இலங்கையில் மரண தண்டனை கைதிகள் ஏற்படுத்திய வரலாற்று சாதனை!!

2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கில பாட பரீட்சை எழுதிய 21 வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளில் 11 பேர் சித்தியடைந்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. சித்தி அடைந்த 11 பேரும் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளாகும்.

அவ்வாறு சித்தியடைந்த கைதிகளில் 4 பேர் B மற்றும் C சித்தியை பெற்றவர்களாகும். அவர்கள் 6 மற்றும் 9 வகுப்பில் கற்றவர்கள் என தெரியவந்துள்ளது.

சிறைக்கைதிகளுக்கு அவசியமான கற்கை நடவடிக்கைகளை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படித்த கைதிகளினால் வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக தொழில் ரீதியான ஆசிரியர்கள் அல்லது கல்வி அமைச்சின் தலையீடுகள் ஒன்றும் மேற்கொள்ளப்படவில்லை.

சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரால் நிஷான் வனசிங்க மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை அதிகார சந்தன ஏக்கநாயக்க ஆகியோரின் ஆலோசனைக்கமைய அவர்கள் அந்த பரீட்சை எழுதியுள்ளனர்.

சிறைச்சாலை வரலாற்றில் இதற்கு முன்னர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறான ஒரு சம்பவம் பதிவாகவில்லை என அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

முன்னாள் மனைவியை 24 முறை கொடூரமாக தாக்கிய இலங்கையர்: அவுஸ்திரேலியாவில் பயங்கரம்!!

அவுஸ்திரேலியாவில் தன் முன்னாள் மனைவி மீது கோடாரியால் கொடூர தாக்குதல் நடத்திய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இலங்கையை சேர்ந்த 49 வயதான நபர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் தங்கி வேலை செய்து வருகிறார்
அவுஸ்திரேலியாவின் மெல்போன் நகரில் வசிக்கும் அந்த நபர் நேற்று அங்குள்ள ஒரு பிரபல ஷொப்பிங் மாலுக்கு வந்துள்ளார்.

அங்கு தனது முன்னாள் மனைவியை பார்த்த அவர் ஆத்திரத்தில் அவரை கோடாரியால் பலமாக உடல் முழுவதும் தாக்கியுள்ளார்.

மொத்த 24 முறை அவர் முன்னாள் மனைவி மீது தாக்குதல் நடத்தியதில் அவர் முகம், கை, கால், மார்பு போன்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்ப்பட்டது.

இதையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை மருத்துமனையில் சேர்த்தனர், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர செயலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலை நடத்திய பின்னர் அங்கிருந்தவர்களிடம், நான் என் மனைவியை பிரிந்து ஒரு வருடம் ஆகிறது. அவர் எனக்கு செய்த துரோகத்தால் தான் அவரை நான் பிரிந்தேன். தற்போது அவர் வேறு ஒரு ஆணுடன் வாழுகிறார்.

அது பிடிக்காமலும், அவர் அழகு என்ற திமிரை சிதைக்கவும் தான் இப்படி செய்தேன் என கூறியுள்ளார். அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற ஜீலை மாதம் வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

மூன்று கொலைகளையும் நானே செய்தேன் : அச்சுவேலி கொலை வழக்கு தீர்ப்பு இன்று!!

நான் செய்தது பெரிய குற்றம், மூவரது மரணத்திற்கு காரணமாய் இருந்துள்ளேன். நான் செய்ததை நியாயப்படுத்த முனையவில்லை என முக்கொலை வழக்கின் எதிரி பொ.தனஞ்சயன் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் 04ம் திகதி அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் இடம்பெற்ற முக்கொலை வழக்கு விசாரணை நேற்று புதன்கிழமை மதியம் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன் போது இடம்பெற்ற சாட்சியப் பதிவின் போதே அவ்வாறு எதிரியினால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. குறித்த வழக்கில் எதிரியான பென்னம்பலம் தனஞ்சயன் சாட்சியம் அளிக்கையில் ,

சில குடும்ப பிணக்குகள் காரணமாக, நானும் மனைவியும் பிரிந்திருந்தோம். எனது மகன் எனது மனைவியுடனேயே இருந்தார். பலமுறை மகனைப் பார்ப்பதற்கு முயற்சித்த போதும் எனக்கு அச் சந்தர்ப்பத்தை யாரும் ஏற்படுத்தி தரவில்லை.

இவ்வாறான நிலையில் எனது மகனை திருட்டுத்தனமாக பார்ப்பதற்காக கடந்த 2014.05.03ம் திகதி இரவு 10 மணிக்கும் 10.30 மணிக்கும் இடைப்பட நேரத்தில் எனது நண்பனது முச்சக்கரவண்டியில் குறித்த சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு சென்றிருந்தேன்.

அங்கே சென்று நான் வீட்டின் ஓட்டைக்கல் வழியாக பார்த்த போது அறையில் எனது குழந்தை நடுவிலும் அவருக்கு இரு பக்கமும் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் உறங்கிக்கொண்டிருந்ததை கண்டேன்.

