நடிகர் ரஜினிகாந்த் தலைவராக இருந்து மக்களுக்கு சேவை செய்யட்டும், முதல்வராக இருந்து ஆள வேண்டும் என நினைக்கக்கூடாது என சீமான் கூறியுள்ளார்.
ரசிகர்கள் முன்னிலையில் இன்று பேசிய ரஜினி, அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம், தமிழகத்தில் அரசியல் நிலவரம் சரியாக இல்லை, நிர்வாக அமைப்பு சீர்கெட்டுப்போய் இருக்கிறது எனச் சாடினார்.
அவருடைய பேச்சில் ஸ்டாலின், சீமான், அன்புமணி, திருமாவளவன் உள்ளிட்டவர்களைப் பாராட்டினார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, ரஜினி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நடிக்கட்டும், எவ்வளவு ஆயிரம் கோடிகளையும் சம்பாதிக்கட்டும், இப்போதும் ரஜினிகாந்தை மதிக்கிறோம்.
அதைவிடுத்து, எங்களுக்கு முதல்வராக இருந்து ஆள வேண்டும் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. எங்கள் நாட்டை நாங்கள்தான் ஆள வேண்டும்.
ரஜினியைப் பொறுத்தவரையில், அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். இந்த மண்ணில் அவர் கரைந்து வாழ்கின்றவர் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், அவர் இந்த மண்ணை ஆள வேண்டும் என்று நினைப்பதை நாங்கள் விரும்பவில்லை.
ஜல்லிக்கட்டு, கச்சத்தீவு, காவிரி விவகாரம் போன்றவற்றில் அவருடைய நிலைப்பாடு என்ன? அரசியலுக்கு அவர் வர வேண்டிய தேவை இல்லை.
அவர் மிகுந்த நேர்மையாளர் என்கிறார்கள், மிகத் தவறான கருத்து இது, இதுவரையில் நடித்த படங்களுக்கு நேர்மையான முறையில்தான் அவர் சம்பளம் வாங்கினாரா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து மீண்டும் விவாதம் தொடங்கியுள்ள நிலையில் நடிகை கஸ்தூரி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எட்டு வருடங்களுக்கு பின்னர் தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.
இந்த சந்திப்பின் போது, நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் உள்ளது என பல வருடங்களாக கூறியது போலவே ரசிகர்கள் மத்தியில் மீண்டும் அவர் பேசினார்.
மேலும், போர் வரும் வரை பொறுமையாக காத்திருங்கள் எனவும் ரஜினி ரசிகர்களிடத்தில் கூறினார். இதையடுத்து ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற விவாதம் மீண்டும் தொடங்கியுள்ளது. பலரும் இதுகுறித்து தங்கள் கருத்துக்களை கூறி வரும் நிலையில், பிரபல நடிகை கஸ்தூரி இது குறித்து டுவிட் செய்துள்ளார்.
அவர் கூறுகையில், நல்ல அரசியல், தலைவருக்கு எதிர்பாராத சூழ்நிலையில் கூட டக்கென முடிவெடுக்கும் திறன் வேண்டும். வருவேனா மாட்டேனா என்று வருடக்கணக்கில் யோசிப்பவர் ரஜினி என கூறியுள்ளார்
மேலும், ‘போர்’ அப்பிடின்னு கேட்டு, போரடிக்குது எனவும் அக்கப்போர் பண்ணாதீங்க எனவும் கஸ்தூரி கூறியுள்ளார். ரஜினி அரசியலுக்கு வருவேன் என தற்போது கூறுவது காலதாமதமான செயல் எனவும் கஸ்தூரி டுவிட் செய்துள்ளார்.
சமுதாயத்திற்கு முன் மாதிரியாகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான திருமணம் ஒன்று தம்புள்ளையில் நடைபெற்றுள்ளது.
முதியோர் இல்லத்தில் அங்கு வாழும் வயோதிபர்கள் முன்னிலையில் திருமணம் ஒன்று அண்மையில் நடைபெற்றுள்ளது.
பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களை தமது உறவினர்களாக எண்ணிய, சானுக்க – பிரியதர்ஷனி தம்பதி தமது திருமணத்தை அங்கு நடத்தியுள்ளனர்.
நாமல்புர பிரதேசத்தை சேர்ந்த சானுக்க ரவிந்திர ரணசிங்க மற்றும் எல்.டீ.டீ.பிரியதர்ஷனி நீண்ட காலமாக காதலித்து திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
இருவரின் திருமணத்தை இரு வீட்டாரும் தீர்மானித்த பின்னர், பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் முதியோர் இல்லத்தில் வாழும் முதியவர்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்த இருவரும் தீர்மானித்துள்ளனர்.
அதற்கமைய அவர்களின் திருமணத்தை நடத்துவதற்கு தம்புள்ளை முதியோர் இல்லத்தை தெரிவு செய்துள்ளனர்.
முதியோர் இல்லத்தின் வெளியரங்கில் தங்களின் திருமணத்திற்காக சம்பிரதாயங்களை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
முதியோர் இல்லத்திலுள்ள முதியவர்கள் மிகவும் விருப்பத்துடனும் நெகிழ்ச்சியுடனும் இந்த திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.
குறித்த தம்பதி அங்குள்ள முதியவர்களிடம் ஆசி பெற்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
மனிதர்களால் உருவாக்கப்படும் இரண்டு புதிய தீவுகளை £1.3 பில்லியன் செலவில் கட்டமைக்க துபாய் திட்டமிட்டுள்ளது.
இந்தத் தீவுகளில் கடல் பூங்காக்களும் ஆடம்பர மாளிகைகளும் அமைக்கப்படவுள்ளன. மார்ஸா அல் அரப் மற்றும் புர்ஜ் அல் அரப் என அத்தீவுகளுக்கு பெயரிடப்படவுள்ளன.
4 மில்லியன் சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்படும் மார்ஸா அல் அரப் தீவு சுற்றுலாவிற்காக பிரத்தியேகமாக கட்டமைக்கப்படுகிறது.
புர்ஜ் அல் அரப் தீவில் ஆடம்பர மாளிகைகள் உருவாக்கப்படவுள்ளன. இங்கு 140 மாளிகைகளும் 1700 பேர் அமர்ந்து பார்க்கும் அளவுடைய பெரிய திரையரங்கும் கட்டமைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தூக்கம் குறைந்தால் உடல் நலக்குறைவு ஏற்படும். வழக்கத்தை விட குறைந்த நேரம் தூங்கினால் உடல் மட்டுமின்றி முகக் கவர்ச்சியும் வசீகரமும் குறையும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சுவீடனின் கரோலின்சா நிறுவனம் மற்றும் நியூயார்க் பல்கலைக்கழக நிபுணர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
25 பேரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் 7½ மணி நேரம் அயர்ந்து தூங்கும்படி வலியுறுத்தினர். அதன் பின்னர் முக அழகை புகைப்படம் எடுத்தனர்.
அவற்றில் குறைந்த நேரம் தூங்கியவர்களின் முகங்கள் பொலிவிழந்து, கவர்ச்சியின்றிக் காணப்பட்டன.
இதன் மூலம் முகம் கவர்ச்சியுடன் திகழ அதிக நேரம் தூங்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கபாலி படத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் பா ரஞ்சித் மீண்டும் இணையவிருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க பொலிவுட் நடிகை ஹுமா குரேசியை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
நடிகை ஹுமா குரேசி ஏற்கனவே மலையாளத்தில் மம்முட்டியின் நடிப்பில் வெளியான வொயிட் என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். தற்போது இவர் தோப்பாரா என்ற ஹிந்தி ஹாரர் திரைப்படமொன்றில் நடித்து வருகிறார்.
சுப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகை வித்யா பாலன் அவர்களைத்தான் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால் கால்ஷீட் இல்லாததால் அவர் விலகிவிட அவருக்கு பதிலாக ஹுமா குரேசி ஒப்பந்தமாகியிருக்கிறார். இவர் அக்சய் குமாருடன் இணைந்து ஜாலி எல் எல் பிஎன்ற ஹிந்தி படத்திலும் நடித்திருந்தார்.
