செவ்வாய் கிரகத்தில் அமீரக நகரத்தை 100 ஆண்டுகளில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அமீரகத்தின் துணை அதிபர் ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் இவ்விருவரும் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
உலகில் முதன்முறையாக செவ்வாய் கிரகத்தில் அமீரக நகரம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்படுகிறது. இந்த திட்டம் அடுத்த 100 ஆண்டுகளில் நிறைவடைந்து செயற்பாட்டிற்கு வரும். இங்கு வசிக்கும் மக்களை இதே வசதிகளுடன் செவ்வாய் கிரகத்தில் தங்க வைத்து, அங்கும் ஓர் உயிரின வாழிடம் ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.
மனிதனுடைய குறிக்கோள்களுக்கு எல்லையில்லை. கனவாக உள்ள அனைத்தையும் நிறைவு செய்யும் வாய்ப்பு தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஏற்பட்டுள்ளது. இது ஒரு மிக நீண்ட திட்டமாகும். அடுத்து வரும் தலைமுறைகள் இந்த பலனை அனுபவிப்பார்கள். இந்த திட்டம் அமீரகத்தில் உள்ள அறிவியல் மற்றும் ஆராய்ச்சித்துறையில் படிக்கும் மாணவர்களைக் கொண்டு படிப்படியாக கட்டமைக்கப்படும்.
பூமிக்கு அடுத்தபடியாக மனிதர்கள் வாழ குறைந்தபட்ச தகைமைகள் செவ்வாய் கிரகத்தில் உள்ளன. இதில் குறிப்பாக செவ்வாய் கிரகத்தின் சராசரி வெப்பநிலை 63 டிகிரி செல்சியசாக உள்ளது. ஒருமுறை சூரியனை சுற்றி வருவதற்கு 687 நாட்கள் ஆகும். இங்கு பூமியில் இருந்து 2021 ஆம் ஆண்டு மனிதர்கள் சென்று ஆய்வு நடத்தவுள்ளார்கள். இதற்காக அமீரகம் சார்பிலும் ஒரு விண்கலம் உருவாக்கப்பட்டு வருகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த செவ்வாய் கிரக நகரமைப்புத் திட்டத்தின் மாதிரி வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
அம்பலாங்கொட பகுதியில் இடம்பெற்ற முக்கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரின் உறவினர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து கை துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பில் போக்குவரத்து வசதிகளை சந்தேகநபர் செய்துகொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் திகதி தாய், தந்தை மற்றும் சிறு குழந்தை ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று அம்பலாங்கொடையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கனடா டொரான்டோ பகுதியில் மோசடியில் ஈடுபட்ட தமிழ் தம்பதியினரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளன. அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தம்பதியினர் 8 மில்லியன் கனேடியன் டொலர் வரையில் (இலங்கை மதிப்பில் ரூ.12,09,360,000) மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 வயதான சுகன்யா பஞ்சலிங்கம், மற்றும் 35 வயதான அவரது கணவர் பாலசுப்ரமணியம் சஞ்சீவ்கரன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிதி மோசடி குறித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்த விசாரணைகளின் மூலம் போலியான காசோலைகளை பயன்படுத்தி இவர்கள் பாரியளவு நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், போலியான சான்றளிக்கப்பட்ட காசோலைகளை பயன்படுத்தி விலை உயர்ந்த கார்கள் உள்ளிட்ட பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த மோசடியினால் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸாரை நாடி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
துபாயில் பறக்கும் டாக்ஸி (Taxi) சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. துபாயில் உலக நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் பல்வேறு நாட்டினரும் பங்கேற்றுள்ளனர்.
இதில் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் சார்பில் டாக்ஸி சேவையாக, ஒருவர் மட்டும் பயணிக்கும் வகையிலான பறக்கும் கார் என்றழைக்கப்படும் தானியங்கி பறக்கும் வாகனம் பார்வைக்கு வைக்கப்பட்டது.
எதிர்வரும் ஜூலை மாதம் குட்டி விமானம் போன்று காணப்படும் இந்த வாகனம் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
”ஹோவர் டாக்ஸி” என்று குறிப்பிடப்படும் இந்த பறக்கும் வாகனம் அதிகபட்சம் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் வாய்ந்தது. தரையிலிருந்து 300 மீட்டர் உயரத்தில் பறந்து செல்லும்.