அப்போது உண்மையில் அதில் எனது குழந்தையுடன் உறங்கிக் கொண்டிருந்தது யார் என என்னால் சரியாக அடையாளம் காண முடியவில்லை.

ஆனால் இக் காட்சியை கண்டதும் எனக்கு முன்பு ஒருமுறை எனது மாமி அதாவது மனைவியின் தாய், உனக்கு தர்மிகா (எனது மனைவி) விவாகரத்து பத்திரம் தான் அனுப்புவா என்று கூறியது ஞாபகம் வரவே நான் எனது குழந்தையுடன் உறங்கிக் கொண்டிருந்தது எனது மனைவியும், அவரோடு மாமியார் கூறியது போல வேறொருவரை திருமணம் செய்து வைத்து விட்டார்களோ என்ற தவாறான சிந்தனையும் அதனால் ஏற்பட்ட ஆத்திரத்திலும் அவர்களது கதவினை ஆக்ரோசத்துடன் தட்டினேன்.

அப்போது நான் தட்டிய கதவுக்கு பக்கத்தில் இருந்த மற்றொரு கதவினுடாக வெளிய வந்த எனது மனைவியின் தம்பியான சுபாங்கன் என்னை நோக்கி வாள் ஒன்றினை வீசினார். நான் அதனை தடுத்து பிடித்துவிட்டேன்.

இச் சந்தர்ப்பத்தில் எனது கண்ணாடியும் கீழே வீழ்ந்துவிட்டது. அதனால் எனக்கு இருட்டில் சரியாக நிதானம் இல்லாது சுபாங்கனும் நானும் வாளினை பறிப்பது தொடர்பில் முரண்பட்டுக்கொண்டோம்.

இதன்போது அங்கு எனது மாமியாரும் வந்துவிட்டார். இதன்போதே நான் ஆக்ரோசத்தில் வாளினை விசுக்கி தாறுமாறாக வெட்டினேன். அந்த இடத்தில் அப்போது மாமியார் மீதும் வெட்டு வீழ்ந்திருக்க வேண்டும்.

இதனை தொடர்ந்து நான் எனது குழந்தை படுத்திருந்த அறைக்குள் இருந்து ஆண் ஒருவர் வெளியே வந்தார். அவர் கையில் பார்கட்டை இருந்தது. அவர் பார்கட்டையை என்னை நோக்கி அடிப்பதற்காக ஒங்கினார். அதனால் நான் என்கையில் இருந்த வாளினால் வெட்டினேன்.அப்போது அவர் பார்கட்டையை கீழே போடாததால் அவர் தலையில் வெட்டினேன்.

இதன்போது கத்திக்கொண்டு அந்த அறையில் இருந்து எனது மனைவியின் சகோதரி வெளியே வந்தார். மற்றைய அறையில் இருந்து மனைவியும் வெளியே வந்தார்.

நான் வெட்டிய வெட்டு எனது மனைவியின் சகோதரிக்கும் பட்டிருந்தது. அப்போது தான் எனக்கு தெரியும் நான் நினைத்தது தவறு தவறாக விளங்கிக்கொண்டுவிட்டேன் என்பதை புரிந்துகொண்டேன்.

இதன்பின்னர் நான் வெளியே வந்து எனது வீழ்ந்து கிடந்த எனது மனைவியை தூக்கினேன். அப்போது அவரது முகத்தில் கையில் இரத்தம் வந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன். நான் தாறுமாறாக வெட்டும் போது எனது மனைவி ஒடி வரும் போது அவருக்கும் வெட்டு வீழ்ந்திருக்கின்றது என்பதை உணர்ந்தேன்.

உடனே நான் அவ்விடத்தில் இருந்து குறித்த வாளினையும் எடுத்துக்கொண்டு நான் வந்த முச்சக்கரவண்டியையும் எடுத்துக்கொண்டு வீடு நோக்கி சென்றேன்.

அவ்வாறு செல்லும் போது வழியில் எனது முச்சக்கரவண்டி எரிபொருள் இல்லாம் நின்றுவிட்டது. எனவே முச்சக்கரவண்டியை அவ்விடத்திலேயே ஒரமாக விட்டுவிட்டு தோட்டப் பகுதி ஊடாக எனது வீடு நோக்கி நடந்து சென்றேன். செல்லும் போதே வாழைத் தோட்டத்துக்குள் வாளினை குத்தி வைத்து விட்டு சென்றேன்.

பின்னர் ஊரெழுவில் உள்ள எனது வீட்டிற்கு சென்று அங்கு உடைகளை மாற்றிவிட்டு சுன்னாகத்தில் உள்ள எனது நண்பர் வீட்டிற்கு அதிகாலை 4மணியளவில் சென்று நடந்ததை கூறி பொலிஸ் நிலையத்தில் சரணடைய போவதாக கூறினேன்.

