி என தெரிவித்த இந்திய அணியினர் : டிக்வெல்ல ஆதங்கம்!!

தென்னாபிரிக்காவுடனான தோல்வியின் பின்னர் இந்தியாவுக்கு எதிரான வெற்றி மிகப்பெரிய வெற்றியாகும். இதே திறமையுடன் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதிப்பெற முயற்சி செய்வோம் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோசன் டிக்வெல்ல தெரிவித்துள்ளார்.

எமக்கு எதிரான போட்டி, பயிற்சி போட்டி போன்றது என இந்திய வீரர்கள் தெரிவித்திருந்தனர். இது எம்மை காயப்படுத்தியிருந்தது. இவ்வாறான கருத்துக்களை நாம் கணக்கில் கொள்ளவில்லை. எனினும் சிறப்பான ஆட்டத்தால் பதிலடி கொடுத்துள்ளோம்.

மைதானத்தில் இந்திய ரசிகர்கள் நிரம்பி காணப்பட்ட போதும் இலங்கை ரசிகர்கள் எமக்கு ஆதரவை நல்கியிருந்தனர். இந்நேரத்தில் அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
மேலும் இந்தியாவுக்கு எதிரான வெற்றி எம் அனைவருக்கும் மிகுந்த சந்தோசத்தையளிக்கின்றது என்றார்.

சிறுவர்களை வேலைக்கமர்த்துபவர்களுக்கு வரபோகிறது கடும் சட்டம்!!

சிறுவர்களை தொழிலாளர்களாக வேலைக்கமர்த்துபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக்கவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. அதனை அமுல்படுத்துவதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் அவ்வதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுவதைத் தடுப்பதற்கு அதிகாரசபை பல்வேறு வேலைத்திட்டங்களை முன்வைத்துள்ளது. எனவே சிறுவர்கள் பணிக்கமர்த்தப்படுவதை எவராவது அவதானித்தால் அதனை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவிக்கவும்.

அவ்வாறு முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் தொழில் திணைக்களம் மற்றும் பொலிஸாருடன் இணைந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி மரினி டி லிவேரா தெரிவித்துள்ளார்.

100 அடி உயரம் முதுகைத் துளைத்த அம்பு : 5300 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு படுகொலை!!

அல்ப்ஸ் மலை பகுதியில் வாழ்ந்து வந்த பனிமனிதன் ஓட்ஸியை கொன்றது யார் என்பது குறித்த விசாரணையை இப்போது இத்தாலி அரசு தொடங்கவுள்ளது.

வடக்கு இத்தாலியில் அல்ப்ஸ் மலைத்தொடரின் ஓட்ஸெலர் அல்ப்ஸ் பகுதியில் தொலைத் தூரத்தில் அமைந்திருக்கும் உயரமான பகுதியில், பனிமனிதன் ஓட்ஸியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஆய்வின் போதுதான் அது 5300 ஆண்டுகளுக்கு முந்தைய பனி மனிதன் எனத் தெரிய வந்தது.

அந்த பனிமனிதனின் பின்புறத்தில் ஒரு அம்பு பாய்ந்திருந்தது. அந்த அம்பு அவருடைய முக்கியத் தமனியை தாக்கியதால், ஏற்பட்ட பாதிப்பால் அவர் சில நிமிடங்களுக்குள் இறந்துவிட்டார்.

அவரது உடல் பனிக்குள் புதைந்து பதப்படுத்தப்பட்ட நிலையில் கிடந்தது.

கடந்த 1991ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட ஓட்ஸியின் உடலில் இடது தோள்பட்டையில் அம்பின் முனை இருந்தது கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து கண்டெடுக்கப்பட்டது.

உலகின் பழமையான, சிறப்பாக பாதுகாக்கப்பட்ட நிலையில் கிடைத்த உடல்களில் ஓட்ஸியின் உடல் முக்கியமானது.

