கணவர் வெளிநாட்டில், இரு குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு : தீவிரமடையும் தேடுதல்!!

உயிரை மாய்த்துக்கொள்வதற்காக மல்வத்து ஓயாவில் குதித்த ஒரு தாயையும் இரண்டு குழந்தைகளையும் கண்டுபிடிக்க அனுராதபுரம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உள்ளூர்வாசிகள் மற்றும் உயிர் காப்பாளர் குழுவின் உதவியுடன் தாய் மீட்கப்பட்ட நிலையில் இரண்டு குழந்தைகளையும் கண்டுபிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மொரட்டுவையைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயான 40 வயதுடைய ஒரு பெண் தனது 4 வயது மற்றும் 8 வயதுடைய குழந்தைகளுடன் இன்று (02) காலை அனுராதபுரம் நகரத்திற்கு அருகிலுள்ள மல்வத்து ஓயாவில் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், குடும்ப தகராறு காரணமாக இவ்வாறு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

மல்வத்து ஓயா அருகே நின்ற ஒருவர், குறித்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதையடுத்து உள்ளூர்வாசிகளின் உதவியுடன், பெண்ணை மீட்டு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் உயிர்காப்பாளர் பிரிவு இரண்டு குழந்தைகளையும் தேடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தமிழர் பகுதிகளில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை : வெளியான முக்கிய அறிவிப்பு!!

நாடு சீரடைந்துவரும் நிலையில் தேவையற்ற செயற்கை தட்டுபாடுகளை ஏற்படுத்தவேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேவையற்ற வகையில் பெற்றோலை சேகரிக்கும்போது அது அத்தியாவசிய தேவையாகவுள்ளவர்களின் செயற்பாடுகளை பாதிக்கும் நிலையேற்படும் எனவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போலியாக பரவிவரும் செய்திகளைக் கொண்டு மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் நிற்பதை காணமுடிகின்றது.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுத்துவதாக சிலர் போலியாக தெரிவித்துவரும் கருத்துகளைக்கொண்டு மட்டக்களப்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளை காணமுடிகின்றது.

முச்சக்கர வண்டிகளும் மோட்டார் சைக்கிள்களும் அதிகளவில் வரிசையில் நின்று எரிபொருளை பெறுவதன் காரணமாக அவசரத்தேவைக்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வருவோர் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதை காணமுடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தேவையான எரிபொருட்கள் கையிருப்பில் உள்ள நிலையில் பொதுமக்கள் எந்த அச்சமும் கொள்ளத்தேவையில்லையென மாவட்ட அரசாங்க அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டை மீட்டெடுக்க களத்தில் குதித்த மக்கள் : பதுளையில் களமிறங்கிய 826 பேர் கொண்ட குழு!!

இலங்கையின் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பல மாவட்டங்கள் நிர்மூலமாகி உள்ளன. இதில் பதுளை மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்புகளும் அதிரித்துள்ளன.

இந்நிலையில் பதுளை மாவட்டத்தை மீள கட்டியெழுப்பும் நோக்கில் மாத்தறையில் இருந்து குழுவொன்று வருகை தந்துள்ளது. சுமார் 826 பொது மக்கள் ஒன்றுகூடிய பதுளையை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

புனரமைப்பு பணிகளுக்கு தேவையான இயந்திரங்களும் உபகரணங்களும் மக்களால் கொண்டு வரப்பட்டுள்ளன.

அகழ்வாராய்ச்சியாளர்கள் குழுவுடன் பேக்கோ லோடர்கள், செயின்சாக்கள், தண்ணீர் பவுசர்கள், சுத்தப்படுத்தும் உபகரணங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஏற்கனவே சிவனொலிபாதமலையை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் அரச ஊழியர் குழுவொன்று ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

டித்வா புயலின் கோரம் பலரின் : கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்ட 31 சடலங்கள்!!

