யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது மரணமடைந்த 26 வயதான இளம் தாய் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவைச் சேர்ந்த 26 வயதான இளம் தாய் நேற்றையதினம் (09) இரவு இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வைத்தியசாலையில் தாயின் இறப்புக்கான சரியான காரணம், நேரம் என்பன வைத்தியசாலையில் தெரிவிக்கப்படாமையால் சடலத்தை உறவினர்கள் ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே இறப்புக்கான காரணம் தெரிய வரும் எனவும் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விடயம் தொடர்பில் மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது. அதற்கமைய நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது, இன்றையதினம்(10) தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளது.
தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது1,208,731 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்கம் ஒரு கிராமின்(24 karat gold 1 grams) விலை 42,640 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 341,100 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின்(22 karat gold 1 grams) விலையானது 39,090 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இந்தியாவில் மனைவியை கொன்று சடலத்தை கட்டிலுக்கு அடியில் கணவன் மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா பெல்காம் மாவட்டம் முதலகி தாலுகாவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
4 மாதங்களுக்கு முன்பு சாக்ஷி (20), ஆகாஷ் தம்பதிக்கு திருமணம் நடந்தது. கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி மனைவியை ஆகாஷ் கொடுமைப்படுத்தியுள்ளார்.
இந்தியாவில் மனைவியை கொன்று சடலத்தை கட்டிலுக்கு அடியில் கணவன் மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா பெல்காம் மாவட்டம் முதலகி தாலுகாவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
4 மாதங்களுக்கு முன்பு சாக்ஷி (20), ஆகாஷ் தம்பதிக்கு திருமணம் நடந்தது. கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி மனைவியை ஆகாஷ் கொடுமைப்படுத்தியுள்ளார்.
ஆகாஷின் பெற்றோர் மும்பைக்கு சென்றதால், வீட்டில் தம்பதி மட்டுமே இருந்தனர். நான்கு நாட்களுக்கு முன், மனைவியுடன் ஆகாஷ் தகராறு செய்தார். அப்போது கழுத்தை நெரித்து மனைவியை கொலை செய்தார்.
உடலை பெட்ஷீட்டில் சுற்றி, கட்டிலுக்கு கீழே தள்ளினார். எதுவுமே நடக்காதது போன்று இருந்தார். இதற்கிடையே மும்பையில் இருந்து, ஆகாஷின் தாய் நேற்று காலை ஊருக்கு திரும்பினார்.
தாய் வருவதை அறிந்த ஆகாஷ், வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். மாமியார் வீட்டிற்கு வந்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்நிலையில் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதுடன், தப்பியோடிய கணவனையும் தேடிவருகின்றனர்.
இச்சம்பவம் அங்கு பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்து மோசடி செய்ததற்காக இரண்டு முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுலா காவல்துறையிடம் இரண்டு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது, அதன் பின்னர் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
அக்டோபர் 02 மற்றும் 05 ஆகிய திகதிகளில் பிரேசில் சுற்றுலாப் பயணி ஒருவருக்கும் பெல்ஜிய சுற்றுலாப் பயணி ஒருவருக்கும் தலா ரூ. 10,000 மற்றும் ரூ. 30,000 வசூலிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் 40 மற்றும் 48 வயதுடையவர்கள், இம்புல்கொட மற்றும் வெல்லம்பிட்டியவைச் சேர்ந்தவர்கள் எஅனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கைதான முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கறுவாத்தோட்டம் மற்றும் கொள்ளுப்பிட்டி காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா மாநகரசபை உறுப்பினர் ஒருவர் மீது மாநகரசபை வளாகத்திற்குள் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேயர் தலைமையில் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று (09.10.2025) இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து தெரியவருகையில், வவுனியா மாநகரசபை அமர்வு நடைபெறவிருந்த நிலையில மாநகரசபை மேயர் மற்றும் உறுப்பினர்கள் மாநகரசபையில் பிரச்சன்னமாகியிருந்தனர்.
இதன்போது மாநகர சபையால் புதிதாக வழங்கப்பட்ட இடத்தில் வியாபார நிலையம் ஒன்றினை நடத்தும் நபர் அங்கு வருகை தந்து மாநகரசபை உறுப்பினர்கள் சிலருடன் தனது வியாபார நிலையம் தொடர்பில் பேசியுள்ளார்.