ஆனால் எனக்கு சம்பவம் நடக்கும் போது அவர்கள் இறந்து விட்டார்களா இல்லையா என்பது தெரியாது. பின்னர் எனது நண்பர் ஊடாகவே அறிந்தேன் மூவரும் இறந்து விட்டதாக.

பின்னர் நான் சென்று எனது பிரதேசத்திற்கு பொறுப்பான கோப்பாய் பொலிஸ் நிலையததில் காலை சரணடைந்தேன். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த என்னை பின்னர் அச்சுவேலி பொலிஸாரிடம் பாரப்படுத்தியிருந்தனர்.

அத்தோடு நானே நான் வெட்டுவதற்கு பயன்படுத்திய வாளையும் பொலிஸாருக்கு எடுத்துக்கொடுத்தேன். நான் செய்தது பெரிய குற்றம், மூவரது மரணத்திற்கு காரணமாய் இருந்துள்ளேன். நான் செய்ததை நியாப்படுத்த முனையவில்லை. என சாட்சியமளித்தார்.

இதனை தொடர்ந்து இவரது சாட்சியத்தை குறுக்கு விசாரணை செய்த அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந் குறித்த சம்பவத்தில் மூவர் கொலை செய்யததையும், இருவரை கொலை செய்ய முயற்சித்தமையையும் ஏற்றுக்கொள்ளுகிறீரா ? என வினாவியதற்கு,

குறித்த எதிரி, குறித்த மூவரது மரணத்திற்கும் தாமே காரணம் எனவும் அதற்கு காரணம் தமக்கு இருந்த மன உளைச்சலும், அன்றைய தினம் தாம் கண்ட காட்சியை தவறாக புரிந்து கொண்டதால் ஏற்பட்ட ஆக்ரோசமுமே காரணம் என பதிலளித்தார்.

இதனை தொடர்ந்து குறித்த சாட்சி குறித்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டதில் இருந்து தனது குழந்தையை பார்க்க முடியாது இருந்ததாகவும் எனினும் தமது குழந்தையை பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, நீதிமன்றில் வைத்து தனது குழந்தையை பார்ப்பதற்கு நீதிபதி அனுமதியளித்திருந்தமைக்கும் திறந்த நீதிமன்றில் கைகூப்பி கண்ணீர்மல்க தனது நன்றியை தெரிவித்திருந்தார்.

இதேவேளை குறித்த ஐந்து வயதுடைய குழந்தையிடம் நீதிபதி குறித்த தந்தையான எதிரியை காட்டி இது யார் என வினவிய போது குறித்த குழந்தை பதிலளிக்காது நின்றது.

அதன் போது, நீதிபதி உங்களது அப்பா எங்கே என கேட்ட போது அக் குழந்தை அப்பா செத்துவிட்டார் என பதிலளித்தது. அந்த பதிலை கேட்டதும் நீதிமன்றில் ஒரு விதமான அமைதி நிலவியது.

குறித்த வழக்கில் 10வது சாட்சியாக அணைக்கப்பட்டிருந்த, அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றியிருந்த நிலைய பொறுப்பதிகாரி சமன் நிலந்த குமார ஜெயசிங்க சாட்சியமளிக்கையில்,

குறித்த கொலை சம்பவம் தொடர்பாக 2014.05.04ம் திகதி அதிகாலை 2மணிக்கு எனக்கு தகவல் கிடைக்கப்பட்டிருந்தது. இதன்படி நான் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றிருந்தேன்.

அங்கே காணப்பட்ட வீட்டில் பெண் ஒருவர் காயப்பட்டு இருந்தார். அவர் முழுமையாக இரத்தம் வெளியேறிய நிலையில் கிடந்தார்.

உடனடியாக நான் அப் பெண்ணை பொலிஸ் வாகனத்தில் வைத்தியசாலைக்கு சேர்ப்பித்தேன். அதன் பின்னர் அங்கே அவதானித்த போது வீட்டின் மற்றுமொரு அறையில் இருந்து ஒருவர் முனகுவது போன்றதான சத்தம் கேட்டது.

நான் சத்தம் கேட்ட அறைக்குள் சென்று பார்த்த போது அங்கு ஒரு ஆணும் பெண்ணும் இரத்த வெள்ளத்தில் காயப்பட்டு கிடந்தார்கள். அவர்கள் இருந்த அறை முழுவதும் இரத்தம் தேங்கியிருந்தது.நான் அவர்கள் இருவரையும் வைத்தியசாலைக்கு அனுப்பினேன்.

மற்றைய அறையில் நிலத்தில் போடப்பட்டிருந்த மெத்தையில் சுமார் இரண்டு வயதான குழந்தையொன்று நன்றாக உறங்கிக்கொண்டிருந்தது.

நான் அக் குழந்தையை எடுத்து அணைத்துக்கொண்டேன். அப்போதும் அக் குழந்தை நன்றாக துங்கிக்கொண்டே இருந்தது.

நான் அக் குழந்தையின் தலை முதல் பாதம் வரை தடவி பார்த்தேன் அவருக்கும் எதாவது காயங்கள் உண்டா என, ஆனால் எதுவிதமான காயமும் இருக்கவில்லை. நான் அக் குழந்தையை அச்சுவேலி வைத்தியசாலையில் சேர்ப்பித்திருந்தேன்.

