வவுனியா வடக்கு பிரதேச சபையின் நிர்வாகக் கட்டடமும் கலாசார மண்டபமும் திறப்பு விழா!!

 
வவுனியா வடக்கு பிரதேச சபையின் நிர்வாகக் கட்டடமும் கலாசார மண்டபமும் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு நெடுங்கேணியில் இடம்பெற்றது.

நீண்ட காலமாக வவுனியா வடக்கு பிரதேசசபையின் நிர்வாக கட்டடம் தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வந்திருந்த நிலையில் வட மாகாண உள்ளுராட்சி அமைச்சினால் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு அமைக்கப்பட்ட இக் கட்டிடத்தினை வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா திறந்து வைத்திருந்ததுடன், வவுனியா வடக்கு பிரதேசத்தின் நீண்ட கால தேவையாக காணப்பட்ட கலாசார மண்டபத்தினை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் திறந்து வைத்திருந்தார்.

பிரதேச சபையின் செயலாளர் க.சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வட மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ஆர்.இந்திரராசா, எம்.தியாகராசா, செ.மயூரன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியாவில் பொது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள்!!

 
வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகம் மேற்கொண்டுவரும் வெள்ளநிவாரணப்பணிகளில் வவுனியா தொழில் நுட்பக்கல்லூரி மாணவர்களதும் ஆசிரியர்களதும் பங்களிப்பு குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

தொழில் நுட்பக்கல்லூரி அதிபர் ஆ.நற்குனேஸ்வரன் ஏற்பாட்டில் அங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மற்றும் கல்விபயிலும் மாணவர்கள் தமது பங்களிப்பை பல வகையிலும் ஆற்றியுள்ளனர்.

வெள்ள நிவாரணப்பணிகளில் மாவட்ட சமூக சேவை அலுவலகம் ஈடுபட்ட வேளை தொழில் நுட்பக்கல்லூரி மாணவர்கள் முன்வந்து வீடுகளிலும் தனியார் நிறுவனங்களிலும் நிவாரணப்பொருட்களை சேகரிக்கும் பணியில் கொழுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாது ஈடுபட்டனர்.

இது பல பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. உயர்தர மாணவர்கள் சமூகத்துடன் இணைந்து பங்காற்றுவது சமூக அக்கறையுடன் கல்வியை கற்பது நல்ல சமூகவிழுமியமாகப் பாராட்டப்படுகிறது.

மேலும் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் இணைந்து சிறுவர்களுக்கான அவசர நிவாரணப்பொதிகளை ஒப்படைத்துள்ளனர். இவற்றை அபிவிருத்தி உத்தியோகத்தர் கி.வசந்தரூபன் உரிய வாகனங்களில் ஏற்றி அனுப்ப ஏற்பாடுகளை செய்துள்ளார் .

தொடர்ந்தும் வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகத்தில் பொதுமக்கள் நிவாரணப்பொருட்களை ஒப்படைத்த வண்ணம் உள்ளனர் என மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாஸன் தெரிவித்தார்.

வவுனியாவில் வலுவழந்த குடும்பத்திற்கு கூரைத் தகடுகள் அமைச்சர் சத்தியலிங்கத்தால் வழங்கிவைப்பு!!

 
வவுனியாவிலுள்ள வலுவிழந்த குடும்பத்தலைவரைக்கொண்ட குடும்பமொன்றுக்கு ஒருதொகுதி கூரைத் தகடுகள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் 2017ம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் வழங்கி வைக்கப்பட்டது.

நேற்று முன்தினம் கூரைத்தகடுகள் அமைச்சரின் சார்பில் அமைச்சரின் செட்டிகுளம் பிரதேச இணைப்பாளர் சிந்துஜனால் வழங்கப்பட்டது.

அடிப்படைவசதிகள் இன்றி கொட்டில் வீட்டில் நீண்டகாலமாக வதியும் வறுமைக்கோட்டக்குட்பட்ட இந்தக்குடும்பம் விடுத்த வேண்டுகோளையடுத்து அமைச்சரின் பணிப்பின்பேரில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரின் ஊடகபிரிவினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நீதிமன்றத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட ஐவருக்கு மரண தண்டனை!!

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் கடந்த 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு இன்று (01.06) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குற்றவாளிகள் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டமையால் மூவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்பளித்துள்ளார்.

