தங்க விலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம் : சர்வதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாபா வங்காவின் தகவல்!!

2026இல் தங்கத்தின் விலையில் எதிர்பாராத ஒரு மாற்றம் ஏற்படும் எனவும் மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்படும் எனவும் பாபா வங்கா மேற்கொண்டுள்ள கணிப்பு சர்வதேச ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாபா வங்கா என அழைக்கப்படும் ரையோ தத்சுகி என்ற பார்வையற்ற ஜப்பானிய பெண்ணின் கணிப்புக்கள் பெரிதளவில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த பெண் 2026இல் ஏற்பட போகும் மிக மோசமான பொருளாதார நெருக்கடி தொடர்பில் கணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, பாபா வங்காவின் கணிப்பின் படி, 2026 இல் தங்கத்தின் விலைகள் எதிர்பாராத விதமாக மாற்றத்தை எதிர்நோக்கும் என்று அவர் கணித்ததாக குறித்த ஊடகங்கள் கூறுகின்றன.

மேலும், சிலர் தங்கம் அதன் பாதுகாப்பான புகலிட நிலையை இழக்கக்கூடும் என்றும், மற்றவர்கள் அது உயரும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

உதாரணமாக, பண வீழ்ச்சி ஏற்பட்டால் தங்கம் “பயனற்றதாக” மாறும் என்றும் பிற பொருட்களைப் போலவே தங்கமும் சாதாரண ஒரு பொருளாக மாறும் எனவும் பாபா வங்கா கணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, உலக நாணய அமைப்புகளில் சரிவு அல்லது கூர்மையான திருத்தம், வங்கி தோல்விகள் மற்றும் 2026இல் அதிக பணவீக்கம் போன்ற ஒரு கடுமையான நிதி நெருக்கடியும் ஏற்படும் என கூறப்படுகின்றது.

இந்த கணிப்பின் காரணமாக சர்வதேச ரீதியில் கடும் பொருளாதார நெருக்கடி குறித்து கவலைகள் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

நாட்டிற்கு அண்மையில் தாழமுக்கம் வலுவடையும் சாத்தியம் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டிற்கு அண்மையாக காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் நாளை, 25 ஆம் திகதியளவில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இன்றைய தினத்திற்கான வானிலை தொடர்பான முன்னறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும், நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொலிவுட் திரையுலகின் ஜாம்பவான் நடிகர் தர்மேந்திரா காலமானார்!!

பாலிவுட் திரையுலகின் ஜாம்பவானாக திகழ்ந்தவரும், ‘ஹீ-மேன்’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவருமான மூத்த நடிகர் தர்மேந்திரா, தனது 89வது வயதில் இன்று காலமானார். அவரது மறைவு இந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் திரையுலகில் நடிகர் தர்மேந்திரா, இதய கோளாறு மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீண்ட நாள்களாக சிகிச்சையில் இருந்தார்.

இந்த நிலையில், வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த தர்மேந்திரா இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்ததை பாலிவுட் இயக்குநர், தயாரிப்பாளர் கரண் ஜோஹர் உறுதி செய்துள்ளார்.

89 வயதான தர்மேந்திரா திரைத்துறையில் பல்வேறு சாதனைகளைச் செய்ததுடன் பல உயரிய விருதுகளையும் வென்றவர் .

அதேவேளை , அண்மையில் தர்மேந்திரா உடல்நலக் குறைவால் காலமானதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவிய நிலையில், அவர் நலமுடன் இருப்பதாக அவரது மனைவியும் எம்பியுமான ஹேமமாலினி, அவரது மகள் நடிகை ஈஷா தியோல் தெரிவித்தருந்தனர்.

இந்நிலையில் இன்று நடிகர் தர்மேந்திரா காமனாதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை மக்களின் மனதை வென்ற ஜனாதிபதி அனுர குமாரவின் பிறந்த நாள் இன்று!!

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 57 ஆவது பிறந்தநாள் இன்று (24) ஆகும். சாதாரண நபர் முதல் முதலாக இலங்கையின் பலம்மிக்க 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்றார்.

