2 வயதுச் சிறுவன் பாம்பு கடித்துப் பலி : படிக்கட்டில் விளையாடிய போது சோகம்!!

மகாராஷ்டிர மாநிலம் சம்பாஜிநகர் அருகே, வீட்டின் படிக்கட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுவன் நாகப்பாம்பு கடித்ததில் உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஞானேஸ்வர் தாண்ட்கே என்பவரின் இரண்டு வயது மகன் சம்பு, வழக்கம்போல வீட்டின் படிக்கட்டில் விளையாடிக் கொண்டிருந்தான்.

கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்கக் குளிர்ந்த மற்றும் இருட்டான இடத்தைத் தேடி வந்த நாகப்பாம்பு ஒன்று படிக்கட்டு ஓரத்தில் மறைந்திருந்துள்ளது.

இதை அறியாத சிறுவன் ஓடியபோது, எதிர்பாராதவிதமாக அவனது கால் பாம்பின் மீது பட்டுள்ளது. இதனால் சீற்றமடைந்த பாம்பு சிறுவனைத் தாக்கியது.

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தாய், குழந்தையின் காலில் ரத்தம் வழிவதையும் அருகே பாம்பு இருப்பதையும் கண்டு பதறிப்போனார்.

உடனடியாகச் சிறுவனைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். இருப்பினும், விஷம் உடல் முழுவதும் வேகமாகப் பரவியதால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அந்தப் பிஞ்சு உயிர் பிரிந்தது.

பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.கோடைக்காலங்களில் வெப்பம் தாங்காமல் பாம்புகள் போன்ற விஷ ஜந்துக்கள் குளிர்ச்சியான இடங்களைத் தேடி வீடுகளுக்குள் புகுவது வழக்கமாக உள்ளது.

எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விளையாடும் இடங்களைச் சுத்தமாகவும், போதிய வெளிச்சமாகவும் வைத்திருக்குமாறு சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

வீதியில் சென்ற கல்லூரி மாணவி கொடூரமாக கொலை!!

இந்தியாவின் இமாச்சல பிரதேசம், மண்டி மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவர் வீதியில் வீதியின் சென்றபோது கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, சியா குலேரியா எனும் மணவி , வழமைபோல கல்லூரிக்குச் செல்வதற்காக பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்த போதே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

முகமூடி அணிந்து உந்துருளியில் வந்த நபர் ஒருவர், மாணவியை வழிமறித்து கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி , கீழே தள்ளி கழுத்தை வெட்டி கொடூரமாகக் கொலை செய்துள்ளார். தாக்குதலில் மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவத்தை தொடர்ந்து தப்பியோட முயன்ற 32 வயதான ரிஷு பாட்டியால் என்ற நபரை அங்கிருந்த பொதுமக்கள் சுற்றிவளைத்துப் பிடித்துள்ளனர்.

மாணவி கொலையால் ஆத்திரமடைந்த மக்கள் அவரைத் தடியால் தாக்கிய நிலையில் சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து குறித்த நபரை கைது செய்தனர்.

இதனிடையே கொலைகாரன் மதுபோதைக்கு அடிமையானவர் என்று உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர். தனியாக சென்ற மாணவியிடம் அவர் அத்துமீற முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

அதற்கு மறுப்பு தெரிவித்து போராடிய மாணவியை கொடூரமாக கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளனர் இந்தக் கொடூரச் சம்பவத்திற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் வெளியிட்டு வரும் நிலையில், குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என மாநில அரசு உறுதியளித்துள்ளது.

இலங்கையில் பெரும் சோகம் : தந்தையை காப்பாற்றச்சென்று பலியான மூன்று மகன்கள்!!

திருகோணமலையில் புத்தாண்டு தினத்தில் நீராட சென்றபோது தந்தையின் உயிரைக் காப்பாற்ற சென்று மூன்று மகன்கள் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சமபவம் நாடு முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் சோமாவதிய வனப்பகுதிக்கு உட்பட்ட மஹாவலி ஆற்றில் (ஏப்ரல் 14, 2026) மாலை நிகழ்ந்துள்ளது, மகாவலி ஆற்றின் வெருகல் பாலத்திற்கு அருகில் புத்தாண்டு நீராடச் சென்றிருந்த வேளையில் நீரில் முழ்கிய மூவரின் சடலங்கள் நேற்று (15) பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஒரு தந்தை மற்றும் அவரது நான்கு மகன்கள் புத்தாண்டு தினத்தில் (14) பிற்பகல் ஆற்றில் நீராடச் சென்றபோது தந்தை நீரில் மூழ்கியுள்ளார்.

