இலங்கை நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களை பெல் 212 ரக ஹெலிக்கொப்டர் மூலம் இலங்கை விமானப்படையினர் மீட்டு வருகின்றனர்.
அந்த வகையில், அனுராதபுரத்தின் அவுக்கன பகுதியில் கலாவெவ வெள்ளப்பெருக்க்கில் நேற்று (27.11.2025) மாலை முதல் தென்னை மரத்தின் மேல் சிக்கித் தவித்த ஒருவர் இன்று (28.11.2025) மீட்கப்பட்டுள்ளார்.
ஹிங்குராக்கொட விமானப்படைத் தளத்தின் 7வது படைப்பிரிவைச் சேர்ந்த பெல் 212 ஹெலிக்கொப்டர் மூலம் விமானப்படையின் மீட்பு குழுவினர் மீட்டனர். மேலும் மன்னம்பிட்டிய பாலத்தில் சிக்கி 06 பேரையும் மீட்பதற்கான நடவடிக்கையும் மேற்கொண்டனர்.
அனுராதபுரம் – புத்தளம் சாலையில் உள்ள கலாவெவ பாலத்தில் சுமார் 70 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சிக்கிக் கொண்டுள்ளது.
சுமார் ஒன்றரை மணி நேரமாக பேருந்து அந்த இடத்தில் தேங்கிக் கிடப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இன்று (28.11.2025) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறியதாவது: “அனுராதபுரத்தில் நடந்த சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பேருந்து மேலும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது, ஆனால் அது மேலும் பயணித்து சிக்கிக் கொண்டது. தற்போது 60 பேர் அதில் பயணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு இராணுவக் குழுக்கள் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன, மேலும் ஒரு ஹெலிகொப்டரும் கோரப்படும்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்குத் தென்கிழக்காக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து மட்டக்களப்புக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 210 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டிருக்கின்றது.
அது வடக்கு – வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் பலத்த மழை நிலைமையும் கடும் காற்று நிலைமையும் அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் பல பகுதிகளில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் 200 மி.மீ இற்கும் அதிகமான மிக பலத்த மழையும், திருகோணமலை, பதுளை, மட்டக்களப்பு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 150 மி.மீ இற்கும் அதிகமான மிக பலத்த மழையும் பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் மணிக்கு 60-70 கி.மீ வேகத்தில் மிகவும் பலத்த காற்றும், இடைக்கிடையே மணிக்கு 80-90 கி.மீ வேகத்தில் மிக பலத்த காற்றும் வீசக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாடாளவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இடர்காப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதுவரையான காலப்பகுதியில் 56 பேர் உயிரிழந்த நிலையில் 14 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 21 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்றுடன் தொடரும் அடைமழை காரணமாக மேலும் உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. பாரிய வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்றும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவுக்கு அமைய ஹெலிகொப்டர் பிரிவு ஒன்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாடாளவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் காரணமாக 12,313 குடும்பங்களைச் சேர்ந்த 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு இருபதுக்கு 20 ஓவர் தொடரின் முதல் சுற்றின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 6 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிப்பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் கமில் மிஷார அதிகபட்சமாக 76 ஓட்டங்களையும், குஷால் மெண்டிஸ் 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் அப்ரார் அகமட் 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் 185 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணிக்கு 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில் அணியின் தலைவர் சல்மானை ஆகா ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 63 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் துஸ்மந்த சமீர 04 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதன்படி இலங்கை, பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தெரிவான நிலையில், இலங்கை அணி இன்றைய வெற்றியுடன் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. இந்த போட்டி நாளை 29ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இலங்கை முழுவதும் பெய்த கனமழையால் சுமார் 600,000 ஏக்கர் நெல் மற்றும் காய்கறி பயிர்கள் நாசமாகியுள்ளதாக தேசிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அனுராதா தென்னக்கோன் எச்சரித்துள்ளார்.
