திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட், கச்சக்கொத்தீவு பிரதேசத்தில் நேற்று மாலை முச்சக்கர வண்டி ஒன்று, திடீரென தீ பற்றி எரிந்து சாம்பலான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, குறித்த முச்சக்கர வண்டி கச்சக்கொத்தீவில் இருந்து கிண்ணியாவை நோக்கி சென்று கொண்டிருந்த போது, இடையில் பழுதடைந்துள்ளது.
இந்த நிலையில், இடையில் கராச் ஒன்றில் நிறுத்தி பழுது பார்த்துக்கொண்டிருந்த வேளையிலே தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாரம்மல – குருணாகல் வீதியில் நாரம்மல நகருக்கு அருகில் லொறி ஒன்று இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான சபை பஸ்ஸூடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை (05.10.2025) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருநாகலிலிருந்து நாரம்மல நோக்கி பயணித்த லொறியின், சாரதி கட்டுப்பாட்டை இழந்து வீதியின் வலது பக்கத்தை விட்டு விலகி, கட்டுநாயக்காவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பஸ்ஸூடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் லொறி சாரதி, ஆண் ஒருவர், பெண்கள் இருவர் மற்றும் சிறுவர்கள் இருவர் ஆகியோர் காயமடைந்து நாரம்மல மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது, சிகிச்சை பலனின்றி லொறியில் சாரதி, ஆண் ஒருவர் மற்றும் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் பொலன்னறுவையைச் சேர்ந்த 41, 80 மற்றும் 82 வயதுடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதேவேளை, லொறியில் பயணித்த 40 வயதுடைய பெண், 16 மற்றும் 9 வயதுடைய சிறுவர்கள் இருவர் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் நாரம்மல மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை ஆசிரியர்சங்கத்தினரால் நேற்று (05.10.2025) ஆர்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர்சங்க பகுதியில் ஆரம்பமான குறித்த பேரணி மணிக்கூட்டுகோபுர சந்தியை அடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுபோதினி அறிக்கையின் நிலுவை சம்பளத்தை வழங்கு, தரமான கல்விக்கு வளங்களை சரியாக பகிர்ந்தளி, கல்வியில் அரசியல் தலையீட்டை நிறுத்து,
பயங்கவராத தடைச்சட்டத்தை ஒழி, அதிபர் ஆசிரியர்களை வீதியில் நிறுத்தாதே போன்ற கோசங்களை முன்வைத்திருந்ததுடன், பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
கம்பஹா – மினுவாங்கொடை வீதியில் வீதியவத்த சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று (04.10.2025) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஆவார்.
அதிக வேகத்தில் பயணித்த லொறி ஒன்று வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பாடசாலை மாணவன் மீது மோதி பின்னர் கார் மற்றும் முச்சக்கரவண்டி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தினையடுத்து லொறியின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்று கம்பஹா பொலிஸ் நிலையத்தில் சரணைந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஹொரண – மொரகஹேன வீதியின் கனன்வில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். இன்று (04) பிற்பகல் விபத்து இடம்பெற்றுள்ளதாக ஹொரண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் மொரகஹேன, பெரெகெட்டியவைச் சேர்ந்த 21 மற்றும் 24 வயதுடைய பூர்ணா மனுஷ்கா மற்றும் சதுரிகா அப்சரா ஆகியோர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரகஹேனவிலிருந்து ஹொரணை நோக்கிச் சென்ற லொறி ஒன்றுடன் எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிள் சாரதி வேக கட்டுப்பாட்டை இழந்து, வலதுபுறத்தில் பயணித்த லொறியுடன் மோதியதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தைத் தொடர்ந்து, காயமடைந்தவர்களை பிரதேச மக்கள் வைத்தியசாலைக்கு கொண்டுச்சென்ற நிலையில், செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் குறித்து ஹொரண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் – உடுவில் மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் விளையாட்டு ஒன்றில் முதலிடம் பெற்றதால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிமிருந்து விலகி இருந்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த குறித்த மாணவி, 2ஆவது மாடியில் இருந்து நேற்றுமுன்தினம் (02.10.2025) குதித்ததால் படுகாயமடைந்துள்ளார். இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
முல்லைத்தீவை சேர்ந்த 14 வயதுடைய குறித்த மாணவி உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவிகள் விடுதியில் கடந்த ஒரு வருட காலமாக தங்கி நின்று கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில், அவர் விளையாட்டு ஒன்றில் பங்குபற்றி முதலிடம் பெற்றுள்ளார். இதனால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிடம் இருந்து விலகி இருந்தனர்.
இதன் காரணமாக மனமுடைந்த மாணவி விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்ததால் காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது தனது வாக்குமூலத்தில் குறித்த மாணவி இதனை தெரிவித்துள்ளார். படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
திருமதி உலக அழகி இறுதி போட்டியில் சபீனா யூசுப் “திருமதி இலங்கை உலக அழகி 2025” என முடிசூட்டப்பட்டுள்ளார்.