சுப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்து டூயட் பாடவிருக்கும் நடிகை ஹுமா குரேசியை இப்போதே ரஜினியின் ரசிகர்கள் ட்வீட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
சமூக வலைத்தளமான டுவீட்டர் உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளில் செயற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டுவீட்டரின் முகப்பு பக்கத்தில் சில தொழிநுட்ப காரணங்களுக்காக செயற்படவில்லை எனவும், இன்னும் சில நேரங்களில் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு இயல்பு நிலையில் டுவீட்டர் செயற்படுமென அதன் முகப்பு பக்க பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் டுவீட்டரில் ஏற்பட்டு வரும் பிரச்சினைகள் தொடர்பாக கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 804 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும், அதிகளவான முறைப்பாடுகள் ஸ்பெயின், ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிருந்து பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வட்ஸ் அப் சமூக வலையமைப்பை வாங்கிய போது,தவறிழைத்துள்ளதாக கூறி பேஸ்புக் நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் 186 கோடியே 57 இலட்சம் ரூபாவை (94 மில்லியன் யூரோ) அபராதமாக விதித்துள்ளது.
உலகின் முன்னணி சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனம், தகவல் பரிமாற்று வலையமைப்பான வாட்ஸ் அப் செயலியை கடந்த 2014ஆம் ஆண்டு வாங்கியது. குறித்த உரிமை பதிவின் போது தவறான தகவல்களை வழங்கி பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்-அப்பை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
மேலும் ஐரோப்பிய ஒன்றியம் நீதிமன்றம் ஒரு நிறுவனத்தை, மற்றொரு நிறுவனம் உரிமை படுத்தும்போது விரிவான தகவல்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் முறையாகவும், துல்லியமாகவும் தெரிவித்திருக்க வேண்டும் என அறிவித்து, பேஸ்புக் நிறுவனத்திற்கு குறித்த அபராத தொகையை செலுத்தும்படி உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள பேஸ்புக் நிறுவனம், வட்ஸ் அப்பை வாங்கியபோது சில தவறுகள் ஏற்பட்டது உண்மைதான், அவை வேண்டுமென்றே மேற்கொள்ளப்படவில்லை எனவும், தாம் பதிவு செய்த தகவல்களில் சில தவறுகள் தெரியாமல் இடம்பெற்றிருந்தன அதனால் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சவூதி அரேபியாவுக்கு தொழிலுக்கு சென்ற இரண்டு இலங்கையர்கள் தொடர்பில் எந்த தகவலும் அறியவில்லை என அவர்களின் உறவினர்களால் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தொடர்பான நடவடிக்கைகளை தேடிப்பார்ப்பதற்கு பணியகம் பொது மக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றது.
அதனடிப்படையில் சவூதி அரேபியாவுக்கு 2012 ஆம் ஆண்டு தொழிலுக்கு சென்ற பூண்டலு ஓயாவைச் சேர்ந்த பெரியசாமி முத்து மாரியம்மா மற்றும் 2008ஆம் ஆண்டு தொழிலுக்கு சென்ற பிபில, மெதகமயைச்சேர்ந்த டீ.எம்.கருணாவத்தி ஆகியோர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் பணியகத்தின் வெளிநாட்டு தொடர்பு பிரிவு 0114 379328 என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறு பணியகம் பொது மக்களை கேட்டுக்கொள்கின்றது
வெள்ளவத்தை, சார்லிமன்ட் வீதியில் சவோய் திரையரங்கின் பின்னால் அமைந்துள்ள ‘எக்சலன்ஸி ‘ என்ற பெயரைக் கொண்ட வரவேற்பு மண்டபத்தின் பின்னால் உள்ள 5 மாடிக்கட்டடம் இடிந்து விழுந்தமை தொடர்பில் பலதரப்பினரும் விசாரணையினை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸ், கட்டட ஆய்வு மையம், பிரதேச செயலகம் ஊடாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குறித்த கட்டடம் இடிந்து விழுந்ததில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 23 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் இருவர் கட்டட இடிபாடுகளுக்குள் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில் அவர்களை மீட்கும் பணிகள் நேற்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டநிலையில் இன்றும் தொடர்கிறது.
