விஜய் சேதுபதியால் சினிமா தொழிலாளர்களுக்கு 100 பவுண் தங்கம் பரிசு!!

தென்னிந்திய சினிமா, தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் பின்னணி குரல் வழங்கும் ஒன்றிய சங்கம் சார்பில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது சங்கத்தின் தலைவர் கே.ஆர்.செல்வராஜ் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போது,

“சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட மதியழகன், கண்ணன், மகாலட்சுமி ஆகியோர், சங்கத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கை அடுத்து, உறுப்பினர்களின் ஊதியத்தை ஒன்றியத்தின் மூலம் பெறுவதற்கும், ஊதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்த வழக்கின் இறுதி விசாரணையின் போது, ஒன்றியத்தின் மூலம் ஊதியம் வழங்குதல் மற்றும் 10 சதவீதம் பிடித்தம் செய்வற்கான காரணைத்தை நீதிபதி கேட்டு அறிந்துக்கொண்டார்.

விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டதுடன், அந்த மூன்று உறுப்பினர்களை நீக்கியது செல்லுபடியாகும் என்றும் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்.

இதையடுத்து வழக்கம் போல, ஊழியர்களுக்கான ஊதியம் யூனியன் மூலமாலவே வழங்கப்பட்டு வருகிறது.

நீதிமன்ற வழக்கால் நடத்தப்படாமல் இருக்கும் 2016 – 2018 ஆம் ஆண்டுக்கான யூனியன் நிர்வாகிகள் தேர்தல், வழக்கு தீர்ப்புக்கு பிறகு முறைப்படி நடத்தப்படும்.

இதேவேளை, உலகாயுதா அமைப்பின் சார்பில் தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு துறையை சேர்ந்த 100 மூத்த கலைஞர்களுக்கு தலா ஒரு சவரன் தங்க நாணயம் வழங்கி கெளரவிக்க உள்ளனர்.

எங்கள் சங்கத்தின் சார்பில், எங்கள் யூனியனின் முன்னாள் தலைவர் டத்தோ ராதாரவி, ஹேமமாலினி, எஸ்.என்.சுரேந்தர் ஆகியோர் தங்க நாணயம் பெறுகிறார்கள்.

டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 25-ஆம் திகதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு பெப்சி அமைப்பில் அங்கம் வகிக்கும் சவுத் இந்தியன் சினி, டெலிவிஷன் ஆர்டிஸ்ட் & டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் தனது ஆதரவை தெரிவிக்கிறது.

அதன்படி, 25-ஆம் திகதி சங்கத்தைச் சேர்ந்த டப்பிங் கலைஞர்கள் எந்தவித டப்பிங் வேலையிலும் ஈடுபட மாட்டார்கள்.

அவர்களுக்கு யூனியன் வாழ்த்துக்களை தெரிவித்திக் கொள்வதோடு, இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுக்கும், 100 சவரன் தங்கத்திற்கான முழு செலவையும் ஏற்றுக் கொண்ட நடிகர் விஜய் சேதுபதிக்கும் யூனியன் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

விஜய் சேதுபதி எங்கள் யூனியனின் உறுப்பினர் என்பதில் பெருமை கொள்கிறோம்.” என்று தெரிவித்தார்.

கல்பனா சாவ்லா வேடத்தில் பிரியங்கா சோப்ரா!!

சமூகத்தில் பலரும் நிறைய சாதனைகளை செய்து வருகின்றனர். அதில் ஒருசிலரின் சாதனைகள் மக்களுக்கு தெரியும். அப்படி சாதனை செய்த பெண் என்ற வகையில் அனைவராலும் அறியப்பட்டவர் கல்பனா சாவ்லா.

விண்வெளிக்குப் பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் இவர், தற்போது இவருடைய வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அறிமுக இயக்குனர் பிரியா மிஷ்ரா இயக்க, பொலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, கல்பனா சாவ்லா வேடத்தில் நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்திற்காக கடந்த ஏழு வருடங்களாக பல விடயங்களை தயார் செய்து வந்திருக்கிறாராம் இயக்குனர்.

