வரலாறு காணாத உச்சம் : இலங்கையில் தங்க விற்பனை 60% சரிவு!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு அதிகரித்ததை அடுத்து, உள்ளூர் சந்தையிலும் தங்கம் அதி உச்சத்தை தொட்டுள்ள நிலையில் தங்க நகை வாங்குவோர் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த வாரத்தில் மட்டும் 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 15,000 ரூபாய் அதிகரித்துள்ளது என்று அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.

இந்த விலை உயர்வால், தங்க விற்பனை சுமார் 60% குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார். ஒரு வாரத்திற்கு முன்பு 24 காரட் தங்கத்தின் விலை 303,000 ரூபாயாக இருந்தது என்றும் அவர் கூறினார்.

நேற்று (09) காலை 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் தங்கத்தின் விலை 328,000 ரூபாயாக இருந்தது என்றும், ஆனால் நேற்று (09) பிற்பகல் 330,000 ரூபாயாக
அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

தங்க பிஸ்கட்களை இறக்குமதி செய்யும்போது 28% வரி செலுத்த வேண்டும் என்றும், மற்ற வரிகளுடன் சேர்த்து 50% அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். இதன் காரணமாக நகை விற்பனையில் ஈடுபடும் யாரும் தங்க பிஸ்கட்களை இறக்குமதி செய்ய மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது நாட்டில் தங்கத்தின் விலை ரூ. 5,000 அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (11) காலை கொழும்பு ஹெட்டியார் தெரு தங்க சந்தையில்,

ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை நேற்று (10) ரூ. 305,300 என விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இன்று ரூ. 310,000 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், நேற்று (10) ரூ. 330,000 ஆக இருந்த “24 கரட்” தங்கத்தின் விலை இன்று ரூ. 335,000 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, 22 கரட் மற்றும் 24 கரட் தங்கத்தின் விலை திடீரென உயர்ந்ததற்கு உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மையே காரணம் என்றும் நிபுணர்கள் விளக்கியுள்ளார்.

லண்டனுக்கு புறப்பட்ட விமானம் அவசர தரையிறக்கம் மூச்சுத் திணறலில் அவதியுற்ற பயணிகள்!!

துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து லண்டனுக்குச் சென்று கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

142 பயணிகளை ஏற்றிச் சென்ற ஏர்பஸ் A320 என்ற குறித்த விமானம் நடுவானில் சென்றபோது விமானத்தில் இருந்து திடீரென புகை வெளியேறியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பயணித்த 4 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ருமேனியா தலைநகர் புக்காரெஸ்ட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானம் தரையிறங்கியதும் அங்கு தயாராக இருந்த மீட்புக்குழுவினர் பயணிகளை பத்திரமாக வெளியேற்றியுள்ளனர். அதன்பின் மூச்சுத் திணறல் ஏற்பட்ட 4 பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதுடன், இது குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

யாழில் சோகம் : வயோதிபப் பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

யாழில் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்ட வயோதிபப் பெண் ஒருவர் நேற்று(10.10.2025) உயிரிழந்துள்ளார். மானிப்பாய் – சாத்தாவத்தை பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் சிந்தாத்துரைமேரி (வயது 69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் கொடுத்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக வீட்டில் வைத்து உட்கொண்டுள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

இலங்கையில் வரலாறு காணாத உச்சத்தை தொட்ட எலுமிச்சை விலை!!

