பெற்ற தாயை கொலை செய்த மகன் : உணவு கொடுக்க தாமதமாகியதால் ஏற்பட்ட விபரீதம்!!

வெலிகம – படவல பிரதேசத்தில் மகன் ஒருவர் தனது தாயை தடியொன்றினால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக வெலிகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 75 வயதுடைய வயோதிப தாயொருவரே உயிரிழந்துள்ளார். குறித்த தாயின் மகன் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும், நீண்டகாலமாக சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், காலை உணவு தர தாமதமான காரணத்தினால் கோபமடைந்த மகன் தனது தாயை தடியொன்றினால் தாக்கியுள்ளதாகவும் வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளார்.

சூரியனை விட 10,000 மடங்கு அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் செயற்கை சூரியன்!!

சூரியனை விட 10,000 மடங்கு அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் செயற்கை சூரியனை ஜேர்மனி விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய செயற்கை சூரியனை, உயர் சக்தி வாய்ந்த விளக்குகள் மூலம் உருவாக்கியுள்ளனர் ஜேர்மனி விஞ்ஞானிகள்.

இதற்காக 149 சக்தி வாய்ந்த செனான் ஆர்க் மின்விளக்குகளைப் பயன்படுத்தி உள்ளனர், இந்த ஒளி அமைப்பு, சைன் லைட் என அழைக்கப்படுகிறது. இதன்மூலம் சூரியனை விட 10,000 மடங்கு கதிர்வீச்சு வெளிவருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆராய்ச்சியாளர்கள் ஒரு 8×8 அங்குல (20x20cm) உலோகத் தாள் மீது 350 கிலோவாட் தேன்கூடு வடிவ வரிசையில் விளக்குகளை பொருத்தி செயற்கை சூரியனை உருவாக்கியுள்ளனர்.

இது 3,000 டிகிரி செல்சியஸ் வெப்பம் தரும் எனவும் கூறப்படுகிறது, சோதனை முயற்சியில் இருக்கும் இந்தப் புதிய கண்டுபிடிப்பு சூற்றுச்சூழலை பாதிக்காத ஓர் ஆற்றல் உற்பத்தி மையமாகவும், ஹைட்ரஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் முயற்சி என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை விமான போக்குவரத்து மற்றும் ரொக்கெட் துறையில் பயன்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது இப்போது பயன்பாட்டுக்கு வரவில்லை, வந்தால், இரவில் விளக்குகளுக்கு வேலையில்லாமல் போய்விடும் என்கிறார்கள்.

இதே போன்று சுவிஸ் மத்திய தொழில்நுட்ப (EPFL)ஆராய்ச்சியாளர்களும் செயற்கை சூரிய ஒளி பற்றிய ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

205 அடி உயர ரோலர்கோஸ்டர் உச்சியில் பொறியியலாளர்கள் பிறந்த தினக் கொண்டாட்டம்!!

 
பிரிட்­டனில் 205 அடி உய­ர­மான ரோலர்­கோஸ்டர் ஒன்றின் உச்­சியில், பொறி­யி­ய­லா­ளர்கள் பலர் கம்­பி­களில் தொங்கியவாறு பிறந்த தினக் கொண்­டாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

இங்­கி­லாந்தின் சறே பிராந்த்­தி­யத்­தி­லுள்ள தோர்ப் பூங்­கா­வி­லுள்ள இந்த ரோலர் கோஸ்­டரின் உச்­சி­யி­லேயே இக்­ கொண்­டாட்டம் நடை­பெற்­றது.

பரா­ம­ரிப்பு நட­வ­டிக்­கை­களின் பின்னர் இப்­ பூங்கா கடந்த வியா­ழக்­கி­ழமை மீண்டும் பொது­மக்­க­ளுக்­காக திறக்­கப்­பட்­டது.

இதனை முன்­னிட்டு, மேற்­படி ரோலர்­கோஸ்­டரை சுத்தம் செய்­வ­தற்­காக பரா­ம­ரிப்புப் பொறி­யி­ய­லா­ளர்கள் ரோலர்­கோஸ்­டரின் உச்­சியில் ஏறினர்.

இதன்­போது ரோலர்­கோஸ்­டரின் 200 ஆவது பிறந்த தினக் கொண்­டாட்­ட­திலும் பொறி­யி­ய­லா­ளர்கள் ஈடு­பட்­டனர்.

