வவுனியாவில் வெட்டுக்காயத்துடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!!

வவுனியாவில் நேற்று இரவு வெட்டுக்காயத்திற்கு இலக்காகிய நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது 52 வயதான முத்துராசா உதயசேகர் என்ற மகாறம்பைக்குளத்தைச் சேர்ந்த நபரே காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். சம்பம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

சம்பவத்தில் காயமடைந்தவர் நேற்று இரவு மகாறம்பைக்குளம் பகுதியில் தனக்கு பணம் கொடுக்க வேண்டியவர் ஒருவரிடம் சென்று தனது பணத்தினைக் கேட்டுள்ளார்.

இதன்போது இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பணம் கொடுக்கவேண்டிய நபரும் அவரது மகனும் சேர்ந்து பணத்தினை மீளப்பெற்றுக் கொள்ள வந்தவர் மீது சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதையடுத்து சம்பவத்தில் காயங்களுக்கு உள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை தாக்கிய நபரும் அவரது மகனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்கில் ஹர்த்தால் : அனைத்து தரப்பினருக்கும் சம்பந்தன், ஹக்கீம், ரிஷாத் அழைப்பு!!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கங்களின் அழைப்பின் பேரில் நாளைமறுதினம் வியாழக்கிழமை வடக்கு, கிழக்கில் நடைபெறும் ஹர்த்தால் நடைபெறவுள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளதுடன், இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளன.

கூட்டமைப்பு

“தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளைமறுதினம் நடைபெறவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்குகின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி நடைபெறும் இந்தக் ஹர்த்தால் போராட்டம் வெற்றிபெற அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இந்தப் போராட்டம் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் இந்தக் ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இவர்களின் உணர்வுகளை, நியாயமான கோரிக்கைகளை நாம் மதிக்கின்றோம்.

இவர்கள் வடக்கு, கிழக்கில் தொடர்ந்து முன்னெடுத்து வரும் அறவழிப் போராட்டங்களுக்கு தமிழ்த் தரப்பினர் மட்டுமல்ல, முஸ்லிம், சிங்கள தரப்பினர்களும் ஆதரவுகளைத் தெரிவித்து வருகின்றனர். எனவே, வடக்கு, கிழக்கில்

எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறும் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கும் மூவின சமூகத்தினரும் தமது ஒத்துழைப்புகளை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு. பூரண ஹர்த்தால் போராட்டம் வெற்றிபெற வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான சட்டமூலம் கடந்த வருடம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட போதிலும் அதை இன்னமும் அரசு நடைமுறைப்படுத்தவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் உணர்வுகளை, கோரிக்கைகளை மதிக்காமல் இந்த அரசு செயற்படுகின்றது. இதை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதற்காக நாம் அயராது உழைப்போம் என்றார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் நாளைமறுதினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்படும் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முழு ஆதரவு வழங்குகின்றது என அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“வடக்கு, கிழக்கு முழுவதும் நாளைமறுதினம் வியாழக்கிழமை பூரண ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் நடத்தப்படும் இந்தப் போராட்டத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது முழு ஆதரவைத் தெரிவிக்கின்றது. இந்தக் ஹர்த்தால் போராட்டத்துக்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாடுபடும் என்றார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளைமறுதினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு எமது முழுமையான ஆதரவு வழங்கப்படும்” என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீனை தலைமையாகக்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்தக் கட்சியின் ஊடகப் பிரிவு கூறியுள்ளதாவது:-

“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளைமறுதினம் வியாழக்கிழமை பூரண ஹர்த்தால் போராட்டம் நடத்தப்படவுள்ளது. இதற்கு எமது முழுமையான ஆதரவு வழங்கப்படும். அதேவேளை, இந்தக் ஹர்த்தால் போராட்டத்துக்கு அனைத்ததுத் தரப்பினரும் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை, காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவை தீர்க்கப்பட வேண்டும். இதில் அரசு கரிசனை செலுத்த வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தை முன்னிலைப்படுத்தி போராட்டம் நடத்தப்பட்டாலும், ஏனைய விடயங்கள் தொடர்பிலும் அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம்” – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் வறட்சி காரணமாக வடக்கில் அதிக பாதிப்பு!!