இலங்கையில் ஒரு கிலோ கிராம் எலுமிச்சை பழம் 3000 – 3500 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் பல பகுதிகளில் ஒரு கிலோ எலுமிச்சை விலை 3000 ரூபாவைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்கள் வாழ்நாளில் ஒருபோதும் எலுமிச்சைப்பழத்தின் சில்லறை விலை இந்த அளவுக்கு உயர்ந்ததில்லை என்றும், இந்த விலை உயர்வு தங்களை ஆச்சரியப்படுத்துவதாகவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, ஒரு எலுமிச்சை பழத்தினை வாங்க நுகர்வோர் ரூ.50-60 செலவிட வேண்டியுள்ளது என்றும், விலை உயர்வு காரணமாக சிலர் இதனை உட்கொள்வதினை தவிர்ப்பதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் தற்போது தேவையான அளவில் விளைச்சல் இன்மையே இந்த விலை உயர்விற்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

 

யாழில் தவறான முடிவெடுத்து உயரிழந்த குடும்பஸ்தர்!!

யாழில் தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்த்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. குமார சுவாமி வீதி, புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சண்முகவடிவேல் (வயது 55) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

அவரது வீட்டுக்கு அருகேயுள்ள உறவினர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

சாட்சிகளை அச்சுவேலி பொலிஸார் நெறிப்படுத்தினர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் இளம் தம்பதியரும் இளம் பெண்ணும் கைது!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்பிலி பகுதியில் யாருமற்ற வீட்டில் இருந்து ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை இன்று(10.10.2025) இடம்பெற்ற நிலையில், 22 வயதுடைய இளம் குடும்பஸ்தரிடமிருந்து 10 கிராம் ஐஸ் போதைப்பொருளும், அவருடைய 18 வயதுடைய மனைவியிடமிருந்து 80 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், குறித்த வீட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளம் பெண்ணிடமிருந்து 9 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த திடீர் சோதனையின் போது மூவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக புதுக்குடியிருப்பு பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் பதின்மவயது சிறுவன் மாயம் : கலக்கத்தில் பெற்றோர்!!

வவுனியாவில் சிறுவனைக் காணவில்லை என பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வவுனியா, இயங்கராவூர், கற்குளம், சாளம்பைக்குளத்தை சேர்ந்த ஜெயசீலன் அபிஷேக் என்ற 16 வயது சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

நேற்று முன்தினம் (09) காலை 04.30 மணிக்கு வீட்டில் உறங்கிய மகனை காணாத நிலையில் அப்பகுதி முழுவதும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடியும் கிடைக்காத நிலையிலேயே சிறுவனின் பெற்றோரால் வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சிறுவன் தொடர்பில் தகவல் ஏதும் அறிந்தால் சிறுவனின் தாயின் தொலைபேசி இலக்கம் 0761698019 அல்லது சிறுவனின் மாமாவின் தொலைபேசி இலக்கம் 0774909955 அழைத்து அறியத்தருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி காட்டு யானை பலி!!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர ரயிலில் மோதி காட்டு யானை ஒன்று பலியாகியுள்ளது.

குறித்த விபத்து நேற்று (10.10.2025) இரவு 10.20 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பனிக்கங்குளம் பகுதியை அண்மித்த பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

 

ஐக்கிய இராச்சியத்தில் இலங்கையருக்கு கிடைத்த பெருமை!!

பிரித்தானியாவில் பொதுச்சேவைகள் மற்றும் அரசியலில் நீண்ட காலமாக தமது பங்களிப்பை வழங்கி வரும் இலங்கையைச் சேர்ந்த லூசியன் பெர்னாண்டோவுக்கு தத்துவம் மற்றும் அரசியலில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய இராச்சிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட லூசியன் பெர்னாண்டோ கொழும்பு புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியில் கல்வி கற்றவர், இவரின் வழிமரபினர் அனைவரும் ஐக்கிய இராச்சியத்தில் அரசதுறைகளில் கடமையாற்றியுள்ளனர்.

லூசியன் பெர்னாண்டோவின் தாத்தா, பூட்டனார் உள்ளிட்வர்கள் ஐக்கிய இராச்சியத்தின் கடற்படையிலும் கடமையாற்றியுள்ளனர். லூசியன் பெர்னாண்டோ நீண்ட காலமாக பொதுச்சேவைகள் மற்றும் அரசியலில் தீவிரமாக செயற்பட்டு வந்துள்ளார்.