அதுமட்டுமல்லாது ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் நாட்டு மக்களுக்கு நன்மையளிக்கும் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி, இன , மத வேறுபாடின்றி இலங்கையை வளமான நாட்ஃபாக மாற்றுவதில் பல்வேறு வேலை திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றது.

இலங்கை மக்கள் , தமிழர்கள், சிங்களவர்கள் , முஸ்லீம்கள் என வேறுபாடின்றி அனைவரும் ஒரே நாட்டு மக்கள் என்றும், அனைவரும் என்றுமே சமமானவர்கள் என்றும், ஜனாதிபதி முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

கடந்த கால ஆட்சியாளர்கள் நாட்டை இருட்டில் தள்ளிய நிலையில், ஜனாதிபதி அனுர குமார, வளமான நாடு எனும் பாதையில் இலங்கையை கொண்டு செல்கின்றார்.

போதை ஒழிப்புகள் மூலம் நாட்டு மக்களுக்கு நல்லதையே எண்ணுகின்ற ஓர் ஆட்சியாளராக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க , இன்று தனது 57வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் இலங்கை மக்கள் , ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

விசா நிராகரிப்பால் உயிரைவிட்ட இந்திய மருத்துவர் : சிதைந்த அமெரிக்க கனவு!!

இந்திய மாநிலம் ஆந்திராவைச் சேர்ந்த பெண் மருத்துவர், அமெரிக்க விசா நிராகரிப்பால் உயிரை மாய்த்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த மருத்துவர் ரோகிணி. 38 வயதான இவர் அமெரிக்காவில் பணியாற்ற விரும்பியுள்ளார். இதற்காக அவர் பணி விசா விண்ணப்பித்து காத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவரது விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மனமுடைந்த ரோகிணி தனது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக கடிதம் எழுதி வைத்திருத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

45 ஆண்டுகள் இணைபிரியாத வாழ்க்கை : கணவன் இறந்த சில மணிநேரத்தில் மனைவியும் உயிர் விட்ட சோகம்!!

விழுப்புரம் அருகே வி.புதூர் கிராமத்தில், 45 ஆண்டுகள் அன்போடு வாழ்ந்த வயதான தம்பதியரின் வாழ்க்கை, கணவன் இறந்த சில மணி நேரங்களிலேயே மனைவியும் உயிரிழந்ததால், அப்பகுதியை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

விவசாயியான வீரண் மற்றும் அன்னக்கிளி தம்பதியினர், சிறந்த அன்பு-அன்னியோன்யத்திற்குப் பெயர்பெற்றவர்கள்.

கிராமத்தில் இளைய தம்பதிகளுக்கே முன்மாதிரி எனப் பாராட்டப்பட்ட இவர்களின் இணை வாழ்க்கை, வயது மூப்பு காரணமாக வீரண் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததும் திடீரென சோகமாக மாறியது.

கணவனை இழந்த துயரத்தை தாங்க முடியாமல் அன்னக்கிளி, அவரது உடல் அருகே அமர்ந்து அழுகையுடன் இருந்தார். தண்ணீர் கூட அருந்தாமல் துணை நிற்கும் வாழ்க்கைத் துணையை மீண்டும் காண முடியாத வேதனை அவரை உடைத்துவிட்டது.

அடுத்த நாள் காலை, வீரண் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்க, துயரத்தில் திளந்த அன்னக்கிளி திடீரென மயங்கி விழுந்தார். பரிசோதித்தபோது, அவரும் உயிரிழந்தது உறவினர்களை அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியது.

கணவன் சென்ற சில மணி நேரங்களிலேயே மனைவியும் கணவர் உடல் அருகே உயிர் நீத்த இந்த நிகழ்வு, கிராம மக்கள் அனைவரையும் கலங்க வைத்தது. “வாழ்விலும் இறப்பிலும் கூட ஒருவரை ஒருவர் பிரியவில்லை” என அப்பகுதி மக்கள் கண்கலங்கக் கூறினர்.

