க.பொ.த சாதாரண தர பரீட்சையில் யாழ்.இந்து கல்லூரி மாணவன் அ.அபிநந்தன் 9 பாடங்களில் A தர சித்தி பெற்று யாழ்.மாவட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய மட்டத்தில் தமிழ் மொழிமூலம் முதலாம் இடத்தினையும், தேசிய மட்டத்தில் 5ஆம் இடத்தினையும் பெற்றுள்ளார்.
2016ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியான நிலையில் குறித்த மாணவன் இந்த பெறுபேற்றை பெற்றுள்ளான்.
இவ்விடயம் குறித்து அ.அபிநந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எனது தாய் ஆசிரியர், தந்தை மருந்தாளர் எனது பெற்றோர் மற்றும் சித்தியின் ஊக்கமளிப்பினால் நான் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளேன்.
இந்நிலையில் உயிரியல், விஞ்ஞான துறையில் தொடர்ந்து கல்வி கற்பதற்கு விரும்புகிறேன். அது தவறினால் நோய்கள் பற்றிய ஆய்வுதுறையில் கல்வியை கற்க விரும்புகிறேன். அதேபோல் எனது வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றிகள் என எனவும் தெரிவித்துள்ளார்.
படிக்காமல் ஒரு நாளும் வெற்றி பெற முடியாது என 2016ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியாக முதலிடம் பிடித்த மாணவி அனுகி சமத்கா பெஸகுவேல் தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் கொழும்பு விசாகா பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி அனுகி சமத்கா பெஸகுவேல் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்த நிலையில் தமது வெற்றி குறித்து அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன், கல்வி கற்கும் மாணவர்களுக்கு சில கருத்துக்களையும் முன்வைத்துள்ளார்.
பாடசாலையில் கொடுக்கும் பாடங்களை சரியான முறையில் செய்ய வேண்டும், படிக்காமல் ஒரு நாளும் வெற்றி பெற முடியாது, ஆகவே நன்றாக படிக்க வேண்டும், ஆசிரியர் சொற்படி நடக்க வேண்டும், இவற்றை சரியாக செய்தால் வெற்றி பெற முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது குறித்த மாணவிக்கு ஆசிரியர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் வாழ்த்துக்கள் கூறியதுடன், பாடசாலையில் அனைவரும் மிக மகிழ்ச்சியாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
2016 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியாகிய நிலையில் வவுனியா மாவட்டத்தில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி சாதனை படைத்துள்ளது.
இதனடிப்படையில் தமிழ் மொழி மூலத்தில் 9 மாணவிகள் 9A சித்திகளையும், 11 மாணவிகள் 8A மற்றும் B சித்திகளையும் பெற்றுள்ளனர்.
இன்று வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் மூன்று மாணவர்கள் 9A சித்தியினைப் பெற்றுள்ளனர்.
சங்கவி மோகன், வராகி வாகீசன், சங்கவி கனகரத்தினம் ஆகிய மூவருமே 9A சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மேலும் வினோசிகா மகேஸ்வரன், டெனுஷா ஸ்ரீதரன், இலக்க்ஷிஜா அரிபூரணநாதன் ஆகிய மூன்று மாணவிகளும் 8A சித்திகளை பெற்றுள்ளனர். மேலும் 6 மாணவர்கள் 7எ சித்திகளை பெற்றுள்ளனர்
கடந்த ஆண்டு பரீட்சைக்கு தோற்றிய 144 மாணவர்களில் 122 மாணவர்கள் கணிதப்பாட சித்தியுடன் உயர்தரம் கற்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர். இது 85 வீதமாக காணப்படுகின்ற அதேவேளை சுற்று நிருபத்திற்கு அமைவாக மீள எழுதித் தரும் வகையில் 9 பேர் காணப்படுகின்றார்கள்.
பரீட்சைக்கு மொத்தமாக 138 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.
ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படத்தை பார்த்தவர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய கேள்வி எழும். கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பதுதான் அந்த மிகப்பெரிய கேள்வி. அந்த கேள்விக்கு தற்போது உருவாகிவரும் பாகுபலி-2 படத்தில் விடை கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், அதற்கு முன்னதாக இப்படத்தில் அந்த கேள்விக்கான விடையை இப்படத்தில் கட்டப்பாவாக நடித்த சத்யராஜே அறிவித்துள்ளார். நேற்று, பாகுபலி-2 படம் வெளியாவதற்கு முன்பாக படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.
