புதிய வாகனங்களை வாங்க தயங்கும் இலங்கையர்கள் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!!

புதிய வாகனங்களை வாங்குவதில் மக்களின் ஆர்வம் குறைந்துள்ளதால் வாகன இறக்குமதி நிறுவனங்கள் வாங்குபவர்களை ஈர்க்க விளம்பர பிரச்சாரங்களை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த பல மாதங்களாக இறக்குமதியில் ஏற்பட்ட அதிகரிப்பைத் தொடர்ந்து, புதிய வாகனங்களின் கொள்முதல் தேவை குறைந்துள்ளமையினால் வாகன இறக்குமதியாளர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இருப்பினும், நாட்டில் தேவையை பூர்த்தி செய்ய போதுமான புதிய வாகனங்கள் உள்ள நிலையில், மக்கள் வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டவில்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIASL) தலைவர் பிரசாத் மானேஜ் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய மாதங்களில் இறக்குமதி அளவு கணிசமாக உயர்ந்திருந்தாலும், ஆரம்ப தேவை பெரும்பாலும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதால் சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்க அறிக்கைகளின்படி, 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வாகன இறக்குமதி தடை நீக்கப்பட்டதிலிருந்து, இலங்கை வாகன இறக்குமதிக்காக 1 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் செலவிட்டுள்ளது.

இலங்கை சுங்கத்துறையின் கூற்றுப்படி, டிசம்பர் 2024 முதல் ஜூன் 2025 வரை கிட்டத்தட்ட 50,000 மோட்டார் வாகனங்கள் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இதில் 14,047 மோட்டார் கார்கள் அடங்கும் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் அந்நிய செலாவணி இருப்புகளைப் பாதுகாக்க 2020 முதல் 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை வாகன இறக்குமதிகள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு 2025 ஆண்டு தளர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் சடுதியான விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்!!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் தங்களுக்கு சிரமமாக இருப்பதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் தங்கத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாடல் நடத்த சங்கம் முடிவு செய்துள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை நேற்று 4,000 டொலரை தாண்டியது.

உலக பொருளாதார சூழ்நிலை மற்றும் அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்ட நிலையற்ற தன்மையே இந்த விலை உயர்வுக்கு வழிவகுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, நாட்டில் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது, மேலும் 24 காரட் தங்கத்தின் ஒரு பவுணின் விலை தற்போது 327,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

மேலும், 22 காரட் தங்கத்தின் ஒரு பவுணின் விலை 300,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ரத்னராஜா சரவணன் தெரிவித்தார்.

திருமணத்திற்கு பணம் திரட்டுவதற்காக இளைஞர்கள் செய்த மோசமான செயல்!!

கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள பழங்கால விகாரையில் புரதான பித்தளை விளக்கை திருடிய குற்றச்சாட்டில் 3 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருமணத்திற்கு பணம் திரட்டுவதற்காக அதனை திருடியதாக தெரிய வந்துள்ளது திருடப்பட்ட பித்தளை விளக்கின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என பொலிஸார் தெரிவித்தனர்.

வீடுகளில் இருந்து பழைய பொருட்களை சேகரிக்கும் குழுவொன்று லொரியில் வட்டரேகா பகுதியில் சுற்றித் திரிந்துள்ளனர்.

இதன் போது வட்டரெக்க, மாவதகமவில் உள்ள விகாரைக்கு சென்ற மூவரில் ஒருவர் விகாரையின் தேரருடன் பேசிக் கொண்டிருந்தபோது, ​​மற்ற இருவரும் பித்தளை விளக்கைத் திருடியுள்ளனர்.

அதன் பின்னர் அந்த விளக்கு நாரம்மல பகுதியில் உள்ள ஒரு பழைய உலோகக் கடைக்கு விற்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, ​​கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரின் திருமணத்திற்கு பணம் திரட்டும் நோக்கில் இந்தத் திருட்டு மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது.

கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் இலங்கையருக்கு நேர்ந்த துயரம் : இடைநடுவில் பறிபோன உயிர்!!

கத்தார் ஏர்வேஸ் விமானத்தில், முன்பதிவு செய்யப்பட்ட சைவ உணவுக்கு பதிலாக அசைவ உணவு வழங்கப்பட்டதால், அதை சாப்பிட்ட ஓய்வுபெற்ற இருதய நிபுணர் அசோகா ஜெயவீரா மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து கொழும்புக்கு அசோகா பயணம் செய்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சைவ பழக்கம் கொண்ட இவர், விமான பயணத்துக்கு முன்பே சைவ உணவை முன்பதிவு செய்திருந்தார்.

