சஹாரா பாலைவனத்தில் தண்ணீர் இன்றி 44 அகதிகள் பலி!!

லிபியாவில் புகலிடம் பெறுவதற்காக சஹாரா பாலைவனத்தில் பயணம் மேற்கொண்ட நைஜீரியா நாட்டை சேர்ந்த 44 அகதிகள் தண்ணீர் இல்லாமல் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கானா மற்றும் நைஜீரியா நாடுகளை சேர்ந்த அகதிகள் லிபியா நாட்டிற்கு வாகனங்களில் புறப்பட்டுள்ளனர்.

சஹாரா பாலைவனம் வழியாக செல்ல வேண்டும் என்பதால் தேவைக்காக சில லிற்றர் தண்ணீரை கொண்டு சென்றுள்ளனர்.

துரதிஷ்டவசமாக பாலைவனத்தில் சென்றபோது வாகனம் பழுதாகி நின்றுள்ளது. வாகனத்தில் இருந்த தண்ணீர் முழுவதும் தீர்ந்துள்ளது.

ஆனால், நீண்ட பயணம் என்பதால் தண்ணீர் கிடைக்காமல் சோர்வுற்றுள்ளனர். பின்னர், ஒவ்வொரு நபராக மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு பாலைவனத்தில் 44 பேர் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளனர். இவர்களில் குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். எனினும், பாலைவனத்தில் இருந்து உயிர் தப்பிய 6 பேர் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். இவர்களுக்கு ரெட் கிராஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் உதவி வருகின்றனர்.

ஆப்பிரிக்காவில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவிற்கு செல்ல முயலும் அகதிகளும் விபத்தில் சிக்கி தொடர்ந்து பலியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

காதலிக்காக 500 கி.மீ ஓடிய நபர்!!

சுவிஸ்லாந்தில் காதலியின் மனதை கவரும் நோக்கில் நபர் ஒருவர் 500 கி.மீ தூரத்தை ஓடி வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த Izyaslav Koza(33) என்ற நபர் உக்ரைன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளர். இருவரும் அமெரிக்காவில் தான் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், காதலை ஏற்பதற்கு முன்னர் சுவிட்சர்லாந்து நாட்டில் ஒரு எல்லையில் இருந்து மற்றொரு எல்லை வரை ஓட முடியுமா? என அப்பெண் கேட்டுள்ளார்.

பெண்ணின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நபர் கடந்த 22-ம் திகதி சுவிட்சர்லாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு இத்தாலி எல்லையில் உள்ள Müstair என்ற பகுதியில் இருந்து தனது ஓட்டத்தை தொடங்கியுள்ளார்.

ஒவ்வொரு நாளும் 50 கி.மீ தூரம் வரை ஓடியுள்ளார். செல்லும் வழியில் இரவை கழிக்க ஹொட்டல்களில் தங்கியுள்ளார். இதற்கான செலவுகள் அனைத்தையும் அவரே ஏற்றுக்கொண்டுள்ளார்.

காதலிக்காக முயற்சியை கைவிடாத அந்நபர் இறுதியாக நேற்று ஜெனிவாவில் உள்ள Chancy என்ற பகுதியை அடைந்து தனது சாதனையை முடித்துள்ளார்.

அதாவது, தனது பயணத்தில் அவர் தொடர்ச்சியாக 500 கி.மீ தூரத்தை ஓடியே கடந்துள்ளார்.

இத்தகவலை காதலியிடம் தெரிவித்ததும் அவர் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு பயணமாக நேற்று இருவரும் நேரில் சந்தித்துள்ளனர்.

இதுமட்டுமில்லாமல், அப்பெண்ணிடம் காதலை தெரிவித்ததும் அவர் காதலை ஏற்றுக்கொண்டதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக நபர் உற்சாகமாக தெரிவித்துள்ளார்.

உலக அழிவிற்கு வித்திடும் டிரம்ப் : அமெரிக்கா வெளியேறுவதாக அதிரடி அறிவிப்பு!!