கண்டி, உடத்தல, நெலும்மல பகுதியில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 13 குடும்பங்களை சேர்ந்த 31 பேரின் இறுதிச்சடங்குகள் நடைபெற்றுள்ளன.

கண்டி, உடத்தல, நெலும்மல பகுதியில் கடந்த 27 ஆம் திகதி பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர் உயிரிழந்திருந்தனர்.

எதிர்பாராத தருணத்தில், சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு மலை உச்சியில் இருந்து ஒரு பெரிய மண் மேடு சரிந்து சிறிய கிராமத்தை முழுமையாக மூடியிருந்தது.

அழகான நெல் வயலின் நடுவில் அமைந்திருந்த இந்த கிராமத்திற்கு மேலே அமைந்திருந்த யஹங்கல மலைத்தொடரும், நக்கிள்ஸ் மலைத்தொடரின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்துள்ளது.

இதனையடுத்து குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் 31 பேர் சடலங்களாக மீட்கப்பட்டு பலரை தேடும் பணி தொடர்ந்து வருகின்றது.

உயர்தர பரீட்சைகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பரீட்சைகள் 2026 ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். எனினும், திகதிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

அதேநேரம், பேரிடர்களால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பேரிடர்களால் பாதிக்கப்படாத பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியியற் கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 8 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானப்படை அதிகாரிக்கு கிடைத்த அங்கீகாரம்!!

இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலிகொப்டரின் தலைமை விமானியான விங் கொமாண்டர் நிர்மல சியம்பலாபிட்டிய லுனுவில பகுதியில் விமானத்தை அவசரமாக தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார்.

அவரது சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் விதமாக, 2025 நவம்பர் 30 முதல் விங் கொமாண்டர் பதவிநிலையிலிருந்து குரூப் கேப்டன் பதவி நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டார்.

அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 2025 டிசம்பர் 02, மாலையில் இரத்மலானை இல்லத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் விமானப்படையின் முழு மரியாதையுடன் எதிர்வரும் 2025 டிசம்பர் 04ஆம் திகதி நடைபெறும்.

மூன்று வாகனங்கள் மோதி விபத்து : ஒருவர் பலி, மூவர் காயம்!!

மஹவ – நாகொல்லாகம வீதியில் விஹேனேகம சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (02.12.2025) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிக வேகத்தில் பயணித்த வேன் ஒன்று, சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் வேனின் சாரதியும், சைக்கிளில் பயணித்த இருவரும் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சைக்கிளில் பயணித்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாய், இரு குழந்தைகளுடன் மண்ணில் புதைந்த வீடு : இன்று வரை மீட்க முடியாத அவலம்!!

நாட்டில் ஏற்பட்ட கடும் மழை காரணமான கந்தப்பளை – சந்திரிகாமம் பகுதியில் காணாமல் போன குடும்பங்களைத் தேடி தற்போது இராணுவம் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

தாய், இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு குழந்தைகளின் பாட்டி ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

மண்ணுக்குள் வீடு

நுவரெலியா சிங்கப் படையணியைச் சேர்ந்த படையினர் நேற்று (01) முதல் தேடுதல் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த 27ஆம் திகதி மதியம் குறித்த பகுதியில் பெய்த பலத்த மழையினால் இந்த வீடு மண்ணுக்குள் புதையுண்டதாகவும், அந்த நேரத்தில் அவர்கள் அனைவரும் வீட்டினுள் இருந்ததாகவும் பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை தீவில் பேரிடர் : உயிர் மற்றும் சொத்துக்களை இழந்த அப்பாவி பொதுமக்கள்!!

இலங்கையில் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் அப்பாவி பொதுமக்கள் பெரும் உயிர் மற்றும் சொத்து இழப்பை சந்தித்துள்ளனர் என சமூக ஊடகவலைத்தள பதிவொன்றில் தகவல் வெளியாகியுள்ளது.