நேற்று முன் தினம் சம்பவம் இடம்பெற்றபோது காணாமல்போனதாக கருதப்பட்ட இருவர் உயிருடன் வெளியில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வேலை செய்தவர்களின் தகவல்களுக்கு அமைய பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக நம்பும் பொலிஸார், இராணுவம், விமானப்படை, விஷேட அதிரடிப்படை மற்றும் தீயணைப்புப் படை ஆகியவற்றின் உதவியுடன் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த கட்டிட இடிந்து விழுந்த அனர்த்ததில் சிக்கி உயிரிழந்தவர் கட்டிட கட்டுமான பணிக்காக அங்கு வந்த ஊழியர் என பொஸ் விசாரணையில் உறுதியாகியுள்ளது. ஹசலக – கொலன்கொடை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ரத்நாயக்க முதியன்சலாகே சம்பத் உதய குமார ரத்நாயக்க என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
119 இற்கு அழைப்பு எடுத்த நபர்
சுமார் 8 மணி நேரத்தின் பின்னர் குறித்த நபர் இராணுவத்தினரால் மீட்கப்பட்டு கொழும்ப்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் அங்கு உயிரிழந்தார். குறித்த நபர் உள்ளே இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த போது 119 அவசர அழைப்பு இலக்கத்துக்கு அழைத்து தான் சிக்குண்டுள்ளதை அறிவித்த நிலையிலேயே பொலிஸார் அவரது தொலைபேசி உரையாடலுக்கு அமைவாக அவர் இருந்த பகுதியை இராணுவத்தினருடன் இணைந்து உடன் அப்புறப்படுத்தி அவரை மீட்டிருந்தனர். எனினும் அவர் பின்னர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கட்டிடத்தின் பின் பகுதியே இடிந்து சரிந்துள்ள நிலையில் நான்கு பாரிய கொங்கிறீட் திட்டுக்கள் ஒன்றின் மேல் ஒன்றாக உள்ள நிலையில் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளோரை மீட்பது பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நான்கு பாரிய கொங்றீட் திட்டுக்களும் ஏனைய உடைந்த சேதங்களுக்கு மத்தியில் உள்ள நிலையில் அதனுள் சிக்கி இருப்பதாக நம்பப்படும் இருவரையும் உயிருடன் மீட்க முடியுமா என்ற சந்தேகம் பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் முற்பகல் சம்பவம் இடம்பெற்றது முதல் இரவு 11.00 மணி வரை இராணுவத்தினர் தலைமையிலான மீட்புக் குழுவின் நடவடிக்கை தொடர்ந்த நிலையில் மீள நேற்று காலை முதல் மீட்பு நடவடிக்கை தொடர்ந்தது.
நிலத்தின் கீழ் இரு மாடிகளையும் நிலத்தின் மேல் ஐந்து மாடிகளையும் கொண்ட நிர்மாணப்பணிகள் நிறைவடையாத வரவேற்பு மண்டபமே இவ்வாறு இடிந்து வீழ்ந்து அனர்த்தம் சம்பவித்துள்ளது. மண்டபத்தின் நில மேல் மட்டத்தில் அமைந்துள்ள ஐந்து மாடிகளே இதன் போது இடிபாடுகளுக்கு உள்ளாகி சரிந்துள்ள நிலையில் காயமடைந்தவர்களுக்கு மேலதிகமாக பல இலட்ச ரூபா பெறுமதியான வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களும் சேதமடைந்துள்ளன.
சம்பவத்தையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கபில ஜயமான்ன உள்ளிட்ட குழுவினர் மீட்புப் பணிகளுக்கு இராணுவம்இ விஷேட அதிரடிப்படைஇ தீயணைப்புப் படையினர் உள்ளிட்டோரின் உதவியைக் கோரியிருந்த நிலையில் நேற்றும் அவர்களது உதவி பெற்றுக்கொள்ளப்பட்டது..