நாட்டில் தொடரும் வறட்சி காரணமாக 9 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குடிதண்ணீர் உட்பட தமது நாளாந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குரிய நீரைப் பெறுவதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் குளங்களும், நீர்நிலைகளும் வற்றிப்போயுள்ளதால் பல மைல் தூரம் நடந்து சென்றே நீரைப் பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,

சிறுதானியச் செய்கை உட்பட விவசாய நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பல தாவரங்கள் நீரின்றி கருகி மடியும் நிலை உருவாகியுள்ளது. குளங்களும், நீர்நிலைகளும் நீரின்றிக் காணப்படுவதால் மீன்கள் செத்து மடிகின்றதுடன், வனவிலங்குகள் மக்கள் வாழும் பகுதியை நோக்கி படையெடுத்து வருகின்றன.

அதேவேளை, உஷ்ணமான காலநிலையால் பகல் நேரங்களில் வெளியில் வருவதற்கே மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். சரும ரீதியிலான நோய்களும் ஏற்படுகின்றன என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று மதியம் வெளியிட்ட அறிக்கையில்,

வறட்சி காரணமாக கிழக்கு மாகாணத்தில் ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 847 பேரும்,

மேல் மாகாணத்தில் 2 இலட்சத்து 4 ஆயிரத்து 322 பேரும்,

தென்மாகாணத்தில் 2 ஆயிரத்து 147 பேரும்,

வடமத்திய மாகாணத்தில் 11 ஆயிரத்து 276 பேரும், வடக்கு மாகாணத்தில் 4 இலட்சத்து 50 ஆயிரத்து 523 பேரும்,

சப்ரகமுவ மாகாணத்தில் 3 ஆயிரத்து 171 பேரும்,

வடமேல் மாகாணத்தில் ஒரு இலட்சத்து 29 ஆயிரத்து 671 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகப்புக்கு செல்ல
லங்காசிறிக்கு செல்ல
advertisement

எப்போதெல்லாம் தண்ணீர் அருந்தக்கூடாது?

கோடைகாலத்தில் வெப்பத்தினால் அதிகளவு நீரினை பருகுவது கட்டாயம், தண்ணீரை அதிகமாக அருந்துவதால் உடல்நீர் சத்துடன் இருக்கும்.

அதிகப்படியான உணவினை நாம் சாப்பிட்டுவிடாமல் தடுக்கும். மேலும் உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவுகிறது. நீர் அருந்துவது நன்மையினை தந்தாலும் குறிப்பிட்ட நேரங்களில் நீரை அருந்தக்கூடாது.

நம் உடலுக்கு தேவையான நீரை அருந்திய பின்னர் அளவுக்கு அதிகமாக அருந்தக்கூடாது. நீர் அருந்துவது நன்மையினை தரும் என்றாலும் நம் உடலில் உள்ள இயற்கை உப்பினை வெளியேற்றிவிடும்.

உடலில் போதுமான அளவு நீர் இல்லை என்றால் சிறுநீரானது அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும்போது அதிகளவு நீரை அருந்தவேண்டும். தெளிந்த நிறத்தில் சிறுநீரானது வெளியேறினால் அதிக நீரை குடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

உணவினை நாம் எடுத்து கொள்ளும் முன்னர் 1 டம்ளர் நீரை பருகினால் அதிக உணவினை நாம் உட்கொள்வதை தடுக்கலாம்.

சாப்பிட்ட பின்னரோ அல்லது முன்னரோ அதிக நீரை நாம் பருகுவது அசௌகரியத்தினை உண்டாக்கும்.

சாதாரண உடற்பயிற்சிக்கு பின்னர் மட்டுமே நீரை அருந்தவேண்டும். மிக கடுமையான உடற்பயிற்சிக்கு பின்னர் இளநீர் தான் அருந்தவேண்டும்.

தாகத்தினை தணிப்பதற்கான குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்த்து நீரையே அருந்தவேண்டும்.

ஏனெனில் குளிர்பானங்களில் உள்ள கலோரிகள் பசியினை தூண்டி உடல் எடையினை அதிகரிக்க செய்யும்.

