நடிகர் பிரசன்னாவும், சினேகாவும் நலிந்த விவசாயிகளுக்கு நிதியுதவி செய்துள்ளனர். நலிவடைந்த விவசாயிகள், தங்கராஜ், பழனியாண்டி, வெங்கடாசலம் உள்ளிட்ட 10 பேருக்கு 2 லட்சம் நிதியுதவி செய்துள்ளனர்.
தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைவரும் குரல் கொடுத்து வரும் இவ்வேளையில் பிரசன்னா, சினேகா ஆகியோர் செயலில் இறங்கியதை திரையுலகினர் பாராட்டி வருகின்றனர்.
விஷால் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கடந்த மாதம் டெல்லிக்கு சென்றிருந்தார். பெருமைமிகு தமிழர்கள் விழாவில் நலிந்த விவசாயிகள் 10 பேருக்கு விஷால் உதவியது குறிப்பிடத்தக்கது.
வளர்மதி மற்றும் சுவாதி என்னும் இரண்டு மாணவிகள் கடந்த 15 ஆம் திகதி மூன்று மாணவர்களுடன் கோவையில் இருந்து நெடுவாசல் போராட்டத்திற்கு ரெயில் மூலம் சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் ரெயிலில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக துண்டு பிரசுரங்கள் மற்றும் பறை அடித்தும் பயணம் செய்தனர்.
இதனால் இவர்களை பொலிசார் குளித்தலையில் வைத்து 5 மாணவர்களையும் மாவோஸ்ட் இயக்கத்தை சார்ந்தவர்கள், பொதுமக்களிடையே வன்முறையை தூண்டுகிறார்கள் என கூறி கைது செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து மாணவிகளை பெண்கள் சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் மாணவர்களின் வழக்கறிஞர் ராஜா கூறும்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களை காவல்துறையினர் நிர்வாணப்படுத்தி துன்புறுத்துவதாக மாணவிகள் கூறியதாக தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் சென்னையில் உள்ள குப்பைத் தொட்டியில் சுமார் 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான இலங்கை பணம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையின் பெசன்ட் நகர் சாஸ்திரிநகர் பொலிஸ் பூத் அருகே உள்ள குப்பை தொட்டியை சுத்தம் செய்வதற்கு ஒப்பந்த பணியாளர் உமா என்பவர் வந்துள்ளார்.
அப்போது அவர் குப்பைத் தொட்டியின் உள்ளே இலங்கைப்பணம் இருப்பதை கண்டு, அதை அருகில் உள்ள சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்
அதன் பின் இப்பணம் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணம் எவ்வாறு குப்பை தொட்டிக்கு வந்தது என்பது தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கமரா பதிவுகளை கைப்பற்றி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மேலும் குப்பைத் தொட்டியில் இருந்த எடுத்த பணம் சுமார் 11 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா ஜெகதீஸ்வரன் சாதனை படைத்துள்ளார்.
இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடத்தும் கனிஸ்ட பிரிவு மெய்வல்லுனர் போட்டிகள் தியகமை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமானது.
நேற்று நடைபெற்ற கோலூன்றிப் பாய்தலில் அனிதா ஜெகதீஸ்வரன் 23 வயதிற்குட்பட்ட மகளிருக்கான போட்டியில் களமிறங்கியிருந்தார். இதில் அவர் 03.40 மீற்றருக்கு தாவி புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், மீண்டும் ஒருமுறை தேசிய சாதனையை நிலைநாட்டுவதே தமது இலக்கு என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 20 வயதிற்குட்பட்ட மகளிருக்கான கோலுன்றிப் பாய்தல் போட்டியில் 2.90 மீற்றருக்கு பாய்ந்த வி. கிரிஜா வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார்.
மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியில், யாழ். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் எஸ். சங்கவி 18 வயதிற்குட்பட்டவர் பிரிவில் 33.05 மீற்றருக்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.