இதனால் பண்டிகைக் காலத்தில் காய்கறி பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு ஏற்படும் என்ற கவலை எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நுவரெலியா மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நெல் மற்றும் பிற உணவுப் பயிர்கள் மோசமாக சேதமடைந்துள்ளதாகவும், நுவரெலியா மற்றும் பதுளையில் காய்கறி பயிர்களும் குறிப்பிடத்தக்க இழப்பைச் சந்தித்துள்ளதாகவும் கூறினார்.
மீட்பு நடவடிக்கைகள் விரைவாக செயல்படுத்தப்படாவிட்டால், வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் விரிவான பயிர் அழிவு குறிப்பிடத்தக்க விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச ஊழியர்களுக்கும் நாளை (28.11.2025) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, அத்தியாவசிய சேவைகள் தவிர ஏனைய அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் நாளை விசேட விடுமுறை அளிக்கப்படும் என்று பொது நிர்வாக அமைச்சகம் அறிவித்துள்ளது.
அத்தோடு, தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதையும் இடையூறுகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் அவசரகால மீட்புப் பிரிவுகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் வழமை போல் தொடர்ந்து செயற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் தென்கிழக்கில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் (பிற்பகல் 02.00) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அனைத்து மாவட்டங்கள் மற்றும் சுற்றியுள்ள கடல் பகுதிகளை உள்ளடக்கிய உயர் எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
அடுத்த சில நாட்களுக்கு பலத்த மழை மற்றும் பலத்த காற்று தொடரும் என்று திணைக்களம் எச்சரித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடைவிடாத மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் மழை வடக்கு, வட-மத்திய, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளில் 200 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும்.
சபரகமுவ மற்றும் மேற்கு மாகாணங்கள், பதுளை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 150 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும். மற்ற பகுதிகளில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும்.
காற்றின் நிலைமைகள் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மணிக்கு 60-70 கி.மீ வேகத்தில், மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
குறிப்பாக மலைப்பாங்கான மற்றும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகள், ஆற்றுப் படுகைகள் மற்றும் கடலோர தாழ்வான பகுதிகளில் சேதங்களைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தப்பட்டுள்ளது.
வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும்மழை காரணமாக வவுனியாவின் அனைத்து பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் நேற்று முதல் வரலாறு காணாத மழை பெய்துவருகின்றது. குறித்த மழை காரணமாக வவுனியா நகரப்பகுதி முற்றாக வெள்ளத்தில் மூழ்க்கியதுடன், வியாபார நிலையங்கள் மற்றும் வீடுகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது.
குறிப்பாக வைரவபுளியங்குளம், கொறவப்பொத்தான வீதி, கண்டிவீதி, மில் வீதி, பூங்கா வீதி, உட்பட பல பிரதான வீதிகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.
அதேவேளை மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளதுடன், வீடுகளுக்குள்ளுக்கும் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது. இதனால் மக்கள் இடம்பெயரவேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது.
குறிப்பாக வவுனியாபிரதேச செயலகம், கடவுச்சீட்டு அலுவலகம், மாவட்ட செயலகங்களுக்குள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளமையால் பல்வேறு சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை மாவட்டத்தில் உள்ள 80 வீதத்திற்கும் அதிகமான குளங்கள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளதுடன், மேலதிக நீர் வெளியேறி வருகின்றது. இதுவரை மூன்றிற்கும் மேற்ப்பட்ட குளங்களில் உடைவு ஏற்ப்பட்டுள்ளதுடன் அது உடனடியாக சீர் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் பெரிய குளமான பாவற்குளத்தின் நீர்மட்டமானது அதன் கொள்ளவான 19.4 அடியை தாண்டி 20.3 அடியை அடைந்துள்ளதால், அதன் நான்கு வான் கதவுகளும் 2 அடிக்கு திறக்கப்பட்டுள்ளன. அத்துடன், தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் மேலும் வான் கதவுகள் ஊடாக நீர்பாயும் வீதத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
இதனால் பாவற்குளத்தின் நீர் வழிந்தோடும் பகுதிகளில் உள்ள கந்தசாமி நகர், கிறிஸ்தவகுளம், பாவற்குளம் படிவம் 5,6,4,2,1, பீடியாபாமின் வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாகவும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்குமாறு கோரப்பட்டுள்ளதுடன், நெளுக்குளம் – நேரியகுளம் வீதி ஊடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
அதிகரித்த மழைவீழ்ச்சியால் 50 சதவீதத்திற்கும் அதிகமான நெற்பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதுடன் மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.
