வவுனியா வைரவப்புளியங்குளம் வீதியில் இன்று (23.05.2017) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியாவிலிருந்து குருமன்காடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் மீது வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்திற்கு அருகே குருமன்காட்டிலிருந்து வவுனியா நகரம் நோக்கி பயணித்த கப்ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
ஐ.பி.எல் போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியின் பந்துவீச்சாளர் மலிங்கவின் உரை வீரர்களுக்கு உற்சாகத்தை அளித்தது, வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் நேற்று முன்தினம் நடந்த ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது.
130 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடிய ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களே எடுத்தது.
இதனால் மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் வென்று ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. அத்துடன் ஐ.பி.எல். கோப்பையை மூன்றாவது முறை வென்று சாதனை படைத்துள்ளது.
அந்த அணிக்கு ஐ.பி.எல். கோப்பையுடன், 15 கோடி ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், வெற்றிக் களிப்பில் பேசிய சச்சின், ‘ஆட்டத்தின் முதல் பாதி எங்களுக்கு சாதகமாக இல்லை. போட்டியின் இடைவெளியின் போது மலிங்கா அருமையான ஒரு உரையை வீரர்களிடம் நிகழ்த்தினார். அவர் பேசிய பிறகு ஆட்டத்தை வெற்றி பெற முடியும் என்ற நம்பினோம்’ என மலிங்கவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த யாழ் தேவி ரயிலில் பாய்ந்து மாணவன் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனுராதபுரத்திலுள்ள பிரபல பாடசாலையின் மாணவ தலைவர் ஒருவரே இன்று தற்கொலை செய்துள்ளார்.
இம்முறை வணிக பிரிவில் உயர்தரம் பரீட்சை எழுதவிருந்த பிஷான் ஜயவர்தன என்ற 18 வயது இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். அனுராதரபுரம் புபுது மாவத்தையில் வசிக்கும் மாணவரே தற்கொலை செய்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த மாணவரின் சடலம் அதே ரயிலில், ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.அந்த இடத்திற்கு பாடசாலை அதிபர் உட்பட பல ஆசிரியர்கள் மற்றும் அனுராதபுரம் பொலிஸ் தலைமையக அதிகாரிகள் வருகை தந்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்வதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பங்கு பரிமாற்றத்தில் இறக்குமதியாளர்களிடம் காணப்படுகின்ற டொலர் தேவையின் அதிகரிப்பே இந்த நிலைமைக்கு காரணம் என வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் கையிருப்புகளை அதிகரிக்கும் நோக்கில் டொலரை கொள்வனவு செய்ய மத்திய வங்கி முன்வந்துள்ளது. இதன்காரணமாக ரூபாயின் பெறுமதி பொதுவான நிலைக்கு வந்துள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எப்படியிருப்பினும் நேற்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை விலை 154.54 ரூபாயாக பதிவாகியுள்ளது.
தூக்கம் இல்லாவிட்டால் உடல் நலக்குறைவு ஏற்படும். வழக்கத்தை விட குறைந்த நேரம் தூங்கினால் உடல் மட்டுமின்றி முக கவர்ச்சியும், வசீகரமும் குறையும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உடல் ஆரோக்கியத்தில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தூக்கம் இல்லாவிடில் உடல் நலக்குறைவு ஏற்படும். எனவே தூக்கத்திற்காக பலர் படாதபாடு படுகின்றனர். அதற்காக மருந்து மாத்திரை சாப்பிடுகின்றனர்.
இந்த நிலையில் வழக்கத்தை விட குறைந்த நேரம் தூங்கினால் உடல் மட்டுமின்றி முக கவர்ச்சியும், வசீகரமும் குறையும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சுவீடனின் கரோலின்சா நிறுவனம் மற்றும் நியூயார்க் பலகலைக்கழக நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். 25 பேரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் 7½ மணி நேரம் அயர்ந்து தூங்கும்படி வலியுறுத்தினர். அதன் பின்னர் முக அழகை போட்டோ எடுத்தனர்.