விரைவில் படத்தை பற்றி மற்ற விடயங்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது, இதற்கு முன் பிரியங்கா சோப்ரா குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் யுவதி மீது துஷ்பிரயோக முயற்சி : மடக்கி பிடித்த மக்கள்!!

யாழ். ஊர்காவற்றுறையில், யுவதி ஒருவருக்கு மயக்க மருந்தினை தூவி துஷ்பிரயோகம் செய்வதற்கு முயற்சி செய்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு நேற்றைய தினம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்றைய தினம் அதிகாலை 12.30 மணியளவில் ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள வீடொன்றில் நுழைந்த நபர், தனித்து இருந்த 18 வயதுடைய யுவதியின் மேல் மயக்க மருந்தினை தூவி வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சி செய்துள்ளார்.

இருப்பினும், இதனை கண்ட குறித்த யுவதி உடனேயே கூக்குரலிட்டு அயலவர்களை அழைத்துள்ளார். அங்கு வந்த அயலவர்கள் சந்தேகநபரை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகநபர் முன்பே பொலிஸ் கடமையில் இருந்து நீக்கப்பட்டவர் எனவும், மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பகுதியை சேர்ந்த 35 வயதுடையவர் எனவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த நபரை நேற்றைய தினம் ஊர்காவற்றுறை நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது, எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இவர் ஊர்காவற்றுறை பகுதியில் தங்கி இருந்து கட்டட நிர்மாண பணிகளில் ஈடுபட்டு வருபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய், தாத்தா, மாமா ஆகியோரால் தொடர்ந்து பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட 13 வயது சிறுமி!!

மொனராகலை மாவட்டத்தின் தனமல்வில பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிறுமியின் தாய் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், தாத்தா மற்றும் இராணுவ சிப்பாயான மாமாவை தனமல்வில பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

தனமல்வில பகுதியின் உஸ்ஸகல என்ற கிராமத்தில் பதின்மூன்று வயது நிரம்பிய சிறுமி தனது உறவினர்களால் தொடர்ந்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயின் இரண்டாவது கணவனும் தொடர்புபட்டுள்ளார். எனினும் அவரை கைது செய்யும் போது குறித்த நபர் தலைமறைவாகி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுமி அவரது தாத்தா மற்றும் மாமா ஆகியோரால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமி மொனராகலை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

வவுனியாவில் 27ஆம் திகதி கடையடைப்பு இல்லை : வர்த்தக சங்கம் அறிவிப்பு!!

எதிர்வரும் 27 ஆம் திகதி கடையடைப்பு செய்யப்பட மாட்டாது. ஆனால் வேறு வழிகளில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க முடிவு எடுத்துள்ளதாக வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி எதிர்வரும் 27ஆம் திகதி பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரி இன்று பிற்பகல் 2 மணியளவில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கடிதம் வழங்கப்பட்டது.

இது தொடர்பில் வவுனிய வர்த்தக சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் மாலை 5 மணியளவில் கலந்துரையாடியிருந்தனர். இதில் நிர்வாக குழு உறுப்பினர்கள் 10 பேர் கலந்து கொண்டனர்.

இதன்போது எதிர்வரும் 27ஆம் திகதி பூரண கடையடைப்பு மேற்கொள்வது தொடர்பில் அவர்கள் கேட்டுள்ள போதும் அதனை மேற்கொள்ள போதிய கால அவகாசம் இல்லை என தீர்மானிக்கப்பட்டதுடன்,

இப்போராட்டத்திற்கு ஆதரவாக அன்றைய தினம் கடைகளில் கறுப்பு கொடியை பறக்க விட்டு வழமை போல் வர்த்தக நிலையங்களை திறந்து ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் முதலாம் திகதி தொழிலாளர்கள் உரிமைக்காக கடைகள் பூட்டப்பட்டு விடுமுறை வழங்கப்படும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனால், வடக்கின் ஏனைய மாவட்டங்களில் பூரண கடையடைப்புக்கு வர்த்தக சங்கங்கள் ஆதரவு வழங்கவுள்ளதாக தெரியவருகிறது.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் கந்தசுவாமி ஆலயத்தில் தேங்காய் உடைப்பு!!

