உயிர்வாழ உகந்த சூழல் கொண்ட நட்சத்திரக் கூட்டம் கண்டுபிடிப்பு!!

விண்வெளியில் சூரிய குடும்பத்தைப் போன்றதொரு நட்சத்திரக் கூட்டத்தினை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இங்கிலாந்தின் ஹெர்ட்போர்ட்ஷைர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சூரிய குடும்பத்துக்கு வெளியே 816 நட்சத்திரங்களைக் கொண்ட சூரியகுடும்பத்தைப் போன்றதொரு நட்சத்திர குடும்பத்தினைக் கண்டறிந்துள்ளனர்.

இந்த நட்சத்திரங்களில் பாதியளவுக்கு புதிய நட்சத்திரங்கள் என்று தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், அவற்றில் பெரும்பாலானவை உயிர்வாழ உகந்த சூழல் கொண்டதாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

ஏறக்குறைய 50 இலட்சம் ஆண்டுகளாக பார்வைக்கு தென்படாமல் இருந்த இந்த நட்சத்திரக் கூட்டம் குறித்து ஆய்வு செய்வதன் மூலம், நட்சத்திரங்கள் எவ்வாறு உருவாகிறது என்பதை அறிந்துகொள்ளலாம் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக அகச்சிவப்பு கதிர்கள் (Infrared) கெமரா மூலம் ஆய்வு செய்து வந்த ஆய்வாளர்கள் குழு, பூமி போன்றே உயிர்வாழ உகந்த சூழல் நிலவும் நூற்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் அந்த நட்சத்திரக் கூட்டத்தில் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

தண்டனைகளே என்னை சாதிக்க வேண்டுமென தூண்டியது : தீவிரவாதிகளிடமிருந்து மீண்ட பெண்!!

சிரியாவின் மொசூல் நகரில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினால் பாலியல் அடிமையாக சிறைவைக்கப்பட்டிருந்தப் பெண் குறித்த பகுதியில் ஏற்பட்ட தாக்குதலில் காயமுற்றவாறு மீண்டுள்ளார்.

லுமியா ஆஜி பஜார் என்ற குறித்த இளம் வயது பெண் வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு தான் பெற்ற ஐ.எஸ் அமைப்பின் அனுபவமாக பகிர்ந்துள்ளதாவது, ‘தானும் தன்னைப்போன்ற ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் அடிமைக்காக விற்கபட்டுள்ளோம்.

தன்னை ஒரு வயதான ஐ.எஸ் தலைவரின் பாலியல் அடிமையாக விற்றனர். குறித்த கொடூரன் தனது(லுமியா) மதத்திற்கு விரோதமான ஆடைகளை அணியச்செய்ததோடு, வெறிபிடித்த படைகளுக்கு தன்னை பாலியல் விருந்தாக்கி, பல்வேறு கொடுமைகளை செய்தனர்.

நான் தொடர்ச்சியாக தப்பிக்க முயற்சித்து அவர்களிடம் பிடிபட்டு வந்தேன். இந்நிலையில் என்னை மொசூல் நகரத்திலுள்ள தீவிரவாத நீதிமன்றில் நிறுத்தி இனி நான் தப்பிக்க முயற்சித்தால் கடுமையாக தண்டிக்கப்படுவதாய் எச்சரிக்கப்பட்டேன்.

ஆயினும் நான் தொடர்ச்சியாக துன்புறுத்தப்பட்டாலோ, எனக்கான உணவை நிறுத்தி துன்புறுத்தினாலோ அல்லது ஒரு காலை வெட்டி என்னை தண்டித்தாலோ தப்பிக்கும் எனது முயற்சியை விடமாட்டேன் என சபதம் பூண்டேன்.

எனது சபதத்திற்கு பரிகாரமாக என்னை வேறோரு தீவிரவாத தலைவனுக்கு விற்றார்கள். அங்கும் அதே கொடுமைகளைதான் அனுபவித்தேன். இருப்பினும் அவர்கள் செய்த கொடுமைகள்தான், அங்கிருந்து நான் உயிருடன் மீண்டு, மீண்டும் வாழவேண்டும் எனும் உணர்வை என்னிடத்தில் ஏற்படுத்தியது’. எனக் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதலால் சீர்குழைந்துள்ள முகத்தோடு தனது நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் லுமியா. இந்நிலையில் சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் லுமியா மற்றும் அவரைப்போல் ஐ.எஸ் அமைப்பிடமிருந்து மீண்ட மற்றொரு பெண்ணிற்குமாக, சர்வதேச மனித உரிமை ஆணையத்தின் சாஹரவோ பரிசிலை வழங்கி கௌரவித்துள்ளது.