இந்நிலையில் தந்தையை காப்பாற்ற அவருடைய நான்கு மகன்களும் ஆற்றின் ஆழத்திற்குள் சென்றிருந்த வேளையில் தந்தையும் ஒரு மகனும் உயிர் தப்பிய நிலையில், மற்றைய மூன்று மகன்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.

காணாமல் போனவர்களின் சடலங்கள் இன்று உயிரற்ற நிலையில் மீட்கப்பட்டுள்ளன. கொழும்பில் தொழில் நிமித்தம் தங்கியிருந்த நான்கு மகன்களும் சித்திரை

புத்தாண்டுக்காகத் தமது சொந்த ஊருக்கு திரும்பியிருந்தபோதே புத்தாண்டை முன்னிட்டு குடும்பத்தோடு ஆற்றில் குளிக்கச் சென்றிருந்த வேளையே இச்சம்பவம் நடைபெற்றது.

அதேவேளை காணாமல் போனவர்களை காப்பாற்ற கடற்படையிடம் உதவி கேட்டும் “முதலைகள் இருப்பதாகக் கூறி கடற்படையினர் ஆற்றில் இறங்க மறுத்துத் திரும்பிச் சென்றுவிட்டனர்” என்று அங்கிருந்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தந்தையைக் காப்பாற்ற ஆற்றில் குதித்து காணாமல் போன மூன்று சகோதரர்களில், இருவரின் உடல்களைப் பின்னர் பிரதேசவாசிகளே கண்டுபிடித்துள்ளனர். சம்பவத்தை தொடர்ந்து குறித்த பிரதேசமே சோக மயமானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முறிகண்டியில் கோர விபத்து : ரயில் மோதி தூக்கி வீசப்பட்ட கார்!!

முறிகண்டி பகுதியில் சற்றுமுன்னர் புகையிரத கடவையில் ரயில் மோதி இடம்பெற்ற விபத்து பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகையிரதப் பாதையை கடக்க முற்பட்ட கார் ஒன்று, அதே நேரத்தில் வந்துகொண்டிருந்த புகையிரதத்துடன் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் காரில் பயணித்திருந்த கணவன் மற்றும் மனைவி இருவரும் காயமடைந்துள்ளனர்.

விபத்துக்குப் பிறகு உடனடியாக அப்பகுதி மக்கள் மற்றும் அவசர உதவி குழுவினர் இணைந்து அவர்களை மீட்டு, கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களின் நிலைமை குறித்து மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரானில் பெண் உட்பட நால்வருக்கு மரண தண்டனை : சர்வதேசம் கடும் கண்டம்!!

ஈரானில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்ட பெண் செயற்பாட்டாளர் உட்பட நான்கு பேருக்கு ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளமை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் அரசாங்கக் கொள்கைகளுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடிய பிட்டா ஹெம்மாட்டி (Bita Hemmati), அவரது கணவர் மற்றும் மேலும் இருவர் என மொத்தம் நான்கு பேருக்கு இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்தத் தீர்ப்புக்குத் தமது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தன. இந்தத் தண்டனையானது அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயல் என அவை சுட்டிக்காட்டியிருந்தன.

சர்வதேச அமைப்புகளின் அழுத்தங்களையும் மீறி, ஈரான் நீதிமன்றம் இந்த “உறையவைக்கும் தீர்ப்பை” வழங்கியுள்ளது. இதனால் ஈரான் மற்றும் உலக நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகளில் மீண்டும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரானின் இந்த தீர்ப்பானது போராட்டங்களில் ஈடுபடுவோரை அச்சுறுத்தும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

இலங்கையில் உயிர்களை காவு வாங்கும் மர்ம தேசம் : இன்றும் இரு சகோதரர்கள் பலி!!

தென்னிலங்கையில் உயிர்களை காவு வாங்கும் கடற்கரை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காலி, ஹபரதுவ கொக்கல கடற்கரைப் பூங்காவிற்கு அருகில் கடலில் நீராடிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

கட்டுநாயக்க பகுதியை சேர்ந்த 25 வயதுடைய ஜுட் ஷெவந்த பெரேரா மற்றும் 21 வயதுடைய என்டன் ஷெனாவ் பெரேரா ஆகிய இரு சகோதரர்களே இவ்வாறு உயிரிழந்தவர்களாகும்.