அதே போன்று 4¼ மணி நேரம் தூங்க வைத்து போட்டோ எடுக்கப்பட்டது. அவற்றில் குறைந்த நேரம் தூங்கிய போட்டோவில் முகம் பொலிவிழந்து கவர்ச்சி இன்றி காணப்பட்டது.
இதன் மூலம் முகம் கவர்ச்சியுடன் திகழ அதிக நேரம் தூங்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
உலகம் முழுவதும் சுமார் 2 பில்லியன் மக்கள் பயன்படுத்தும் சமூக வலைதளமான பேஸ்புக் தற்போது மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.
பேஸ்புக்கின் பதிவுகளை முறைப்படுத்தும் ரகசிய விதிமுறைகளை புலனாய்வு செய்துள்ள தி கார்டியன் பத்திரிக்கை, பேஸ்புக்கின் பல சர்ச்சைக்குரிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
வன்முறை, வெறுப்புப் பேச்சு, தீவிரவாதம், ஆபாச படங்கள், இனவெறி, தனக்குத்தானே தீங்கு செய்தல் போன்றவை பேஸ்புக்கால் தடை செய்யப்பட்டுள்ளது.
எனினும், விளையாட்டு , சூதாட்டம் மற்றும் நரமாமிசம் தொடர்பான பதிவுகளில் கூட எவற்றை வெளியிடலாம் வெளியிடக் கூடாது என்பதில் பல வழிகாட்டு நெறிமுறைகளை பேஸ்புக் வைத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அரசியல் அழுத்தம் காரணமாகவே இந்த விதிமுறைகளும், வழிகாட்டு நெறிமுறைகளும் உருவாக்கப்பட்டுள்ளது.
வெறும் 10 வினாடியில் விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்து ஒருவர் இடும் பதிவை அனுமதிக்கலாமா, வேண்டாமா என்பதை போஸ்புக்கால் நிர்ணயிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பேஸ்புக்கில் ஒரு வாரத்தில் சுமார் 6.5 மில்லியன் பொய்யான கணக்குகள் உருவாக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் வளர்ந்து கொண்டே இருப்பதால், பேஸ்புக் பதிவுகளை தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியாவில் வாழும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஜோடிக்கு பிரம்மாண்டமான முறையில் திருமணம் அரங்கேறியுள்ளது.
சிட்னியில் வசித்து வருபவர் Divya Dhingra. இவருக்கும் இந்தியாவில் நிதித்துறையில் வேலை பார்க்கும் Gurjab Sigh Kohli என்னும் நபருக்கும் நாடே திரும்பி பார்க்கும் வகையில் அவுஸ்திரேலியாவில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்த Rosehill கார்டனுக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய Divya மற்றும் Gurjab தம்பதிகளுக்கு வாண வேடிக்கைகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதே போல எல்லோரும் கேக்-ஐ சிறிய கத்தியால் தானே வெட்டுவார்கள். ஆனால் இந்த தம்பதி 2 மீற்றர் உயரத்தில் செய்யப்பட்ட பிரம்மாண்ட கேக்கை வாளை கொண்டு வெட்டினார்கள்.
திருமண பிரம்மாண்டம் இதோடு நிற்கவில்லை. பாலிவுட் சினிமா பாணியில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகள், பிரேசில் நடன கலைஞர்களின் நடனம் என கலை கட்டியது.
இந்தியாவின் டெல்லிக்கும், அவுஸ்திரேலியாவுக்கும் அடிக்கடி பறக்கும் இந்த தம்பதிகள் இதுவரை கடந்த 6 மாதத்தில் 5 முறை வித்தியாசமான முறையில் திருமண நிகழ்வை பிரம்மாண்டமாக நடத்தியுள்ளார்கள்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து 1500 விருந்தினர்கள் வந்திருந்தனர்.
