வவுனியா மகாறம்பைக்குளத்தில் கடையை உடைத்து கொள்ளை : 17 வயது சிறுவன் கைது!!

வவுனியா மகாறம்பைக்குளத்தில் நேற்று (22.05) கடையை உடைத்து திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வவுனியா மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தினை நேற்று (22.05) மதியம் 2.30 மணியளவில் கடையின் பிற்பகுதியின் கதவினையுடைத்து சுமார் 24,000 பெறுமதியான கமரா , 18,000 பெறுமதியான தொலைபேசி, மீள்நிரப்பு அட்டைகள் என்பன களவாடப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் வவுனியா சாந்தசோலையினை சேர்ந்த 17 வயது சிறுவனை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

குறித்த சிறுவனை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரஜினிகாந்த் வீட்டிற்கு தீவிர பொலிஸ் பாதுகாப்பு!!

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் 5 நாட்கள் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். கடந்த 15 ஆம் திகதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி 19 ஆம் திகதி நிறைவடைந்தது.

இந்த சந்திப்பின் போது ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்து பரபரப்பாக பேசினார், அரசியலுக்கு வந்தால் நேர்மையாக இருப்பேன். அரசியலை வைத்து பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை அருகில் சேர்க்க மாட்டேன் என்றும் அவர் கூறினார்.

கடைசி நாள் சந்திப்பின் போது, அரசியல் அமைப்பு (சிஸ்டம்) கெட்டு போய்விட்டதாகவும், போர் வரும் போது பார்த்துக் கொள்வோம் என்றும் ரஜினி பேசினார். இதன் மூலம் தேர்தல் நேரத்தில் அவர் அரசியலில் குதிப்பது உறுதியாகியுள்ளது.

ரஜினியின் இந்த அரசியல் பிரவேசத்திற்கு தமிழ் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

தமிழகத்தை வெளி மாநிலத்தவர்கள் ஆண்டது போதும், இனி நாங்களே எங்களை ஆண்டு கொள்கிறோம், ரஜினி அரசியலுக்கு வர தேவையில்லை என்று அவர்கள் கூறி வருகிறார்கள்.

தமிழர் முன்னேற்ற படை என்ற அமைப்பும் ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த அமைப்பின் நிறுவனர் வீரலட்சுமி தலைமையில் ரஜினியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரது வீட்டுக்கு செல்லும் வழியில் தேனாம்பேட்டை பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வழியாக செல்லும் சந்தேகத்திற்கிடமானவர்களை பிடித்து விசாரித்து வருகிறார்கள். இதன் காரணமாக போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் வீடு இருக்கும் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து மீது கல் வீச்சுத் தாக்குதல்!!

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் நேற்று (22.05) மதியம் 2.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து மீது வவுனியா ஈரப்பெரியகுளம் குருந்துபிட்டிய இராணுவ முகாமிற்கு அருகே மோட்டார் சைக்கிலில் வந்த இருவர் கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் இ.போ.ச பேருந்தின் முன்பகுதியில் சிறிது சேதம் ஏற்பட்டதுடன் உயிர்ச்சேதங்கள் எவையும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு மாற்று பேருந்து ஒழுங்கு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் குறித்த பேருந்து வவுனியா இ.போ.ச சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் குண்டு வெடிப்பு : 19 பேர் உயிரிழப்பு : 50 பேர் இரத்தக்காயங்களுடன்!!

 
பிரித்தானியாவில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியின் போது திடீரென்று குண்டு வெடித்ததால் 19 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவின் Manchester பகுதியில் உள்ள Hunts Bank என்ற இடத்தில் அமைந்துள்ள Manchester Arena என்ற உள்விளையாட்டு அரங்கில் பிரபல பாப் பாடகியான Ariana Grande-ன் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியை காண்பதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு கூடியிருந்தனர். இந்நிகழ்ச்சியின் கடைசி பாடலை Ariana Grande-பாடும் போது, திடீரென்று பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது.

திடீரென்று வெடிசத்தம் கேட்டதால் பதறிய மக்கள் அலறி அடித்து ஓடியுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே சமயத்தில் ஓடியதால், அனைவரும் முட்டி மோதி ஓடியுள்ளனர்.

