வவுனியாவில் மாபெரும் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்!!

 
வவுனியா பொலிஸ், சிவில் பாதுகாப்பு பிரிவு, விசேட அதிரடிப்படையினர் மற்றும் சுகாதார திணைக்களம் ஆகியன இணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளன.

வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (27.03.2017) காலை இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு கூட்டத்தினை அடுத்து வீதியோரங்களில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் , விசேட அதிரடிப்படையினர் , சிவில் பாதுகாப்பு பிரிவு, நகரசபை ஊழியர்கள், சுகாதார திணைக்களத்தினர் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.லவன்,

கடந்த பெப்ரவரி மாதம் 90 பேர் டெங்கு தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மார்ச் மாதம் 100 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் டெங்கு தாக்கம் அதிகமாக உள்ளமையே வவுனியாவில் டெங்கு நோயாளர்கள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது என தெரிவித்ததுடன், இதுவரை நாடு பூராகவும் 24 ஆயிரம் டெங்குநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வவுனியாவில் வெளிச்சம் அறக்கட்டளையின் 1ம் ஆண்டு பூர்த்தியும் கெளரவிப்பும்!!

 
வெளிச்சம் அறக்கட்டளையின் நெடும் பயணத்தில் பங்குகொண்டிருந்த மற்றும் பங்குகொண்டிருக்கும் அன்பளிப்பாளர்கள், பயனாளிகள் மற்றும் ஆர்வலர்களை கெளரவிக்கும் நிகழ்வு தலைவர் பா.லம்போதரன் தலைமையில் நேற்று (26.03.2017) இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் கௌரவ Dr ப.சத்தியலிங்கம் பங்குகொண்டிருந்தார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக திரு.இராதாகிருஸ்ணன் (தெற்கு வலய கல்விப் பணிப்பாளர்), S.S வாசன் (வவுனியா மாவட்ட சமூகசேவைகள் திணைக்கள அதிகாரி), சி.வில்வராசா (இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க செயலாளர்) போன்றோரும் கௌரவ விருந்தினர்களாக சு.அமிர்தலிங்கம் (விபுலாநந்தாக் கல்லூரி அதிபர்), திருமதி S.நந்தசேன (கணேசபுரம் சண்முகானந்தா வித்தியாலய அதிபர்) மற்றும் வெளிச்சம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்கள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்

இந்திகழ்வில் நன்கொடையாளர்களுக்கு வெளிச்சம் அறக்கட்டளையின் மிக உயரிய கௌரவத்தை வெளிப்படுத்தும் முகமாக ஞாபகச் சின்னங்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். மேலும் பல பாடசாலை மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ள கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

வவுனியாவில் அரச ஊழியர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்!!

ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டபகுதியில் காணிகள் பெற்றுக்கொண்டு இதுவரை வீடுகள் கட்டாத 190 சிற்றூழியர்களுக்கு 5 இலட்சம் ரூபா மானியம் வழங்கப்படவுள்ளதால் தத்தமது காணிகளை துப்பரவு செய்து எதிர்வரும் 5ம் திகதிக்கு முன் தமது பெயர்களை வவுனியா தேசிய வீடமைப்பு அதிகாரசபையில் பதிவு செய்துகொள்ளுமாறு வவுனியா வீடமைப்பு அதிகாரசபையின் முகாமையாளர் வி.எம்.வி.குருஸ் அறிவித்துள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டு காணிகள் அற்ற 700 பேருக்கு கால்ஏக்கர் காணி வழங்கப்பட்டது. அதில் 60 பேர் மட்டுமே இதுவரை வீடுகட்டி குடியேறியுள்ளனர். ஏனைய காணிகள் பற்றைக்காடாக உள்ளது. இக்காணிகளில் சிற்றூழியர்களின் காணிகள் பல இனம்காணப்பட்டுள்ளது. என வீடமைப்பு அதிகாரசபையினர் தெரிவித்துவரும் நிலையில் இவர்களுக்கு உடனடியாக வீடுஅமைக்க உதவி வழங்குமாறும் மற்றும் பல்வேறு அடிப்படைவசதிகள் கோரியும் கவனயீர்பபு போராட்டம் அரச ஊழியர் வீட்டுத்திட்டபகுதியில் நேற்று (26.03) முன்னெடுக்கப்பட்டது.