உலக புகழ்பெற்ற வானிலை நிறுவங்கள், அதாவது AccuWeather, BBC Weather மற்றும் Al Jazeera, முறையான முன்கூட்டிய எச்சரிக்கைகளை 10, 12 மற்றும் 14 நவம்பர் ஆகிய நாட்களில் வெளியிட்டன.

இதற்கு இணையாக, இலங்கை வானிலை அவதானிப்பு மைய பணிப்பாளர் மற்றும் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா உட்பட பல துறை சார்ந்த நிபுணர்கள் தொடர்ச்சியான எச்சரிக்கைகளை வழங்கி, அவசரகால தயார்நிலை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவையை வலியுறுத்தினர்.

ஆனாலும், நாட்டின் நிர்வாகம் முறையான முன்னேற்பாடுகளை எடுக்கவில்லை. 26 நவம்பருக்குள் மழை உக்கிரமடைந்த போதும், ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க நேரலைக்கு தலைமை தாங்க தயாராக இல்லாமல், திரைப்பட துறை சார்ந்த செயற்பாடுகளில் நேரத்தை செலவழித்தார்.

தேசிய பேரிடர் முகாமைத்துவ சபை (NCDM) செயலாற்றாமையால், பேரிடர் சம்பவத்திற்கு பிறகு மூன்று நாட்கள் வரை மாவட்ட அரசும், அங்கு சார்ந்த நிறுவனங்களும் உடனடி நிதி உதவிகளை விடுவிக்க முடியாமல் தடுமாறினர்.

இதனால் பாதிக்கப்பட்டோர் 48 மணி நேரத்திற்கு மேல் உணவுத் தங்குமிடம், மருத்துவ உதவி போன்ற அடிப்படை தேவைகள் கூட பெற முடியாமல் தடுமாறினர்.

நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் வெளியேற்ற நடவடிக்கைகள் திட்டமிடப்படாததால், மழை பெருக்கம் பல இடங்களில் உயிர் மற்றும் சொத்து இழப்புகளை அதிகரித்தது.

இதுபோன்ற நிர்வாக மந்தத்திற்கும், அதனால் ஏற்படும் பேரழிவிற்கும் காரணமாக, சமூக வலைத்தளங்களில் மற்றும் நாடாளுமன்ற விவாதங்களில் அரசின் செயல்திறன் குறித்து கேள்விகள் எழுகின்றன.

Disaster Management Centre (DMC) கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தாலும், ஆண்டுதோறும் நிகழும் இயற்கை பேரிடர்களில் மாற்றம் ஏற்படவில்லை என சமூக வலைத்தளங்கள் குறிப்பிட்டுள்ளன.

மலையக மக்களுக்கு மிகப்பெரும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த இயற்கை பேரிடர்களில், நிர்வாக மந்தத்தால் ஏற்படும் பேரழிவுகள் தொடர்ச்சியாக நிகழ்வதால் நாட்டின் இயற்கை மற்றும் சமூக பாதுகாப்பு குறித்து முக்கிய அச்சங்கள் எழுந்துள்ளன என இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் நிழவும் சீரற்ற காலநிலை : சுகாதாரப் பணியாளர்களின் வீர செயல்!!

நாட்டில் நிழவும் சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாமல் சுகாதார துறை சார்ந்தவர்கள் செய்யும் செய்யும் அர்பணிப்புகள் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

தன் உயிரையும் பொருட்படுத்தாது கடும் வெள்ள பெருக்கிற்கு நடுவில் நடந்து சென்று சேவை செய்யும் இவ்வாறான பணியாளர்களை போற்ற வேண்டும்.

இலங்கையில் தாய்–சிசு மரண வீதம் உலகின் பெருவளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவில் குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இவர்களின் அர்ப்பணிப்பு,

நெகிழ்வான சேவை மற்றும் தொடர்ச்சியான தாய்க் கவனிப்பே என சுகாதார துறை வலியுறுத்துகிறது.