கால்பந்தாட்ட போட்டியின்போது குண்டு வீசிய நபர் : திணறிய ரசிகர்கள்!!

நெதர்லாந்தில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியின்போது நபர் ஒருவர் புகை குண்டு ஒன்றை வீசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நெதர்லாந்தின் எந்தோவென் நகரில் நடைபெற்ற பி.எஸ்.வி எந்தோவென் மற்றும் ஏ.எஃப்.சி அஜாக்ஸ் அணிகள் இடையேயான கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது.

ஆட்டத்தினை ரசிகர்கள் கண்டுகளித்துக்கொண்டிருந்த போது நபர் ஒருவர், புகை குண்டை வீசியுள்ளார். இதனால் பார்வையாளர்கள் பகுதி முழுவதும் புகை மண்டலமாய் மாறியது.

பார்வையாளர் பகுதியில் வீசப்பட்டது புகை குண்டு என்பதால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. எனினும் பார்வையாளர்கள் பலருக்கு மூச்சு விடுவதிலும், சுவாசிப்பதிலும் பிரச்சனை ஏற்பட்டது.

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பார்வையாளர்கள் மருத்துவமனைக்கு முதலுதவிக்காக கொண்டுசெல்லப்பட்டனர்.

இதனால் சிறிது நேரம் கால்பந்தாட்டம் நிறுத்தப்பட்டு, மீண்டும் தொடங்கப்பட்டது. புகை குண்டு வீசிய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

101 வயதில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் : அசத்தும் இந்திய மூதாட்டி!!

 
நியூசிலாந்தில் நடைபெற்ற மூத்தோருக்கான உலகப் போட்டியில், இந்தியாவின் 101 வயதான மான் கவுர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

மூத்தோருக்கான உலக மாஸ்டர்ஸ் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் மான் கவுர் என்ற 101 வயதான மூதாட்டி 100 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்டார்.

இவர் பந்தைய தூரத்தை 1 நிமிடம் 14 வினாடிகளில் கடந்து தங்க பதக்கம் வென்றார். இதே தூரத்தை 2009-ல் 64.42 வினாடிகளில் கடந்த சாதனைப் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

100 வயதிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் இவருடன் யாரும் கலந்து கொள்ள போட்டியாளர்கள் இல்லை. இருந்தாலும் போட்டி அமைப்பாளர்கள் அவரை ஓட சம்மதித்தனர்.

100 மீட்டர் ஓட்டத்தை தொடர்ந்து 200 மீட்டர் ஓட்டம், இரண்டு கிலோ எடையுள்ள குண்டு எறிதல், 400 கிராம் எடைகொண்ட ஈட்டி எறிதல் போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளதாக மான் கவுர் கூறுயுள்ளார்.

காப்பாற்றுங்கள் என கதறிய சிறுவன்: லண்டனில் ஓட ஓட வெட்டிக் கொலை!!

பிரித்தானியா தலைநகர் லண்டனில் 17 வயது சிறுவன் முகமூடி அணிந்த மர்ம கும்பலால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Battersea மாவட்டம் Ingrave Street வீதியில் இக்கொடூர கொலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் போது பயங்கர ஆயுதங்களுடன் முகமுடி அணிந்து காரில் வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல், தெருவில் சைக்கிளில் வந்த 17 வயது சிறுவனை ஓட ஓட வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என சிறுவனின் கதறலை கேட்டு அப்பகுதி குடியிருப்பாளர்கள் எச்சரிக்கை உடனே ஒலியை எழுப்பியுள்ளனர்.

சம்பவயிடத்திற்கு விரைந்த மருத்துவ உதவியாளர்கள் சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சிறிது நேரத்தில் சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சம்பவயிடத்தில் தடயவியல் நிபுணர்கள் குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மர்ம நபர்கள் அனைவரும் முகமூடி அணிந்திருந்தால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

1300 கிலோ மீற்றர் தனியாக பயணம் : அவுஸ்திரேலியாவை கடக்க முயன்ற 12 வயதுச் சிறுவன்!!

அவுஸ்திரேலியாவில் 12 வயது சிறுவன் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இருந்து மேற்கு அவுஸ்திரேவின் பேர்த் நகருக்கு தனியாக வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.

