பைத்தியங்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாது : அருச்சுனா எம்பிக்கு பதிலடி கொடுத்த பிமல் ரத்நாயக்க!!

பைத்தியங்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாது என அருச்சுனா எம்பிக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நோஸ் கட் செய்த சம்பவம் இன்று நாடாளும்ன்றில் இடம்பெற்றுள்ளது.

எனக்கு பதிலளிக்க நேரத்தை தரவும் இல்லை​என்றால், குழப்பம் விளைவிக்கும் நபர்களை சபையில் இருந்து வெளியேற்றவும் என்றும் பைத்தியங்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாது என்றும் சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (26.09.2025) முன்னதாக கேள்வியெழுப்பிய யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, யாழ். மாவட்டத்தில் செய்த அபிவிருத்தி திட்டங்களின் ஒன்றை கூறுமாறு கேட்டார்.

இதனிடையே அமைச்சின் அறிக்கையை வாசிப்பதற்காக, அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பெயரை, சபாநாயகர் அழைத்தார். அப்போது எதிரணியில் இருந்த சுஜீவ, கேள்விக்கு பதில் இல்லையா? எனக் கேட்டார். எனினும், சுஜீவ உங்களையும் அந்த வாட்டுக்குத்தான் அனுப்ப வேண்டும் என அமைச்சர் பிமல் கூறினார்.

மறுபுறத்தில் இருந்த சுஜீவ, எந்த வாட்டுக்கு என்று கேட்க, பின்னர் கூறுகிறேன் என்றார் பிமல், இதனிடையே எழுந்த அர்ச்சுனா, கேள்விக்கு பதில் இல்லையா? எனக்கேட்டார்.

அதற்கு பதொஇலளித்த சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பைத்தியங்களின் கேள்விக்கு என்னால் பதிலளிக்க முடியாது என்றும், சபையில் குழப்பங்களை ஏற்படுத்தும் நபர்களை உடனடியாக வெளியேற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.

யாழ்ப்பாணம் வெற்றிலை பெட்டி இல்லை : அர்ச்சுனா எம்பி ஆவேசம்!!

சும்மா, ஆ காட்டுறது பே காட்டுறதை யாழ்ப்பாணத்தில் காட்டக் கூடாது. யாழ்ப்பாணம் அவரவ வெற்றிலை பெட்டி அல்ல, என நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்றைய அமர்வின் போது தெரிவித்தார்.

இந்த அரசாங்கத்தால் யாழ்ப்பாணத்தில் செய்த ஒரு அபிவிருத்தி திட்டத்தை கூறுமாறு கேட்ட அவர் யாழ்ப்பாணம் வெற்றிலை பெட்டி அல்ல என்றும் அர்ச்சுனா எம்பி ஆவேசமாக கூறினார்.

யாழ்ப்பாணம் அவரவர் வெற்றிலை பெட்டி அல்ல, வரநேரமும் போரநேரமும் சாப்பிடுறதுக்கு அபிவிருத்தி செய்யப்பட்ட ஒரு வேலையை சொல்லுங்கள்,

மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நடைபெற்றது என்று ஒரு வேலையை கூறுங்கள் என்றும் , அருச்சுனா எம்பி சபையில் கேள்வி எழுப்பினார்.

கொழும்பில் பேருந்து மீது முறிந்து விழுந்த மரம்!!

கொழும்பு – ஒல்கொட் மாவத்தையில் பேருந்து ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்றையதினம் (26.09.2025) காலை இடம்பெற்றுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக இந்த மரம் முறிந்து வீழ்ந்ததாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாரதியின் கவனயீனம் நூலிழையில் உயிர் தப்பிய பெண் பயணி!!

காலி – வக்வெல்ல வீதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பிலான காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

குறித்த விபத்தானது சாரதியின் கவனயீனத்தால் இடம்பெற்றிருந்த நிலையில், விபத்தில் பாதிக்கப்பட்ட பெண் நூலிழையில் உயிர் தப்பிய நிலையையும் காணொளியில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

நாட்டில் தற்போது சாரதிகளுக்கான போக்குவரத்து நடைமுறைகள் குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மக்களின் பாதுகாப்பு நடைமுறைகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

இலங்கையில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வீதி விதி ஒருங்குமுறைகள் தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன.

இதில் குறிப்பாக பேருந்து சாரதிகளின் நடைமுறைகள் தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நாட்டில் இடம்பெற்ற பாரிய பேருந்து விபத்துக்களுக்கு சாரதிகளின் கவனயீனமும் காரணமாகியிருந்தன.