மேலும், பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைக் குழந்தைகள் ஆரோக்கியத்திலும், போசாக்குத்தன்மையிலும் முன்னிலை வகிப்பதற்கும் நடுவிளைப்பெண்கள் வழங்கும் மடிமுதல் பராமரிப்பு, வீட்டுக்குச் செல்லும் சுகாதார கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு செயல்பாடுகள் பெரும் பங்காற்றுகின்றன.

ஒரு தாய் கர்ப்பம் முதல் பிரசவம் வரை அனுபவிக்கும் சவாலான பயணத்தில், அவர்களின் பாதுகாப்பையும், குழந்தையின் நலத்தையும் உறுதி செய்யும் இவர்கள் சுகாதார அமைப்பின் அடித்தள வீராங்கனைகள் என்பதில் ஐயம் இல்லை.

குடிநீா் போத்தல்களுக்கு தட்டுப்பாடு!!

நாடு முழுவதும் குடிநீா் போத்தல்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகரித்துள்ள தேவை அளவிற்கு நீர் போத்தல்களை வழங்க முடியாததற்கான முக்கியக் காரணம் வெற்று பிளாஸ்டிக் போத்தல்களின் தட்டுப்பாடு என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீரற்ற காலநிலை பாதிப்புகள் காரணமாக நாட்டில் குடிநீர் போத்தல்களை நிரப்பும் பெரும்பாலான தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் வெற்று போத்தல்களை களஞ்சியப்படுத்துவதற்கு அதிக இடவசதி தேவைப்படுவதால், ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்கு தேவையான போத்தல்கள் மட்டுமே கையிருப்பில் வைக்கப்படுகின்றன.

இலங்கையில் மல்வான,பியகம, யக்கல மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் உள்ள முக்கிய உற்பத்தி மையங்கள் அனைத்தும் செயலிழந்துள்ளன.

இவை மீண்டும் இயக்கப்படும்வரை, சிறிய அளவிலான உற்பத்தியாளர்களினால் சந்தை தேவையை பூர்த்தி செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுலா ஹோட்டல்கள் உள்ளிட்ட எப்போதும் நீர் பாட்டில் விநியோகம் பெறும் நிறுவனங்களுக்கு கூட இப்போதெல்லாம் விநியோகத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீரை வழங்கும் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் சில மீட்பு மையங்களுக்கு அணுகுதல் எளிதாக இருப்பதால் அந்த இடங்களுக்கு அதிக அளவில் போத்தல்கள் கிடைக்கின்றன என்றும்,

அணுகல் கடினமான பகுதிகளுக்கு நீர் விநியோகத்தை ஏற்பாடு செய்ய சிறப்பு முறைகள் தேவைப்படுகின்றன என்றும் உற்பத்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அவர்கள் மேலும் கூறியதாவது, வெள்ள நிலைமை சீராகும் வரை இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க வேண்டியிருக்கும் எனவும், நிலைமைக்கு ஏற்ப நடவடிக்கைகள் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியாவில் 77 பேர் பலி – 73 பேர் மாயம்.!!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளதுடன், 73 பேர் காணாமல் போயுள்ளனர் என மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 5,729 குடும்பங்களைச் சேர்ந்த 20,649 பேர் இந்த பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,124 குடும்பங்களைச் சேர்ந்த 8,718 பேர் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 79 தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர் மழை, மண்சரிவு, காற்றழுத்தம் காரணமாக நுவரெலியாவுக்கு செல்லும் அனைத்து முக்கிய வீதிகளும் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.