இறுதியாக, இந்த அன்பு தம்பதியின் உடல்கள் ஒன்றாக வைத்து நடத்தப்பட்ட இறுதி சடங்கு, அவர்களின் வாழ்நாள் முழுதும் நிலைத்த அன்பின் சாட்சியமாக அனைவரையும் நெகிழச்செய்தது.

இரு மகள்களைக் கொன்று தந்தை எடுத்த விபரீத முடிவு!!

மனைவி கோபித்துக்கொண்டு தாயார் வீட்டுக்குச் சென்றதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, எலக்ட்ரீசியன் ஒருவர் தனது இரண்டு மகள்களையும் கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஆலங்குளம், முடக்கத்தான் பகுதியைச் சேர்ந்தவர் கோபிராஜ் (வயது 40). எலக்ட்ரீசியனான இவருக்கு காயத்ரி என்ற மனைவியும், யுவஸ்ரீ (10), கனிஷ்கா (5) என இரண்டு மகள்களும் இருந்தனர். இவர்கள் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

சமீபத்தில் கணவன் – மனைவிக்கு இடையே சிறிய சண்டை ஏற்பட்ட நிலையில், மனவருத்தம் அடைந்த மனைவி காயத்ரி இரண்டு நாட்களுக்கு முன்பு கோபித்துக் கொண்டு தன் தாயார் வீட்டிற்குச் சென்று விட்டார்.

மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் இருந்த கோபிராஜ், தனது மகள்களுடன் தனியாக இருந்தார். இந்த நிலையில், நேற்று இரவு நீண்ட நேரம் ஆகியும் கோபிராஜின் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருப்பதை அறிந்த அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து கூடல்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் யுவஸ்ரீ மற்றும் கனிஷ்கா இருவரும் சடலமாக கிடந்தனர். அதே அறையில் கோபிராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.

மூவரின் உடல்களையும் கைப்பற்றி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மன உளைச்சலில் இருந்த கோபிராஜ், தனது இரண்டு மகள்களையும் ஒயரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, அதன் பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடும்பத் தகராறின் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருமணமாகி 2 வருடங்களாகியும் குழந்தை இல்லை என அவமதித்த உறவுகள் : இளம்பெண் விபரீத முடிவு!!

தூத்துக்குடி சகாயபுரத்தை சேர்ந்த ஜெமீலா, 10 ஆண்டுகள் காதலித்து 2023 செப்டம்பரில் பெனோவை மணந்தார். திருமணத்திற்குப் பிறகு கருக்கலைப்பு நடந்ததையும்,

குழந்தை பிறக்காததையும் காரணம் காட்டி கணவன் வீட்டில் இடையறாத அவமதிப்பு, குற்றச்சாட்டுகள், ஒதுக்கல் ஆகியவற்றை எதிர்கொண்டதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.

கணவர் பெனோ ஆன்லைன் ரம்மியில் இழந்த பணத்தைக் கட்ட ஜெமீலாவின் நகைகள் அடகு வைக்கப்பட்டதும், வேலைக்கு செல்லாமல் இருந்ததும் தகராறு அதிகரித்தது.

மேலும், அவர்கள் வசித்த வீட்டை பெனோவின் தந்தை மற்றொரு மகளுக்கு எழுதித்தந்ததால், வீட்டை காலி செய்யும்படி ஜெமீலாவிடம் வற்புறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவரின் ஆலோசனைப்படி சில நாட்கள் தாய் வீட்டில் தங்கி வந்த ஜெமீலா, கணவன்–குடும்பத்தினரின் தொடர்ந்த மன உளைச்சலைத் தாங்க முடியாமல் அதிகாலை தனது வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார்.

சமையலறையில் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், “பெனோவுக்கு நான் முக்கியம் அல்ல… அவர் சகோதரிகள் தான் முதலில். அவர்களிடம் திரும்பப் போனாலும் நிம்மதி கிடையாது…” என்ற வரிகள் அனைவரையும் உருக்கின.