இதேவேளை இன்று மாலை 4 மணிவரை 328 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
கடும் மழைதொடர்ச்சியாக பெய்துவரும் நிலையில் வெள்ளப்பாதிப்புக்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதுடன் பாரிய இடப்பெயர்வு ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத விமானங்களை திருப்பியனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் கடுமையான வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, விமானங்களை திருவனந்தபுரம் மற்றும் கொச்சினுக்கு திருப்பி விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 8 ஆம் திகதி தொடங்கப்படாது என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா இதனை தெரிவித்துள்ளார்.
நிலவும் மோசமான வானிலை காரணமாக, இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சை பாடங்கள் டிசம்பர் 7, 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக டிசம்பர் 10 ஆம் திகதி பாடசாலையைதொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கைக்கு தென்கிழக்கே உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை, நாளை மறுதினம் (29.11.2025) ஒரு புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இலங்கைக்கு தென்கிழக்கே உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை தற்பொழுது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெற்று வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, தற்பொழுது சியாம்பலாண்டுவவுக்கு அண்மையில் மையம் கொண்டு காணப்படுகின்றது.
இது நாளை மறுதினம்(29.11.2025) ஒரு புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதனை நாளையே உறுதிப்படுத்த முடியும்.
மேலும் வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 01.12.2025 அன்று இலங்கையை விட்டு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாடு முழுவதும் கனமழை தொடக்கம் மிக கனமழை பெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இன்று மிக கனமழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. கிழக்கு மாகாணத்துக்கு கன மழை நாளை மறுதினம் வரை(29.11.2025) தொடர்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. கிழக்கு மாகாணத்திற்கு இன்று காற்று மணிக்கு 40-60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு இன்று மாலை அல்லது இரவு மழை கிடைக்க தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதிலும் பல குளங்கள் வான் பாயத் தொடங்கியுள்ளன. ஆறுகள் அவற்றின் கொள்ளளவைத் தாண்டி பாய்கின்றன. பல இடங்களில் வெள்ளப் பெருக்கும் மண்சரிவுகளும் இடம்பெறுகின்றன.
இந்த நிலைமை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது. வடக்கு மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தின் வெள்ள நிலைமைகளுக்கு காரணமாக அமைகின்ற மல்வத்து ஓயா அதிக கொள்ளளவோடு பாய்கின்றது.
ஆகவே வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் எதிர்வரும் 30.11.2025 வரை அவதானமாக இருப்பது அவசியம்.
கடந்த 24 மணித்தியாலத்தில் ( 26.11.2025 காலை 10. 00 மணி முதல் இன்று 27.11.2025 காலை 10.00 மணி வரை) வடக்கு(யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி தவிர்த்து)மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மிகக்கனமழை கிடைத்துள்ளது.
நாட்டிலேயே அதிகமாக மட்டக்களப்பு உறுகாமம் பகுதியில் 302 மி.மீ. மழை கிடைத்துள்ளது.
ஏற்கனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள கடல் நீரேரிகளின் கொள்ளளவு நிறைவு பெற்று அவற்றினுடைய முகத்துவாரப் பகுதிகள் வெட்டிவிடப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மிக கன மழையும் மிக வேகமான காற்று வீசுகையும் எதிர்வரும் 30.11.2025 வரை நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே மக்கள் இந்த நிலைமைகளை கருத்தில் கொண்டு போதுமான முன்னெச்சரிக்கைகள் மற்றும் தயார்படுத்தல்களை மேற்கொள்வதன் மூலம் அவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வானிலை ஆய்வு மையம் வெளியிடும் அறிவிப்புகளுக்கு கவனம் செலுத்துமாறு இன்று நண்பகல் நாட்டு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த 12 மணி நேரத்தில் ஒரு சூறாவளி புயலாக வலுவடைய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் தாக்கம் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு பலத்த மழை மற்றும் காற்று வீசும் சாத்தியம் உள்ளதாகவும் இது தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று மதியம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இலங்கையின் தென்கிழக்கில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கே 120 கி.மீ தொலைவில், அட்சரேகை 6.7°வடக்கு மற்றும் தீர்க்கரேகை 82.1°கி தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் ஒரு சூறாவளி புயலாக வலுவடைந்து வடமேற்கு நோக்கி வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது.
இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு நாட்டில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள மேலும் அறிவிப்புகளுக்கு கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 10 மி.மீ வரை மழை பெய்யும்.
சபரகமுவ மற்றும் மேற்கு மாகாணங்களிலும், பதுளை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 200 மி.மீ க்கும் அதிகமான கனமழை மற்றும் 150 மி.மீ க்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.
இலங்கையின் பிற பகுதிகளில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும். தீவின் பல பகுதிகளில் மணிக்கு (60-70) கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும், சில நேரங்களில் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
கனமழை மற்றும் பலத்த காற்றினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டி, கதிர்லேன் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் நேற்று புதன்கிழமை (26.11.2025) பிற்பகல் வீட்டின் மதில் சுவர் இடிந்து விழுந்துள்ளது.
வீட்டின் பின்புறத்தில் இருந்த பெரிய மதில் சுவரே திடீரென நேரடியாக வீட்டு கூரையின் மீது விழுந்துள்ளது. இதனால் படுக்கையறை முற்றிலும் சேதமடைந்துள்ளது. மதில்சுவர் இடிந்து விழுந்தமையினால் வீட்டின் பிற சுவர்களும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் இடம்பெறவில்லை. ஒருவர் லேசான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, வீட்டு உபகரணங்கள் மற்றும் உடமைகள் சேதமடைந்துள்ளன.
அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். கார் ஒன்று தடம்புரண்டு வெள்ள நீர் நிரம்பிய கால்வாய் ஒன்றில் மூழ்கியதால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
இதன் போதுஅனர்த்த முகாமைத்துவத்தில் ஈடுபடும் குழுவினர் சாய்ந்தமருது பிரதேச செயலக அனர்த்த செயலணி பொலிஸார் இணைந்து மேற்கொண்ட மீட்புப்பணியின் போது கால்வாயில் வீழ்ந்த கார் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் காரில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் மீட்கப்பட்டு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், குறித்த மூவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (26) முதல் கடும் காற்றுடன் கூடிய மழையுடனான வானிலை தொடர்கின்றது. இந்நிலையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன.
இன்று வியாழக்கிழமை (27) பாராளுமன்றில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகையில், இதுவரை 170 மண்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், 26 பேர் வரை அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட தற்போதைய அறிக்கையின்படி, நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிப்படைந்த மாவட்டங்கள் : 17
பாதிப்படைந்த பிரதேச செயலகப் பிரிவுகள் : 79
பாதிப்படைந்த குடும்பங்கள் : 1,158
பாதிப்படைந்த நபர்கள் : 4,008
குறிப்பாக பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ளப் பாதிப்புகள் காரணமாக,
உயிரிழப்புகள் : 18 (அனைத்தும் பதுளையில்)
காயமடைந்தோர் : 10
காணாமல் போனோர் தொடர்பான தகவல் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
சீரற்ற வானிலை காரணமாக வீடுகளும் பெருமளவு சேதமடைந்துள்ளன:
முழுமையாக சேதமடைந்த வீடுகள் : 3
பகுதியளவில் சேதமடைந்த வீடுகள் : 381
பெரும்பாலான குடும்பங்கள் தற்காலிக பாதுகாப்பு முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்:
பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ளோர் : 131
உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளோர் : 472
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், வானிலை மேலும் மோசமடையும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கவும், தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முப்படையினர் மற்றும் பிரதேச நிர்வாக அதிகாரிகளால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.