தரைக்கட்டுப்பாட்டு மையம் மூலமாக, பறக்கும் காரின் வழித்தடம், வேகம், இறங்கும் இடம் உள்ளிட்டவை கண்காணிக்கப்படும்.
இதன் நீளம் 12 அடி, அகலம் 14 அடி, உயரம் 5.2 ஆகும். இது நவீன தொழில்நுட்பத்தில் தானாக இயங்கும். பயணி இதில் அமர்ந்து எதிரே இருக்கும் தொடு திரையில் செல்ல வேண்டிய இடத்தைக் குறிப்பிட்டால் அங்கே தரையிறக்கி விடும்.
தொடர்ந்து 30 நிமிடம் பறக்கும் இந்த வாகனம் அதிகபட்சமாக 2 மணிநேரம் பேட்டரிகளை சார்ஜ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராதத் தொகையை 25,000 முதல் 50,000 வரை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கம் தெரிவித்தது.
கடந்த வருடத்தின் டிசம்பர் 03 ஆம் திகதி ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய வாகனங்களுக்கான அபராதத்
தொகையை விதிப்பது தொடர்பான பிரச்சினையை விசாரிப்பதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
நிதி, போக்குவரத்து, சட்டம் ஆகிய அமைச்சுக்களின் செயலாளர்கள், மோட்டார் திணைக்களம், பொலிஸார் ஆகியோர் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.
இந்தக் குழுவின் ஆரம்ப அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனங்களை செலுத்துவோருக்கு முதல் சந்தர்ப்பத்தில் அறவிடப்படும் தொகையான 3000 – 6000 ரூபாவை 30,000 ஆக அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது சந்தர்ப்பத்தில் கைது செய்யப்படும் போது 50,000 ரூபா அபராதம் விதிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவர்களை சேவையில் ஈடுபடுத்தியமைக்காக விதிக்கப்படும் 12,000 ரூபா அபராதத் தொகையை 50,000 ரூபா வரை உயர்த்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மது பாவனையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு அறவிடப்படும் 7500 ரூபா தொகையை 30,000 ரூபாவாக அதிகரிப்பதற்கும் இந்த அறிக்கையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மூன்று மாதங்களை விட அதிகரிக்காத சிறைத்தண்டனை, ஒரு வருடத்திற்கு அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்தல் என்பனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மது போதையுடன் வாகனம் செலுத்தி விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழக்கும் பட்சத்தில் இரண்டு முதல் 10 வருடங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படுவதுடன், சாரதி அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா அபராதத்தை விதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாகன விபத்தில் காயமேற்பட்டால் 15,000 ரூபா வரை அபராதத்தை விதிப்பதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இந்த அபராதத் தொகையை 50,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் வரை அதிகரிப்பதற்கும் குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிறு காயங்களுக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்படவுள்ளது.
ரயில் கடவை சமிக்ஞையை அவதானிக்காது கடக்க முற்படுவோருக்கு புதிதாக அபராதம் விதிப்பதற்கும் குறித்த குழுவினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ரயில் கடவையைக் கடக்கும் முதல் சந்தர்ப்பத்தில் 30,000 ரூபாவாகவும் இரண்டாவது சந்தர்ப்பத்தில் 40,000 ரூபாவாகவும் மூன்றாவது சந்தர்ப்பத்தில் 50,000 ரூபாவாகவும் அபராதம் விதிக்கப்படவுள்ளதுடன், ஒரு வருடத்திற்கு சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படவுள்ளது.