205 அடி உய­ரத்தில் பொறி­ய­லா­ளர்கள் கேக் வெட்டி உட்­கொண்­ட­துடன் தமது தலைக்­க­வ­சங்­க­ளுக்கு மேலாக பிறந்தநாள் கொண்டாட்ட தொப்பியும் அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேபாளத்தில் 14 வைத்திய நிலையங்களை அமைக்கும் பிரபல கால்பந்தாட்ட வீரர்!!

பிரபல கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி, நேபாளத்தில் 14 வைத்திய நிலையங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால், அந்நாடு மிகப்பெரிய இழப்பை சந்தித்ததோடு, தற்போது இயல்பு நிலை நோக்கிய திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில் நேபாளத்தில், சுகாதார மையங்கள் அமைத்து கொடுப்பதற்கு யுனிசெப் அமைப்புடன், அந்நாட்டு அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நிலையில், ஆர்ஜென்டினா மற்றும் பிரபல பார்சிலோனா அணியின் கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி, தனது நலத்திட்ட அமைப்பினுடாக 14 சுகாதார மையங்ககளை கட்டும் பணிகளை தொடங்கியுள்ளார்.

மேலும் 74 வைத்திய நிலையங்கள் அமைக்கும் யுனிசெப் நிறுவனத்தின் திட்டத்தில், மெஸ்ஸி தற்போது 3 வைத்திய நிலையங்களை கட்டியுள்ளதோடு, மேலும் 11 நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் மதத்திற்கு முன்பாக நிறைவுசெய்யப்படவுள்ளதாக மெஸ்ஸி பவுண்டேஷன் அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்தோடு மெஸ்ஸி பவுண்டேஷன் சார்பில், நேபாளத்தில் கட்டி முடிக்கப்பட்ட வைத்திய நிலையங்கள், தொடர்பில் தான் மகிழ்ச்சியடைவதாக யுனிசெப் அமைப்பிற்கான நலத்திட்ட தூதுவர் தெரிவித்துள்ளமையை சர்வதேச ஊடகங்கள் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

40 பொலிஸ் அதிகாரிகள் தலை துண்டித்து படுகொலை!!

ஆபிரிக்க நாடான கொங்கோ நாட்டில் பல தீவிரவாத குழுக்களுக்கும், அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் இடம்பெற்று வருகின்றது. இதனால் அங்கு உள்நாட்டு போர் தலைதூக்கியுள்ளது.

கொங்கோவின் மத்திய பகுதியில் உள்ள கசாய் மாகாணத்தில் காம்வினா சாபு என்ற தீவிரவாத அமைப்பு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அந்த அமைப்பின் தலைவர் ஜீன்-பியரே பன்டி என்பவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதை தொடர்ந்து இங்கு காம்வினா சாபு தீவிரவாத அமைப்பினர் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு ஆகஸ்டு முதல் கசாய் மாகாணத்தில் இதுவரை 400 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

எனவே அங்கிருந்து 2 லட்சம் பேர் வெளியேறி வேறு இடங்களில் குடியேறியுள்ளனர். அங்கு நிலைமையை சீரமைக்க பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே அங்கு சிகாபா-கனங்கா இடையே பொலிஸார் வாகனங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது ஒரு பொலிஸ் வாகனத்தை காம்வினா சாபு தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.

பின்னர் அதில் இருந்த 40 பொலிஸ் அதிகாரிகளை தலை துண்டித்து படுகொலை செய்தனர். ஆனால் சகாய் பகுதியினரின் ஷிலுபா மொழி பேசிய 6 பொலிஸாசாரை மட்டும் உயிர் பிழைத்து போ என கூறி விடுதலை செய்தனர்.

இச்சம்பவத்துக்கு காங்கோ அதிபர் ஜோசப் கபிலா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் கசாய் பகுதியில் 10 பெரிய புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் உள்நாட்டு போரில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மொத்தமாக போட்டு புதைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் சுவீடனை சேர்ந்த 2 ஐ.நா. நிபுணர்கள் 2 வாரத்துக்கு முன்பு கடத்தப்பட்டனர். 4 கொங்கோ நாட்டினரும் காணாமல் போயுள்ளனர்.

ரயில் கடவையில் படுத்திருந்தவர் பலி!!

யாழ்ப்பாணம் – நாவற்குழி – புங்கன்குளம் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள ரயில் கடவையில் படுத்திருந்த நபர், ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.

இவர் நீர்ப்பாசன திணைக்களத்தில் பணியாற்று யாழ். அரியாலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த தவநாயகம் திரேந்திரா (வயது 28) என தெரியவந்துள்ளது.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயில் மோதியதில் படுகாயமடைந்த இவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

வவுனியாவில் 33வது விளையாட்டு விழாவுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!!