இதில் ஏராளமானோருக்கு இரத்தக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்து காரணமாக 19 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தை அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் பொதுமக்களை பத்திரமாக மீட்டு அனுப்பி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி ஏராளமான அம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டு, சிகிச்சைக்காக அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இதில் பலர் அழுது கொண்டே அந்த வீதியில் வந்ததும், ஒரு சிலர் இரத்தக்காயங்களுடன் அந்த வீதியில் நடக்க முடியாமல் நடந்து சென்றதும் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த சம்பவத்தில் இரண்டு வெடி சத்தம் கேட்டுள்ளது. அதனால் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அது தொடர்பாக சோதனை மேற்கொண்டு வருவதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் திடீரென்று நடந்த சம்பவத்தில் பொலிசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளதுடன், ஐந்திற்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா மகாறம்பைக்குளத்தில் பட்டப்பகலில் துணிகர திருட்டு!!

வவுனியா மகாறம்பைக்குளத்தில் இன்று (22.05.2017) மதியம் 2.30 மணியளவில் கடையுடைத்து திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தினை இன்று (22.05.2017) மதியம் 2.30 மணியளவில் கடையின் பிற்பகுதியின் கதவினை உடைத்து சுமார் 24000 பெறுமதியான கமரா, 18,000 பெறுமதியான தொலைபேசி , மீள்நிரப்பு அட்டை என்பன களவாடப்பட்டுள்ளது.

மாலை வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் வர்த்தக நிலையத்தினை திறந்த போது வர்த்தக நிலையம் உடைத்து களவாடப்பட்டுள்ளதை அறிந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யானை தாக்கியதில் குடும்பப் பெண் உயிரிழப்பு!!

 
நேற்று (21.05.2017) இரவு மதவாச்சியகுடா, வல்பொல பகுதிக்குள் நுழைந்த யானை வீதியால் நடந்து சென்ற இளம் குடும்ப பெண்ணை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. திருமணம் முடித்து பொலனறுவையில் வசித்து வந்த நிஷாஞ்சல குமாரி (வயது32) தன்னுடைய தாயாரை பார்க்க வேண்டும் என்பதற்காக குடும்பத்துடன் வந்திருந்த போதும் தனது உறவினர்களையும் பார்த்து விட்டு வருவதாக கூறி வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த போது யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

கூக்குரல் சத்தம் கேட்டு ஓடிவந்தவர்கள் உடனடியாக மதவாச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் கூறினர். தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு 11 வயதில் ஒரு பெண்பிள்ளையும் உள்ளார்.

யானை அப் பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று வாழை, தென்னை போன்ற பயிர்களுக்கு சேதம் விளைவித்து அப்பகுதியிலுள்ள காட்டுப்பகுதியினை நோக்கிச் சென்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் நிரந்தர நியமனம் கோரி 19வது நாளாக சுகாதார தொண்டர்கள் போராட்டம்!!

 
நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கடந்த 04.05.2017 பிராந்திய வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு முன்பாக வவுனியா சுகாதாரத் தொண்டர்கள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்புப் போராட்டம் 19வது நாளாக இன்றும் (22.05.2017) தொடர்கின்றது.

வடக்கில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய சுகாதாரத் தொண்டர்களே இக் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்கள், தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லையென குறிப்பிட்டுள்ளனர்.

கஷ்டப் பிரதேசங்களிலும், இக்கட்டான சூழ்நிலைகளிலும் சேவையாற்றிய தமது நியமனம் குறித்து இதற்கு முன்னர் பல போராட்டங்களை முன்னெடுத்திருந்த போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லையென தெரிவிக்கும் சுகாதார தொண்டர்கள், இம்முறை தமக்கு உறுதியான தீர்மானம் வழங்கப்படும் வரை போராட்டம் தொடருமெனவும் எதிர்வரும் 31ம் திகதி வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் சந்திப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

வவுனியாவில் 88ஆவது நாளாக தொடரும் போராட்டம் : தீர்வு எப்போது?

 
வவுனியாவில் கடந்த 88 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா மத்திய அஞ்சல் அலுவலகத்திற்கு அருகே இன்று (22​.05.2017​) 88வது நாளாக தமது சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசரகாலச்சட்டத்தினை நீக்குமாறு கோரி தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரால் வழங்கப்பட்ட உறுதி மொழிக்கு அமைவாக கடந்த மாதம் கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீண்டும் தமது போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இந்த நிலையில் சாதகமான பதில் கிடைக்கும் வரையில் தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

கலாநிதி அப்துல் கலாமை கெளரவப்படுத்திய நாசா!!

