தங்கத்தின் விலையில் பதிவாகும் தலைகீழ் மாற்றம் – நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி!!

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை இன்று (02.02.2026) 368,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 337,600 ரூபாவாக காணப்படுகிறது. கடந்த கிழமையளவில் தங்கத்தின் விலையானது வரலாற்றில் முதன்முறையாக சுமார் 4 இலட்சம் ரூபாவை எட்டியிருந்தது.

இவ்வாறான சூழலில் தற்போது தலைகீழ் மாற்றத்தை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை உலக சந்தையில் தங்க விலை கணிசமாக சரிந்துள்ளதாகவே தெரியவருகிறது.

அதன்படி உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 4,660 – 4,700 டொலர்களாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய நாட்களில் 5,000 டொலர்கள் வரையில் பதிவாகியிருந்த போதும் தற்போது 4 – 7% வரை குறைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

யாழில் இராணுவ வாகனம் மோதி முதியவர் பரிதாபமாக பலி!!

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது இன்றையதினம் (02.02.2026) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சம்பவத்தில் நவரட்ணம் என்பவரே உயிரிந்துள்ளார். மயிலிட்டி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவரை இராணுவ வாகனம் மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக தெல்லிப்பழை வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவ பொலிஸார் மற்றும் பலாலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவில் வீதியில் உலரவிடப்பட்ட நெல்லால் விபத்து!!

முல்லைத்தீவு பிரதான வீதியில் சற்று முன் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

காயமடைந்தவர் மாஞ்சோலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். வீதியில் நெல்லு உலர விடப்பட்ட நிலையில் தடுமாறிய நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

வீதிகளில் நெல் உலர விடுவதால் விபத்துக்கள் ஏற்படும் என சமூக ஆர்வல்ர்கள் எச்சரித்திருந்தனர். வீதியில் நெல் உலரவிடும் பொதுமக்கள் இதனை கவனத்தில் கொள்ளவேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கபப்ட்டிருந்தது.

இந்நிலையில் விபத்து மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்.

 

வவுனியா நெடுங்கேணியில் “கிவுல் ஓயா வேண்டாம்” என மக்கள் போராட்டம்!!

அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்களின் வாழ்வுரிமையை பாதிக்கும் கிவுல் ஓயாத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுங்கேணியில் கண்டனபேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

ஒன்றிணைந்த தமிழ்கட்சிகளின் ஏற்ப்பாட்டில் வவுனியா நெடுங்கேணி பேருந்து நிலையத்தில் ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்ட பேரணி பிரதான வீதிவழியாக வவுனியா வடக்கு பிரதேச செயலகம் வரை ஊர்வலமாக சென்றது. அங்கு ஜனாதிபதிக்கு வழங்குவதற்கான மகஜர் வவுனியா வடக்கு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள், கிவுல் ஓயா திட்டம் தீட்டப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளபோதும் இதுவரை பிரதேச மக்களுடனோ, பிரதேச அபிவிருத்திக் குழுக்கள் மற்றும், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் கலந்துரையாடுமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் கலந்துரையாடப்படவில்லை.

அதன்திட்ட முன்மொழிவில் புதிய குடியேற்றவாசிகள் குடியேற்றப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது எமது பிரதேசத்தின் இனப்பரம்பலை பாதிக்கும் ஒரு செயற்ப்பாடு. திட்ட நோக்கத்திற்காக பல ஆயிரம் ஏக்கர் காடுகள் அழிக்கப்படவுள்ளன.

இலங்கையில் எங்கும் காணப்படாத தாவர மற்றும் விலங்கு வகைகள் அழிவடைவதன் அபாயமும், தாவர விலங்குகளின் முழுமையான அழிவும் ஏற்படும். அத்துடன் இத்திட்டத்தினால் ஏற்கனவே உள்ள யானை–மனித மோதல் மேலும் மோசமடையும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

வெடிவைத்தகல் மற்றும் பட்டிக்குடியிருப்பு கிராமசேவையாளர்கள் பிரிவுகளுக்கு சொந்தமான தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களை இழக்கும் அபாயம் ஏற்படுகிறது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கா வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 13,000 ஏக்கருக்கும் அதிகமான நிலம் வனவள திணைக்களத்தினால் மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் தமது விவசாயத் தேவைக்காக வேலி அடைப்பதற்காக தடிகளை வெட்டினால் கூட சிறையில் அடைக்கும் வனவளத் திணைக்களம், யுத்தத்தினால் கைவிடப்பட்ட குளங்களைப் பயன்படுத்த அனுமதிக்காத வனவளத் திணைக்களம் என்ன நோக்கத்திற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதியை மேற்படி திட்டத்திற்காக ஒதுக்கியுள்ளனர்.

