மரணத்தின் போது சிலருக்கு வாழ்வளித்த ஈழ அகதி!!

தமிழகத்தில் விபத்தில் மூளைச் சாவு அடைந்த இலங்கை அகதியின் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உடலுறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன. ஹெலி காப்டர் மூலம் அவரது இதயத்தை சென்னை மருத்துவமனைக்கு மருத்துவர்கள் எடுத்துச் சென்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கஸ்தம்பாடியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் கிருபாகரன்(22). டிப்ளமோ படித்துள்ள அவர், புதுச்சேரியில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 29-ம் திகதி ஊருக்கு வந்த கிருபாகரன், தனது தம்பி விக்னேஷ்வரனுடன் இருசக்கர வாகனத்தில் ஆரணிக்குச் சென்றார்.

அடையாளம் என்ற கிராமத்தில் சென்றுகொண்டு இருந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனத்துடன் மோதியதில் இருவரும் படு காயமடைந்தனர். வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் கிருபாகரனை மட்டும் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில், கிருபாகரன் மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்கள் நேற்று தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும் பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். கிருபாகரனின் இதயத்தை சென்னை மலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சத்தீஸ்கர் மாநில இளைஞருக்கு பொருத்த முடிவானது.

அதன்படி, கிருபாகரனின் இதயம் அகற்றப்பட்டு, பொலிஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம் விஐடி பல்கலைக்கழகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தயாராக இருந்த ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்கு இதயத்தை எடுத்துச் சென்றனர்.

கிருபாகரனின் கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. ஒரு சிறுநீரகம் சென்னை மியாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

வடமாகாண முதல்வர் ஜனாதிபதியிடம் கோரிக்கை!!

வட மாகாண முதலமைசரால் ​நேற்று ஜனாதிபதிக்கு பின்வரும் விடயங்கள் தெரியப்படுத்தப்பட்டன.

வட மாகாணத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் உள்ள பிரதிநிதிகளும் திருகோணமலை மாவட்ட பிரதிநிதிகளும் சென்ற வாரம் தங்களுடைய அன்புக்குரியவர்கள் காணமற் போனமை பற்றி என்னைச் சந்தித்துப் பேசினார்கள். அதே போல தங்களுடைய காணிகளை விடுவிப்பது பற்றி இடம்பெயர்ந்து வாழ்வோர் என்னுடன் தொடர்புகொண்டார்கள். மேலும் வேலையற்ற பட்டதாரிகளும் சந்தித்துப் பேசினார்கள். அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில் இவற்றை முன்வைக்கின்றேன்.

காணமற் போனவர்களின் தொடர்ச்சியான போராட்டம் கிளிநொச்சியில் 49 நாட்களும், வவுனியா 38 நாட்களும் முல்லைத்தீவு 26 நாட்களும் வடமராட்சி 19 நாட்களும் திருகோணமலை 29 நாட்களாகவும் நடைபெற்று வருகின்றது.

இவர்களில் பலரும் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள். அவர்கள் நோயாளிகள். வெய்யிலிலும் குளிரிலும் இரவு பகலாக தற்காலிகக் கொட்டகைகளில் இருந்தவாறு போராடுகின்றார்கள். அவர்கள் தங்களுடைய உறவுகள் உயிருடன் இருக்கின்றார்களா அல்லது இறந்து விட்டார்களா என அறிய விரும்புகின்றார்கள். பிரதம மந்திரி உட்பட பலரும் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவிக்கின்றார்கள். இறந்திருக்கக் கூடும் என பிரதம மந்திரி தெரிவிக்கின்றார். ஆனால் அவர்கள் கைது செய்யப்பட்டு பல வருடங்களின் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆதாரமாகக் காட்டி அவர்கள் இன்னமும் உயிருடன் இருக்கின்றார்கள் என கூறுகின்றார்.

உதாரணமாக தேர்தல் காலத்தில் எடுத்த படம் ஒன்றில் தங்களுக்கு முன்னால் இடது பக்கத்தில் தனது மகள் இருப்பதாக ஒரு தாய் காட்டுகின்றார். அவருடைய பெயர் செல்வி.ஜெயவதனா. இன்னும் இருவர் அடையாளம் காட்டப்பட்டனர். இவர்களைக் கண்டு பிடிப்பது தங்களுக்குக் கஷ்டமாக இருக்காது. இதுபோல பல சான்றுகள் கைவசம் வைத்திருக்கின்றார்கள்.