புவி வெப்பமயமாதலை தடுக்க உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் கடந்த ஆண்டு போடப்பட்ட பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ள்ளார்.

பல ஆண்டுகள் நடைபெற்ற சிக்கலான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு கையழுத்தானது பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம்.

இந்த ஒப்பந்தத்திற்கான முக்கிய நோக்கமே புவிவெப்ப மயமாதலை 2 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்துவதுதான்.

புவி வெப்பமடைதலுக்குக் காரணமான கார்பன் டை ஒக்சைட் உள்ளிட்ட பசுமை இல்ல விளைவு வாயுக்கள் வெளியேற்றத்தை பெருமளவில் கட்டுக்குள் கொண்டுவரவே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தில் இணைந்திருக்கும் நாடுகள் தங்களுடைய கார்பன் டை ஒக்சைட் வெளியேற்றத்தை கடுமையாக குறைக்க வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தத்தின் சிறப்பம்சம்.

ஆனால் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை குறைப்பது பொருளாதாரத்தில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது ஒரு சவாலான காரியமாகவே பார்க்கப்பட்டு வந்தது.

இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட 195 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது.

இந்நிலையில், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த முடிவிற்கு அமெரிக்காவின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொருளாதார நிபுணர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இன்று உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவான, முக்கியமான பிரச்சினை என்று பார்த்தால் அது உலகம் வெப்ப மயமாதல் தான். சர்வதேச அளவில் பசுமை இல்ல விளைவு வாயுக்களை வெளியிடுவதில் சீனாவிற்கு அடுத்து அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்த ஒப்பந்தத்தை பின்பற்றுவதால் தொழிற்சாலைகள், எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்திக்கும் என்பதால் டிரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார்.

ஆனால் டிரம்பின் இந்த முடிவு உலகை அழிவிற்கு அழைத்துச் செல்லும் ஒரு ஆரம்பப்புள்ளி என்பதை அவர் உணர மறுத்துள்ளார் என்று கூறப்படுகிறது

தீப்பிடித்த சென்னை சில்க்ஸ் : சேதம் எத்தனை கோடி தெரியுமா?

தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் உள்ளே  400 கிலோ தங்கம் மற்றும் 2,000 கிலோ வெள்ளி இருந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி, ரூ.20 கோடி மதிப்பிலான வைர நகைகள் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தீ விபத்தில் எரிந்த துணிகளின் மதிப்பு மட்டும் ரூ.80 கோடிக்கும் மேல் இருக்கும் என்றும், மொத்த சேதம் ரூ.300 கோடியைத் தாண்டும் என்றும் தோராயமாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

தீ விபத்தால் கட்டிடத்தில் 150 டிகிரிக்கும் மேல் வெப்பம் இருந்ததால், பாதுகாப்புப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சேதமடைந்திருக்கலாம் என்றும் நகை தயாரிப்பாளர்கள் கணித்துள்ளனர்.

சென்னை சில்க்ஸ் கடையில் இருந்த பொருட்களை கடையின் உரிமையாளர்கள் ரூ.200 கோடி அளவுக்கு காப்பீடு செய்திருந்ததாக பொலிசார் தரப்பில் கூறப்படுகிறது.

அண்ணனை தள்ளிவிட்டு திருமண பெண்ணுக்கு தாலி கட்டிய தம்பி : அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!!

தமிழகத்தில் கெட்டி மேளம் கொட்டிய நேரத்தில் மணமகனை தள்ளிவிட்டு அவரது தம்பி மணமகளின் கழுத்தில் தாலி கட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் செல்லரைப்பட்டியை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன்கள் ரஞ்சித், ராஜேஷ், வினோத். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ராஜேஷுக்கு, விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தை சேர்ந்த காளீஸ்வரி என்பவரை திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர்.

இதனால் இவர்கள் திருமணம் அங்குள்ள பாலமுருகன் கோயிலில் நேற்று காலை நடக்க இருந்தது. காலை 7.30 மணிக்கு மணமேடையில் மணமக்கள் அமர்ந்ததும், திருமண சடங்குகள் தொடங்கியது.