இவ்வாறான கவனயீனத்துடன் செயற்படும் பேருந்து சாரதிகள் தொடர்பில் சில முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு, போக்குவரத்து பொலிஸாரால் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இவ்வாறன பின்னணியில் நேற்று காலி – வக்வெல்ல வீதியில் இடம்பெற்ற விபத்து குறித்த காணொளி சமூக ஊடகங்களின் கவனத்தை பெற்றுள்ளது.

குறித்த வீதியில் பயணித்த தனியார் பேருந்தானது ஒரு பெண் இறங்குவதற்கு முன்னர் புறப்பட ஆரம்பித்த நிலையில் அவர் நிலைத்தடுமாறி கீழே விழும் காட்சி காணொளியில்பதிவாகியுள்ளது.

மேலும் மழை காரணமாக வீதியில் நீர் தேங்கி வெள்ள நிலை உருவாகிய நிலையிலேயே குறித்த பெண் நிலைத்தடுமாறி அதில் விழுந்துள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் பெரும் விமர்சனத்துக்குளாளகியுள்ளதுடன் சாரதி தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என சமூக ஆர்வளர்களால் கோரப்பட்டு வருகின்றன.

கடுமையான மழை குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!!

இலங்கையின் சில இடங்களில் இன்று 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழை அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும்.

மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

வடமத்திய மாகாணத்திலும், மாத்தளை, மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், மத்திய, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 – 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பலத்த காற்றினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கொழும்பில் அத்துமீறி வாகனம் நிறுத்திய அர்ச்சுனா : நீதிமன்றின் அதிரடி உத்தரவு!!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பொலிஸாருக்கு இடையூறு விளைவித்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவினை நேற்று, (25.09.2025) கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரகே பிறப்பித்துள்ளார்.

கொழும்பில் மிகவும் பரபரப்பான வீதியான கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக காரை நிறுத்தியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை போக்குவரத்து பொலிஸார் விசாரித்துள்ளனர்.

இதன்போது, காரை குறித்த இடத்தில் ஏன் நிறுத்தினீர்கள் என பொலிஸார் வினவியதற்கு “காரை இங்கே நிறுத்தாமல், உங்கள் தலையிலா நிறுத்துவது” என அவமரியாதையாக பொலிஸ் அதிகாரியிடம் நடந்து கொள்வது காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள மற்றும் பேருந்துகள் நிறுத்தப்படும் குறித்த பகுதியில் வாகனங்களை நிறுத்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அர்ச்சுனா இவ்வாறு செயற்பட்டுள்ளார்.

அச்சந்தர்ப்பத்தில் கடமையில் இருந்த கோட்டை பொலிஸ் அதிகாரி ஒருவரின் கடமைகளில் செல்வாக்கு செலுத்தியதாகக் கூறி, பொலிஸார் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கோட்டை பொலிஸில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக செயற்பட்டுள்ளமை மற்றும் மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தை மீறியமை போன்றவற்றை சுட்டிக்காட்டி கோட்டை பொலிஸார் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஒரு ‘B’ அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.

சம்பவத்தின் திருத்தப்படாத காணொளி காட்சிகளைப் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி ஊடகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு செய்யப்பட்ட கோரிக்கைக்கு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரகே அனுமதி வழங்கியுள்ளார்.

 

வவுனியாவில் வடமாகாண தொழிற்துறை வர்த்தக சந்தை!!

வடக்குமாகாண தொழிற்துறைத் திணைக்களம் மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவை இணைந்து நடாத்தும் வடமாகாண தொழிற்துறை வர்த்தகசந்தை வவுனியா மாநகரசபை மைதானத்தில் இன்று(26.09.2025) இடம்பெற்றது.

நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட வவுனியா மாவட்ட அரச அதிபர் பி.ஏ,சரத்சந்திர நிகழ்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இச்சந்தையில் உள்ளூர் உற்பத்திகள் உட்பட 50ற்கும் மேற்ப்பட்ட விற்பனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ச்சியாக நாளையதினமும் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தொழிற்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.

நிகழ்வில் வடமாகாண மகளீர் விவகார அமைச்சின் செயலாளர் மு.நந்தகோபாலன், வவுனியா மேலதிக அரச அதிபர் நா.கமலதாசன், பிரதேச செயலாளர் இ.பிரதாபன் உட்பட, பலர் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் முதிரைக்குற்றிகளுடன் விபத்திற்குள்ளான வாகனம் : சாரதி மாயம்!!