உடனடியாக அன்றைய தினம் வீடமைப்பு அதிகாரசபையினர் குறித்த இடத்திற்கு விஜயம் செய்து 190 சிற்றூழியர்கள் காணிகளை பற்றைகளாக இனம் கண்டுள்ளனர்.

எனவே இப் பற்றைக் காணிகளை எதிர்வரும் 3ம் திகதிக்கு முன்னர் (03.04.2017) துப்பரவு செய்து எதிர்வரும் 5ம் திகதிக்கு முன்னர் தமது காணிகளை அடையாளப்படுத்தி தமது பெயர் விபரங்களை வீடமைப்பு அதிகாரசபை வவுனியா காரியாலத்திற்கு சென்று தமது பதிவு செய்து மானியத்தை பெற்று உடனடியாக வீடமைப்பு பணியை முன்னெடுக்குமாறு இன்று (27.03) அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

வவுனியாவில் ஒரு மாதத்தைக் கடந்து 32வது நாளாக தொடரும் போராட்டம்!!

 
வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சுழற்சி முறையில் இன்று (27.03.2017) 32வது நாளாகவும் தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த முறை மேற்கொள்ளப்பட்ட சாகும் வரையான உணவு தவிர்ப்புப் போராட்டம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் வாக்குறுதியை அடுத்து கைவிடப்பட்டதுடன் கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் அவர்கள் மீண்டும் தமது போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரில் ஒருவர் நேரில் வந்து சாதகமான பதில் வழங்கும் பட்சத்தில் மட்டுமே தமது போராட்டத்தை நிறுத்துவதாகவும் அதுவரை தமது உறவுகளைத் தேடிய போராட்டம் தொடரும் எனவும் போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் செயற்பாட்டில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் செயன்முறையும் நடைபெற்று வருகின்றது.

க.பொ.த (சா/த) பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியிடப்படும்!!

2016ம் ஆண்டு டிசெம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை 28ம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அன்றைய தினத்தில் பரீட்சார்த்திகள், இணையத்தின் மூலம் தங்களது பெறுபேறுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, 5,669 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில், சுமார் 7 லட்சம் பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

இதேவேளை, 2017ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தரப் பரீட்சை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 21ம் திகதி முடிவடையவுள்ளது.

இவ்வாண்டின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை, ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் 02ம் திகதி முடிவடையும்.

இதேவேளை, இவ்வாண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 20ம் திகதி நடைபெறவுள்ளது என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் கொடியேற்றம்!(படங்கள்,வீடியோ)

இலங்கையின் ஆறாவது ஈஸ்வர தலமாக விளங்குகின்ற அகிலாண்டேஸ்வரத்தில் அதாவது இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்தமகோற்சவத்தின் சிவன் உற்சவம்நேற்று 26-03-2017 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கமலேஸ்வர குருக்கள் அவர்கள் தலைமையில் கொடிஏற்றதுடன் ஆரம்பமானது.