காப்புறுதி இன்றி வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு விதிக்கப்படும் 25,000 ரூபா அபராதத் தொகை 50,000 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
அதிவேகத்தில் பயணிக்கும் வாகனங்களுக்கு வேக அதிகரிப்புக்கு ஏற்ப விதிக்கப்படும் அபராதத் தொகையான 3000 ரூபா 5000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
நியூஸிலாந்தைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளரான நிக் மோர்டைமர் தலைமையிலான விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உலகின் 8 ஆவது கண்டம் நியூஸிலாந்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகில் 7 கண்டங்களே உள்ளதாக அனைவராலும் அறியப்பட்டுள்ள நிலையில், தென் மேற்கு சமுத்திரத்தில் மூழ்கிய நிலையில் காணப்படும் புதிய நிலப் பகுதியொன்றைக் கண்டுபிடித்துள்ளதாகவும் அதனை 8 ஆவது புதிய கண்டமாகக் கருத முடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
ஸீலான்டியா என அழைக்கப்படும் அந்தக் கண்டத்தின் ஒரு சிறிய பகுதி மட்டும் நியூஸிலாந்துக்கு அருகில் கடலுக்கு மேலாக வெளித் தோன்றிய நிலையில் காணப்படுகிறது. அதன் ஏனைய 94 சதவீதமான பகுதி கடலுக்குள் மூழ்கிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தக் கண்டப் பகுதி உயரமான மலைகளைக் கொண்டமைந்துள்ளது எனவும் அதன் பரப்பளவு 5 மில்லியன் சதுர கிலோமீற்றர் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவுஸ்திரேலிய கண்டத்துடன் அதன் பரப்பளவை ஒப்பிடுகையில் மூன்றில் இரண்டு மடங்கு அளவானதாகும்.
முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் தங்களின் சொந்த நிலங்களில் மீளகுடியேறுவதற்காக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றார்கள்.
இந்த மக்களின் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் பல்வேறு தரப்புக்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தங்களுடைய காணிகள் மீண்டும் கிடைக்காது விடின் விமானப்படையினரின் தடையையும் தாண்டி தங்களின் காணிகளுக்குச் செல்ல வேண்டிவரும் என மக்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று வெள்ள்ளிக்கிழமைமக்களின் போராட்டம் இடம்பெறும் இடத்தில் விமானப்படையினர் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை காட்சிப்படுத்தியிருக்கின்றார்கள்.
அதில் இது விமானப்படையினரின் காணியாகும். தேவையில்லாமல் உட்செல்லல் தடை என்றும் தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காவீர்கள் என்ற எழுத்து பிழையுடனான அறிவித்தல் ஒன்றை காட்சிப்படுத்தியிருக்கின்றார்கள்.
இது அனைத்து தரப்பினர்களிடமும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. தங்களின் சொந்த காணிகளுக்குச் செல்வதற்காக மக்கள் மேற்கொள்ளும் ஜனநாயக போராட்டத்தை நல்லாட்சி அரசு ஆயுத முனையில் நசுக்க முனைக்கிறது என மக்கள் தெரிவிக்கின்றனர்.
மது வாங்கப் பணம் கொடுக்க மறுத்த தாயை, போதைக்கு அடிமையான மகள் கொலை செய்த சம்பவம் ஹைதராபாத்தில் இடம்பெற்றுள்ளது.
ஹைதராபாத்தின் இப்பத்தூரு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நர்சம்மா. இவர் தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன், போதைக்கு அடிமையான நர்சம்மாவின் மூத்த மகன், மது வாங்கப் பணம் தராத கோபத்தில் தந்தையை அடித்துக் கொன்றார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
இதன்பின், நர்சம்மா தனது இளைய மகள் பர்வதம்மாவுடன் வசித்து வந்தார். பர்வதம்மாவுக்கு இரண்டு முறை திருமணம் நடைபெற்றபோதும், அதீத மதுப் பழக்கத்துக்கு அடிமையாகியிருந்ததால் கணவரைக் கைவிட்டு தாயுடன் வாழ்ந்து வந்தார். நர்சம்மாவுக்குக் கிடைத்த ஓய்வூதியத்திலேயே இருவரது சீவனமும் நடந்தது.
இந்த நிலையில், கடந்த வாரம் மது வாங்கப் பணம் தருமாறு நர்சம்மாவை பர்வதம்மா வற்புறுத்தியிருக்கிறார். இனிமேல் மதுவுக்குப் பணம் தரப் போவதில்லை என்று நர்சம்மா உறுதியாகக் கூறிவிட்டார். மது போதையில் இருந்த பர்வதம்மா கோபம் தலைக்கேறிய நிலையில், வீட்டில் இருந்த கட்டையைத் தூக்கி தாயின் தலையில் ஓங்கி அடித்தார். இத்தாக்குதலால் அதிகளவு இரத்தம் வெளியேறி நர்சம்மா உயிரிழந்தார்.