மேலும், தன்னை மன்னித்துவிடுமாறு தாயிடம் கேட்டு, தானும் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க இயலாத சூழலை அழுகையுடன் வெளிப்படுத்தியிருந்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஜெமீலாவின் தாய் அளித்த புகாரின் பேரில்,

கணவர் பெனோ, மாமனார், மாமியார், சகோதரி, மச்சான் உள்ளிட்டோர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. காதலித்து மணந்த இரண்டாண்டுகளுக்குள் இளம்பெண் இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டது தூத்துக்குடி முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தொட்டிலில் விளையாடிய போது கழுத்தில் சேலை இறுக்கி 8ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!!

சேலையில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த போது, கழுத்தில் சேலை இறுக்கி 8ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த கோவர்த்தனகிரி, காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவி மீனா. இவர்களுக்கு 13 வயதில் 8ம் வகுப்பு படித்து வரும் ஹரிஹரன் எனும் மகன் இருந்தார்.

சமீபத்தில் மீனாவின் உறவினரான ஆந்திராவைச் சேர்ந்த நந்தினி என்பவர் பிரசவத்திற்காக சதீஷ் வீட்டில் தங்கியிருந்தார். அந்த குழந்தைக்காக வீட்டின் மாடியில் உள்ள படுக்கை அறையில்,

சேலையைக் கொண்டு தொட்டில் ஒன்று கட்டப்பட்டிருந்தது. நந்தினி சொந்த ஊருக்குச் சென்ற பிறகும், அந்தத் தொட்டிலைக் கழட்டாமல் இருந்தனர். ஹரிஹரன் அந்தத் தொட்டிலில் விளையாடுவது வழக்கம்.

இந்நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் மாலை, ஹரிஹரனை பள்ளியில் இருந்து ஆட்டோவில் அழைத்து வந்து, வீட்டில் விட்டுவிட்டு தந்தை சதீஷ் சவாரிக்குச் சென்று விட்டார். தாய் மீனா மற்றும் சகோதரி பவ்யஸ்ரீ ஆகியோர் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்ததால், ஹரிஹரன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தான்.

வழக்கம் போல், ஹரிஹரன் மாடியில் உள்ள சேலையால் கட்டிய தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்தான். விளையாட்டின் போது, எதிர்பாராத விதமாகத் தொட்டில் முறுக்கிக் கொண்டு ஹரிஹரனின் கழுத்தை இறுக்கியது.

இதில் ஹரிஹரனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கித் தொங்கியுள்ளார். வீட்டிற்குத் திரும்பி வந்த தாய் மீனா, மகன் தொட்டிலில் கழுத்தை இறுக்கிய நிலையில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக ஹரிஹரனை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஹரிஹரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொட்டிலில் விளையாடிய போது ஏற்பட்ட இந்த எதிர்பாராத விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் 160 ஆண்டுகளின் பின் கண்டுபிடிக்கப்பட்ட தவளை!!

 

இலங்கையில் சுமார் 160 ஆண்டுகளாக அழிந்து விட்டதாகக் கருதப்பட்ட தவளை இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த இனம் சிவனொளிபாதமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

அதற்கு ஸ்டெல்லாவின் நட்சத்திர தவளை என பெயரிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் கூறினார்.

இன்றிரவு வரை பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள செம்மஞ்சள் எச்சரிக்கை!!

நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கங்களுக்கான செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (22) பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட எச்சரிக்கை இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேற்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும்போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைக்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

24ஆம் திகதி முதல் புதிய நடைமுறை : வங்கி அட்டை வைத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி!!

இலங்கையில் பேருந்து கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் புதிய நடைமுறை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த வாய்ப்பு நாளை மறுதினம் (24.11.2025) முதல் பயணிகளுக்கு கிடைக்கவுள்ளது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தொழிநுட்ப வழிகாட்டுதலின் கீழ், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் குறித்த திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.