வவுனியா சிவபுரம் பெரியார் முன்பள்ளியின் மழலைகள் விளையாட்டு விழா -2017

பெரியார் முன்பள்ளியினது மழலைகளின் விளையாட்டு விழா 2017 நேற்று (25.03.2017) அன்று இடம்பெற்றது. இவ் முன்பள்ளியில் மன்னார் வீதியில் அமைந்துள்ள சிவபுரம் மற்றும் கிச்சிராபுரம் ஆகிய இரு கிராமங்களினைச் சேர்ந்த சிறார்களும் கல்வி கற்றுவருகின்றனர். மேற்படி விளையாட்டு விழா ஆனது முன்பள்ளி ஆசிரியரினால் மிகச் சிறப்பான முறையிலும் சிறார்களினை மையப்படுத்திய வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ் மழலைகளின் விளையாட்டு விழா ஆனது பிற்பகல் 02:30 மணிக்கு முன்பள்ளி ஆசிரியர் திருமதி லதிகா சிவமோகன் அவர்களின் தலைமையில் ஆரம்பமானதுடன் ஆரம்ப நிகழ்வாக பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களினை முன்பள்ளிச் சிறார்கள் இருமருங்கிலும் வரிசையாக நின்று மாலையிட்டு வரவேற்றனர். பிரதம விருந்தினராக கௌரவ இ.இந்திரராசா – வடமாகாணசபை உறுப்பினர் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு.கோ. தர்மபாலன் – முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர், கலாநிதி.த.விநாயகதாசன் – விரிவுரையாளர், பேராதனைப் பல்கலைக்கழகம், திருமதி.எஸ்.அருள்வேல் நாயகி – முன்பள்ளி மாவட்ட இணைப்பாளர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், கிராம சேவையாளர் மற்றும் சிவபுரம் மற்றும் கற்பகபுரம் பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். அத்துடன் கௌரவ விருந்தினர்களாக சமுர்த்தி உத்தியோகத்தர் திரு.முகமட் நஜீம், கிராம அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் அயலிலுள்ள முன்பள்ளிகளினுடைய ஆசிரியர்களும் வருகை தந்திருந்தனர்.

இவ் விழாவின் சிறப்பாக சமுர்த்தி உத்தியோகத்தர் திரு.முகமட் நஜீம் அவர்கள் மிகச் சிறப்பான முறையில் விழாவுக்கான வர்ணனைகளினையும் அறிவிப்புக்களையும் வழங்கயிருந்ததுடன் 30 இற்கும் மேற்பட்ட நிகழ்வுகள் சிறார்களுக்கு ஏற்ற வகையில் முன்பள்ளிச் சிறார்களின் மிகச்சிறந்த பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததுடன் தமிழ் மற்றும் முஸ்லீம் ஆகிய இரு இனங்களினை சேர்ந்த பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மிகவும் இன ஒருமைப்பாட்டுடனும் ஆர்வத்துடனும் தமது வினைத்திறனான பங்களிப்பினை வழங்கியிருந்தனர். மேலும் இறைவணக்கமும் இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மூன்று மதங்கள் சார்பிலும் முன்பள்ளிச் சிறார்களினால் செலுத்தப்பட்டது. நடுவர்களாக கலந்து கொண்ட அயல் கிராமங்களினைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் சிறார்களினை உற்சாகப்படுத்தும் வகையில் தமது பணியினை மேற்கொண்டு இருந்தனர்.

அத்துடன் குறிப்பிட்ட நேரத்திற்குள் விழாவினை நிறைவுறுத்தியமை விழா ஏற்பாட்டாளர்களினுடைய நேர முகாமைத்துவத்தினை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. மேலும் கிராம மக்களினது ஒத்துழைப்பும் பங்களிப்பும் மிகச்சிறப்பான முறையில் அமைந்ததுடன் முன்பள்ளி ஆசிரியர் பிள்ளைகளினை மிகச் சிறப்பான முறையில் ஒழுங்குபடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. விழாவின் இறுதியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரு.கோ. தர்மபாலன் – முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் அவர்கள் உரையாற்றியதுடன் சிறார்களின் எதிர்காலத்திற்கு முன்பள்ளிக் கல்வியின் அவசியம் பற்றிக் குறிப்பிட்டதுடன் கௌரவ இ.இந்திரராசா – வடமாகாணசபை உறுப்பினர் அவர்களது முன்பள்ளிகளுக்கான நிதி உதவிகள் பற்றியும் பாராட்டிப் பேசியதுடன் அவருக்கான தமது நன்றிகளினையும் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய கௌரவ இ.இந்திரராசா – வடமாகாணசபை உறுப்பினர் அவர்கள் முன்பள்ளிக் கல்வியின் அவசியம் பற்றி மேலும் வலியுறுத்தியதுடன் பல்லின சமூகம், மொழி, கலாச்சாரங்களினை பிரதிபலிக்கும் வகையில் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் மிகவும் மகிழ்ச்சியான முறையிலும் இன மத பேதங்கள் இன்றி ஒருமைப்பாட்டுடன் இந்நிகழ்வில் கலந்து கொண்ணடமை பற்றியும் பாராட்டிப் பேசினார்.