இதன் மூலமாக வடமாகாணத்தின் நட்சத்திர நாயகிகளாகியுள்ளார்கள் இந்த மூன்று யுவதிகளும். அவர்களுக்கு பாடசாலை சமூகத்தினரும், பெற்றோரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் பல மாவட்டங்களின் வெப்பநிலை ஐந்து பாகை செல்சியஸினால் அதிகரித்துள்ளதாக காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போது நிலவும் உஷ்ணமான காலநிலை அடுத்த மாதம் நடுப்பகுதி வரையிலும் நீடிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக பட்ச வெப்பநிலையாக, திருகோணமலையில் 37.7 பாகை சென்டிகிரேட் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக கால நிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், பருவப் பெயர்ச்சி காலநிலை மாற்றத்தினால் இவ்வாறு வெப்பநிலை அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதிகரித்துள்ள இந்த வெப்ப நிலையில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஏற்ற ஆடைகளைப் பயன்படுத்த கொள்ள வேண்டும் என காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் அத்துல கருணாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டில் இப்பொழுது முன்னர் எப்பொழும் இல்லாத அளவிற்கு வெப்பநிலை அதிகரித்துள்ள இந்த நிலையில், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெப்ப சூழ்நிலையால் பல்வேறு தொற்று நோய்கள் அதிகரிப்பதற்கான காரணிகள் ஏற்படக்கூடும் என்றும், அதற்கு ஏற்றால் போல மக்கள் பாதுகாப்பான விதத்தில் செயற்படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வவுனியா, கிளிநொச்சி, முல்லைதீவு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளின் திறண்களை உலகறிய செய்ய கலை இலக்கிய கண்காட்சி மற்றும் விளையாட்டு விழாவை 21.04.2017 தொடக்கம் 22.04.2017 வரை VAROD நிறுவனமானது வவுனியாவில் வெற்றிகரமாக நடாத்தி முடித்திருந்தது.
இதில் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு தமது திறமைகளை பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தினர்.
விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் அரச, அரசார்பற்ற உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அமெரிக்காவின் விமானங்களைத் தாங்கிய போர்க் கப்பலை மூழ்கடிக்க தயார் என வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.
கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போர்க் கப்பல்கள் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தன்னுடைய பலத்தை நிரூபிப்பதற்காக அமெரிக்காவின் விமானங்களைத் தாங்கிய போர்க் கப்பலை மூழ்கடிக்க தயாராக இருப்பதாக வடகொரியாக மிரட்டல் பாணியில் தெரிவித்துள்ளது.
வட கொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனைக்கு சர்வதேச நாடுகள் எச்சரிக்கை விடுத்தும் அந்நாடு அதிலிருந்து இம்மியும் பின்வாங்குவதாக தெரியவில்லை.
அமெரிக்கா தன்னுடைய கடும் எச்சரிக்கையை விடுத்தும், அதற்கு தன்னுடைய பதிலாக சோதனையை முயற்சியினை காட்டியிருந்தது வடகொரியா.
எனினும் அந்தப் பரிசோதனை நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்தது. ஆனால், அடுத்த கட்ட முயற்சியில் இறங்கியிருப்பதாக அந்நாடு குறிப்பிட்டிருந்தது. அடுத்து கண்டம் விட்டு கண்டம் பாயும் பரிசோதனையை அடுத்த மாதம் நடத்த இருப்பதாக தெரிகிறது.
ஆனால். தென்கொரியா, ஜப்பான் சீனா போன்ற நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையில், வடகொரியாவில் நாளை மறுநாள் இராணுவத்தின் 85வது நிறுவன நாள் விழா அதிக பாதுகாப்பில் கொண்டாடப்படவுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, தனது நாட்டு இராணுவ நிறுவன விழாக்களின் போது வடகொரியா ஏவுகணை சோதனை நடத்துவது வழமையாக இருந்துவருகிறது.
இந்நிலையில், அதேபோன்று இம்முறையும் ஏவுகணைப் பரிசோதனையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாக அமெரிக்கா அஞ்சுகிறது.
எனவே அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கார்ல் வின்சல் என்ற மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க் கப்பல், ஜப்பான் கூட்டு பயிற்சி மேற்கொள்வதற்காக கொரிய கடற்பகுதிக்கு பயணித்து வருகிறது.
அணுஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனை நடத்தும் வடகொரியாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், திடீரென தாக்குதல் நடத்தினால் எதிர்கொள்ளும் வகையிலும் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போர் கப்பல்கள் ஒத்திகையில் ஈடுபட உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன.
இதற்கிடையில், வடகொரியா தனது ராணுவ பலத்தை நிரூபிக்கும் வகையில் அமெரிக்காவை எதிர்க்கொள்ளவும், அமெரிக்காவின் விமானந்தாங்கி போர்க் கப்பலை மூழ்கடிக்கவும் தயாராக இருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
இதுவொரு புறமிருக்க, சர்வதேச ஊடகங்கள் போர் பற்றியதான செய்திகளை அதிக முக்கியத்துவம்கொடுத்து வருகையில், சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஒரு செய்தியை அந்நாட்டு இராணுவத்தினருக்கு தெரிவித்துள்ளார்.
இராணுவ அதிகாரிகள் போருக்கு தயாராவது குறித்து வீரர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இன்று மாறும் சூழ்நிலைகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். போருக்கான எச்சரிக்கையுடன் எப்போதும் தயாராக இருப்பது அவசியமாகும்.
ஏனெனில் இன்றைய சூழ்நிலையில் பெரும் சிக்கலை ஏற்படுத்துவதாக இருக்கின்றன. எனவே போருக்கு தயாராகக் கூடிய சூழலில் விழிப்பாக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
25 வருடங்களாக பச்சை இலைகளையும், மர கிளைகளையும் உண்பதை பழக்கமாக கொண்ட அபூர்வ மனிதர் ஒருவரை பாகிஸ்தானில் இனம்கண்டுள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் குஜ்ரன்வாலா மாவட்டத்தில் வசித்துவரும் 50 வயதான மெக்மூத் பட் என்பவர் கடந்த 25 வருடங்களாக உணவு வகைகளை சாப்பிடுவதில் ஆர்வமின்றி, மரங்கள் மற்றும் இலை தழைகளை சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வருவதாக அந்நாட்டு வடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
மேலும் தனது சிறுவயதில் ஏற்பட்ட குடும்ப வறுமை காரணமாக, தனது பசியை தணிப்பதற்காக பச்சிலைகள் மற்றும் மரக்கிளைகளை உண்டு வந்த நிலையில், நாளடைவில் அவையே அடிப்படை உணவாக பழகிவிட்டதனால் தனக்கு வேறு உணவுகள் மீது நாட்டமில்லை என மெகமூத் பட் தெரிவித்துள்ளார்.
அத்தோடு தற்போது தினமும் 1200 ரூபாய் வரை சம்பாதிக்கும் இவர் சமைத்த உணவுகள் மீது நாட்டமின்றி பனியன், தலி மற்றும் சக் சங்கிலி போன்ற மரங்களை உண்டு வாழ்வதும், எந்தவொரு நோய் காரணமாக வைத்தியரை அணுகுவதை தாம் கண்டதில்லை என மெகமூத் பட்டின் அயலவர்கள் வியப்புற தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வணிக வளாகங்களில் வெளிநாட்டினர் பணிபுரிவதற்கு தடை விதித்தும், வணிக வளாகங்களில் உள்நாட்டினரை பணியில் அமர்த்தவும் சவுதிஅரேபிய அரசு அதிரடி உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
சவுதிஅரேபியாவில் ஏற்பட்டு வரும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் வேலையில்லா பிரச்சினையை தீர்ப்பதற்காக, அந்நாட்டு மக்களுக்கு புதிதாக 35 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சவுதிஅரேபிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும் நாட்டின் எண்ணை வளத்தை மட்டுமே நம்பாமல், வணிக ரீதியிலான உள்நாட்டு பொருளாதார வளத்தை பெருக்குவதற்கு உள்ளுர்வாசிகளை வணிக நடவடிக்கையில் ஈடுபடுத்தும் திட்டத்தை அந்நாட்டு அரசாங்கம் வகுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
அத்தோடு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்க்கு சவுதி இளவரசர் மொஹமட் பின் சல்மான் வகுத்துள்ள திட்டத்தின் பிரகாரம், வேலையின்றிருக்கும் சவுதி அரேபியர்களுக்கு உள்நாட்டு வணிக வளாகங்களில் வேலைவாய்ப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளதோடு, அந்நாட்டு வணிக வளாகங்களில் வெளிநாட்டினரை பணியில் அமர்த்தவும் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள பெற்றோல்நிரப்பு நிலையங்களில் திடீரென மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது.