வவுனியா புதுக்குளம் பகுதிக்கு அருகாமையில் முதிரைக்குற்றிகளை ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்று விபதிற்குள்ளான நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டது. குறித்த சம்பவம் இன்று(26.09.2025) காலை இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…

குறித்த வாகனம் இரணை இலுப்பங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த போது அங்கு கடமையில் இருந்த பொலிசாரால் வழிமறிக்கப்பட்டுள்ளது. எனினும் நிறுத்தாமல் சென்றதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் புதுக்குளத்திற்கு அண்மித்த பகுதியில் விபத்திற்குள்ளான நிலையில் பொலிசாரால் அவ் வாகனம் மீட்கப்பட்டது.
வாகனத்தில் இருந்த 11 முதிரைக்குற்றிகளை பொலிசார் கைப்பற்றியிருந்தனர். வாகனத்தின் சாரதி மாயமாகியுள்ள நிலையில் ஈச்சங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஓடும் பேருந்தில் இளைஞன் செய்த முகம்சுழிக்கும் செயல் : பரிதாபமாக பிரிந்த உயிர்!!

சக பயணியால் தாக்கப்பட்டு பேருந்திலிருந்து கீழே விழுந்த நபரொருவர் பல மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நாரமல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் களுகமுவ, ரத்மல் பொக்குன பகுதியைச் சேர்ந்த 52 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபர் 19 வயதுடைய வேலையற்ற இளைஞர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் 12.11.2024 அன்று நடந்ததாகவும், அன்றைய தினம் நாரம்மலவிலிருந்து குருநாகல் செல்லும் தனியார் பேருந்தில் ஏற்பட்ட வாக்குவாதமே இந்த சம்பவத்திற்கு வழிவகுத்தது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மதுபோதையில் இருந்ததாகவும், பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதன் போது சந்தேகநபர் குறித்த நபரை உதைத்ததாகவும் கூறப்படுகிறது.

தாக்குதலில் பேருந்திலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்ட அவர், பலத்த காயமடைந்து குருநாகல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 18.05.2025 அன்று உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், மூளையில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் மரணம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 22.09.2025 அன்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், சந்தேக நபரை நாளை, 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

2026 இல் கொழும்பு தாமரை கோபுரத்தில் புதிய சாகச விளையாட்டு அறிமுகம்!!

2026ஆம் ஆண்டு கொழும்பு தாமரை கோபுரத்தில் பங்கி ஜம்பிங் (கயிற்றின்மூலம் குதிக்கும் விளையாட்டு) அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இலங்கையின் தாமரை கோபுரம் 2026 ஆம் ஆண்டுக்குள் தெற்காசியாவின் முதல் பங்கி ஜம்ப் ஈர்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒரு கோபுரத்திலிருந்து உலகின் மிக உயரமான பங்கி ஜம்ப் ஆகும். கட்டமைப்பு பொறியியலாளர்களுக்கும் கோபுரத்தின் தொழில்நுட்பக் குழுவிற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் இந்த திட்டம் தற்போது திட்டமிடல் மற்றும் பொறியியல் கட்டத்தில் உள்ளது.

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதையும், கலாச்சாரம், தொழில்நுட்பம், சாகசம் மற்றும் பொழுதுபோக்குக்கான தெற்காசியாவின் முதன்மையான இடமாக தாமரை கோபுரத்தை நிலைநிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டதாக தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் ஷிரந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்போது, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், இந்த திட்டம் விளையாட்டு அமைச்சின் கீழ் அல்ல, வணிக ரீதியானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது சர்வதேச கவனத்தை ஈர்க்கும் என்றும் இலங்கையின் சாகச சுற்றுலாத் துறையை வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காதல் மனைவி விஷம் குடித்து தற்கொலை பரிதவிக்கும் பிள்ளைகள்!!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பொன்னேரி ஊராட்சி, சின்ன கவுண்டனூர் கிராமத்தில் வசித்து வருபவர் அருள்பாண்டி. இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் அம்முவை காதலித்து 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள்.

அருள்பாண்டிக்கும், அம்முவின் நெருங்கிய உறவினர் ஒருவரது மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த குடும்பத்தினர் இருவரையும் கண்டித்துள்ளனர்.