ஆனால், விமான பணியாளர்கள் சைவ உணவு இல்லை என்று கூறி, இறைச்சியுடன் கூடிய அசைவ உணவை வழங்கியதாகவும், அதில் இறைச்சி அல்லாத பகுதிகளை மட்டும் சாப்பிடுமாறு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

அந்த உணவை சாப்பிட்டபோது, அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுயநினைவை இழந்தார். விமானம் ஸ்காட்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது மகன் கத்தார் ஏர்வேஸ் மீது வழக்குத் தொடுத்துள்ளார். முன்கூட்டியே ஆர்டர் செய்த உணவை வழங்காதது மற்றும் மருத்துவ அவசரத்தில் அலட்சியம் காட்டியது ஆகிய குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார்.

இந்தச் சம்பவம் விமானப் பயணிகளின் உணவுப் பாதுகாப்பு குறித்துக் கேள்விகளை எழுப்பியுள்ளதுடன் இலங்கையர் உணவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

20 குழந்தைகள் மரணத்திற்கு காரணமான இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் கைது!!

இந்தியாவின் பல மாகாணங்களில் 20 க்கும் மேற்பட்ட குழந்தைகளின் மரணங்களுக்கு தொடர்புடைய கலப்படம் செய்யப்பட்ட இருமல் மருந்தை தயாரித்த மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் ஸ்ரேசன் பார்மா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் கோவிந்தன், நேற்று இரவு சென்னையில் மத்தியப் பிரதேச பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

கலப்படம் செய்யப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்டதால் குறைந்தது 20 குழந்தைகள் மரணமடைந்தது தொடர்பாக மாகாண காவல்துறை அவரைத் தேடி வந்தது. மத்தியப் பிரதேசத்தைத் தவிர, ராஜஸ்தானிலும் இந்த இருமல் மருந்து காரணமாக சில இறப்புகள் ஏற்பட்டுள்ளன.

கோல்ட்ரிஃப் மருந்தை உட்கொண்ட பிறகு குழந்தைகளுக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரங்கநாதன் மீது கலப்படம், கொலைக்கு சமமான குற்றமற்ற கொலை, குழந்தைகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இருமல் மருந்து விவகாரத்திற்கு பிறகு ரங்கநாதன் கோவிந்தன் தலைமறைவாக இருந்தார். அவரது கைதுக்கு உதவி செய்வோருக்கு ரூ.20,000 பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மத்தியப் பிரதேச பொலிசாரால் அவர் சென்னையில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டுமின்றி, பெரும்பாலான இறப்புகள் நிகழ்ந்த சிந்த்வாராவிற்கு ரங்கநாதனை அழைத்துச் செல்ல, மத்தியப் பிரதேச காவல்துறையினர் தற்போது சென்னை நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

கோல்ட்ரிஃப் என்பது குழந்தைகளுக்கு மூக்கு ஒழுகுதல், தும்மல், தொண்டை புண் மற்றும் கண்களில் நீர் வடிதல் உள்ளிட்ட சளி மற்றும் இருமல் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க பரிந்துரைக்கப்படும் ஒரு மருந்து.

இந்த மாத தொடக்கத்தில் தமிழக அதிகாரிகளால் இந்த மருந்தின் மாதிரிகளில் டைஎதிலீன் கிளைகோல் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அவை கலப்படம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

DEG என்பது அச்சிடும் மை மற்றும் பசை தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஒரு நச்சுப் பொருளாகும், இது மனிதர்களுக்கு கடுமையான சிறுநீரகம், கல்லீரல் மற்றும் நரம்பு மண்டல சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

திடீரென வகுப்பறையில் சரிந்து விழுந்து 11ம் வகுப்பு மாணவன் மரணம்!!

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்து 11ம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் மணிகண்டன் நகர் நடைபாதை தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் வெங்கடேசன் (16), குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். காலாண்டு தேர்வு முடிந்து நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற வெங்கடேசன் திடீரென வகுப்பறையில் மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை ஆசிரியர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசாரின் விசாரணையில் பள்ளி விடுமுறை நாட்களில் அதிகளவில் வெங்கடேசன் செல்போனை பயன்படுத்தி வந்ததாகவும் பள்ளிக்கு செல்லும் நாளில் தலை வலிப்பதாக கூறிவிட்டு சென்ற நிலையில் திடீரென மயங்கி விழுந்து இறந்திருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவரது இறப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாணவர் இறந்து போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காதலனுடன் சண்டை கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

சென்னை ஆலந்தூரில், முதலாண்டு கல்லூரி படித்து வந்த மாணவி, காதலனுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், மன அழுத்தத்தில் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆலந்தூர், மடிப்பாக்கம் அருகே உள்ளாகரம் அலெக்ஸ் தெருவை சேர்ந்த வசந்தா (40) மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றுகிறார். இவரது மகள் தமிழ்ச்செல்வி (17) தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வந்தார்.