அப்போது அவ்விடத்தில் நின்ற வவுனியா மாநகரசபையின் பண்டாரிக்குளம் வட்டார உறுப்பினர் சி.பிறேமதாஸுடன், மாநகரசபையால் வழங்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட தனது ஏசி பூட்டிய வர்த்தக நிலையத்தை ஏன் முகப்புத்தகத்தில் பதிவிட்டதாக கூறி முரண்பட்டுள்ளதுடன்,
தகாத வார்த்தை பிரயோகங்களையும் பயன்படுத்தி குறித்த மாநகரசபை உறுப்பினர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஏனைய சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்களால் குறித்த நபர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பில் மாநகர மேயர் சு.காண்டீபன் தலைமையில் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சபை உறுப்பினர்கள் சென்ற நிலையில் மாநகர சபை உறுப்பினர் சி.பிறேமதாஸவால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை, தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நபரும் தன் மீது மாநகரசபை உறுப்பினர் தாக்குதல் நடத்தியதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதுடன், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சீனாவின் மிகப்பெரிய சுங்கச்சாவடியான வுசுவாங்கில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சுங்கச்சாவடியில், 8 நாட்கள் விடுமுறையை முடித்துக்கொண்டு, அக்டோபர் 6 ஆம் திகதி மில்லியன் கணக்கான பயணிகள் வீடு திரும்பியதால், அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வுசுவாங் சுங்கச்சாவடியில் வாகனங்கள் வரிசையில் நிற்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தற்பொது அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
36 பாதைகளைக் கொண்ட வுசுவாங் சுங்கச்சாவடி, சுங்கச்சாவடிகளைக் கடக்க முயற்சிக்கும் போது, ஒன்றன் பின் ஒன்றாக ஏராளமான கார்கள் வரிசையில் நிற்பதை அந்த வீடியோக்கள் காட்டுகின்றன.
இந்த ஆண்டு விடுமுறையின் போது சுமார் 888 மில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், கடந்த ஆண்டு ஏழு நாள் விடுமுறையின் போது 765 மில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்நாட்டு கலாசார மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவில் இதேபோன்ற பெரிய போக்குவரத்து நெரிசல்கள் இதற்கு முன்பு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த வேலன் கனகலிங்கம் (வயது 69) என்பவரே உயிரிழந்துள்ளார்.
தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் கடந்த 05ஆம் திகதி புன்னாலைக்கட்டுவன் பகுதிக்கு சென்ற வேளை, கன்ரர் ரக வாகனத்துடன் விபத்துக்கு உள்ளானார்.
விபத்தில் கணவன் – மனைவி இருவரும் படுகாயமடைந்த நிலையில் , சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் , கணவன் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அமெரிக்காவில் நடைபெற்ற ( Olympia Amateur Las Vegas – 2025 ) உடற்கட்டமைப்பு போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றிய ஜகத் குணசேகர போட்டியில் மூன்றாம் இடத்தை வென்றுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த ஜகத் குணசேகர ( Olympia Amateur Las Vegas – 2025 ) போட்டியில் சீனியர் ஓபன் என்ற 35 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் மூன்றாம் இடத்தை வென்றுள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் அமைந்துள்ள நெவாடா ஹோட்டலில் நடைபெற்ற இந்த போட்டியில் உலகெங்கிலும் உள்ள 28 நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்குபற்றியுள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த ஜகத் குணசேகர குவைத்தில் உள்ள வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகின்றார். இந் நிலையில், உடற்கட்டமைப்பு பயிற்சிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி இந்த போட்டியில் மூன்றாம் இடத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
20 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களிடையே கணினி பார்வை நோய்க்குறி (CVS) அல்லது டிஜிட்டல் கண் திரிபு அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
COVID-19 தொற்றுநோய் காலத்தில் வீட்டிலிருந்து வேலை செய்து ஒன்லைனில் படிக்கும் போக்கு அதிகரித்து வருவதால் இந்த நிலை கணிசமாக பரவியுள்ளது.
இதற்கு பிரதான காரணம் கணினிகள், கையடக்க தொலைபேசிகள் மற்றும் ஏனைய டிஜிட்டல் சாதனங்களை நீண்டகாலமாக பயன்படுத்துவதே என தேசிய கண் வைத்தியசாலையின் ஆலோசகர் கோயா சத்திரசிகிச்சை நிபுணர் குசும் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள தேசிய கண் மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் அவர் இதனை தெரிவித்தார். கண் அசௌகரியம், மங்கலான பார்வை, தலைவலி, சோர்வு மற்றும் வறண்ட கண்கள் ஆகியவை அறிகுறிகளாகும்.
