விபத்தில் சிக்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு!!

அநுராதபுரத்தில் ஹொரவபொத்தனை – கபுகொல்லேவ வீதியின் கட்டுவரகொல்லேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

கபுகொல்லேவயிலிருந்து ஹொரவபொத்தனை நோக்கி பயணித்த ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் எதிர் திசையில் பயணித்த பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் ஹொரவபொத்தனை , கட்டுவரகொல்லேவ மற்றும் நெலுகொல்லேவ பகுதிகளைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடைய இளைஞர்கள் ஆவர்.

மோட்டார் சைக்கிளின் அதிக வேகமே விபத்துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பாக பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரவபொத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து ஒட்டுசுட்டானில் விபத்து!!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானிலிருந்து ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வவுனியா நோக்கி பயணித்த பஸ் இன்று புதன்கிழமை (01) அதிகாலை ஒட்டுசுட்டான் சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஒட்டுசுட்டான் சந்திப்பகுதியின் நடுவே அமைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பத்துடன் மோதியே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் பஸ்ஸில் பயணித்த ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் சிலர் விபத்தில் காயங்களுக்கும்.

விபத்தில் காயமடைந்தவர்கள் ஒட்டுசுட்டான் பிரதேச வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன்!!

கண்டி, கடுகண்ணாவையில் உள்ள ஊரபொல சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களை ஏற்றிச் சென்ற லொரி மோதியதில் பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து கடந்த 28 ஆம் திகதி இரவு நடந்ததாக கடுகண்ணாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அரநாயக்க பகுதியை சேர்ந்த 24 வயதான திவங்க பியதிஸ்ஸ எனவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடத்தில் மூன்றாம் ஆண்டு மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் தனது மோட்டார் சைக்கிளில் பல்கலைக்கழகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, ​​கொழும்பு நோக்கிச் சென்ற வாகனங்கள் ஏற்றிச் சென்ற லொரியுடன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பாக கடுகண்ணாவ பொலிஸார் வாகனங்களை ஏற்றிச் சென்ற லொரியின் 24 வயது ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பல்கலைக்கழக மாணவரின் உடல் பேராதனை போதனா மருத்துவமனையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டையிழந்த கார் மின் கம்பத்துடன் மோதி விபத்து!!

மட்டக்களப்பில் களுவாஞ்சிகுடியில் கட்டுப்பாட்டையிழந்த கார் வீதியின் அருகிலிருந்த மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு பகுதியிலிருந்து கல்முனை நோக்கி மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியூடாக பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி வீதியோரமிருந்த மின்சாரக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து நடைபெற்ற போது காரில் இருவர் பயணித்துள்ள நிலையில் தெய்வாதீனமாக இருவருக்கும் எவ்வித காயம் ஏற்றபடவில்லை. எனினும் காரின் முன் பகுதி சேதமடைந்துள்ளது. மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!!

நாட்டில் சில எரிபொருட்களின் விலைகள் இன்று (30.09.2025) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் அடிப்படையில் இந்த விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, லங்கா வௌ்ளை டீசல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 277 ரூபாய் ஆகும். அதேபோல், ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 335 ரூபாவாகும்.

மேலும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 180 ரூபாவாகும்.

இதேவேளை, ஒக்டேன் 92 ரக பெற்றோல் மற்றும் லங்கா சூப்பர் டீசலின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்தில் நடைபெறவுள்ள Miss Grand International – 2025 அழகிப் போட்டியில் பங்குபற்றும் இலங்கைப் பெண்!!

தாய்லாந்தில் நடைபெறவுள்ள 12வது Miss Grand International – 2025 அழகிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி திஷானி பெரேரா என்ற பெண் ஒருவர் பங்குபற்றவுள்ளார்.

இந்த அழகிப் போட்டியில் பங்குபற்றுவதற்காக திஷானி பெரேரா என்ற பெண் இன்று திங்கட்கிழமை (29.09.2025) அதிகாலை 1:30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து நோக்கி புறப்பட்டுள்ளார்.

இந்த அழகிப் போட்டியில் 100 இற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த அழகிப் போட்டின் சுற்றுக்கள் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்தில் செப்டம்பர் 30 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 18 வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்தில் சிக்கி பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு!!

கடுகண்ணாவை – கொழும்பு பிரதான வீதியில் ஊராபொல சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கடுகண்ணாவை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (28.09.2025) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்று வந்த 24 வயதுடைய மாணவன் ஆவார்.

இந்த பல்கலைக்கழக மாணவன் பேராதனை பல்கலைக்கழகத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருக்கும் போது பாரவூர்தியில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து 25 வயதுடைய பாரவூர்தியின் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுகண்ணாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னாரில் சிதறிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்!!

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்த நிலையில் நேற்று (29.09.2025)சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர் நீர்கொழும்பைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் என தெரிய வந்துள்ளது.

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று காலை பயணித்த குறித்த புகையிரதம் காலை சௌத் பார் புகையிரத நிலையத்தில் தரித்து நின்று மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கி பயணித்துள்ளது.

இதன் போது சௌத்பார் -தள்ளாடி புகையிரத வீதி, இரட்டை கண் பாலத்திற்கு அருகில் ரயிலில் மோதி உடல் பாகங்கள் சிதறிய நிலையில் குறித்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டனர்.மீட்கப்பட்ட சடலம் மன்னார் பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மன்னார் வைத்தியசாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தை உலுக்கிய துயரம் : அலட்சியத்தால் துடிதுடித்து பலியான 5 வயதுச் சிறுமி!!