செவ்வாய் கிரகத்தில் மிகப் பெரிய சுனாமி!!

செவ்வாய் கிரகத்தின் மீது பாரிய விண்கல் ஒன்று மோதியதில் செவ்வாயில் மிகப் பெரிய சுனாமி அலைகள் ஏற்பட்டதாக விண்வெளி ஆராச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்துடன் பாரிய விண்கல் ஒன்று மோதியதில் உருவான மிகப் பெரிய பள்ளத்தை அடையாளம் கண்டுள்ளதாக அமெரிக்காவின் டெக்சாஸில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் பேசிய ஆராச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த மோதலில் செவ்வாயில் இருந்த பெருங்கடலில் 150 மீற்றர் உயரமான சுனாமி அலைகள் எழுந்ததாகவும் உப்புடன் கூடிய தண்ணீரும் ஏனைய சிதைகளும் நீண்ட தரை பகுதி நோக்கு பரவியது.

செவ்வாய் கிரகம் வறண்ட மற்றும் எதுவும் இல்லாத தரையாக இருக்கும் என நாம் அறிந்திருந்தாலும் அங்கு மிகப் பெரிய கடல் பிராந்தியம் இருந்திருந்தால், அதனை சார்ந்து வாழ்ந்த உயிரினங்களும் இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு பாலியல் தொல்லை!!

பிரபல வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் மனைவி இரு வருடங்களுக்கு முன்னர் பாலியல் துன்புறுத்துலுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது.

வங்கதேச கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்பவர் ஷகிப் அல் ஹசன் (30) இவர் மனைவி உம்மி அகமது (27), இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மிர்பூர் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் விளையாடியது.

அப்போது தனது கணவர் விளையாடுவதை உம்மி கலரியில் உட்கார்ந்து பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது அருகிலிருந்த ஒரு நபர் உம்மிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் இது குறித்து அவர் தனது கணவரிடம் கூற ஷகிப் பொலிசில் புகார் செய்துள்ளார்.

அதன்பின்னர் பொலிசார் ரஹித் (23) என்னும் இளைஞரை இது சம்மந்தமாக கைது செய்தனர். இந்த விடயம் தற்போது தான் வெளியில் தெரியவந்துள்ளது.

13 வயது மாணவியை கூட்டாக பலாத்காரம் செய்த 8 ஆசிரியர்கள்!!

இந்தியாவில் 13 வயதான மாணவி ஒருவரை 8 ஆசிரியர்கள் கூட்டாக பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள Nokha என்ற நகரில் தான் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நகரில் உள்ள பள்ளி ஒன்றில் பெயர் வெளிடப்படாத மாணவி ஒருவர் பயின்று வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு மாணவி மீது மோகம் கொண்ட சில ஆசிரியர்கள் வகுப்பு முடிந்ததும் மாணவியை மட்டும் காத்திருக்குமாரு கூறியுள்ளனர்.

பின்னர், சக மாணவ, மாணவிகள் வெளியே சென்றதும் வகுப்பறையை மூடிவிட்டு மாணவியை ஆசிரியர்கள் மிரட்டியுள்ளனர். ஆசிரியர்களின் மிரட்டலுக்கு அச்சப்பட்ட மாணவியை 8 ஆசிரியர்கள் துடிக்க துடிக்க பலாத்காரம் செய்துள்ளனர். இக்காட்சிகளை ஒரு ஆசிரியர் வீடியோவும் எடுத்துள்ளார்.