வவுனியா கலைமகள் விளையாட்டுக்கழகமும் கலைமகள் சனசமூக நிலையமும் இணைந்து நடாத்தும் 33வது வருட சித்திரை புத்தாண்டு விளையாட்டுப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

எதிர்வரும் 14ம் திகதி சித்திரை வருடப்பிறப்பன்று விளையாட்டுவிழா நடைபெறவுள்ளது.

இவ் விளையாட்டுப்போட்டியில் 10 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலா ருக்குமான 50 மீற்றர் மற்றும் 100 மீற்றர் ஓட்டம், 45 கிலோ மீற்றர் ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டம், திருமணமாகாத பெண்களுக்கான முட்டி உடைத்தல், ஆண்களுக்கான முட்டி உடைத்தல், 5 வயதுக்குட்பட்ட இருபாலாருக்குமான மூன்று சில்லு சைக்கிள் ஓட்டம் (சைக்கிளுடன் சமூகமளிக்க வேண்டும்), இடம்பெறவுள்ளன.

மேலும் அணிக்கு 4 பேர் கொண்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி, 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான தடை தாண்டல் ஓட்டம், திருமணமான பெண்களுக்கான சங்கீத கதிரை, 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான விநோத உடை, 15 வயதுக்குட்பட்ட பெண்பிள்ளைகளுக்கான நிதான ஓட்டம் போன்ற போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் கரப்பந்தாட்ட போட்டியில் பங்குபெற்ற விரும்பும் போட்டியாளர்கள் கலைமகள் விளையாட்டுக்கழக நிர்வாகத்திடம் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து எதிர்வரும் 4ம் திகதிக்கு முன்பாக நேரடியாகவோ அல்லது தலைவர், செயலாளர், கலைமகள் விளையாட்டுக்கழகமும் கலைமகள் சனசமூக நிலையமும் மன்னார் வீதி வவுனியா என்ற முகவரிக்கு தபால் மூலமாவோ கிடைக்க ஆவன செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

இதேவேளை போட்டிகள் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 0777363175 (பாபு), 0776031512 (ஜீவன்), 0776313658 (கே.விஜயகுமார்), 0776120854 ( ஜெயராஜா) என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு பெறமுடியும் என நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் தேசிய ரீதியில் சைக்கிள் ஓட்டத்தில் வெற்றிபெற்ற மாணவிக்கு துவிச்சக்கரவண்டி!!

 
தேசிய ரீதியில் சைக்கிள் ஓட்டப்போட்டியில் பங்கு பற்றி மூன்றாமிடம் பெற்ற பாலச்சந்திரன் தர்சிகா என்ற மாணவிக்கு புலமபெயர் தமிழரின் நிதியளிப்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானால் துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த பா.தர்சிகா சைக்கிள் ஓட்டப்போட்டியில் பங்கேற்று மாகாண மற்றும் தேசிய ரீதியில் வெற்றி பெற்று வந்த நிலையில் சொந்தமாக தன்னிடம் துவிச்சக்கரவண்டி இல்லை எனவும் அயலவர்கள் மற்றும் நண்பிகளின் துவிச்சக்கரவண்டியை பயன்படுத்தியோ போட்டியில் ஈடுபடுவதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானிடம் தெரிவித்திருந்த நிலையில் புலம் பெயர் தமிழரான சிவரஞ்சினி என்பவரின் நிதியுதவியில் துவிச்சக்கரவண்டியொன்றினை கொள்வனவு செய்து நேற்று குறித்த மாணவியின் வீட்டிற்கு சென்று வழங்கி வைத்தார்.

இதன்போது புலம்பெயர் தமிழரான சிவரஞ்சினி மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலளார் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியா கோவில்குஞ்சுக்குளம் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு!!

 
டேவிட் பீரிஸ் மோட்டோர்ஸ் கம்பனியால் வவுனியா கோவில்குஞ்சுக்குளம் அ.த.க பாடசாலையை சேர்ந்த 59 மாணவர்களுக்கு பாதணி வழங்கும் வைபவம் கோவில்குஞ்சுக்குளம் அத.க பாடசாலை அதிபர் சு.முகுந்தன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதமவிருந்தினராக முன்னாள் கோவில்குஞ்சுக்குளம் அ.த.க பாடசாலையின் அதிபர் சி.கதிரமலைநாதன் கலந்துகொண்டு பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகளை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் டேவிட் பீரிஸ மோட்டோர்ஸ் கம்பனி உத்தியோகத்தர்கள் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

வவுனியா போராட்டத்திற்கு தென்பகுதி இலங்கை ஆசிரியர்கள் சங்கம் ஆதரவு!!

