வேன் குடைசாய்ந்து விபத்து : பயணிகள் காயம்!!

கண்டி, தெல்தோட்டை பிரதேசத்தில் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் வேனில் பயணித்தவர்கள் காயங்களுக்கு உள்ளானதாக கலஹா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து தெல்தோட்டை கிரேட்வெளி பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (26.11.2025) இடம்பெற்றுள்ளது.

கண்டியில் இருந்து தெல்தோட்டை நோக்கிப் பயணித்தபோதே வேன் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.

 

தங்க நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி : பவுண் ஒன்றின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 1000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (26.11.2025) இந்த விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 337,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 310,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 38,750 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கையில் நெகிழ்ச்சி செயல் : மாணவிக்காக ஒன்றுகூடிய மக்கள் – சினிமா பாணியில் நடந்த சம்பவம்!!

குருநாகல் மாவட்டத்தின் அலவ்வ ராகுல மகா வித்தியாலத்தில் நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சை நிலையத்திற்கு பரீட்சை எழுத சென்ற மாணவி தற்செயலாக வேறொரு ரயிலில் ஏறியதால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த மாணவியை, பரீட்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கு ரயில்வே அதிகாரிகள் விரைந்து செயற்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் பதிவாகி உள்ளது.

முதல் முறையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 19 வயது மாணவி, அலவ்வ செல்லும் நோக்கத்துடன் மீரிகம ரயில் நிலையத்திலிருந்து ரயிலில் ஏறியுள்ளார்.

எனினும், சனிக்கிழமை காலை கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியதால், ரயில் அலவ்வ ரயில் நிலையத்தில் நிற்காமல் பயணித்துள்ளது.

இதனையடுத்து தவறான ரயிலில் ஏறியமை குறித்து மாணவி அதிர்ச்சி அடைந்து அழுதுள்ளார்.

இதன் போது குறித்த ரயிலில் பயணித்த விரிவுரையாளர் சுரஞ்சித் ரத்னபால, மாணவியை சமாதானம் செய்ததுடன், பரீட்சை நிலையத்திற்கு அனுப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.

ரயில் சிக்னலில் நிறுத்தப்படும் போது இறங்கி முச்சக்கர வண்டியில் பரீட்சை நிலையத்திற்கு செல்லுமாறும் அதற்கான நிதியுதவி தருவதாக ரயிலில் பயணித்த பயணிகள் தெரிவித்துள்ளனர்.

மனிதாபிமான செயல்

எனினும் அங்கிருந்து வயல்வெளிகளால் சென்று முச்சக்கர வண்டியை பிடிக்க கால அவகாசம் எடுக்கும் என்பதால், மாணவி மேலும் கலக்கமடைந்துள்ளார்.

விரைந்து செயற்பட்ட விரிவுரையாளர் சுரஞ்சித், ரயில்வே கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் தனது பல்கலைக்கழக நண்பரான சஜித் விக்ரமசிங்கவுடன் தொடர்பு கொண்டு நிலைமையை தெளிவுபடுத்தியுள்ளார்.

மனிதாபிமானத்தை மனதில் கொண்டு தனது கடமையை மீறி செயல்பட்ட சஜித் விக்ரமசிங்க, உடனடியாக பொல்கஹவெல நிலைய அதிபரை அழைத்து கண்டியிலிருந்து கொழும்புக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை பொல்கஹவெலவில் நிறுத்த ஏற்பாடு செய்தார்.

அதற்கமைய, மாணவி சென்ற ரயில் பொல்கஹவெலவை அடைந்தவுடன், நிறுத்தப்பட்டிருந்த மற்ற ரயிலில் அவரை ஏற்றி அலவ்வவிற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

குறித்த மாணவி அலவ்வவில் இறங்கியதும் முச்சக்கர வண்டியின் மூலம் உரிய பரீட்சை நிலையத்திற்கு செல்வதற்கான ஒழுங்குகளை, ரயில்வே பாதுகாப்பு அதிகாரி நிமல் ரூபசிங்க மேற்கொண்டிருந்தார்.