அவர்கள் நீரில் அடித்துச் செல்லப்படுவதை கண்ட ஹபராதுவ பொலிஸாரும், அருகிலுள்ள சுற்றுலா விடுதி உயிர்காப்புப் பிரிவினரும் அவர்களை மீட்டு மீபே பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே அவர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். குறித்த கடற்பகுதி நீராடுவதற்கு மிகவும் அபாயகரமானது என அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கடற்கரை பகுதியில் ஏற்கனவே பலர் நீரில் மூழ்கி ஆபத்துக்குள்ளான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள எரிபொருள் விலை : அமைச்சரின் புதிய தகவல்!!

எரிபொருள் விலையில் ஓரளவு அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். களுத்துறை பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியிலும், நாட்டில் எரிபொருள் மற்றும் மின்சார விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்.

உலகச் சந்தையில் நிலவும் எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, உள்நாட்டிலும் எரிபொருள் விலையில் ஓரளவு அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

அவ்வாறு விலை அதிகரிப்பு ஏற்பட்டாலும், அதன் முழுமையான சுமையை மக்கள் மீது சுமத்தாமல், கணிசமான பகுதியை திறைசேரி பொறுப்பேற்கும்.

மேலும், தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலைகளை, போர்ச் சூழல் தணிந்தவுடன் கூடிய விரைவில் குறைப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிரடி காட்டும் தங்கத்தின் விலை : இலங்கையில் மீண்டும் பதிவாகும் நிலவரம் – நகை வாங்கவுள்ளவர்களுக்கான செய்தி!!

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் (16.04.2026) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.​ அதன்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4830.68 டொலராக பதிவாகியுள்ளது.

இதேவேளை வெள்ளி ஒரு அவுண்ஸ் 79.85 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.​ கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 402000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 369900 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

​மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழல் மற்றும் உலகப் பொருளாதாரக் காரணிகள் தொடரும் பட்சத்தில், வரும் நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மேலும் தளம்பல் நிலை ஏற்படலாம் என கூறப்படுகிறது.

யாழில் 11 வயது சிறுமிக்கு நடந்த சோகம் : 38 வயது இளைஞர் அதிரடி கைது!!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழில் சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (15.04.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மூளாய் – வேரம் பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய குறித்த சிறுமியை, அவரது வீட்டின் அருகே வசிக்கும் 38 வயதுடைய நபரே இவ்வாறு தவறான நடத்தைக்கு உட்படுத்தியுள்ளார். இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது, குறித்த சந்தேகநபரை வட்டுக்கோட்டை பொலிஸார் நேற்று(15) கைது செய்துள்ளனர். சிறுமி பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

30 ஆயிரம் பணத்துடன் பையை தொலைத்த நபருக்கு பொலிஸார் கொடுத்த அதிர்ச்சி!!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரின் தொலைந்து போன பணப் பையை யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமகா கண்டெடுத்து உரியவரிடம் கையளித்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(15.04.2026) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் – கந்தர்மடத்தில் வசிக்கும் ஒருவர் புத்தளம் பகுதியில் 30 ஆயிரம் பணத்துடன் தனது பணப் பையை தொலைத்து விட்டு தேடி அலைந்துள்ளார்.

பணி நிமித்தம் புத்தளத்திற்கு சென்ற யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பணப் பையொன்று வீதியில் விழுந்து கிடைப்பதை அவதானித்து அதனை எடுத்து விசாரணை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த கைப்பைக்குள் இருந்த ஆவணங்களை கொண்டு அது யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அதனை நேற்று(15) தொலைத்த பணப்பை உரிமையாளரிடம் கையளித்துள்ளார்.

 

தயவு செய்து அவதானமாக இருக்கவும் : இலங்கையின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்கும் தயவு செய்து அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் இன்று நண்பகல் வெளியிடப்பட்டுள்ள ஆம்பர் எச்சரிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு எச்சரிக்கை

இதேவேளை 13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையில் பதிவானது அதிகூடிய வெப்பநிலை : மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

பல மாவட்டங்களில் நிலவும் மிகவும் வெப்பமான வானிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பநிலை மனித உடலால் உணரப்படும் அவதான மட்டத்தில் இருப்பதாக திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு அறிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்றைய தினம்(15.04.2026) வவுனியாவில் பதிவான 36.6°C வெப்பநிலை, நாட்டின் மிக உயர்ந்த வெப்பநிலையாக பார்க்கப்படுகிறது. அதேவேளையில், பொலன்னறுவை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் தலா 36.0°C வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, மக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் வெள்ளை அல்லது வெளிர் நிற, இலகுரக ஆடைகளை அணிய வேண்டும் என்றும், கடுமையான செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியாவில் பொலிசார் இளைஞன் மீது தாக்குதல் : மனிதஉரிமை ஆணைக்குழு விசாரணை!!

சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்று (14.04.2026) இரவு வவுனியா மாநகரசபை மைதானத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது, பொலிஸார் இளைஞர் ஒருவரை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா மாநகரசபை மைதானத்தில் நேற்று இரவு பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் இசை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இசை நிகழ்ச்சியின் நுழைவாயில் பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கும், அங்கு வந்த இளைஞர்களுக்கிடையே திடீரென வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

தர்க்கம் முற்றிய நிலையில், அங்கிருந்த பொலிஸார் ஓர் இளைஞனைத் தமது கால்களாலும் பாதுகாப்பு அங்கிகளாலும் (Armor/Shield) தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான இளைஞனை பொலிஸார் பலவந்தமாகப் பொலிஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். எனினும், சிறிது நேரத்தின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொலிஸார், மக்கள் முன்னிலையிலேயே ஒரு இளைஞன் மீது இவ்வாறான வன்முறையைப் பிரயோகித்தது அங்கிருந்தோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பில் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஒரு நபர் தவறு செய்திருப்பின் அவரைச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்கும் அதிகாரமே பொலிஸாருக்கு உண்டு. வீதியில் வைத்துத் தண்டனை வழங்கும் (Street Justice) அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்படவில்லை.

வவுனியாவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பொலிஸ் துறையினரின் அடாவடித்தனத்தைக் காட்டுவதுடன், சட்ட ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியவர்களே சட்டத்தைக் கையில் எடுப்பது ஜனநாயகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகும். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு நீதி கிடைக்குமா என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.

கிளிநொச்சியில் ஆடு மேய்க்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி : தீவிரப்படுத்தப்படும் விசாரணை!!

கிளிநொச்சி – பளை, பொந்தர் குடியிருப்பு பகுதியில் அடிக்காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று (15.04.2026) இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று காலை ஆடு மேய்க்கச் சென்ற ஒருவர், சடலம் ஒன்று கிடப்பதை முதலில் கண்டறிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, கிராம அலுவலருக்கும் பளை பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், குறித்த சடலம் அடிக்காயங்களுடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலனை நம்பிச் சென்ற இளம்பெண் வெட்டிக்கொலை!!

மொனராகலை – வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெடொலகம பகுதியில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று(14.04.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நெடொலகம பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேற்படி பெண்ணுக்கும் அவரது காதலனுக்கும் இடையே ஏற்பட்ட நீண்டநேரத் தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த காதலன் கூர்மையான ஆயுதத்தால் அவரைத் தாக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து வெல்லவாய பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து,

பொலிஸார் விரைந்து சென்று படுகாயமடைந்த பெண்ணை மீட்டு வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தலைமறைவாகியுள்ள சந்தேக நபரைக் கைது செய்வதற்காக வெல்லவாய பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன், மேலதிக விசாரணைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஹந்தானை மலைப்பகுதியில் காணாமல்போன யூடியூபர்!!

ஹந்தானை மலைப்பகுதியில் அரிய காட்சிகளை வீடியோ எடுக்கச் சென்று காணாமல்போன யூடியூபர் ஒருவரை இராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

ஹந்தானை மலைத்தொடரின் ஓணான் முதுகு அல்லது ‘கட்டுஸா கொண்ட’ என்றழைக்கப்படும் பகுதியில் குறித்த நபர் ஏறிச் சென்றபோது வழிதவறி காணாமல் போயிருந்தார். அதனையடுத்து, அவரை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட யூடியூபர் முன்னதாக ஹந்தானை பகுதியில் வசித்தவர் என்றும், பின்னர் கொழும்பில் குடியேறியவர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மீட்கப்பட்ட யூடியூபர் மலை ஏறி அரிய காட்சிகளைப் படம் பிடிப்பதில் ஆர்வம் கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் ஹந்தானையின் மிக உயர்ந்த பகுதியான “கட்டுஸ்ஸ கொண்ட” பகுதியில் சிக்கியிருப்பதாக கண்டி பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டிருந்தது.

எனினும், அந்த மலை உச்சியில் நிலவும் கடும் ஆபத்தான சூழல் காரணமாக அவரை மீட்பது மிகவும் கடினமான காரியமாக இருந்துள்ளது.

இதனையடுத்து, கண்டி பொலிஸார் அந்த மலைப் பிரதேசம் அமைந்துள்ள கலஹா மற்றும் பேராதனை பொலிஸ் நிலையங்களுடன் இணைந்து மீட்பு நடவடிக்கையை ஆரம்பித்த நிலையில், குறித்த நபர் பத்திரமாக மீட்கப்பட்டதாக கூறப்படுகின்றது.