8.45 மணியளவில் பூஜை செய்த தாலியை பெரியோர்களிடம் ஆசி வாங்கி வரச்செய்தனர். கெட்டி மேளம் கொட்ட தாலியை மணமகனிடம் கொடுத்தார் ஐயர்.

அப்போது அருகில் நின்றிருந்த தம்பி வினோத், அண்ணன் ராஜேஷை திடீரென தள்ளிவிட்டு தான் மறைத்து வைத்திருந்த வேறு ஒரு தாலியை எடுத்து மணமகளின் கழுத்தில் அவசர, அவசரமாக கட்டினார். இதனால் மணமகன், உறவினர்கள் உட்பட அனைவரும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

ஒன்றும் நடக்காததுபோல் சிரித்த வினோத்தை உறவினர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். ஆனால் மணமகள் அமைதியாகவே இருந்தார்.

சந்தேகமடைந்து விசாரித்தபோது இருவரும் காதலிப்பது தெரியவந்தது. ராஜேசுக்கு பெண் பார்க்க சென்றபோது, மணமகள் வினோத்தை பார்த்து சிரித்துள்ளார்.

அப்போதே அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இதை யாருக்கும் சொல்லாமல் மறைத்துவிட்டனர். இந்த விவரம் தெரிந்ததும் மணமகளையும் உறவினர்கள் சரமாரி அடித்து உதைத்து, இதை முதலில் தெரிவித்திருக்கலாமே என திட்டியுள்ளனர்.

சினிமாவில் வருவதுபோல நடந்த இந்த திடீர் திருமண மாற்றத்தால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்பட்டது.

உலகை வியக்க வைக்க வருகிறது ராட்சத விமானம் : மைதானத்தை விடவும் பெரியது!!

 
உலகின் மிகப்பெரிய விமானம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உலக புகழ் பெற்ற மைக்ரோ-சொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான போல் எலனினால் பெரிய விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரொக்கட்களை கொண்டு செல்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த விமானத்தில் 6 இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. விமானத்தின் இறக்கைகள் 358 அடி நீளத்தை கொண்டுள்ளது. குறித்த விமானம் கால்பந்து மைதானத்தை விடவும் பெரியதாகும்.

இந்த திட்டத்திற்கு 300 மில்லியன் டொலர் செலவாகும் என 2011ஆம் ஆண்டு கணிப்பிடப்பட்டிருந்து. போல் எலனின் aerospace நிறுவனமே இந்த விமானத்தை தயாரித்துள்ளது.

இம் விமானத்தில் கிட்டத்தட்ட 5 இலட்சம் ராத்தல் நிறையுடனான பொருட்களை கொண்டு செல்ல முடியும் என குறிப்பிடப்படுகின்றது.

நான்கு பிள்ளைகளை படிக்க வைப்பதற்காக சிறுநீரகத்தை விற்கும் தாய்!!

 
உத்திர பிரதேசத்தில் தனது 4 குழந்தைகளின் படிப்பு செலவுக்காக கிட்னியை விற்கும் தாய் குறித்த உருக்கமான செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

‘ஐயா, சிறுநீரகம் தேவைப்படுவோருக்கு நான் தர தயாரா இருக்கிறேன். பணம் எதுவும் வேண்டாம். என் பிள்ளைகள் 4 பேரின் படிப்பு செலவை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள்’- இப்படி ஒரு இளம் பெண் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் உருக்கமாக விடுத்துள்ள வேண்டுகோள் படிப்போரை நெகிழ வைத்துள்ளது.

இவர்தான் அந்த தியாகத் தாய். ஆக்ராவில் இசோகாலனி என்ற இடத்தில் 330 சதுர அடிக்குள் அமைந்த வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் 8 பேருடன் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார்.