வைத்தியசாலைக்கு சென்ற போது முன்னர் அனுமதிக்கப்பட்ட மூன்று பேரும் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்திருந்தார்கள். உயிரிழந்தவர்கள் அடக்கம் செய்யப்படும் வரை குறித்த குழந்தையை யாரும் பொறுப்பெடுக்க வரவில்லை.

உயிரிழந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட பின்னரே உறவினர்கள் எனக் கூறி அக் குழந்தையை பாரமெடுத்திருந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து கொலையாளியை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணையில் இக் கொலையை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொன்னம்பலம் தனஞ்சயன் என்பவரை கைது செய்வதற்காகவும் அவர் தப்பிச் செல்வதை தடுப்பதற்காகவும் ஒமந்தை சோதனை சாவடி, கடற்படை, கட்டுநாயக்க விமான நிலையம் எனைய பொலிஸ் நிலையங்கள் ஆகியவற்றுக்கு தகவல் வழங்கியிருந்தேன்.

குறித்த சந்தேகநபர் இக் கொலை சம்பவம் நடப்பதற்கு முன்பே குறித்த கொலை செய்யப்பட்டவர்களோடு முரண்பாட்டில் ஈடுபட்டிருந்ததையும் இவருக்கும் கொலையில் தொடர்பு இருக்கின்றது என்பதையும் விசாரணைகளினூடாகவும் இரகசிய தகவல்கள் ஊடாகவும் கண்டறிந்திருந்தேன்.

அதன் அடிப்படையிலே குறித்த பொன்னம்பலம் தனஞ்சயன் என்பவரை 2014.05.04ம் திகதி மாலை 5.30 மணிக்கு கோப்பாய் சந்தியில் உள்ள பஸ்தரிப்பு நிலையமொன்றில் வைத்து கைது செய்திருந்தேன்.

தொடர்ந்து இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இவர் கொலை செய்யப் பயன்படுத்திய வாள், இவர் பயணம் செய்ய பயன்படுத்திய முச்சக்கரவண்டி மற்றும் இவர் அணிந்திருந்த உடைகள் போன்றவற்றை கைப்பற்றியிருந்தேன்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட தடயப் பொருட்களை மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவானது கட்டளைக்கு ஏற்ப அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தினரிடம் பாரப்படுத்தியிருந்தேன். என சாட்சியமளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இவரது சாட்சியத்தை எதிரி தரப்பு சட்டத்தரணி குறுக்கு விசாரணை செய்யும் போது இந்த சம்பவம் தொடர்பில் நீங்கள் சிறிகரன் என்பவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தீர்களா என வினவியபோது அதற்கு குறித்த சாட்சி இல்லையென பதிலளித்தார்.

தொடர்ந்து எதிரி தரப்பு சட்டத்தரணி உங்களால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் குறித்த எதிரி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாக தாம் எதிரி சார்பில் கூறுவதாக கூறியிருந்தார். இதற்கு குறித்த பொலிஸ் அதிகாரியான சாட்சி தாம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என பதிலளித்தார். இதனை தொடர்ந்து குறித்த சாட்சி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து இவ் வழக்கில் 15வது சாட்சியாக அழைக்கப்பட்டிருந்த, இச் சம்பவத்தில் காயமடைந்திருந்த தனஞ்சயன் தர்மிகாவை பரிசோதித்த சட்ட வைத்திய அதிகாரியான கந்தையா ரட்ணசிங்கம் சாட்சியமளிக்கையில்,

காயமடைந்த பெண்ணான த. தர்மிகாவின் உடலில் 15வெட்டுக் காயங்கள் காணப்பட்டிருந்தன. அதில் எட்டு காயங்கள் கொடூரமான காயங்களாக காணப்பட்டிருந்தன என சாட்சியமளித்திருந்தார். இதனை தொடர்ந்து அவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இதன்பின்னர் இவ் வழக்கின் 07வது சாட்சியாக அணைக்கப்பட்டிருந்த சட்டவைத்திய அதிகாரி சின்னையா சிவரூபன் சாட்சியமளிக்கையில்,

என்னிடம் பிரேத பரிசோதனைக்காக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தின் கட்டளையின் அடிப்படையில் ஒப்படைக்கப்பட்ட மூன்று சடலத்தில் முதலாவது சடலமான நி.அருள்நாயகி என்பவரது சடலத்தில் எட்டுக் காயங்கள் காணப்பட்டிருந்தன.

இவர் உயிரிழந்தமைக்கு காரணம் அவரது உடலில் காணப்பட்ட அதிகளவான வெட்டுக் காயங்களில் இருந்து அதிகளவான குருதி பெருக்கு ஏற்பட்டதால் உடலுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியே மரணத்திற்கான காரணமாகும்.