எனவே குறைந்தளவிற்கு இவர்களுக்காக பின்வருவனவற்றையாது தங்களால் செய்ய முடியும் என எதிர்பார்கின்றேன்.

1. காணமற் போனோர் தொடர்பான ´பரணகம´ அறிக்கையை இதுவரை வெளியிடாவிட்டால் வெளியிடல்.
2. காணமற் போனவர்களில் பத்திரிகைகளில் இணங்காட்டப்பட்டவர்களை கண்டு பிடிப்பதற்கான விசாரணைக்கு உத்தரவிடல்.
3. நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தாது இதுவரை தடுத்து வைக்கப்பட்வர்களின் விபரத்தை வெளியிடல்.
4. தமது அன்புக்குரியவர்கள் அடையாளங் காணப்பட்டால் அவர்கள் அதன்பின்பு காணமற் செய்யப்படக்கூடும் என்ற பயம் உறவினர்களிடம் உண்டு. அதனைத் தாங்கள் கண்காணிப்பீர்கள் என நம்புகின்றேன்.
5. காணமற் போனவர்களுக்கான அலுவலகத்தை உடன் இயங்கச் செய்தல்.
6. காணமற் போனோர் என உறுதிப்படுத்தப்பட்ட பின்பு பொருத்தமான சான்றிதழ்களை வழங்கல்.

காணிகள் யுத்தத்தின் பின் எட்டு வருடங்களாகியும் விடுவிக்கப்படவில்லை. இராணுவத்தினருடைய பிரசன்னம் இனியும் தேவையற்றபடியால் அவர்கள் வசமுள்ள காணிகளை விடுவிக்கலாம். புலனாய்வு வேலைகளை பொலிசார் மேற்கொள்ள முடியும். மிகுதியாக மயிலிட்டியிலுள்ள யுத்த தளபாடங்களை முன்னர் ஒரு முறை செய்தது போல் அழிக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

இவை தொடர்பாக பின்வரும் ஆலோசனைகளைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

01. இராணுவதினர் வசமுள்ள காணிகளின் விபரங்களை வெளியிடல்.
02. மக்கள் செறிந்து வாழும் இடங்களிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றல். சிங்கள மக்களின் இடங்களில் அவர்களை வைத்திருப்பின் அவர்கள் எதிர்க்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் அவர்களின் உறவினர்கள். ஆனால் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் பல்வேறு பிரச்சனைகள் உருவாகின்றன.
03. கூகிள் வரைபடங்கள் மூலம் காட்டுப் பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகள் நடாத்தப்படுவதாக அறிய வருகின்றது. பெறுமதி மிக்க மரங்கள் கடத்தப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டுள்ளன. எங்களுடைய வளங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.
04. பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்கள் இராணுவ முகாம்கள் அருகில் இருப்பதால் பல பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றன.

வேலையற்ற பட்டதாரிகள் ஒருமாதத்திற்கும் மேலாக தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்களுக்கு உரிய வேலைவாய்பினை வழங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பாக பின்வரும் ஆலோசனைகளைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

01. வடக்கு கிழக்கிலுள்ள மத்திய அரசாங்க மாகாண அரசாங்க வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் எடுத்தல்.
02. பொலிசாரின் ASP தரத்தில் நியமனங்களை விரும்புகின்ற பட்டதாரிகளுக்கு அப்பதவிகளை வழங்க உதவுதல்.
03. இதே போன்று வேறு அரச நிறுவனங்களிலும் வேலைகள் வழங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
04. தனியார் துறையில் பொருத்தமான வேலைகளை வழங்கல்.
05. சுற்றுலாத் துறையில் இவர்களுக்கு வேலைகளை வழங்க நடவடிக்கை எடுத்தல்.

இவை யாவற்றையும் தங்கள் கவனிப்பிற்கு கொண்டு வரும் அதே நேரம் விரைவில் அவர்கள் சார்பாக நன்நடவடிக்கைகளை எடுக்க முன்வருவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

யாழில் திருமண வீட்டில் நுழைந்து 40 பவுண் நகை கொள்ளை!!

புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஐயனார் கோவில் ஒழுங்கைப் பகுதியில் உள்ள கிராம சேவையாளர் ஒருவர் வீட்டில் கடந்த 30ம் திகதி இரவு இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்தில் 40 பவுண் தங்க நகைகள் மற்றும் ஒரு தொகைப் பணம் என்பன திருடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த மேலும் தெரிய வருவதாவது,

மேற்படி வீட்டில் கடந்த 30ம் திகதி திருமண வைபவம் ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில், அன்று இரவு வீட்டில் இருந்தவர்கள் சம்பிரதாயங்களின்படி மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பெண் வீட்டார் மாத்திரமே வீட்டில் தங்கி இருந்துள்ளனர்.

இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திய திருடர்கள், நூதனமாக இரவு வேளை வீட்டினுள் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது 40 பவுண் தங்க நகைகளும், இரண்டு லட்சம் ரூபாய் பணமும் மணமக்களுக்கு வழங்கிய சில அன்பளிப்பு பொருட்கள் என்பவையும் கொள்ளையிடப்பட்டுள்ளன.

மறுநாள் வீட்டார் அதிகாலை எழுந்து பணம் நகை வைக்கப்பட்டிருந்த பயணப்பை வெளியே இருப்பதை அவதானித்த போதே திருட்டு இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் பின்பு தடயவியல் பொலிஸாரும் வருகை தந்து மோப்ப நாய் உதவியுடன் தேடுதலை மேற்கொண்ட போது, வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் பயணித்திருக்கும் போது மோப்ப நாயுடன் பொலிஸார் வருவதை அவதானித்த நபர் ஒருவர் ஓட்டம் பிடித்துள்ளார்.

இதனையடுத்து துரிதமாக செயற்பட்ட பொலிஸார் குறித்த நபரை துரத்திச் சென்று கைது செய்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வவுனியா குட்செட் வீதி ஸ்ரீகருமாரியம்மன் மகோற்சவம் கொடியேற்றதுடன் ஆரம்பம்!(படங்கள் )

வவுனியா குட்செட் வீதி ஸ்ரீகருமாரியம்மன் தேவஸ்தானத்தின்  வருடாந்த மகோற்சவம் கடந்த 01.04.2017 சனிக்கிழமை கொடிஏற்றதுடன் ஆரம்பமானது.

மேற்படி மகோற்சவம் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் தலைமையில் இடம்பெறுகின்றது.

ஆலயத்தின் மகோற்சவத்தில்

01.04.2017  சனிக்கிழமை  கொடியேற்றமும்

08.04.2017  சனிக்கிழமை சப்பர திருவிழாவும்

09.04.2017 ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழாவும்

10.04.2017 திங்கட்கிழமை தீர்த்தோற்சவமும் இடம்பெறுகின்றது.

வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலய கும்பாபிசேக தினநிகழ்வுகள்! (படங்கள்)

வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்பாள் பொற்கோவில்  வருடாந்த கும்பாபிசேக தின நிகழ்வுகள்  சிவஸ்ரீ .பிரபாகர குருக்கள் தலைமையில் இடம்பெற்றது .

மேற்படி நிகழ்வில் 30.03.2017 வியாழகிழமை கணபதி ஒமமும்  31.03.2017 வெள்ளிகிழமை கும்பாபிசேக தினத்தை முன்னிட்டு சங்காபிசேகமும் இடம்பெற்று  கண்ணகை அம்பாள் வீதியுலா வெளிவந்த நிகழ்வும் இடம்பெற்றது .

வவுனியா பொது வைத்தியசாலையில் இரத்த வழங்கல் சேவை நிலையம் திறந்துவைப்பு!!

 
வவுனியா பொதுவைத்தியசாலையில் இன்று (02.04.2017) காலை 9.30 மணியளவில் மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தினவினால் இரத்த வழங்கல் சேவை நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்து நாட்டின் நிதி உதவியுடன் 80 மல்லியன் ரூபா நிதியில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட இரத்த வங்கல் சேவை நிலையமும், மாமடுவ பிரதேச வைத்தியசாலையில் சிறுநீரக சிகிச்சைப்பிரிவு நிலையமும் இன்று மத்திய சுகாதார அமைச்சரினால் உத்தியோகபூர்வமாகத்திறந்து மக்கள் பாவணைக்கு கையளிக்கப்பட்டது.

வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சி. சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், செந்தில்நாதன் மயூரன், ஜெயதிலக, தமிழ் தெற்கு பிரதேச சபை செயலாளர் திருமதி சுகந்தி கிஷோர், வைத்தியர்கள் தாதிய உத்தியோகத்தர்கள், வைத்தியசாலைப் பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் சுகாதார அமைச்சர் ராஜித!!

 
வவுனியாவிற்கு வருகை தந்திருந்த மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (02.04.2017) மாலை 2 மணிக்கு வவுனியாவில் தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டததை மேற்கொண்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்து அவர்களின் பிரச்சனையை கேட்டறிந்து கொண்டார்.

உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 38 நாட்களாக மேற்கொண்டிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மத்திய சுகாதார அமைச்சரிடம் தங்கள் பிள்ளைகளை விடுவிக்காவிட்டாலும் பரவாயில்லை தங்களுக்கு ஒரு முறை காட்டுமாறு கண்ணீருடன் கேட்டுக்கொண்டனர்.

நிலைமையை விளக்கமாக கேட்டறிந்துகொண்ட மத்திய சுகாதார அமைச்சர் வவுனியா மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்களை வடமாகாண சுகாதார அமைச்சரிடம் கையளிக்குமாறும் அவர் தனது அமைச்சிற்கு அதை அனுப்பி வைப்பார் என தெரிவித்ததுடன், தனிப்பட்ட ரீதியில் விசேட கவனம் செலுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியா மாவட்டத்தில் காணாமல்செய்யப்பட்டவர்கள் 1200 பேர் விபரங்கள் பதிவு செய்து இருப்பதாகவும், பதிவு செய்யாமல் பலர் இருப்பதாகவும் தெரிவித்த அவர்கள் தமக்கு நீதி கிடைக்கும் வரையில் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் தெரிவித்தனர்.

மத்திய சுகாதார அமைச்சருடன் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோட் குரே ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.

பூமியை நோக்கி வரும் விண்கல் : அபாய எச்சரிக்கை!!

அமெரிக்காவில் உள்ள ஹவாயில் ஹலீயாகலா எரிமலை பகுதியில் யான் ஸ்பார்ஸ் 1 என்ற சக்தி வாய்ந்த டெலஸ் கோப் நிறுவப்பட்டது.

கடந்த 25 ம் தேதி இந்த டெலஸ்கோப் விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வரும் ஒரு எரிகல்லை புகைப்படம் எடுத்து அனுப்பியது.

அந்த விண்கல் பூமிக்கு அருகில் வந்துள்ளது. அதாவது பூமிக்கு சுமார் 2 லட்சத்து 2 ஆயிரம் மைல் தொலைவில் உள்ளது.

இந்த எரிகல்லை டெலஸ் கோப் இன்றி நேரடியாக பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமிக்கோ, சந்திரனுக்கோ எந்தவித பெரிய அச்சுறுத்தலும் இல்லை என்றாலும் பூமியை தாக்கும் அபாயமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலி : 7 பேர் படுகாயம்!!

 
நுவரெலியா – நானுஓயா பகுதியில் லொறியொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளதுடன் ,யாழ்ப்பாணத்திலிருந்து நுவரெலியா ஊடாக பொகவந்தலாவை நோக்கி பயணித்தி லொறியொன்றே விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் உட்பட 7 ​பேரும் இந்த விபத்தினால் காயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவரது சடலம் நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஒயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு பட்டதாரிகளின் பிரச்சினைக்கு இரு வாரங்களில் தீர்வு : ஜனாதிபதி உறுதி!!

வடக்கு பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பாக எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு பின்னர் தீர்வுகள் பெற்றுத் தரப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக அங்கஜன் இராமநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வட மாகாண தொழில் அற்ற பட்டதாரிகள் தொடர்பில் ஜனாதிபதியை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இந்த வாக்குறுதியை வழங்கியதாக அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்படும் என ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சோதனையிலும் சாதனை படைத்த மாணவி!!