இது தொடர்பில் லூசியன் பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில், “இந்த விருதுக்காக நான் மிகவும் நன்றி உள்ளவனாகவும், கடமைப்பட்டவனாகவும் இருக்கிறேன்.

இந்த அற்புதமான அங்கீகாரத்திற்காக கடினமாக உழைத்து என்னை பரிந்துரைத்தவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

தீவிர அரசியலில் இருந்து விலகிய பின்னரும், மக்கள் தொடர்ந்து எனது வேலையை நினைவில் வைத்து மதிப்பளிப்பது எனக்கு மனதைத் தொடுகிறது என கூறியுள்ளார்.

மனைவியைக் கொன்று கணவன் எடுத்த விபரீத முடிவு!!

திருவனந்தபுரம் கரகுளத்தை சேர்ந்த பாசுரன் ஆசாரி (73), உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த மனைவி ஜெயந்தி (63) மீது கொடூரமாக தாக்குதல் செய்து, பின்னர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிகிச்சை பெறும் ஜெயந்தியை பாசுரன் ஆசாரி கவனித்திருந்தார். அவருடைய மனநிலையில் ஏற்பட்ட மிகுந்த வேதனையின் காரணமாக, நேற்று அதிகாலை 3 மணிக்கு அவர் திருவனந்தபுரம் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் 5வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.

பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால் சிகிச்சைப்பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ஜெயந்தி மின்வயரால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

விசாரணையில், பாசுரன் ஆசாரி முதலில் மனைவியை கொன்று, பின்னர் தற்கொலை செய்தார் என்பது தெரிய வந்தது. சம்பவத்துக்குப் பிறகு போலீசார் முறையான விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் : விடுக்கப்பட்டுள்ள செம்மஞ்சள் எச்சரிக்கை!!

நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்கள் மற்றும் பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல இடங்களில் கடுமையான மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும்போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இடியுடன் கூடிய மழை பெய்யும்போது வயல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள், நீர்நிலைகள் போன்ற இடங்களில் நிற்பதை தவிர்க்க வேண்டும் எனவும் முடியுமானவரை வீடுகளுக்குள் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் தொலைபேசிகள், மின்சார சாதனங்கள் எதையும் பயன்படுத்த வேண்டாம் என்றும், ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் உள்ளூர் பேரிடர் மேலாண்மை அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

குறைந்த வட்டியில் சலுகையுடன் கடன் வழங்கும் வங்கிகள்!!

சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு இலகுவான முறையில் 1.5 மில்லியன் ரூபாய் வரை கடன் வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளை 15 வங்கிகள் ஆரம்பித்துள்ளன.

வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று அந்தக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளவர்களுக்கும் கடன் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடனைத் திருப்பி செலுத்த 6 மாத சலுகை கால அவகாசத்துடன் 5 ஆண்டுகள் வரை கால அவகாசம் கிடைக்கும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் மேம்பாட்டு நிதித் துறையின் இயக்குநர் நாயகம் மஞ்சுள ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

வசூலிக்கப்படும் வட்டி விகிதம் 8 சதவீதம் மட்டுமே என ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடன் வசதிகளை இலங்கை வங்கி, மக்கள் வங்கி, நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி, கொமர்ஷல் வங்கி, சம்பத் வங்கி, ஹட்டன் நேஷனல் வங்கி, தேசிய அபிவிருத்தி வங்கி, செலான் வங்கி, பிராந்திய அபிவிருத்தி வங்கி,

DFCC, சனச அபிவிருத்தி வங்கி, பான் ஆசியா வங்கி, யூனியன் வங்கி, கார்கில்ஸ் வங்கி மற்றும் மாநில அடமானம் மற்றும் முதலீட்டு வங்கி என்பன வழங்குகின்றன.

காணி மற்றும் பிற சொத்துக்களின் உறுதிகளை வழங்காமல் இந்த கடன்களைப் பெறலாம் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.