மூத்த புலனாய்வு துறை ஓட்ஸி எப்படி கொல்லப்பட்டார் என்பது குறித்து விசாரணை கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் தொடங்கப்பட்டது. மூத்த புலனாய்வு அதிகாரிகளை கொண்டு ஓட்ஸியை கொன்றது யார் என்பது கோணத்தில் விசாரணை தொடங்கியுள்ளது.

5300 ஆண்டுகளுக்கு முன்னர்…

இதுகுறித்து புலனாய்வுத் துறையின் தலைமை ஆய்வாளர் அலெக்சாண்டர் ஹார்ன் கூறுகையில், வழக்கமாக 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற வழக்குகளைதான் தோண்டி எடுத்து விசாரணை நடைபெற்று வந்தது.

ஆனால் தற்போது 5300 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற வழக்கை விசாரித்து வருகிறோம்.

ஓட்ஸியின் வயிற்றின் உள்பகுதிகள், உடல் காயங்கள் குறித்த 25 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆராய்ச்சிகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஓட்ஸி கொல்லப்படுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர் அவர் மாமிசத்தை அதிகமாக உட்கொண்டிருந்தார்.

இதனால் அவர் தப்பிச் செல்ல முயற்சித்ததாக தெரியவில்லை. அவர் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.

எந்த கோணத்தில் விசாரணை

பனிமனிதர் ஓட்ஸியின் உணவு பழக்க வழக்கங்கள், உடை உடுத்தும் முறை மற்றும் அவரது சந்ததியினர் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

மேலும் அவரது வலது கையில் ஏற்பட்டிருந்த காயத்தில் இருந்து ஒரு துப்பு கிடைத்துள்ளது. இதை வைத்து விசாரணையை தொடங்கியுள்ளோம்.

கடந்த 5300 ஆண்டுகளுக்கு பின்னர் கைப்பற்றப்பட்ட ஓட்ஸியின் உடல் நல்ல நிலையில் இருக்காது என்று நினைத்தோம். ஆனால் என்ன ஆச்சரியம், அவரது உடல் மிகவும் நல்ல நிலையில் இருந்தது.

அவர் 100 அடி உயரத்தில் இருந்து வீழ்த்தப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

தனிப்பட்ட விரோதமே கொலைக்கு காரணம்

கொலை செய்தவருக்கும், ஓட்ஸிக்கு கைகலப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதுகிறோம். மலையில் அவரை பின் தொடர்ந்து பனிபகுதியில் அவரை கொலை செய்துள்ளனர்.

ஓட்ஸியின் விலை மதிப்புள்ள காப்பர் பிளேடால் ஆன கோடாரி உள்ளிட்ட பொருள்களை கொலைகாரர் திருடிக் கொண்டு செல்லவில்லை.

எனவே தனிப்பட்ட விரோதம் காரணமாக கொலை நிகழ்ந்திருக்கலாம் என ஹார்ன் தெரிவித்தார்.

ஆசிரியரால் தாக்கபட்ட மாணவன் வைத்தியசாலையில்!!

ஆசிரியரால் தாக்கபட்ட பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸ நிலையத்தில் பெற்றோர் முறைபாடு செய்துள்ளனர்.

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் சென் ஜோன் டிலரி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10ல் கல்வி பயிலும் மாணவன் ஒருவரை ஆசிரியர் ஒருவர் தண்டனை வழங்கும் வகையில் தாக்கியமையால் குறித்த மாணவன் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (09.06) பிற்பகல் 12.35 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவனுக்கு ஆசிரியர் ஒருவாரல் பாடவேலை திட்டம் ஒன்று வழங்கிய போது குறித்த மாணவண் இரண்டாவது முறையாக குறித்த பாடத்தினை செய்து காட்டாமைக்காக குறித்த ஆசிரியர் மாணவனை தலைபகுதியை பிடித்து கதிரையில் மோதியதாகவும், மாணவனின் முதுகில் கையால் தாக்கியதாக பாதிக்கபட்ட சிறுவனின் பெற்றோர் முறைபாட்டில் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தாக்கபட்ட மாணவனின் பெற்றோரால் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யபட்டு, முறைபாடு தொடரபாக நோர்வூட் பொலிஸாருக்கு தகவல் வழங்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் நோர்வூட் – பொகவந்தலாவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு குறித்த ஆசிரியரை கைது செய்வதற்கான நடவடிக்கைளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளை சீனியின் விலையை மோசடியாக அதிகரிப்போருக்கு கடும் தண்டனை!!