காதலன் உயிரிழந்ததாக வதந்தி : உண்மை என்று கதறிய மாணவி எடுத்த விபரீத முடிவு!!

காதலன் மரணமடைந்து விட்டதாக வதந்தி பரவிய நிலையில், அதனை உண்மை செய்தி என்று நம்பி கதறியழுது கொண்டிருந்த பள்ளி மாணவி, மன அழுத்தத்தில் கிராம தலைவர் அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் இருவேறு சமூகங்களைச் சேர்ந்த தீபான்ஷு மற்றும் 15 வயது ஜோயா கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

குடும்பங்களின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் உறவைத் தொடர்ந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தீபான்ஷு தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார்.

இந்தச் செய்தி ஜோயாவுக்கு சென்ற போதும், அவர் உயிரிழந்துவிட்டதாக தவறான தகவல் பரப்பப்பட்டது.

காதலன் மரணமடைந்தார் என்ற நம்பிக்கையில் அதிர்ச்சி அடைந்த ஜோயா, தாங்க முடியாத துயரத்தில் பெண் கிராமத் தலைவர் அலுவலகத்திலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

ஆனால் உண்மையில் தீபான்ஷு உயிருடன் இருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது பின்னர் தெரியவந்தது. தவறான தகவல் காரணமாக சிறுமி உயிரிழந்த இந்த நிகழ்வு, மீரட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு சமூகத்தினர் மத்தியில் பதற்றம் அதிகரித்த நிலையில், நிலைமை கட்டுக்குள் வைக்க கூடுதல் பாதுகாப்பு படைகள் நியமிக்கப்பட்டுள்ளன.

வீட்டுப்பாடம் செய்யாத 4 வயது மாணவனை மரத்தில் தொங்க விட்ட ஆசிரியைகள்!!

சட்டீஸ்கர் மாநிலத்தின் சூரஜ்பூர் மாவட்டத்தில் உள்ள நாராயண்பூர் கிராமத்தில் உள்ள ஹான்ஸ் வாஹினி வித்யா மந்திர் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், LKG பயிலும் 4 வயது மாணவன் வீட்டுப்பாடம் முடிக்காமல் பள்ளிக்கு வந்துள்ளார்.

அந்த பள்ளியில் பணியாற்றும் பெண் ஆசிரியைகளான காஜல் சாஹு மற்றும் அனுராதா தேவாங்கன், மாணவரை மரத்தில் கட்டி தொங்க விட்டுள்ளனர்.

4 வயது மாணவரின் சட்டையில் கயிற்றை கட்டி அவரை மரத்தில் தொங்க விட்ட கொடுஞ்செயலை இளைஞர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்த வீடியோ கல்வித்துறையின் கவனத்துக்கு சென்றுள்ள நிலையில், உடனடியாக அதிகாரி ஒருவர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளார்.

ஆசிரியரின் நடவடிக்கை தவறு என ஒப்புக்கொண்ட அவர், மாவட்ட கல்வி அதிகாரி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வார் என தெரிவித்துள்ளார்.

4 வயது மாணவர் நல்ல உடல்நிலையில் இருந்தாலும், இது குறித்து அவரது பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளிக்க உள்ளனர்.

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய தகவல்!!

வாகன இறக்குமதிகள் எதிர்பார்த்ததை விட அதிகளவில் உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில், 2026 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிகள் சாதாரண நிலைக்கு திரும்பும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த வருட இறுதியில் 582 மில்லியன் அமெரிக்க டொலருக்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 250,000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருமண வீட்டில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் : மணமக்கள் எடுத்த முடிவு!!

இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் ஒரு திருமண வீட்டில் எதிர்பாராத ஒரு விபத்து நிகழ்ந்ததில் மணமகனுக்கும் மணமகளுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

மணமக்கள் திருமணம் தொடர்பான சடங்குகளில் பங்கேற்றிருந்த நிலையில், கையில் பல வண்ணங்களுடைய பலூன்களுடன் மணமகன் நடந்துவர, அவர் அருகே மணமகள் வந்துகொண்டிருந்திருக்கிறார்.