 
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டமானது இரண்டு மாதத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள், வவுனியா கந்தசாமி ஆலயத்தில் இன்று(24.04.2017) தேங்காய் உடைத்து அழுது புலம்பி இறைவனிடம் நீதி கேட்டுள்ளனர்.

தங்களது உறவினர்கள் தொடர்பில் பதில் அளிக்கக் கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

தங்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது இரண்டு மாதங்களை அடைந்துள்ள போதும் அரசாங்கம் உரிய பதிலைத் தரவில்லை எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட காத்திரமான நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை என போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும், கந்தசாமி ஆலய முன்றலில் ஒன்று கூடி தேங்காய் உடைத்து அழுது புலம்பி “முருகா! நீயாவது எமக்கு நீதியைப் பெற்றுத்தா” என அழுது வேண்டியுள்ளனர்.

வவுனியா வர்த்தக சங்கத்திடம் 27ம் திகதி முழு அடைப்பிற்கு கோரிக்கை விடுத்தது மனு கையளிப்பு!!

 
வவுனியாவில் காணாமற்போன உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு ​வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 27ம் திகதி இடம்பெறவுள்ள முழுக் ​கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கோரி வர்த்தகர் சங்கத் தலைவரிடம் மனு கையளிக்கப்பட்டுள்ளது.

தமது சங்கத்திலுள்ள உறுப்பினர்களுடன் ​கலந்துரையாடல் ​ ஒன்றினை மேற்கொண்ட பின்னர் பதிலினை வழங்குவதாகத்​ காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் வர்த்தக சங்கத் தலைவர்​ தெரிவித்தார்.

வவுனியாவில் 60வது நாளாக தொடரும் போராட்டம்!!

 
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 60 ஆவது நாளாகவும் இன்றும் (24.04.2017) தொடர்கிறது.

குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்கக் கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரியும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் சாதகமான பதில் கிடைக்கும் வரையில் தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் மாற்றுத்திறனாளியால் மாணவிக்கு துவிச்சக்கரவண்டி வழங்கல்!!

 
வவுனியா மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தில் இன்று (24.04.2017) காலை 9.30 மணியளவில் துவிச்சரவண்டி வழங்கும் நிகழ்வு மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.ஸ்ரீனிவாசன் தலைமையில் இடம்பெற்றது.

வவுனியா சாந்தசோலையைச் சேர்ந்த ஸ்ரீதரன் பிரியதர்சினி குடும்பத்தினர் சமூக சேவைகள் செய்வதில் மற்றவர்களுக்கு நல்ல முன்னுதாரணமாக விளங்குகின்றார்கள். ஜெவனிக்க என்ற மாற்று திறனாளியான பிள்ளையை எடுத்து வளர்த்து வரும் இவர்கள் இன்று பிறரிடம் உதவி பெற்று உதவி வேண்டி நிற்பவர்களுக்கு உதவி வழங்கி வருகின்றார்கள்.

அந்த வகையில் இன்று கோவில்புளியங்குளம் முத்தமிழ் வித்தியலாய மாணவியான சிவசாளினி சுரேஸ்குமார் என்பவருக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி உதவியுள்ளார்.

இந்நிகழ்வில் மாவட்ட காலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வ.பிரதீபன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், பாசாலை அதிபர்களான ந.சிவலிங்கம், மு.ஜெயசீலன், தொழிநுட்ப உதத்தியோகத்தர் சோதிநாதன், மாணிக்கம் ஜெகன், சிறுவர்கள் உரிமை நலன்பேணும் உத்தியோகத்தர் செல்வகுமார், மற்றும் பொதுமக்கள். பொது அமைப்பினர் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் கடையடைப்பு பற்றி தீர்மானிக்கவில்லை : வர்த்தக சங்கம் அறிவிப்பு!!