மோசமான வெளிச்சம், டிஜிட்டல் திரைகளிலிருந்து வரும் கூச்சம் அல்லது சரிசெய்யப்படாத பார்வை பிரச்சினைகள் ஆகியவற்றாலும் இந்த நிலை மோசமடையக்கூடும்.
பெற்றோரின் மேற்பார்வை இல்லாமல் பல சிறுவர்கள் டிஜிட்டல் திரைகளுக்கு முன்னால் அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்று மருத்துவர் வலியுறுத்தினார்.
இந்த நிலையைத் தடுக்க வழக்கமான கண் பரிசோதனைகள் மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
கணிணி காட்சி திரையை (monitor) சரியாக வைப்பது, பிரகாசத்தைக் குறைப்பது, திரையின் பிரகாசத்தை சரிசெய்வது மற்றும் திரையை கண்களிலிருந்து கணிசமான தூரத்தில் வைத்திருப்பது ஆகியவற்றை அறிவுறுத்துகிறார்கள்.
ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை 20 வினாடிகள் பார்ப்பது, அடிக்கடி கண் சிமிட்டுவது, போதுமான தண்ணீர் குடிப்பது மற்றும் சரியான தோரணையைப் பராமரிப்பது ஆகியவை பரிந்துரைக்கப்படுகின்றன.
கணினிகளுக்கான சிறப்பு கண்ணாடிகளை அணிவது மற்றும் வறட்சியைத் தடுக்க சொட்டு மருந்துகளை பயன்படுத்துவதை கண் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சொகுசு பஸ் வண்டியில், சாரதிக்கு இடதுபுறம் பின் பக்கத்தில் இருந்த இரண்டு சில்லுகள் கழன்று, பஸ்ஸுக்கு வெளியே வந்து, சில அடி தூரம் ஓடியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நுவரெலியாவில் இருந்து கொழும்பு சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் வண்டியின் பின்னால் பொருத்தப்பட்டிருந்த இரு சில்லுகளே அச்சாணியை விட்டு விலகி வெளியே வந்துள்ளது.
அதனை அவதானித்து உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டதால் அதில் பயணம் செய்த பயணிகள் அனைவருக்கும் எவ்விதமான ஆபத்துக்களும் ஏற்படவில்லை.
கொழும்பை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்ஸின் சில்லுகள் இரண்டும் வெளியே வந்தமை, புசல்லாவை பகுதியில் வைத்து அவதானிக்கப்பட்டு, வண்டி நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்ட நிலையில் சம்பவத்தால் பேருந்தில் பயணித்த பயணிகள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
காலி வீதியில் இரத்மலானை பகுதியில் உள்ள இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்துக்கு முன்பாக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் மீது மரக்கிளை முறிசந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று புதன்கிழமை (08.10.2025) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து மொரட்டுவை நோக்கிப் பயணித்த கார் மீதே மரக்கிளை முறிந்து விழுந்துள்ளது.
எவ்வாறிருப்பினும் விபத்தின் போது எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கொழும்பு நுகேகொடை, தலபத்பிட்டிய பகுதியில் உள்ள உணவகமொன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி, ஐந்து வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
நேற்று (08.10.2025) மாலை இந்த விபத்து நடந்ததாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர். நுகேகொடை, தலபத்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
இந்த சிறுவன் ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழுவுடன் நீச்சல் பயிற்யாளரின் உதவியுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, சிறுவன் நீரில் மூழ்கியுள்ளான்.
இதன்போது, சிறுவன் உடனடியாக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார். மிரிஹான பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் – கண்டி ஏ 09 பிரதான வீதியின் உளங்குளம பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மரதன்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (0810.2025) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் ரிவித்தனர். அநுராதபுரம் பகுதியில் இருந்து மரதன்கடவல பகுதிக்கு பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயங்களுக்குள்ளான இளைஞன் மரதன்கடவல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்ததன் பின்னர் உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
24 வயதுடைய மரதன்கடவல பகுதியை வசிப்பிடமாக கொண்ட இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார். இளைஞனின் சடலம் தற்சமயம் மரதன்கடவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மரதன்கடவல பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டில் கடுமையான மின்னல் தாக்கம் குறித்து 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது .
இன்று இரவு 11.00 மணி வரை அமுலிலிருக்கும் இந்த எச்சரிக்கையின்படி, 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 15 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், முல்லைத்தீவு, வவுனியா, மாத்தளை மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுமென தெரிவித்துள்ளது.