பெற்றோலிய வர்த்தக சங்கம் நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக தெரிவித்திருந்த நிலையிலேயே எண்ணெய் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
திருகோணமலை துறைமுகத்திலுள்ள எண்ணெய்த் தாங்கிகளை இந்திய நிறுவனத்துக்கு (ஐ.ஓ.ஸி.) வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்த போராட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறையொன்று நிலவும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நிலவி வரும் கடுமையான வெப்பத்துடன் கூடிய காலநிலையினால் தோல் நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சமிந்தி சமரக்கோன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஊடகங்களின் ஊடாக அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்…
நாட்டில் நிலவி வரும் கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலையினால், மக்கள் அதிகளவு நீரைப் பருக வேண்டும்.
கடும் வெப்பம் காரணமாக உடலின் செயற்பாட்டுக்கு பிரச்சினைகள் ஏற்படக் கூடும். குறிப்பாக தோல் நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.
கடும் வெப்பம் நிலவும் போது வெளியில் சென்று வீடு திரும்பினால் முகத்தைக் கழுவிக் கொள்ள வேண்டும்.
இன்புளுன்சா, காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு ஆகிய நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக மக்கள் அதிகம் செறிந்திருக்கும் பகுதிகளில் நடமாடுவதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என டொக்டர் சமிந்தி சமரக்கோன் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வவுனியாவில் வடமாகாண மட்டத்திலான புதுவருட கொண்டாட்டங்கள் இன்று (23.04.2017) காலை முதல் வவுனியாவில் நடைபெற்று வருகிறது.
வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை 7.30 மணிக்கு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி. றோகண புஸ்பகுமார ஆண்,பெண் இருபாலருக்குமான மரதன் ஓட்டத்தை கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.
நடைபெறவுள்ளன நிகழ்வுகள் வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடனும், வவுனியா மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்புடனும் இடம்பெறவுள்ளது.
அத்துடன் சிங்கள தமிழ் புதுவருடத்தை முன்னிட்டு இலங்கை ரெலிகொம் நிறுவனத்தால் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டுவரும் சைக்கிள் ஓட்டப்போட்டியும் இன்றையதினம் காலை 9.00 மணிக்கு வவுனியா நகரசபைக்கு முன்னால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மாணவி ஒருவருக்கு ஓன்லைன் ஷொப்பிங் நிறுவனம் செல்போனுக்கு பதில் செங்கலை பார்சலில் அனுப்பியுள்ளது அப்பெண்ணை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ஐஐடி-யில் படிக்கும் நித்திலா தேவி என்னும் மாணவி கடந்த 19ஆம் திகதி ஸ்நேப் டீல் என்னும் தனியார் ஒன்லைன் ஷொப்பிங் நிறுவனத்தில் செல்போன் ஓர்டர் செய்துள்ளார்.
இதற்காக 12 ஆயிரம் ரூபாயை டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் நித்திலா செலுத்தியுள்ளார். இதனிடையில், நேற்று நித்திலாவுக்கு ஸ்னாப் டீல் ஒரு பார்சலை அனுப்பியுள்ளது.
அதில் செல்போன் இருக்கும் என ஆசை ஆசையாக திறந்து பார்த்த நித்திலா அதிர்ச்சியடைந்தார். காரணம் அதில் செல்போனுக்கு பதில் செங்கல் இருந்துள்ளது.
இது குறித்து அவர் புகார் செய்துள்ள நிலையில், ஒன்லைன் ஷொப்பிங் செய்யும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தொழிநுட்ப வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த Harshi Suraweera என்ற பெண்மணி 10 மாதத்தில் 42 கிலோ குறைத்ததன் பிட்னஸ் ரகசியத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
Harshi Suraweera (27) என்பவர் அவுஸ்திரேலியாவில் வசித்து வருபவர் என்றாலும் இவரது பூர்வீகம் இலங்கை ஆகும். அதிக உடல் எடையின் காரணமாக இவர், எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்துள்ளார். குண்டான தோற்றத்தில் இருக்கும் எனது புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்தால், ஏராளமானோர் எனது உடல் தோற்றம் குறித்து எதிர்மறையான கருத்துக்களை பதிவிடுவார்கள்.