பின்னர், இந்த வீடியோக் காட்சியை காட்டி மாணவியை மிரட்டிய ஆசிரியர்கள் அவரை தொடர்ந்து ஒரு வருடமாக பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

மாணவி கர்ப்பம் தரித்தபோது அதனை கலைக்க ஆசிரியர்கள் மாத்திரைகளையும் கொடுத்துள்ளனர். இந்நிலையில், ஒரு வருடத்திற்கு முன்னர் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவிக்கு ரத்தப் புற்றுநோய் தாக்கியுள்ளது.

இந்த புற்றுநோயிற்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று வரும்போது தான் தன்னை ஆசிரியர்கள் கூட்டாக பலாத்காரம் செய்த விடயங்களை அவர் வெளியே கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாணவியின் தந்தை பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். மாணவியிடம் விசாரணை நடத்தியபோது நிகழ்ந்த சம்பவம் அனைத்தும் உண்மை என நிரூபிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மாணவியை பலாத்காரம் செய்த 8 ஆசிரியர்கள் மீது நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ராஜஸ்தான் முதலமைச்சரான Vasundhara Raje வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவியை குணப்படுத்த அரசாங்கம் சார்பில் இலவச சிகிச்சை அளித்து வருவதாகவும், கற்பழிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாள்கணக்கில் நின்று கொண்டே தூங்கும் சிறுமி!!

கேரளாவில் நாள் கணக்கில் தூங்கும் வினோத நோயால் சிறுமி பாதிக்கப்பட்டிருப்பது அவர் பெற்றோருக்கு கவலையை ஏற்ப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் லியா, 4 வயதான லியாவுக்கு வினோத நோய் உள்ளது. அதாவது இவர் நாள் கணக்கில் தொடர்ந்து தூங்கி விடுகிறார். பல சமயம் நின்று கொண்டே கூட தூங்கி விடுகிறார்.

இது குறித்து லியாவின் தாய் லினு டென்னி கூறுகையில், ஒரு முறை லியா தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் தூங்கிவிட்டார்.
பல சமயம் நின்று கொண்டே தூங்குவதும், 12 மணி நேரம் தூங்குவதுமாக அவர் இருக்கிறார்.

லியாவை எழுப்ப அவளது கண்களில் டோர்ச் லைட் வெளிச்சத்தை பாய்ச்சி‌யபோதும் விழித்ததில்லை என்ற லினு சோகத்துடன் கூறுகிறார்.

லியாவுக்கு நடந்த சிகிச்சையில் அவருக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாக இருப்பதும், இதயத்துடிப்பு குறை‌வாக இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், பத்து லட்சம் பேரில் ஒருவருக்கு தான் இந்நோய் வரும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கூலிப்படையை ஏவி தந்தையை கொன்று நாடகமாடிய மகள்!!

தமிழகத்தின் தஞ்சாவூர் அருகே சொத்துக்காக பெற்ற மகளே கூலிப்படையை ஏவி தந்தையை கொலை செய்துள்ள சம்பவம் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே வசித்து வந்தவர் மருத்துவர் ராஜப்பன். இவர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகில் உள்ள தனக்கு சொந்தமான கட்டிடத்தில் ராஜப்பன் மருத்துவமனை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு மனைவி, இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 21ம் திகதி இரவு தனது வீட்டுவாசலில் நின்றுகொண்டிருந்த மருத்துவர் ராஜப்பனை 2 இளைஞர்கள் கத்தியால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனர்.

இதுகுறித்து ஒரத்தநாடு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் ராஜப்பனின் இளையமகள் தீபிகா மீது விசாரணை அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது.

இதனை தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில் நண்பரின் உதவியுடன் கூலிப்படைக்கு 4 லட்ச ரூபாய் கொடுத்து தந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

சிறுவயது முதலே போலியோவால் பாதிக்கப்பட்ட தமக்கும் தனது தாய்க்கும், தந்தை எந்த வித உதவியும் வழங்காததால் வெறுப்பு ஏற்பட்டு கொலை செய்ததாக அவர் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தீபிகா அவரது நண்பர் பிரகாஷ் உள்ளிட்ட 6 பேரை பொலிசார் கைது செய்தனர்.