கால் இரண்டும் விழுப்புண் அடைந்த போதிலும், மாணவி ஒருவர் பரீட்சையில் அதிசித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

காலி சவுத்லென்ட்ஸ் மகளீர் வித்தியாளயத்தில் கல்வி கற்கும் ராதா ஆரியரத்ன என்ற மாணவி இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

2016ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் கடந்த வாரம் வெளியாகி இருந்தன. அதில் குறித்த மாணவி ஆங்கில பிரிவில் 8 ஏ மற்றும் ஒரு பீ சித்தி பெற்றுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்தினால் அவர் தற்போது வரையில் இரண்டு கால்களும் ஒழுங்கான முறையில் இயங்காத நிலையிலேயே வாழ்ந்து வருகின்றார்.

இவ்வாறான நிலையிலும் குறித்த மாணவி அதிசித்தி பெற்றுள்ளார்.இது குறித்து மாணவி தெரிவிக்கையில்,

2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற விபத்தினால் நடக்க முடியாத நிலையிலேயே உள்ளேன். அன்று முதல் என்னால் பாடசாலை செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தவணை பரீட்சைகளை வீட்டில் இருந்து செய்வதற்கு பாடசாலை நிர்வாகம் உதவியது. நான் ஒரு போதும் பின் வாங்கவில்லை. பல மாதங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உதவினார்கள். அதற்கமைய எனது முயற்சியுடன் பரீட்சை சித்தியடைந்தேன்.. என குறித்த மாணவி குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் விசேட வைத்தியராக பணியாற்றும் விருப்பத்தில் உள்ளதாக குறித்த மாணவி குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தகரின் கொடூரமான செயற்பாடு : தாய், குழந்தை வைத்தியசாலையில் அனுமதி!!

பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது இரண்டு வயது மகளை தரையில் அடித்து காயப்படுத்திய வர்த்தகர் இன்று கொச்சிகடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாளை மறுதினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை கொச்சிகடை – ஜனபதகம பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் பெண் மற்றும் குழந்தை இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு பெற்றுக் கொண்டு இந்த பெண் உட்பட குடும்ப உறுப்பினர்கள் தங்கியுள்ளனர்.

பெண் மற்றும் காயமடைந்த குழந்தை தற்போது நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

லப்டப்பில் ஒரே நேரத்தில் படமும், செய்தியும் பார்ப்பதற்கான தொழில்நுட்பம்!!

நாளுக்கு நாள் தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்து கொண்டே வருகிறது. அதற்கேற்ப புதிதுபுதிதாக வியக்கவைக்கும் தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

மூன்று திரைகளை கொண்ட இந்த Slide n Joy-னை நமது லப்டப் அல்லது கம்ப்யூட்டருடன் இணைத்து கொள்ளலாம்.

இதில் மேலும் இரண்டு திரைகளை பயன்படுத்தி லப்டப்பில் நாம் பார்க்கும் இணையதளப்பக்கம் அல்லது வேறு ஏதேனும் செய்தியினை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

ஒரே நேரத்தில் மூன்று பக்கங்களை தனித்தனியாக ஒரே லப்டப்பினை பயன்படுத்தி நாம் காண இயலும்.

இதன் திரைகள் HD தரத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் பார்ப்பதற்கு தெளிவாக இருக்கும். மேலும் 14”, 15” மற்றும் 17” அளவுகளில் இந்த Slide n Joy ஆனது வெளியிடப்பட்டுள்ளது.

ஒருநாள் நடிக்க விராட் கோஹ்லி வாங்கும் ஊதியம் எவ்வளவு தெரியுமா?

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் அமீர்கானை விடவும் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக மாறியிருக்கிறார் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி.

அதிக வருவாய் ஈட்டியவர்கள் பட்டியலில் சல்மான் கான் முதலிடத்திலும், ஷாரூக் கான் இரண்டாவது இடத்திலும் இருந்தனர். தற்போது அதை முறியடித்திருக்கிறார் விராட் கோஹ்லி.

