வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் R.கம்சன் முதலிடம்!!

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி மாணவன்R.கம்சன் 7ABC சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

மேலும் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர் விபரம் வருமாறு..

R.கம்சன் 7A B C
P.பிரவீன் 6A 2B C
A.லக்ஷா 3A 3B 3C
R.டணிஜினி 4A B 2C 2S
P.கஜமுகன் 5A 2B S W
J.நிரோஜன் 3A 2B 3C W
T.தரணிகா 1A 3B 3C 2S
K.பிரதீப் 2A 3B 3C W
P.தனுசின் 2A 2B 4C W
S.சதுஷ்டிகா 2B 5C 2S

சிறப்பான பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வவுனியாவில் 168 பேருக்கு டெங்கு நோய்த் தாக்கம்!!

கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை வவுனியாவில் 168 பேர் டெங்கு நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொது சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.லவன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்று வரும் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது,

வவுனியாவில் ஜனவரி 2017 தொடக்கம் இன்று வரை 168 பேர் டெங்கு நோய்த்தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். இலங்கை முழுவதும் 30 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு நகரமயமாக்கலும் மக்களின் வாழ்வியல் மாற்றமும் காரணமாக இருக்கிறது. இதனால் டெங்கு நோய் தாக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். அதற்காக நன்கு திட்டமிட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம்.

முதலாவது கிராமப்புறங்கள், பாடசாலைகள், நகரம் மற்றும் அரச விடுதிகள், ஸ்தாபனங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம். இதற்கு மக்களினுடைய ஒத்துழைப்பு அவசியம் எனத் தெரிவித்தார்.

வவுனியா செட்டிகுளம், கப்பாச்சி நாமகள் பாடசாலைக்கு புளொட் அமைப்பு அன்பளிப்பு!!

 
வவுனியா செட்டிகுளம், கப்பாச்சி நாமகள் பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வு கடந்த 23.03.2017 அன்று பாடசாலை மைதானத்தில் பாடசாலையின் முதல்வர் செ.புஸ்பநாதன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வின் விருந்தினர்களாக புளொட் அமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், FEED அமைப்பின் செயலாளர் ஐ.யசோதரன், கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.ஜேசுதாசன், கிராம அலுவலர் பா.பாலகிரிதரன், உலக உணவுத் திட்ட அதிகாரி எஸ்.கிரிதரன், புளொட் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினர் வே.குகதாசன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் மாணவச் சிறார்களுக்கு வழங்கப்பட்ட ரூபா 4000 பெறுமதியான அனைத்து பரிசுப் பொருட்களையும் புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளையினர் வழங்கியிருந்தனர்.

 

வவுனியா மூன்றுமுறிப்பு அ.த.க பாடசாலை மாணவர்களின் பெறுபேறுகள்!!

வவுனியா மூன்றுமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் மாணவியான ராமராஜ் யாழினி கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் 8AC பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்

மேலும் இப்பாடசாலையில்
விஜயபாஸ்கரன் தனுஷியா 6A,B,C,S
பாலசுப்பிரமணியம் யதுஷா 6A,2B
கனகலிங்கம் அனுசியா 5A,4B
செல்வதாஸ் சனிஷியா 3A,3C,2S
நந்தகுமார் யுவராஜ் 3A,B,C,3S ஆகியோர் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.

இப்பாடசாலையில் 25 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 15 மாணவர்கள் சித்தியெய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 35வது நாளாகத் தொடரும் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்!!

 
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் இன்று (30.03.2017) 35வது நாளாக தமது உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தினை சுழற்சி முறையில் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமக்கு தீர்வு கிடைக்கும் வரையில் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று 35ஆவது நாளாக தொடர்ந்து வருகின்றது.

எங்களது கோரிக்கைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர், ஜனாதிபதி ஆகியோரில் ஒருவர் நேரில் வந்து முடிவு தெரிவிக்கும் வரையில் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் சிவில் பாதுகாப்புப் பிரிவினரால் மாபெரும் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்!!