ஆர்த்திக்கு 4 குழந்தைகள். அனைவரும் பள்ளியில் படிக்கிறார்கள். சிறிய அளவில் ஆடைத் தொழிலில் ஈடுபட்டு வந்த ஆர்த்தி அதில் கிடைத்த வருமானம் மூலம் குழந்தைகளை படிக்க வைத்து வந்தார். கடந்த சில மாதங்களாக தொழில் நலிந்துவிட்டதால் வருமானத்துக்கு வழியில்லாமல் திண்டாடுகிறார்.

இந்த நிலையில் 4 பிள்ளைகளுக்கும் பள்ளியில் கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை தொடர முடியாமல் இருக்கிறார். அதில் 3 பேர் பெண் குழந்தைகள்.

பல பேரிடம் உதவி கேட்டு அலைந்துள்ளார். ஆனால் எந்தப்பக்கம் இருந்தும் உதவிக்கரம் நீளவில்லை.

ஆர்த்தி இவ்வளவு ஏழ்மையில் இருந்த நிலையிலும் அந்த பகுதியை சேர்ந்த 11 ஏழை பெண்களுக்கு பலரிடம் உதவி பெற்று திருமணமும் செய்து வைத்துள்ளார். அப்படிப்பட்டவரின் பிள்ளைகளுக்கு உதவ ஒருவர் கூட முன்வரவில்லை. மாவட்ட நிர்வாகத்தில் மனு கொடுத்துள்ளார். ஆனால் உதவி செய்ய மறுத்து விட்டனர்.

கடந்த மாதம் தனது சமையல் கியாஸ் சிலிண்டரை வெளி மார்க்கெட்டில் விற்று அந்த பணத்தை வைத்துக் கொண்டு ஏப்ரல் 29ம் திகதி லக்னோ சென்று முதல்வர் யோகி ஆதித்ய நாத்தை சந்தித்து மனு கொடுத்துள்ளார். அவர் உதவுவதாக வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை.

வேறு வழி எதுவும் தெரியாததால் கிட்னியை விற்க ஆர்த்தி முடிவு செய்துள்ளார். கையில் எழுதி தனது வேண்டுகோளை பேஸ் புக்கில் பதிவிட்டுள்ளார். ஆர்த்தியின் இந்த முடிவும், வேண்டுகோளும் பலரையும் உலுக்கி இருக்கிறது.

இங்கிலாந்தின் பாரம்பரிய சீஸ்-ரோலிங் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!!

 
இங்கிலாந்தின் பாரம்பரிய சீஸ்-ரோலிங் (Cheese-rolling) போட்டியில் ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

பாலாடையால் செய்யப்பட்ட உருளையைக் கொண்டு விளையாடும் இந்தப் போட்டி, குளொசெஸ்டர் என்னும் கிராமத்தில் வருடாவருடம் நடைபெற்று வருகிறது.

கூப்பர்ஸ் மலையின் உச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் போட்டிக்குத் தயாராக இருப்பர்.

மேலிருந்து பாலாடை உருளையைக் கீழ்நோக்கி உருட்டிவிடுவர். அதனைத் தொடர்ந்து யார் முதலில் எல்லைக் கோட்டைத் தொடுகின்றார்களோ அவர்கள் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவர்.

ஆண்கள் பிரிவில் 29 வயதான கிரிஸ் ஆன்டர்சன் என்பருவம் பெண்கள் பிரிவில் 18 வயதான கெவி மார்க்கலும் வெற்றி பெற்றனர்.

பாரம்பரிய சீஸ்-ரோலிங் போட்டி 1826 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதற்கு முன்னரே இந்தப் போட்டியானது நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குறி தவறிய தாக்குதலால் சொந்த வீரர்கள் 11 பேரைக் கொன்ற பிலிப்பைன்ஸ் இராணுவம்!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் தீவிரவாதிகளைக் குறிவைத்து இராணுவம் நடத்திய வான்வெளி ஒத்திகைத் தாக்குதலில் குறி தவறியதால் சொந்த வீரர்கள் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் மாராவி தீவு பகுதிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றி கடந்த 8 நாட்களாக பொதுமக்கள் பலரை மனிதக் கேடயங்களாகப் பிடித்து வைத்துள்ளனர்.

ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக பிலிப்பைன்ஸ் இராணுவம் கடும் முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு இராணுவ நடவடிக்கைகளுக்கான ஒத்திகைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், ஒத்திகையின் போது இராணுவ ஹெலிகாப்டரில் இருந்து வீசப்பட்ட சிறிய ரக ஏவுகணைகள் துரதிர்ஷ்டவசமாக குறிதவறி சொந்த வீரர்களின் நிலைகளைத் தாக்கியது. இந்த தாக்குதலில் 11 வீரர்கள் கொல்லப்பட்டனர். 8 வீரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீரர்களிடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாததே இந்த மோசமான சம்பவத்திற்கு காரணம் என இராணுவ செயலாளர் டெல்பின் தெரிவித்துள்ளார். இந்த விபத்து சரியாக எந்த இடத்தில் நடந்தது என்பதை அவர் கூற மறுத்துவிட்டார்.

தொழில்நுட்பத்தின் விஸ்வரூபம் : சூரியனின் புற மேற்பரப்பில் நுழையவுள்ள பார்க்கர் விண்கலம்!!

சூரியனின் புற மேற்பரப்பினுள் விண்கலம் ஒன்றைச் செலுத்தத் தயாராகி வருவதாக நாஸா அறிவித்துள்ளது. இந்த விண்கலம் அடுத்த ஆண்டு ஏவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் பருவ மாற்றங்கள் மற்றும் ஏனைய இயற்கைப் பண்புகளுக்கு சூரியனே பிரதான காரணம். எனினும் அதீத வெப்பம் நிறைந்த தீச்சுவாலைகள் சூரியனின் புற மேற்பரப்பில் எழுவதால் சூரியனை நெருங்கி ஆராயும் வாய்ப்பு நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்து வந்தது.

இந்த நிலையில், வைத்திய கலாநிதி இயூஜின் என்.பார்க்கர் என்ற விஞ்ஞானி சூரியனின் புற மேற்பரப்பின் பண்புகள் குறித்த தனது ஊகங்களை வெளியிட்டு வந்தார். சூரியனின் காந்தப் புயல் உள்ளிட்டஇவரது ஊகங்கள் ஒவ்வொன்றும் உண்மை என்று நிரூபிக்கப்பட்டு வருகின்றன. இவ்விஞ்ஞானியின் கருத்துக்களின் அடிப்படையிலேயே சூரியனை ஆராயும் விண்கலம் தற்போது தயாராகி வருகிறது.

ஏற்கனவே இந்தத் திட்டத்துக்கு வேறொரு பெயர் சூட்டப்பட்டிருந்தது. எனினும், பார்க்கரின் எதிர்வுகூறல்களாலேயே இந்தத் திட்டம் சாத்தியமாகும் என்ற நம்பிக்கை பிறந்தது என்பதால், இந்த விண்ணோடத்துக்கு அவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது. உயிரோடு இருக்கும் விஞ்ஞானி ஒருவரது பெயரை விண்கலத்துக்கு நாஸா சூட்டியிருப்பது இதுவே முதன்முறை!

இந்த விண்கலம், சூரியனின் புற மேற்பரப்பினுள் பரவியிருக்கும் பிளாஸ்மாவை ஊடறுத்து சுமார் நாற்பது இலட்சம் மைல்கள் வரை செல்லவுள்ளது. இதற்காக 5000 பாகை செல்ஷியஸ் என்ற அதீத வெப்பத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் இவ்விண்கலம் விசேட 4.5 அங்குல கனமுடைய கார்பன் உள்ளடங்கிய தகடுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ்விண்கலம் சூரியனின் புற மேற்பரப்பில் மணிக்கு சுமார் ஏழு இலட்சம் கிலோமீற்றர் வேகத்தில் (நியூயோர்க்கில் இருந்து டோக்கியோவுக்கு ஒரு நிமிட நேரத்தில் பயணிக்கக்கூடிய வேகத்தில்) சுற்றி வந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ளவிருக்கிறது.