 
வவுனியாவில் காணாமற்போன உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் இன்று 31வது நாளாகத் தொடர்கின்றது.

வவுனியா A9 வீதியில் வவுனியா அஞ்சல் திணைக்களத்திற்கு அருகாமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இன்றுடன் (26.03) 31வது நாளை எட்டியுள்ள நிலையில் பெருமளவானோர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றர்.

இந் நிலையில் இன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தலைமையில் கொழும்பிலிருந்து நேரடியாக போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வருகை தந்திருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஆதரவு தெரிவித்ததுடன்,

அவர்களின் கவலைகளையும் பிரச்சனைகளையும் கேட்டறிந்து கொண்டதுடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனை உடனடியாக தீர்க்கப்படவேண்டும், அத்துடன் இலங்கை அரசாங்கம் கால அவகாசம் கேட்டு அவர்களுடைய பிரச்சனையை தீர்க்காமல் காலம் கடத்த முடியாது எனத் தெரிவித்தனர்.

வவுனியாவில் டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்த சிரமதானம்!!

 
வவுனியா நகரத்தில் டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மகாறம்பைக்குளம் கிரமசேவகர் பிரிவுக்குட்பட்ட மதினா நகர் பகுதியில் இன்று (26.03) மதினாநகர் பள்ளிவாசல் தலைவர் அ.முகமட் பைசர் தலைமையில் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

மதினாநகர் பள்ளிவாசல் சுற்றுப்புறச் சுழல் மற்றும் கிராமத்தில் டெங்கு நுளம்பு பரவக் கூடியதாக இனங்காணப்பட்ட இடங்கள் அனைத்தும் துப்பரவு செய்யப்பட்டது.

பொது சுகாதார பரிசோதகர் ஏ.ஜெ.எர்சன் ஜோய் அறிவுறுத்தலுக்கு அமைவாகவும் கிராம உத்தியோகத்தர் சி.ரவீந்திரனால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சிரமதானப்பணியினை மகாறம்பைக்குளம் சுகாதார உத்தியோகத்தர் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர் ஜெயராம் துர்க்கா, மகாறம்பைக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் பார்வையிட்டிருந்ததுடன் அறிவுறுத்தல்களையும் வழங்கியிருந்தனர்.

வவுனியா ஓமந்தை அரச வீட்டுத்திட்ட மக்கள் அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி ஆர்ப்பாட்டம்!!

 
வவுனியா ஓமந்தை அரச வீட்டுத்திட்ட மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இன்று (26.03.2017) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியாவில் அரச உத்தியோகத்தர்களாக பணிபுரிவோருக்கு வதிவிடங்களை அமைப்பதற்காக ஓமந்தை பகுதியில் கடந்த 5 வருடங்களுக்கு மன்னர் காணிகள் வழங்கப்படடிருந்தது.

சுமார் 700 அரச உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறு காணிகள் வழங்கப்பட்ட நிலையில் தற்போதுவரை 65 குடும்பங்களே அங்கு குடியேறியுள்ளனர்.

இந் நிலையில் மக்கள் குடியேறாத காணிகள் பற்றைக்காடுகளாக காப்படுவதனால் காட்டு விலங்ககளின் ஆபத்து காணப்படுவதாகவும், தமது குடிமனைகளுக்கான வீதிகள் செப்பனிடப்படவில்லை எனவும் வீதி மின் விளக்ககள் பொருத்தப்படவில்லை எனவும் மக்கள் குடியோக காணிகள வேறு உத்தியோகத்தர்களுக்கு மாற்றி வழங்ககோரியும் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சுமார் 30 நிமிடங்கள் அமைதியான முறையில் பதாதைகளை ஏந்தியாவாறு வீட்டுத்திட்டத்திற்கு செல்லும் பிரதான வீதியில் நின்றிருந்தனர்.

இவர்களுடன் வன்னி பாராமன்ற உறுப்பினர்களான சிவக்தி ஆனந்தன், சி.சிவமோகன் ஆகியோர் நேரடியாக கலந்துரையாடியதுடன் குறித்த விடயங்கள் தொடர்பாக வவுனியா அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துரையாடப்படும் எனவும் உறுதியளித்திருந்தனர். இதனையடுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றிருந்தனர்.

வவுனியாவில் முன்னாள் போராளிக்கு உதவித்திட்டம் வழங்கி வைப்பு!!

