வேகமாக பயணித்த பேருந்தில் இருந்து உறங்கிய நிலையில் கீழே இறங்கிய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த இளைஞர் லக்கல வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார்.
பேருந்தில் அமர்ந்து பயணித்து கொண்டிருந்த இளைஞர் கனவு கண்டவாறு நடந்து சென்று திடீரென பேருந்தில் இருந்து கீழே விழுந்துள்ளார் என வைத்தியசாலைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அம்பாறையில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த பேருந்தில் இந்த இளைஞர் பயணித்துள்ளார் எனவும் மேலதிக தகவல் பெற்று கொள்ள முடியாத நிலைமையில் அவர் உள்ளார் எனவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உடம்பில் ஏற்பட்டுள்ள கடுமையான காயங்கள் காரணமாக நினைவற்ற நிலையில் இந்த இளைஞர் உள்ளார் எனவும், அவர் கிட்டத்தட்ட 33 வயதுடையவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
திடீரென ஏற்பட்ட இந்த விபத்தினால் குறித்த இளைஞர் அதிர்ச்சியடைந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இவர் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை என வைத்தியசாலை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று மாதங்களுக்கான டெங்கு ஒழிப்புத் திட்டம் நாடளாவிய ரீதியில் இன்று (01) ஆரம்பமாகவுள்ளது.
தினமும் ஒரு மணித்தியாலத்தை ஒதுக்கி டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்களை பரிசோதிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் டொக்டர் ப்ரஷிலா சமரவீர தெரிவித்தார்.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணி கூட்டத்தின் போது ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பணிப்புரைக்கு அமைவாக இன்றிலிருந்து மூன்று மாதங்களுக்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 53,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்களில் 150 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையிலிருந்து புகலிடக் கோரிக்கையாளராகச் சென்று நியூசிலாந்தில் சாதனை நிலைநாட்டி வரும் இலங்கையர் தொடர்பில் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கந்தசுவாமி நல்லதம்பி என்ற இலங்கையரே இவ்வாறு நியூசிலாந்தில் நாளுக்கு நாள் சாதனையை நிலைநாட்டி அனைவராலும் ஈர்க்கப்பட்டு வருகின்றார்.
2013ஆம் ஆண்டு குறித்த இலங்கையர் புகலிடக் கோரிக்கையாளராக நியூசிலாந்து சென்றுள்ளார்.
நியூசிலாந்து சென்ற அவர், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாட்டு சமையல்களை சமைத்து, அசத்தி சாதனை நிலைநாட்டி வருகின்றார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிரியா, மியன்மார், ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, புருண்டி, கம்போடியா மற்றும் போலந்து உட்பட 12 நாடுகளின் பழங்குடி சமையல்களை சமைத்தும் இந்த இலங்கையர் அசத்தி வருகின்றார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்வேறு வகையான சமையல்களை சமைத்து அசத்தி வருவதால் குறித்த இலங்கையர், செஞ்சிலுவைச் சங்கத்திலும் உறுப்பினராக உள்ளார்.
தாய்லாந்தில் உள்ள அகதிகள் முகாமில் 6 வருடங்கள் வாழ்ந்து வந்த கந்தசுவாமி நல்லதம்பி,ஆங்கில மொழி கற்பதில் பல போராட்டங்களை சந்தித்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர், 2013ஆம் ஆண்டு கந்தசுவாமி நல்லதம்பி,நியூசிலாந்திற்கு புகலிடக் கோரிக்கையாளராக சென்றுள்ளார். இது தொடர்பில் குறித்த இலங்கையர் கருத்து தெரிவிக்கையில்,
”என்னுடைய நாட்டில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்றது. அது எங்களுக்கு ஒரு பிரச்சினையாகவே இருந்து வந்தது. எனது தாய் நாட்டிலும் நான் சமையற்காரராக தான் இருந்தேன்.