மேலும், வங்கிக் கடன்களை பெற்று அவற்றை முறையாக செலுத்தி வரும் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் 10 ஆண்டுகள் வரை 7 சதவீதம் வரை குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களைப் பெறலாம், மேலும் அவர்கள் 25 லட்சம் வரை கடன் பெறலாம் என ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக, கடன் திருப்பிச் செலுத்துவதற்கு ஒரு வருட சலுகைக் காலமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடொன்றில் மர்மான முறையில் உயிரிழந்த இலங்கை இளைஞன்!!

துபாயின் ஷார்ஜாவில் பணி புரியும் இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கொட்டுன்ன பகுதியை சேர்ந்த 23 வயதுடைய திலக பெரேரா என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

2 நாட்களுக்கு முன்பு, ஷார்ஜாவில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டடத்தின் அருகே தரையில் விழுந்து காயங்களுடன் அவர் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில், அங்குள்ள பாதுகாப்புப் படையினரால் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

கடுவெலவில் உள்ள போமிரியா கல்லூரியின் முன்னாள் மாணவரான திலக பெரேரா, சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு வேலைக்காக துபாய்க்கு சென்றிருந்தார்.

வெளியுறவு அமைச்சை தொடர்பு கொண்டபோது, ​​அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனை எதிர்வரும் திங்கட்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும் அவரது மரணம் சந்தேகத்திற்குரியதாக இருப்பதால், இந்த விடயத்தில் தலையிட்டு நியாயமான விசாரணை நடத்துமாறு உறவினர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் பிரபல பாடசாலை மாணவன் மரணம் : பிரதி அதிபர் உட்பட 7 பேர் கைது!!

கொழும்பு, நுகேகொட பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் உள்ள நீச்சல் தடாகத்தில் 5 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவன் படித்த பாலர் பாடசாலையின் பிரதி அதிபர் உட்பட ஏழு பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 8 ஆம் திகதி காலை மிரிஹான, ஸ்டான்லி மாவத்தையில் உள்ள ஒரு ஹோட்டலில் பதிவாகியுள்ளது.

சம்பவ தினத்தன்று குறித்த மாணவன் உட்பட மேலும் சில மாணவர்கள் குழு ஆசிரியர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளரின் வழிகாட்டுதலின் கீழ் ஹோட்டலில் நீந்திக் கொண்டிருந்த போது, ​​மாணவன் நீரில் மூழ்கியுள்ளார்.

இதனையடுத்து மாணவன் களுபோவில மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவனின் பிரேத பரிசோதனை நேற்று நடைபெற்றது.

அதற்கமைய, இந்த சம்பவம் தொடர்பாக பாலர் பாடசாலையின் பிரதி அதிபர், விளையாட்டு ஒருங்கிணைப்பு அதிகாரி, மாணவனுக்கு பொறுப்பான 2 ஆசிரியர்கள், பாலர் பாடசாலை ஊழியர் மற்றும் 2 நீச்சல் பயிற்றுனர்கள் உட்பட 7 பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை : நான்கு பிள்ளைகளின் தந்தை பலி!!

பொலன்னறுவை , பக்கமுன, பட்டுஹேன கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பக்கமுன பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் புதன்கிழமை (08) மாலை 05.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பக்கமுன, பட்டுஹேன கிராத்தைச் சேர்ந்த 62 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை ஆவார்.

காட்டு யானை ஒன்று பட்டுஹேன கிராமத்துக்குள் நுழைந்து வீடுகள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தியுள்ள நிலையில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரையம் தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்குள்ளான நான்கு பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காட்டு யானைகள் இரவு மற்றும் மாலை நேரங்களில் கிராமத்துக்குள் நுழைந்து வீடுகள் மற்றும் பயிர்களை சேதப்படுத்துவதால் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சினைக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கிராம மக்கள் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.