மேலும், குற்றவாளிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் காயமடைந்த இளைஞருக்கு ஐந்து இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சுந்தரபுரத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி 24 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆராச்சிலாகே தர்மகீர்த்தி என்ற குடும்பத்தலைவர் படுக்கை அறையில் வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார் என்ற சந்தேகத்தில் அவரது மனைவியான ரோகினி தமயந்தினி என்பரைக்கைது செய்த பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணைகள் கடந்த 2014.01.25 அன்று சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

இதையடுத்து இன்று வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டள்ளதால் அவரது மனைவியான ரோகினி தமயந்தி என்பவரே கணவனை கொலை செய்துள்ளார் என்று விசாரணைகளிலிருந்து நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே எதிரிக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டள்ளதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

2008ஆம் ஆண்டு வவுனியா சாஸ்திரிகூழாங்குளம் பகுதியில் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்து தங்க நகைகள் மோதிரம் என்பனவற்றை கொள்ளையடித்ததுடன் அங்கு இருந்த சிவகுமார் இந்துமதி என்ற பெண்மணியை கொலை செய்த குற்றத்திற்காக இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் 2016.06.02 வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது. இன்று வவுனியாமேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் குறித்த குற்றச்சாட்டிற்கு எதிரியான வி.கனகமனோகரன் என்பவருக்கு வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்த குற்றத்திற்கு 10வருட சிறைத்தண்டனையும் சி. இந்துமதி என்பவரை படுகொலை செய்த குற்றத்திற்கு சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டள்ளதால் எதிரிக்கு மரண தண்டனை வழங்கித்தீர்ப்பளித்தார்.

வவுனியாவில் மக்களுடைய வாழ்வியலை சீரழிக்கும் மதுக்கடைகளை மூடுமாறு கோரி பிரச்சாரம்!!

 
மக்களின் சமூக பொருளாதார கட்டமைப்பைச் சீரழிக்கும் சாராயக்கடைகளை இழுத்து மூட அணிதிரளுமாறு சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரால் நேற்று பிற்பகல் வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடப்பகுதிகளிலுள்ள கடைகள், பேருந்து பயணிகளிடம் துண்டுப்பிரசுர விழிப்புணர்வு நடவடிக்கை இடம்பெற்றது.

மதுவால் சீரழியும் இளைஞர்களையும் கிராமங்களையும் மீட்டெடுப்போம் என்று துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் வெள்ள நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு!!

 
நாட்டில் அண்மையில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவுப் பொருட்கள் ஏனைய அடிப்படைத் தேவைகளுக்கான பொருட்கள் வவுனியா அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் பாடசாலைகள் மற்றும் திணைக்களங்களில் சேகரிக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் குறித்த பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வவுனியா அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைவர் வைத்தியர் எம்.எம்.எம்.அனஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதற்காக அமைக்கப்பட்ட விஷேட மையத்தில் வவுனியா வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் உதவி வழங்கப்பட்டு வருவதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் வவுனியா கிளையின் வைத்தியர்கள் குழு ஒன்று பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் சுழற்சி முறையில் மேலும் வைத்தியர்கள் அனுப்பிவைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வவுனியா அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைவர் எம்.எம்.எம்.அனஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா நெற் 4 ஆண்டுகளை நிறைவுசெய்து 5ம் ஆண்டில் : பாலச்சந்திரன் சிந்துஐன் வாழ்த்து!!

வெற்றிகரமாக தனது 4வது அகவையை நிறைவு செய்து, 5வது ஆண்டில் தடம்பதிக்கும் வவுனியா நெற் இணையத்திற்கும், அதன் நிர்வாகக் குழுவினர் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் எனது உள்ளங்கனிந்த நல்வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

வவுனியா நெற் இணையம் கடந்த 4 வருடங்களில் பலவேறு விதமான சிக்கல்கள், தடங்கல்கள், பிரச்சனைகளை சந்தித்து அவை யாவற்றையும் உடைத்தெறிந்து தமிழ் பேசும் பல ஆயிரக்கணக்கான இணைய பாவனையாளர்களின் அபிமான இணையமாகவும், வவுனியா மாவட்டத்தின் முன்னனி செய்தி வழங்கும் இணையமாகவும் மாற்றம் பெற்றுள்ளது.