உணவு மூலம் மக்களை திருப்தி படுத்த நான் விரும்புவேன். ஆனால் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக என்னால் என் தொழிலை திருப்திகரமாக செய்ய முடியவில்லை. இருப்பினும் இங்கு வந்து என்னுடைய தொழிலை செய்வதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
நியூசிலாந்தின் Stokes Valley பகுதியில் சமைக்கும் நான் ரொட்டி, தோசை போன்ற பாரம்பரிய உணவுகளை சமைத்து வருகின்றேன்.
எனது மனைவி, ஜியோகிலத்துடன் எனது வாழ்க்கையை கழித்து வருகின்றேன். அவர் எனக்கு சமைப்பதற்கு உதவி செய்து வருவார். விருஷானி 12 வயது ,ஷிபானிகா 5 வயது பிள்ளைகள் இரண்டு பேர் உள்ளனர்”என்றும் கந்தசுவாமி நல்லதம்பி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த இலங்கையர், நியூசிலாந்தில் தனது வாழ்க்கையை சந்தோசமாக அனுபவித்து வருகின்றார்.
இலங்கையின் கலாச்சார மற்றும் கலை அடையாளங்கள் அடங்கிய அருங்காட்சியகம் ஒன்று அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த 18 வயதான ஜுலியா விஜேசிங்க என்ற யுவதியே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்காவில் பிறந்த ஜுலியா விஜேசிங்க, நியூயோர்க் நகரில் வசித்து வருகிறார். அவர் இலங்கையின் கலாச்சாரங்கள் தொடர்பில் அதிக விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜுலியா விஜேசிங்கவின் தந்தை நியூயோர்க் நகரில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது இலங்கை உணவக உரிமையாளராகும். அவர் கடந்த 30 வருடங்களாக அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றார்.
பௌத்த கலாச்சாரம் தொடர்பில் புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் பலவற்றை இந்த அருங்காட்சியகத்தில் பார்வையிட முடியும். உலகம் முழுவதும் வாழும் பலர் அருங்காட்சியகத்தை பார்வையிடுவதாக தினந்தோறும் வருகை தருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது பெற்றோரின் உதவியுடன் பல வருடங்களாக அருங்காட்சியகத்திற்கு தேவையான பொருட்களை ஜுலியா சேகரித்துள்ளார்.
சர்வ மத ஆசியை பெற்றுக் கொண்டு அருங்காட்சியகத்தை திறந்து வைக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
சம்பூர் கடற்பரப்பில் திமிங்கிலங்கள் கூட்டங்கூட்டமாக இன்று காலை கரையொதுங்கியுள்ளன.
சுமார் 10 தொடக்கம் 11 அடி நீளமான 40 திமிங்கிலங்கள் கரையொதுங்கின. நேற்று மாலை கடற்படையினரும் மீனவர்களும் இணைந்து திமிங்கிலங்களை மீண்டும் ஆழ்கடலுக்குள் விட்டுள்ளனர்.
காலநிலை மாற்றம் காரணமாக இந்த திமிங்கிலங்கள் கரையொதுங்கி இருக்கலாம் என சம்பூர் கடற்றொழில் பரிசோதகர் மொகமட் ரிஸ்வி தெரிவித்தார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து நான்கு கைதிகள் தப்பியோடிய சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை பொறுப்பதிகாரி உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மூவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
சிறை அதிகாரி, சார்ஜன் மற்றும் கட்டுப்பாட்டாளர் ஆகியோர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் இடைக்கால அறிக்கையின் பிரகாரமே இவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
திருட்டுச் சம்பவங்கள் சிலவற்றுடனும், கொலை சம்பவம் தொடர்பான வழக்குடனும் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் சிறைச்சாலையில் இருந்து தப்பியோடியமை குறிப்பிடத்தக்கது.
மலேசியன் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவர் குண்டுப் புரளி கிளப்பியதுடன் விமானியின் அறைக்குள் நுழைய முயன்றதால் விமானம் அவசரமாக மெல்பேர்ன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
மெல்பேர்னில் இருந்து கோலாலம்பூர் சென்று கொண்டிருந்த மலேசியன் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த இலங்கையர் ஒருவர் தன்னிடம், குண்டு இருப்பதாக கூறி, விமானியின் அறைக்குள் நுழைய முயன்றார்.