இவ்வாறு சூரியனை நெருங்கி ஆராய்வதால், உலகில் ஏற்பட்டு வரும் பருவ மாற்றங்கள் குறித்து முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும் என்றும், இதனால் பல இயற்கை அனர்த்தங்களைத் தடுக்கவோ, அதில் இருந்து தப்பிக்கவோ முடியும் என்றும் நாஸா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விண்கலம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதி விண்ணில் ஏவப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

உலகிலேயே குண்டான சிறுவனுக்கு உடல் எடை குறைப்பு சிகிச்சை : ஒரே மாதத்தில் 31 கிலோ குறைப்பு!!

 
உலகின் மகா குண்டுச் சிறுவன், ஒரு சத்திர சிகிச்சையின் பலனாக தனது உடல் எடையில் ஆறில் ஒரு பங்கைக் குறைத்திருக்கிறார்.

ஆர்யா பெர்மானா என்ற பதினொரு வயது நிரம்பிய இந்தச் சிறுவன் இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மானிலத்தில் உள்ள கரவங் என்ற பகுதியைச் சேர்ந்தவர். ஐந்து நிமிடம் தொடர்ந்து நடக்கவே முடியாத இந்தச் சிறுவனின் உடல் எடை 190 கிலோகிராம். இவனது வயதையொத்த ஆறு பேரின் மொத்த எடையை இவர் கொண்டிருக்கிறார்.

பிறக்கும்போது சாதாரண உடல் எடை கொண்டிருந்த ஆர்யா, தனது ஆறாவது வயது முதல் அதீத உடல் எடை அதிகரிப்பால் அவதிப்பட்டு வருகிறார்.

தினமும் ஐந்து வேளை சாப்பிடும் இவரால் உணவை உட்கொள்வதை நிறுத்த முடியாது. என்றபோதும், இந்நிலை தொடர்ந்தால் அச்சிறுவனின் உயிருக்கே ஆபத்து என்பதை மருத்துவர்கள் சிறுவனின் பெற்றோருக்கு உணர்த்தினர். கடும் முயற்சிக்குப் பின் தமது மகனை சிகிச்சைக்கு உட்படுத்த அவர்கள் சம்மதித்துள்ளனர்.

இதையடுத்து கடந்த மாதம் அச்சிறுவனுக்கான மொத்த சிகிச்சையின் முதல் பகுதியான ‘கேஸ்ட்ரிக் ஸ்லீவ்’ என்ற ஐந்து மணி நேரம் நீடித்த சத்திர சிகிச்சையை மருத்துவர்கள் செய்து முடித்தனர். உலகிலேயே இந்த சிகிச்சையைச் செய்துகொண்ட மிகக் குறைந்த வயதுடையவரும் ஆர்யாவே! இதனால் கடந்த ஒரு மாத காலத்தில் 31 கிலோ எடை குறைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த பன்னிரண்டு மாதங்களுக்குள் தொடர் சிகிச்சைகள் மூலம் ஆர்யாவின் இரைப்பையின் அளவைக் குறைத்து, மொத்தமாகச் சுமார் 150 கிலோ எடையைக் குறைக்கவுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவுடன் மலபார் போர் ஒத்திகை : மறுப்பு தெரிவித்துள்ள இந்தியா!!

 
மலபார் கூட்டுப்படை போர் ஒத்திகை பயிற்சிற்கு விருப்பம் தெரிவித்திருந்த அவுஸ்திரேலியா கடற்படையுடன், பயிற்சியில் ஈடுபடுவதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் இந்துசமுத்திர எல்லையில் இந்தியா, அமெரிக்கா மற்றும் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஜப்பானும் இணைந்து கடல்தள போர் ஒத்திகைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மலபார் கூட்டு கடற்படை போர் ஒத்திகை என பெயரிடப்பட்டிருந்தது.