உயிரிழந்த தன் தாயின் உடலை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தார் பர்வதம்மா. பாதி மட்டுமே எரிந்துபோன தாயின் உடலை அப்புறப்படுத்த தகுந்த நேரத்துக்காகக் காத்திருந்தார். அயலவர்கள் நர்சம்மா பற்றி விசாரித்தபோது, இளைய சகோதரன் வீட்டுக்குச் சென்றிருப்பதாகக் கூறிவிட்டார் பர்வதம்மா.
சுமார் ஒரு வாரம் கழிந்த நிலையில், நேற்று நர்சம்மாவின் பாதி கருகிய உடலை பர்வதம்மா வீட்டின் ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு இழுத்துச் செல்வதைக் கண்ட அயலவர்கள் பொலிஸுக்குத் தகவல் அளித்தனர். அதன் பேரில் வந்த பொலிஸாரிடம் நடந்ததை ஒப்புக்கொண்டார் பர்வதம்மா.
இதையடுத்து பர்வதம்மாவைக் கைது செய்த பொலிஸார், அவர் மீது வழக்குப் பதிவுசெய்து விளக்கமறியலில் அடைத்தனர்.
வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி கடந்த 16.02.2017 வியாழக்கிழமை கல்லூரி மைதானத்தில் அதிபர் செ.பவேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எஸ்.உதயகுமார் , வலயகல்வி பணிப்பாளர் வை.ஸ்ரீஸ்கந்தராஜா வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் நெடுங்கேணி கோட்ட கல்விப்பணிப்பாளர் வே.கிருபானந்தன் கி.மங்கள குமார் (உதவி கல்விப்பணிப்பாளர் உடற்கல்வி) உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா கோவில்குளத்தைச் சேர்ந்த கி.சங்கர் தொகுத்து எழுதிய “வெற்றிக்கு வழிகாட்டி” எனும் பொது அறிவு சார்ந்த நூல் வெளியீட்டு விழா வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் சரஸ்வதி மண்டபத்தில் கல்லூரி முதல்வர் ரி.பூலோகசிங்கம் தலைமையில் இன்று (17.02.2017) வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
நூல் வெளியீட்டு விழாவின் பிரதம அதிதியாக வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சிறப்பு அதிதிகளாக கோவிக்குளம் இந்துக் கல்லூரியின் ஓய்வு பெற்ற அதிபர் கலாபூசணம் க.சிவஞானம் மற்றும் ஓய்வுபெற்ற அதிபர் சி.வையாபுரிநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
கௌரவ அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா க.சந்திரகுலசிங்கம்(மோகன்) கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா சாளம்பைக்குளத்தில் கொட்டப்படும் திண்ம, திரவ கழிவுகளால் அப்பகுதி மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியா சாளம்பைக்குளம் (யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்திற்கு) முன்பாக 100 மீற்றர் தொலைவில் திண்ம மற்றும் திரவக்கழிவுகளை வவுனியா நகரசபை மற்றும் வவுனியா தெற்கு பிரதேச சபையினரும் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதாகவும் சுற்றுப்புறச்சூழல் மாசடைவதாகவும் சிறுவர்கள், குழங்தைகள், பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் சுகாதார சீர்கேடுகளுக்கு உள்ளாகுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதின், வவுனியா உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அசங்க காஞ்சன குமார, வவுனியா நகரசபைச் செயலாளர் R.தயாபரன், வவுனியா பிரதேச செயலாளர், வவுனியா தெற்கு பிரதேச சபை செயலாளர், வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர் எனப் பலரும் இன்று (17.02.2017) விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டனர். இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர்..
தினசரி 50 மெக்ரிக்தொன் குப்பைகள் கொட்டப்படுவதாவும் இதனை இப் பிரதேசத்திலிருந்து அகற்றுமாறு பொதுமக்கள் வேண்டுகொள் விடுத்துள்ளனர். அல்லது மக்களுக்கு பாதிப்பற்ற வகையில் புதிய தொழிநுட்ப முறையினை பயன்படுத்தி அகற்றுமாறு அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
அவர்கள் குப்பைகளை துர்நாற்றம் வீசாமல், சுற்றுப்புறச்சூழலுக்கு எவ்வித பாதிப்புமின்றி அகற்றுவதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குறிய நடிவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதின் தெரிவித்தார்.