சிறுவன் ஆயிரத்து 1300 கிலோ மீற்றர் வரை பயணம் செய்திருந்த நிலையில், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் புரோகன் ஹில் பகுதியில் தடுத்து நிறுத்தி கைது செய்த பொலிஸார் புரோகன் ஹில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சிறுவன் அப்போது நியூ சவுத் வேல்ஸின் கென்டால் பகுதியில் இருந்து அவுஸ்திரேலியாவில் பல முக்கியமான விவசாய பண்ணைகளளை கடந்து நெடுஞ்சாலை வழியாக நூற்றுக்கணக்கான கிலோ மீற்றர்கள் பயணம் செய்து புரோகன் ஹில் பகுதியில் சென்றுக்கொண்டிருந்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்துள்ளது. பெற்றோர் தமது மகனை காணவில்லை பொலிசில் புகார் அளித்துள்ளர். எங்கு நிறுத்தாது பயணம் செய்தாலும் பேர்த் செல்ல 40 மணிநேரம் எடுக்கும் எனக் கூறப்படுகிறது.

எவரும் சந்தேகம் கொள்ளாதபடி சிறுவன் தன்னை வயது வந்தவர் போல் காட்டிக்கொண்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சிறுவன் பார்க்கும் 19 முதல் 20 வயது மதிக்கத்தக்கவராக இருந்தால், கோபார் என்ற நகரத்தின் பெட்ரோல் நிரப்பும் நிலையத்தின் முகாமையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

சட்டத்தை மீறி வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக, இளம் குற்றவாளிகளின் தண்டனைச் சட்டத்தின் கீழ் இந்த சிறுவன் தண்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

வடகொரியா போர் விவகாரம் : டிரம்ப்பிடம் தொலைப்பேசியில் பேசிய சீன ஜனாதிபதி!!

வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்பினை மீறி, 4 முறை அணுகுண்டு, ஒருமுறை ஹைட்ரஜன் குண்டையும் வெடித்து சோதித்தது.

இதனால் வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் அந்நாட்டின் மீது மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது.

இருந்தத போதிலும் தற்காப்பு என்ற பெயரில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை விடாமல் நடத்தி வருகிறது.

வட கொரியாவின் இராணுவம் அமைக்கப்பட்ட 85-வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்பட உள்ளது. அப்போது அணு குண்டு சோதனை அல்லது ஏவுகணை சோதனை நடத்த வடகொரியா முடிவு செய்துள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கார்ல் வின்சன் என்னும் மிகப்பெரிய விமானந்தாங்கி போர் கப்பலை கொரியா கடல் பகுதிக்கு அனுப்பி வைத்தது.

இதனால், வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையிலான பனிப்போர் நாளுக்குநாள் வலுத்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட சீன அதிபர் ஜி ஜின்பிங், வடகொரியாவை தாக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில், இருதரப்பினரும் அமைதியாக நடக்க வேண்டும் என்று சீனா விரும்புவதாகவும், மொத்தத்தில் பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

கொரிய தீபகற்பத்தில் அணு சக்தி அற்ற முறையை அடையவும், வடகொரியாவின் அணுப்பிரச்னைக்கு தீர்வுகாணவும் இருதரப்பினரும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். எனவே வடகொரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த வேண்டாம் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

வீதியில் படுகாயமடைந்து மயங்கிய குஷ்பு : காப்பாற்றிய புகைப்படக் கலைஞர்!!

காஷ்மீரில் கலவரம் நடந்த போது காயம்பட்ட குஷ்பு என்னும் பெண்ணை புகைப்படகலைஞர் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளது நெகிழ்வடைய செய்துள்ளது.

Dar Yasin என்னும் நபர் புகைப்பட கலைஞராக இருக்கிறார். முக்கிய நிகழ்வுகளை புகைப்படம் எடுத்து அதை மீடியாவில் வெளியிடுவது அவரின் வழக்கம்.