தனது செய்திகளை வேகமாக வழங்கும் அதேநேரம் நடுநிலைமையாகவும், உண்மைத்தன்மையாகவும், பக்கச்சார்பின்றி வழங்குவதனை தனது சிறப்பம்சமாக கொண்டு வவுனியா நெற் இணையம் இன்று வரையில் தனது ஊடகப் பணியை ஆற்றி வருகின்றது என்றால் அதனை பாராட்டாமலும், மெச்சாமலும் இருக்கமுடியாது.

ஊடக தர்மத்திற்குட்பட்டு பணியாற்றிவரும் வவுனியா நெற் இணையத்தின் ஊடகவியலாளர்களையும் இந்நேரத்தில் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்.

அவ்வகையில் வவுனியா நெற் இணையம் எதிர்காலத்தில் மேலும் வளர்ச்சி பெறவும், தொடர்ந்தும் தமிழ் பேசும் இணைய பாவனையாளர்களின் அபிமான இணையமாகவும் திகழ இறைவனை வேண்டுவதுடன் எனது வாழ்த்துக்களையும், ஒத்துழைப்புக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

என்றும் சமூகப்பணியில்,

பாலச்சந்திரன் சிந்துஐன்.
வடமாகாண சுகாதார அமைச்சரின் இணைப்புச்செயலாளர்,
தலைவர் & ஸ்தாபகர் – கலைமகள் நற்பணி மன்றம்.

வவுனியா யுரேனஸ் இளைஞர் கழகத்தினரால் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு!!

 
நேற்று (31.05.2017) சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் அனுஸ்டிக்கபட்டது. இதனை முன்னெடுக்கும் வகையில் யுரேனஸ் இளைஞர் கழகத்தினர் சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு குறிப்பிட்ட பாடசாலை மண்டபத்தில் விசேட கருத்தரங்கு ஒன்றை நடத்தியிருந்தனர்.

இக்கருத்தரங்கு யுரேனஸ் இளைஞர் கழகத்தின் தலைவர் கணேசலிங்கம் சிம்சுபன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் இதனை Adic Lanka நிறுவனத்தின் ஊழியர் அருளானந் விரிவுரையாளராக செயற்பட்டிருந்தார்.

இந்நிகழ்வில் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் யுரேனஸ் இளைஞர் கழக அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.

அத்தோடு சிகரட் கம்பனியின் அடுத்த இலக்கு உங்கள் பிள்ளைகளே என்ற செய்தியையும் யுரேனஸ் இளைஞர் கழகத்தினர் பிரசுரங்கள் மூலம் அனைவருக்கும் கையளித்ததுடன் பொது இடங்களில் இது தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வறிய குடும்பங்களுக்கு கோழிக்குஞ்சுகளை வழங்கிய ம.தியாகராசா!!

 
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாவினால் கடந்த 29.05.2017 அன்று கோழிவளர்ப்பிற்கான உதவிவழங்கப்பட்டது.

வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா தனக்கு குறித்தொதுக்கப்பட்ட 2017ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து வவுனியா மாவட்டத்தில் மிகவும் வறியகுடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக ஒருமாத வயதுடைய நல்ல இன கோழிக்குஞ்சுகள் வவுனியா மாவட்ட கால்நடை வைத்திய அலுவலகத்தில் வைத்து பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

உடல் பருமனால் கவலையா : இவற்றை முயற்சி செய்யுங்கள்!!

நம் உடம்பில் உள்ள கல்லீரல்கள் தான் கொழுப்புகளை உற்பத்தி செய்கிறது, அளவுக்கு அதிகமான கொழுப்புகள் உடலில் சேரும் போது உடல் பருமன் ஏற்படுகிறது.

உடல் பருமனுக்கான காரணங்கள்

அதிக அளவு உணவு எடுத்துக்கொள்ளல், குறைவான சக்தியைச் செலவிடல், அதிக சக்தி தரும் உணவுகளை உட்கொள்ளல் (இனிப்புகள்/ ஐஸ்-கீரிம்/ குளிர்பானங்கள்), மதுப் பழக்கம் போன்றவற்றால் கூடுதல் பருமன் ஏற்படுகிறது. வயது மற்றும் பரம்பரைக் காரணிகளும் கூட உடல்பருமனுக்குக் காரணங்கள்.

தைரொய்ட் சுரப்புக் குறைவதாலும், அட்ரீனல் சுரப்பு அதிகரிப்பதாலும் உடல் பருமன் அதிகரிக்கும். மேலும் கூடுதல் உடல்பருமனால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டு வாதம், மன அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

உடல் பருமனுக்கு எளிய சித்த மருத்துவம்

இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol) ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எளிதாக கரைக்கும். இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு டேபிள் ஸ்பூன் சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து சாப்பிடுவதால் உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.

சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை ஆகியவற்றை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறையும்.

பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்தினால் விரைவில் உடல் எடை குறையும்.

எலுமிச்சைச் சாற்றில் விட்டமின் C இருப்பதால், ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் சம அளவு தேன் சேர்த்து கலந்து ஒரு டம்ளர் நீரில் கலந்து குடிக்க வேண்டும். மேலும் இது ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் உடம்பில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.

தினமும் சாப்பிடக் கூடிய உணவுப் பொருட்கள்

உடல் பருமனை குறைக்க விரும்புவோர்கள் தனது அன்றாட உணவாக தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர். போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும்.

சாப்பிடக் கூடாத உணவுப் பொருட்கள்

உடல் பருமனாக இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளான இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள். போன்றவற்றை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.

குறிப்பு

உணவுகளை பின்பற்றுவதுடன் மட்டுமில்லாமல் தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், போன்ற உடலுக்கு ஆரோக்கியமான பயிற்சிகளை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்.

கடலில் அலைகள் உருவாவது எப்படி என்று தெரியுமா?

கடற்கரைக்கு சென்றால் அங்கிருக்கும் மணலில் கோவில், வீடு செய்து விளையாடுவோம். எப்படி இந்த மணல் வந்திருக்கும் என்று என்றாவது யோசித்தது உண்டா?

கடற்கரையில் மணல்கள் நிறைந்துக் காணப்படுவதற்கு கடலில் ஏற்படும் அலைகளே காரணமாகும். இந்த அலைகள் காற்றினால் வேகமாக கரையை நோக்கி வரும் பொழுது சிறு சிறு கற்களையும் அரித்துக் கொண்டு வருவதால், அந்த கற்கள் ஒன்றோடு ஒன்று மோதி கிரைண்டரில் அரைக்கப்படும் மாவைப் போல கற்கள் அரைக்கப்பட்டு கடலில் அதிக மணல் உருவாக காரணமாக இருக்கின்றது.

மேலும் பூமியின் சுழற்சியாலும், காற்றின் வேகத்தாலும் தொடர்ந்து அலைகள் ஏற்பட்டு ஈர்ப்பு விசையின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கடலுக்குள்ளேயே பாறைகள் நொறுங்கி அதிக மணலை கடற்கரைகளில் உருவாக்குகிறது.

கடல் அலைகள் ஏற்பட என்ன காரணம்?

நிலா மற்றும் சூரியன் இவை இரண்டும் மாறி மாறி செலுத்தும் ஈர்ப்பு விசை தான் கடலில் அலைகள் உருவாவதற்கு காரணமாக உள்ளது. இதனால் கடலில் உயர்வான மற்றும் தாழ்வான அலைகள் எப்போதும் மாறி மாறி உருவாகிறது.

பற்றி எரிந்த கட்டிடம் : மனைவி-மகளை வெளியில் தூக்கி எறிந்த தந்தை!!

ரஷ்யாவில் தீயில் சிக்கிக் கொண்ட மனைவி மற்றும் மகளை அவரது தந்தை காப்பாற்றுவதற்காக கட்டிடத்திற்கு வெளியில் தூக்கி எறிந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள கட்டிடம் ஒன்றில் திடீரென்று பயங்கர தீ வீபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அதில் 5-வது மாடியில் தங்கியிருந்த குடும்பத்தினர் கட்டிடத் தீயில் சிக்கிக் கொண்டனர்.

இந்த தீ விபத்தில் சிக்கிக் கொண்ட அவர்கள் வெளியில் வரமுடியாமல் தவித்துள்ளனர். அதன் பின்னர் அவர்கள் ஜன்னல் அருகே வந்து நின்றுள்ளனர்.

அப்போது அதன் வழியே சென்ற பலரும் தீ எரிவதைப் பார்த்து, வேறு வழி இல்லை. இதனால் தாரளமாக குதியுங்கள் நாங்கள் பிடித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.

இந்த நிலையில் ஜன்னல் அருகே நின்று கொண்டிருந்த அவர் தனது மனைவி மற்றும் மகளை வெளியில் தூக்கி எறிந்தார். அதன் பின் அவரும் குதித்தார்.