இக் குப்பை மேட்டினைச் சுற்றி 450க்கு மேற்ப்பட்ட குடும்பத்தினர் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் தற்போது அதிகமாக பொது இடங்களில் மக்களோடு மக்களாக கலந்து கொண்டு வருகின்றார். சமீபத்தில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கோரி இளைஞர்கள், மாணவர்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டத்தின்போது, மெரீனாவில் முகத்தில் துணியை கட்டிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் வந்து கலந்துவிட்டு சென்றார்.
இந்நிலையில் தற்போது பழனி கோவிலுக்கு முகத்தில் துணியை கட்டியவாறு சென்று தரிசனம் செய்து வந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இந்த புகைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த புகைப்படத்தில் விஜய் காவி வேஷ்டி அணிந்து காவி துண்டால் தனது முகத்தை மூடிக்கட்டியுள்ளார். விஜய் தற்போது அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகின்றார். இது அந்த படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சி என்பதை படக்குழுவினர் மறுத்துள்ளனர்.
வவுனியா பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் முகாமைத்துவ தொகுதி கையளிக்கும் நிகழ்வு நேற்று (16.02) வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கு.அகிலேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் யுனொப்ஸ் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் மாவட்ட அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் வவுனியா வைத்தியசாலையில் கழிவுகளை சுகாதார முறைப்படி அகற்றும் பொறிமுறை தொகுதிக்கான கட்டுமானங்கள் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்திலிங்கம், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர், ஐக்கியநாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி, யுனொப்ஸ் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் றோகண புஸ்பகுமார, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ம.கிருபாசுதன், வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் மு.மகேந்திரன் மற்றும் வைத்தியர்கள், வைத்தியசாலை பணியாளர்கள் கலந்து இந்த நிகழ்வில் கொண்டனர்.
இதன்போது உரையாற்றிய சுகாதார அமைச்சர் இலங்கையில் நீரினால் பரம்பலடையும் நோய்களின் தாக்கம் கூடிய மாகாணமாக வடக்கு மாகாணம் திகழ்கிறது. அதிலும் மன்னார், யாழ்ப்பாண மாவட்டங்களில் நிலத்தடிநீர் மாசடைவதால் நீரினால் பரம்பலடையும் நோய்களின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இவ்வாறான திட்டங்களின் மூலம் தொற்று நோய்களின் தாக்கத்தை குறைக்கலாம். இதுவரைகாலமும் வைத்தியசாலை கழிவுகள் பாதுகாப்பற்ற முறையிலேயே அகற்றப்பட்டு வந்துள்ளது. தற்போது இதற்காக பிரத்தியேக அமைக்கப்ட்டுள்ள இந்த கழிவுமுகாமைத்துவ திட்டத்தின்மூலம் சுற்றுசூழல் மாசடைவது தடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு நிதியுதவி வழங்கிய ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அதனை நடைமுறைப்படுத்திய யுனொப்ஸ் நிறுவனத்திற்கும் வடக்கு மாகாண மக்களின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதேவேனை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் என்ற வகையில் வடக்கின் ஏனைய மாவட்ட வைத்தியசாலைகளிலும் இவ்வாறான கழிவுமுகாமைத்துவ தொகுதிகளை அமைப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவி செய்யவேண்டுமென கேட்டுக்கொண்டார்.
யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தினை வன்னி பல்கலைக்கழகமாக மாற்றக்கோரி எதிர்வரும் 28 ம் திகதி ஊர்வலம் ஒன்றை நடத்த ஏற்பாடு செயய்ப்பட்டுள்ளது.