இதேபோன்று நி. சுபாங்கன் என்பவரது உடலில் 6 வெட்டுக் காயங்கள் காணப்பட்டிருந்தன. இவரும் உடலில் இருந்து காயங்களூடாக வெளியேறிய அதிகளவான குருதி பெருக்கத்தால் உடலுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியே மரணத்திற்கான காரணமாகும்.

மூன்றாவதாக உயிரிழந்த நபரான யசோதரன் மதுஷாவின் உடலிலும் எட்டு வெட்டுக்காயங்கள் காணப்பட்டிருந்தன. இவரும் உடலில் இருந்து அதிளவான இரத்தம் வெளியேறியதால் உடலுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியே மரணத்திற்கான காரணமாகும்.

இதனை விட நான் படுகாயமடைந்திருந்த தங்கவேல் யசோதரனது உடலை பரிசோதனை செய்த போது அவரது உடலில் எட்டுக் காயங்கள் காணப்பட்டிருந்தன.

அத்துடன் கொலை செய்யப்பட்ட மூவரது உடலில் இருந்த காயங்களும் காயமடைந்த நபரது உடலில் இருந்த காயங்களும் கூரான ஆயுதத்தால் வெட்டும் போதே ஏற்படுத்தப்பட்டிருக்கும். என சாட்சியமளித்திருந்தார்.

அத்துடன் பொன்னம்பலம் தனஞ்சயனை 2014.05.05ம் திகதி 11.55க்கு பரிசோதனை செய்யும் போது அவரது உடலில் ஆறு உடனடி காயங்களும், 1பழைய காயமும் 1 காயத்திற்கான வடுவும் காணப்பட்டிருந்தது.

இதில் ஆறு புதுக்காயங்களில் நான்கு உரஞ்சல் காயமாகவும் இரண்டு வெடிப்புக் காயங்களாகவும் காணப்பட்டிருந்தன. மேலும் வெடிப்பு காயங்கள் மிக சிறிய கனம் குறைந்த ஆயுதத்தால் ஏற்படுத்தப்பட்டதாக எனது அனுபவத்தினூடாக அறிக்கின்றேன் என சாட்சியமளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இவரது சாட்சியமும் வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை குறித்த வழக்கின் சாட்சியாக அழைக்கப்பட்டிருந்த 04வது சாட்சியான த. தர்மிகா மற்றும் 05வது சாட்சியான தங்கவேல் யசோதரன் ஆகியோர் தம் மீது வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட வாளினை அடையாளம் காட்டுவதற்காக மட்டும் புதன்கிழமை மன்றுக்கு அழைக்கப்பட்டு அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் இருந்து எடுத்து வரப்பட்டிருந்த குறித்த சான்றுப் பொருட்கள் திறந்த நீதிமன்றில் நீதிபதியால் பிரிக்கப்பட்டு குறித்த சாட்சிகளுக்கு காண்பிக்கப்பட்டது.

இதன்போது குறித்த சாட்சிகள் அவ் வாளினை அடையாளம் காட்டியிருந்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் அடையாளம் காட்டிய வாளானது மன்றால் இலக்கமிடப்பட்டு சாட்சிப் பட்டியலில் சான்றாக சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இவற்றைவிட சட்டவைத்திய அதிகாரிகளது அறிக்கைகளும் சாட்சிப் பட்டியலில் மன்றால் இலக்கமிடப்பட்டு சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இன்று தீர்ப்பு

குறித்த வழக்கின் தீர்ப்பானது இன்று வியாழக்கிழமை யாழ்.மேல் நீதிமன்றில் வழங்கப்படவுள்ளதாகவும் அதுவரை குறித்த வழக்கை ஒத்திவைக்கவும் எதிரியை விளக்கமறியலில் வைக்கவும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டிருந்தார்.

கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் 04ம் திகதி அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியை சேர்ந்த மனைவியின் தாயான நி. அருள்நாயகி , மனைவியின் தம்பியான நி. சுபாங்கன் மற்றும் மனைவியின் அக்காவான யசோதரன் மதுஷா ஆகியோரை படுகொலை செய்து, மனைவியான தர்மிகா மற்றும் மனைவியின் அக்காவின் கணவனான யசோதரன் ஆகியோரை படுகொலை செய்யும் நோக்குடன் வெட்டி காயமேற்படுத்தப்ப்பட்டது.

100 அடி பள்ளத்திலுள்ள ஆற்றில் வீழ்ந்த ஆட்டோ : ஒருவர் பலி; இருவர் பலத்த காயம்!!

