யாழில் மருமகனுக்கு மாமானார் அரங்கேற்றிய கொடூரம் : தீவிரமாகும் விசாரணை!!

யாழ்.வடமராட்சி துன்னாலை பகுதியில் வாள் வெட்டு சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பதிவாகியுள்ளது. வாள்வெட்டிற்கு இலக்கானவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மாமன் மற்றும் மருமகனுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் வாள்வெட்டாக மாறியுள்ளதாகவும், மாமன் மருமகன் மீது வாளால் வெட்டியதில் மருமகன் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயத்திற்கு உள்ளானவர் வடமராட்சி துன்னாலையை வேம்படி பகுதியை சேர்ந்தவர் என்பதுடன், இதேவேளை தாக்குதல் நடத்தியவரும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

மன்னார் குஞ்சுக்குளம் பகுதியில் நிர்க்கதியான 3 பேரை பத்திரமாக மீட்ட விமானப்படை!!

மன்னார் குஞ்சுக்குளம் பகுதியில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 3 பேரை இலங்கை விமானப்படையினர் ஹெலிக்கொப்டர் மூலம் மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இன்று (30.11.2025) காலை மன்னார் குஞ்சுக்குளம் பகுதியில் மீட்புப் பணிகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான பெல்-212 ஹெலிக்கொப்டர் புறப்பட்டுச் சென்றது.\

இதன்போது வெள்ளப்பெருக்கில் வீட்டினுள் சிக்கிய 3 நபர்களை விமானப்படை ரெஜிமென்ட் விசேட படைப்பிரிவின் மீட்புக் குழுவினர் மீட்டனர்.

அவர்கள் அங்கிருந்து வவுனியா விமானப்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டு நோயாளர் காவு வண்டியினூடாக வவுனியா வைத்தியசாலையில் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டனர்.

வெள்ளத்தில் சிக்கிய மூன்று பெண்கள் ஹெலிகொப்டரில் மீட்பு!!

அனுராதபுரம் மல்வத்து ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய மூன்று பெண்களை ஹெலிகொப்டர் மூலம் விமானப்படையினர் மீட்டுள்ளனர்.

அனுராதபுரம் மல்வத்து ஓயா ரயில் கடவை பாலத்திற்கு அருகில் வெள்ள அனர்த்தத்தில் சிக்கிய மூன்று பெண்களை இன்று (29.11.225),

விமானப்படை மீட்பு குழுவினர் பெல் – 412 ஹெலிகொப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்டு அனுராதபுரம் விமானப்படை தளத்திற்கு அழைத்து சென்றனர்.

புயல் கடந்தாலும் தொடரும் மறைமுக பாதிப்பு : கடுமையான மழை குறித்து எச்சரிக்கை!!

சூறாவளி தீவை விட்டு நகர்ந்துள்ள நிலையில் அதன் நேரடி விளைவுகள் குறைந்துவிட்டாலும், மறைமுக விளைவுகள் இன்னும் இருப்பதாக வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக அவர் எச்சரித்தார்.

மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாகாணங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், கனமழை குறைந்திருந்தாலும், பேரிடர் நிலைமை இன்னும் முழுமையாகக் குறையவில்லை. எனவே, நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்கள் தற்போதைக்கு தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்குமாறு கருணாநாயக்க வலியுறுத்தினார்.

சூறாவளி காரணமாக ஏற்பட்ட மின் இணைப்புகளுக்கு ஏற்பட்ட சேதம் இன்னும் முழுமையாக சரிசெய்யப்படவில்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரியான புதுப்பிப்புகளை வழங்கும் வரை பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் அவர் மேலும் அறிவுறுத்தினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் கிணறுகளில் இருந்து தண்ணீரை முறையாக சுத்திகரிக்கும் வரை குடிப்பதைத் தவிர்க்குமாறும், அவ்வாறு செய்யத் தவறினால் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், இலங்கையின் மீதான மறைமுக தாக்கம் தொடர்ந்து வருவதால், தீவு மற்றும் அதைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.