மணமகன் குஷாக்ரா, தன் கையில் ஒரு கொத்து பலூன்களை வைத்திருந்திருக்கிறார். எதிர்பாராதவிதமாக, திடீரென அந்த பலூன்கள் வெடித்துள்ளன.

பலூன்கள் வெடித்துச் சிதறியதில் ஏற்பட்ட தீவிபத்தில் மணமகளான டான்யாவின் முகம் மற்றும் முதுகில் தீக்காயங்கள் ஏற்பட்டதுடன், அவரது ஒருபக்க தலைமுடியும் கருகியுள்ளது.

விடயம் என்னவென்றால், அவர்கள் வைத்திருந்தது ஹைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள். ஹைட்ரஜன் எளிதில் தீப்பிடிக்கும் வாயு ஆகும். யாரோ ஒருவர் மணமக்களுக்குப் பின்னால் பட்டாசுகள் கொளுத்திக்கொண்டிருக்க, தீப்பொறி பட்டு பலூன்கள் வெடித்துள்ளன.

தங்கள் வாழ்வின் மறக்கமுடியாத நாளில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தாலும், அது தங்கள் திருமணத்துக்கு இடையூறாக வரக்கூடாது என முடிவெடுத்த தம்பதியர் திருமணம் செய்துகொண்டு பிறகுதான் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகத்தில் இடுகை ஒன்றை வெளியிட்டுள்ள மணமகள் டான்யா, தீப்பற்றிய முடியை வெட்டி, காயங்களை மறைக்க அடுக்கடுக்காக மேக் அப் போட்டுக்கொண்டுதான் திருமணம் செய்துகொண்டோம் என்கிறார்.

இந்த சம்பவம் மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும் என்பதற்காகவே அந்த வீடியோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொள்வதாகவும் டான்யா தெரிவித்துள்ளார்.

நடுவானில் பறந்த விமானத்தில் பணத்தை இழந்த தேரர் : அதிரடியாக கைது செய்யப்பட்ட சீனர்கள்!!

விமானத்தில் தேரரின் கையில் இருந்து 4 லட்சத்து 93 ஆயிரத்து 850 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை திருடிய இரண்டு சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி, பேராதெனியாவில் உள்ள விகாரையிலுள்ள தேரர் நேற்று (25) காலை 10.05 மணிக்கு எதிஹாட் ஏர்வேஸ் EY-392 விமானத்தில் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.

குறித்த விமானம் கட்டுநாயக்க நோக்கி பறந்து கொண்டிருந்தபோது, ​​அவர் கழிப்பறைக்கு சென்றுள்ளார்.

இதன்போது அதே விமானத்தில் இருந்த இரண்டு சீன பிரஜைகள் அவரது இருக்கையை நெருங்கி, பையிலிருந்து பணத்தை திருடிவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளனர்.

இதனைடுத்து தேரர் விமான அதிகாரிகளிடம் முறையிட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் இரண்டு சீன பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புது மாப்பிள்ளையின் உயிரைப் பறித்த தென்னை மரம்!!

குருநாகல் கொக்கரெல்ல மேல் வல்போல வீதியில் நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த இளைஞர் மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கொக்கரெல்ல மேல் வல்போல வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த 33 வயதுடைய இளைஞர் மீது தென்னை மரம் விழுந்த நிலையில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மாணவன் வடிக்கானுக்குள் விழுந்ததில் சிறுநீரகம் அகற்றம்!!