உடப்புஸ்ஸல்லாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இறப்பானை – அதியாரவத்த தோட்ட வீதியில் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்திலுள்ள ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந் துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக உடப்புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்றுமுன்தினம் இரவு மரண வீடு ஒன்றுக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர் உடப்புஸ்ஸல்லாவ, டெல்மார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், படுகாயமடைந்தவர்கள் இருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

விபத்தில் ஊவாபரணகம, திம்புலன பிரதேசத்தை சேர்ந்த சிறிவெடி முதியன்சேலாகே அபேசிங்க (61) என்ற, முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து இடம்பெற்ற போது அப்பிரதேசத்தில் அதிகளவிலான பனிமூட்டத்துடனான காலநிலை நிலவியதன் காரணமாக விபத்து இடம்பெற்று சில மணிநேரத்துக்கு பின்னரே விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியை பொதுமக்கள் அவதானித்து, அங்கு சென்று அவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அதிக பனிமூட்டத்துடனான காலநிலையினால் சாரதியினால் பாதையை இனங்கண்டுகொள்ள முடியாமையினால் இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் உடப்புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி உதவிப் பொலிஸ் பரிசோதகர் நுவன் ஜயலத் தலைமையில் இடம்பெற்றுவருகின்றன.

மூன்று வகை தொற்று நோய்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள்!!

நாடு முழு­வதும் தற்­போது டெங்கு நோய்க்கு இணை­யா­ன­தொரு வைரஸ் மற்றும் பன்றிக் காய்ச்சல் போன்ற மூன்று வகை­யான தொற்று நோய்கள் பரவி வரு­வ­தாக சுகா­தார அமைச்சு அறி­வித்­துள்ள நிலையில் இந் நோய்த் தாக்­கங்­க­ளி­லி­ருந்து தம்­மையும், தமது சிறு பிள்­ளை­க­ளையும் இயன்­ற­ளவு பாது­காத்துக் கொள்­ளு­மாறு மினு­வாங்­கொடை சுகா­தார வைத்­திய அதி­காரப் பிரிவின் பத்­தண்­டு­வன பொது சுகா­தாரப் பரி­சோ­தகர் எஸ். ஆர். எம். எஸ். ஆர். சமர திவா­கர தெரி­வித்­துள்ளார்.

குறிப்­பாக, சிறு பிள்­ளை­க­ளுக்கு இந்­நோய்கள் விரைவில் தொற்றக் கூடும் என சுகா­தார அமைச்சு சிவப்பு அறி­வித்தல் விடுத்­துள்­ளதால், இது குறித்து பெற்றோர்கள் முன் கூட்­டியே விழிப்­பு­ட­னும், அவ­தா­னத்­து­டனும் செயற்­ப­டு­மாறும் அவர் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

மினு­வாங்­கொடை, கல்­லொ­ழுவை,கோப்­பி­வத்தை ஆகிய பிர­தே­சங்­களில் டெங்கு மற்றும் டெங்கு நோய்க்கு இணை­யா­ன­தொரு வைரஸ் காய்ச்சல் மிகத் துரி­த­மாகப் பரவி வரு­வது தற்­போது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில், இப் பிர­தே­சங்­க­ளி­லுள்ள எவ­ருக்­கா­வது காய்ச்சல் ஏற்­பட்­டுள்ள அறி­கு­றிகள் தொடர்ந்து மூன்று நாட்­க­ளுக்கு மேல் தென்­பட்டால் எந்­த­வித கால தாம­த­மு­மின்றி அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் பொது மக்களைக் கேட்டுள்ளார்.

தெற்காசியாவில் இரண்டாவது செலவுகூடிய நகரமாக கொழும்பு தெரிவு!!

தெற்காசிய நாடுகளில் உள்ள இரண்டாவது செலவுகூடிய நகரமாகவும் உலகில் 108 ஆவது நகரமாகவும் கொழும்பு தெரிவாகியுள்ளது.

பொருளாதார புலனாய்வுப் பிரிவு (Economist Intelligence Unit) மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

தெற்காசியாவில் செலவுகூடிய நகரங்களின் பட்டியலில் டாக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன், மூன்றாம் இடத்தை காத்மண்டு பிடித்துள்ளது.

பொருளாதார புலனாய்வுப் பிரிவின் இந்த ஆய்வில் புதுடெல்லி, சென்னை, மும்பை, கராச்சி, பெங்களூர் ஆகிய 8 தெற்காசிய நகரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த கணக்கெடுப்பு உலகின் 133 நகரங்களின் 160 பொருட்களுக்கான 400க்கும் மேற்பட்ட விலை ஒப்பீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் உணவு, நீர், ஆடை, வீட்டுத்தளபாடங்கள், தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்கள், வீட்டு வாடகை, போக்குவரத்து செலவு, பயன்பாட்டுக் கட்டணங்கள், தனியார் பாடசாலைகள் போன்ற விடயங்கள் ஒப்பீடு செய்யப்பட்டவற்றில் அடங்குகின்றன.

பெறாமகள் பாலியல் துஷ்பிரயோகம் : கடூழிய சிறைத்தண்டனை விதித்த இளஞ்செழியன்!!

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபருக்கு 5 வருட ஒத்தி வைக்கப்பட்ட 2 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அத்துடன், குற்றவாளிக்கு 3 குற்றச்சாட்டுகளுக்கு தலா 3 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் மேலும், ஒரு மாதகால சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 30 ஆயிரம் ரூபா நட்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு நட்ட ஈடு வழங்க தவறும் பட்சத்தில், 18 மாதகால சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு 15 வயதான சிறுமியை மூன்று முறைக்கு மேலாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமைக்காக குற்றவாளிக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போத்தலின் மூலம் நீர் குடித்த ராஜநாகம்!!(காணொளி)

 
அதிக வெப்பம் காரணமாக ஏற்பட்ட வறட்சியினால், குடிப்பதற்கு நீர் தேடி வந்த ராஜநாகத்திற்கு போத்தலின் மூலம் நீர் கொடுத்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.