குறித்த கூட்டு கடற்படை பயிற்சியானது இந்துசமுத்திற கடல் எல்லையிலிருந்து கிழக்கே பசுபிக் கடல் எல்லை வரை நீடித்திருந்தமையால், கடற்படை பயிற்சியானது சீனாவை அச்சுறுத்துவதற்காக மேற்கொள்ளப்படுவதாகவும், ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்கா ஆதிக்கத்தை மீள் பிரவேசிக்க செய்யும் செயற்பாடாகவுள்ளதாக சீனா குற்றம் சுமத்திவந்தது.

இந்நிலையில் எதிர்வரும் ஜூலை மாதம் வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் இடம்பெறவுள்ள மலபார் பயிற்சியில் பங்குபற்றுவதற்கு ஆஸ்திரேலியா கடற்படை சார்பில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. அனால் அவுஸ்திரேலியாவின் இணைவு அயல் நாடுகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் எனக்கூறி இந்தியா அவுஸ்திரேலியாவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

இந்தியாவின் குறித்த நிராகரிப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள சீனா, பிராந்திய நாடுகளின் பாதுகாப்பு நிலைமை குறித்து இந்திய உணர்ந்துள்ளதாகவும், அதற்கு நன்றி என தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

60 அடி பள்ளத்தில் விழுந்து கார் விபத்து : 6 வயதுச் சிறுவன் பலி!!

ஹெலியகொட மண்சரிவில் உயிரிழந்தவரின் ஏழாம் நாள் கிரிகைக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தவர்களின் கார் 60 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் 6 வயது சிறுவன் பலியானதுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு ஹட்டன் பிரதான வீதியின் கினிகத்தேன நகரை அண்மித்த பகுதியில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் இவ் விபத்து சம்பவித்துள்ளது.

கினிகத்தேனை அம்பகமுவ சிங்கள வித்தியாலயத்தில் தரம் 1 ல் கல்வி பயிலும் பத்தின் தேவேந்திர பண்டார சேனாரத்ன என்ற சிறுவனே ஸ்தலித்தில் பலியனார்.

காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த குறித்த சிறுவனின் தாய், தந்தை மற்றும் பாட்டி ஆகியோர் காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.

காயமுற்ற பாட்டி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பிரதேச செயலகத்தில் பனியாற்றிய தாய், தந்தை ஆகியோர் கினிகத்தேன வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கினிகத்தேன பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

வாய்ப்புகள் இல்லாததால் பிரபல நடிகையின் முடிவு!!

தமிழ் சினிமாவில் அண்ணன், தம்பி வலம்வரும் நடிகர்கள் இருவருடனும் ஜோடி போட்டவர் அந்த நடிகை. தம்பி படத்தில் அறிமுகம் ஆன இவருக்கு அந்த படம் கைவிட்டாலும், அண்ணன் நடித்த மாஸான படம் கொஞ்சம் நடிகையை தூக்கிவிட்டது.

இருந்தாலும், அந்த நடிகைக்கு தமிழ் சினிமா அவ்வளவாக கைகொடுக்கவில்லை. இதனால், தனது கவனத்தை வேறு மொழி பக்கம் திருப்ப ஆரம்பித்தார்.

நடிகையின் போதாத காலமோ என்னவோ, அங்கேயும் அவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லையாம். இதனால் என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்த அந்த நடிகை தற்போது விபரீத முடிவு ஒன்றை எடுத்திருக்கிறாராம். அது என்னவென்றால், மொடலிங்க் துறையில் அந்த நடிகை இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

சினிமாவைவிட மொடலிங்கில் நிறைய சம்பாதிக்க முடியும் என்று தன்னிடம் கேட்பவர்களிடம் எல்லாம் இவர் சொல்லிக் கொண்டு வருகிறாராம். ஆனால், உண்மையில் அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால்தான் மொடலிங்குக்கு கீழிறங்கி வந்துவிட்டார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

தலையில்லாத மகனை கண்டு கதறிய தாய்!!