இதனால் எனது உடல் எடையை குறைக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன் என்று கூறும் இவர், தனது உடல் எடை அதிகரிப்பிற்கான காரணம் மற்றும் எவ்வாறு உடல் எடையை குறைத்தேன் என ஆகிய இரண்டையும் விளக்கியுள்ளார்.
உணவுகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். எந்த ஒரு உணவாக இருந்தாலும் மிகவும் ருசித்து சாப்பிடுவேன். இரண்டு பீட்சா மற்றும் 1 லிற்றர் கொக்ககோலா ஆகியவற்றை மிக சாதாரணமாக சாப்பிடுவேன்.
அதுமட்டுமின்றி, அதிக சாதம், கறி, துரித உணவுகள் மற்றும் பீட்சா இவற்றைத்தான் அதிகமாக விரும்பி சாப்பிடுவேன். இதன் காரணத்தினாலேயே எனது உடல் எடை அதிகரித்தது 107 கிலோ எடையில் இருந்தேன்.
எனது உடல் எடையை குறைப்பதற்கு நான் மேற்கொண்ட முதல் முயற்சி ஜிம்தான். ஒரு நாளைக்கு 2 அல்லது 3 மணிநேரம் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சிகள் செய்வேன்.
ஆரம்பத்தில் ஜிம்முக்கு செல்வது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. எப்போதும் தாமதமாகவே ஜிம்முக்கு செல்வேன். அங்கு சென்றவுடன் ஒரு ஓரமாக நின்று உடற்பயிற்சிகளை செய்துவிட்டு வீட்டுக்கு திரும்பிவிடுவேன்.
நாளடைவில் எனது உடல் எடையில் மாற்றம் ஏற்படவே, எனக்கு ஜிம்முக்கு செல்வதற்கான ஆர்வம் அதிகரிக்க ஆரம்பித்தது.
அதன்பின்னர் எனது உணவுப்பட்டியலில் மாற்றம் செய்தேன். அதிகமான சாலட் மற்றும் புரோட்டின் நிறைந்த உணவுகளையே உட்கொண்டேன். இதுவே எனது உடல் எடை குறைவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அனைத்துவிதமான இனிப்பு உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் இவற்றை முற்றிலுமாக தவிர்தேன். டயட் ஆரம்பித்த 10 மாதத்தில் 42 கிலோ குறைத்துள்ளேன்.
42 கிலோ எடை குறைத்த நான் எனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தேன்.
இதனைப்பார்த்த பலரும் எனக்கு பெரும் ஆதரவு அளித்தார்கள். எனது பிட்னஸ் ரகசியத்தால் 70,000 பேர் என்னை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்தார்கள்.
உடல் எடை குறைந்த காரணத்தால், எனது வாழ்க்கையில் ஒரு புதுவித மாற்றம் ஏற்பட்டதை என்னால் உணர முடிந்தது. நான் குண்டாக இருந்தபோது என்னை அணுகவே சில பேர் யோசித்தார்கள். ஆனால், தற்போது நட்புறவுடன் பேசிவருகிறார்கள்.
இந்த உடல் எடை குறைப்பு எனது வாழ்க்கையில் அனைத்தையும் மாற்றி விட்டது , குறிப்பாக எனது உடல்வாகு. ஆனால் எனது குணநலன்கள் மாறாமல் நான் எப்போதும் போலவே இருக்கிறேன் என கூறுகிறார் Harshi Suraweera.
தமிழ் மாணவன் தயாரித்துள்ள கையடக்க செயற்கோளானது நாசா விண்கலம் மூலம் சில மாதங்களில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
தமிழகத்தை சேர்ந்தவர் முகமது ரிபாக் ஷாருக், இவர் தற்போது 12ம் வகுப்பு இறுதி தேர்வினை எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவர்.