இதனால், விமானி மெல்பேர்ன் விமான நிலையத்துக்கே திருப்பினார். நேற்றிரவு 11.40 மணியளவில் இந்த விமானம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மெல்பேர்ன் விமான நிலையத்தில் மீண்டும் தரையிறக்கப்பட்டது.
இதையடுத்து. குண்டுப் புரளியைக் கிளப்பிய இலங்கையர் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.மின்கலப் பொதி ஒன்றையே அவர் குண்டு என்று கூறி அதிகாரிகளை ஏமாற்றியுள்ளார்.
இது விமானக் கடத்தல் அல்ல என்றும் பயணி ஒருவர் விமானியின் அறைக்குள் நுழைந்து தொந்தரவு செய்ய முயன்றதால் தான் விமானம் தரையிறக்கப்பட்டதாகவும், மலேசிய போக்குவரத்து அமைச்சர் அப்துல் அசீஸ் பின் கப்ராவி தெரிவித்தார்.
ஆயுதங்களுடன் விமானத்துக்குள் நுழைந்த பாதுகாப்பு அதிகாரிகள், இலங்கையரை கைவிலங்கிட்டு பிடித்துச் சென்றனர்.
இந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவர் கூறுகையில், கைது செய்யப்பட்ட நபர், தன்னிடம் குண்டு இருப்பதாகவும் விமானத்தை வெடிக்க வைக்கப் பேகாவதாகவும் உரத்த குரலில கத்தியதாக குறிப்பிட்டார்.
அவர் மனநிலை பாதித்தவர் போல நடந்து கொண்டார். திடீரென உணர்ச்சி வசப்பட்டார். ஓடினார். விமானத்தின் பின்பக்கத்துக்கு ஓடினார். அவரை எதிர்கொள்வதை விட வேறெதையும் செய்ய முடியவில்லை என்று அந்தப் பயணி கூறியுள்ளார்.
இந்தச் சம்பவத்தினால் மெல்பேர்ன் விமான நிலையத்தில் 15 நிமிடங்கள் வரை விமானங்கள் தரையிறங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது.இந்தச் சம்பவம் தொடர்பாக அவுஸ்ரேலிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பியன் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இருந்து இலங்கை அணியின் நட்சத்திர வீரர் அஞ்சலோ மத்தியூஸ் காயம் காரணமாக விலகலாம் என கூறப்படுகின்றது.
இங்கிலாந்தில் இன்று முதல் சம்பியன் கிண்ணத் தொடர் நடைபெற உள்ளது. இதற்காக எட்டு அணிகள் பங்கேற்கவுள்ளன. இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும், பங்களாதேஷ் அணியும் மோதுகின்றன.
இந்நிலையில் இந்தத் தொடரின் பி பிரிவில் பங்கு பற்றியுள்ள இலங்கை அணி எதிர்வரும் 3ம் திகதி தென்னாபிரிக்க அணியுடன் தனது முதல் போட்டியை எதிர்கௌ்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்தப் போட்டியில் மத்தியூஸ் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று காலை நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில், சுமார் 80 பேர் கொல்லப்பட்டனர். 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜன்பாக் சதுக்கத்தில் உள்ள ஜெர்மனி தூதரகம் அருகே இந்த குண்டுவெடிப்பு நடந்தது.
அதில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் பொதுமக்கள்.
குண்டுவெடிப்பில் சிக்கியவர்கள் அங்கிருந்து தூக்கி எறியப்பட்டார்கள். சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு காரணமாக, அருகில் உள்ள கட்டடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் கதவுகள் சிதறின.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், சமீப காலமாக நடக்கும் தாக்குதல்களின் பின்னணியில் தாலிபன் மற்றும் ஐஎஸ் அமைப்புக்கள் உள்ளன.
உள்ளூர் நேரப்படி, காலை 8.25 மணிக்கு இந்தத் தாக்குதல் நடந்தது. ஏராளமான கார்கள் தீயில் கருகிவிட்டன.