அப்போது நடிகர் சத்யராஜ் பேசும்போது, பாகுபலி படத்தில் ஏன் கட்டப்பா பாகுபலியை கொன்றார் என்று எல்லோருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது. அதற்கு நான் இப்போது பதில் சொல்லிவிடுகின்றேன். இந்த படத்தின் தயாரிப்பாளர் சோபு எனக்கு நல்ல சம்பளம் கொடுத்து பிரபாஸை கொல்லச் சொன்னார். எனது இயக்குனர் ராஜமௌலியும் பாகுபலியை கொல்ல எனக்கு உத்தரவிட்டார். அவர்கள் சொன்னபடி நான் செய்தேன். இல்லையென்றால், பிரபாஸை நான் எதற்கு கொல்லப் போகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். சத்யராஜின் இந்த பேச்சும் அனைவரையும் கலகலக்க வைத்தது.
இந்நிகழ்ச்சியில், இயக்குனர் ராஜமௌலி, பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சி 360 டிகிரி தொழில்நுட்பத்தில் பார்க்கும்படி உருவாக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில் பாகுபலி-2 தெலுங்கு பதிப்பின் பாடல்களும் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முள்ளிவாய்கால் கிழக்கு சந்திரன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப்போட்டி நேற்று(27.03.2017) திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடைபெற்றது
44 மாணவர்களை கொண்ட இப்பாடசாலையில் விருந்தினர்களை வரவேற்றல், ஒலிம்பிக் தீபமேற்றல், மாணவருக்கான விளையாட்டுக்கள், உடற்பயிற்சிகள், வினோதவுடை நிகழ்வுகள், பெற்றோருக்கான விளையாட்டுக்கள், என பல நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது
யுத்தத்தின் பின் முள்ளிவாய்கால் கிராமத்து மக்கள் மனதில் சந்தோசத்தை ஏற்படுத்திய நிகழ்வாக அமைந்திருந்தது
சிறுவர்பாடசாலையின் ஆசிரியர்களின் வழிநடத்தலில் (செல்வி ஞா றொக்சி, திருமதி ஏ.வெல்சி, திருமதி த.சுயர்மதி) நடைபெற்ற இவ்விளையாட்டுபோட்டியில் ஜே ஆர் எஸ் எஸ் இன் இணைப்பாளர் திரு அசோக், மற்றும் அருட்சகோதரி ஜேயுலின் அவர்களும் பிரதம நபர்களாக கலந்து கொண்டிருந்தனர்
பெருமளவு கிராமத்து மக்கள் கலந்து கொண்ட இன்நிகழ்வில் அழைப்பு விடுத்திருந்த பல அரசியற் பிரமுகர்கள் மக்களுக்கான முக்கிய கூட்டங்களுக்குகாக சென்றிருந்தைமையால் மக்களோடும் மகவர்களோடும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இந்தியாவுடன் இணைந்து இலங்கை செய்மதி ஒன்றை விண்ணில் செலுத்தவுள்ளதாகஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து தகவல்வெளியிட்டுள்ளார்.
கொழும்பு – பண்டரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தென்னாசிய தொடர்பாடல் மற்றும் காலநிலை சார்ந்த செய்மதியை இந்தியா விரைவில்விண்ணில் செலுத்தவுள்ளதாகவும், அதில் இலங்கையையும் பங்குதாரராகஇணைக்கவுள்ளதாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்துதெரிவித்துள்ளார்.
சண்டிகரின், பொன்ட்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 கைதிகள் சேர்ந்து உருவாக்கிய பீனிக்ஸ் என்னும் அலைபேசி சேவையால் அவர்களது பெயர்கள் இந்தியாவின் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
குறித்த பீனிக்ஸ் சேவையால் சிறை உணவகங்களில் பணமற்ற பரிவர்த்தனை சாத்தியப்படும், கைதிகளின் வழக்கு வரலாறை பற்றி எளிமையாக தெரிந்துகொள்ளமுடியும் மற்றும் பார்வையாளர்கள் கைதிகளின் சந்திப்பு கணினியில் பதியப்படுவதால் நேரத்தை சேமிக்க முடியும்.