இவ் ஊர்வலத்தை வவுனியா வளாக ஆசிரியர் சங்கம், வவுனியா வளாக ஊழியர் சங்கம், மாணவர் சங்கங்கள், வவுனியா பொது அமைப்புக்கள் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
கடந்த 25 வருடங்களாக வவுனியா வளாகமாக செயற்படும் யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தினை வன்னி பல்கலைக்கழகமாக தரமுயர்த்துமாறு கோரி இடம்பெறும் இவ்ஊர்வலமானது வளாகத்தின் குருமன்காடு பிரயோக விஞ்ஞான பீடத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பித்து நகர் வழியாக சென்று வவுனியா அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதிக்கு கையளிப்பதற்கான மகஜர் கையளிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான தெளிவூட்டும் கலந்துரையாடலும் கருத்தறியும் நிகழ்வும் இன்று(17.02.2017) வவுனியா பூங்கா வீதியில் உள்ள வவுனியா வளாகத்தின் நிர்வாக கிளை கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது.
இதன்போது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் உட்பட வவுனியா வளாகத்தினை பிரதிநிதிப்படுத்தும் சங்கங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள், மதத் தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவர், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க வேண்டும் என கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சிறை வளாகம் பரபரப்பு மிகுந்து காட்சியளிக்கிறது.
இந்நிலையில், சிறை வளாகத்திற்கு காரில் வந்து இறங்கினார் ஒரு பெண். தங்க நிற போடர் வைத்த கறுப்பு நிற சீலை. கழுத்து நிறைய நகைகள் என தோற்றத்தோடு வந்தார்.
சிறைவளாகத்துக்குள் சென்ற அந்த பெண், துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புக்கு நின்ற பெண்ணிடம், சிறை கதவை திற, எங்க அம்மாவை பார்க்க வேண்டும் என கேட்டார். சசிகலாவை சொல்கிறாரோ என நினைத்து அவரிடம் பொலிசார் யாரைப்பார்க்க வேண்டும் என மீண்டும் கேட்டனர்.
ஜெயலலிதா அம்மாவைத்தான் பாக்கணும். அவங்க உள்ளே தானே இருக்காங்க. அவுங்கள நான் பாக்கணும் என கூறியுள்ளார். அதிர்ந்து போன பொலிசார் ஜெயலலிதா இல்லை அவர் இறந்து விட்டார் என தெரிவித்துள்ளனர்.
இதைக்கேட்டு ஆவேசமடைந்த அந்த பெண் என் தெய்வத்தை இந்த ஜெயில்ல போட்டு கொன்னுட்டீங்களே. பாவிகளா, என் தெய்வம் இறந்ததை ஏன் சொல்லவில்லை என கதறி அழ சிறை வளாகம் பரபரத்துள்ளது.
இதையடுத்து பொலிசார் விசாரித்த போது, அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர், பெயர் சந்திரம்மாள் என்பதும், மதுரை, உசிலம்பட்டியைச் சேர்ந்த அவர் , பெங்களூருவில் தங்கி இருக்கிறார் என தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த பெண் சிறை வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
கௌசல்யாகுடும்ப அமைப்பில் உரிமை, சுதந்திரம், விருப்பம் என்று வரும்போது, பெண்கள் இரண்டாம் பட்சம் ஆகிறார்கள். ஆனால், ‘குடும்பத்தின் கௌரவம்’ என்ற சுமை முழுவதும் அவர்களின் தலையில்தான் சுமத்தப்படுகிறது.
குறிப்பாக, ஆதிக்க சாதியில் பிறந்த பெண்கள் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்தாலோ, காதலித்தவரை திருமணம் செய்து கொண்டாலோ, ஆணவக்கொலையில் வந்து முடியுமளவுக்கு சம்பவங்கள் நடப்பதற்கு, அந்த அர்த்தமற்ற பாரமே காரணமாகிறது.
அப்படி சாதிக்கு தன் வாழ்க்கையை பலி கொடுத்து நிற்பவர், கௌசல்யா.
கலப்புத் திருமணம் செய்துகொண்ட, உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த காதல் தம்பதி சங்கர்-கௌசல்யா, நடுரோட்டில், பட்டப்பகலில் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளானதை தமிழகத்தின் மனசாட்சி மறக்காது.
அதில் சங்கர் படுகொலை செய்யப்பட, கௌசல்யா பலத்த வெட்டுக்காயங்களுடன் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார்.