எனவே, மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இன்று கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அவர் அறிவுறுத்தினார். இந்த மறைமுக விளைவுகள் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் தீவை விட்டு விலகிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், அதன் பிறகு நாடு முழுவதும் சாதாரண வானிலை நிலவும் என்றும் அவர் கூறினார்.

குழந்தையுடன் நித்திரைக்கு சென்ற ஆசிரியை மண்சரிவில் உயிரிழப்பு : மகனை காணவில்லை!!

கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஹோமாகம – மாகம்மன மகா வித்தியாலயத்தின் பொறுப்பாசிரியை புபுது மஹேஷிகா பண்டார இன்று (29.11.2025) ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்துள்ளார்.

கொத்மலை பம்போடாவில் ஆசிரியை மற்றும் அவரது மகன் வசித்து வந்த வீடு உட்பட மேலும் 5 வீடுகள் உள்ளன. ஆசிரியை தனது குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஆசிரியை புபுது மஹேஷிகாவின் உடல் சில நிமிடங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மகனை இன்னும் காணவில்லை என கூறப்படுகின்றது.

இலங்கையில் இயற்கையின் கோர தாண்வத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், காணாமல்போனோர் எண்னைக்கையும் அதிகரித்து வருகின்றமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

69 பேருடன் மீட்கப்பட்ட பேருந்து : யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் வெளியிட்ட தகவல்!!

யாழில் இருந்து சென்ற பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவேளை அந்த பேருந்தில் இருந்த 69பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்த பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிகொண்டது.

அப் பேருந்தில் பயணம் செய்த 69 பேர் அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு இடையிலான கலாஓயா பகுதியில் பாதுகாப்பாக கூரையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நொச்சிகாமம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இடர்மிகுந்த சூழலில் புத்தளம் மற்றும் அனுராதபுர மாவட்ட செயலாளர்கள் , விமானப்படை, கடற்படை இராணுவம், பொலிஸார் , அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மற்றும் மீட்பு பணியாளர்கள், வைத்தியசாலை பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு பயணிகளை பாதுகாப்பாக மீட்டமைக்கு யாழ்ப்பாண மாவட்ட மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சகல மாவட்ட அரச அதிபர்களுடனான ஜனாதிபதியின் zoom கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தினுடைய வெள்ள நிலவரம் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் மேற்படி விடயம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் ஜனாதிபதியின் செயலாளர், அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்ட செயலாளர் ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கையினை துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

பல்வேறு நெருக்கடிகள், இடர்பாடுகளுக்கு மத்தியிலும் மீட்பு பணியில் ஈடுபட்ட அனைத்து தரப்பினருக்கும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் என்ற வகையில் நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

இறம்பொடையில் பெரும் துயரம் : 15 பேர் பலி, 50 பேர் காயம், பலர் மாயம்!!

இறம்பொடை பகுதியில் பாரிய மண்சரிவில் சிக்குண்டு இதுவரை 15 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுவதோடு, 50 பேர் வரை காயமடைந்துள்ளதாக கொத்மலை பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொத்மலை, ரம்பதகம அருகே 27 ஆம் திகதி இரவும் நேற்று (28) அதிகாலையும் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் 50 பேர் அந்த இடத்தில் சிக்கிக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த இடத்திற்குச் செல்வதற்கான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னாரில் உயிருக்கு போராடும் 40 பேர் : காப்பாற்ற முடியாத நிலையில் அதிகாரிகள்!!

மன்னார் – மாந்தை, கூராய் கிராமத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள 40 பேரை மீட்க முடியாதுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அந்த கிராமத்தில் உள்ள 6 வீடுகள் மட்டுமே வெளியில் தெரியும் நிலையில் உள்ளதாகவும் அங்கு சிக்கியுள்ள 40 பேரில் 27 பேரின் நிலை மிக மோசமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் இருந்த நிலையில் அனர்த்த நிலையை கருத்திற் கொண்டு அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். வெளியேற்றப்பட்ட மக்கள், கள்ளியடி பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், வெளியேற அறிவுறுத்திய போது 40 பேர் அதனை மறுத்து கிராமத்திலேயே தங்கியதாகவும் அவர்களே தற்போது அனர்த்தத்தில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த 40 பேரையும் மீட்க சென்ற இராணுவ அதிகாரிகளின் படகு கிராமத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் திரும்பி வந்துள்ளது.