 
வவுனியா, பாலமோட்டையில் முன்னாள் போராளியின் குடும்பத்திற்கு உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மொன்றியல் துர்கை அம்மன் ஆலய 6ம் திருவிழா உபயகாரர்களால் இன்று காலை 10.30 மணியளவில் 150,000 லட்சம் ரூபா பெறுமதியான கோழிப்பண்ணை ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர் பல இன்னல்களுக்கு உள்ளாகியுள்ள இக் குடும்பத்தில் ஐந்து பெண் பிள்ளைகள். இவர்களின் வாழ்வாதாரம் விவசாயம்.

இவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கோடு கனடா கியுபைக் மொன்றியல் நகரை சேர்ந்த பாராவூர்தி சாரதிகளின் (Truck Drivers) ஒழுங்கமைப்பில் இந்த உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் மரணம்!!

 
வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பிரதான வீதியில் நேற்று (25) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெல்லாவெளி பகுதியிலிருந்து வேகமாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், வழியில் சென்று கொண்டிருந்த எருமைமாடு ஒன்றுடனும். பின்னர் பனைமரம் ஒன்றுடனும் மோதுண்டுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை சிகிச்சைப்பெற்று வந்த பாலையடி வட்டையைச் சேர்ந்த சபாரெத்தினம் பிரபு (வயது 30) என்பவரே சிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காயமடைந்த மற்றைய நபர் சிசிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவத்தில் 4 வயதான எருமைமாடும் உயிரிழந்துள்ளதுடன். இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

மேலும் மரண விசாரணை இடம்பெற்ற பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படும் என்று மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

டொலருக்கு எதிராக தொடர்ந்தும் வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாய்!!

கடந்த சில மாதங்களில் இலங்கை ரூபாய் 1.2 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பெப்ரவரி மாத இறுதி வரையில் இலங்கையினுள் காணப்பட்ட மொத்த அதிகாரப்பூர்வ இருப்பின் அளவு 5.6 பில்லியன் டொலர் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு இறுதிவரையில் இலங்கையின் மொத்த அதிகாரப்பூர்வ இருப்பின் அளவு 6 பில்லியன் டொலர் என பதிவாகிள்ளது.

இந்த நிலையில் தற்போதுவரையில் டொலர் ஒன்று, 151.76 ரூபாய் பெறுமதியை எட்டியுள்ளதாக மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2019 உலகக்கிண்ணப் போட்டியில் இலங்கை அணிக்கு வந்த சிக்கல்!!

வங்கதேச அணியுடன் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்ததால், 2019 ஆம் ஆண்டு நடக்கும் உலகக்கிண்ணம் போட்டிக்கு தகுதி பெறுமா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி, அங்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடர் 1-1 என்ற சமநிலையில் முடிந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கிடையே நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் வங்கதேசம் அணி 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஒரு கத்துக்குட்டி அணியிடம் இலங்கை அணி தோற்றது இலங்கை ரசிகர்கள் பலருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிரபல ஆங்கில ஊடகம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில், வங்கதேச அணியுடனான முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி தோற்றதால், ரசிகர்கள் சிலர் 2019 ஆம் ஆண்டு உலகக்கிண்ணம் தொடருக்கும் இலங்கை அணி தகுதி பெறுமா என்ற பயத்தில் இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளது.

மேலும் 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பை தொடருக்கு முதல் 7 இடங்களில் உள்ள அணிகள் நேரடியாக தகுதி பெறும். மீதம் உள்ள அணிகளுக்கு தகுதி போட்டிகள் நடத்தப்படும்.

அந்த வகையில் முதல் 7 இடங்களில் உள்ள அணிகளுக்கான வாய்ப்பு செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி 2017 வரை மட்டுமே என்று தெரிவித்துள்ளது. தற்போது இலங்கை அணி 6 வது இடத்திலும், வங்கதேச அணி 7 வது இடத்திலும் உள்ளது.

இத்தொடரை வங்கதேச அணி வெயிட்வாஷ் செய்தாலோ அல்லது தொடரைக் கைப்பற்றினாலோ இலங்கை அணிக்கு தரவரிசைப்பட்டியலில் மாற்றம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும், இது மட்டுமின்றி இத்தொடர் முடிந்தவுடன் இலங்கை அணிக்கு இரண்டு தொடர்கள் இருப்பதால், அதிலும் இலங்கை அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது.

அத்தொடர்களிலும் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்தால், இலங்கை அணி உலகக்கிண்ணம் தொடருக்கு நேரடியாக தகுதி பெறுவது கேள்வி குறி தான் என்று வெளியிட்டுள்ளது.