அரசே? இனப்பரம்பலை மற்றும் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்ற உங்களின் வாக்குறுதி எங்கே? கடந்த அரசாங்கங்களை போல எமது வாழ்வுரிமையை பறிக்க இந்த அரசு விரும்புகிறதா,

பாரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது சிறுபான்மை மக்களை ஏன் புறக்கணிக்கிறீர்கள், மகாவலி–எல் வயத்திற்குக் வெளியே வாழ்வாதாரத்திற்கான நீர்த்தட்டுப்பாடு இல்லையா? இந்த கேள்விகளை உங்களிடம் முன்வைக்கிறோம்.

அத்துடன் அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ்மக்களின் வாழ்வுரிமையை பாதிக்கும் கிவுல் ஓயா திட்டத்தை தமிழ்மக்களாகிய நாம் முற்றாக புறக்கணிக்கின்றோம் என்று தெரிவித்தனர்.

ஒன்றிணைந்த தமிழ்க்கட்சிகளினால் ஏற்ப்பாடுசெய்யப்பட்ட இவ் எதிர்ப்புப் பேரணியில் வடக்கின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெருமளவான பொதுமக்கள் மற்றும் அரசியல் வாதிகள் உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டனர்.

வவுனியா ஏ9 வீதியில் இரு வாகனங்கள் மோதுண்டு விபத்து : ஒருவர் காயம்!!

வவுனியா ஏ9 வீதியில் நொச்சிமோட்டை பகுதியினை அண்மித்த பகுதியில் நேற்று (01.02) மதியம் இரண்டு வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கார் மீது வான் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இவ்விபத்தில் காரின் சாரதி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளமையுடன் கார் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவிற்கு எடுத்துவரப்பட்ட T20 உலகக் கிண்ணம் : ரசிகர்கள் பாரிய வரவேற்பு!!

ரி-20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில் தொடருக்கான கிண்ணம் நேற்று (01.02.2026) வவுனியாவிற்கு எடுத்து வரப்பட்டது. தொடர்சியாக யாழ்ப்பாணம் நோக்கி எடுத்துச் செல்லப்பட்டது

ரி-20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் ஆட்டங்கள் இந்த முறை இலங்கையிலும் இந்தியாவிலும் நடைபெறவுள்ளன. இதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி நெதர்லாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கொழும்பில் நடைபெறும் ஆட்டத்துடன் உலகக்கிண்ணத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் இலங்கையில் கடந்த 21.01.2026 அன்று உலகக்கிண்ணம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பலத்த பாதுகாப்புடன் வவுனியாவிற்கு கொண்டு வரப்பட்ட வெற்றிக் கிண்ணமானது பழைய பேருந்து நிலையத்தில் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது.

இதன்போது வடமாகாண துடுப்பாட்ட சங்கத் தலைவர் உட்பட வவுனியா மாவட்ட துடுப்பாட்ட அணிகள் கலந்துகொண்டு வெற்றிக்கிண்ணத்தை வரவேற்றனர்.

வவுனியா பூந்தோட்டம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயம்!!

வவுனியா பூந்தோட்டம் பிரதான வீதியில் நேற்று (01.02.2026) இரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் பகுதி நோக்கி வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டியும், பூந்தோட்டம் பகுதியிலிருந்து நகர் நோக்கி சென்றுகொண்டிருந்த மற்றொரு முச்சக்கர வண்டியும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் இரு முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் உட்பட அதில் பயணம் செய்த இரு பெண்கள் உட்பட 7 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா போக்குவரத்து பொலிசார் விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் செல்லும் குறித்த பிரதான வீதியில் அண்மைய நாட்களாக விபத்துச்சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவிலிருந்து புதிய சொகுசு சேவையினை முன்னெடுத்துள்ள இலங்கை போக்குவரத்துச் சபை!!

வவுனியாவில் இருந்து கொழும்பிற்கான புதிய சொகுசுபேருந்து சேவை ஒன்று இலங்கை போக்குவரத்துச்சபையின் வவுனியா சாலையினரால் நேற்று (30.01.2026) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேருந்துச்சேவை வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் காலை 09.05 க்கு புறப்பட்டு புத்தளம் வழியாக கொழும்பை சென்றடையும்.