இந்த சேவை ஹரியானாவில் உள்ள 11 சிறைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. வேலைநிமித்தமாக கைதிகள் சிறையில் இருந்து வெளியே செல்வது இதுவே முதல்முறை ஆகும்.
விடுதலை அடைந்த மின்பொறியாளர் அமித் மிஸ்ரா ஆரம்பித்த இந்த முயற்சியை ரோஹித் பகரே, அனூப் சிங், பலவாந் சிங் மற்றும் அஜித் சிங் மிஸ்ராவின் உதவியோடு முடித்துவைத்தனர்.
மிஸ்ராவின் விடுதலைக்கு முன்பு இந்த சேவையை அவர் 8 சிறைக்கு அளித்துள்ளார். கைதிகள் சிறை உணவகத்தை கணினிமயமாக்குவதாக விருப்பம் தெரிவித்ததால் இந்த பீனிக்ஸ் சேவையை இவர்கள் உருவாக்கினார்கள் என்றும் இது கைதிகளுக்கு மட்டும் அல்லாமல் சிறைக்கும் பெருமை என்றும் பொன்ட்சி சிறை அதிகாரி ஹரேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்துவதற்காக 3 பெண்கள் தமிழகத்தின் கோவையில் இருந்து கார் மூலம் லண்டன் செல்லும் பயணத்தை நேற்று தொடங்கியுள்ளனர்.
கோவை கல்வியறிவு இயக்கம் சார்பில் கோவையைச் சேர்ந்த 3 பெண்கள் தங்கள் பயணத்தை நேற்று தொடங்கினர். தமிழக நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் வேலுமணி காரை கொடியசைத்து பெண்களின் பயணத்தை தொடக்கி வைத்தார்.
இதுகுறித்து அப்பெண்கள் கூறுகையில், பெண்களுக்கு கல்வி வழங்குவது குறித்தும், பெண்கள் முன்னேற்றம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த பயணத்தை மேற்கொள்கிறோம். பெண்கள் படித்தால் அவர்கள் மூலம் ஒட்டுமொத்த அவரது குடும்பமே கல்வி அறிவு பெறுவர். அனைவரும் கல்வியறிவு பெறுவது என்பது நல்ல விடயம், இதற்காக நாங்கள் லண்டனுக்கு காரில் செல்கிறோம்.
உலகில் உள்ள எந்த இந்திய பெண்ணும் இன்னும் ஒடுக்கப்பட்டும், பின்தங்கியும் இருக்கக் கூடாது என்றனர். மியான்மர், லோவோஸ், தாய்லாந்து, சீனா, ரஷ்யா. மத்திய ஐரோப்பா, போலந்து உள்ளிட்ட 24 நாடுகள் வழியாக லண்டன் சென்றடைய உள்ளனர்.
மொத்தம் 24,000 கி.மீ. தூரத்தை மொத்தம் 70 நாள்களில் கடக்கவுள்ளனர். அதாவது வரும் யூன் 5-ஆம் திகதி லண்டனை அடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூவரும் ஒவ்வொரு நாட்டிலும் இறங்கி பெண் கல்வி குறித்த முக்கியத்துவத்தையும், பெண்கள் முன்னேற்றம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
பாடசாலை அதிபரினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் காரணமாக காயமடைந்த மாணவர் சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவனினால் முகப்புத்தகத்தில பதிவேற்றம் செய்யப்பட்டதாக கூறப்படும் தகவல் தொடர்பில வினவியே அதிபர் இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திம்புலாகல கல்வி வலயத்திற்கு சொந்தமான அரலங்வில பாடசாலையில் 9ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பில், அரலங்வில பாளம், இலக்கம் 136 என்ற விலாசத்தில் வசிக்கும் மாணவனின் தந்தை சம்பவம் தொடர்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த மாணவன் நேற்று நீதிமன்ற வைத்திய அதிகாரியின் முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில் வெள்ளை வானில் வந்தவர்கள் பால் லொறி ஒன்றினை வழி மறித்து சாரதியை தாக்கிவிட்டு ஆறு லட்சத்து பதினெட்டாயிரம் ரூபா கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
தலவாக்கலை பசும் பால் நிலையத்திலிருந்து தனது பால் சேகரிப்பாளர் வீட்டுக்குபணத்தினை எடுத்து சென்று கொண்டிருந்த வேளையில், டொல்பின் ரக வெள்ளை வானில்வந்த சிலர் லொறிக்கு குறுக்காக வானினை நிறுத்தி தாங்கள் பினான்ஸ் கம்பனியிலிருந்து வந்துள்ளதாகவும், இந்த லொறிக்கு தவணை பணம் செலுத்தாததால் இந்த லொறியினை கொண்டு செல்ல வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து லொறி சாவியினை எடுத்தாகவும், பின் இவர் கொண்டு வந்த பணம் வைத்திருந்த பையினை எடுக்கும் போது கையை கூரிய ஆயுதத்தினால் தாக்கி காயப்படுத்தியதாகவும், பின்தலையில் கட்டையொன்றினால் தாக்கி லொறியினையும் பணத்தினையும் எடுத்து சென்றதாகவும், அதன்பின் பாதிக்கப்பட்டவர் பொலிஸ் விசாரணையின் பின் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட சாரதி ஆர்.சின்னையா தெரிவித்தார்.