காஷ்மீரில் Dar Yasi தனது பணியில் இருந்த போது சாலையில் திடீரென கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் கற்களை கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் குஷ்பு ஜன் (18) என்னும் இளம் பெண் படுகாயம் அடைந்துள்ளார். குஷ்புவின் நண்பர்கள் உதவி கேட்டும் அவருக்கு அருகிலிருந்தவர்கள் யாரும் உதவ முன் வரவில்லை.

இதனிடையில், அங்கு இருந்த Dar தன் தொழில் செயல்பாட்டின் படி அடிப்பட்டு கிடந்த குஷ்புவை புகைப்படம் எடுக்காமல், மனிதாபிமான அடிப்படையில் அவரை கையில் தூக்கி கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

அவரின் செயல் குறித்து பலரும் பாராட்டி வரும் நிலையில், Dar கூறுகையில் எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். குஷ்புவும் எனக்கு மகள் போல தான்.

நாம் ஒருவருக்கு தந்தையாக இருக்கும் போது, ஒருவர் உதவி கிடைக்காமல் இருப்பதை பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது என கூறியுள்ளார்.

Dar, குஷ்புவை தூக்கி கொண்டு ஓடும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது

கனடா விஞ்ஞானிகளால் இரவு வானில் கண்டுபிடிக்கப்பட்ட புது வகையான ஒளி!!

இரவு வானில் தோன்றிய புதிய வகை ஒளியை அரோரா ஆர்வலர்கள் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். கனடா கால்கரி பல்கலைக்கழகத்தின் எரிக் டொனோவன் என்பவர் இந்த ஒளியை கண்டுபிடித்துள்ளார்.

குறித்த ஒளியை வகைப்படுத்தப்பட்டுள்ள தோற்றப்பாடு என உணராத நிலையில் அதற்கு புரோட்டான் வில் என குழுவின் ஏனையவர்கள் பெயரிட்டுள்ளனர்.

வளிமண்டலத்தின் உள்ள அதிக அளவிலான பகுதியிலுள்ள விரைவான உஷ்ண வாயு சூடான நீரோடமாக இருப்பதாக அரோரா குழுவினர் பரிசோதித்ததுள்ளனர்.

பூமியின் மேற்பரப்பில் 300 கிலோ மீற்றர் தூரத்தின் (190 மைல்கள்) அளவைக் கணக்கிடுவதற்காக மின் துளைப்பான் சாதனங்களை ஐரோப்பிய விண்வெளி மையம் (ESA)அனுப்பியது. இதன்போது, வெளியில் இருந்ததைவிட உள்பகுதியில் காற்றின் வெப்பநிலை 3,000 செல்சியஸ் (5,432F) சூடான வெப்பநிலையாக காணப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட புகைப்படங்களில் ஊதா நிறத்திலான ஒளி ஒன்று தோன்றுகின்றது. ஒப்பீட்டளவில் சிறிய அளவு கொண்ட இந்த ஊதா ஒளி பெரிய ஊதா ஒளியாக காட்சியளிக்கின்றது.

ஆனால் அது பூமியின் காந்தப்புலத்தில் சூரிய துகள்களுடன் தொடர்புடைய தண்டு அல்லது அதுவொரு அரோரா இல்லை தோன்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இவ்வாறு கண்பிடிக்கப்பட்ட ஒளிக்கு குறித்த ஆர்வலர்கள் ஸ்டீவ் என பெயரிட்டுள்ளனர்.

அரோரா என்பது வடதுருவமான ஆர்க்டிக் மற்றும் தென்துருவ அண்டார்க்டிக் பகுதிகளில் ஏற்படும் இயற்கை ஒளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல கிரிக்கெட் வீரர் டில்ஷானை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!!

இலங்கை கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் திலகரட்ன டில்ஷானை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டாரவினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கு ஒன்றில் டில்ஷான் ஆஜராகவில்லை. இதனையடுத்து நீதவானினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திலக்கரத்ன டில்ஷானுக்காக ஒருவரும் ஆஜராகாமையினால் குறித்த வழக்கிற்காக பணம் செலுத்தும் நடவடிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 24ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது

கனடாவில் மனைவியை அவமானப்படுத்தியவரை குத்திக் கொலை செய்த இலங்கையர்!!