பரிசிலை பெற்றப் பெண்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இன்னும் பாலியல் அடிமைகளாக சிக்குண்டவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் படி கேட்டு கொண்டனர். அத்தோடு தங்களுக்கு ஏற்பட்ட நிலைமைகள் உலகில் எப்பாகத்திலும் ஏற்படாதிருக்க சர்வதேச சமூகங்களின் செயற்பாடு அவசியம் என வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்திலிருந்து 16 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு!!

அண்மையில் வெளியாகிய க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவன் ரங்கநாதன் யதுகுலன் வர்த்தக பிரிவில் 3A சித்திகளைப் பெற்று மாவட்ட நிலையில் முதலாமிடத்தினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக வித்தியாலயத்தின் அதிபர் ச.சுபாஸ்கரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..

வர்த்தகப்பிரிவில் ரங்கநாதன் யதுகுலன் 3A சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தினையும், கணிதப்பிரிவில் செல்வதேவன் ஹனுஷ்யன் 2AB சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் நான்காம் இடத்தினையும் பெற்றுள்ளார்.

பாடசாலை வரலாற்றிலும் வடக்கு வலய வரலாற்றிலும் வர்த்தப் பிரிவில் முதலாமிடத்தினை பெற்றமை இதுவே முதற்தடவையாகும்.

மேலும் எமது பாடசாலையில் வர்த்தப் பிரிவில் ஆறு மாணவர்களும், கலைப்பிரிவில் எட்டு மாணவர்களும், கணிதப் பிரிவில் இரண்டு மாணவர்களும் பல்கலைக்கழகங்களுக்கு தகுதிபெற்றுள்னர் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் எச்.ஐ.வி நோய்த் தொற்றுக்குள்ளாகி 44 பேர் பலி!!

நாடளாவிய ரீதியில் கடந்த வருடத்தில் எயிட்ஸ் நோயாளர் தொகை அதிகரித்துள்ளதாகவும் வருட இறுதிவரை எச்.ஐ.வி நோய்த் தொற்றுக்குள்ளாகி 44 பேர் உயிரழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்

கடந்த வருடம் டிசம்பர் மாதம் இறுதி வரையில் எச் .ஐ. வி நோய்த் தொற்றுக்குள்ளாகி 44 பேர் உயிரிழந்துள்ளனர் . குறித்த நோய்த்தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தோர் தொகையானது கடந்த 2015 ஆம் ஆண்டை விடவும் கனிசமான அளவு அதிகரித்துள்ளது.

இதேவேளை, நோய் தொற்றுக்குள்ளான 259 பேர் கடந்த வருடம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த நோய்தொற்றுக்கு இலக்காகி 189 ஆண்களும், 60 பெண்களும் நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ளதுடன் இவர்களில் 15 கர்ப்பிணித் தாய்மார்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

நடிகர்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட பெண்!!

திரைத்துறைப் பிரபலங்களிடம் குறைந்த விலையில் விமான டிக்கெட் எடுத்து தருவதாக கூறி லட்சக் கணக்கில் மோசடி செய்த பெண்ணை சென்னை காவல்துறை மத்திய குற்றப்பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.

நடிகர் எஸ்.வி.சேகர் கொடுத்த புகாரின் அடிப்படையில், சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில் வசித்து வந்த ஸ்வேதா என்பவரை மத்திய குற்றப்பிரிவு பொலிசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

சுமார் 26 லட்சம் ரூபாய் வரை அவர் மோசடி செய்ததாக, எஸ்.வி.சேகர் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி, போலி விமான டிக்கெட்டுகள் கொடுத்து, ஸ்வேதா ஏமாற்றியதாக எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

எமிரேட்ஸ் விமான சேவை பெயரில், போலி டிக்கெட் விற்பனை செய்வது தொடர்பாக, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கவனத்திற்கு தான் கொண்டு சென்றதாகவும், ஆனால் அந்த நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் எஸ்.வி.சேகர் குற்றம்சாட்டினார். எஸ்.வி.சேகர் மட்டுமல்லாது, பாடகர் தேவன் ஏகாம்பரம் உள்ளிட்ட பலரிடமும் ஸ்வேதா கைவரிசையை காட்டியுள்ளதாகவும் தற்போது தெரிய வந்துள்ளது.