வெள்ளை சீனியின் விலையை மோசடியாக அதிகரிப்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டமூலத்தின் 18:1 சரத்தின் அடிப்படையில் வெள்ளை சீனி கட்டுபாட்டு விலையுடனான பொருள் என அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன் காரணமாக கட்டுப்பாட்டு விலையை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

பங்களாதேஷ் அணி அபார வெற்றி : தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறிய நியூசிலாந்து!!

 
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் கத்துக் குட்டி அணியான வங்கதேசம், நியூசிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

இங்கிலாந்தில் மினி உலகக் கிண்ணம் என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

நேற்றைய போட்டியில் நியூசிலாந்து – வங்கதேச அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

அதன் படி நியூசிலாந்து அணிக்கு நிதானமாக ஆட்டத்தை தொடங்கிய நிலையில், கப்டில் 33 ஓட்டங்களுக்கும், ரோஞ்சி 16 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அணியின் தலைவர் வில்லியம்ஸ் மற்றொரு சீனியர் வீரரான டெய்லருடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

69 ஓட்டங்களுக்கு 2-விக்கெட்டுகளை இழந்திருந்த நியூசிலாந்து அணி ,மூன்றாவது விக்கெட்டை 152 ஓட்டங்கள் எடுத்த போது இழந்தது. சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த வில்லியம்ஸ் 57 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். வில்லியம்ஸ் வெளியேறியவுடன் அவருக்கு ஈடுகொடுத்து ஆடிய டெயல்ரும் அரைசதம் கடந்து 63 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் பெளலியன் திரும்பினார்.

அடுத்து வந்த வீரர்கள் தங்கள் பங்கிற்கு அதிரடி காட்ட, நியூசிலாந்து அணி இறுதியாக 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ஓட்டங்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்கமே ஆட்டம் கண்டது. தமிம் இக்பால் டக் அவுட் ஆனார். சௌமியா சர்கார் 3, சபீர் ரஹ்மான் 8 முசபிர் ரஹிம் 14 என வந்த வேகத்தில் பெளலியன் திரும்பினர்.

இதையடுத்து களமிறங்கிய சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் மற்றும் முகமதுல்லா ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டனர்.

இவர்கள் இருவரும் நியூசிலாந்து அணி பந்து வீச்சாளர்களை எளிதாக சமாளித்தனர். அவ்வப்போது பவுண்டரிகளும், சிக்ஸர்களும் பறக்கவிட்டனர்.

ஒரு கட்டத்தில் வங்கதேச அணி தோற்றுவிடும் என்று கருதப்பட்ட நிலையில், இவர்கள் இருவரின் சிறப்பான ஆட்டத்தால் வங்கதேச அணியின் ஓட்ட விகிதம் எகிறியது.

இருவரும் அரை சதம் கடந்தனர். இவர்களை பிரிக்க நியூசிலாந்து அணியின் தலைவர் வில்லியம்ஸ் பந்து வீச்சாளர்களை மாற்றிக் கொண்டே இருந்தார்

ஆனால் அவர்கள் இருவரும் பந்து வீச்சாளர்களை எளிதாக சமாளித்த சதம் கண்டனர். சகிப் அல் ஹசன் சதம் கடந்து 114 ஓட்டங்கள் எடுத்திருந்த போது போல்ட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இருந்த போதும் முஹ்மதுல்லா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் களத்தில் இருந்தார்.

இறுதியாக வங்கதேச அணி 47.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழந்து, 268 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்கதேச அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கிய ஷகிப் அல் ஹசன் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் முதல் முறையாக நியூசிலாந்து அணியை வென்று வங்கதேச அணி சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அதிசய வாழைமரம்!!