இச்சம்பவத்தால் கீழே இருந்த மக்கள் அவர்களை லாவகமாக பிடித்து அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பாடமால் காப்பாற்றினர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கல்லூரி வளாகத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

புதுடெல்லியில் உள்ள ஐஐடி வளாகத்தில் மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மத்தியப்பிரதேசத்தை சேர்ந்தவர் மஞ்சுளா தேவக் (28), இவர் புதுடெல்லியில் உள்ள ஐஐடி கல்லூரியில் நீர்வளங்கள் குறித்த ஆராய்ச்சிப் படிப்பை படித்து வந்தார். மஞ்சுளாவின் கணவர் மற்றும் பெற்றோர்கள் மத்தியப்பிரதேசத்தில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு 8 மணி அளவில் ஐஐடி-யின் நாளந்தா வளாகத்தில் உள்ள விடுதியில், மஞ்சுளா தனது அறையில் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார்.

இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கழிவறையில் நிர்வாணமாக கிடந்த ஊழியர்!!

தமிழ்நாட்டில் இன்ஃபோசிஸ் ஊழியர் ஒருவர் கழிவறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரத்தை சேர்ந்த இளையராஜா(வயது 31) என்பவர் செங்கல்பட்டில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், நேற்றிரவு கழிவறையில் இளையராஜா நிர்வாணமாக இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த கூறி சக ஊழியர்கள் சடலத்தை செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து இளையராஜா குடும்பத்துக்கு தகவல் தரப்பட, நேரில் வந்த உறவினர்கள் இளையராஜாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாககூறி மறியல் போராட்டம் நடத்தினர்.

பொலிசார் சமாதானப்படுத்தியதை அடுத்து மறியலை கைவிட்டனர், இருப்பினும் மர்மம் விலகும் வரை சடலத்தை வாங்கமாட்டோம் என திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

வாய்பேச முடியாத இளைஞனுக்கு திருப்பதி கோவிலில் பேச்சு வந்த அதிசயம்!!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதியை சேர்ந்த ஏழுமலையான் சந்நிதியில் 18 வயது ஊமை இளைஞருக்கு பேச்சு வந்த அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்தவர் பிரதிமா. இவர் தன் கணவருடன் பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் வசித்து வருகிறார். இவர்களுக்கு தீபக் என்ற மகன் உள்ளார். ஆனால் தீபக் பிறக்கும் போதே ஊமையாக பிறந்துள்ளார்.

இதனால் அவருக்கு பேச்சு வர வேண்டும் என்பதற்காக, பெற்றோர்கள் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்து வந்தனர்.

அப்போது அதில் ஒருபகுதியாக, தீபக் 4-வயதாக இருந்தபோது,பேச்சு கிடைக்க வேண்டும் என்று, திருப்பதி ஏழுமலையானை அவர்கள் வேண்டிக்கொண்டார்.

இந்நிலையில், தீபக்கின் 15-வயது முதலாக, அவருக்கு பேச்சு வரவேண்டி பலவித பயிற்சிகளை பிரதிமா அளித்து வந்தார். தற்போது அவருக்கு 18-வயதாகும் நிலையில், அண்மையில், திருப்பதிக்கு பிரதிமா குடும்பத்தினர் சென்றுள்ளனர்.

அங்கு, கோயிலுக்குள் சென்று, ஏழுமலையானை தரிசித்த அவர்கள், பின்னர் கோயிலில் வழங்கப்படும் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

அப்போது, கோவிந்தா கோவிந்தா என, பக்தர்கள் கோஷமிட்டு வந்ததைப் பார்த்த தீபக், திடீரென தானும், கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டுள்ளார்.

இதைக் கண்டதும், பிரதிமா மற்றும் அவரது கணவரும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். இதைத் தொடர்ந்து, தீபக் மழலை மொழியில் பேசத் தொடங்கியிருக்கிறார்.

பிறவி ஊமைக்கு, திடீரென பேச்சு வந்த சம்பவம் திருமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காற்றின் வேகம் அதிகரிக்கும் : மக்களுக்கு எச்சரிக்கை!!

இன்று காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதால், கரையோரப் பிரேதசங்களில் வாழும் மக்களும் மீனவர்களும், அவதானத்துடன் செயற்படுமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தொடை ஊடாக பொத்துவில் வரையும் மட்டக்களப்பு தொடக்கம் திருகோணமலை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரப் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என, திணைக்களம் தெரிவித்துள்ளது.

அ​தேபோல், நாட்டின் ஏனைய கரையோர பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வரை வீசக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.