இதன்படி குறித்த திட்டமானது மாக்கும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில் அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தகவலின்படி, இந்த திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் சுமார் 20 வழித்தடங்கள் உள்ளடக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் 3 முக்கிய மாகாணங்களுக்கு இடையேயான வழித்தடங்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது.

காலி, மாத்தறை மற்றும் பதுளை நோக்கிச் செல்லும் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் இந்த டிஜிட்டல் கட்டண முறையை அனுபவிக்கும் முதல் குழுவினராக இருப்பார்கள்.

இந்தத் திட்டத்திற்காக, ஐந்து முன்னணி அரச மற்றும் தனியார் வங்கிகள் ஏற்கனவே தமது ஆதரவை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் பரீட்சை மண்டபத்தில் இடம்பெற்ற நெகிழ்ச்சி செயல்!!

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவன் ஒருவன் பாம்பு தீண்டிய நிலையில் மருத்துவ கண்காணிப்பில் பரீட்சை எழுதிய பின்னர் மீண்டும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை இடம்பெற்று வரும் நிலையில் நேற்றையதினம்(21) இராசயனவியல் பரீட்சை இடம்பெற்றது. பரீட்சைக்கு சென்ற துஸ்யந்தன் சாத்வீகன் என்ற மாணவன் பாடசாலைக்குள் சென்ற போது பாம்பு தீண்டியதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும் மாணவன் அதனைப் பொருட்படுத்தாது பரீட்சை மண்டபத்தில் இருந்த போது குருதிப் பெருக்கு ஏற்பட்ட நிலையில் பரீட்சை மேற்பார்வையாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக நோயாளர் காவுவண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற அவசர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அவசர சிகிச்சையின் பின்னர் நோயாளர் காவுவண்டியில் மீண்டும் பாடசாலை கொண்டு செல்லப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் பரீட்சை எழுதியுள்ளார்.

இன்று சனிக்கிழமை (22) இடம்பெறும் பரீட்சைக்கும் அவர் நோயாளர் காவுவண்டி மூலம் பரீட்சை நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுவார் என தெரிவிக்கப்பட்டது.

யாழில் காய்ச்சல் ஏற்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

யாழில் வயிற்றுவலியுடன் கூடிய காய்ச்சல் ஏற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (21.11.2025) காலை இடம்பெற்றுள்ளது.

கைதடி மத்தி, கைதடி பகுதியைச் சேர்ந்த சுந்தரம் விக்கினேஸ்வரன் (வயது 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு கடந்த 18ஆம் திகதி வயிறு வீக்கத்துடன் வயிற்று வலியும், காய்ச்சலும் ஏற்பட்டது.

இந்நிலையில் 19ஆம் திகதி அதிகாலை தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.00 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

இத்தாலியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண் மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் நேற்றையதினம் (21.11.2025) உயிரிழந்துள்ளார். மார்ட்டின் வீதி, யாழ்ப்பாணத்தை தற்காலிக வசிப்பிடமாக டொரிங்கடன் மாலினி யோகராசா (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், இவரது குடும்பம் இத்தாலியில் நிரந்தரமாக வசித்து வருகின்றது.

இந்நிலையில் இவர் இடையிடையே யாழ்ப்பாணம் வந்து செல்வது வழமை. அந்தவகையில் கடந்த 20ஆம் திகதி காலை மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் சிறிது நேரத்தின் பின்னர் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கடுகண்ணாவ மண்சரிவு : பெண் ஒருவர் உயிருடன் மீட்பு!!

கடுகண்ணாவ பகுதியில் இன்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்த பகுதியில் இடிபாடுகளுக்குள் இருந்து பெண்ணொருவர்,உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏலவே இந்த விபத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். முன்னதாக, பாறைகள் சரிந்து வீழ்ந்ததில் ஒரு வீடு மற்றும் பல வியாபார ஸ்தலங்கள் பாதிப்படைந்தன.

இந்த நிலையில், மேலும் நால்வர் இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாக கேகாலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.