வவுனியாசாலைக்கு சொந்தமாக சொகுசு பேருந்துகள் இல்லாத நிலையில் அனுராதபுரம் சாலைக்குசொந்தமான பேருந்தின் மூலம் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சேவையானது முதற்கட்டமாக ஒருவழிப்பாதை கொண்டதாக அமைந்துள்ளதுடன் வரும் காலங்களில் அது விஸ்தரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வவுனியாவில் இருந்து கொழும்பிற்கு ஒரு பயணிக்கு 1460 ரூபா கட்டணமாக அறவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆரம்ப நிகழ்வில் வவுனியா சாலையின் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

சர்ச்சைக்குரிய கொழும்பு பிரபல பாடசாலை மாணவனின் காணொளி : பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!!

கொழும்பில் உள்ள ஒரு பிரபல ஆண்கள் பாடசாலையை சேர்ந்த ஒரு மாணவர் மற்றும் பெண் ஆசிரியர்களின் சர்ச்சைக்குரிய காணொளி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த ஆண்கள் பாடசாலை தொடர்பில் சமூக வலைதளங்களில் பரவி வரும் சர்ச்சைக்குரிய சம்பவம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவெவ அக்கல்லூரியின் அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொளிகள் குறித்து கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அதிபரின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.

குறித்த அறிக்கை கிடைக்கும் வரை, இதில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் உள்ளிட்ட எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில், இணையத்திலிருந்து தொடர்புடைய காணொளிகளை நீக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும்,

இந்த முறைப்பாட்டை தொடர்ந்து அந்த மாணவர் உள்ளிட்டோருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, காணொளியில் நான்கு பெண் ஆசிரியர்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், இரண்டு பேர் மட்டுமே பெண் ஆசிரியர்கள் என்றும், அவர்களும் தற்போது அந்த பாடசாலையிலிருந்து வேறு பாடசாலைக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.

ஐரோப்பாவில் இருந்து இலங்கை வந்த உறவினர் : பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!!

ஐரோப்பாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த உறவினரை அழைத்துச் சென்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தங்காலை, பள்ளிக்கூடாவ பகுதியில் உள்ள கடலில் நீராடச் சென்ற வேளையில் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

தங்காலை, கதுருபொகுண வீதியைச் சேர்ந்த 27 வயதான லக்ஷான் என்ற திருமணமாகாத இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 26 ஆம் திகதி மாலை 2 மணியளவில், இத்தாலியில் இருந்து இலங்கை வந்த மைத்துனருடன் கடலுக்கு சென்றிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடற்கரையில் மது அருந்திய பின்னர், கடலில் குளிக்க சென்ற போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

கடலில் மூழ்கிய இளைஞனை அங்கிருந்த வெளிநாட்டவர்கள் காப்பாற்றி முதலுதவி அளித்த போதும் அவருக்கு சுயநினைவு திரும்பவில்லை.

உடனடியாக தங்காலை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு சென்ற போதும், அங்கு இடவசதி இன்மையால் வலஸ்முல்ல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 28 ஆம் திகதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தனது குடும்பத்தின் ஒரே மகன் என தெரியவந்துள்ளது.

கடலில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞன் தொடர்பான மரண விசாரணைகள் வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்றன.

சிறுவர் இல்லத்தில் இருந்து மாயமான சிறுமி!!

மீகஹகொடுவ அரச சிறுவர் இல்லத்தில் காணாமல் போன 15 வயது சிறுமியைக் கண்டறிய குளியாபிட்டிய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

W.F. மயூமி பிரார்த்தனா என்ற சிறுமி, ஜூலை 14, 2025 அன்று சிலாபம் பொலிஸாரால் முதலில் காவலில் எடுக்கப்பட்டு, சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சிலாபம் பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டார்.

ஜூலை 17, 2025 அன்று அவர் மீண்டும் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. காணாமல் போன சிறுமி எண் 06, ஹெனேகெதர, உடுபத்தாவ பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் பொதுமக்கள் குறித்த சிறுதியை அடையாளம் காண உதவும் வகையில் அவரது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

சிறுமியைப் பற்றிய ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள், குளியாப்பிட்டிய OIC யை 071-8591263 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அல்லது குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தை 037-2281222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுக் கொள்கின்றனர்.

 

வேலைக்கு சென்ற இளைஞன் பரிதாபமாக மரணம்!!

ஹொரண – களுவெல்லாவ ஊடாக புளத்சிங்கள செல்லும் வீதியில் திவலகடை சந்திக்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் 18 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

புளத்சிங்களவில் இருந்து ஹொரண நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, அதே திசையில் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிளை முந்துவதற்கு முற்பட்ட போது, ஆடைத் தொழிற்சாலைக்குச் சொந்தமான வேன் ஒன்றில் சிக்கியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் புளத்சிங்கள பிரதேசத்தை சேர்ந்த கவீஷ் லக்ஷான் ஹேமரத்ன என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

இவர் ஹொரண பிரதேசத்தில் உள்ள பிரபல பேக்கரி உற்பத்தி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருபவர் என தெரியவந்துள்ளது.