லொறியினை எடுத்து சென்றவர்கள் சுமார் ஒரு கிலோ மீற்றர் வரை கொண்டு சென்று பணத்தினை மாத்திரம் எடுத்துக்கொண்டு லொறியினை வீதியோரத்தில் விட்டுச்சென்றுள்ளனர்.
கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்ட பணம் வட்டகொடை பசும் பால் உற்பத்தியாளர்களுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது வெள்ளை வானில் வந்தவர்கள் அரச உத்தியோகத்தவர்கள் போல் உடை அணிந்திருந்ததாகவும் சுமார் ஐந்து பேர் வரை வானில் இருந்தாகவும் பாதிக்கப்பட்டவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக தலவாக்கலை பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக இது வரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
பிரேஸிலைச் சேர்ந்த பாடசாலை மாணவியான ஒரு சிறுமியின் தலைமயிர் குறித்து சிலர் கேலி செய்ததால், அம் மாணவிக்கு தன்னம்பிக்கை அளிப்பதற்காக அச் சிறுமியைப் போன்று ஆசிரியை ஒருவரும் சிகையலங்காரம் செய்துகொண்டுள்ளார்.
பிரேஸிலின் சாவோ பவ்லோ நகரைச் சேர்ந்த அனா பார்பரா ஃபெரைரா எனும் இந்த ஆசிரியை தனது புதிய சிகையலங்காரத்துடன் மேற்படி மாணவியின் அருகிலிருந்து பிடித்துக்கொண்ட புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
மேற்படி மாணவியின் தலைமயிர் அசிங்கமாக உள்ளது என மாணவன் ஒருவன் கூறியதால் அம் மாணவி மிகவும் கவலை யடைந்திருந்ததாக ஆசிரியை அனா பார்பரா ஃபெரைரா தெரிவித்துள்ளார்.
“அம் மாணவி அழகாக இருக்கிறாள். சிலர் கூறுவதைப் பற்றி கவலையடைய வேண்டியதில்லை என்பதை மாத்திரமே அத் தருணத்தில் என்னால் கூற முடியும்” என பேஸ்புக்கில் அவர் எழுதியுள்ளார்.
ஆனால், வெறும் வார்த்தைகளால் மாத்திரம் அம் மாணவிக்கு ஆசிரியை அனா பார்பரா ஆறுதல் கூறவில்லை. மறுநாள் அச் சிறுமி பாடசாலைக்கு வந்தபோது தனது ஆசிரியை அனா பார்பராவும் தன்னைப் போன்ற சிகையலங்காரம் செய்திருப்பதைக் கண்டு இன்ப அதிர்ச்சியடைந்தாள்.
“அவள் என்னைக் கண்டவுடன், ஓடி வந்து என்னை அணைத்துக்கொண்டாள். நான் அழகாக இருப்பதாக அவள் கூறினாள். அப்போது நான் உன்னைப் போல் அழகாக இருக்கிறேன்” என அவளிடம் கூறினேன்” என அனா பார்பரா ஃபெரைரா தெரிவித்துள்ளார்.