தென்னிந்தியாவிலுள்ள கைகா எனும் பிரதேசத்திற்குள் நுழைந்த 12 அடி நீளமான ராஜநாகத்தை, குறித்த பகுதியிலுள்ள விலங்கியல் பராமரிப்பு அதிகாரிகள் பிடித்துள்ளார்கள்.

இந்நிலையில் குறித்த நாகம் நீரின்றி, அலைவதை உணர்ந்த அதிகாரிகள், ராஜநாகத்திற்கு போத்தலின் மூலம் நீர் கொடுக்கவே, பாம்பும் அதை குடிக்கும் காணொளி வெளியாகி பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் மனிதர்கள் நடமாட்டமுள்ள பகுதிகளுக்கு வராததும், 100 யானைகளை ஒரே நேரத்தில் கொள்ளகூடிய விஷமுடைய ராஜநாகம், மனிதர்கள் கொடுத்த நீரை போத்தலினுடாக பருகியுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் பந்துவீச்சாளரருக்கு ஒருவருடம் விளையாடத் தடை : ஒரு மில்லியன் அபராதம்!!

 

பாகிஸ்தான் அணியின் வேகப் பந்து வீச்சாளர் மொஹமட் இர்பானுக்கு ஒரு வருடம் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது.

ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் அவரிடம் விசாரணை முகவர்கள் இரண்டு முறை தகவல்களை பெற முணைந்துள்ளனர்.

எனினும் அவர் குறித்த விசாரணைக்கு ஒத்துழைக்காத காரணத்தால் இவருக்கு குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இர்பான் தனது விசாரணைக்கு ஒத்துழைப்பாராயின் அவரின் தடை காலம் ஆறு மாதங்களாக குறைக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை மொஹமட் இர்பானுக்கு பாகிஸ்தான் ரூபாயில்1 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சூனியக்காரர்கள் எனக்கூறி இருவரின் தலையை துண்டித்த ஐ.எஸ் தீவிரவாதிகள்!!

 
பில்லி, சூனியம் வைக்கும் சூனியக்காரர்கள் என குற்றம்சாட்டி, ஐ.எஸ். தீவிரவாதிகள் இருவரின் தலைகளை துண்டித்துக் கொன்ற சம்பவம் எகிப்தில் இடம்பெற்றுள்ளது.

எகிப்தின் காசா முனை பகுதியையொட்டி சூயஸ் கனவாய் பிரதேசத்தில் அமைந்துள்ள எகிப்து எல்லையில் சினாய் பிரதேசத்தின் சில பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருவதோடு, கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து ஷரியா நீதிமன்றம் என்ற அமைப்பை உருவாக்கி, இப்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு, இஸ்லாமிய சட்டதிட்டத்தை மீறியதாக பலரை கைது செய்து தண்டனை வழங்கி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

இந்நிலையில் இஸ்லாமிய நெறிமுறைகளை மீறி பில்லி, சூனியம் வைப்பதாகவும், மக்களை மூடநம்பிக்கையின் பக்கம் திசை திருப்பிய இவர்கள் இருவருக்கும் மரண தண்டனை விதிக்குமாறு உத்தரவிடுகிறேன் என ஷரியா நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பின் பிரதியை ஒரு தீவிரவாதி வசித்த நிலையில் இருவரின் கழுத்துக்கள் அறுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கணவரை பிரிந்த சோகத்தில் நடிகை எடுத்த அதிரடி முடிவு!!

அமலாபால் தற்போது தமிழ், மலையாளப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 2 வருடங்களுக்கு பிறகு தெலுங்கு படம் ஒன்றிலும் நடிக்கிறார். ‘ஆயுஷ்பவன்’ என்ற இந்த படத்தில் இந்து வாலிபனை காதலிக்கும் முஸ்லிம் பெண்ணாக அமலாபால் நடிக்கிறார்.

இயக்குனர் சரண்தேஜ் இந்த படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடிக்கிறார். இது இவர் இயக்கி நடிக்கும் முதல் தெலுங்கு படம். இந்த படத்தில் அமலாபாலின் காதலுக்கு ஆதரவு அளிக்கும் வேடத்தில் சினேகா உல்லல் நடிக்கிறார்.

இதற்கிடையே அமலாபால் மன நிம்மதிக்காக யோகா, தியானம் ஆகியவற்றில் அமலாபால் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தினமும் யோகா, தியானம் ஆகியவற்றை தவறாமல் செய்து வருகிறார். இதனால் மன அமைதி கிடைப்பதாகவும், கவலைகளை மறக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

அமலாபால் தினம் காலையில் விதம் விதமாக யோகாசனம் செய்யும் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். அதில் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து யோகாசனம் செய்வதை வற்புறுத்தி இருக்கிறார்.