 
புத்தளத்திலுள்ள தோட்டமொன்றில் அதிசய வாழைமரம் ஒன்று வளர்ந்துள்ளது. வாழை மரத்தில் வாழைபொத்தி இன்றி வாழைசீப்பு வளர்ந்துள்ளதாக தோட்ட உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

புத்தளம் மதுரன்குளிய பிரதேச வீட்டு தோட்டத்தில் இந்த அபூர்வ வாழைமரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வாழை மரத்தின் கன்று நட்டப்பட்டு 10 மாத காலப்பகுதியில் வாழை மரம் வளர்ந்துள்ளது. இதன்போது வாழைப்பொத்தி இன்றி வாழை சீப்பு வளர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

10 – 12 அடி உயரத்திலான இந்த வாழைமரத்தில் காய்க்கும் வாழைப்பழத்தில் வாழை பூ வளர்வது சிறப்பம்சம்

அந்த பூவுக்கு மத்தியில் வாழை இலையும் வளர்ந்து வருவதாக தோட்ட உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

தேநீர் மற்றும் பால் தேநீருக்கான விலை அதிகரிப்பு!!

தேநீர் மற்றும் பால் தேநீருக்கான விலை நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

சீனியின் இறக்குமதி வரி பத்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டமையால், தேநீர் மற்றும் பால் தேநீருக்கான விலை ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

புதிய விலை திருத்தத்திற்கு அமைய 15 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட தேநீர் 20 ரூபாவாகவும், முப்பத்தைந்து ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பால் தேநீர் நாற்பது ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் மேலும் தெரிவித்தார்.

வவுனியா பாவற்குளம் கனேஸ்வரா மகாவித்தியாலயத்தில் மாணவர் பாராட்டும் கௌரவித்தலும்!!

 
முதியோர் விழுமியங்களை பின்பற்றும் வறுமைக்குட்பட்ட மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பாவற்குளம் கனேஸ்வரா மகாவித்தியாலயத்தில் கல்விபயிலும் கூலித் தொழில் செய்து பிள்ளைகளைக் கற்பிக்கும் தாயுடன் , இரண்டு கல்வி கற்கும் தங்கைகள் கொண்ட தந்தையை இழந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தைச் சேர்ந்த உயர்தரத்தில் கல்விபயிலும் மாணவன் இராசையா தனுசனுக்கு இன்று (09.06.2017) வெள்ளிக்கிழமை காலை கல்லூரி முன்றலில் வைத்து துவிச்சக்கர வண்டி பாடசாலை அதிபர் வை.யோகராஜாவினால் வழங்கப்பட்டது.

இம்மாணவன் சுமார் 2.5 கிலோமீற்றர் தூரம் நடந்து வருபவர் . சனி ஞாயிறு தினங்களில் கூலித்தொழில் செய்து குடும்பத்துக்கு உதவி செய்து வருபவர்.

வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகமூடாக லண்டனில் உள்ள V3 அமைப்பு இந்த ஏற்பாட்டைச்செய்திருந்தது. V3 அமைப்பின் சமூக ஆர்வலர் கலாநிதி ச.சிவதாஸன் அவர்களின் மகள் சி.சிவானாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு இவ்வுதவியை வழங்கி இருந்தனர்.

கல்லூரி ஆசிரியர் இ.எஸ்.வரதன் வரவேற்புரை நிகழ்த்தி நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்தர் .பாடசாலை அதிபர் தனது உiரையில் இப்பாடசாலையில் கல்விகற்போரில் பெரும்பாலானவர்கள் வறுமைக்குட்பட்டவர்கள் சுமார் 300 வரையான மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையில் பல மாணவர்கள் கஸ்டத்தின் மத்தியில் கல்விகற்று வருகின்னறனர். V3 அமைப்பினர் எமது தேவைகளில் ஒர் இரண்டையாவது நிறைவேற்றித்தந்தால் பின்தங்கிய பிரதேச இப்பாடசாலை மாணவர்களுக்கு அது பெரும் உதவியாக அமையும் என்றார்.