 
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் டெங்கு ஓழிப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக வவுனியாவில் ஜனவரி தொடக்கம் இன்று வரை 168 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சிவில் பாதுகாப்பு பிரிவு, வவுனியா நகரசபை மற்றும் சுகாதார திணைக்களம் ஆகியன இணைந்து டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் வேலைத்திட்டத்தின் தொடர்ச்சியாக இன்று (30.03.2017) 600 பேரடங்கிய சிவில் பாதுகாப்பு பிரிவினர் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (30.03.2017) காலை ஒன்றுகூடிய சிவில் பாதுகாப்பு பிரிவினருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாக வீதியோரங்களில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களை அழிக்கும் நடவடிக்கையில் சிவில் பாதுகாப்பு பிரிவுடன் நகரசபை ஊழியர்கள் மற்றும் சுகாதார திணைக்களத்தினர் ஈடுபட்டிருந்தனர்.

மடுக்கந்த, மாமடுவ, உலுக்குளம் மற்றும் வவுனியா நகர் பிரதேசங்களைச் சேர்ந்த சிவில் பாதுகாப்புப் பிரிவினர் இந்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது கருத்து தெரிவித்த வவுனியா பொது சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.லவன்..

வவுனியாவில் ஜனவரி 2017 தொடக்கம் இன்று வரை 168 பேர் டெங்கு நோய்த்தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். இலங்கை முழுவதும் 30 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு நகரமயமாக்கலும் மக்களின் வாழ்வியல் மாற்றமும் காரணமாக இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.

அத்துடன் நான்கு முறையில் திட்டமிட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். முதலாவது கிராமப்புறங்களில், பாடசாலைகளில் நகரத்தில் மற்றும் அரச விடுதிகள் மற்றும் ஸ்தாபணங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

வவுனியாவில் தோட்டத் தொழிலாளியின் மகளின் சாதனை : மனதை நெகிழவைக்கும் சம்பவம்!!

வவுனியா மூன்றுமுறிப்பு அதக பாடசாலையில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றி ராம்ராஜ் யாழினி (8A,C) பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இம்மாணவியின் தந்தை நுவரெலியாவில் உள்ள தோட்டம் ஒன்றில் தோட்டத் தொழிலாளியாக கூலி வேலை செய்துவருகின்றார். தாயார் இல்லத்தரசி.

இம்மாணவிக்கு நான்கு சகோதரர்கள் இவரே மூத்தவர். குடும்ப வறுமையின் காரணமாக வவுனியாவில் உள்ள இவரது உறவினரின் வீட்டிலிருந்தே கல்வி பயின்று வருகிறார். 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் சித்தியடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் தான் வைத்தியராகி வறுமையில் வாழும் மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்க வேண்டும் என்பதை தனது குறிக்கோளாகக் கொண்டுள்ளார். எனினும் தனது மேற்படிப்பை தொடர முடியுமா என்ற கேள்வியும் தன்னுள் எழுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குடும்ப வறுமையே இதற்கு காரணம் என்கின்றார். ஆனாலும் தான் தன் கல்வியை கைவிடமாட்டேன் என்றும் தனது குறிக்கோளை அடைந்தே தீருவேன் என்றும் அம்மாணவி கூறுகையில் அருகில் இருந்தோரின் கண்களில் கண்ணீர் மல்கியதை காணக்கூடியதாக இருந்தது.

வவுனியாவில் வேலைவாய்ப்பினை வழங்கக் கோரி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்!!

 
வவுனியாவில் இன்று (30.03.2017) காலை 9.30 மணியளவில் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் ஒன்றிணைந்த வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் வவுனியா மாவட்ட வேலையில்லாப்பட்டதாரிகள் தமக்கான வேலைவாய்ப்பினை வழங்குமாறு தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் ஒன்றிணைந்து ஏமாற்றாதே ஏமாற்றாதே பட்டதாரிகளை எமாற்றாதே, வழங்கு வழங்கு வேலைவாய்ப்பினை வழங்கு, கொடு கொடு வேலைவாய்ப்பினைக் கொடு போன்ற வாசகங்களைத் தாங்கியவாறு பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து பேரணியாக சென்ற வேலையில்லாத பட்டதாரிகள் பஜார் வீதிவழியாக வந்து ஹொரவப்பொத்தானை வீதியூடாக வவுனியா மாவட்ட செயலகத்தினை சென்றடைந்து உதவி அரசாங்க அதிபர் என்.கமலதாசனிடம் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், பிரதமர், ஜனாதிபதிக்கான மகஜரை கையளித்தனர்.