இது குறித்து Divya கூறுகையில், திருமண வரவேற்பு நிகழ்வை சிறப்பாக நடத்த நாங்கள் கடுமையாக உழைத்தோம். எங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எங்கள் மீது காட்டிய அன்பால் நாங்கள் மிகவும் நெகிழ்ந்து போயுள்ளோம் என அவர் கூறியுள்ளார்.
Divya அவுஸ்ரேலியாவில் வளர்ந்தாலும், இந்திய கலாச்சாரத்தை என்றும் மறந்ததில்லை. சீக்கிய மதத்தை சேர்ந்தவரான இவர், இந்திய கலாச்சாரத்தை பின்பற்றுவது எங்களுக்கு மிக முக்கியம் எனவும், எங்களின் அடுத்த சந்ததியினரும் இதை பின்பற்ற வேண்டும் என தாம் விரும்புவதாக கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் பெற்ற தாயே தனது மகளை விட 20-வயது மூத்த நபருக்கு திருமணம் செய்து வைப்பதற்கு சம்மதம் தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள மசூதி ஒன்றில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ஆம் திகதி திருமணம் ஒன்று நடந்துள்ளது.
அதில் திருமணப் பெண்ணாக 14-வயது சிறுமியும், அச்சிறுமியை திருமணம் செய்துகொள்பவர் சிறுமியை விட 20-வயது மூத்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இத்திருமணத்தை அந்த மசூதியில் உள்ள Imam Ibrahim Omerdic(62) என்பவர் நடத்தி வைத்துள்ளார். இந்த திருமணம் அச்சிறுமியின் தாயின் சம்மதத்துடனே நடைபெற்றுள்ளது.
திருமணம் செய்தவர் அச்சிறுமியின் தாயிக்கு $1,480 மதிப்பிலான தங்க நெக்லஸ் கொடுத்துள்ளனர். இத்தகவல் பொலிசாருக்கு தெரியவர உடனடியாக, சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த குற்றத்திற்காக Imam Ibrahim Omerdic-ன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதன் பின் இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்திற்கு சென்றது. நீதிமன்றத்தில் ஆதரமாக Imam Ibrahim Omerdic செய்துவைத்த திருமண வீடியோ ஒப்படைக்கப்பட்டது.
இதனால் இவர் கடந்த நவம்பர் மாதம் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அந்த வீடியோவை பொலிசார் வெளியிட்டுள்ளனர்
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் நடிகர் விஜய் ரசிகர் மன்றத் தலைவராக உள்ளார் பில்லா ஜெகன். திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளராகவும் பில்லா ஜெகன் செயல்பட்டுவருவதாக கூறப்படுகிறது.
பில்லா ஜெகனின் முதல் மனைவியின் மகள் திருநெல்வேலியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துவருகிறார். இந்நிலையில், பில்லா ஜெகனின் மகளுக்கும் மட்டக்கடை பகுதியைச் சேர்ந்த சச்சின் என்ற இளைஞருக்கும் இடையே காதல் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.
இவர்களின் காதல் விவகாரம் பில்லா ஜெகனுக்கு தெரியவந்ததால், சச்சினை அழைத்துப்பேசிய அவர், நல்ல வேலைக்குச் சென்றால் தனது மகளை திருமணம் செய்துவைப்பதாக கூறியுள்ளார்.
இதனால் சச்சின் வெளிநாடுக்கு சென்று வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அவரைத் தொடர்பு கொண்ட பில்லா ஜெகனின் மகள், தனது தந்தை வேறு மாப்பிள்ளை பார்ப்பதாகவும் தன்னை வந்து அழைத்துச் செல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்வதாக கூறியுள்ளார். இந்த விவரங்களை சச்சினின் உறவினர்கள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2016-ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பியுள்ளார் சச்சின். அதைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன் சச்சின் உடன் தனது மகள் நின்று பேசிக்கொண்டிருந்ததை கண்ட பில்லா ஜெகன், தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதன் பின் சச்சின் மீது பில்லா ஜெகன் தன் மகளை காதல் என்ற பெயரில் தொந்தரவு செய்வதாக கூறி பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.