இலங்கையில் அண்மைய நாட்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவினால் காணாமல் போனோர் தொடர்பில் இன்னமும் உரிய தகவல்கள் வெளியாகவில்லை.

காணாமல் போனோர் மீண்டும் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இயற்கையின் சீற்றம் காரணமாக பல குடும்பங்களில் ஒருவர் மாத்திரமே உயிர் தப்பி, ஏனையவர்கள் உயிரிழந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறான பெண் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

அண்மையில் மொரவக்க பிரதேசத்தில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக தனது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளை குறித்த பெண் இழந்துள்ளார்.

சந்தினி என்ற பெண்ணே இந்த துயர்மிகு சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

எப்படியிருப்பினும் தனது கணவர் மற்றும் ஒரு மகன் குறித்து அவர் இன்னமும் நம்பிக்கையுடன் இருப்பதாக சந்தினி குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை அவர்களின் சடலம் கிடைக்காமையே இந்த நம்பிக்கைக்கு காரணமாக உள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.

அவரது 7 வயது மகன் ஒருவரின் சடலம் மாத்திரமே இதுவரையில் கிடைத்துள்ளது.

குறித்த சடலத்தில் தலையும் இல்லை காலும் இல்லை. எனினும் தனது மகனை தான் அடையாளம் கண்டு விட்டதாக கண்ணீருடன் கதறியபடி சந்தினி தெரிவித்துள்ளார்.

வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவனுக்கு துவிச்சசக்கர வண்டி வழங்கி வைப்பு!!

 
வவுனியா விபுலானந்தாக் கல்லூரி மாணவனுக்கு மாவட்ட சமூக சேவை அலுவலகத்தின் வேண்டுகோளின்பேரில் கனடா புன்னகை அமைப்பினால் (Smile Foundation) இன்று (01.06) வியாழக்கிழமை துவிச்சக்கர வண்டி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

கல்லூரி அதிபர் சு. மிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன், இலங்கை புன்னகை அமைப்பின் தலைவர் க.சர்மிலன் மாவட்ட சமூக சேவை அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் கி. சந்தரூபன் மற்றும் பாடசாலை பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர் .

நிகழ்வில் பாடசாலை அதிபர், மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர், பிரதி அதிபர் திரு.மதிவதனன் ஆசிரியர் திரு.வில்வராஜா ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

உளவளதுறை ஆசிரியர் திருமதி யசோதரன் அவர்கள் குறித்த மாணவனின் வகுப்பு ஆசிரியை திருமதி பத்திரனா அவர்கள் மூலம் தெரிவு செய்த வவுனியா தோணிக்கல் லக்ஸபானா வீதியில் வசிக்கும் செல்வன் செல்வராசா தர்சிகனுக்கு பாடசாலை அதிபர் குறித்த துவிச்சக்கர வண்டியை கையளித்தார் .

இத்துவிச்சக்கர வண்டியை கனடாவில் உள்ள சமூக ஆர்வலர் சிவா சிவசோதிநாதன் தனது தந்தையார் அமரர் கதிரித்தம்பி சிவசோதிநாதன் அவர்களின் ஓராண்டு நினைவாக வழங்கி வைத்தார்.

இன்று புலம்பெயர்ந்து வாழ்கின்ற நம் உறவுகள் இவ்வகையான பல்வேறு உதவிகளையும் வேறுபட்ட அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மூலம் வழங்கி வருவதால் பல நலிவடைந்த மக்கள் பயன்களைப் பெற்று வருவது மட்டுமன்றி மாணவர்கள் நம்பிக்கையுடன் தமது கல்வியைத் தொடரும் சாதக நிலமைகளும் ஏற்பட்டுள்ளன எனவும் புலம் பெயர்ந்து வாழ்வோர் தொடர்ந்து தமது உதவிகளை செய்ய வேண்டியது எமது சமூகத்திற்கு மிக அவசியமானது எனவும் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் கருத்து தெரிவித்தார்.