இவர் சென்னையில் உள்ள ஸ்பேஸ் கிட்ஸ் என்னும் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடத்திய அறிவியல் போட்டியில் கலந்து கொண்டார்.
இவரது ஆர்வத்தினை பார்த்த நிறுவனம், அறிவியல் ஆராய்ச்சிகளை செய்வதற்காக முகமது ரிபாக் ஷாருக்குக்கு உதவியுள்ளது.
இதன் மூலம் நாசா நடத்திய செயற்கைகோள் வடிவமைப்பு போட்டியில் பங்கேற்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
57 நாடுகளிலில் இருந்து பங்கேற்ற 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 80 மாணவர்களில் இவர் ஒருவரே இந்தியனாவார்.
3டி தொழில்நுட்பத்தில் கார்பன் பைபரால் தயாரிக்கப்பட்டுள்ள 64 கிராம் எடையினை கொண்ட கையடக்க இந்த செயற்கைகோளுக்கு கலாமின் நினைவாக கலாம் சாட் என பெயரிடப்பட்டுள்ளது.
டெக்னாலஜி டெமான்ஸ்ரேட்டர் வகையினை சேர்ந்த இந்த செயற்கைகோளானது விண்வெளியில் நிலவும் கதிர்வீச்சு, சூழல் மற்றும் இவற்றினால் செயற்கை கோள்களில் அடையும் மாற்றம் ஆகியவற்றினை அறிய உதவுகிறது.
சர்-ஆர்பிட்டல் செயற்கைகோளான இதில் 8 சென்சார், ஆன்போர்டு கணினி உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களான பயன்படுத்தப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைகோளானது 240 நிமிடங்கள் விண்ணில் இருந்துவிட்டு பின்னர் கடலில் விழுந்துவிடும். இதனை கண்டறிந்து மீண்டும் ஆய்வு செய்யலாம்.
ஸ்பேஸ் கிட்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைகோளானது ஜீன் மாதத்தில் விர்ஜீனியா ஏவுத்தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படவுள்ளது.
இதுகுறித்து முகமது ரிபாக், அடுத்ததாக செயற்கைகோளை நிரந்தரமாக விண்ணில் நிறுத்துவதற்கான ஆய்வில் ஈடுப்பட்டுள்ளேன்.
மேலும் நிலவில் தரையிறங்கும் வகையிலான ரோவர் இயந்திரத்தை தயாரிக்கும் ஆரம்பகட்டப் பணியிலும் இறங்கியுள்ளேன், அதில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் காதலை துண்டித்ததால் காதலியை எரித்து கொலை செய்து விட்டு, தீக்குளித்து இறந்துள்ள காதலனின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சென்னையின் அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (21). இவர் துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
அதே துணிக்கடையில் மைதிலி (20) என்ற பெண்ணும் வேலை செய்து வந்துள்ளார். பார்த்திபனுக்கும், மைதிலிக்கும் காதல் ஏற்ப்பட்டதை தொடர்ந்து கடந்த இரண்டாண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் பார்த்திபனுக்கு ஏற்ப்பட்ட விபத்தில் அவர் கால் முறிந்தது.
இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதன் காரணமாக பார்த்திபன் மற்றும் மைதிலி சந்திப்பதும், அவர்கள் பேச்சு வார்த்தையும் நின்று விட்டது.
இந்நிலையில், கடந்த வாரம் மைதிலியை சந்தித்து பார்த்திபன் தன் காதலை மீண்டும் சொன்ன போது அதை ஏற்க மைதிலி மறுத்துள்ளார்.
இதையடுத்து நேற்று இரவு மைதிலி வேலையை விட்டு வீடு திரும்பும் போது வழிமறித்த பார்த்திபன் தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் உன்னை கொளுத்தி விடுவேன் என தான் வைத்திருந்த மண்எண்ணையை காட்டியுள்ளார்.
இதை மைதிலி அலட்சியபடுத்தவே, ஆத்திரமடைந்த பார்த்திபன் மைதிலி மீது மண்எண்ணையை ஊற்று கொளுத்தி விட்டு தானும் கொளுத்தி கொண்டார்.
இருவரும் அலறுவதை பார்த்த பொதுமக்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனில்லாமல் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.