 

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் 8 மாணவிகள் 3A சித்திகளைப் பெற்று சாதனை!!

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகள் உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர் என பாடசாலையின் அதிபர் திருமதி பி.கமலேஸ்வரி தெரிவித்தார்.

இதனடிப்படையில் கா.துசாந்தினி 3A, அ.அபிராமி 3A, வி.டிலக்சனா 3A, யோ. ரட்சனா 2AB, த.டிலக்சனா 2AB, ஆகிய மாணவிகள் மருத்துவத் துறைக்கு தெரிவாகியுள்ளனர்.

உயிரியல் தொழில்நுட்ப துறைக்கு மாவட்ட மட்டத்தில் ச.திருஸ்ரிகா 4ம் இடத்தினையும் சு. பிரியதர்சினி 6ம் இடத்தினையும் சு.விபீசா 10 ஆம் இடத்தினையும் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

கலைத்துறையில் செ.பிருந்தா 3A சித்திபெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாமிடத்தினையும் வர்த்தகத் துறையில் கீர்த்திகா பொன்ராசா 3A, ஜர்சனா ஜெயமோகன் 3A, துசாந்தி கனகலிங்கம் 3A, திவ்வியா மோகனராஜா 3A சித்திகளையும் பெற்றுள்ள நிலையில் வர்த்தகப் பிரிவில் தோற்றிய அனைத்து மாணவிகளும்100 வீத சித்தியையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை இப் பாடசாலையில் இருந்து விஞ்ஞானப் பிரிவில் 55 மாணவிகளும் கலைப் பிரிவில் 52 பேரும் வர்த்தகப் பிரிவில் 46 பேரும் உயிரியல் தொழில்நுட்பப்பிரிவில் 48 மாணவிகளும் தோற்றியிருந்தனர்.

44 லட்சம் ரூபா பெறுமதியான காரை கடத்திய மர்மநபர்கள்!!

44 லட்சம் ரூபா பெறுமதியான செல்லிடப்பேசிகளுடன் கார் ஒன்று கடத்தப்பட்டுள்ளது. செல்லிடப்பேசி விற்பனை பிரதிநிதியொருவரின் வாகனமே கடத்தப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து களுத்துறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது இனந்தெரியாத நான்கு பேர் கடத்தியுள்ளனர்.

44 லட்சம் ரூபா பெறுமதியான செல்லிடப்பேசிகள் மற்றும் 7 லட்சம் ரூபா பெறுமதியான பணம் என்பன இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாகனத்தை கடத்தி வாகன குறித்த விற்பனைப் பிரதிநிதியை கொலன்னாவ பிரதேசத்தில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

கடத்தல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலயத்தில் 4 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குத் தகுதி!!

அண்மையில் வெளியாகிய க.பொ.த.( உயர் தர) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலய மாணவன் மணிவேல் தர்மசீலன் உயிர்முறைகள் தொழிநுட்பப் பிரிவில் 3A சித்திகளைப் பெற்று வடமாகாணம் மற்றும் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தினையும் அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் இடத்தினையும் பெற்று பாடசாலைக்கு மட்டுமல்லாது மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.தர்மரட்ணம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..

உயிர்முறைகள் தொழிநுட்பப் பிரிவில் மணிவேல் தர்மசீலன் 3A சித்திகளைப் பெற்று மாவட்டநிலை ரீதியில் முதலாம் இடத்தினையும் அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் இடத்தினையும், நவரட்ணராசா கிருசாயினி B2C சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் எட்டாம் இடத்தினையும் கணிதப்பிரிவில் மனோகரன் அருன்ராஜ் ABC சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 14வது இடத்தினையும் கனேஸ் உசாந்தன் C2S சித்திகளையும், வர்த்தகப்பிரிவில் முருகதாஸ் மோகன்ராஜ் A2B சித்திகளையும் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

கணிதப்பிரிவில் மாணவர் ஒருவர் எமது பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியது இதுவே முதற்தடவையாகும். எமது பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து உள்ளிட்ட கஸ்ரங்களுக்கு மத்தியிலேயே இங்கு வந்து கற்பதுடன் ஆசிரியர்களும் போக்குவரத்து தொடர்பில் பிரச்சனைகளை எதிர் கொண்டுள்ள நிலையிலேயே அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர்.

வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலயத்தில் இவ்வாண்டு பரீட்சை எழுதியோரில் 4 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தகுதிபெற்றுள்னர் எனவும் அவர் தெரிவித்தார்.