ஜெர்மன் தூதரகத்தை ஒட்டி இந்தத் தாக்குதல் நடந்ததாக உள்ளூர் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஆனால். இலக்கு யார் என்பது தெரியவில்லை என அவர் தெரிவித்தார்.
அங்கு அதிபர் மாளிகை, மற்றும் இந்திய, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ளன. லாரியிலோ அல்லது தண்ணீர் டாங்கிலோ குண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
ஆனால், அவ்வளவு பாதுகாப்பு மிக்க பகுதியில் எப்படி தாக்குதல் நடந்திருக்கலாம் என்ற கேள்வி எழக்கூடும். 10 அடி உயரத்துக்கு, குண்டுவெடிப்பைத் தாங்கும் சக்தி வாய்ந்த சுவர்கள் அமைக்கப்பட்ட அந்தப் பகுதி தலைநகரில் மிகவும் பாதுகாப்பான பகுதியாகக் கருதப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் யார்?
பதற்றத்துடன் உறவினர்கள் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என சுகாதாரத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
`இன்னும் காயமடைந்தவர்களையும், உயிரிழந்தோரின் சடலங்களையும் கொண்டுவந்தவாறு இருக்கிறார்கள்´ என பொலிஸ் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் கவூஸி தெரிவித்தார்.
இந்திய தூதரக ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களில் சிலர் ஒரு மொபைல் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அது உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் டோலோ செய்தி முகமை தெரிவித்துள்ளது. காபூலில் சமீப மாதங்களில், அடிக்கடி பல இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிரவரம் மோசமடைந்து வருகின்றன என்பதையே இது காட்டுகிறது. இந்த மாதத் துவக்கத்தில், அமெரிக்கத் தூதரகத்தைக் கடந்து சென்றபோது, நேடோ படையணி மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். இதற்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றது.
மஜால்-இ ஷெரீப் என்ற வடக்கு நகரில் ராணுவ பயிற்சி வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர்.
பிரென்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தரப்படுத்தலில் 50வது இடத்தில் உள்ள சுலோவாக்கிய வீரர் மார்ட்டின் க்லிஷன், தரப்படுத்தலில் 285வது இடத்தில் உள்ள பிரன்ச் வீரர் லவுரன்ட் லொக்கோலியுடன் மோதினர்.
3 மணித்தியாலம் 39 நிமிடங்களாக மிகவும் விறுவிறுப்பாகச் சென்ற இந்த போட்டியில் க்லிஷன் 5-2 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.
முதல் இரண்டு சுற்றுகளை 7-6 மற்றும் 6-4 என கைப்பற்றிய க்லிஷன், அடுத்த இரண்டு சுற்றுகளை 4-6 மற்றும் 0-6 என தோல்வியடைந்தார்.
எனினும் இறுதிச் சுற்றில் சிறப்பாக செயற்பட்ட க்லிஷன் 6-4 என வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு உலகின் முதற்தர வீரரான அண்டி முரேவுடன் மோதும் வாய்ப்பை பெற்றார்.
இந்நிலையில் போட்டி நிறைவடைந்தவுடன் எதிர்த்தாடிய லவுரன்ட் லொக்கோலியுடன் கை குலுக்குவதற்கு க்லிஷன் கை நீட்டியபோது லவுரன்ட் லொக்கோலி அநாகரிகமான முறையில் நடந்துக்கொண்டதுடன், கை குலுக்குவதற்கும் மறுத்தார்.
இதனை பார்த்த ரசிகர்களும் சற்று அதிர்ச்சியடைந்தனர். எனினும் நிதானமாக இருந்த க்லிஷன் நடுவர்களிடம் கை குலுக்கிவிட்டுச் சென்றார்.
விளையாட்டு வீரரான லவுரன்ட் லொக்கோலியின் இந்த செயற்பாட்டினை விமர்சகர்கள் கண்டித்து வருவதுடன், இது ஒரு அநாகரிகமான செயல் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சவூதி அரேபியாவில், தடுத்து வைக்கப்பட்ருந்த இலங்கை பணிப் பெண் இன்றைய தினம் நாடு திரும்பியுள்ளார்.