நேற்று காலை 6.30 மணியளவில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

இலங்கையில் நெகிழ்ச்சி செயல் : வறுமையிலும் நேர்மையில் உச்சம் தொட்ட மூதாட்டி!!

தென்னிலங்கையில் அதிர்ஷ்டலாபசீட்டு விற்பனைச் செய்யும் ஏழை தாயின் நேர்மை, இன்று நாடு முழுவதும் பேசும்பொருளாக மாறியுள்ளது.

களுத்துறை, புளத்சிங்கள பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய கீதா காந்தி கோட்டகொட என்ற பெண்ணின் செயற்பாடு சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.

குறித்த பெண் 20 ஆண்டுகளாக லொத்தர் சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். முன்பு தேநீர்க்கடை நடத்தி வந்த அவர், போக்குவரத்து மாற்றங்களினால் வாழ்வாதாரத்தை இழந்து, இன்று வீதியோரத்தில் லொத்தர் சீட்டு விற்பனை செய்து வருகிறார்.

நாளாந்தம் முகவர் நிலையத்தில் இருந்து சீட்டுக்களை கொள்வனவு செய்து விற்பனை செய்து வருகிறார். அவ்வாறு விற்கப்படாத சீட்டுக்களைத் திருப்பி ஒப்படைக்க முடியாது. இதனால் ஏற்படும் நஷ்டத்தை அவரே ஏற்க வேண்டும்.

இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக மோல்காவ பிரதேசத்தைச் சேர்ந்த லலித் பின்னகொட என்ற இளைஞன், வயதான பெண்மணிக்கு உதவும் நோக்கில் அவரிடம் மிஞ்சும் அனைத்து லொத்தர் சீட்டுக்களையும் தினமும் விலை கொடுத்து கொள்வனவு செய்துள்ளார்.

சம்பவத்தன்று மாலை, விற்பனை செய்யப்படாத எஞ்சியிருந்த 50 சீட்டுக்களை வாங்குவதாக லலித் உறுதியளித்திருந்தார்.

இரவு குலுக்கல் முடிவுகள் வெளியானபோது, அந்த 50 சீட்டுக்களில் ஒரு சீட்டிற்கு இரண்டு இலட்சம் ரூபாய் பரிசு விழுந்திருப்பதை கீதா அறிந்து கொண்டார்.

இந்நிலையில் அடுத்தநாள் காலையில் கடைக்கு வந்த, தனக்கு உதவும் இளைஞனுக்கு பரிசு கிடைத்திருப்பதை அறிவித்துள்ளார்.

மிகவும் ஏழ்மையான நிலையில் லொத்தர் சீட்டுகளை விற்பனை செய்து வரும் குறித்த பெண், நேர்மையாக இளைஞனிடம் லொத்தர் சீட்டினை வழங்கியுள்ளார்.

கீதா பாட்டியின் நேர்மையைக் கண்டு வியந்த லலித், தனக்குக் கிடைத்த இரண்டு இலட்சம் ரூபாய் பரிசில் 50,000 ரூபாயை அந்த இடத்திலேயே வயதான பெண்ணுக்கு வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் செய்துகொள்ள மறுத்த இளம்பெண் : காதலன் செய்த பயங்கர செயல்!!

இந்தியாவின் ஆக்ராவில் மனிதவள மேலாளராக பணியாற்றிவந்த இளம்பெண்ணொருவர் அலுவலகம் சென்ற நிலையில் மாயமானார். பொலிசாரின் தேடுதல் வேட்டையில் அதிரவைக்கும் உண்மைகள் தெரியவந்துள்ளன!

ஆக்ராவிலுள்ள அலுவலகம் ஒன்றில் மனிதவள மேலாளராக பணியாற்றிவந்த மிங்கி ஷர்மா (32) என்னும் இளம்பெண், கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, ஜனவரி மாதம் 23ஆம் திகதி அலுவலகம் சென்ற நிலையில் மாயமானார்.

மகளைக் காணாத பெற்றோர் பொலிசில் புகாரளிக்க, மறுநாள், அதாவது 24ஆம் திகதி யமுனா நதியின் மீது அமைந்துள்ள ஜவஹர் பாலத்தின்மீது சந்தேகத்துக்குரிய வகையில் பை ஒன்று கிடப்பதைக் கண்ட மக்கள் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.