பலர் உதவுவதாக கூறி தரவுகளைப்பெற்று பின்னர் எதுவும் செய்யாத சம்பவங்களே அதிகம் உள்ள நிலையில் இந்த அமைப்பும் மாவட்ட சமூகசேவை அலுவலகமும் எமது மாணவனுக்கு குறுகிய கால வேண்டுதலில் இந்த உதவியை செய்தமைக்கு தனது நன்றியையும் தெரிவித்தார் .

மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் இந்தப் பாடசாலை பல சவால்களுடன் இயங்கி வருவதுடன் நல்ல விழுமியப் பண்புகள் கொண்ட, மூத்த சமூகத்தை மதிக்கும் பண்பு கொண்ட மாணவர்களையும், கல்வியில் பல்கலைக்கழகம் என்ற கனவைக் கொண்டுள்ள மாணவர்கனைளயும், அதிகம் கொண்டிருப்பதை குறிப்பிட்டு தனுசன் வறுமையான மாணவன் என்பதால் மட்டுமல்ல, அவரின் நல்ல பண்புகள், மூத்தோரை மதிக்கும் எண்ணம் என்பவற்றால் இவ்வுதவிக்கு தெரிவு செய்யப்பட்டார்.

வளருகின்ற சமூகம் இவ்வகைப் பண்புகளைக் கொண்டிருந்தால் அவர்களுக்கு சமூகம் நல்லதை செய்ய தயங்காது என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு எனப் பாராட்டிப் பேசினார்.

நிகழ்வில் மாவட்ட சமூகசேவை அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே.வசந்தன் மற்றும் குமரன் ஆகியோரும் கலந்து கொண்டனர் .

உதவி பெற்ற மாணவன் இராசையா தனுசன் தனக்கு உதவிய V3 அமைப்பினருக்கு நன்றி தெரிவித்ததுடன் தன்னைப்போல் உள்ள ஏனையமாணவருக்கும் இவ்வாறான அமைப்புக்கள் உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

கல்லூரி ஆசிரியர் எம் .மதியழகன் லண்டன் V3 அமைப்பிற்கும், வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகத்தின் பணிகளுக்கும் பாடசாலை சார்பில் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

வவுனியாவில் அலுவலர் விடுதி திறந்துவைப்பு!!

 
வவுனியா புளியங்குளம் கல்வி வலயத்தில் இன்று (09.06.2017) காலை 10​ மணியளவில் அலுவலர்கள் விடுதி வவுனியா வடக்கு கல்வி பணிப்பாளர் வ.ஸ்ரீறீஸ்கந்தராசா தலைமையில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசாவினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

அறிவினை மையமாகக் கொண்டு பாடசாலைக் கல்வியினைப் புனரமைத்தல் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் உலக வங்கயின் நிதி உதவியுடன் வவுனியா வடக்கு கல்வி வயலத்தில் நீண்டநாள் தேவையாக இருந்த ஊழியர்கள் விடுதியினை வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா பிரதம விருந்தினராகவும் சிறப்பு விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களாக ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராசா, செந்தில்நாதன் மயூரன் ஆகியோர் கலந்துகொண்டதுடன் சுகாதார அமைச்சன் செயலாளர் ச.சத்தியசீலன் வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் உத்தியோகத்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் இறுதியில் எதிர்கால கல்வி நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது.

வவுனியாவில் கார் தடம்புரண்டு கோர விபத்து : இருவர் படுகாயம்!!

 
வவுனியா கணேசபுரம் பகுதியில் இன்று (09.06.2017) காலை 9.30 மணியளவில் கார் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர்.  இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

மடுவிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் வண்டியின் சாரதி கணேசபுரம் பகுதியில் பாலப்பலம் பார்த்துக்கொண்டு வந்துள்ளார். வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த கார் ( அதிவேகமாக) எதிரே மோட்டார் சைக்கில் நடுவீதியில் வருவதை அவதானித்து காரை வீதியில் அருகே திருப்பியுள்ளார்.