சிகிச்சை முடிந்து சங்கர் வீட்டுக்குத் திரும்பியவர், ‘என் கணவர் விட்டுச் சென்ற கடமைகளை, இந்தக் குடும்பத்தின் மகளாக இருந்து செய்வேன்’ என்று துயரம் ததும்பிய குரலில் சொன்னது நினைவை விட்டு அகலாதது.
தமிழகத்தையே உலுக்கிய அந்த ஆணவக் கொலை நடந்து ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில், ‘இப்போது என்ன செய்கிறார் கௌசல்யா?’ என்ற தேடலில், வெகுநாட்களுக்குப் பிறகு அவருடன் அலைபேசியில் பேசினோம்.
பேச்சில் முதிர்ச்சி, தன்னம்பிக்கை என மாறியிருந்தார். ‘நல்லாயிருக்கீங்களா கௌசல்யா?’ என்ற ஒற்றைக் கேள்வியில் அடங்கியிருந்த கேள்விகளைப் புரிந்து கொண்டவராய், பேசத்தொடங்கினார்.
நான் வேலைக்குப் போயிட்டு இருந்தேன். சங்கர் காலேஜுக்குப் போயிட்டு இருந்தான். காதலிச்ச நாட்களை விட ரொம்ப சந்தோஷமா போனது வாழ்க்கை.
எங்கள வாழவைச்சுக் காட்டுற மாதிரி, கேம்பஸ் இன்டர்வியூல சங்கருக்கு வேலைகூட கிடைச்சிருந்தது. இனி எல்லாம் நல்லபடியா நடக்கும்னு ரெண்டு பேரும் நம்பிக்கையோட இருந்தோம்.
அந்த நாட்களோட சந்தோஷத்தை வார்த்தையில சொல்லத் தெரியல… ஆசைப்பட்ட வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கப் போற திருப்தி அது.
கௌசல்யா கல்லூரி ஆண்டு விழாவுக்காக சங்கருக்கு ஒரு சட்டை வாங்க கடைக்குப் போனோம். கடையில இருந்து வெளியே வந்தப்போ…. இப்போ நினைச்சாலும் மனசும் உடம்பும் நடுங்குது.
என் கண் முன்னாடியே சங்கரை துள்ளத் துடிக்க வெட்டினாங்க” – பேச்சுத் தடுமாற, எச்சில் விழுங்கி சமாளித்துத் தொடர்ந்தார்.
அவங்க உயிர் பயம் அவங்களுக்குன்னாலும், ஆளுக்கொரு கல்லை எடுத்தாவது வீசியிருக்கலாம். மொத்தத்துல, எந்தத் தடையும் இல்லாம எங்க ரெண்டு பேரையும் ரத்தச் சகதியில வீசிட்டு, சாவகாசமா கிளம்பினது அந்தக் கும்பல்.
சங்கருக்கு உயிர்போக, நான் தலையில் பலத்த காயத்தோட உயிர் பிழைக்கனு… அடுத்து நடந்ததுதான் எல்லாருக்கும் தெரியுமே.சிகிச்சைக்குப் பிறகு நான் சங்கர் வீட்டில் தங்கியிருந்தேன்.
சங்கரோடு எல்லாமே முடிஞ்சிட்டதா இருந்த எனக்கு, அந்த நேரத்தில் என்னைப் பார்க்க வந்தவங்க எல்லாம் கொடுத்த ஆறுதலும் தன்னம்பிக்கையும்தான் என்னை மெல்ல அந்தச் சூழல்ல இருந்து வெளியே கொண்டுவந்தது.
குறிப்பா, ‘எவிடன்ஸ்’ கதிர், கார்த்தி, கோயம்புத்தூர், தந்தை பெரியார் திராவிடக் கழகத்தைச் சேர்ந்தவர்கள், இளங்கோவன் அண்ணன், கீதா அக்கா, முத்தமிழ் அக்கா உள்ளிட்ட பலர் எனக்கு மனபலம் தந்தாங்க,
பண உதவி செஞ்சாங்க, கவுன்சிலிங் கொடுத்தாங்க. ப்ளஸ் டூ முடிச்சிருந்த என்னை டைப்ரைட்டிங் முடிக்கவெச்சு, அரசுப் போட்டித் தேர்வுக்கான பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தாங்க.