அதனை தொடர்ந்து, விமான படையினரின் உதவி நாடப்பட்ட போது அப்பகுதியில் அதிக மேக மூட்டம் காரணமாக மீட்புக்கு ஹெலிகொப்டர்களை அனுப்ப முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அப்பகுதியில் நீரின் மட்டம் குறைவடைந்த பின்னர் 40 பேரையும் மீட்கும் பணி ஆரம்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக மன்னார் அரசாங்க அதிபர் எமது பிராந்திய செய்தியாளருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

மேலும், மன்னார் மாந்தை பகுதியில் வரலாற்றில் இதுவரை பதிவாகாத அளவு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 1118 குடும்பங்களைச் சேர்ந்த 3598 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு!!

வவுனியாவில் ஏற்ப்பட்ட வெள்ளப்பேரிடர் காரணமாக 1118 குடும்பங்களை சேர்ந்த 3598 பேர் இடம்பெயர்ந்த நிலையில் 47இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் 599 குடும்பங்களை சேர்ந்த 1997 பேர்21 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன்,

வவுனியா பிரதேச செயலகபிரிவில் 191 குடும்பங்களை சேர்ந்த 605பேர் 8 முகாம்களிலும், வவுனியா வடக்கில் 172 குடும்பங்களை சேர்ந்த 519 பேர் 10முகாம்களிலும், வவுனியா தெற்கில் 156 குடும்பங்களை சேர்ந்த 477 பேர் 8 முகாம்களிலும், தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான சமைத்த உணவுகள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பிரதேச செயலகம், ஏனைய தனவந்தர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை வெள்ளம் வடியாத தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் அதிகமான மக்கள் தங்களது உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.

இதேவேளை அதிக நீர்வரத்து காரணமாக மாவட்டத்தில் உள்ள 83 குளங்களில் சேதம் ஏற்ப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

இதேவேளை நேற்று மாலையின் பின்னர் வவுனியாவில் மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ளது. இதனால் தடைப்பட்டிருந்த பிரதான வீதிகள் ஊடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

வவுனியா சாந்தசோலை ஏ9 வீதியில் கார் நீரில் அடித்துச் சென்ற நிலையில் காரிலிருந்து இரு சடலங்கள் மீட்பு!!

வவுனியா, சாந்தசோலை ஏ9 வீதியில் நீரில் அடித்துச் சென்ற நிலையில் கார் ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன், அதன் உள்ளே இருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக தெரியவருகையில்,

குறித்த சம்பவமானது ஏ9 வீதி சாந்தசோலை சந்திக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் பற்றி தெரியவருவதாவது, ஏ9 வீதி சாந்தசோலை சந்திக்கு அருகாமையில் கார் ஒன்று அடித்து செல்லப்பட்டுள்ளதை அவதானித்த கிராம மக்கள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த தகவலினை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த இராணுவம் மற்றும் பொலிஸார் கிராம இளைஞர்களுடன் இணைந்து குறித்த காரினை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட காரினை மீடடுள்ளதுடன், காரில் பயணித்த ஆண் மற்றும் பெண் ஒருவர் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.

உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதேவேளை குறித்த வீதியானது சீரற்ற காலநிலையால் வெள்ளநீர் வீதியை மூடி செல்வதன் காரணமாக நேற்று இரவு முதல் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

பாடசாலை ஆரம்பிக்கும் திகதியில் மீண்டும் மாற்றம்!!

2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 16 ஆம் திகதி தொடங்கப்படும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, நிலவும் மோசமான வானிலை காரணமாக, உயர்தரப் பரீட்சை உட்பட அனைத்துப் பரீட்சைகளையும்,

காலவரையின்றி ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே தெரிவித்துள்ளார்.