காலி – பலப்பிட்டிய கல்வி பிரிவுக்குட்பட்ட கந்தேகொடை மகா வித்தியாலத்தில் உள்ள பாதுகாப்பற்ற வடிக்கானுக்குள் விழுந்ததில் மாணவன் ஒருவனின் சிறுநீரகம் அகற்றப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

வதுகெதர, குருந்துவத்தை பகுதியைச் சேர்ந்த , கந்தேகொடை மகா வித்தியாலத்தின் 6 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவனே இச் சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

குறித்த மாணவன் பாடசாலையில் உள்ள பாதுகாப்பற்ற வடிக்கானுக்குள் கடந்த மாதம் 27 ஆம் திகதியன்று விழுந்து, நோய்வாய்ப்பட்டதில் பலபிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் , அறுவை சிகிச்சை மூலம் மாணவனின் சிறுநீரகத்தை அகற்ற வைத்தியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

டிக்டொக் காதலனால் சிறுமிக்கு நேர்ந்த கதி!!

களுத்துறை, புலத்சிங்கள பிரதேசத்தில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்படும் டிக்டோக் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் கோபாவக்க பிரதேசத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

புலத்சிங்கள, அதுர பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, சமூக ஊடகமான டிக்டொக் மூலம் சந்தேக நபருடன் நட்பை ஏற்படுத்தியதுடன் அது காதல் உறவாக மாறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் தெல்மெல்ல பகுதியில் உள்ள குளியல் தொட்டிக்கு இருவரும் சென்றுள்ளனர். இதன் போது காதலன் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து காதலியான சிறுமியை, சந்தேக நபரான காதலன் தவிர்த்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுமி செய்த முறைப்பாட்டுக்கு அமைய, பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய 3 வர்த்தகர்கள்!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு கோடி 78 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் குறித்த மூன்று சந்தேக நபர்களும் விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்கள் அளுத்கம, யட்டியந்தோட்டை மற்றும் மாவனெல்ல பகுதிகளில் வசிக்கும் மூன்று வணிகர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களின் பொதிகளில் இருந்து 119,000 பிளாட்டினம் வகை சிகரெட்டுகள் அடங்கிய 595 சிகரெட் அட்டைப் பெட்டிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று நபர்களையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது 3 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

யாழில் கொல்லப்பட்ட பிரான்ஸ் இளைஞன் : அம்பாறையில் இருவர் கைது!!

பிரான்ஸ் நாட்டில் இருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த இளைஞன் வெட்டி படுகொலை செய்த குற்றச்சாட்டில் அம்பாறையை சேர்ந்த இரு இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமராட்சி பகுதியை சேர்ந்த ராஜகுலேந்திரன் பிரிந்தன் (வயது 29) என்ற இளைஞன் கடந்த செவ்வாய்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.

வெளிநாட்டிற்கு தப்பி செல்ல ஆயத்தங்கள்

குறித்த சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், சந்தேக நபர்களை அம்பாறை பகுதியில் வைத்து ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட நவீன ரக மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு நபர்களும் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல ஆயத்தங்கள் செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை : மக்களுக்கு எச்சரிக்கை!!

தெற்கு அந்தமான் கடல் பகுதியை அண்மித்துப் உருவாகி வலுப்பெற்று வரும் குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக இன்று முதல் எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென், ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் மழை பெய்யக்கூடும் என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

30ஆம் திகதி வரை வெள்ளப்பெருக்கு அபாயம்

நீர் நிலைகளில் நீர் மட்டம் மிக அதிகமாக இருப்பதால், திடீர் மழையின்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று ( 25) முதல் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வெள்ளப்பெருக்கு அபாயம் நிலவுவதால், நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிடும் முன் கூட்டிய வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்புகளின் மீது அனைத்து

நீர்த்தேக்கங்களின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும், அந்தப் பகுதிகள் வழியாகப் பயணிக்கும் மக்களும் மிகுந்த கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 86 குடும்பங்களைச் சேர்ந்த 297 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

மேலும் யாழ் மாவட்டத்தில் 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது எனவும், நேற்றைய தினம் 99.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது எனவும் அறிவித்துள்ளது.

அனர்த்த அவசர எச்சரிக்கை : நாட்டின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!!