இந்நிலையில் வேலைக்கு சென்ற வசந்தா மாலை வீட்டிற்கு திரும்பி கதவை தட்டிய போது, தமிழ்ச்செல்வி கதவை திறக்கவில்லை. நீண்ட நேரம் பதிலளிக்காததால்,

அக்கம்பக்கத்தினரைச் சேர்த்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில், தமிழ்ச்செல்வி மின்விசிறியில் தூக்கிட்டு சடலமாக தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியில் கதறி அழுதார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மடிப்பாக்கம் காவல் நிலைய போலீசார் தமிழ்ச்செல்வியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் மாணவி அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதலர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்திருக்கலாம் என தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தாயை கழுத்தறுத்து கொலை செய்த மகன் : உடலை வீட்டு வாசலில் வீசிவிட்டு போன் பார்த்த கொடூரம்!!

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் KVB புரம் பகுதியை சேர்ந்தவர் 24 வயதுடைய யஷ்வந்த். இவரது தாய் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில் சொந்த ஊரிலேயே பள்ளி படித்த யஷ்வந்த் சென்னையில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரியில் படித்துள்ளார்.

படிக்கும் போது நல்ல மதிப்பெண்கள் பெற்ற அவர் சினிமாவில் நடிக்கும் ஆசையில் கிடைத்த வேலைகளை நிராகரித்துள்ளார். மேலும் படிப்பு முடிந்த பிறகு வீட்டிற்கு கூட செல்லாமல் ஹைதராபாத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு அறை எடுத்து தங்கிய யஷ்வந்த் தொடர்ந்து பல்வேறு இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு அலைந்ததாக சொல்லப்படுகிறது.

இருப்பினும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை, எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்த யஷ்வந்த் செலவிற்கான பணத்தை அவரது தாயிடமிருந்து வாங்கியுள்ளார்.

நீண்ட நாட்களாகியும் மகன் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்த நிலையில் யஷ்வந்திடம் அவரது தாய் “படித்த வேலைக்கு செல்லாமல் ஏன் இப்படி செய்கிறாய்” என கண்டித்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஹைதராபாத்திலிருந்து யஷ்வந்த் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு மகன் வீட்டிற்கு வந்ததால் லட்சுமி அவருக்கு பிடித்த உணவுகளை சமைத்து கொண்டு இருந்துள்ளார்.

அப்போது சமையலறைக்கு சென்ற யஷ்வந்த் அங்கு இருந்த கத்தியை எடுத்து அவரது தாயை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். மேலும் உடலை வீட்டிற்கு வெளியில் வாசலில் கொண்டு சென்று வீசிவிட்டு மீண்டும் சாதாரணமாக அமர்ந்து போன் பார்த்து கொண்டு இருந்துள்ளார்.

லட்சுமியின் உடலை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி யஷ்வந்த்தை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் யஷ்வந்த் இயல்புக்கு மாறாக நடந்து கொள்வதால் அவருக்கு மன நலம் பாதிக்கப்பட்டுள்ளது அல்லது கொலையில் இருந்து தப்பிக்க நடிக்கிறாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாழ் ஆலயத்தில் ஒரு கோடியே 50 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்ட குழந்தை!!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் குழந்தை ஒன்று ஒரு கோடியே 50 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளை ஆலயங்களுக்கு நேர்ந்து விற்றுவாங்கும் பழக்கம் காலங்காலமாக நம்மவர்களிடையே வழக்கத்தில் உள்ளது. திருமணமாகியும் நீணட நட்கள் குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் இவ்வாறு நேர்ந்திக்கடன்களை வைப்பது வழமையாகும்.

நேர்ந்திக்கடன்

குழந்தை பிறந்ததும் அதனை ஆலயத்தில் விற்று வாங்குவார்கள். பழங்கள், பொருட்கள் , தன்னை , கமுகு மரங்களும் குழந்தை விற்று வாங்கும்போது ஆலயத்திற்கு அன்பளைப்பாக வழங்குவார்கள்.