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

பதுளை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படக் கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தேர்தல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதேநேரம் இதற்குப் பதிலாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படக் கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார்.

அதன்படி பதுளை மாவட்டத்தில் இதுவரை இருந்த 09 உறுப்பினர்கள் என்பது 08 உறுப்பினர்களாக குறைக்கப்படும் அதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை இருந்த 06 உறுப்பினர்கள் என்ற நடைமுறை 07 உறுப்பினர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டுக்குறிய தேர்தல் இடாப்பின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்

வவுனியாவில் இனந்தெரியாத நபர்களினால் ஆலயத்தின் உண்டியல் பணம் கொள்ளை!!

 
வவுனியா உக்கிளாங்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு அதிலுள்ள பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இன்று (29.03.2017) அதிகாலை இனந்தெரியாத நபர்களால் குறித்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆலயத்தில் இன்று காலை பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளச் சென்றபோதே ஆலயத்தில் பணம் கொள்ளையிடப்பட்டுள்ள விடயம் தெரியவந்துள்ளது.

ஆலய நிர்வாகத்தினரால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை திருட்டு சம்பவங்கள் சி.சி.டி.வி கமராவில் பதிவாகியுள்ளமையினால் பொலிஸாரினால் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலயத்தின் பிரதான நுழைவாயில் திறப்பு விழா!!

 
வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலயத்தின் பிரதான நுழைவாயில் இன்று (29.03.2017) பாடசாலையின் அதிபர் செ.பவேந்திரன் அழைப்பின் பேரில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான ஜீ.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா ஆகியோரினால் உத்தியோகபூர்வமாக திறந்து பாடசாலையின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது.

நெடுங்கேணி நாகதம்பிரான் ஆலயத்திலிருந்து விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து பான்ட் வாத்திய இசையியுடன் நெடுங்கேணி மகா வித்தியாலயத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

இந் நிகழ்வின் பிரதம விருந்தனர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா சிறப்பு விருந்தினர்களாக வட மாகாண சபை உறுப்பினர்களான ஜீ.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா மற்றும் வவுனியா வடக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் ஸ்ரீஸ்கந்தராஜா, நெடுங்கேனி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த பண்டார, பிரதேச செயலாளர் திரு.சத்தியசீலன், சமயத்தலைவர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

அமரர் செல்லத்துரை சிதம்பரப்பிள்ளை ( முன்னாள் கிராம சேவையாளர் – நெடுங்கேணி) அவர்களின் ஞாபகார்த்தமாக அவருடைய 70வது வயது பூர்த்தியினையும் முன்னிட்டு அவரின் நினைவாக பாடசாலையின் பிரதான நுழைவாயில் அன்னாரின் குடும்பத்தாரினால் பாடசாலை சழூகத்திற்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 34வது நாளாகத் தொடரும் உணவு தவிர்ப்புப் போராட்டம்!!

 
வவுனியாவில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமக்கு தீர்வு கிடைக்கும் வரையில் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று 34ஆவது நாளாக தொடர்ந்து வருகின்றது.

எங்களது கோரிக்கைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர், ஜனாதிபதி ஆகியோரில் ஒருவர் நேரில் வந்து முடிவு தெரிவிக்கும் வரையில் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பொது அமைப்புக்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவை தாங்கள் வேண்டி நிற்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போனோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் பொலிசாருக்கு விருது வழங்கும் நிகழ்வு!!

 
வவுனியாவில் பொலிசாருக்கு விருது வழங்கும் நிகழ்வு வவுனியா மற்றும் மன்னார் பிராந்தியங்களுக்கான பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் இன்று (29.03.2017) வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

வவுனியா மற்றும் மன்னார் பிரதேசங்களில் போதைவஸ்த்து, கொலை, கொள்ளை மற்றும் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்திய 48 பொலிஸ் அதிகாரிகளுக்கு பரிசாக பணத்தொகை வழங்கப்பட்டது.

வவுனியா மன்னாரில் குற்றங்களை கட்டுப்படுத்திய மற்றும் குற்றவாளிகளை கைது செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கு 22 இலட்சம் ரூபா பணம் பகிர்ந்தளிக்கப்பட்டது.

தனிநபருக்கான அதிகூடிய பணப்பரிசான 1 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாய்களை வவுனியா மாவட்டத்தின் விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி கே.ஏ.டி.பிரசாத் ஸ்ரீவர்த்தன பிரதி பொலஸ் மா அதிபரின் கரங்களால் பெற்றுக்கொண்டார்.

அதே போல் அதி கூடிய பணப்பரிசான 5 இலட்சத்து 59 ஆயிரம் ரூபாய்களை வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவு பெற்றுக்கொண்டது.

அத்துடன் இந்நிகழ்வில் கலை நிகழ்வுகளை வழங்கிய பாடசாலை மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிசார் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.