28 வயதான கோஹ்லி இனிவரும் ஒப்பந்தங்களில் நடிக்க, நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி(இந்திய மதிப்பு) சம்பளம் வாங்க முடிவு செய்துள்ளார்.

மேலும் நாள் ஒன்றுக்கு 643 முறை விராட் கோஹ்லியின் விளம்பரங்கள் தொலைக்காட்சியில் வெளிவருவதாகவும் தெரியவந்துள்ளது.

முன்னதாக இந்தியாவில் அதிகம் பிரபலமான நட்சத்திரங்கள் பட்டியலில் சல்மான் கான், ஷாரூக் கான், கிரிக்கெட் வீரர் டோனி ஆகியோரை விட, இந்தியாவில் அதிகமானோரால் விரும்பப்படும் நபராக, விராட் கோஹ்லி முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர் பிரித்திகா யாசினி!!

இந்தியாவின் முதல் திருநங்கை காவல் அதிகாரி பிரித்திகா யாசினிக்கு, தருமபுரியில் துணை ஆய்வாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரித்திகா யாசினி. ஆணாக பிறந்த இவர் தனது 20வது வயதில் தன்னிடம் பெண் தன்மை இருப்பதை உணர்ந்து மருத்துவ சிக்ச்சை மூலம் திருநங்கையாக மாறினார்.

பின்னர் பி.சி.ஏ பட்டபடிப்பை முடித்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக காவல் துறையில் துணை ஆய்வாளர் பணிக்கு அறிவிப்பு வெளியானது.

அதற்கு விண்ணப்பித்த பிரித்திகா திருநங்கை என்ற காரணத்தால் நிராகரிக்கபட்டார். பின்னர் நீதிமன்றம் மூலம் அவர் தேர்வு எழுத அனுமதி பெற்றார். பின்னர் நடந்த தேர்வில் பிரித்திகா தேர்ச்சி பெற்றார்.

அவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மாநகர காவல்துறை ஆணையர் சுமித்சரண் பணி நியமன ஆணையை வழங்கினார்.

இதையடுத்து கடந்த ஒரு வருடமாக தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கையான பிரித்திகா உட்பட 1031 பேர் துணை ஆய்வாளர் பயிற்சி பெற்றனர்

தற்போது பயிற்சி முடிந்ததையடுத்து தற்போது பிரித்திகா தர்மபுரியில் துணை ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் இந்தியாவின் முதல் திருநங்கை காவல் அதிகாரி என்ற பெயருக்கு பிரித்திகா சொந்தகாரராகி உள்ளார்.

காதலித்து கழட்டிவிட்ட காதலியை கொடூரமாக கொலைசெய்த காதலன்!!

காதலி திருமணம் செய்து கொள்வதற்கு மறுப்பு தெரிவித்ததால், காதலன் அவரை கொடூரமாக சுத்தியலை வைத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்தவர் ஜெனிபர் புஷ்பா. செம்மஞ்சேரி பகுதியைச் சேந்தவர் ஜான்மேத்தீசும். இவர்கள் இருவரும் பள்ளிப் பருவத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் காதலியான ஜெனிபர் காதலை முறித்துக் கொள்ளலாம் என்று காதலனிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெனிபரின் பிறந்தநாள். இதனால் ஜெனிபரை தொடர்பு கொண்ட காதலன் கடைசியாக இருவரும் மாமல்லபுரத்தில் சந்தித்து விட்டு பின்னர் பிரிந்து விடுவோம் என்று கூறியுள்ளார். அப்போது உனக்கு நான் பரிசு ஒன்று கொடுக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

ஜெனிபர் மாமல்லபுரத்திற்கு சென்றார். இருவரும் அங்குள்ள குகை அருகே பேசி கொண்டிருந்தனர். அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி ஜெனிபரை காதலன் வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் ஜெனிபர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து பரிசு பொருளையாவது வாங்கி கொள் என்று கூறி அட்டை சுத்தியல் ஒன்றை எடுத்த ஜெனிபர் தலையில் ஓங்கி அடித்தார் காதலன்.

இதனை சற்றும் எதிர்பாராத ஜெனிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் காதலியின் துப்பட்டாவை எடுத்து சவுக்கு மரத்தில் காதலனும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.