அதன் பின்னர் சச்சினைத் தேடி அவரது வீட்டுக்கு அடியாட்களை அனுப்பியுள்ளார் பில்லா ஜெகன். சச்சின் அங்கு இல்லாததால், அவரை தேடியுள்ளனர் அப்போது தூத்துகுடியில் உள்ள குறித்த இடத்தில் சச்சினை பார்த்துள்ளனர்.
இதையடுத்து சச்சினை கடத்தி அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சச்சினை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த அடியாட்கள் அவரது மர்ம உறுப்பை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
பின்னர் அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் உடலை வீசிச்சென்றுள்ளனர். வேதனையின் தவித்துவரும் சச்சினின் உறவினர்கள் பில்லா ஜெகன் கும்பலிடம் இருந்து தங்களை காக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
நடிகர் தாடி பாலாஜி மீது அவரது மனைவி நித்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நடிகர் தாடி பாலாஜி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு, நித்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு போர்ஷிகா என்ற 6 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது.
தம்பதியினருக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது, இந்நிலையில், நித்யா மாதவரம் பொலிசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
கணவர், தன்னை சாதிப்பெயரை சொல்லி திட்டுவதாகவும், கொடுமைப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
தற்போது மாதவரம் பொலிசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது இவர்கள் இருவரும் சண்டையிட்ட காட்சி ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வயதான காலத்தில் உணவுக்கு கூட மகன்களிடம் முறை வைத்து சாப்பிடுவது மனவேதனை ஏற்படுத்தியதால் தாய் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தை சேர்ந்த பெரிய கருப்பன், பாண்டியம்மாள்(58) தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இவருக்கும் திருமணமாகி தனிக்குடித்தனம் சென்றுவிட்டதால் தம்பதியினர் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர்.
இதற்கிடையில் வயதாகிவிட்டதால் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை, இதனால் ஒரு வாரத்திற்கு பெரிய மகனிடமும், மற்றொரு வாரத்திற்கு இளைய மகனிடமும் சாப்பிட்டு வந்துள்ளார்கள்.
பெற்றெடுத்த பிள்ளைகள் வாரம் ஒரு முறை என முறை வைத்து உணவு கொடுத்து வந்தது, பாண்டியம்மாளுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், நேற்று பாண்டிம்மாளுக்கு பயங்கரமாக பசி எடுத்துள்ளது, இதனால் தனது மூத்த மகன் செல்வம் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவர், வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
உடல் முழுவதும் தீ பரவியதால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துள்ளார்.
கனடாவின் ரிச்மாண்ட் நகரில் மீன்பிடி துறைமுகம் ஒன்று உள்ளது, அங்கிருந்த நீரில் கடல் சிங்கம் ஒன்று நீந்தி கொண்டிருந்தது.
இதை அருகிலிருந்து பார்வையாளர்கள் ரசித்து கொண்டிருந்தனர், சிலர் கடல் சிங்கத்திற்கு உணவுகளை தூக்கி போட்டபடி இருந்தனர்.
அப்போது, திடீரென துறைமுக விளிம்பில் அமர்ந்திருந்த ஒரு சிறுமியின் பின்புறம் ஆடையை பிடித்து கடல் சிங்கம் நீருக்குள் இழுத்தது.
இதையடுத்து அருகிலிருந்த ஒரு நபர் உடனடியாக நீருக்குள் குதித்து சிறுமியை காப்பாற்றினார்.
இந்த சம்பவத்தில் சிறுமிக்கு காயம் ஏற்படவில்லை, இதை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.