பொலிசார் அந்தப் பையை பரிசோதிக்கும்போது, அதற்குள் ஆடையில்லாத ஒரு பெண்ணின் உடல் மட்டும் இருந்துள்ளது, அதன் தலையைக் காணவில்லை.

இரண்டு வழக்குகளையும் இணைத்து பொலிசார் CCTV கமெராக்களை ஆராயும்போது, மிங்கியின் அலுவலகத்திலிருந்து ஒருவர், ஒரு பெரிய பையை இழுத்துக்கொண்டு வந்து ஒரு ஸ்கூட்டரில் ஏற்றிச் செல்வது தெரியவந்தது.

அடுத்தடுத்த கமெராக்களை ஆராய்ந்ததில், அந்த நபர், மிங்கி வேலை செய்யும் அதே அலுவலகத்தில் வேலை செய்யும் வினய் சிங் (30) என்பவர் என்பது தெரியவரவே, பொலிசார் அவரைக் கைது செய்துள்ளார்கள்.

விசாரணையில், தானும் மிங்கியும் இரண்டு ஆண்டுகளாக காதலித்துவந்ததாகவும், ஆனால், ஆறு மாதங்களுக்கு முன் மிங்கி வேறொரு ஆணுடன் பழகத் துவங்கியது தெரியவந்ததாகவும் கூறியுள்ளார் வினய்.

மிங்கியை அலுவலகத்து வரவழைத்த வினய், தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்த, மிங்கி மறுத்துள்ளார். வாக்குவாதம் முற்றவே, மிங்கியைக் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார் வினய்.

பின்னர் அவரது தலையை தனியாக வெட்டி ஒரு பையிலும், உடலை மற்றொரு பையிலும் போட்டு, யமுனா நதியில் வீசிவிட திட்டமிட்டுள்ளார் வினய்.

ஆனால், ஜவஹர் பாலத்திற்குச் சென்றபோது அங்கு ஆள் நடமாட்டம் இருந்துகொண்டே இருந்ததாலும், உடல் இருந்த பையைத் தூக்கமுடியாததாலும், பாலத்தின் அருகிலேயே அந்த பையை வைத்துவிட்டு, மிங்கியின் தலை இருந்த பையை வேறொரு இடத்தில் கொண்டு போட்டுள்ளார் வினய்.

அவர் கொடுத்த தகவலின்பேரில் மிங்கியின் தலையும், அவரது மொபைல் மற்றும் ஸ்கூட்டரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள வினயிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

ரயிலில் பயணித்த பிரான்ஸ் நாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

பதுளையில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த ரயிலின் ஜன்னல் வழியாகத் தலையை வெளியே நீட்டி இயற்கைக் காட்சிகளை ரசித்தவாறு சென்ற பிரான்ஸ் நாட்டுப் பெண் விபத்திற்குள்ளாகியுள்ளார்.

ரயில் நிலைய உபகரணம் ஒன்றில் மோதி பலத்த காயமடைந்துள்ளார். இந்த விபத்து அம்பேவெல ரயில் நிலையத்தைக் கடந்த போது இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த வெளிநாட்டுப் பெண் உடனடியாக தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்ற உடனே செயற்பட்ட அம்பேவெல ரயில் நிலைய அதிபர் மற்றும் ஊழியர்கள், 1990 சுவசரியே அவசர அம்புலன்ஸ் சேவையை வரவழைத்தனர்.

காயமடைந்த பெண்ணுக்குத் தேவையான முதலுதவிகளை வழங்கி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திருமதி அழகிப் போட்டியில் இலங்கை அழகிக்கு கிடைத்த இடம்!!

அமெரிக்காவில் நடைபெற்ற 41-வது உலகத் திருமதி அழகிப் போட்டியில் தாய்லாந்துப் போட்டியாளர் மகுடம் சூடியுள்ளார்.இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் கலந்துகொண்ட சபீனா யூசுப் மூன்றாம் இடத்தை பிடித்தார்.

இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று (30) காலை நிறைவடைந்தது. இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் கலந்துகொண்ட சபீனா யூசுப், இறுதிச் சுற்றின் முதல் மூன்று இடங்களுக்குள் தெரிவானதுடன், அவருக்கு மூன்றாம் இடம் கிடைத்தது.

போட்டியை நடத்திய நாடான அமெரிக்காவின் போட்டியாளர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இப்போட்டியில் உலகின் 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்துகொண்டனர்

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் கலந்துகொண்ட சபீனா யூசுப், கடந்த வருடம் திருமதி உலக அழகியாக முடி சூடியமை குறிப்பிடத்தக்கது.