எதிர்வரும் 27 ஆம் திகதி வவுனியாவிலும் கதவடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அப்படியானதொரு முடிவை இந்த நிமிடம் வரை வவுனியா வர்த்தக சங்கம் எடுக்கவில்லை என அதன் தலைவர் ரி.கே.இராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் நீலமீட்புக்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டியும் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டங்கள் இரண்டு மாதங்களை கடக்கின்றன. அந்த மக்களின் போராட்டங்களையும், அவர்களின் உணர்வுகளையும் வர்த்தக சமூகமாகிய நாமும் மதிக்கின்றோம். அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றபடபட வேண்டும் என்பதும் எமது அவா.

இருப்பினும் வவுனியா மற்றும் கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைக்கு அமைவாக வவுனியாவிலும், கிளிநொச்சியிலும் எதிர்வரும் 27ம் திகதி பூரண கதவடைப்பு நடைபெறும் என செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

ஆனால் வவுனியா வர்த்தக சங்கம் அப்படியான எந்தவொரு முடிவையும் இதுவரை எடுக்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களோ அல்லது அவர்களுடன் தொடர்பு பட்டவர்களோ இதுவரை எம்முடன் போராட்டம் குறித்தோ அல்லது பூரண கதவடைப்பு குறித்தோ எந்தவித பேச்சுக்களும் செய்யவில்லை.

அதேபோல் எமது வர்த்தச சங்கமும் இது தொடர்பில் எந்த தீர்மானமும் மேற்கொள்ளவில்லை. ஆகவே, வவுனியாவில் பூரண கதவடைப்பு என தற்போது வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என்பதே எமது கருத்து எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் பெற்றோல் நிலையங்களில் குவிந்த மக்கள்!!

 
வவுனியாவில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகின்றது.

நேற்று நள்ளிரவு முதல் பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வவுனியாவில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகளவாக காணப்படுகின்றது.

இந்நிலையில் பொரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

யாழ்ப்பாணத்திலிருந்து சிவனொளிபாத மலைக்குச் சென்ற இந்து அடியார்களுக்கு நேர்ந்த அவலம்!!

சிவனொளிபாத மலைக்குச் சென்ற இந்து பக்தர்களுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் நல்லூரிலிருந்து இந்து மதகுருமார்கள் உள்ளிட்ட சிவ பக்த அடியார்கள் இவ்வாறு சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றுள்ளனர்.

கடந்த 22ம் திகதி இரவு சிவனொளிபாத மலை உச்சிக்கு அருகாமையில் வைத்து ஒரு தரப்பினர், குறித்த சிவ பக்தர்களுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஓம் நமசிவாய என்னும் நாமத்தை உச்சரித்துக் கொண்டு சிவாய நம என்னும் கொடி ஏந்திக் கொண்டு மலை உச்சிக்கு ஏறியதாக யாத்திரைக்கு சென்ற மதகுரு ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் பகுதியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொடிகளை ஏந்தி நமசிவாய என பிரார்த்ததனை செய்யக் கூடாது என சிலர் தம்மை அச்சுறுத்தியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தாம் இன, மத, மொழி பேதங்களை பாராட்டாத தரப்பினர் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதனை தவிர்க்க பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யாத்திரை செய்த எமக்கு சில சிங்கள சகோதரர்கள் உணவு பானங்களை வழங்கி உதவியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வாறான ஒர் சம்பவம் குறித்து பொலிஸாருக்கு எவ்வித முறைப்பாடு செய்யப்படவில்லை என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இலங்கையில் யார் கண்ணிலும் தென்படாத புதிய நீர்வீழ்ச்சி கண்டுபிடிப்பு!!

 
இலங்கையில் இதுவரை யார் கண்ணிலும் தென்படாத புதிய நீர்வீழ்ச்சி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பலங்கொடை, கீழ் வலேபொட பிரதேத்தில் உள்ள காடு ஒன்றில் கிட்டத்தட்ட 100 அடி உயரத்திலான நீர்வீழ்ச்சி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட எவர் கண்ணிலும் இந்த நீர்வீழ்ச்சி இதுவரை தென்படவில்லை.