கனடாவில் மனைவியை தொடர்ந்தும் அவமானப்படுத்திய நபரை இலங்கையர் ஒருவர் கொலை செய்துள்ளார். இந்த கொலை தொடர்பான வழக்கு நேற்று நடைபெற்றது. இதன்போது சந்தேகநபர் தனது சொந்த பாதுகாப்பில் சாட்சியமளித்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமலன் தண்டபாணிதேசிகர் என்ற இலங்கையர் நேற்று கனடா நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார். அவர் தனது சாட்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

தனது பக்கத்து வீட்டவரான ஜெயராசன் மாணிக்கராஜாவுடன் முரண்பாடு காணப்பட்டது. தனது மனைவியை அவர் தொடர்ந்து அவமதிப்பதாக உணர்ந்தேன்.

மாணிக்கராஜா அடிக்கடி தனது மனைவிக்கு விசிலடித்து கிண்டல் செய்துள்ளார்., அது எனது கலாசாரத்தை மிகவும் அவமதிக்கும் விடயமாக எண்ணினேன் என தெரிவித்துள்ளார்.

அமலன் மற்றும் மாணிக்கராஜா ஆகிய இருவரும் இலங்கையில் நன்கு பரீட்சயமானவர்கள். அவர்களுக்கு இடையில் முரண்பாடுகள் காணப்பட்டுள்ளன.

2014ஆம் ஆண்டு ஜுன் மாதம் 23ஆம் திகதி அவர் ஓரளவு மதுவை அருந்திவிட்டு பக்கத்து வீட்டுக்காரருடன் பல முறை வாதிட்டுள்ளார். ஒரு கட்டத்தில், “நான் ஒரு மனிதனாக இருக்கிறேன், என்னை ஒரு மிருகமாக மாற்றிவிடாதீர்கள்” அவர் குறிப்பிட்டுள்ளார்.

அன்றைய தினம் மாலை தண்டபானிதேசிகரை அடுத்த கதவில் இருந்த அழைத்த மாணிக்கராஜா அவரை அவமானப்படுத்தியுள்ளார்.

இதன்போது தண்டபானிதேசிகர் சமையலறையில் இருந்து ஒரு கத்தி எடுத்து சென்று மாணிக்கராஜாவை எச்சரிக்க எண்ணியுள்ளார். எனினும் அது விபரீதத்தில் முடிந்துள்ளது.

சிறிது நேரத்தில் படுகாயமடைந்த மாணிக்கராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் வழக்கு விவாதங்களை நிறைவு செய்த நீதிபதி மீண்டும் அடுத்த வாரம் வழக்கு தொடரும் என அறிவித்துள்ளார்.

இலங்கை இளைஞனின் மகத்தான கண்டுபிடிப்பு : அங்கீகாரம் அளித்த அரசாங்கம்!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள குப்பை முகாமைத்துவ பிரச்சினைக்கு தீர்வாக இளைஞர் ஒருவர் புதிய இயந்திரம் ஒன்றை தயாரித்துள்ளார். குறித்த இயந்திரத்தை மேலும் அபிவிருத்தி செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

திண்ம கழிவுகளை இயந்திர உதவியுடன் துண்டாக்கி ஒதுக்குவதற்காக புதிய இயந்திரம் ஒன்றை கம்பளை, தொழுவ அம்பகும்புர பிரதேசத்திலுள்ள இளைஞர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட நிபுணர்கள் குழுவொன்று, குறித்த இளைஞரின் வீட்டிற்கு சென்று அவரது நிர்மாணிப்பினை ஆய்வு செய்துள்ளனர்.

இந்த புதிய நிர்மாணிப்பினை முழுமைப்படுத்துவதற்காக அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுப்பதற்கு அமைச்சர் கடிதம் மூலம் உறுதியளித்துள்ளார்.

நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நபர்களுக்கு மதிப்பளித்து அவர்களின் தயாரிப்புகளுக்கு உதவும் நடவடிக்கைகளை தமது அமைச்சு தொடர்ந்து முன்னெடுக்கும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தயாரிப்பினை எதிர்வரும் காலங்களின் நாட்டின் பிரச்சினைக்கு தீர்வாக பயன்படுத்திக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் இதன் போது கூறியுள்ளார்.