ஆனாலும் அருள் பாண்டி கள்ளத்தொடர்பை விடவில்லை எனத் தெரிகிறது. அருள்பாண்டி, யாருக்கும் தெரியாமல் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அவரை திருமணம் செய்து கொண்டு ரகசியமாக வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

2 நாட்களுக்கு முன் அருள்பாண்டி தனது அவரை வீட்டிற்கு அழைத்து கொண்டு வந்து, தனது மனைவி அம்முவிடம் `இனிமேல் இவர் என்னுடன் தான் வாழ்வார்’ என கூறினாராம். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில், மனவேதனை அடைந்த அம்மு வீட்டில் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தற்கொலைக்கு காரணமான கணவன் அருண்பாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீட்டில் அமர்ந்தே நேரலையில் யாசகம் பெறும் நபர் : நாளொன்றுக்கு 10000 ரூபாய் வருமானம்!!

பெரும்பாலும், கோவில்கள் அல்லது பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் வறுமை காரணமாக சிலர் யாசகம் பெறுவார்கள். மக்களும் தங்களால் இயன்றதை அவர்களுக்கு வழங்குவார்கள்.

பிச்சை எடுக்கும் மக்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில், யாசகம் பெறுவது தடை செய்யப்பட்டு, யாசகம் வழங்கினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இளைஞர் ஒருவர் தனது வீட்டில் அமர்ந்து கொண்டே, யூடியூப் நேரலை மூலம், QR ஸ்கேனர் காட்டி, யாசகம் கேட்கிறார். இந்தியாவின் டிஜிட்டல் பிச்சைக்காரர் என அறியப்படும் கோவிந்த் சூர்யா என்ற நபர், Govind Surya 360 என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.

4.8 லட்சம் சந்தாதாரர்களுடன் அவர் நடத்தி வரும் யூடியூப் சேனலில் 3,800க்கும் அதிகமான வீடியோக்களைப் பதிவேற்றியுள்ளார்.

நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 மணி நேரம் நேரலையில் வரும் அவர், QR ஸ்கேனர் காட்டி தங்களால் முடிந்த பணத்தை அனுப்புமாறு யாசகம் கேட்கிறார். சொந்த வீடு கட்டுவதற்கு பணம் சேகரிப்பதாக தெரிவித்துள்ளார்.

நேரலையை பார்க்கும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள்,1 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை தங்களால் இயன்றதை வழங்குகிறார்கள். நேரலை முடிந்ததும், பணம் அனுப்பியவர்கள் பெயரை குறிப்பிட்டு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிடுகிறார்.

நாள் ஒன்றுக்கு, ரூ.10,000 வரை கூட வருமானம் கிடைத்துள்ளதாக கோவிந்த் சூர்யா தெரிவித்துள்ளார். இதன் பின்னணி குறித்து பேசிய அவர், கொரோனா காலத்தில் 3 ஆண்டுகள் வேலை இல்லாமல் வீட்டில் இருந்ததாகவும், ஆனால் என் வயதான தந்தை மிதிவண்டியில் வேலைக்கு சென்று விட்டு இரவில் வீடு திரும்புவார்.

அவரை பார்க்கும் போதெல்லாம் எனக்கு சங்கடமாக இருந்ததது. இந்த வயதில் அவர் கடுமையாக உழைப்பது வேதனையாக இருந்தது. அதனால் நானும் யாசகம் பெற முடிவெடுத்தேன் என தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் பிச்சைக்காரர் என அவரை விமர்சிக்கும் பலர், உடல் ஆரோக்கியமாக இருக்கும் போது அவர் ஏன் வேலை செய்யாமல் யாசகம் பெறுகிறார் என கேள்வி எழுப்புகின்றனர்.

 

காட்டுக்குச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலஹா தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 70 வயதான முதியவர் ஒருவர் நேற்று (24) காணாமல்போன நிலையில், இன்று (25) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த முதியவர் நேற்றைய தினம் தனது வீட்டிற்குத் தேவையான விறகை தேடுவதற்காக அருகில் உள்ள காட்டுக்குச் சென்றுள்ளார். எனினும், அவர் மாலை வரை வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

முதியவர் வீட்டுக்கு வராத காரணத்தினால் அவரது உறவினர்கள் அவரைத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், இன்று காலை அந்த முதியவர் சடலமாக அருகில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் காணாமல்போன முதியவரே என அவரது உறவினர்கள் உறுதிப்படுத்திக்கொண்டதைத் தொடர்ந்து, சடலம் தொடர்பாக லிந்துலை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சொந்த மகள்களையே சீரழித்த தந்தை : அதிரடி காட்டிய நீதிமன்றம்!!