சமனல காட்டில் ஆரம்பித்து கீழ் நோக்கி செல்லும் புதுகே ஓய கற்களில் உருவாகியுள்ள இந்த நீர்வீழ்ச்சி, கீழ் பகுதியில் உள்ள கருங்கற்களில் உருவாகியுள்ள நீர்த்தேக்கத்தின் மீது விழுவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நீர் வீழ்ச்சி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கண்களில் இதுவரை தென்பட்டதில்லை. இதனை தாம் புதிதாக கண்டுபிடித்துள்ளதாக இமுலபே பிரதேச சபையின் முன்னாள் தலைவர் எஸ்.ஏ.ரத்னபால வலேபொட தெரிவித்துள்ளார்.

இதற்கு தாங்கள் புதுஓய நீர்வீழ்ச்சி என பெயர் வைப்பதற்கு யோசனை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நீர்வீழ்ச்சி உள்ள இடத்தில் வீதி ஒன்றை நிர்மாணித்து சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இரவில் அதிக நேரம் தூங்குபவர்களுக்கு ஆயுள் காலம் குறைவாம்!!

தினசரி நாம் குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். என்றாவது ஒரு உடல் அசதி அல்லது உடல்நல குறைப்பாட்டின் காரணமாக அதிக நேரம் தூங்கலாம். ஆனால் அதையே பழக்கமாக கொண்டு 8 மணிநேரத்திற்கு அதிகமாக தூங்குவதால் உடல்நலனானது பாதிக்கப்படுகிறது.

அதிக தூக்கம் மட்டுமல்லாது 6மணி நேரத்திற்கு குறைவான தூக்கமும் உடல்நலத்தினை பாதிக்கும். தொடர்ந்து நாம் தூங்குவதால் உடலுக்கு கிடைக்க வேண்டிய ஆற்றலானது குறைவதால் இதயம், மூளை ஆகியவற்றின் செயல்பாடானது குறைகிறது.

மன அழுத்தம் உடையவர்கள் அதிக நேரம் தூங்குவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சில நேரங்களில் இந்த அதிக தூக்கம் கூட மன அழுத்தத்தினை குறைக்க உதவுகிறது.

இரவில் நாம் தூங்குவதால் மூளைக்கு ஓய்வு கிடைத்து காலை வேளையில் புத்துணர்ச்சியடைகிறது. நாம் அதிக நேரம் தூங்குவதால் மூளை மழுங்கி அறிவாற்றலானது குறைகிறது. மிக குறைந்த நேரம் தூங்கினாலும் அது அல்சீமியர் என்னும் ஞாபகமறதி நோயினை உண்டாக்கும்.

10 மணி நேரங்களுக்கு மேலாக தூங்குபவர்களின் இதய செயல்பாடானது பாதிப்படைகிறது. இதனால் இதயம் தொடர்பான பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகின்றது.

தினசரி 9 மணி நேரத்திற்கு மேலாக தூங்குபவர்கள் 50 சதவீதம் நீரிழிவு நோயினால் பாதிப்படைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இதே போன்று 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

சரியான அளவிலான தூக்கமானது உடல் சோர்வினை நீக்கி புத்துணர்ச்சியினை அளிக்க வல்லது. அளவுக்கு அதிகமான தூக்கமானது உடல் சோர்வு, வலி மற்றும் தலைவலியினை உண்டாக்கும்.

அதிக நேரம் தூங்கும் பெண்களுக்கு கருத்தரிப்பது குறைவு என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மாதவிடாய் சுழற்சி, ஹார்மோன்கள் சுரப்பதில் ஏற்படும் மாற்றமே இதற்கு காரணம்.

உடல் எடையினை அதிகரிப்பது நாம் எடுத்து கொள்ளும் உணவுகள் மற்றும் உடற்பயிற்சி இன்மை மட்டும் காரணமல்ல. 9 மணி நேரங்களுக்கு அதிகமாக தூங்குபவர்களின் உடல் எடையானது 21சதவீதம் அதிகரிக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக அதிக தூக்கமானது இறப்பினை கூட ஏற்படுத்தும். தொடர்ந்து பல நாட்களாக அதிக நேரம் தூங்கவதை வழக்கமாக வைத்திருப்பவர்களின் ஆயுள் காலமானது குறையும்.