வவுனியாவில் மாடு கடத்திய ஒருவர் கைது!!

வவுனியா – செட்டிக்குளத்தில் கடந்த 28 திகதி பட்டியில் கட்டி விடப்பட்ட மாட்டை காணவில்லை என செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தில்முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டின் பெயரில் விசாரணைகளை மேற்கொண்ட செட்டிக்குளம் பொலிஸார் நேற்று முன்தினம்(25.03) 39வயதுடைய நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர், குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியாவில் சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் மரணம்!!

வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த சிறைச்சாலை கைதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த 8 ஆம் திகதி வவுனியா பசார் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் ஒன்றினை உடைத்து களவாட முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று (26.03.2017) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட நபர் 69 வயதான ரட்னாயக்க முதியன் சிலாகே ரம்பன்டா என்ற நபர், கடந்த 12 ஆம் திகதி சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் அவரது நீதிமன்ற வழக்கு திகதிக்கு அவரால் சமூகம் தர முடியவில்லை. எனவே வழக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டு வருகிறார்.

H1N1 வைரஸ் தொற்றினால் இரு கர்ப்பிணி தாய்மார்கள் மரணம்!!

இன்புளூவன்ஸா H1N1 வைரஸ் தொற்றுக்குள்ளான தாய்மார்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா மற்றும் கெபத்திகொல்லாவ பிரதேசங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக வைத்தியர் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இன்புளூவன்ஸா H1N1 வைரஸ் தொற்று தற்போது இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும் இந்த மரணங்கள் இன்புளூவன்ஸா H1N1 தொற்றின் காரணமாக ஏற்பட்டதென்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.

அதற்கான பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் அறிக்கைகள் கிடைத்த பின்னர் இந்த மரணம் தொடர்பில் தகவல் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொலைபேசி பாஸ்வேர்டினால் மனைவியை கொலை செய்த கணவர்!!

கையடக்க தொலைபேசியில் பாஸ்வேர்ட் பயன்படுத்தியமையால், பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.கையடக்க தொலைபேசியின் பாஸ்வேர்ட் தொடர்பில் கணவன் கேள்வி எழுப்பியுள்ளார். எனினும் மனைவி அதற்கு வழங்கிய பதிலால் கோபமடைந்த கணவன் அவரை குத்து கொலை செய்துள்ளார்.

39 வயதுடைய ரேணுகா மல்காந்தி என்ற ஒரு பிள்ளையின் தாய் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

அகலவத்தை, தாப்பிலிகொட பிரதேசத்தில் சாத்திரம் பார்க்கும் தொழிலில் ஈடுட்ட ரேணுகா மல்காந்தி, தனது கணவர் மற்றும் 12 வயதுடைய மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார்.

எவ்வித பொருளாதார பிரச்சனையும் இன்றி இருவரும் குடும்பத்தை நடத்தி சென்றுள்ளனர். அவரது கணவர் பேக்கரி வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் பக்கத்து வீட்டில் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்வதற்காக தயாராக கணவர் அவசரமாக தொலைப்பேசி அழைப்பொன்றை மேற்கொள்வதற்கு மனைவியின் தொலைப்பேசியை கையில் எடுத்துள்ளார். எனினும் அந்த தொலைப்பேசியில் பாஸ்வேர்ட் இணைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் அவர் மனைவியிடம் வினவியுள்ளார்.

எனினும் மனைவியின் அலட்சியமான பதில் வழங்கியுள்ளார். இதனால் கோபமடைந்த கணவர் கத்தியில் குத்தி மனைவியை கொலை செய்துள்ளார்.

இதனால் மனமுடைந்த கணவர் தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்துள்ள போதிலும் அருகில் இருந்தவர்களை அதனை தடுத்துள்ளனர்.