உலகளவில் திருமணமான பெண்களுக்கான பழமையான மற்றும் மிகப்பெரிய சர்வதேச அழகுப் போட்டியாக அங்கீகரிக்கப்பட்ட திருமதி அழகி உலக அழகி போட்டி (03) பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது.
இந்த போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சபீனா யூசுப் கலந்துக்கொண்டு வெற்றிப்பெற்றுள்ளார்.
இதேவேளை, இந்தியாவில் இடம்பெற்ற 72ஆவது உலக அழகிப் போட்டியின் இறுதிப்போட்டியில் இலங்கையை சேர்ந்த அனுதி குணசேகர பங்குபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பொலன்னறுவை – ஹபரணை வீதியில் மின்னேரியா புராண தேவாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (03.10.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். டிப்பர் வாகனமும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விலாவடி சந்தி பகுதியில் நேற்று (02) இரவு வேளையில் உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முயற்சித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
12 கொளனி பகுதியில் இருந்து சம்மாந்துறை நோக்கி excavator” ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தை விலாவடி சந்தி பகுதியில் வலது பக்கமாக முந்திச் செல்ல முயற்சித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கவனக்குறைவால் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்த மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் சம்மாந்துறை மலையடிக்கிராமம் 03 பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர் ஆவார்.
சம்மாந்துறை மலையடிக்கிராமம் 02 பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய உழவு இயந்திர சாரதியை சவளக்கடை பொலிஸார் கைதுசெய்து உழவு இயந்திரத்தையும் கைப்பற்றி உள்ளனர்.
சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பீ ஏ.ரஞ்சித்குமாரின் உத்தரவிற்கமைய சவளக்கடை பொலிஸ் நிலைய போக்குவரத்துப்பிரிவுப் பொறுப்பதிகாரி சகிதம் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல் ஜவாஹிர் சம்பவ இடத்திற்குச்சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.
விபத்தில் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு மரண விசாரணைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்கப் பணித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரியின் நெறிப்படுத்தில் சவளக்கடை பொலிஸ் நிலைய போக்குவரத்துப்பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் போக்குவரத்து பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைதான சாரதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாணவியொருவர் வகுப்பறையில் பல மாணவர்களுடன் சாதாரணமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, எடிட் செய்து ஆபாசப் புகைப்படமாக மாற்றி சமூக ஊடகங்களில் வெளியிட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளைஞரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் மெதியாகன பகுதியைச் சேர்ந்த 19 வயது செங்கல் தொழிலாளி எனத் தெரிய வந்துள்ளது.
மாத்தளை, பிடகந்த தோட்டத்தில் உள்ள பழைய தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வடிகாணில், பிறந்த சிசு ஒன்று வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கந்தேனுவர பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிசு மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட சிசு, மாத்தளை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிசுவின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. சம்பவம் கந்தேனுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை கடந்த 2 ஆம் திகதி இப்லோகம, கொன்வேவா பகுதியில் தனது தாயாரால் கைவிடப்பட்ட ஒரு மாத பெண் குழந்தை ஒரு பையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார அதிகாரி வீட்டின் முன் ஒரு நாற்காலியில் குழந்தை விடப்பட்டிருந்தது. மேலும் அம்ப்பாறை மாவட்டத்திலும் பதின்மவயது பெற்றோர் பெற்ற குழந்தையும் அநாதர்வான நிலையில் கண்டு பிடிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
ஹிங்குரக்கொடை வராஹேன பகுதியில் உள்ள விவசாயி ஒருவர், நேற்று (03) மதியம் தனது நெல் வயலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தார். உயிரிழந்த நபர், ஹிங்குரக்கொடை போகஸ் சந்தி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
வரும் போகத்திற்காக நெல் விதைக்க வயலைத் தயார் செய்யும் நோக்கில், அறுவடை செய்த பின்னர் மீதமுள்ள வைக்கோலுக்கு தீ வைத்தார். இந்நிலையில், வெப்பமான வானிலை மற்றும் காற்று வீச்சால் தீ பரவி, அவர் அதில் சிக்கியுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம், பிரேதப் பரிசோதனைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக ஹிங்குரக்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
மலேசிய கடவுச்சீட்டை பெற இலங்கை சேர்ந்த ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட தந்திரமான முயற்சியை, கோலாலம்பூர் குடிவரவு துறை முறியடித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினத் காலை கோலாலம்பூர் குடிவரவு அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
அன்றையதினம் காலை 10.15 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தில், ஒரு இலங்கையர் தனது தாய் என கூறிய ஒரு மலேசிய பெண்ணுடன், 10 வயதிற்குட்பட்ட சிறுவனுக்காக கடவுச்சீட்டிற்கு முதன்முறையாக விண்ணப்பித்துள்ளார் என கோலாலம்பூர் குடிவரவு இயக்குநர் வான் முகமது சௌபி வான் யூசோப் தெரிவித்தார்.