அதன்படி மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவின் ஆலோசனைப்படி பொலிஸாருடன் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருமாக 150 பேர் வரையில் மீட்பு நடவடிக்கை உள்ளிட்டவற்றில் பங்கேற்றுள்ளனர். இதனை விட இராணுவத்தின் விஷேட படையணியின் மேல் மாகாண கட்டளை பணியகத்தின் கீழ் உள்ள 14 ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த 148 பேர் மீட்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதுடன் மீட்பு நடவடிக்கை தொடர்பில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற விமானப்படையின் 22 பேரும் தீயணைப்புப் படையினரும் ஸ்தலத்தில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று மாலை 6.00 மணி வரையிலான காலப்பகுதிக்குள் புதிதாக ஒருவரும் மீட்கப்படாத போதும் ஏற்கனவே நேற்று முன் தினம் காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் களுபோவில – கொழும்பு தெற்கு போதன வைத்தியசாலையிலும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். களு போவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள 14 பேரில் இருவரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாக அந்த வைத்திய சாலையின் பேச்சாளர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
இதனைவிட கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 9 பேர் சிகிச்சைப் பெறுவதாக தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் அனில் ஜசிங்க தெரிவித்தார்.
இதனிடையே இடிந்து விழுந்த கட்டிடத்தின் நிர்மாணத்திற்காக தேசிய கட்டிட ஆய்வு மையத்தில் நிர்மாண அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை என குறித்த மையம் முன்னெடுத்துள்ள ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந் நிலையில் கட்டிடம் இடிந்தமைக்கான காரணத்தைக் கண்டறிய அந்த மையத்தின் விஷேட குழுவொன்று சம்பவ இடத்தில் ஆய்வுகளை முன்னெடுத்துள்ளது.
குறிப்பாக நிர்மாண தரம், அதன் பொருட்களின் தரம்இ இடத்தின் தன்மைஇ கட்டிடத்துக்கு அருகில் உள்ள கால் வாயில் இருந்து கட்டிட நிர்மாண தூரம் உள்ளிட்டவை தொடர்பில் அவதானம் செலுத்தி கட்டிட ஆய்வு மையம் இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
இதே வேளை கட்டிட நிர்மாணம் தொடர்பில் பயன்படுத்தப்பட்டுள்ள இரும்புக் கம்பிகள் ஐந்து முதல் 7 மாடிவரை கட்டுவதற்கு எவ்விதத்திலும் பொருத்தமற்ற மிக மெல்லிய கம்பிகள் என கூறப்படுகிறது. எனவே எந்த தர நிர்ணயமும் பேணப்படாது இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதனைவிட கட்டுமாண பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டிட நிர்மாண நிறுவனம் ஒன்றில் பணி புரிபவர்கள் அல்லர் என ஆரம்பகட்ட விசாரணையில் ஊர்ஜிதமாகியுள்ளது. கட்டுமாண கம்பனிக்கு நிர்மாண வேலைகள் கொடுக்கப்படாது கூலி அடிப்படையில் கட்டுமாண வேலையில் ஈடுபட்ட மேசன்கள் ஊடாக இத்தனை பெரிய கட்டிட்டத்தின் நிர்மாணம் இடம்பெற்றுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் இந்த கட்டிடத்தை அமைக்க, நிர்மாண வரைப்படம், சாத்திய வள அறிக்கை உள்ளிட்டவற்றை நகர அபிவிருத்தி அதிகார சபையில் இருந்து பெற்றுக்கொள்ளவில்லை என நகர அபிவிருத்தி அதிகார சபையின்பெயர் குறிப்பிட விரும்பாத உயர் அதிகாரி ஒருவர் சுட்டிக்காடினார். இந்த நிலையில் கொழும்பு மாநகர சபையில் குறித்த கட்டிடம் தொடர்பில் அனுமதி பெறப்பட்டதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இந் நிலையில் இது தொடர்பில் விஷேட விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளதாக வெள்ளவத்தை பகுதிக்கு பொறுப்பான தெஹிவளை பிரதேச செயலர் நளினி சுப்ரமணியம் தெரிவித்தார்.