இவ்வாறு குழந்தையை ஆலையத்தில் விற்று வாங்குவதனால் நோய்நொடியின்றி குழந்தை ஆரோக்கியமாகவும் சகலசௌபாக்கியங்களும் பெற்று வாழ்ம் என்பது ஐதீகம். அந்தவகையில் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் குழந்தை ஒன்று ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள விக்ஷ்ணு ஆயங்களில் பிசித்தம் பெற்று விளங்கும் வல்லிபுரஆழ்வார் ஆலயத்தின் மகோற்சப பெருவிழா அண்மையில் நடந்து முடிந்திருந்தது. வல்லிபுரஆழ்வார் ஆலயத்தில் சமுத்திர தீர்த்தம் வெகு பிரபலமானது.

எல்லா ஆலயங்களிலும் ஆலய திருவிழாவிலும் ஆலய கேணியில் தீர்த்தம் இடம்பெறுவது வழமை. ஆனால் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் மட்டுமே கடலுக்கு சென்று பெருமாள் தீர்த்தமாடுவது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பேரழகு தொடர்பில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவி பெருமிதம்!!

இலங்கையின் கலாசாரத்தை பார்த்து நெகிழ்ச்சியடைவதாக அவுஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்ட மகளீர் கிரிக்கெட் அணியின் தலைவி சமாரா டல்வின் தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் நடந்த போட்டியின் போது இலங்கை தொடர்பில் அவர் வெளியிட்ட தகவல்கள், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விளையாட்டு என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியை முன்னெடுக்கக் கூடிய முக்கிய கருவியாக சர்வதேச அளவில் பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் போன்ற விளையாட்டுகள், நாட்டின் அடையாளமாக உள்ளன. அதன் கலாச்சாரம், சுற்றுச்சூழல் மற்றும் சமூக வேர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும் ஒரு மேடையாகவும் வளர்ந்து வருகின்றன.

இலங்கையின் இயற்கை அழகு, கலாசார பன்மை மற்றும் மக்களின் நட்புறவு மிகவும் சிறப்பாக உள்ளது. இது சர்வதேச ரீதியில் இலங்கையின் மதிப்பை உயர்த்தும் வகையில் உள்ளது.

இலங்கையிற்கு வெளிநாட்டு அணிகள் வருகை தரும் போதெல்லாம், விளையாட்டு நிர்வாகிகள் நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் பண்பாட்டு செழுமையை வெளிநாட்டு அணிகளுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

விமர்சனங்கள் இருந்தாலும், நாட்டின் பெயரை சர்வதேச ரீதியில் உயர்த்தும் ஒரு வகையான முயற்சியாக பார்ப்பதாக சமாரா டல்வின் மேலும் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையை உலுக்கிய தம்பதிகள் கொலையில் மேலதிக தகவல் : பெண்ணின் உடலில் தோட்டா!!

நேற்றையதினம் (07.10.2025) அதிகாலை அம்பாந்தோட்டை ஹங்கம பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிரிழந்தவர் 28 வயதான பசிந்து ஹெஷான் அல்லது போ பசிந்து என்பவரும் பெண் 26 வயதான திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த தம்பதியினர் முதலில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு பின்னர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியமை தெரிய வந்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் உடலிலிருந்து தோட்டா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருள் தொடர்பான தகராறு காரணமாக இக் கொலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை உயரிழந்தவர், 2024 மார்ச் மாதத்தில் கஹந்தமோதரவில் படகு ஓட்டுநர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களையும், கொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ் ஒரு பெண் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் ரன்ன பகுதியைச் சேர்ந்த 27 மற்றும் 33 வயதுடையவர்கள் எனவும் பெண் சந்தேக நபர் 35 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட 12 ரக உள்நாட்டுத் துப்பாக்கி, 02 கத்திகள், 12 ரக வெடிமருந்துகள் மற்றும் 12 ரக வெற்று வெடிமருந்துகள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகை ஷில்பா ஷெட்டி இலங்கைக்கு வரத் தடை – இது தான் காரணம்!!

பொலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மீண்டும் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 25 முதல் 29 வரை திட்டமிடப்பட்ட யூடியூப் நிகழ்வுக்காக கொழும்புக்கு வருகை தர அனுமதி கோரிய அவரது கோரிக்கையை மும்பை உயர் நீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்துள்ளது.