இலங்கையின் தென் மேற்கிலும் தென்கிழக்கிலும் காணப்படும் காற்றுச் சுழற்சிகள் முறையே கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்து நாளையதினம் (26.11.2025) ஒன்றாக இணைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெறவுள்ளதாக யாழ்.

பல்கலைக்கழக புவியியல்துறைத் தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதேவேளை எதிர்வரும் 26.11.2025 முதல் 29.11.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அத்துடன் மேற்கு, தெற்கு, மத்திய, சபரகமுவா, ஊவா, வடமத்திய மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

எதிர்வரும் 26.11.2025 முதல் கிழக்கு தெற்கு, மேற்கு, மத்திய, சபரகமுவா மற்றும் ஊவா மாகாணங்களில் காற்று மணிக்கு 50-70 கி.மீ. வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே இலங்கையின் காலநிலை சார் அனர்த்தமொன்றுடன் தொடர்புடைய அனைத்து திணைக்களங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்வரும் 25.11.2025 முதல் 30.11.2025 வரை மிகப் பெரும் மழை, அதிவேக காற்று வீசுகை, வெள்ளப்பெருக்கு தொடர்பில் உடனடி முன்னாயத்த நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் மக்கள் அனைவரும் பேரனர்த்தம் ஒன்றுக்கு தம்மை முழுமையாக தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தாழ்நிலப் பகுதிகள், ஆற்றங்கரைகள் மற்றும் குளங்களின் வான் பாயும் பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அச்சு, இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் இப்பேரனர்த்தத்துக்கான வாய்ப்பு பற்றியும், அதன் சாத்தியமான பாதிப்புக்கள் பற்றியும்,

அவற்றிலிருந்து எம்மைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் அனைத்து மக்களுக்கும் தகவல்களைப் பரிமாற்ற வேண்டும். இதற்காக உரிய திணைக்களங்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளுதல் அவசியம்.

ஆனால் ஊடகங்கள் வழங்கும் தகவல்கள் மக்களைப் பதட்டத்துக்குள்ளாக்காமல் தயார்ப்படுத்துவதற்கேற்ற வகையில் அமைதல் முக்கியமானது.

காலநிலை சார் அனர்த்தங்கள் முன்கூட்டியே எதிர்வு கூறத்தக்கன. நாம் அந்த எதிர்வு கூறல்களையும் உரிய திணைக்களங்களின் அறிவுறுத்தல்களையும் பின்பற்றினால் எமக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் எம்மைப் பாதுகாக்கலாம்.

நாட்டின் அனைத்து கடற்றொழிலாளர்களும் நாளை முதல் (25.11.2025) எதிர்வரும் 30.11.2025 வரை எக்காரணம் கொண்டும் கடலுக்கு செல்ல வேண்டாம்.

வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களின் விவசாயிகள் எதிர்வரும் 30.11.2025 வரை உரமிடல் மற்றும் கிருமி, களை நாசினி தெளித்தல் போன்ற எந்த விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம்.

நாட்டில் அபாயகரமான வீதிகள் என அடையாளப்படுத்தப்பட்ட வீதிகளைப் பயன்படுத்த வேண்டாம். எதிர்வரும் 27, 28. 11.2025 கிழக்கு மாகாணத்திற்கு மிக மிக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எதிர்வரும் 28, 29ஆம் திகதிகளில் மிக மிக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

எனவே மேற்குறிப்பிட்ட இரண்டு மாகாணங்களினதும், அவற்றில் உள்ளடங்கும் மாவட்டங்களினதும் நிர்வாகங்கள் இது தொடர்பில் போதுமான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்வது சிறந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விபத்தில் கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் உயிரிழப்பு!!

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் நடந்த விபத்தில் ஓட்டமாவடியைச் சேர்ந்த மருத்துவபீட மாணவரொருவர் திங்கட்கிழமை (24) மாலை உயிரிழந்துள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்துக்குச் சென்று திரும்பி வரும் வழியில் குறித்த மாணவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீட நான்காம் வருட மாணவரான 23 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.