விண்ணப்பதாரரின் உடல் தோற்றம், அவருக்காக சமர்ப்பிக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்ட வயதுடன் பொருந்தவில்லை என்பதை அதிகாரிகள் கவனித்ததையடுத்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பயோமெட்ரிக் சரிபார்த்த போது, அடிப்படை மலாய் மொழி வழிமுறைகளையும் பின்பற்ற முடியாமல் இருந்தமையினால் மேலதிக விசாரணைக்கு வழிவகுந்ததாக கூறப்படுகிறது.
மேலும், இது ஒரு உள்ளூர் பெண் தலைமையிலான கும்பலின் அறிவுறுத்தலின் கீழ் திட்டமிட்ட முயற்சி எனவும், அந்த கும்பல் மலேசிய கடவுச்சீட்டை பெற இலங்கையர்களுக்கான குறுக்குவழி ஒன்றை வழங்கி வந்ததாகவும் வான் முகமது சௌபி தெரிவித்துள்ளார்.
குறித்த இலங்கையர், உள்ளூர் பெண்ணின் உயிரியல் குழந்தையின் பிறப்புச் சான்றிதழைப் பயன்படுத்தி, அந்தக் குழந்தையை தனது மகனாக காட்டி கடவுச்சீட்டு பெற முயன்றுள்ளார்.
கடவுச்சீட்டு சட்டம் 1966 இன் கீழ், மேலதிக விசாரணைக்காக இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், கும்பல் பயன்படுத்தியதாக நம்பப்படும் பல ஆவணங்கள் மற்றும் கையடக்க தொலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் சர்வதேச பயண ஆவணங்களை சட்டவிரோதமாகப் பெற முயற்சிக்கும் கும்பல்களின் வலையமைப்பை வெளிப்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலேசிய குடிமகனாக தோற்றமளித்து கடவுச்சீட்டு பெற முயற்சிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையில் அண்மைய காலமாக WhatsApp ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் ஹேக்கிங் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கணக்கு ஹேக்கிங் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக பிரிவின் பாதுகாப்பு அதிகாரி சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார்.
குறைந்த விலையில் பல்வேறு தயாரிப்புகளை விற்பனை செய்யும் குழுக்கள் மூலம் பெறும் தகவல்கள் அதிகளவிலான மோசடி செய்யப்படுவதாக சாருகா தமுனுபொல குறிப்பிட்டுள்ளார்.
“உங்களுக்குத் தெரியாத குழுக்களில் சேருவதன் மூலம் இந்த நிலைமை ஏற்படலாம். மிகக் குறைந்த விலையில் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பை விற்பனை செய்வதாக கூறி முன்கூட்டியே பணம் வசூலிக்கப்படும் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
WhatsApp கணக்கு ஹேக்கிங்கிலும் அதிகரிப்பு உள்ளது. ஒன்லைனில் ஒரு கூட்டத்தில் சேர Zoom இணைப்பு வழியாக குறியீட்டைப் பெறுவது என்ற போர்வையில் WhatsApp கணக்குகளுக்கு அங்கீகரிக்கப்படாத அணுகல் இடம்பெறுகின்றது.
கணக்குகள் ஹேக் செய்யப்படும்போது, பட்டியலில் உள்ள மற்றவர்களுக்கு பல்வேறு செய்திகள் அனுப்பப்பட்டு அவர்களிடமிருந்து பணம் வசூலிக்கப்படுகின்றது.
அதற்கமைய, ஒரு கணக்கு ஹேக் செய்யப்பட்டால், அவர்கள் வணிகம் செய்யும் வங்கியைத் தொடர்பு கொண்டு பொருத்தமான பாதுகாப்பு உத்திகளைச் செயல்படுத்த வேண்டும்.
மோசடி தொடர்பான தொலைபேசி எண்கள் அல்லது பரிவர்த்தனைகளின் நகல்கள் அவர்களிடம் இருந்தால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் விரைவில் முறைப்பாடு செய்ய வேண்டும் என இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு பாதுகாப்பு அதிகாரி சாருகா தமுனுபொல மேலும் தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்வில் வீடுகளில் கொள்ளையிடும் மோசடியில் ஈடுபட்டு வந்த தாயும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டு வேலைகளுக்கு பணியாளர்களை வழங்கும் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்ணும் அவரது மகனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபரான பெண், தனது மகன் தலைமையிலான கும்பலுடன் நீண்ட காலமாக வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்தமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பெம்முல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் சந்தேகநபரான பெண் பணியாளராக அனுப்பப்பட்டுள்ளார்.
இதனை சாதகமான கொண்டு இரவு நேரத்தில் தனது மகன் தலைமையிலான கும்பலுடன், வீட்டு உரிமையாளர்களை கட்டிவைத்து, 1.5 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நகைகளை திருடியுள்ளனர்.
இது குறித்து பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, 24 மணி நேரத்திற்குள் பெம்முல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் ஹங்குரான்கெத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து திருடப்பட்ட நகைகள் மற்றும் 3 கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கும்பல் நாடு முழுவதும் சுமார் 10 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.