60 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடி குற்றச்சாட்டு வழக்கு நிலுவையில் உள்ளதாகக் கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

மேலும், மும்பை பொலிஸ் பொருளாதார குற்றப்பிரிவால் பிறப்பிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயண தடை உத்தரவை நிறுத்தி வைக்கவும் உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

ஷெட்டியின் வெளிநாட்டுப் பயணக் கோரிக்கை பரிசீலிக்கப்படுவதற்கு முன்பே, நிலுவையில் உள்ள பணத் தொகையை அவர் முதலில் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

மும்பை பொலிஸ் பொருளாதார குற்றப் பிரிவு (EOW) தலைமையிலான பாரிய விசாரணையின் ஒரு பகுதியாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக வெளியிடப்பட்ட லுக்அவுட் சுற்றறிக்கை (LOC) இன்னும் செயல்பாட்டில் உள்ளது எனவும், இது நீதிமன்றத்தின் அல்லது விசாரணை அமைப்பின் வெளிப்படையான அனுமதியின்றி அவர்கள் வெளிநாடு செல்வதை சட்டப்பூர்வமாகத் தடுக்கிறது எனவும் நீதிபதிகள் குழாம் குறிப்பிட்டது.

ஷில்பா ஷெட்டியின் சட்டதரணி கொழும்பு நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதி கோரியபோது, நீதிமன்றம் அதிகாரப்பூர்வ அழைப்பின் நகலை கேட்டது.

அழைப்பிதழ் தொலைபேசி மூலம் மட்டுமே கலந்துரையாடப்பட்டது எனவும், பயண அனுமதிக்குப் பின்னர் தான் எழுத்துப்பூர்வ ஆவணம் வழங்கப்படும் எனவும் சட்டதரணி விளக்கமளித்துள்ளார்.

இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றம், தடையை விடுவிக்க மறுத்து, எந்தவொரு பயண அனுமதியையும் கோருவதற்கு முன்பு தம்பதியினர் முதலில் 60 கோடி ரூபா மோசடி குற்றச்சாட்டுகளை நீக்க வேண்டும் என குறிப்பிட்டது. இந்த வழக்கு தற்போது அக்டோபர் 14 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கொத்மலை ஆற்றில் சடலம் கண்டெடுப்பு!!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் கொத்மலை ஆற்றில் இன்று புதன்கிழமை (08) அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் லிந்துலை பகுதியில் கொத்மலை ஆற்றில் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு பொது மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பொலிஸாரால் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா நீதவான் சம்பவ இடத்திற்கு வந்து பரிசோதித்த பின்னர், பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சிறப்பு தடயவியல் வைத்தியரிடம் சடலம் ஒப்படைக்கப்படும் என லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

இரவு நேரத்தில் வாகனங்கள் மீது தீ வைப்பு!!

வெலிமடை – பதுளை வீதியில் எட்டம்பிட்டிய பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் தீயில் கருகி நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (07) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். லொறி ஒன்றும் கார் ஒன்றுமே இவ்வாறு தீயில் கருகி நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவரேனும் ஒருவர் இரவு நேரத்தில் வாகனங்களுக்கு தீ வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை!!

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை வெளிநாட்டு ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.

அதற்கமைய, உலகின் பொருளாதார மற்றும் அரசியல் நிலை குறித்த கவலைகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை ஆராய்ந்து வரும் நிலையில், தங்கத்தின் விலை முதல் முறையாக இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி, நியூயோர்க்கில் தங்க எதிர்காலங்கள் 4,003 அமெரிக்க டொலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளன. நியூயோர்க் ஸ்போட் தங்கத்தின் தற்போதைய விலைப்பட்டியல், அவுன்ஸ் ஒன்றுக்கு 3,960.60 டொலர் ஆக உயர்ந்துள்ளது.

இது விலைமதிப்பற்ற உலோகங்களை அளவிடுவதற்கான தரநிலை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கார் விபத்து : ஒருவர் பலி!!

ஓட்டமாவடி – நாவலடி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துச் சம்பவம் இன்று (8) புதன்கிழமை ஓட்டமாவடி – நாவலடி இராணுவ முகாமுக்கு முன்பாக வைத்து இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடி பகுதியில் இருந்து வயல் வேலைக்காக துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் மீது அவ்வீதியால் வந்த கார் மோதியதில் வயோதிபர் மரணமடைந்துள்ளார்.

இந்த விபத்தில் மரணமடைந்த நபர் ஓட்டமாவடி – 1 மர்கஸ் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 63 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மரணமடைந்த நபரின் உடல் வைத்திய பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ் விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.