கொழுப்பைக் குறைக்க வேண்டுமா? நிலக்கடலை போதும்!!

ஏழைகளின் பாதாம் என்று நிலக்கடலையைக் குறிப்பிட்டாலும், பாதாம் பருப்பைவிட உடல் ஆரோக்கியத்துக்கு அதிக நன்மை தரக்கூடியது என ஆய்வுகள் உணர்த்துகின்றன.

நாகரிக வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் பாரம்பர்ய உணவுப் பொருள்கள் பலவற்றை நாம் மறந்து வருகிறோம். அந்தவரிசையில் நிலக்கடலையையும் நாம் மறந்துவிட்டோம்

நிலக்கடலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கரையும் (நல்ல HDL) கொழுப்பு, புரோட்டின், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன.

இத்தனைச் சத்துகள் நிறைந்திருக்கும் நிலக்கடலையைச் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். அதில் முக்கியமான சிலவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்

நினைவாற்றல் அதிகரிக்கும்

இதில் உள்ள வைட்டமின் பி3 மூளையின் செயல்பாட்டைத் தூண்டுவதோடு, நினைவாற்றலையும் அதிகரிக்க உதவும். நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது.

மன அழுத்தம் போக்கும்

நிலக்கடலையில் டிரைப்டோபீன் (Tryptophen) என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இது மூளை நரம்புகளைத் தூண்டும் செரட்டோனின் என்ற உயிர்வேதிப்பொருள் சுரக்க உதவுகிறது. இதனால் மனஅழுத்தம் குறைகிறது.

கொழுப்பைக் குறைக்கும்

நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்புச் சத்து அதிகமாகும் என்று நம்மில் பலர் நினைத்திருக்கிறோம். மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில் அதிகம் உள்ளது.

நிலக்கடலையில் உள்ள தாமிரச் சத்து நமது உடலில் Low-density lipoprotei எனப்படும் கெட்ட கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் High-density lipoprotein – HDL கொழுப்பை அதிகப்படுத்துகிறது.

பித்தப்பை கல் கரைக்கும்

நிலக்கடலையை தினமும் ஒரு அவுன்ஸ் (30 கிராம்) அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், 25 சதவிகிதம் பித்தப்பை கல் உருவாகும் வாய்ப்பு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.

உலகிலேயே மோசமான விமான நிலையம் இது தான்!!

மக்கள் சேவையில் உலகிலேயே மோசமான விமான நிலையமாக அமெரிக்காவில் உள்ள JFK விமான நிலையம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

நுகர்வோர் உரிமைகள் வலைத்தளம் ஒன்று சமீபத்தில் மக்களிடம் விமான நிலையங்கள் குறித்து ஆய்வு நடத்தியது.

அதில், பிரித்தானியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் JFK விமான நிலையம் தான் உலகிலேயே மோசமான விமான நிலையம் என ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் அங்கு சுற்றுலா செல்லும் போது மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக தாங்கள் காக்க வைக்கப்பட்டதாக குமுறியுள்ளனர்.

மோசமான விமான நிலையங்கள் பட்டியலில் இரண்டாமிடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் சர்வதேச விமான நிலையம் உள்ளது. மூன்றாம் இடத்தில் சிங்கப்பூரின் San Francisco விமான நிலையம் உள்ளது.
இந்த பட்டியலில் ஆறாம் இடத்தில் பிரித்தானியாவின் Glasgow விமான நிலையம் உள்ளது.

இது குறித்து நுகர்வோர் வளைதள நிறுவனர் James Walker கூறுகையில், விமானம் தாமதமாவது மற்றும் திடீரென ரத்தாவது என்பதே பெரும்பாலான பயணிகளின் புகாராக உள்ளது.

மேலும், பயணிகளை நடத்தும் விதம் குறித்து புகார் வருகிறது என கூறியுள்ளார். கடந்த வருடம் மட்டும் விமானம் தொடர்பாக 84,287 புகார்கள் பயணிகளிடமிருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.