கீதா இளங்கோவன் அக்கா லேப் டாப் வாங்கித் தந்தாங்க.இப்போ இடைநிலை உதவியாளரா ஒரு அரசு வேலையில் சேர்ந்திருக்கேன்.
15 ஆயிரம் சம்பளம் வாங்குறேன். மாதம் ஒரு முறை சங்கர் வீட்டுக்குப் போவேன். சங்கர் தம்பிகள் விக்கி, குட்டிக்கு என்னால முடிஞ்ச பண உதவி செய்வேன்.
ரெண்டு பேரும் தினமும் எங்கிட்ட போன்ல பேசிடுவாங்க. சங்கரோட அப்பாவும், ‘சாப்பிட்டியாம்மானு போன் பேசுவார். இவங்கதான் என் குடும்பம்.
சில விடுமுறை நாட்களில் கீதா இளங்கோவன் வீட்டுக்குப் போவேன். ‘எவிடன்ஸ்’ கதிர், கார்த்தி, முத்தமிழ் அக்கானு எல்லோரும் கூடப் பிறந்தவங்க மாதிரி என்னை வழிநடத்திட்டு வர்றாங்க.
இப்போ கரஸ்ல பி.எஸ்சி., ஐடி படிச்சிட்டு இருக்கேன். எம்.எஸ்.டபிள்யூ முடிச்சிட்டு சமூக சேவையாளராகணும்.நானே சம்பாதிச்சு, சமைச்சு, சாப்பிட்டுனு தனிமை கொல்லுற ஒரு வாழ்க்கை.
எந்த ஊருல இருக்கேன்னு இப்பவும் சொல்ல பயமாதான் இருக்கு. ஏதோ பதுங்கு குழியில வாழுற மாதிரி வாழ்ந்துட்டு இருக்கேன். அப்படி நான் என்ன தப்பு செஞ்சேன்? மனசுக்குப் பிடிச்சவனைக் கல்யாணம் பண்ணிக்கிறது ஒரு குத்தமா?
கொலை செஞ்சவங்க, கொள்ளையடிக்கிறவங்க எல்லாம் தைரியமா, சுதந்திரமா, சந்தோஷமா வாழுற இந்த சமுதாயத்துல, சங்கருக்கும் எனக்கும் மட்டும் ஏன் இந்த தண்டனை?
நிம்மதியா தூங்கக்கூட முடியல” என்றவருக்கு, கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் போலீஸ் பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கிறது.
கௌசல்யா”அம்மாவோட அம்மா, சொந்தக்காரங்ககிட்ட இருந்தெல்லாம் இன்னும் போன் வந்துட்டேதான் இருக்கு. என்னை இந்த நிலைக்கு ஆளாக்குனதுக்கு அப்புறமும் எந்த முகத்தை வெச்சுட்டு அவங்களால எங்கிட்ட பேச முடியுதுனு தெரியல.
நான் மொபைலை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடுவேன். சிலர் என்கிட்ட, ‘பெத்தவங்கள வெறுக்காத, அவங்கக்கிட்ட பேசு’னு எல்லாம் அறிவுரை சொல்வாங்க.
அவங்களுக்கு நான் எந்த பதிலும் சொல்றதில்ல. மனசுக்குள்ள குமுறினாலும் ஒரு காதுல வாங்கி மறு காதுல விட்டிருவேன் என்றவர்,
தன் எதிர்காலம் எதற்கானதாக இருக்க வேண்டும் என்கிற தெளிவுடனும் தீர்க்கத்துடனும் இருக்கிறார்.”சங்கர் இல்லாத இந்த வாழ்க்கையில நான் எப்படி இருக்கேன்னு எனக்கே சில சமயம் ஆச்சர்யமா, விரக்தியா இருக்கும்.
ஆனா, நான் கடைசி வரைக்கும் ஆணவக் கொலைக்கு வாழும் சாட்சியா இருந்து, சம்பந்தப்பட்டவங்க மனசாட்சியை உறுத்திட்டே இருப்பேன்.
என்னை இப்படி நிர்க்கதியா நிறுத்தினது சாதிதான். அந்த சாதி ஒழியணும். அதுக்காகப் போராடுறவங்களோட சேர்ந்து போராடுவேன்.