உயர்தர பரீட்சைகள் காலவரையின்றி ஒத்தி வைப்பு!!

உயர்தரம் உட்பட அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இலங்கையை பாதிக்கும் மோசமான வானிலை காரணமாக, உயர்தரப் பரீட்சை உட்பட அனைத்துப் பரீட்சைகளையும் காலவரையின்றி ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு : தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை மீள ஆரம்பிப்பது குறித்து விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இந்த விசேட கலந்துரையாடல் இன்று மாலை பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலின் முடிவுகள் குறித்து நாளை காலை இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பரீட்சைகளை மீள ஆரம்பிக்கும் திகதிகள் மற்றும் நடைமுறை நடவடிக்கைகள் குறித்தும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகிகள் பாதிப்புகளை குறைக்கும் திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

மேலும், பரீட்சை நடைபெறும் போது சுகாதார மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் இருந்து 700 பயணிகளுடன் வந்த புகையிரதம் பாதிவழியில் இடைநிறுத்தம்!!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி நேற்று (27.11.2025) இயக்கப்பட்ட இரவு நேர அஞ்சல் ரயில் வெள்ளப்பெருக்கு மற்றும் மரங்கள் விழுந்தமையால் அநுராதபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

ரயிலில் சுமார் 700 பயணிகள் இருந்ததாக கூறப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்ட பெரும் இயற்கை பேரிடரால் மக்கள் பெரும் இன்னகளுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில், அரசாங்கம், மீட்பு- நிவாரண பணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு – கிழக்கு உட்பட இலங்கை முழுவதும் செயலிழந்துள்ள தொலைபேசி அழைப்பு மற்றும் இணையம்!!

இலங்கையில் வெள்ளபெருக்கில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொலைபேசி அழைப்புக்கள் செயலிழந்துள்ளன. அதேவேளை, இணைய வசதிகளும் முற்றுமுழுதாக செயலிழந்துள்ளன.

இந்நிலையில், பொதுமக்கள் இது தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைகள், மின்சார துண்டிப்பு, அங்குள்ள இணைய வசதிகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாகவே தொலைபேசிகள் செயலிழந்துள்ளன.

இந்த விடயங்கள் தொடர்பில் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் மூழ்கிய வீடு : மாடியில் சிக்கிக்கொண்ட குடும்பம் மீட்பு!!

தெதுறு ஓயா பெருக்கெடுத்தமையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளனர். விமானப் படையின் ஹெலிக்கொப்டர் மூலம் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

மஹவ எல்ல பிரதேசத்தில் தங்களது வீடு வெள்ளத்தால் சூழப்பட்டமையினால் இரண்டு மாடி வீடு ஒன்றின் மேல் தளத்தில் சிக்கியிருந்த அவர்கள் மூவரும்,

இலங்கை விமானப் படையைச் சேர்ந்த பெல்-212 ரக ஹெலிக்கொப்டர் மூலம் மீட்கப்பட்டனர் என விமானப்படை தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டுக்கு பின் இலங்கையை புரட்டிப்போட்ட பேரழிவு!!

தற்போது நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை 2016ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவாகிய மிக மோசமான வானிலையென இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

திணைக்களம் தெரிவித்துள்ள தகவலின் படி, கடுமையான கனமழை, இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் வெள்ளம் பல பகுதிகளில் தொடர்ந்து பதிவாகி வருகிறது. இதனால் வீடுகள் சேதமடைதல், மண்சரிவு, வெள்ளப்பெருக்கு மற்றும் வீதிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளன என் குறிப்பிடப்பட்டுள்ளது .

இதேவேளை, மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், அதிகாரிகள் வழங்கும் எச்சரிக்கைகளை பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம், அடுத்தடுத்து வானிலை முன்னறிவிப்புகளை தொடர்ந்து வழங்கி, பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.