அரசியல் நகர்வில் ரஜினியின் முக்கிய உத்தரவு!!

தமிழக அரசியலில் கடந்த ஒரு வருடகாலமாக பரபரப்பிற்கு பஞ்சமில்லை. கடந்த ஓராண்டில் மட்டும் முதலமைச்சர் பதவி ஏற்பு இரண்டு முறை நடந்து முடிந்திருக்கிறது.

இந்நிலையில், முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், அரசியல் சூழ்நிலைகள் மாற, மக்களின் பணிகளை அரசு செய்கிறதா? இல்லை அதிமுகவின் கட்சி அரசியல் நடக்கின்றதா என்று மக்கள் மட்டுமல்ல, அதிகாரிகள், பிரபலங்கள் என்று அனைவரும் குழம்பியிருந்தனர்.

இதற்கிடையில், அதிமுகவின் செயற்பாடுகளை வைத்து, மாநிலத்திற்குள் வேறு ஒரு இலகுவாக உள் நுழையப்பாத்திருந்தது.

எனினும் நேரடியாக தமிழகத்திற்குள் தங்களின் செல்வாக்கு எடுபடாது என்று அறிந்த அக்கட்சி, பிரபலங்களை வைத்து நுழைவதற்கு பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்து பேசியது. அப்படிச் சந்தித்துப் பேசியவர்களில் முக்கியமானவர் தான் நடிகர் ரஜினிகாந்த்.

ஆனால், ரிஜினிகாந்த தன்னுடைய அரசியல் அறிவிப்பு குறித்து அதுவரை எந்தவித கருத்துக்களையும் சொல்லவில்லை. இந்தவாரம் நடந்த ரசிகர்கள் சந்திப்பில் தான் ரஜினி தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து வாய் திறந்திருக்கிறார்.

இந்த ரசிகர்கள் சந்திப்பில் பேசிய ரஜினி, தமிழ் நாட்டில் அரசியல் சூழ்நிலை கெட்டுப்போயிருக்கிறது என்றும், நாட்டின் சிஷ்டமே தவறான முறையில் அமைந்திருக்கிறது என்றும், போர் வரும் போது பார்த்துக் கொள்வோம் என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில் அவர் அரசியலுக்கு வந்துவிட்டார். அவரின் வெளிப்படையான கருத்து இது தான் என்கின்றன ஊடகங்கள். பல்வேறு அரசியல் கட்சிகளும், தலைவர்களும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்துக்களையும் வெளியிட்டுள்ளனர்.

மத்திய அரசாங்கம் ரஜினியை வளைச்சுப் போடவேண்டும் என்பதில் குறியாக இருக்கிறது, ஆனால் ரஜினி அதில் இருந்து கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக இருக்கிறார்.

ஆனால், அவர தனிக் கட்சி ஆரம்பிப்பார் என்றும், கூட்டணிக்குச் செல்லமாட்டார் என்றும் அவரைச் சார்ந்தோர் கருத்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறனர்.

தமிழ் நாட்டில் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் தலைமைத்துவ இடைவெளியை ரஜினிகாந்த் பயன்படுத்திக் கொள்வார் என்கின்றார்கள் விடயமறிந்த தரப்பினர்.

இதற்கிடையில் தான் அவர் ஒரு முக்கியமான முடிவினை எடுத்திருப்பதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த மூன்று நாட்கள் ரசிகர்கள் சந்திப்பின்போது அவர்கள் சொன்ன பல விடயங்களையும் கவனமாக கேட்டுக் கொண்ட ரஜினி, தானும் அவர்களுக்கு பல யோசனைகளையும், சில வேலைகளையும் கொடுத்திருக்கிறார்.

குறிப்பாக தமிழகத்தின் அரசியல், பொருளாதார, சமூக சூழல் குறித்த பல விவரங்களை தொகுத்துத் தருமாறு ரசிகர்களிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தின் முக்கியமான பிரச்சினைகள் என்ன என்பது அதில் முக்கியமான ஒன்று என்று சொல்லப்படுகிறது. பிரச்சினைகள் குறித்த பட்டியல், அதற்கான தீர்வுகள், அதற்கு செய்ய வேண்டியது என்ன என்பது குறித்தும் விரிவான பட்டியல் கேட்டிருக்கிறார்.