கடந்த பல நாட்களாக வடகிழக்குப் பகுதிகளில் வேலையில்லாப் பட்டதாரிகள் தமக்கு வேலைவாய்ப்பினை வழங்குமாறு தெரிவித்து பல போராட்டங்களை முன்னெடுத்த வருகின்றனர்.

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரர் ஆலய மகோற்சவத்தின் நான்காம் நாள்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில் குளம் அகிலாண்டேஸ்வரம் எனப்போற்றப்படும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின்  வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் நான்காம்   நாளான நேற்று  29-03 -2017 புதன்கிழமை    காலை முதல் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கமலேஸ்வர  குருக்கள் தலைமையில் அபிசேகங்கள் நடை பெற்று மதியம் எம் பெருமான் திரு வீதியில் காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய திருக்காட்சி இடம்பெற்று பகல் திருவிழா நிறைவு பெற்றது.

மீண்டும்  மாலை   அலங்காரங்கள் அபிசேகங்கள்மாலை 4.30மணிக்கு  ஆரம்பமாகி வசந்தமண்டப பூஜையின் பின் மாலை ஏழு மணியளவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  இடப காமவாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மயில் வாகனத்திலும்  திருவீதி உலா வந்த நிகழ்வு  இடம்பெற்று திருவிழா இனிதே நிறைவு பெற்றது.

 

மரண அறிவித்தல் : கனகரட்ணம் பவானந்தன்!!

கனகரட்ணம் பவானந்தன் (முன்னாள் உரிமையாளர் S.K கனகரட்ணம் & Sons)

மறைவு: 28.03.2017

யாழ் காரைநகர், நாவற்கண்டியைப் பிறப்பிடமாகவும் வவுனியா வைரவப்புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் பவானந்தன் (முன்னாள் உரிமையாளர் S.K கனகரட்ணம் & Sons) (28.03.2017) செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் பாக்கியம் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு – தவமணி தம்பதியரின் அன்பு மருமகனும், சந்திராதேவியின் அன்பு கணவரும், சிந்துலா, தேனுலா, ஜங்கரன் (வவுனியா மத்திய மகாவித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுபோஷனின் (பொறியியலாளர்) அன்பு மாமனாரும், கனகேந்திரம்பிள்ளை, ஸ்ரீஸ்கந்தராஜா, காலஞ்சென்ற சிவராசா, நித்தியானந்தம், காலஞ்சென்ற சிவானந்தம், பவானி,வசந்தினி, தயானந்தன், மங்களேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக இல. 20A வைரவபுளியங்குளம் வவுனியாவில் வைக்கப்பட்டு நாளை (31.03.2017) வெள்ளிக்கிழமை மதியம் 2.00 மணிக்கு பூந்தோட்டம் பொது மயானத்துக்கு அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்,

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
பூந்தோட்டம் பொது மயானம்
திகதி : 31.03.2017
இடம் : வவுனியா

தொடர்புகளுக்கு
சுபோஷன்
தொலைபேசி : 0779469146

வவுனியா நகரசபைச் செயலாளரின் அதிரடி உத்தரவு : மகிழ்ச்சியில் சாரதிகள்!!

 
வவுனியா வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் (28.03.2017) இரவு வீதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வீதியில் நின்ற மாடுகளை நகரசபை ஊழியர்களின் உதவியுடன் பிடிக்கப்பட்டு நகரசபையில் கட்டிவைக்கப்பட்டள்ளது. இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபை செயலாளரிடம் தொடர்பு கொண்ட போது,

வவுனியாவிலிருந்து வேப்பங்குளம் வரையும் A9 வீதி , ஹொரவப்பொ த்தானை வீதி போன்ற வவுனியா நகரசபைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி செயற்ப்பாட்டின் காரணமாக போக்குவரத்துக்கு இடையூராக நின்ற 32 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது மாடுகள் நகரசபை வளாகத்தில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

மாட்டின் உரிமையாளர் தண்டம் ரூபா.1000 , மாட்டினை பிடித்தமைக்கான கூலி ரூபா 600 , நாளொன்றுக்கு ரூபா 300 வீதம் செலுத்தப்பட வேண்டும் குறித்த நாட்களுக்குள் மாட்டினை மீட்டெடுக்கவில்லையென்றால் மாடு ஏல விற்பனைக்கு விடப்படும் எனவும் மேலும் தெரிவித்தார்.