மணிக்கு 263 கிலோமீட்டர் வேகத்துடன் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநில கடற்கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் பலமான சூறாவளி ஒன்று அப்பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தீவுகளில் கடும் நாசத்தை உண்டாக்கியுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை, பிற்பகல் 2 மணி அளவில் சூறாவளிகள் பிரிவு வகைபாட்டில் மிக அதிக தாக்கம் மற்றும் பாதிப்பு ஏற்படுத்துவதில் கேட்டகிரி ஃபோர் பிரிவு வகையான டெப்பி சூறாவளி, அவுஸ்திரேலிய பெருநிலப்பரப்பை தாக்கும் என்று கணித்து 25,000-க்கும் அதிகமான மக்களை அப்பகுதியில் இருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இப்பகுதியில் உள்ள ஏறக்குறைய 23,000 வீடுகள் மின்சார இணைப்பை இழந்துள்ளன. கடந்த 2011-ஆம் ஆண்டில் தாக்கிய யாஸி சூறாவளிக்கு பிறகு, இப்பகுதியில் வீசும் மிக மோசமான புயல் இதுவாகத்தான் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் வசிக்கும் ஒரு நபர் கூறுகையில், ´´இடது மற்றும் வலது பக்கங்களில் இருந்து மாறி மாறிச் செல்லும் சரக்கு ரயில்களை போல் இருந்தது´´ என்று இச்சூறாவளி குறித்து ஒப்பிட்டுள்ளார்.
2016ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று அதிகாலை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் தற்போது சிறந்த பெறுபேறுகளை பெற்ற 6 பாடசாலைகள் மற்றும் மாணவர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன.
சிறந்த பெறுபேறுகளை பெற்ற 10 மாணவர்களில் 7 மாணவர்கள் பெண்கள் பாடசாலையில் கல்வி கற்பவர்களாகும். அந்த 10 பேரும் நகர பாடசாலைகளில் கல்வி கற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்க முக்கிய விடயமாகும்.
அதற்கமைய கொழும்பு விஷாக்கா பெண்கள் பாடசாலை மாணவி அனுகி சமத்கா பெஸகுவேல் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
கண்டி மஹாமாயா பெண்கள் பாடசாலை மாணவி எஸ்.எம்.முனசிங்க இராண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
கொழும்பு ஆனந்தா வித்தியாலயத்தின் ஆர்.எம்.சுகத் ரவிது மற்றும் மாத்தறை ராஹுல வித்தியாலயத்தின் திமுத் என்ற மாணவர்கள் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.
கம்பாஹா ரன்னாவலி பெண்கள் வித்தியாலயத்தின் மாணவி எச்.பீ.பபசரா மலிதி குமாரி நான்காம் இடத்தை பெற்றுள்ளார்.
கொழும்பு தேவி மகளீர் பாடசாலையின் டீ.எம்.ரனும் திஸரணி நாணயக்கார, காலி சங்கமித்த மகளீர் பாடசாலையின் ஏ.தம்ஸரா மேதாவி மற்றும் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவர் ஏ.அபினந்தன் ஆகியோர் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளனர்.
காலி சவுத்லேன்ட் வித்தியாலயத்தின் ரன்தினி டி சில்வா மற்றும் மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் ஈ.ஏ.யசாரா உமாஷி ஆகிய மாணவர்கள் ஆறாம் இடத்தை பிடித்துள்ளனர்.
அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 10 இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்கான சுயசக்தி கடன் விண்ணப்பத்தை கையளிப்பதற்காக வவுனியா மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் மக்கள் காலை முதல் முண்டியடித்துக் கொண்டு நிற்பதை காணமுடிகின்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழான தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் ஊடாக நாடு முழுவதும் 10 இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்குடன் சுயசக்தி என்னும் பெயரில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இளைஞர், யுவதிகளின் தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் முகமாக சுமார் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் வரை குறைந்த வட்டி வீதத்தில் வங்கிகள் மூலம் அவர்களது தொழில் தகமை மற்றும் தொழில் நடவடிக்கைக்கு ஏற்ப கடன் வழங்க குறித்த அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி இதற்கு விண்ணப்பிப்பதற்காக இளைஞர்கள், யுவதிகள், தாய்மார், முதியவர்கள் எனப் பலரும் மாவட்ட செயலகத்தில் உள்ள அலுவலகத்திலும், வவுனியா பிரதேச செயலகத்திலும் விண்ணப்பங்களை பெறுவதற்கும் அதனை சமர்ப்பிப்பதற்கும் முண்டியடித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக விண்ணப்பங்களைப் பெறும் மற்றும் வழங்கும் நடவடிக்கைகளில் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை வவுனியா மாவட்டத்தில் ஐந்தாயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில் ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் வரை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.