குறித்த கட்டிட அனர்த்தம் தொடர்பில் பூரண விசாரணைகளை முன்னெடுக்கும் வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில ஜயமான்னஇ ஏனைய விஷேட அறிக்கைகளைப் பெற்றுக்கொண்ட பின்னர் அதனை மையப்படுத்தி இதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக கேசரிக்கு தெரிவித்தார்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நத்தன முணசிங்க, கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பாலித்த பனாமல்தெனிய ஆகியோரின் மேற்பார்வையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சீரற்ற காலநிலை இன்னும் சில தினங்களுக்கு தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் மழைவீழ்ச்சி அதிகரிக்கும்போது காற்றின் வேகம் மேலும் பன்மடங்கு அதிகரிக்கும் எனவும் அத்திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்பிரகாரம் மேல், மத்திய, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களில் அதிகளவில் மழை வீழ்ச்சி பதிவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவதுஇ நாடுபூராகவும் நேற்றைய தினம் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய காலநிலை நிலவியது. குறிப்பாக பலத்த காற்றுடன் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி பதிவாகியமையினால் மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்கொண்டனர். காற்றினாலும் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
எனினும் கொழும்பில் மட்டக்குளி போன்ற சில பகுதிகளில் காலை வேளை அதிகளவில் மழை வீழ்ச்சி பதிவானாலும் ஏனைய பகுதிகளில் சிறிய தூறல் மழை பெய்தமையை அவதானிக்க முடிந்தது.
மேலும் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை குறுக்கிட்டது. மேல், சப்ரகமுவ, வடமேல், தென், மத்திய மாகாணங்களில் மழை பெய்துள்ளது. அத்துடன் இன்றைய தினமும் 50 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி குறித்த பகுதிகளில் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் அதிகளவிலான காற்றும் இடி மின்னல் தாக்கமும் காணப்படும். அதேபோன்று கிழக்கு, ஊவா மாகாணங்களில் இன்று 2 மணிக்கு பின்னர் மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.
தம்மை மியன்மாருக்கு நாடு கடத்தாமல் ஐக்கிய நாடுகள் சபையிடமோ அல்லது குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பிடமோ கையளிக்கும்படி இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ரோஹிஞ்சா இனத்தவர்கள் கோரியுள்ளனர்.
இவர்களது கோரிக்கை தொடர்பில் கலந்துரையாட ஐக்கிய நாடுகள் சபையின் குடியேறிகளுக்கான அமைப்புடன் கலந்துரையாட இருப்பதாக கைது செய்யப்பட்ட ரோஹிஞ்சா இனத்தவர்களுக்காக நீதிமன்றில் வாதிட்டுவரும் வழக்கறிஞர் ஷிராஸ் நூர்தீன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலுள்ள ஐக்கிய நாடுகளுகளின் அகதிகளுக்கான அமைப்பில் தஞ்சம் கோரியிருந்த ரோஹிஞ்சா இனத்தவர்களில் முப்பது பேர், சட்டவிரோதமாக படகில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுக்கொண்டிருந்தனர்.
இந்தநிலையில், இலங்கையின் கங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் பெண்கள் ஏழு பேர் மற்றும் 16 சிறார்களும் அடங்குவர்.
இவர்கள் தொடர்பான வழக்கு கடந்த 16ஆம் திகதி யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கும்படி சட்டமா அதிபர் ஆலோசணை வழங்கியுள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றத்திடம் தெரிவித்தனர்.
எனினும் தடுப்புக்காவலில் இருக்கும் ரோஹிஞ்சா இனத்தவர்கள் மீண்டும் மியன்மாருக்கு நாடு கடத்தப்பட்டால் அவர்களது உயிருக்கு ஆபத்தாக அமையும் என்று அவர்கள் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இந்த வழக்கை 14 நாட்கள் ஒத்தி வைத்த நீதிபதி, ரோஹிஞ்சா இனத்தவர்களை மிரிஹானவிலுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள தடுப்பு முகாமில் தொடர்ந்தும் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதேவேளை, இலங்கையிலுள்ள தடுப்பு முகாமொன்றில் வைக்கப்பட்டுள்ள ரோகிஞ்சா அகதிகளுக்கு அகதி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்திடம் முன் வைக்கப்பட்டுள்ளது.