எனினும் வீதியின் அருகே பொதுமக்கள் நிற்பதை அவதானித்து வீதியின் மறுபக்கம் திருப்ப முற்பட்ட சமயத்தில் கார் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இவ்விபத்துக்கு காரணமான மோட்டார் சைக்கில் நிற்காமல் சென்றுவிட்டது.

காரில் பயணித்த சாரதி உட்பட இருவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பரயனாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தங்கத்தையே ஆடையாக அணிந்த மணமகள் : விலை எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் இயங்கிவரும் பிரபல சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் தனது மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.

திருமணம் என்றால் மணமகளின் ஆடை அதிக அளவில் கவனம் பெறும், விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு ஜொலிப்பார்கள்.

கழுத்தில் தங்க நகைகள், உடலில் கற்கள் பொறிக்கப்பட்ட ஆடைகள் என ஜொலிக்கும் மணப்பெண்களுக்கு மத்தியில் சரவணின் மகள் தங்கத்தையே ஆடையாக அணிந்துள்ளார்.

தங்கம் கொண்டு தயார் செய்யப்பட்டுள்ள இந்த ஆடையின் விலை 13 கோடி ஆகும். தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இளம் வயது ஷெர்லியின் மீது எனக்கு ஈர்ப்பு : காதல் கதை குறித்து மனம் திறந்த 60 வயதான வேலு பிரபாகரன்!!

 
60 வயதான வேலு பிரபாகரன், தான் இயக்கிய காதல் கதை படத்தில் நடித்த இளம் வயது நடிகை ஷெர்லி தாஸ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

தனது காதல் வாழ்க்கை குறித்து வேலு பிரபாகரன் கூறியதாவது, ஒவ்வொரு மனிதனுக்குமே ஆயுள் இருக்கிற வரை எதிர்பாலின அணைப்பும் துணையும் வேணும்.

தனிமைச் சிறையிலேயே இருந்தால் மனிதன் செத்துடுவான். அறுபது வயசுல ஒரு பெண்ணைத் தேடினா, அதை கொமெடியா, சீர்கேடான ஒரு விஷயமா, பாவி மாதிரி பாவிக்கிற பார்வை இந்தச் சமூகத்துக்கு இருந்தாலும், எனக்கும் காதல் வந்தது. கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

வயதான ஆண் மீது காதல்கொண்ட ஒரு பெண்ணை இந்தச் சமூகம் உருவாக்கவில்லை. பலபேர் ‘இந்த வயசுல கல்யாணமா? அப்படி இப்படி இருக்க முடியாதேங்கிற என்றபடி, பாலியல் ரீதியிலயும் கேள்வி கேட்பாங்க. வயதான ஒருத்தனை விரும்பிட்டா, அந்தப் பெண்ணை கீழ்த்தரமா பார்க்கிற, பேசுற சமூகம் இது.

ஆனால், பாலியல் உறவுகள் தாண்டி, எல்லா மனிதர்களுக்கும் ஒரு அடிப்படை உணர்வு உண்டு. எனக்கும் அது இருக்கு.

ஷெர்லியை எனக்கு 15 ஆண்டுகளாக தெரியும். அரபு நாட்டுல ஐ.டி வேலைபார்க்கிற பொண்ணு. ஆறு மாசங்களுக்கு முன்னாடி, இங்கே வந்தப்போ சந்திச்சோம்.

நிறைய பேசினோம். எனக்கும் அவங்க மேல ஒரு ஈர்ப்பு இருந்தது. என் உடல்நிலை அவங்களுக்குத் தெரியும். இன்னும் சில வருஷம் உயிரோடு இருந்தாலும், உங்களோடு வாழ்றது எனக்குப் பெருமைதான் அப்படின்னு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. ஷெர்லி, என் எல்லா போராட்டங்களுக்கும் உறுதுணையா இருப்பாங்கனு நம்புறேன் என்று கூறியுள்ளார்.