இந்த பட்டியல் கைக்குக் கிடைத்தவுடன், தமிழகத்தின் தேவைகள் குறித்த கோரிக்கை மனுவுடன் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்திக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஒரு வேளை கோரிக்கை மனுவுடன் ரஜினி பிரதமரைச் சந்தித்தால், அந்தக் கோரிக்கைகளை மத்திய பாஜக அரசு உடனடியாக நிறைவேற்றுமா இல்லையா என்பதைப் பொறுத்து ரஜினியின் அரசியல் பிரவேசம் அமையலாம் என அவருக்கு நெருக்கமான சிலர் தெரிவித்துள்ளதாக ரஜினியை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், விரைவில் அவரின் தனிக்கட்சிக்கான அறிவிப்பு வரலாம் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது. தான் பச்சைத் தமிழன் என்றும், பெரியார் வழி தான் நடப்பேன் என்றும் அவர் முன்னர் எப்பொழுதும் பேசியதைவிட இப்பொழுது அழுத்தம் திருத்தமாக பேசியிருக்கிறார்.

ரஜினியின் இந்த உத்தரவுகள் அவரின் கைக்கு கிடைத்தவுடன், அவரின் அறிவிப்பு வருவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

பிலியந்தலை துப்பாக்கி சூட்டு சம்பவம் : பெண் ஒருவர் உட்பட மூவர் கைது!!

பிலியந்தலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் மூன்று பேர்கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உதவி செய்தார்கள் என்றசந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரும், இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிலியந்தலை நகரில் கடந்த 9ம் திகதி காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர்மீது இந்தத் துப்பாக்கி தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது காவல்துறை அதிகாரி ஒருவர் பலியானார்.

மேலும், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்திருந்த நிலையில் கொழும்புதேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 11 வயது சிறுமி அண்மையில்உயிரிழந்தார்.

இதேவேளை, உயிரிழந்த சிறுமியின் சகோதரர்கள் இருவர் காயமடைந்த நிலையில்தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பெண்களை காதலில் விழ வைப்பது எப்படி!!

பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சில விஷயங்கள் ஆண்களிடம் பிடிக்கும். ஆண்களின் தலைமுடி, கண்கள், நிறம் என பெண்ணுக்கு பெண் இந்த எதிர்பார்ப்புகள் வேறுபடும்.

தோற்றத்தின் மூலம் பெண்களின் மனதில் இடம் பிடிப்பதை விட உணர்வு ரீதியாக இடம் பிடிப்பது நீண்ட நாள் நீடிக்கும்.
இந்த விஷயத்தில் நீங்கள் நடிக்க முடியாது. நடித்தாலும் மாட்டிக்கொள்வீர்கள்.

பெருந்தன்மை என்பது பணம் மற்றும் பரிசுகள் விஷயத்தில் தாராளமாக இருப்பது இல்லை. ஒட்டுமொத்தமாக அனைத்து விஷயத்திலும் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். உங்களிடம் நெருக்கமானவர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுதல், உங்கள் நேரத்தை செலவிடுதல் போன்றவை இதில் அடங்கும்.

அனைத்து பெண்களுக்கும் தங்களுக்கு ஆதரவு தரும் துணையை மிகவும் பிடிக்கும். அவர்களை யாராவது ஊக்குவித்து கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.

தங்களுக்கு ஆதரவாக இருக்கும் ஆண்களை பிடிப்பது போல, தங்களது சாதனைகளை நினைத்து உற்சாகம் அடையும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். உதாரணமாக அவருக்கு பணி உயர்வு அல்லது பெரிய காரியங்களில் வெற்றியடையும் போது, அதை நீங்களே சாதித்தது போல எண்ணி பெருமை அடைய வேண்டும்.

அந்த பெண்ணுக்கு பிடித்த விளையாட்டு, உணவுகளில் உங்களுக்கு ஆர்வம் இருக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல. அந்த பெண் மிகவும் காதலிக்கும், செய்ய துடிக்கும் ஒரு விஷயத்தில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், எளிதில் உங்களிடம் விழுந்துவிடுவார்கள்.

ஒரு பெண் உங்களிடம் தனது பிரச்சனைகளை சொல்லும் போது, தனக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்லும் போது, கவனிக்காமல் இருப்பது மிகவும் தவறு. அவளது பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லுங்கள். ஆறுதல் சொல்லுங்கள். அந்த பெண்ணுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்.

அந்த பெண்ணிடம் மட்டுமல்லாமல், அனைவருடனும் அன்பாக நடந்து கொள்ளுங்கள். அது அந்த பெண்ணுக்கு நீங்கள் எப்போதும் அவரை அன்பாக பார்த்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையை தரும்.

அவரது சாதனைகள் மற்றும் வெற்றிகளை கொண்டாடுங்கள். மேலும் வெற்றியடைய வாழ்த்துங்கள். அர்ப்ப விஷயமாக நினைத்துவிடாதீர்கள்.

அனைவருக்கும் ஒரு மென்மையாக பக்கம் இருக்கும். அந்த பெண்ணிடம் உங்களது அக்கறையை காட்டுங்கள்

பிரான்ஸில் புலம்பெயர் மாணவிகள் தொடர் சாதனை!!

பிரான்ஸ் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தும் தமிழியல் இளங்கலைமாணிப் (டீ.யு) பட்டப்படிப்பிற்காக நடைபெற்ற நுழைவுத்தேர்வில் சஜீர்த்தனா நேசராசா என்ற புலம்பெயர் மாணவி சாதனை படைத்துள்ளார்.

தேர்வுகள் நேற்று முன்தினம் (20) நடைபெற்றுள்ளதுடன், இணையவழித் தேர்வில் 100 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

வன்னி பெருநிலப்பரப்பைப் பூர்வீகமாகக் கொண்டு போர்ச் சூழல் காரணமாக புலம்பெயர்ந்து வாழ்ந்த சஜீர்த்தனா நேசராசாவின் சாதனை பெருமைக்குரியதாகக் கருதப்படுகின்றது.

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் நடத்தப்படும் பட்டப்படிப்பில, பிரான்சில் பிறந்து தமிழ்ச் சோலைப் பள்ளிகளில் தமிழில் 12 வரை நிறைவு செய்த மாணவர்கள் கல்வி கற்றுவருகின்றனர்.குறித்த தமிழியல் இளங்கலைமாணி பட்டப்படிப்பு கடந்த நான்கு வருடங்களாக நடந்து வருகிறது.
இதேவேளை, புலம்பெயர் மண்ணில் பிறந்த மாணவிகள்தான் தொடர்ந்தும் சாதனை படைத்துவருகின்றனர்.

கடந்த 2016 ஆண்டில் நடைபெற்ற நுழைவுத் தேர்வில் பரமேஸ்வரன் சுசானி , எழுத்துப் பகுதி மற்றும் இணைய வழி வினாக்கள் என இரண்டு பகுதிக்கும் மொத்தமாக 96 புள்ளிகள் பெற்றுள்ளார்.

2015 ஆண்டில் நடைபெற்ற நுழைவுத் தேர்வில் தட்சாயணி தங்கத்துரை இணைய வழித் தேர்வில் 100 புள்ளிகளை பெற்று சாதனை படைத்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பட்டப்படிப்பை முடித்து இரண்டு தொகுதி மாணவர்கள் பட்டம் பெற்று வெளியேறியுள்ளதுடன் தொடர்ந்தும் புலம்பெயர் மண்ணில் பிறந்த மாணவிகள் சாதனைப் படைத்து வருவது பெருமைக்குரியதாகக் கருதப்படுகின்றது.

பிலிப்பைன்ஸில் சிறுவர்கள் அனுபவிக்கும் வேதனை!!

பிலிப்பைன்ஸில் ஒரு சிறுவன் பருவ வயதை அடையும்போது விருத்தசேதன சடங்கு செய்யப்படுகிறது.

வழக்கமாக, அவன் பாரம்பரியங்களைக் கற்பிக்கிற ஒரு பள்ளிக்கு அனுப்பப்படுகிறான், அங்கே அவனுக்கு விருத்தசேதனம் செய்யப்படுகிறது.

குணமாகும்வரை ஒருசில வாரங்களுக்கு மற்றவர்களிடமிருந்து பிரித்து தனியாக வைக்கப்படுகிறான். இந்தச் சமயத்தில் குறிப்பிட்ட சடங்குகளை அவன் பின்பற்ற வேண்டும், ஓர் ஆணாக இருப்பதற்குக் கற்றுக்கொடுக்கப்படுகிறான்.

விருத்தசேதன சடங்கு, பிலிப்பைன்ஸ் நாட்டில் பாரம்பரியமாக பின்பற்றப்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் இளம் வயது சிறுவர்களுக்கு விருத்தசேதனம் செய்து வைப்பது பாரம்பரியமாக நடைபெற்று வரும் ஒரு நிகழ்வு.

விருத்தசேதனம் இஸ்லாமியர்களும் யூதர்களுமே பாரம்பரியமாக செய்து கொள்வது வழக்கம். ஆனால் பிலிப்பைன்ஸ் மக்களால் Tuli என கொண்டாடப்படும் இந்த சிறப்பு விருத்தசேதன சடங்கானது இங்கு பொதுவாக காணப்படுகிறது.

காரணம் இங்கு ரோமன் கத்தோலிக்கர்கள் பெரும்பான்மை சமூகமாக உள்ளனர்.

இந்நிலையில் தலைநகர் மணிலா அருகே அமைந்துள்ள மரிகினா நகரில் பாடசாலை ஒன்றில் இளம் வயது சிறுவர்கள் 300 பேருக்கு கூட்டாக விருத்தசேதனம் மேற்கொண்டுள்ளனர். இந்த நிகழ்வின் போது பாடசாலை வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, வகுப்புகளே மருத்துவ கூடங்களாக மாற்றப்படும்.

பிலிப்பைன்ஸ் நாடு இஸ்லாமியர்கள் வசம் இருந்த காலம் முதற்கொண்டே இந்த விருத்தசேதன நிகழ்வினை பாரம்பரியமாக நிகழ்த்தி வருகின்றனர். தற்போது பெரும்பாண்மை சமூகமாக கிறிஸ்தவர்கள் இருந்த போதும் விருத்தசேதனம் பொதுவானதாக கருதப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பானது வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் , உலகில் 15 வயதுக்கு உட்பட்ட 30-33 விழுக்காடு சிறுவர்களுக்கே விருத்தசேதனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. ஆனால் பிலிப்பைன்ஸ் நாட்டில் மட்டும் இந்த எண்ணிக்கை 93 விழுக்காடு என கணக்காக்கப்பட்டுள்ளது.

இதனால் சிறுவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் இதே மரிகினா நகரில் 1500 சிறுவர்களுக்கு கூட்ட விருத்தசேதனம் மேற்கொள்ளப்பட்டது. சுகாதாரத்தை மேற்கோள்காட்டிய உலக கின்னஸ் சாதனை அமைப்பு இந்த நிகழ்வினை நிராகரித்து விருது வழங்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.

கடவுளை திருமணம் செய்யும் பச்சிளம் குழந்தைகள்!!

நேபாளத்தில் பெண் குழந்தைகளுக்கு இந்து கடவுள் விஷ்ணுவுடன் திருமணம் செய்து வைக்கும் சடங்கு நடத்தப்படுகிறது.

காத்மண்டுவைச் சேர்ந்த நேவார் சமூகத்தினர், வயதுக்கு வராத பச்சிளம் பெண் குழந்தைகளுக்கு இந்த திருமணத்தை செய்து வைக்கின்றனர்.

இந்து மதம் மற்றும் புத்த மதம் ஆகிய இரண்டிலும் உள்ள சடங்குகளை இணைத்து செய்யும் இந்த சமூகத்தினர், இந்த திருமண விழாவை 2 நாட்கள் நடத்துகின்றனர்.

அதாவது, இந்த சமூகத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகளை அழிவே இல்லாத விஷ்ணுவுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால், அந்த பெண் குழந்தைகள் காலம் முழுவதும் விதவையாக மாட்டார்கள் என்ற நம்பிக்கை அந்த சமூக மக்களிடம் உள்ளது.

பெல் பழம் எனப்படும் பழத்தை அந்த பெண் குழந்தைகள் ஒரு கையில் வைத்துக் கொண்டு, மறு கையால் விஷ்ணு சிலையை தொடுவதன் மூலம், திருமணம் நடப்பதாக கருதப்படுகிறது.

இதையடுத்து திருமண விழாவை போலவே விருந்தினர்களுக்கு உணவளித்து மகிழ்கின்றனர் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள்.

காலம் காலமாக முன்னோர்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றிவருவதால் நாங்களும் இதனை தவறாமல் செய்து வருகிறோம் என பெண் குழந்தைகளின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

விமானம்-லொறி மோதி விபத்து : 8 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

அமெரிக்கா லொஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கிய பயணிகள் விமானம் லொறி மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்து 149 பயணிகளில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என விமான நிலையம் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

149 பயணிகளுடன் மெக்சிகோவில் இருந்து லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு பயணித்த ஏரோமெக்சிகோ நிறுவனத்தின் போயிங் 642 ரக ஜெட் விமானம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் லொறியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

மோதிய வேகத்தில் அந்த லொறி நிலைதடுமாறி, கவிழ்ந்து விழுந்தது, விமானத்தின் வலதுப்புற இறக்கையும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் லொறியில் இருந்த இரு பெண்கள் உள்பட எட்டுபேர் காயம் அடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்கள் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என தெரியவந்துள்ளது.

விமானத்திற்கு சிறிய சேதமே ஏற்பட்டுள்ளது என விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்து ஏற்பட்டதிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏரோமெக்சிகோ நிறுவனத்தின் தரப்பிலும் விபத்திற்கான காரணம் குறித்த தகவல்கள் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

பிரித்தானியாவில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தமிழ்ப் பெண்!!

பிரித்தானியாவில் உள்ள லண்டன் மாநகராட்சி கவுன்சிலராக தமிழகத்தில் பிறந்து வளர்ந்த தொழில் அதிபர் ரெஹானா அமீர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியா நாட்டின் லண்டன் மாநகரில் உள்ள 25 வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.

இதில் வின்ட்ரை வார்டின் கவுன்சிலர் பதவிக்கு இந்தியாவை சேர்ந்த பெண் தொழில் அதிபர் ரெஹானா அமீர் (43) போட்டியிட்டார். இவர் தமிழகத்தின் சென்னையில் பிறந்து, வளர்ந்தவர்.

இந்த உள்ளாட்சி தேர்தலில் அவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றதை தொடர்ந்து வின்ட்ரை வார்டின் கவுன்சிலராக தெரிவு செய்யப்பட்டார். இதன் மூலம் லண்டன் மாநகராட்சியில் கவுன்சிலரான முதல் இந்திய பெண் என்ற பெருமையை அவர் தட்டிச்சென்று உள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த ரெஹானா அமீர், கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நான், சாலை பாதுகாப்பு, காற்றை தூய்மைபடுத்துதல், மன ஆரோக்கியம் உள்ளிட்ட விஷயங்களில் முக்கிய கவனம் செலுத்துவேன். மேலும் அனைத்து வகையான தொழில்களுக்கும் சிறந்த பிரதிநிதித்துவம் அளிப்பேன் என கூறியுள்ளார்.

வெற்றியடைந்த ஏவுகணை சோதனை : அதிரடி உத்தரவை பிறப்பித்த வடகொரியா!!

வட கொரியா நேற்று மேற்கொண்ட ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதையொட்டி, சக்தி வாய்ந்த புதிய ஏவுகணைகளை உற்பத்தி செய்ய அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உத்தரவிட்டுள்ளார்.

வட கொரியா, உலக நாடுகள் மற்றும் ஐ.நா பாதுகாப்பு குழுவின் எச்சரிக்கையை மீறி கடந்த வாரம் இரண்டு முறை ஏவுகணை சோதனையை நடத்தியது. இந்த இரண்டு ஏவுகணை சோதனைகளும் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து சக்தி வாய்ந்த மேலும் சில ஏவுகணைகளை உற்பத்தி செய்ய வட கொரிய தலைவர் கிம் ஜாங் தனது ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சக்தி வாய்ந்த ஏவுகணைகள், அமெரிக்காவுடனான எந்தவொரு மோதலையும் எதிர்கொள்ள சரியானதாக இருக்கும் என கிம் ஜாங் நம்புகிறார்.

மேலும், இது போன்ற ஏவுகணைகள் தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தனது சகாக்களிடம் கூறியுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து வட கொரியாவின் செய்தி நிறுவனமான KCNA தெரிவிக்கையில், வடகொரியா சோதனை செய்து வெற்றி கண்ட புக்க்க்சோங்-2 ரக(Pukguksong-2) ஏவுகணை சரியான அளவில் ஜப்பான் கடலில் பாய்ந்தது.

இதை தொடர்ந்தே, கிம் ஜாங், இது சிறந்த ஏவுகணை என ஒப்புதல் வழங்கியதாக தெரிவித்துள்ளது.

மேலும், நேற்று நடந்த ஏவுகணை சோதனை மூலம், எந்தவொரு போர் நிலையையும் எங்கள் ஏவுகணை சமாளிக்கும் என்பது உறுதியாகியுள்ளதாக KCNA கூறியுள்ளது.

இது போன்ற ஏவுகணைகள் முழு பயன்பாட்டுக்கு வந்தால், அமெரிக்காவின் மிகப்பெரிய வெளிநாட்டு கடற்படை தளத்தை கூட அது சென்றடையும் என நம்பப்படுகிறது.

கொளுத்தும் வெயிலுக்கு ஒரே மாதத்தில் 178 பேர் பலி!!

சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இதுவரை 178 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோடை வெயிலின் தாக்கத்தால் ஒட்டுமொத்த இந்தியாவும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. குறிப்பாக தென் மாநிலங்களை இந்த ஆண்டு கடுமையாக பாதித்துள்ளது.

பருவமழை தாமதம் உள்ளிட்ட காரணங்களால் வெயிலின் தாக்கத்திலிருந்து மக்கள் தப்பிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு கோடை வெயிலில் சிக்கி இதுவரை 178 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெயிலினால் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தது உள்ளிட்ட நீர்ச்சத்து குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் வரை அம்மாநிலத்தில் மட்டும் அதிகம் பேர் பலியாகியுள்ளனர்.

44 முதல் 46 டிகிரி வரை வெப்பநிலை அம்மாநிலத்தில் பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்திலும் தலைநகர் சென்னை மற்றும் தென் மாவட்டங்கள் இந்த ஆண்டு வெயிலுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் தென் கிழக்கு பருவமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

இரத்த வெள்ளத்தில் உயிர்ப் பிச்சை கேட்ட நிரபராதியை அடித்தே கொன்ற மக்கள்!!

இரத்த வெள்ளத்தில் நபர் ஒருவர் கிராம மக்கள் மத்தியில் மண்டியிட்டு உயிர்ப் பிச்சை கேட்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம், ஜாம்செட்பூரில் உள்ள சோபர்பூர் எனும் மலைவாழ் கிராமத்தில் தான் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.அந்தப் புகைப்படத்தில் இருப்பவர் மூன்று குழந்தைகளின் தகப்பனான முகமது நயீம் என்பவர் ஆவார்.

வட்ஸ் அப்பின் வழியே வதந்தியாகப் பரவிய ஒரு செய்திதான் இவரைக் கொன்றிருக்கிறது. அந்தச் செய்தியில் குழந்தைத் திருடர்கள் அதிகமாக உலாவி வருவதாகவும், தங்கள் குழந்தைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றிருந்திருக்கிறது.

காட்சிலா எனும் பகுதியைச் சேர்ந்த முகமது நயீம், தொழில்நிமித்தமாக நண்பர்கள் நால்வருடன் சோபர்பூரைக் கடந்துசென்றபோது, சந்தேகத்தின் அடிப்படையில் நால்வரையும் சுற்றிவளைத்த அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், அவர்களை இழுத்துச் சென்று காட்டுமிராண்டித்தனமாக தாக்கி கொன்றுள்ளனர்.

இதில் மரணிக்கும் தருவாயில் நயீம் கையெடுத்து உயிர்ப்பிச்சை கேட்கும் கடைசி நிமிடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களே இந்தச் செய்தியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன.

சம்பவம் நடந்த இடத்திற்கு காவல்துறையினர் வந்தபோதும், நயீம் படுகாயங்களுடன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர்கள் மற்ற மூவரும் அந்தப்பகுதியின் அருகிலேயே கொடூரத்தாக்குதல்களுக்குப் பலியாகி கிடந்துள்ளனர்.

மக்களே சட்டத்தைக் கையில் எடுத்து, செய்யாத குற்றத்திற்கு, மரணத்தை அவர்களுக்கு தண்டனையாகக் கொடுத்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் பாகுபலி!!

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் திரையிடப்படவுள்ளது.

ஆண்டு தோறும் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் உலக அளவில் திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது, வருகிற 28 ஆம் திகதி வரை இந்த திரைப்பட விழா நடைபெறும்.

இதில், உலகில் உள்ள எண்ணற்ற சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர், இந்தியாவிலிருந்து அதிக சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த வருடம் நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் திரையிட 19 திரைப்படங்கள் தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இவற்றில் சமீபத்தில் வெளிவந்து வசூலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்து வரும் ‘பாகுபலி-2’ படத்தை திரையிடப்பட்டுள்ளது. நேற்று ‘பாகுபலி’ படத்தின் முதல் பாகத்தை திரையிட்டுள்ளனர். இன்று ‘பாகுபலி-2’ படம் திரையிடப்படவிருக்கிறது.

இந்த திரைப்படவிழாவில் ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே, சோனம் கபூர், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பொலிவுட் நடிகைகளும், குஷ்பு, சுந்தர்.சி, ஆர்யா, ஜெயம் ரவி, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் அடங்கிய ‘சங்கமித்ரா’ படக்குழுவும் எமி ஜாக்சன் உள்ளிட்ட பல்வேறு நடிகை, நடிகர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளின் போது 2000 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்!!

டெங்கு அபாயம் நிலவும் 12 மாவட்டங்களில் இரு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளின் போது சுமார் 2000 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 8000 பேருக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ப்ரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் டெங்கு அபாயம் நிலவும் 12 மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

நாடு முழுவதிலும் சுமார் 48,000 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு , புத்தளம் , உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடைக்கலம் தேடி சென்ற இளம்பெண்ணுக்கு இளைஞர் செய்த விபரீதச் செயல்!!

பாகிஸ்தானில் அடைக்கலம் தேடி சென்ற இந்திய பெண்ணை இளைஞர் ஒருவர் துப்பாக்கி முனையில் மிரட்டி திருமணம் செய்துள்ளதையடுத்து தன்னை இந்தியா செல்ல அனுமதிக்க வேண்டும் என அந்த பெண் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்தியாவை சேர்ந்தவர் Uzma (20), இளம் பெண்ணான இவர் இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகமான High Commission of India-வுக்கு தஞ்சம் கோர சென்றுள்ளார். அப்போது பாகிஸ்தானை சேர்ந்த Tahir Ali என்னும் இளைஞர் Uzmaஐ திருமணம் செய்ய விரும்பியுள்ளார்.

ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை, இதையடுத்து துப்பாக்கி முனையில் Uzmaஐ மிரட்டி Tahir திருமணம் செய்துள்ளார்.

இதையடுத்து, தான் இந்தியாவுக்கு உடனடியாக திரும்ப விரும்புவதாக Uzma நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

மேலும், துப்பாக்கி முனையில் தன்னை மிரட்டி திருமணம் செய்த Tahir, கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

Uzmaவின் வழக்கறிஞர் கூறுகையில், Uzmaவின் விசா வரும் 30ஆம் திகதியுடன் காலாவதி ஆவதால் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப நீதிமன்றத்தில் போராடி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

வெளியுறவு அலுவலகம் இதுகுறித்து வரும் 22ஆம் திகதிக்குள் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், Uzmaவை தான் கட்டாயப்படுத்தி திருமணம் செய்யவில்லை எனவும், அவரை கொடுமைப்படுத்தவில்லை எனவும் Tahir கூறியுள்ளார்.

வட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய அம்சம்!!

உலக அளவில் தற்போதைய புள்ளிவிபரப்படி 1.2 பில்லியன் மக்களால் வட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது. பயனாளர்கள் பயன்பெறும் வகையில் அடிக்கடி புதிய புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது வட்ஸ்அப் நிறுவனம்.

அந்த வரிசையில் தற்போது வட்ஸ்அப்பில் புதிய அம்சமாக ”பின்சாட்” (PIN CHAT) என்ற வசதி சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாதாரணமாக வட்ஸ்அப் சட்டிங்கில் தனிநபர் சட்டிங் மற்றும் குரூப் சட்டிங் வசதி உள்ளது, நமக்கு பிடித்தமான 3 நண்பர்களையோ அல்லது மூன்று குழுக்களையோ பின்சட்டின் வசதி மூலம், சட்டிங் வரிசையில் முதல் மூன்று இடங்களில் வைத்துக் கொள்ளலாம்.

இந்த வசதியை மிக எளிதாக பயனாளர்கள் தங்களது வட்ஸ்அப்பில் சேர்த்துக் கொள்ளலாம். பயனாளர்கள் முதலில் தங்களது வட்ஸ்அப்பை ப்லேஸ்டோரில் சென்று அப்டேட் செய்துகொள்ள வேண்டும், பின்னர் வட்ஸ்அப்பில் தங்களுக்கு விருப்பமான 3 நண்பர்களின் அல்லது குழுக்களின் சட்டிங்கை சிறிது நேரம் அழுத்திப் பிடித்து, பின்னர் மேலே உள்ள “பின்சட்”ஐ தெரிவு செய்யவும்.

அவ்வளவுதான் பின்சட் வசதி உங்கள் வட்ஸ் அப்பில் சேர்க்கப்பட்டிருக்கும், பின்சட்டின் மூலம் 3 நண்பர்களையோ அல்லது குழுக்களையோ தான் பின் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு ஓட்டத்தால் கிண்ணத்தை தவறவிட்ட பூனே : இறுதிப்போட்டியில் மும்பை திரில் வெற்றி!!

 

ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற மும்பை அணி மூன்றாவது முறையாக ஐ.பி.எல். சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பூனே அணியை எதிர்கொண்ட மும்பை அணி ஒரு ஓட்டத்தால் திரில் வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. ஆரம்பம் முதல் துடுப்பாட்டத்தில் தடுமாற்றத்தை எதிர்நோக்கிய மும்பை அணி கடும் சிரமத்துக்கு மத்தியில் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 129 ஓட்டங்களை குவித்தது.

மும்பை அணி சார்பில் நிதானமாக துடுப்பெடுத்தாடிய குர்னால் பாண்டியா 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட ஜயதேவ் உனட்கட் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் 130 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பூனே அணி ஒரு ஓட்டத்தால் தோல்வியடைந்து கிண்ணத்தை தவறவிட்டது.

ஒரு கட்டத்தில் பூனே அணி இறுதி ஓவரின் 5 பந்துகளுக்கு 7 ஓட்டங்களை பெற்று, வெற்றிபெறும் கட்டத்தில் இருந்தது.

எனினும் பூனே அணியின் திவாரி மற்றும் அணித்தலைவர் ஸ்மித் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.

பூனே அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்மித் 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் மிச்சல் ஜோன்சன் சிறப்பாக பந்துவீசி 3 விக்கட்டுகளை கைப்பற்றியதுடன், ஜஸ்பிரிட் பும்ரா 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.