பெண்ணொருவரின் வங்கி அட்டையை திருடி அதன்மூலம் பெருந்தொகை பணத்தை பெற்றுக்கொண்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெழுவ பிரதேசத்தை சேர்ந்த அண்ணன் மற்றும் தங்கை ஆகியோரே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண்ணொருவரின் வங்கி அட்டை திருடி பல வங்கி ஏ.டி.எம் இயந்திரம் மூலம் 335000 ரூபாவை கொள்ளையடித்துள்ளனர்.
வங்கி அட்டையின் உரிமையாளரான பெண் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் குவைத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதன்போது அவர் சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு உதவியாக இருந்த மற்றொரு பெண் வங்கி அட்டையை களவாடியுள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு உதவியாக இருந்த பெண் வைத்தியசாலையில் இருந்து வெளியேறும் போது தனது பையில் இருந்த ஏ.டி.எம் அட்டை காணாமல் போயுள்ளதனை அவர் அறிந்து கொண்டுள்ளார்.
எப்படியிருப்பினும் கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண் இலங்கை வந்த பின்னர் அவர் தனது கணக்கிற்கான வங்கி புத்தகத்தில் 50000 ரூபாய் பணம் மீளவும் பெற்றுள்ளனர்.
குறித்த சந்தர்ப்பம் வரையிலும் அவரது கணக்கில் பணம் இருந்துள்ளது. மீண்டும் ஒரு நாள் பணம் எடுப்பதற்காக அந்த பெண் வங்கிக்கு செல்லும் போது வங்கி கணக்கில் 335000 ரூபாய் பணம் குறைவடைந்துள்ள விடயம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் குறித்த வங்கி அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட பெண் முறையிட்டுள்ளார்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காலி, உடுகம மற்றும் நெழுவ ஆகிய கிளைகளில் இந்த பணம் எடுக்கப்பட்டதனால் அவர் இது தொடர்பில் நெழுவ பொலிஸாரிடம் கடந்த மாதம் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பித்த பொலிஸார், நீதிமன்ற உத்தரவிற்கமைய குறித்த வங்கிகளின் சீ.சீ.டீ.வி கமராக ஊடாக சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய நெழுவ பிரதேசத்தை சேர்ந்த 28 மற்றும் 41 வயதுடைய அண்ணன் தங்கை இருவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா இரட்டைபெரியகுளம் பகுதியில் நேற்று (19.05.2017) இரவு ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா இரட்டைபெரியகுளம் கலுகுண்ணாமடு பகுதியில் வசித்து வரும் மகிபலகே சுதேஸ் கஞ்சனே மகிபல (வயது 33) என்ற நபரே நேற்று (19.05.2017) இரவு அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
வவுனியா சமுர்த்தி மாதிரிக் கிராம வேலைத்திட்டம் மற்றும், சந்தைப்படுத்தல் கட்டிடத்தொகுதி இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஓமந்தை கிராமம் மாதிரிக்கிராமமாக தெரிவு செய்யப்பட்டு பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது ஓமந்தைப் பகுதி பயனாளிகளின் சந்தைப்படுத்தலுக்கான நான்கு கடைத்தொகுதிகளும் 40 இலட்சம் ரூபா பெறுமதியில் கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் நீல் பண்டார கப்புகின்ன, சமுர்த்தி பணிப்பாளர்களான அனுரகுனசேகர வென்னப்புலி, கே.கே.எல்.சந்திர திலக, சி.டி.களுஆராச்சி, ஜே.கே. பத்மசிறீ, ரி.என். சஞ்சிவ்வாணி, பிரதிப் பணிப்பாளர் ரணவீர மற்றும் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர் திருமதி ச.பத்மரஞ்சன், சமுர்த்தி முகாமையாளர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.