சர்வதேச விண்வெளி மையத்தில் கண்டறியப்பட்ட பக்டீரியா வகையை சேர்ந்த புதிய உயிரினத்திற்கு அப்துல் கலாமின் நினைவாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் ஐ.எஸ்.எஸ். என்று அழைக்கப்படும் சர்வதேச விண்வெளி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் ஆய்வு செய்துவருகின்றனர். இந்த மிதக்கும் விண்வெளி மையம் பூமியில் இருந்து 400 கி.மீ. உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் அங்கு புதிய உயிரினம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள், இந்த புதிய உயிரினம், பக்டீரியா வடிவம் போன்றது.

இந்த உயிரினம் பூமியில் காணப்படுவதில்லை, சர்வதேச விண்வெளி நிலையத்தில் மட்டுமே காணப்படுபவை.

இந்த உயிரினத்திற்கு மறைந்த, டொக்டர் அப்துல் கலாமின் பெயரை விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர், அதாவது, சொலிபேசில்லஸ் கலாமி என்று பெயர் வைத்துள்ளனர்.

விண்வெளி அறிவியலில் கலாமின் நிபுணத்துவத்தை நினைவு கூறும் விதமாக இப்பெயர் சூட்டப்பட்டதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

100 ஆவது பிறந்தநாளை புகைப்படமெடுத்து கொண்டாடிய இரட்டைச் சகோதரிகள்!!

 
இரட்டை சகோதரிகள் தமது 100ஆவது பிறந்தநாளை புகைப்படமெடுத்து கொண்டாடிய சம்பவம் பிரேசிலில் பதிவாகியுள்ளது.

பிரஸிலின் கரியாஷியா பகுதியை சேர்ந்த மரியா பிக்னேடன் பான்டின் மற்றும் பவுலினா பிக்னேடன் பான்டின் ஆகிய இரட்டை சகோதரிகள் எதிர்வரும் 24 ஆம் திகதி தமது 100ஆவது அகவையில் காலடி வைக்கவுள்ளனர்.

இந்நிலையில் தமது 100 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கமீலா லீமா என்ற புகைப்பட கலைஞரின் உதவியுடன் பல்வேறு கோணங்களில் புகைப்படங்களை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் குறித்த இரட்டை சகோதரிகள் தமது சிறுவயது பருவ நினைவுகளை மீட்கும் வகையிலான உடைகளை அணிந்து புகைப்படத்திற்கு தோற்றமளித்துள்ளதாக புகைப்படக்கலைஞர் தனது சமூகவலைத்தளத்தினுடாக படங்களை பகிர்ந்துள்ளார்.

அத்தோடு குறித்த இரட்டை சகோதரிகள் தமது 100 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரும் விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்துள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயர் தரத்திற்கு தகுதிப் பெற்ற மாணவி தற்கொலை!!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்டத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம் பெற்றதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த மாணவி பொகவந்தலாவ தர்மகீர்த்தி மத்திய மாகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று வந்ததாகவும் உயர் தரத்திற்கு தகுபெற்றிருந்த நிலையிலேயே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டில் எவரும் இல்லாத போதே குறித்த சிறுமி விஷம் அருந்தியுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

வுpஷம் அருந்திய சிறுமியை சம்பவம் அறிந்தவர்கள் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

17 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளாhர். சிறுமியின் சடலம் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக நாளை நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக பொகவந்தலாவ வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சிறுமியின் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

செல்பியால் பலியான இளம் வைத்தியர்!!

காணாமல் போன 27 வயதுடைய இளம் வைத்தியர் ஒருவரின் சடலம் மாகெலிய பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியிலிருந்து நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியர், செல்பி எடுப்பதற்காக பாறை ஒன்றின் மீது ஏறிய நிலையில் அவர் வழுக்கி நீர்வீழ்ச்சியில் விழுந்துள்ளார் என பதுரலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது நீர்வீழ்ச்சியின் ஆழமான பகுதியில் அந்த வைத்தியர் விழுந்துள்ளார் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னரே வைத்தியரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அகலவத்தை தேசிய கல்வி பயிற்சி நிலையத்தில் தமிழ் மொழி கற்கைநெறியை மேற்கொள்ள வருகை தந்த வைத்தியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத்தொடர்ந்து வைத்தியரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நாகொட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளவத்தை கட்டட சரிவில் பலியான மலையக இளைஞனின் இறுதிக் கிரியைகள்!!

 
வெள்ளவத்தை பகுதியில் ஐந்து மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் பலியான 20 வயது மலையக இளைஞரின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றது.

பத்தனை கிறேகிலி பகுதியைச் சேர்ந்த ராமர் நிரோஷன் என்ற இளைஞரே இந்த விபத்தில் பலியானார். இந்த நிலையில் குறித்த இளைஞரின் இறுதிக் கிரியைகள் அவரது சொந்த ஊரில் இன்றைய தினம் நடைபெற்றது.

கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற இந்த விபத்தில் இது வரையில் 3 பேர் பலியானதுடன் 21 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முப்படையினரின் உதவியுடன் உயிரிழந்தவர்களின் சடலம் நேற்று வரையில் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கட்டடத்தை நிர்மாணித்த கட்டட உரிமையாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நடந்த கோர விபத்து : உயிருக்கு போராடும் பிரித்தானிய யுவதி!!

 
இலங்கையில் இடம்பெற்ற கொடூர விபத்தொன்றில் சிக்கிய பிரித்தானிய பெண்ணொருவர் உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Ivana Tensek என்ற யோகா பயிற்றுவிப்பாளரே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் கால்கள், இடுப்பு மற்றும் கைகளின் எலும்புகள் உடைந்துள்ள நிலையில், யோகா பயிற்றுவிப்பாளர் 12 மணி நேர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தற்போது அவர் இலங்கை மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலதிக சிகிச்சை வழங்குவதற்காக அவரை லண்டன் அழைத்து செல்வதற்கான முயற்சிகளில் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

துரதிர்ஷ்டவசமாக Ivana விபத்துக்கு விபத்தொன்றுக்கு முகம் கொடுத்து விட்டார் என அவரது நெருங்கிய நண்பி Yenabi Talitha-Cumi Araújo தெரிவித்துள்ளார்.

Ivana ஒரு வாரத்திற்குள் பிரித்தானியா செல்ல தயாராக இருந்த போதிலும் இவ்வாறு ஆபத்தான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Ivanaவின் சிகிச்சைக்காக அவரை லண்டன் அழைத்து செல்ல வேண்டும் என்பதற்காக அவரது நண்பி GoFundMe page என்ற பக்கம் ஒன்றை ஆரம்பித்து உதவி கோரியுள்ளார்.

50,000 பவுண்ட்களை பெற்றுக்கொள்ள முயற்சி செய்கின்றோம். அவருக்கு சிறந்த சிகிச்சை வழங்கப்பட்டால் முழுமையாக குணமடைந்து அவர் குடும்பத்தினருடன் இணைய முடியும் என அவரது நண்பி குறித்த பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Ivana வின் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நலன் விரும்பிகள் இதுவரை 15,000 பவுண்ட்களுக்கு அதிகமாக சேகரித்துள்ளார்.

அவரது விபத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் மாத்தறைக்கு அருகிலுள்ள Hangtime Hostel இல் யோகா பயிற்றுவிப்பாளராக பணியாற்றியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா இலுப்பைக்குளம் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில்!!

 
ஆண்டு ஒன்று முதல் சாதரணதரம் வரையுள்ள இப்பாடசாலையில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பௌதீக வளப்பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரியே மாணவர்களும் பெற்றோரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று(22.05.2017) காலை 8 மணிக்கு பாடசாலையின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கல்வி நிலை பாதிக்கப்படுவதாகவும் சாதாரணதரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் ஆசிரிய வளம் இன்றி கற்றல் செயற்பாட்டை முன்னெடுக்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்ததுடன் உலகம் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த நிலையில் தொழில்நுட்பம் தொடர்பான எவ்வித கல்வியும் இன்றி தாம் உள்ளதாகவம் மாணவர்கள் தெரிவித்ததுடன் தமக்கான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தனர்.

இதேவேளை தமது பிள்ளைகளின் கல்வி மிகவும் மோசமாக பாதிக்கப்படுவதாக பெற்றோர் கருத்து தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு செட்டிகுளம் கோட்டக்கல்வி அதிகாரி வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார்.

எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிடாத நிலையில் வட மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து கலந்துரையடியிருந்தார்.

இந் நிலையில் தமக்கான நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்றைய போராட்டத்தினை நிறுத்திக்கொண்டதுடன் நாளை மீண்டும் தமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தனர்.

வவுனியா வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு : நோயாளர்கள் அவதி!!

 
மாலபே தனியார் கல்லூரிக்கு எதிராக வவுனியா வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

இன்று (22.05.2017) காலை 8 மணி தொடக்கம் நாளை காலை 8 மணி வரை 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதன்காரணமாக, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு முழுமையாக இயங்கவில்லை. இதனால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.