இரவு வேளைகளில் கட்டக்காலி கால்நடைகளினால் வீதி விபத்துக்கள் அதிகம் ஏற்படுகின்றது. நகரசபைச் செயலாளரின் அதிரடி செயற்பாட்டினால் தங்கள் மகிழ்ச்சியடைவதாகவும் தற்போது வீதியில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் குறைந்து காணப்படுவதாவும் மேலும் இச் செயற்பாட்டினை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும னவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்!!

நம் உடலில் நோய் ஏற்படவுள்ளதை அதன் அறிகுறி மூலமாக கூட அறிந்து கொள்ளலாம். சில சமயங்களில் நமக்கு ஏற்படும் காய்ச்சல், தலைவலி போன்றவை கூட நம் உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள ஏதேனும் ஒரு பாதிப்பின் அறிகுறியாக வெளிப்படுகிறது.

கண்கள் வீக்கம்

நமது கண்கள் உப்பி இருந்தால் சிறுநீரகங்களின் செயல்பாடானது சீராக இல்லை என்று அர்த்தம்.

உடலில் உள்ள கழிவுகளை நீராக சிறுநீரகம் வெளியேற்றுகிறது. அது சரியாக செயல்படவில்லை எனில் கழிவுகள் நமது உடலிலேயே தங்கிவிடுகிறது.

இந்த அசுத்தநீர் வெளியேறாமல் கண்களை சுற்றி தேங்கிவிடுவதால் கண்களானது வீங்கி காணப்படும்.

இதனை தவிர்ப்பதற்கு உணவில் உப்பின் அளவினை குறைத்து கொண்டு, அதிக அளவில் நீர் அருந்த வேண்டும்.

கண் இமைகளில் வலி

உடலில் மக்னீசிய குறைப்பாட்டினாலும், அதிக நேரம் வேலை பார்ப்பதாலும் கண்களானது சோர்வடைந்து, இமைகளில் வலி உண்டாகிறது.

இதனை தடுக்க முட்டைகோஸ் மற்றும் கீரை போன்றவற்றினை நமது உணவில் அதிகமாக சேர்த்து கொண்டு, போதுமான அளவிற்கு ஓய்வினை எடுத்து கொள்ளவேண்டும்.

கண்களில் அதிக வெளிச்சம்

அதிகமாக வேலை செய்யும் போது ஏற்படும் மன அழுத்ததினால் மூளை குழப்பமடைந்து தவறான தகவலை அனுப்பிவிடுவதால் பார்வைக்கு சட்டென்று அதிக வெளிச்சமும் புள்ளிகளும் தெரிகின்றன.

எப்போதும் நிமிர்ந்து நிற்பதன் மூலமும், அடிக்கடி காபி குடிப்பதை தவிர்ப்பதன் மூலமும் இதனை தடுக்கலாம்.

தோலில் தடிப்புகள் ஏற்படுதல்

தோலில் தடிப்புகள் ஏற்பட்டால் அது இதயநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். குறிப்பாக காதின் பின்புறம் ஏற்பட்டால் கட்டாயம் இதய கோளாறு உள்ளது என்பதை அறியலாம்.

அதிகப்படியான மன அழுத்தம் மாரடைப்பு ஏற்படுவதற்கு வழிவகுக்கும். எப்போது பிரச்சனை எளிதாக கையாள்வதே நன்மை தரும்.

முகம் வீக்கமாக இருத்தல்

உடலில் தேவையான அளவிற்கு தண்ணீர் இல்லாவிட்டால் இரத்த செல்களானது விரிவடைந்து முகம் வீங்கி காணப்படும்.

ஒரு நாளுக்கு குறைந்தபட்சமாக 8 டம்ளர் நீரையாவது அருந்தவேண்டும்.

தோல் இளம் மஞ்சளாக மாறுவது

தோல் இளம் மஞ்சளாக மாறுவது கல்லீரல் நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். கல்லீரல் பாதிப்படைந்தால் உடலில் மஞ்சள் நிறத்தில் உள்ள பித்தநீர் போன்றவற்றினை வெளியேற்ற இயலாது. இதனால் தோல் மஞ்சளாக மாறுகிறது.