தனது 7 மற்றும் 8 வயது மகள்களை 2016 ஆண்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு இரு குற்றத்துக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை 4 குற்றத்துக்கு 40 ஆயிரம் தண்டப்பணமும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் இரண்டு இலட்சம் ரூபாவை வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய தந்தை உள நலம் பாதிக்கப்பட்ட தனது ஒரு மகள் உட்பட 7 மற்றும் 8 வயதுடைய இரு மகள்களையும் கடந்த 2016 அக்டோபர் மாதம் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் 4 குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிஸார் வழக்கு பதிவு செய்து சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகள் இடம் பெற்று வந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த நபருக்கு எதிராக 16 வயதுக்கு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 4 குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சியங்கள், சான்று பொருட்கள் மற்றும் சட்ட வைத்தியர் அறிக்கை மூலம் குற்றவாளியாக இனம் காணப்பட்டார்.

இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணைக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் கடந்த 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டபோது 8 வயது சிறுமிக்கு பாலியல் துஷ்பிரயோகம்

செய்த முதலாவது குற்றத்துக்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாவும் இரண்டாவது குற்றத்துக்காக 10 ஆயிரம், தண்டப்பணம் செலுத்துமாறும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாய் வழங்குமாறு உத்தரவிட்டார்.

அடுத்து பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு முதலாவது குற்றத்துக்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாவும், நான்காவது குற்றத்துக்காக 10 ஆயிரம் ரூபாவும் தண்டப்பணமாக செலுத்துமாறும்

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்குமாறும் இரு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை சமகாலத்தில் வழங்கப்பட வேண்டும் என நீதிபதி கட்டளை பிறப்பித்தது தீர்ப்பளித்தார்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!!

வென்னப்புவ பகுதியில் நடந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில், மூன்று பிள்ளைகளின் தந்தையான 51 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மோட்டார் சைக்கிளின் கிக் பெடல் சரியாக வேலை செய்யாததால், அவர் வாகனத்தைத் தள்ளி இயக்க முயன்றுள்ளார்.

இதன்போது, மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து, அவர் வீதியில் தூக்கி வீசப்பட்ட்டுள்ளார். அப்போது, வீதியில் மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற லொறியில் மோதி, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வென்னப்புவ தும்மலதெனிய பகுதியில் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இலங்கை வந்த அவுஸ்திரேலிய பயணிக்கு இன்ப அதிர்ச்சி : 18 இலட்சம் ரூபா பணத்திற்கு நடந்தது என்ன!!

கொழும்பில் இருந்து சீகிரியாவை பார்வையிட சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் பொதியை உரிமையாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளையின் பெல்வெஹெர பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சுற்றுலா பயணி ஒருவர் 18 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் பிற உபகரணங்களைக் கொண்ட தனது பொதியை மறந்துவிட்டு சென்றுள்ளார்.

இதனை அறிந்த கடையின் உரிமையாளர், அதனை உரிய நபரிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த டென்னி மார்ட்டின் ஸ்டைம் என்ற சுற்றுலா பயணியே இவ்வாறு பொதியை மறந்து விட்டுச் சென்றுள்ளார்.

கடந்த 22ஆம் திகதி தம்புள்ளை, பெல்வெஹெர பகுதியில் உள்ள ஆரியா ரெஸ்ட் உணவகத்தில் மதிய உணவுக்காக குறித்த வெளிநாட்டவர் சென்றுள்ளார்.

இதன்போது பொதியை மறந்த சுற்றுலா பயணி, சிகிரியா பகுதியில் உள்ள ஹோட்டலுக்குத் திரும்பியுள்ளனர்.

தனது அறைக்கு வந்த பின்னரே பொதியை மறந்து விட்டு வந்தமை தெரிய வந்த நிலையில், இது குறித்து தனது சுற்றுலா வழிகாட்டியிடம் தெரிவித்துள்ளார்.

உடனடியாக குறித்த உணவகத்தை தொடர்பு கொண்டு விசாரித்த போது, பயணப் பொதி அங்கு பாதுகாப்பாக இருப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து உணவகத்திற்கு சென்று அவுஸ்திரேலிய பிரஜையான சுற்றுலா பயணி தனது பயண பொதியை பெற்றுக்கொண்டார். பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் பாதுகாப்பாக அப்படியே இருந்தமை குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.