எனவே மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் தங்க விலை வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளதுடன் , ஒரு அவுன்ஸ் தங்கம் 4,000 அமெரிக்க டொலரைத் தாண்டி, புதிய சாதனையை பதிவு செய்துள்ளது.
இந்த அதிரடி உயர்வுக்கு பல உலகளாவிய காரணங்கள் அடிப்படையாக அமைந்துள்ளதுடன், அமெரிக்காவில் ஏற்பட்ட அரசு முடக்கம், டொனால்ட் டிரம்ப்பின் வர்த்தகப் போர், புவிசார் அரசியல் நெருக்கடிகள் உள்ளிட்டவை தங்க விலை உயர்விற்கு காரணமாக அமைந்துள்ளது.
இதன் விளைவாக, ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்க விலை 50 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக உலக சந்தைகளில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்தாக தங்கத்தைத் தேர்வு செய்துள்ளனர்.
“இந்த அரசியல் பிரச்சினைகள் நீண்ட காலம் நீடிக்காது எனவும், அடுத்த 3 முதல் 4 வாரங்களில் சூழ்நிலை சீராகும் பட்சத்தில், தங்க விலையின் தற்போதைய உயர்வு சரிவைச் சந்திக்கலாம்” என்று நிபுணர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
அதாவது தற்போது காணப்படும் இந்த உச்ச நிலை நீண்ட காலம் நீடிக்காது எனவும், தங்கம் அடுத்த சில நாட்களில் 2 முதல் 3 சதவீதம் வரை சரியும் வாய்ப்பு உள்ளதாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
தங்கம் தற்போது வரலாற்று உச்சத்தை அடைந்தாலும், இது நிலையானது அல்ல. வரவிருக்கும் வாரங்களில் சிறிய சரிவு ஏற்படும், அதை பயன்படுத்தி தங்கம் வாங்குவது முதலீட்டாளர்களுக்கு ஒரு புத்திசாலித்தனமான வாய்ப்பாக இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
அந்த வகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய ( 09) தங்க விற்பனை தரவுகளின் படி, 22 கரட் தங்கத்தின் ஒரு பவுன் – 313.950 ரூபாவாகவும்,22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 39.250 ரூபாவாகவும்
24 கரட் தங்கத்தின் ஒரு பவுன் – 342,500 ஆகவும், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 42.810 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. 21 கரட் தங்கத்தின் ஒரு பவுன் – 299,700 ஆகவும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 37,460.00 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
இதேவேளை, வரலாற்றில் முதல் முறையாக, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை நேற்று 4,000 டொலரைத் தாண்டியுள்ளதால் இலங்கையிலும் தங்க விலை சடுதியாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு மற்றும் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் நபரொருவர், தமது பிள்ளைகளை அந்த சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுமாறு வற்புறுத்தி, பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துவதாக பெற்றோர் கவலை வெலியிட்டுள்ளனர்.
அந்த நபரிடமிருந்து தமது பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிசெய்து, பிரதேச வாழ் மக்களது இயல்பு வாழ்வையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் யாழ். அரசடி பிரதேச மக்கள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
இந்த முறைப்பாட்டை இன்று (9) மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கையளித்த அரசடி பிரதேச மக்கள், ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், குறித்த நபர் நீண்டகாலமாக பல்வேறு சமூகவிரோத குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறைக்கும் சென்றுவரும் ஒருவர் ஆவார்.
எமது அரசடி பகுதியில் வாள்வெட்டுச் சம்பவங்கள் இவரது பின்னணியில்தான் நடந்து வருகிறது. இவை குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் நாங்கள் நாளாந்தம் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகி வருகிறோம். இந்நிலையில், அண்மையில் அரசடியில் குறித்த சட்டவிரோத நபரால் வெளியூரில் இருந்து சிலர் வரவழைக்கப்பட்டு, வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று நடத்தப்பட்டது.
இதனால் எமது பிள்ளைகள் தம்மை பாதுகாத்துக்கொள்ள தற்காப்பு நடவடிக்கையில் இறங்கினர். இதன்போது ஒருவர் காயங்களுக்குள்ளானார். அதைக் காரணமாகக் கொண்டு, எமது ஏழு பிள்ளைகளை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆனால், அந்த வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை பொலிஸார் கைது செய்யவில்லை.
எமது பிள்ளைகள் மீது தேவையற்ற வகையில் சோடிக்கப்பட்ட வழக்குகள் பொலிஸாரால் பதியப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியே இன்று மனித உரிமைகள் காரியாலயத்தில் முறைப்பாடு அளித்துள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.