இந்த இயந்திரத்தை அபிவிருத்தி செய்வதற்கு அவசியமான தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்குமாறு அமைச்சர், பொறியியலாளர்களுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

ஜெயலலிதாவின் அறை கதவு உடைப்பு : மூன்று பெட்டிகளில் இருந்த பொருள் மாயம்?

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அறை கதவு உடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவின் அறை கதவு உடைக்கப்பட்டு அதில் இருந்த ஆவணங்கள் மாயமாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கொடநாடு எஸ்டேட் பங்களாவின் காவலாளியாக பணிபுரிந்து வந்த ஓம்பகதூர் என்பவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, மற்றொரு காவலாளியான கிஷன் பகதூர் கட்டிப்போடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் உள்ள அவரிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

மேலும், ஜெயலலிதா, சசிகலா அறையில் இருந்த மூன்று பெட்டிகள் உடைக்கப்பட்டுள்ளதுடன், காவலாளியை கொலை செய்தவர்கள் அந்த ஆவணங்களை திருடி சென்றிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரினால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நடிகர் தனுஷ் கதிரேசன், மீனாட்சி தம்பதியர் மகன் அல்ல என்பதற்கு நீதிபதி கூறிய காரணங்கள்!!

நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று உரிமை கோரி மேலூர் கதிரேசன், மீனாட்சி தம்பதியர் தொடர்ந்த வழக்கை இரத்து செய்து இந்திய மேல்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு பல கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், இத்தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வோம் என்று கதிரேசன் தரப்பினர் கூறியுள்ளனர்.

கதிரேசன், மீனாட்சி தம்பதியின் மகனாக தனுஷ் இருக்க முடியாது என்று நீதிபதி பி.என்.பிரகாஷ் கூறியுள்ள தீர்ப்பில், “கதிரேசன் தம்பதியரின் வாதங்களின்படி பார்க்கையில், தங்களுக்கு பிறந்த கலைச்செல்வன் என்ற மகன் பிறந்து 11ஆம் வகுப்பு படிக்கும் வரை தங்களுடன் இருந்ததாகவும், அதன்பிறகு அவர் காணாமல்போனதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், அவர் எழுதி வைத்துச் சென்றதாக கூறப்படும் கடிதத்தில், தனக்கு மனநிலை சரியில்லாத காரணத்தினால் தனது பெற்றோர் இருபது கோயில்களுக்கு அழைத்துச் சென்றதாக கூறியுள்ளார். ஆனால், கடிதத்தில் எங்குமே தான் திரைப்படத்தில் நடிக்கச் செல்வதாக குறிப்பிடவில்லை.

இதேபோல தனுஷ் மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணமானபோதும் கதிரேசன் தம்பதியர் எவ்வித பிரச்சினையும் செய்யவில்லை.

ஆரம்பத்தில் எங்களுக்கு பணம் கொடுத்து வந்தார். அவர் பிரபலமடைந்த பின்னர் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை. எனவே எங்களுக்கு உரிமை உள்ளது என்று கூறியிருந்தால் கூட பரிசீலிக்கலாம். மேலும், சிறுவயதில் காணாமல் போன எனது மகன்தான் தனுஷ் என்று கூறியிருந்தால் கூட ஏற்கலாம்.

ஆனால், பதினோறாம் வகுப்பு படிக்கும் வரை தங்களுடன் இருந்த மகன் காணாமல் போனதாகவும், அவர்தான் பின்னாட்களில் தனுஷ் என்ற பெயருடன் திரைப்படங்களில் நடிப்பதாகவும் கூறுவதை ஏற்க முடியவில்லை. இதற்கு போதுமான ஆதாரங்களையும் அவர்கள் தரப்பில் சமர்ப்பிக்கவில்லை.

அதேபோல 15.2.2002இல் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படம் வெளியாகியுள்ளது. ஆனால், 17.6.2002இல் கலைச்செல்வன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இருந்தே நடிகர் தனுஷ் 2002 மார்ச் 15 முதல் திரைப்படத்துறையில் பணியாற்றுவது தெளிவாகிறது.