இது குறித்து கடல் பாலூட்டி ஆராய்ச்சி பிரிவின் தலைவர் அண்ட்ரு டிரிட்டஸ் கூறுகையில், அந்த வீடியோவை நான் பார்த்தேன். அதில், கடல் சிங்கம் மேல் எந்த தவறுமில்லை.
அதை சுற்றி நின்றிருந்தவர்கள் செய்த தவறால் தான் இது நடந்துள்ளது, அந்த கடல் சிங்கத்துக்கு அங்கிருந்தவர்கள் உணவு அளித்துள்ளார்கள்.
இதையடுத்து அந்த சிறுமியின் உடையை கண்ட அந்த கடல் சிங்கம் அதை உணவு என நினைத்து உள்ளே இழுத்துள்ளது என அவர் கூறியுள்ளார்.
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பில் மீண்டும் மீளாய்வு செய்யவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு தெரிவித்துள்ளது.
அரிசி தொடர்பில் சர்வதேச மற்றும் தேசிய மட்டத்தில் விசேட மதிப்பீடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் செயலாளர் சிந்தக லொகுஹெட்டி தெரிவித்தார்.
இதனூடாக பெற்றுக் கொள்ளப்படும் தகவல்களை அடிப்படையாக வைத்து அரிசிக்காக வழங்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலை தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஆமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர், முற்றிலும் இனிப்பு மிட்டாய் தாள்களினால் ஆடையொன்றை வடிமைத்துள்ளார்.
பென்சில்வேனியா மாநிலத்தில் வசிக்கும் எமிலி சீல்ஹாமருக்கு ஸ்டார்பர்ஸ்ட் மிட்டாய்கள் என்றால் மிகுந்த விருப்பம். கடந்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் மிட்டாய்களைச் சாப்பிட்டு, தாள்களைச் சேமித்து வைத்திருக்கிறார்.
நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, என் கணவர் மலாச்சியை முதல் முறை சந்தித்தேன். எனக்கு ஒரு பெரிய மிட்டாய் பக்கெட்டைப் பரிசளித்தார். என்னால் நம்பவே முடியவில்லை, அவரும் என்னைப் போலவே இந்த மிட்டாய்களின் விசிறி என்பதை அறிந்து ஆனந்தமடைந்தேன்.
எங்கள் இருவருக்குமான மிட்டாய்கள் மீதுள்ள காதலே, எங்களுக்கு மான காதலாக மாற்றம் அடைந்தது. மிட்டாய் களைச் சுற்றியிருக்கும் பல வண்ணக் காகிதங்களைத் தூக்கிப் போட மனமில்லாமல் சேகரிக்க ஆரம்பித்தேன்.
ஐந்தாண்டுகளில் ஒரு பெரிய பை நிறைய சேர்ந்துவிட்டது. இதை வைத்து உடை தயாரிக்க முடிவு செய்தேன். என் குடும்பத்தினரும் நண்பர்களும் காகிதங்களை அழகாக மடித்துக் கொடுத்தனர்.
அவற்றை அழகான உடையாக மாற்றிவிட்டேன். அப்போதுதான் மலாச்சி என்னைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தார்.
எங்கள் திருமண வரவேற்பின் போது எங்களைச் சேர்த்து வைத்த இந்த ஆடையைத்தான் அணிந்துகொண்டேன். எல்லோருக்கும் ஆச்சரியம்!” என்கிறார் எமிலி.
வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் நேற்று (22.05) மாலை 5.30 மணியளவில் கேரள கஞ்சா வைத்திருந்த இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து தனது சொந்த ஊரான மதவாச்சி பஸ்ஸில் பயணித்த இராணுவ வீரரின் கைவசமிருந்த 50 கிராம் 200 மில்லிகிராம் கேரள கஞ்சாவினை வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் வைத்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இராணுவ வீரரை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் யாழ்ப்பாணம் பூரணி இராணுவ நிலையத்தில் பணிபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது.