வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலையின் சித்திரைப் புத்தாண்டு விழா இன்று (19.05.2017) காலை 9 மணியளவில் பாடசாலையின் அதிபர் தி.யுவராஜா தலமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக உதவிக் கல்விப்பணிப்பாளர் த.சின்னையா, சிறப்பு விருந்தினராக பாடசாலை மேம்பாட்டு பிரதிநிதி ந.கிறேனியர், ஆசிரிய ஆலோசகர் கு.அருள்ராணி , வவுனியா முஸ்ஸிம் பாடசாலை ஆசிரியர் எ.ஜோய், ரி.சதீஸ் , பாடசாலையின் பிரதி அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பாடசாலை மாணவர்களின் நடனம், குழுப்பாடல், கண்ணன் ராதை நடனம் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
வவுனியா திருநாவற்குளம் உமாமகேசுவரன் முன்பள்ளியின் புதுவருட பாரம்பரிய நிகழ்வுகள் முன்பள்ளியின் அதிபர் திருமதி மீரா குணசீலன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா க.சந்திரகுலசிங்கம் (மோகன்) கலந்து சிறப்பித்திருந்தார்.
சிறப்பு அதிதியாக வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் சு.காண்டீபன், தமிழ் தேசிய இளைஞர் கழக அமைப்பாளர் வ.பிரதீபன் மற்றும் உறுப்பினர் ரவி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு நினைவுச் சுடர் ஏற்றிய ஏழு ஊழியர்களை நிறுவனம் ஒன்று இன்று (19.05.2017) பணியிலிருந்து இடைநிறுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இறுதிக்கட்ட யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வவுனியா A9 வீதியில் அமைந்துள்ள உதிரிப்பாகங்கள் மற்றும் வாகனங்கள் திருத்துமிடத்தில் பணியாற்றும் ஏழு தமிழ் இளைஞர்கள் நேற்று (18.05.2017) மாலை 5.40 மணியளவில் வியாபார நிலையத்தில் தீபச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதையடுத்து இன்று (19.05.2017) வியாபார நிலையத்திற்குச் சென்ற வியாபார நிலைய உரிமையாளர் தமிழ் இளைஞர்களான வவுனியா, மீசாலை, விஸ்வமடு, மன்னார், வீரபுரம், பரந்தன் போன்ற பகுதிகளைச் சேர்ந்த 7 பேரை பணியிலிருந்து இடைநிறுத்தியதுடன் பொலிஸ் நிலையத்திலிலும் முறைப்பாடு செய்துள்ளார்.
வியாபார நிலையத்தின் உரிமையாளர் பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா வசந்தி திரையரங்குக்கு முன்பாக நேற்று (18.05.2017) இரவு யாழ் சுகாதாரத்திணைக்களத்திற்குச் சொந்தமான வான் விபத்திற்குள்ளாகியுள்ளது. இவ் விபத்த பற்றி மேலும் தெரியவருவதாவது..
வவுனியா வசந்தி திரையரங்குக்கு முன்பாக இடம்பெற்ற இவ்விபத்தில் சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. எனினும் நேற்று இரவு இடம்பெற்ற இவ்விபத்திற்குள்ளான வான் இன்று (19)காலை 9மணிவரை அவ்விடத்தில் தரித்து நின்றுள்ளது. இன்று காலையே வாகனத்தினை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுமை குறிப்பிடத்தக்கது.
வீதியின் நடுவே அமைக்கப்பட்ட விளம்பரப் பலகையுடன் மோதுண்டு இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
நாட்டின் தென்மேற்கு பகுதியில் அடைமழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என குறித்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான அடை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை 2 மணிக்கு பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இதேவேளை விசேடமாக மத்திய மலைநாட்டு பிரதேசங்களில் மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டை சுற்றியுள்ள கடல் பிரதேசங்களில் மணிக்கு 60 முதல் 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் அவதானம் காணப்படுகின்றது.
எனவே கடல் பிரதேசங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது.
இதேவேளை நேற்று பெய்த அடைமழை காரணமாக கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நேற்று கொழும்பு மாவட்டத்தில் அடைமழை பெய்ததுடன் பலத்த காற்றும் வீசியது. இதனால் கொழும்பின் பல இடங்களில் மரங்கள் சரிந்து வீழ்ந்ததால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிரான்பாஸ், தெமட்டகொட, பொரளை, கிருலப்பனை, ஹைலெவல் வீதி, தும்புல்ல சந்தி முதலான இடங்களில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
பிரித்தானிய நாட்டில் உயிரிழந்த குழந்தையை வைத்து பணத்திற்காக நாடகமாடிய பெற்றோர் இருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்து தலைநகரமான லண்டனில் Rosalin Baker(25) மற்றும் Jeffrey Wiltshire(52) என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்தாண்டு இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தைக்கு 16 வாரங்கள் ஆனபோது விபத்து ஒன்றில் சிக்கியுள்ளது.
இதன் விளைவாக உடல் முழுவதும் 40 எலும்பு முறிவு ஏற்பட்டதுடன், தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்துள்ளது.
குழந்தை உயிரிழந்ததை அறிந்த பெற்றோர் இதனை பொலிசாரிடம் இருந்து மறைக்க திட்டமிட்டுள்ளனர். மேலும், குழந்தையின் சடலத்தை வைத்து அரசு உதவி தொகையை பெறவும் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
பின்னர், குழந்தையின் சடலத்தை எடுத்துச்சென்று அரசு பேருந்தில் பயணம் செய்யவதாகவும், பயணத்தின்போது குழந்தை உயிரிழந்ததாகவும் நாடகமாட வேண்டும் என இருவரும் திட்டமிட்டுள்ளனர்.
இத்திட்டத்தின் அடிப்படையில் அனைத்தும் நடந்துள்ளது. பேருந்தில் பயணம் செய்தபோது குழந்தை பேச்சு மூச்சின்றி உள்ளதாக தாயார் போலியாக அழுது புலம்பியுள்ளார்.
ஆனால், நபர் ஒருவர் குழந்தையை சோதனை செய்தபோது அதன் உடல் மிகவும் குளிர்ச்சியாக இருந்ததையும் குழந்தை ஏற்கனவே உயிர்ழந்து இருந்ததையும் கண்டு சந்தேகம் அடைந்துள்ளார்.
மேலும், பொலிசாருக்கு தகவல் கொடுத்த பின்னர் பேருந்தில் வைக்கப்பட்ட கமெராவில் சோதனை செய்தபோது, அதில் மனைவிக்கு கணவர் ‘குட் லக்’ சொல்லிவிட்டு செல்லும் காட்சிகள் பதிந்துள்ளது சந்தேகத்தை அதிகப்படுத்தியது.
இதனை தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில் இருவரும் உண்மையை ஒப்புக்கொண்டனர். ஆனால், இருவரின் மீது கொலை குற்றம் பதிவு செய்யப்படவில்லை.
எனினும், குழந்தையை பராமரிக்க தவறிய குற்றத்திற்காகவும், உயிரிழந்த குழந்தையை வைத்து நாடகமாடிய குற்றத்திற்காகவும் ஒவ்வொருவருக்கும் தலா 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி நேற்று தீர்ப்பளித்துள்ளார்.
ஹொங்கொங் அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பில் அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வுதுறை அதிகாரி எட்வட் ஸ்னோவ்டன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
தனக்கு அடைக்கலம் வழங்கிய அகதிகளின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் ஹொங்கொங் அரசாங்கத்திற்கு கண்டனம் வெளியிட்டுள்ளார்.
2013ஆம் ஆண்டு அமெரிக்க புலனாய்வுத் துறை அதிகாரியாக செயற்பட்ட எட்வட் ஸ்னோடன், புலனாய்வுத் துறையின் ரகசியங்களை பகிரங்கப்படுத்திய பின்னர் அமெரிக்காவை விட்டுத் தப்பிச் சென்றிருந்தார்.
அதன் போது ஹொங்கொங்கில் அவர் மறைந்திருந்த இரண்டு வார காலத்தில் மூன்று இலங்கையர்கள் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் அவருக்கு தங்குமிடம் வழங்கியிருந்தனர்.
குறித்த புகலிட கோரிக்கையாளர்களின் வழக்குகளுக்கு ஹொங்கொங் அரசாங்கம் உதவும் எனவும், தங்களின் தாய் நாட்டிற்கு அனுப்பப்படாமல் புகலிடம் வழங்கப்படும் எனவும் அவர்கள் பல வருடமாக நம்பியிருந்தனர். எனினும் தற்போது நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை அந்நாட்டு குடிவரவு அதிகாரிகளினால் அவர்களின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த தம்பதியினர் நாடு கடத்தப்படும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தமக்கு சொந்த நாட்டில் ஆபத்து ஏற்படும் என்று அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
எனினும் இவர்கள் தாய் நாட்டிற்கு சென்றால் ஆபத்து ஏற்படும் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லையென ஹொங்கொங் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ” அவர்கள் சித்திரவதை, துஷ்பிரயோகம், மிரட்டல் மற்றும் போர், போன்ற மிகவும் கடினமான சூழ்நிலைகள் ஆகியவற்றால் தாய் நாடுகளில் இருந்து தூக்கி எறியப்பட்ட நல்லவர்கள்” என ஸ்னோடென் இன்று வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
தங்களை பாதுகாக்குமாறு கோரியவர்கள் தற்போது வெளிப்படையான அநீதியை எதிர்கொண்டுள்ளார்கள் என ஸ்னோடென் தெரிவித்துள்ளார்.
“ஹொங்காங் அரசாங்கத்தில் உள்ள ஒருவர் இந்த குடும்பங்களை உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார், என ஸ்னோவ்டென் ஒரு தெளிவான வெள்ளை சுவருக்கு எதிரில் நின்று பேசிய வீடியோவில் கூறியுள்ளார்.
நம்பகத்தன்மையும் வழங்கக்கூடிய பொறுப்புக்கூறும் செயல்முறை ஒன்றை இலங்கை அரசு உருவாக்கவேண்டும் என கனேடியப் பிரதமர் ரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் 8 ஆவது ஆண்டை நினைவு கூர்ந்து கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையின் இறுதிப் போரின் எட்டாவது வருட நிறைவை நாம் இன்று நினைவு கூறுகின்றோம்.போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்ற அதேவேளையில், கடந்த 26 வருட யுத்தத்தில் இழந்த உயிர்களின் கெளரவத்தை வலியுறுத்தி அவர்களை நினைவுகொள்வோம்.
எமக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சியையும், இழப்புக்களையும் நினைவுகூரும் இந்த வேளையில், நாம் போரின் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் போர் வடுக்களை ஆற்றுவதற்கு உதவுவதுடன், முரண்பாடுகளை நீக்கி நீண்டகால சமாதானத்தை நாட்டிலே உருவாக்குவதற்காக தொடர்ந்தும் உழைக்க வேண்டும்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நம்பிக்கையையும், நம்பகத்தன்மையும் வழங்கக்கூடிய பொறுப்புக்கூறும் செயல்முறை ஒன்றை இலங்கை அரசு உருவாக்கவேண்டும் என்பதை நான் மீண்டும் வலியுறுத்திக் கூறுகின்றேன்.
இதற்கு ஏதுவாக சர்வதேச, பொதுநலவாய நாடுகளின் விசாரணையாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் ஆகியோரின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதன் மூலம் இலங்கை அரசு தனது சர்வதேச கடப்பாட்டை நிறைவேற்ற வேண்டும்.
கனேடியத் தமிழர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்வதுடன், எமது கூட்டாட்சியின் 150 வது வருடத்தை நிறைவு செய்கின்ற வேளையில், தமது துயரங்களைத் தாண்டி கனேடியத் தேசத்தின் வளர்ச்சிக்குத் தமிழ் கனேடியர்கள் வழங்கிய பங்களிப்புகளை நாம் அங்கீகரிக்கின்றோம் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரம்மாண்டமான வீடியோ பகிரும் தளமான YouTube ஆனது YouTube TV எனும் தொலைக்காட்சி சேவையையும் வழங்கி வருகின்றது. இச் சேவையில் தற்போது புதிதாக 7 சேனல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதன்படி தற்போது மொத்தமாக 46 தொலைக்காட்சி சேனல்கள் YouTube TV சேவையூடாக வழங்கப்பட்டு வருகின்றது.
AMC, BBC America, Sundance TV, Telemundo, Universo, We TV, IFC ஆகிய சனல்களே புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான அடிப்படை மாதாந்த சந்தாவாக 35 டொலர்கள் காணப்படுகின்றது.
ABC, CBS, FOX, NBC உட்பட மேலும் சில பிரபலமான கேபிள் தொலைக்காட்சி சேவையினை வழங்குதல், வரையறையற்ற க்ளவுட் DVR சேமிப்பகத்தை வழங்குதல், ஒரு வீட்டிற்கு அதிகபட்சம் 6 கணக்குகளை வழங்குதல் என்பன YouTube TV சேவையின் வரப்பிரசாதங்களாக காணப்படுகின்றன.
இருபது ஆண்டுகளாக விமானியாக வேலை பார்த்துக்கொண்டே ஆட்சி பொறுப்பை நடத்திவருவதாக நெதர்லாந்து மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.
மன்னர் ஆட்சி இடம் பெறும் நெதர்லாந்தில் நாடாளுமன்ற முறைப்படியே ஆட்சி நிர்வாகம் நடைபெற்று வருகிறது. மன்னர் நாட்டின் தலைவராக இருந்த போதினும், அதிகாரங்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமரிடம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
நெதர்லாந்து நாட்டின் தற்போது மன்னராக இருப்பவர் வில்லியம் அலெக்சாண்டர். ராணியான பீட்ரிக்ஸ்(79) பதவி விலகியதால், வாரிசு அடிப்படையில் வில்லியம்ஸ் நாட்டின் மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வில்லியம்ஸ் சமீபத்திய பேட்டியில், தான் 20 ஆண்டுகலமாக விமானியாக பணிபுரிந்து வருவதாகவும், பணிக்கு செல்லும்போது தான் ஒரு மன்னர் என்பதையே மறந்துவிடுவதாகவும், ஆட்சி பொறுப்பில் தனக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் அனைத்தையும் மறந்துவிட்டு பொறுப்புடன் தன்னுடைய வேலையை தொடர்ந்து வருவதாக கூறியுள்ளார்.
வில்லியம் ஆரம்பத்தில் துணை விமானியாக இருந்து படிப்படியாக விமானத்தை ஓட்டுவதற்கு கற்றுக்கொண்டுள்ளார். மாதத்தில் இரண்டு நாட்கள் மட்டும் விமானியாக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவைச் சேர்ந்த 101 வயதான முதியவர் ஒருவர் 15 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து ஸ்கைடைவ் அடித்து உலக சாதனை படைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாம் உலகப்போரில் பிரித்தானியா சார்பாக கலந்துகொண்டவரும் தற்போது 101 வயது நிரம்பியவருமான எர்டோகன் பல வருடங்களாக ஆர்வத்துடன் ஸ்கை டைவிங்கில் ஈடுபட்டுவருகிறார்.
இந்நிலையில் தன்னுடைய 101 வயதில் 15 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பாராஷூட் துணையுடன் குதித்து தற்போது உலக சாதனை படைத்துள்ளார்.
இதன்மூலம் 2014ம் ஆண்டு அர்மந்த் என்பவர் நிகழ்த்திய கின்னஸ் சாதனையை எர்டோகன் முறியடித்துள்ளார்.
எர்டோகன் ஏற்கனவே இங்கிலாந்து அளவில் அதிக வயதில் ஸ்கைடைவ் அடித்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பேசிய அவர், ஸ்கைடைவ் அடிப்பது எனக்கு மிகவும் பிடித்த சாகச விளையாட்டு. இப்படியொரு உலக சாதனையை நிகழ்த்த வேண்டும் என முன்பே நினைத்திருந்தேன்,
ஆனால் என் வயதை காரணம் காட்டி என் மனைவி அனுமதிக்க மறுத்துவிட்டாள். இருப்பினும் அவளை சமாதானாம் செய்துவிட்டு, இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளேன். தற்போது மிகுந்த மனநிறைவாக உணர்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கோவா மாநிலம் சர்சோரெம் பகுதியில் நடைபாதை ஆற்றுப்பாலம் உடைந்து விபத்துக்குள்ளானதில், 50 பேர் நீரில் சிக்கி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவா மாநிலம் தெற்கு பகுதியில் சர்சோரெம் பகுதியில் நடைபாதை ஆற்றுப் பாலம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளானது. அப்போது பாலத்தில் இருந்த 50-க்கும் அதிகமானோர் ஆற்றில் விழுந்தனர். இதில் 30க்கும் மேற்பட்டோர் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்துக்குள்ளான பாலம் போர்த்துகீசியர் காலத்தில் கட்டப்பட்டதாகும். இந்த பாலம் சன்வோர்தெம் ஆற்றின் குறுக்கே உள்ளது.
இந்த சம்பவம் குறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், வாலிபர் ஒருவர் ஆற்றில் குறித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை காப்பாற்ற மீட்புப் படை குழுவினர் முயன்று வந்தனர்.
இந்த மீட்பு நடவடிக்கையை காண திரளான மக்கள் அங்கு கூடினார். இதனால் பாலம் திடீரென இடிந்து விழுந்தது என்றார்.
பாலம் உடைந்து விபத்துக்குள்ளானதை அடுத்து ஆற்றில் குதித்ததில் சிலர் தாங்களாகவே நீந்தி கரை வந்து தங்களது உயிரினை காப்பாற்றிக் கொண்டனர்.
மேலும் ஆற்றில் சிக்கிக் கொண்டிருப்பவர்களை காப்பாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
சமகால சினிமா உலகில் இருந்து அரசியல் கட்சி துவங்கியவர்களின் தற்போதைய நிலையை முழுமையாக அறிந்து வைத்திருக்கும் ரஜினி, அரசியலில் களம் காணும் விடயத்தில் ஆழமாக யோசிப்பதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் வயது முதிர்வால் ஏற்பட்டுள்ள ஓய்வு ஆகியவற்றால், தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருப்பது உண்மையே.
ஆனால் அந்த வெற்றிடத்தை நிரப்பும் அளவுக்கு ரஜினியால் முடியுமா? என்பது கேள்வி குறியே. அதை ரஜினியும் உணராமல் இல்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், ரஜினி அரசியலில் இறங்க, பாஜக தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மட்டுமின்றி பாஜக வில் சேர்ந்து விட்டால், முதலமைச்சர் வேட்பாளராகவே அறிவித்து, தேர்தலை சந்திக்க, பாஜக தயாராகவே உள்ளது.
ஆனால் ரஜினி, அவர்களின் கோரிக்கைக்கு பிடி கொடுக்காமல் நழுவிக்கொண்டே இருக்கிறார். மறுபக்கம், நடிகை நக்மா மூலம், காங்கிரஸ் கட்சியில் சேருமாறு, அதன் தேசிய தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மட்டுமின்றி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், சமீபத்தில் இந்த விவகாரம் தொடர்பில் ரஜினியுடன் மிக நீண்ட நேரம் தொலைபேசியில் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னர் ஒருமுறை, வேட்டிகட்டிய தமிழன் இந்திய பிரதமராக வர வேண்டும் என, ப.சிதம்பரம் மேடையில் இருக்கும்போது ரஜினி பேசியது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் தற்போது காங்கிரஸ் அழைப்பிற்கும் பதில் சொல்ல முடியாமல், தவிர்த்து வருகிறார் ரஜினி. இந்நிலையில், தனியாக ஒரு கட்சி தொடங்கி விடலாம் என்றும் அவர் யோசித்து வருவதாக அவரது நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
ஆனால், திமுக, அதிமுக என இரு பெரும் கட்சியையும் சேர்ந்த தொண்டர்கள், அந்தந்த கட்சிகளுக்குதான் வாக்களிப்பார்கள்.
அதையும் தாண்டி, தமது கட்சியால் அந்த இரு கட்சிகளின் வாக்குகளை விட கூடுதலாக வாக்குகள் வாங்க முடியுமா? என்ற சந்தேகமும் அவருக்கு வலுவாக உள்ளது என கூறப்படுகிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜயகாந்த், சிரஞ்சீவி ஆகியோர் தற்போது என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதும் அவரை சற்று ஆழமாக யோசிக்க வைத்துள்ளது.
தற்போது தமிழகத்தின் அனைத்து கட்சிகளிலும் ரஜினிக்கு நண்பர்கள் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் புதிதாக கட்சி தொடங்கினால் அவர்கள் அனைவரையும் பகைத்துக் கொள்ள நேரிடும்.
வெற்றி பெற்று விட்டால் தற்போதுள்ள செல்வாக்கு மேலும் கூடும். தோல்வியை சந்தித்தால் அனைவரும் கண்டபடி விமர்சனம் செய்வார்களே என்றும் அவருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம் சினிமாவின் மீதான இளைஞர்களின் மோகத்தை கடுமையாக குறைத்து விட்டது என்று ரஜினி கருதுவதாக அவரது நம்பிக்கைக்குரிய வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, இந்நிலையில் அரசியலுக்கு வரலாமா அல்லது இப்படியே இருந்து விடலாமா என்ற குழப்பத்தில் இருந்து, இன்னும் அவர் மீண்டு வரவில்லை என்றே அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
சீனாவின் ஷண்டோங் மாகாணத்தில், வெய்ஃபெங் நகரில் பைலாங் ஆற்றின் மேம்பாலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள Ferris Wheel பொதுமக்களின் பார்வைக்காக விரைவில் திறக்கப்படவுள்ளது.
இதில் தொலைக்காட்சி, Wi-Fi அடங்கலான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
36 கார்ட்ஸ் (carts) எனப்படும் அறை வடிவமைப்பு பொருத்தப்பட்டுள்ளதுடன், ஒன்றில் 10 பயணிகள் அமரக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
1771 அடி உயரம் கொண்ட Ferris Wheel ஐக் கட்டமைக்க 4,600 தொன் உருக்குக் கம்பிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த Ferris Wheel ஒரு முறை சுற்றி வர சுமார் 28 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். அதாவது, சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுப்பதற்கு ஏதுவாக பொறுமையாக சுற்றி வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை, சுற்றி வரும் நேரத்தில் பயணிகளுக்கு சலிப்பு ஏற்பட்டால், அறைக்குள் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
உலகமெங்கும் பல்லாயிரக்கணக்கான கணினிகளைத் தாக்கிய WannaCry ரன்சம்வெயார் வைரஸைத் தொடர்ந்து, மீண்டும் அதேபோல ஒரு இணையத் தாக்குதலை நிகழ்த்த மற்றொரு வைரஸ் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
கணினிகளில் உள்ள கோப்புகளைத் தாக்கி மறைத்து, பணம் தரும் வரை கணினிகளின் செயற்பாடுகளை முடக்குகிறது ரன்சம்வெயார் வைரஸ்.
அந்த வகையிலான WannaCry என்னும் வைரஸானது இந்த வார துவக்கத்தில் உலகமெங்கும் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள கணினிகளைத் தாக்கியது.
இந்த தாக்குதலிலிருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், WannaCry போன்ற குணங்களை உடைய UIWIX என்னும் மற்றொரு புதிய வைரஸ் உலகமெங்கும் உள்ள கணினிகளைத் தாக்கும் அபாயம் இருப்பதாக, சீனாவின் தேசிய கணினி வைரஸ் அவசர நிலை செயற்திட்ட மையம் எச்சரித்துள்ளது.
WannaCry போலவே இதுவும் விண்டோஸ் ஒப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள குறைகளைப் பயன்படுத்தியே கணினிக்குள் ஊடுருவுகிறது. வைரஸால் தாக்கப்பட்ட கோப்புகளை .UIWIX என்னும் எக்ஸ்டென்ஷன் கொண்டதாக இது மாற்றிவிடும்.
ஆனால், இதுவரை எந்தவிதமான தாக்குதலும் கண்டறியப்படவில்லை. இருந்தபோதிலும், அவசரநிலை செயற்திட்ட மையமானது உஷார் நிலையில் உள்ளது என சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.