யாழ்ப்பாணம் – கேரதீவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒரு மோட்டார் சைக்கிளில் நால்வர் பயணித்த நிலையில் நிலைதடுமாறி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதில், சிறுமி ஒருவர் உயிரிழந்ததுடன் ஏனைய மூவரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

தென்மராட்சி – மந்துவிலைச் சேர்ந்த எஸ்.தனுஷ்கா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் ஆசிரியர் ஒருவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் ஆசிரியர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். கரவெட்டி மத்தி, கரவெட்டி பகுதியைச் சேர்ந்த அ.சயேந்திரன் (வயது 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த ஆசிரியர் குருநகர் பகுதியில் வாடகைக்கு அறை ஒன்றை எடுத்து தங்கியுள்ளார். இந்த நிலையில் அவரது உறவினர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு (27.09) அங்கு சென்றவேளை குறித்த ஆசிரியர் உயிரிழந்து காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

பாதிக்கப்பட்டோரை நேரில் பார்க்க பாதுகாப்பு கோரும் விஜய்!!

கரூரில் இடம்பெற்ற தவெக கட்சியின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை நேரில் காண செல்வதற்காக அக்கட்சியின் தலைவர் விஜய் பாதுகாப்பு கோரியுள்ளார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களையும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தையும் சந்தித்து ஆறுதல் அளிப்பதற்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து தருமாறு தவெக கோரியுள்ளது.

மேலும், விஜய் குறித்த இடங்களுக்கு சென்றால் மீண்டும் மக்கள் கூட்டம் கூடும் வாய்ப்பு உள்ளது எனவும் அதன் காரணமாக இந்த கோரிக்கை முன்வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் பாதுகாப்பு அச்சுறுத்தல் கருதியும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தி தருமாறு தவெக மனு தாக்கல் செய்யவுள்ளது.

வெளிநாடு ஒன்றில் சிக்கி தவிக்கும் 300 இலங்கை பெண்கள்!!

மத்திய கிழக்கு நாடான குவைத்துக்கு சென்று சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்களை மீண்டும் அழைத்து வர வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கவனம் செலுத்தியுள்ளது.

குவைத்தில் பல்வேறு காரணங்களுக்காக செஞ்சிலுவைச் சங்கத்தால் நடத்தப்படும் தனியார் நிறுவனத்தில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தங்களை உடனடியாக விடுவித்து இலங்கைக்கு அழைத்துச் செல்லுமாறு வெளியிட்டுள்ள காணொளி சமூக ஊடகங்களில் கவனத்திற்குள்ளாகியுள்ளதாக பணியகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமது அவல நிலை தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹேரத் கவனம் செலுத்த வேண்டும் என காணொளி வாயிலாக குறித்த பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், இலங்கை வெளியுறவு அமைச்சு அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.

ஆற்றிற்கு அருகிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை!!

ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான பெண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

மீன்பிடிக்க சென்ற ஒருவரால் கொடுக்கப்பட்ட தகலுக்கமைய குழந்தை மீட்கப்பட்டு ஒலுவில் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தற்பொழுது குழந்தை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நேற்று (28.09) அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் இவ்வாறு குழந்தை மீட்கப்பட்ட குழந்தை ஆரோக்கியமான நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையை பொலிஸாரின் ஊடாக நீதிமன்றில் பாரப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

விஜயின் பேரணியில் நடந்த துயரம் : பலி எண்ணிக்கை அதிகரிப்பு!!

கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை தவெக பேரணி நடந்த இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதன் காரணமாக பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன் 40 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு நபர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவத்தில் 10 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்றுமுன் கைது!!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுன கைது செய்யப்பட்டுள்ளார். இன்றையதினம்(29.09.2025) கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக சென்ற நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு : நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பொலிஸாருக்கு இடையூறு விளைவித்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று(29.09.2025) அழைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அங்கிருந்த ஊடகவியலாளர்களுடனும் அர்ச்சுனா முரண்பட்டுள்ளார்.

முன்னதாக நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கோட்டை நீதவான் கடந்த 25ஆம் திகதி உத்தரவிட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் மிகவும் பரபரப்பான வீதியான கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக காரை நிறுத்தியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை போக்குவரத்து பொலிஸார் கடந்த 22ஆம் திகதி விசாரித்தனர்.

இதன்போது, காரை குறித்த இடத்தில் ஏன் நிறுத்தினீர்கள் என பொலிஸார் வினவியதற்கு “காரை இங்கே நிறுத்தாமல், உங்கள் தலையிலா நிறுத்துவது” என அவமரியாதையாக பொலிஸ் அதிகாரியிடம் நடந்து கொண்டார்.

இந்நிலையில் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிகாலையில் இரு தனியார் பேருந்துகள் மோதி விபத்து!!

இன்று (27) அதிகாலை தனியார் பேரூந்துகள் இரண்டு பூகொடை-தொம்பே வீதியில் மோதி விபத்திக்கு உள்ளாகி உள்ளன. தனியார் பயணிகள் பேரூந்துகள் இரண்டும் தொம்பே பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியுள்ளன.

விபத்தில் இரு பேருந்துகளின் ஓட்டுநர்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதோடு விபத்தில் சிக்கிய பேரூந்துகளின் முன்பக்கங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. எனினும் பேருந்துகளில் பயணித்த பயணிகளின் தொடர்பில் தகவல் எதுவும் வெளியாகவில்லை.