தம்புள்ளை பகுதியிலிருந்து பணிப் பெண்ணாகச் சென்ற இந்திரகாந்தி, பலவந்தமாக முதலாளியால் தடுத்து வைக்கபட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே,குறித்த பெண் இன்று காலை நாடு திரும்பியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,சவூதி தாரீஹா பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையில்,
குறித்த பெண் இலங்கைக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு பொய்யான தகவலை கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சவூதி அரசுக்கோ அல்லது சவூதி மக்களுக்கோ எதிராக பொய்யான கருத்துக்களை எவராவது பரப்பினால் அது குற்றமாக கருதி தண்டிக்கப்படுவார்கள் என இலங்கை தூதரகத்திற்கு சவூதி பொலிஸார் அறிவித்துள்ளனர்.
5 முதல் 20 வருடம் வரையில் சிறைத்தண்டனை அல்லது 10 மில்லியன் சவூதி ரியால் அபராத தொகையாக விதிக்கப்படும் எனவும் சவூதி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும்,குறித்த இலங்கைப் பெண், 2 வருட ஒப்பந்தத்தில் 2015ஆம் ஆண்டு சவூதி அரேபியாவிற்கு பணிப் பெண்ணாகச் சென்றுள்ளார். அவரின் ஒப்பந்த காலம் இந்த வருடம் மார்ச் மாதத்துடன் நிறைவடைந்துள்ளது.
ஆனால், அவரது முதலாளி 2 மாதங்களுக்கு அதிகமாக பல அழுத்தங்கள் கொடுத்து குறித்த பெண்ணை தடுத்து வைத்துள்ளார் என முன்னதாக செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
போலி வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களை தாயாரிக்கும் இடம் ஒன்றினை சுற்றி வலைத்த பொலிஸார் 56 போலி சாரதி அனுமதிப்பத்திரங்களுடன் 6 சந்தேக நபர்கள் உள்ளிட்ட திட்டமிட்ட குழு ஒன்றுனை கைது செய்துள்ளனர்.
திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் சிறப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைவாக வேரஹெர, மருதானை பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்ப்ட்டுள்ளனர்.
இதன் போது போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து வந்த மருதானை – தேவனம் பியதிஸ்ஸ பகுதியில் உள்ள வீடொன்றும் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு அது தொடர்பில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதுடன் மோட்டார் வாகன திணைக்களத்தினுள் உள்ள சில அதிகாரிகளின் ஒத்துழைப்புடனேயே இந்த சட்ட விரோத நடவடிக்கை கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளமையும், அதனூடாக இதுவரை ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இவ்வாறு போலி சாரதி அனுமதிப் பத்திரம் விநியோகிக்கப்ப்ட்டுள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந் நிலையில் இது தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தியுள்ள திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவினர், போலியாக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் பட்டியல் அடங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஹார்ட் டிஸ்க் எனப்படும் வன் தட்டு ஒன்றினை மீட்டுள்ளதுடன் அதிலி இருந்து தகவல்களைப் பெற்று போலி சாரதி அனுமதிப் பத்திரம் வைத்திருப்போருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
இதனைவிட நாளை முதலாம் திகதி மோட்டார் வாகன திணைக்களத்துக்கு செல்லும் சிறப்பு பொலிஸ் குழு அங்கு, இந்த சட்ட விரோத கும்பலுடன் தொடர்பினைப் பேணிய அதிகாரிகள் தொடர்பில் விசாரணை நடத்துவது குறித்தும் ஆராயவுள்ளனர்.
தி.நகரில் சென்னை சில்க்ஸ் துணிக்கடை கடந்த 11 மணிநேரமாக எரிந்து கொண்டிருக்கிறது.
தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வரும் நிலையில் கட்டிடமே இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஜெனரேட்டரில் ஏற்பட்ட மின்கசிவே காரணம் என தெரியவந்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட பகுதியை பார்வையிட்ட பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டியில், தீ விபத்தால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை, தீயை அணைக்க 50 லொறிகளில் தண்ணீர் தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜெனரேட்டரில் ஏற்பட்ட மின்கசிவே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது, மின்கசிவோடு அருகில் இருந்த டீசல் கேன்களும் வெடித்ததால் தீ வேகமாக பரவியதும் தெரியவந்துள்ளது.
வரும் யூன் 05 ஆம் திகதி திங்கட்கிழமை சர்வதேச சுற்றுப்புறச்சூழல் தினத்தை முன்னிட்டு வவுனியா விபுலானந்தாக்கல்லூரியில் சுற்றுப்புறச்சூழல் வாரம் கடந்த 29.05.2017 திங்கள் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு தினமும் ஆசியர்கள் மாணவர்கள் சூழல் தொடர்பான பல்வேறு தலைப்புக்களில் உரையாற்றி வருகின்றனர்.
இன்று புதன்கிழமை (31.05) விசேடமாக சூழல் அபிவிருத்தி அதிகாரசபையில் இருந்து வருகை தந்த சுற்றாடல் உத்தியேதாகத்தர் திருமதி ந.சொரூபி சூழல் முகாமைத்துவமும் அபிவிருத்தியும் பற்றி உரை நிகழ்த்தினார்.
பாடசாலை அதிபர் சு.அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் சூழல் வாசகங்கள் தொடர்பான பதாதைகளுடன் பாடசாலை வளவில் விழிப்புணர்வில் ஈடுபட்டனர்.
‘நாம் சுற்றாடலைக் காப்போம் சுற்றாடல் எம்மைக் காக்கும் ‘ எனும் தொனிப் பொருளில் இந்நிகழ்வு இடம்பெற்றது. பாடசாலை ஆசிரியர்களான திரு.வில்வராஸா, திரு.ஈஸ்வரன், திருமதி வாசுகி ரவிதாஸன் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.
அதேவேளை சுற்றாடல் தொடர்பான கண்காட்சியும் இன்று இடம்பெற்றது. இன்றைய நிகழ்வில் சுற்றாடலுக்குப் பொறுப்பான ஆசிரியர் திருமதி வசந்தி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார் .
இதே வேளை மாணவர்களிடையே சுற்றாடல் தொடர்பான பல்வேறு போட்டிகளும் நடாத்தப்பட்டு யூன் 05 நடைபெறவுள்ள நிகழ்வில் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ஒருவருடம் புனர்வாழ்வு பெற்று வந்த முன்னாள் விடுதலைப் புலிகள் நான்கு பேர் இன்று (31.05.2017) காலை 10.30 மணியளவில் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டனர்.
புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப்பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக, நிலையபயிற்சிப் பொறுப்பாளர் சித்திரகுணதுங்க, சிரேஸ்ட அதிகாரி சமன்பேரேரா, பூந்தோட்ட நிலை பொறுப்பதிகாரி கேணல் ஹேமிடோன், சர்வமதத் தலைவர்கள்.முன்னாள் போரளிகளின் குடும்ப உறுப்பினர்கள், பொலிசார், விமானப்படையினர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இன்று புனர்வாழ் நிலையத்தில் ஒருவருட புனர்வாழ்வு பெற்ற சற்குணசிங்கம் தயாபரன்(வயது 44) – கிளிநொச்சி, விக்னராசா துஷ்யந்தன் (வயது 35) – யாழ்ப்பாணம், முத்துலிங்கம் ஜெயகாந்தன் (வயது 37) – ஒட்டுசுட்டான், அஜித் ரோகண (வயது 48) – பேலியகொட ஆகிய நான்குபேர் தமது குடும்பத்துடன் இணைத்து வைக்கப்பட்டனர்.
வவுனியா மாவட்டத்தை சேர்ந்த விசேட தேவைக்குட்பட்ட மாணவர்கள் விசேடதேவை அல்லாத மாணவர்களுடன் இணையாக மாவட்ட மட்ட நடனப்போட்டிகளில் சாதனை படைத்துள்ளனர்.