அதிகப்படியான ஆல்கஹால் அளவினால் கூட கல்லீரல் பாதிக்கும் அபாயமுள்ளது. எனவே, குடிப்பழக்கத்தினை கைவிடுவது நலம் தரும்.

உலகிலேயே குண்டான ஆண் இவர் தான்!!

மெக்சிகோவை சேர்ந்த உலகிலேயே குண்டான ஆணுக்கு எடை குறைப்பு செய்ய அறுவை சிகிச்சை முறையை கையாள மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

மெக்சிகோவை சேர்ந்தவர் Juan Pedro Franco (32), இவர் 595 கிலோ எடையுடன் உலகிலேயே குண்டான மனிதராக திகழ்ந்து வருகிறார். இவர் உடல் எடையை குறைக்க இரைப்பை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

ஆனால் அவர் உடல் எடை மிக அதிகமாக இருப்பதால் சிறிது குறைந்தால் மட்டுமே ஆப்ரேஷன் செய்ய முடியும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் அவர் கடந்த 3 மாதங்களாக டயட்டில் இருந்து உடல் எடையை சிறிது சிறிதாக குறைத்து வருகிறார்.

Juanக்கு நீரிழிவு நோயும் உள்ளது. அவருக்கு வரும் மே மாதம் 9ஆம் திகதி ஆப்ரேஷன் நடைப்பெறவுள்ளது.

பல வருடங்களாக படுக்கையிலேயே இருக்கும் Juan உடல் எடையை பாதியாக ஆப்ரேஷன் மூலம் குறைக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

விமான ஓடுபாதையில் செல்பி எடுத்த இளம் பெண்கள் : நடந்த விபரீதம்!!

மெக்சிகோவில் விமான ஓடு பாதையில் செல்பி எடுத்த இரண்டு பெண்கள் மீது விமானம் மோதியதில் இருவரும் பலியாகியுள்ளனர்.

மெக்சிகோவின் Chihuahua மாநிலத்தை சேர்ந்தவர்கள் Nitzia Mendoza Corral (18) மற்றும் Clarissa Morquecho Miranda (17). Nitzia சட்டப்படிப்பு படித்து வருகிறார். அவர் தோழி Clarissa பள்ளிப்படிப்பை முடித்துள்ளார்.

இந்நிலையில், இளம் பெண்களான இவர்கள் அங்குள்ள விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு நேற்று சென்றுள்ளனர்.

பின்னர் அங்கிருந்த ஒரு வாகனத்தின் பின்பிறம் நின்று கொண்டு இருவரும் செல்போனில் செல்பி எடுத்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வாகனத்தை உரசுவது போல வந்த ஒரு விமானத்தின் இறக்கை இரு பெண்களின் கழுத்தின் மீதும் வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.

அருகிலிருந்தவர்கள், இருவரையும் அங்கு நிற்காதீர்கள் என கூறியும் அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

பெற்ற மகனை வெட்டி கொன்ற தாய் : அதிர வைக்கும் காரணம்!!

தமிழகத்தில் தாய் ஒருவர் பெற்ற மகனை வெட்டி கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி கிராமத்திலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. குற்றவாளி பேச்சியம்மாளை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பேச்சியம்மாளின் மூத்த மகனான அழகுராஜா வேலைக்கு செல்லாமல் தாயிடம் செலவுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.

சம்பவத்தின் போதும் அழகுராஜா பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். பணம் தர மறுத்த பேச்சியம்மாளை கட்டையால் தாக்கியுள்ளார்.

இதில் கோபமடைந்த பேச்சியம்மாள் அரிவாளால் தனது மகனை வெட்டி கொன்றுள்ளார். தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் பேச்சியம்மாளை கைது செய்து, அழகுராஜா உடலை மீட்டுள்ளனர்.

பெண்களின் ஆபாசப் படங்களை வைத்திருந்த இருவர் கைது!!

மட்டக்களப்பில் ஆபாச படங்களை கையடக்க தொலைபேசியில் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் இரண்டு இளைஞர்கள் மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு கல்லடிப்பகுதியில் வைத்து இவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களின் கையடக்க தொலைபேசியில் ஆபாசப்படம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விசாரணையின் பின்னர் இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மைக்காலமாக மட்டக்களப்பில் உள்ள பெண்கள் சிலரின் ஆபாசப்படங்கள் இணையத்தளங்களில் சிலரினால் தரவேற்றப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.