மேலும் தகவல் தொடர்பு சேவைகள் பெரும்பாலும் செயலிழந்துள்ளதால் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மிகுந்த சிரமத்துடன் நடைபெற்று வருவதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொத்மலை மற்றும் வலப்பனை பகுதிகளில் இராணுவத்தினரும், ஏனைய மீட்புப் படையினரும் தீவிரமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் மற்றும் பிற அடிப்படை நிவாரணப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நுவரெலியாவிலிருந்து ஹட்டன் வழியாக கொழும்பு செல்லும் பிரதான வீதிகள் நேற்று (01) மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது எனவும் மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையை உலுக்கிய டிட்வா புயல் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை – மண்ணில் புதையுண்ட பலர்!!

சீரற்ற காலநிலையால் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 410 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அனர்த்த நிலை காரணமாக, 336 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தில் அறிக்கை தெரிவிக்கின்றது.

இன்று (02) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையில் இந்த விபரம் வெளியாகியுள்ளது. மேலும், மோசமான வானிலையால் 407,594 குடும்பங்களைச் சேர்ந்த 1,466,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அறிக்கையின்படி, அதிகபட்சமாக கண்டி மாவட்டத்தில் 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதே நேரத்தில், பதுளை மாவட்டத்தில் 83 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 75 பேரும், குருநாகலாவில் 52 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 150 பேரும், நுவரெலியாவைச் சேர்ந்த 62 பேரும், கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த 48 பேரும், பதுளையைச் சேர்ந்த 28 பேரும், குருநாகலைச் சேர்ந்த 27 பேரும் தற்போது பேரிடர் காரணமாக காணாமல்போயுள்ளனர்.

பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதியை திருத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

அதன்படி, முன்னர் அறிவிக்கப்பட்ட படி டிசம்பர் 16ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், திகதியில் ஏதேனும் மாற்றம் இருந்தால், அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து இன்றும் (02) ஒரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. மேலும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாகாண மட்டத்திலான பாடசாலைகளை முதலில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, க.பொ.த. உயர்தர பரீட்சை மற்றும் நடைபெறவிருந்த அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக அனைத்து பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வங்காள விரிகுடாவில் ஒரே நேரத்தில் உருவான இரண்டு புயல்கள் : வெளியான காரணம்!!

வங்காள விரிகுடாவில் ஒரே நேரத்தில் இரண்டு சூறாவளிகள் உருவாகுவது புவி வெப்பமடைதலின் விளைவாகும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உலகிலேயே வேகமாக வெப்பமடையும் வெப்பமண்டல கடலாக இந்தியப் பெருங்கடல் கருதப்படுகின்றது.

டிட்வா சூறாவளி இலங்கையை தாக்கிய அதே நேரத்தில் சென்யார் சூறாவளி இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மலேசியாவில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது.

கடல் நீர் வெப்பமடைவதால் இவ்வாறு புயல்கள் ஏற்படுவதாக இந்தியப் பேராசிரியர் பஞ்ச பிரகாஷ் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, புயலின் தாக்கத்தினால் மொனராகலை மாவட்டம் அதிக பாதிப்புக்குள்ளாகியிருந்த நிலையில்,நேற்று மொனராகலை மாவட்டத்தில் 32.6 பாகை செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரே நேரத்தில் மீட்கப்பட்டுள்ள 22 பேரின் சடலங்கள் : பதைபதைக்க வைக்கும் நிலவரம்!!

மினிப்பே – நெலும்கம பகுதியில் இருந்து 22 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டவர்களின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

மினிப்பே – நெலுங்கம பகுதியில் மொத்தம் 16 வீடுகள் காணப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 12 வீடுகள் மண்சரிவில் சிக்குண்டுள்ளன. இதன்படி, குறித்த 12 வீடுகளில் இருந்தும் 30 பேர் காணாமல் போயிருந்த நிலையில் தற்போது 22 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த 27ஆம் திகதி குறித்த பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. எனினும், பல இடங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாத அளவுக்கு அனர்த்தங்கள் ஏற்பட்டிருந்தன.

குறித்த மண்சரிவில் சிக்கி காணாமல் போயிருந்தவர்களில் 22 பேரின் சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.