இலங்கை சங்கீத நடன மற்றும் பேச்சுக் கழகத்தின் (Srilanka Festivel of Music Dance and Speech Forum) வருடாந்தம் மாவட்ட மற்றும் தேசியளவில் இப் போட்டிகளை நடாத்தி வருகின்றது.
இதனடிப்படையில் இவ் ஆண்டும் அகில இலங்கை மட்ட போட்டிகள் எதிர்வரும் யூன் மாதம் 09, 10 ஆகிய திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது.
இதற்கான போட்டியாளர்களை மாவட்ட ரீதியில் தெரிவு செய்யும் நிகழ்வு நேற்று (30.05) செவ்வாய்க் கிழமை அனுராதபுரம் சென். ஜோசப் கிறிஸ்த்துவ தேவாலயத்தின் கலையரங்கத்தில் நடைபெற்றது.
இதில் 13 நிகழ்வுகளுக்காக பல்வேறு இடங்களில் இருந்து 20 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்றி இருந்தனர். அத்துடன் இதில் வவுனியா சீட் – வலுவூட்டல் வளாகத்தை சேர்ந்த விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களது 2 நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அகில இலங்கை மட்டத்தில் விசேட தேவை அல்லாத மாணவர்களிற்கு இணையாக பங்குபற்றி தமது திறன்களை வெளிப்படுத்தி இருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அதில் மனோகரன் மயூரன் என்கின்ற மாணவர் மேலத்தேய தனி நடனப்போட்டியில் பங்குபற்றி 85 புள்ளிகளைப் பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டதுடன் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளர்.
அத்துடன் மேலைத்தேய கிராமிய குழு நடனப்போட்டியில் சிங்கரவேல் தினேசன், ரஞ்சித்குமார் தக்ஷிலன், மோகன் கஜராஜ், மனோகரன் மயூரன், கொலம்பஸ் அனுசா, கொலம்பஸ் கொலன்டினா ஆகிய ஆறு மாணவர்களும் பங்குபற்றி 85 இற்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்று தங்கப்பதக்கங்களை பெற்றுக்கொண்டதுடன் தேசிய மட்ட போட்டிற்கும் தெரிவாகியுள்ளனர். என்பது விசேட அம்சமாகும்.
இது அவர்களை பெற்ற பெற்றோர்களுக்கும். அவர்கள் கற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்க்கும் ஒரு விடயமாக காணப்படுவதுடன் இது எமது வவுனியா மண்ணிற்கும் பெருமையாகும்.
2000ம் ஆண்டில் விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களது கல்வி உரிமையை நிலைநாட்டுவதற்காக வவுனியா மாவட்டத்தில தேக்கவத்தையில் சீட் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்ட சீட் – வலுவூட்டல் வளாகமானது கேட்டல் பேச்சு சிரமமுடைய மாணவர்கள், கற்றல் சிரமமுடையவர்கள் மற்றும் பல்வேறு விதமான உடல், உள நடத்தை பிறழ்வுகளை உடைய மாணவர்களின் உட்படுத்தலை இலக்காக கொண்டு தனது சேவையினை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது.
இவ்வளாக மாணவர்களின் 02 நிகழ்வுகள் மாவட்ட மட்ட போட்டிகளில் பங்குபற்றி; மாவட்ட மட்டத்தில் முதலிடத்தை பெற்று அகில இலங்கை மட்ட போட்டிகளிற்கு தெரிவாகி உள்ளது இது குறிப்பிடத்தக்க விசேட அம்சமாகும்.
அகில இலங்கை மட்ட வெற்றிகள் விசேட தேவைக்குட்பட்டவர்களின் திறமைகளிற்கான ஒரு அங்கிகாரமாக அமைவதோடு சாதிப்பதற்கு விசேட தேவை ஒரு தடையல்ல என்பதையும் மீள வலியுறுத்தி நிற்கின்றது.