நடிகர் தனுஷ் திரைப்படங்களில் ரெளடியாகவும், பெற்றோரை மதிக்காதவராகவும் நடித்துள்ளார் என்றெல்லாம் கதிரேசன் தம்பதியினர் தங்களது வாதங்களை முன்வைத்துள்ளனர். பழைய திரைப்படங்களில் நடிகர் நம்பியார் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

ஆனால், நிஜ வாழ்க்கையில் மிகவும் நல்லவராக இருந்துள்ளார். நடிப்பு என்பது வேறு, நிஜ வாழ்க்கை என்பது வேறு. கதிரேசன் தம்பதியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பாடசாலை மாற்றுச் சான்றிதழில் 13.4.1987 பிறந்த திகதியாக குறிப் பிடப்பட்டுள்ளது.

ஆனால், மருத்துவமனை ஆவணங்களில் பிறந்த திகதி 7.11.1985 என்று உள்ளது. இது போன்ற கூற்றுகள் கதிரேசன் தம்பதியரின் வாதங்களை மேலும் வலுவிழக்கச் செய்கிறது. இவர்கள் தரப்பில் வழக்குத் தொடர எவ்வித முகாந் திரமும் இல்லை.

04.10.2016 அன்று கதிரேசன் தம்பதியர் தரப்பில் நடிகர் தனுஷிற்கு சட்டத்தரணியால் மனு அனுப்பப்பட்டுள்ளது.
அதில், கஸ்தூரி ராஜாவால் கதிரேசன் தம்பதியர் உயிருக்கு ஆபத்துள்ளது. இதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நீங்களும் இயக்குநர் கஸ்தூரி ராஜாவும் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும்.

மேலும், கதிரேசன் தம்பதியரின் பராமரிப்பிற்காக மாதம் ரூ.65 ஆயிரம் வீதம் கடந்த ஓராண்டிற்குச் சேர்த்து ரூ.7 இலட்சத்து 85 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடும் தொணியில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நீதிமன்றம் உத்தரவிடுவது போல மனுவில் குறிப்பிட்டுள்ளது தவறு. மனுவில் கூறப்பட்டுள்ளவை குறித்து நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். இதுபோன்ற பல காரணங்களால் கதிரேசன் தம்பதியர் மீது இந்த நீதிமன்றத்திற்கு சந்தேகம் எழுகிறது.

மேலும், கலைச்செல்வன்தான் தனுஷ் என்பதை நிரூபிக்க மரபணு பரிசோதனை நடத்த வேண்டும் என்று கதிரேசன் தம்பதியர் தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். மரபணு பரிசோதனைக்கு உத்தரவிடுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

அதன் அடிப்படையில் இந்த வழக்கிலும் மரபணு பரிசோதனைக்கு உத்தரவிட முடியாது. 2002–-2003 இடைப்பட்ட காலங்களில் காணாமல்போன தங்களது மகன் கலைச்செல்வன்தான் தனுஷ் என்பதை நிரூபிக்க கதிரேசன் தம்பதியரிடம் போதிய ஆதாரங்கள் இல்லை. முகாந்திரம் இல்லாத ஒரு வழக்கில் மரபணு பரிசோதனைக்கு உத்தரவிட முடியாது.

கதிரேசன் தம்பதியர் தரப்பில் மேலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களையும், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களையும் பரிசீலித்தபோது கதிரேசன் தம்பதியரின் கோரிக்கையில் முகாந்திரம் இருப்பதாக தெரியவில்லை.

இதனால் இந்த வழக்கை மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் விசாரணைக்கு திருப்பி அனுப்ப முடியாது. கதிரேசன் தம்பதியரின் மகன் உண்மையில் காணாமல் போய் இருக்கலாம்.

ஆனால், அவர் தான் தனுஷ் என்று கூற முடியாது. எனவே கதிரேசன் தம்பதியரின் வழக்கை இரத்து செய்யக்கோரிய நடிகர் தனுஷின் மனு ஏற்கப்படுகிறது. தனுஷிற்கு எதிராக மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் கதிரேசன் தம்பதியர் தொடர்ந்துள்ள வழக்கு இரத்து செய்யப்படுகிறது.

கதிரேசன் தம்பதியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட துணை மனுக்கள் முடிக்கப்படுகின்றன” என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.