யாழில் வறுமையின் காரணமாக கீரைவிற்ற சிறுமிக்கு கிடைத்த அதிஸ்டம்!!

யாழ்.சாவகச்சேரி பொதுச் சந்தையில் வறுமை காரணமாக கீரை வியாபாரம் செய்த நிலையில் தாக்குதலுக்குள்ளான சிறுமிக்கு பல்கலைக்கழக கல்வி வரை உதவித்தொகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றம் குறித்த உதவியை செய்ய முன்வந்துள்ளது.

அண்மையில் சாவகச்சேரி பொதுச் சந்தையில் கீரை வியாபாரத்தில் ஈடுபட்ட சிறுமி மீது சக பெண் வியாபாரி தாக்கிய சம்பவம் அனைவர் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து சிறுமியின் கற்றல் நடவடிக்கைகளுக்கு உதவ சமூக அமைப்புக்கள் பல முன்வந்துள்ளன.

தாக்குதலுக்குள்ளான சிறுமிக்கும் அவரது சகோதரிக்கும் கற்றல் நடவடிக்கைகளுக்காக சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தினர் நிதிக் கொடுப்பனவுகளை மாதாந்தம் வழங்க முன் வந்துள்ளனர்.

மாதம் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் வீதம் இவர்களின் பல்கலைக்கழக கல்வி வரை இக்கொடுப்பனவு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த உதவித் தொகையை தென்மராட்சியில் உள்ள 36 மாணவர்கள் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

மகளின் புத்தகத்தை படித்து 50 வயதில் உயர்தரப் பரீட்சை எழுதிய தாய்!!

மகளின் புத்தகத்தை படித்து 50 வயதில் தாயார் ஒருவர் உயர்தரம் பரீட்சை எழுதிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சுபாஷினி விக்ரமசிங்க என்பவர் உயர் தரத்திற்காக உயிரியல் பாடத்தில் தோற்றியுள்ளார். காணப்பட்ட சூழலுக்கு மத்தியில் உயர்தரத்திற்கு முகம் கொடுக்கும் சந்தர்ப்பம் ஒன்று அவருக்கு கிடைக்கவில்லை.

1986ஆம் ஆண்டு அவர் வீரகெட்டிய ராஜபக்ச மத்திய மகா வித்தியால மாணவியாக அவர் பரீட்சைக்கு ஆயத்தமாகியுள்ளார். பின்னர் பரீட்சையை தூரமாக வைத்துவிட்டு அவர் திருமணத்தை தெரிவு செய்துள்ளார். படிப்பதற்கு ஆசை இருந்த போதிலும் பிள்ளைகள் இருவரும் பெரியர்களாகும் வரை அவரது அந்த மூடி மறைக்கப்பட்டது.

குடும்பத்தில் இளைய மகள் கடந்த வருடம் உயர்தர பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளதோடு பல்கலைக்கழகத்திற்கும் தெரிவாகியுள்ளார்.

அம்மாவின் கல்வி ஆசைக்கு மகளிடம் இருந்து கிடைத்த உதவியினால் 2016ஆம் ஆண்டு அவர் உயர்தர பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளார்.

குறித்த தாயார் தனக்கு சீன மொழி கற்கும் ஆர்வம் இருந்ததாகவும், சீன மொழியை கற்று உயர்தரத்திற்கும் சீன மொழியை தெரிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மகளின் புத்தகங்களை தான் கற்றதாகவும் சுபாஷினி தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையில் அவர் சீன மொழியில் B சித்தியும், ஏனைய இரண்டு பாடங்களில் C சித்தியும் பெற்றுள்ளார்.

வவுனியா அருவித்தோட்ட சிவானந்தா வித்தியாலய பெற்றோர் மாணவர் இணைந்து ஆர்ப்பாட்டம்!!

 
வவுனியா, செட்டிகுளம், அருவித்தோட்டம் சிவானந்த வித்தியாலய மாணவர்களின் பெற்றோர் இன்று(09.01.2017) பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுட்டனர்.

குறித்த பாடசாலையில் 538 இற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விகற்கின்ற போதும் 15 ஆசிரியர்கள் மாத்திரமே கற்பிக்கின்றனர். பின் தங்கிய குறித்த பாசாலையில் தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பல பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதால் மாணவர்கள் கல்வியை தொடர முடியாத நிலை காணப்படுகின்றது.

பாடசாலையில் இடப்பற்றாக்குறை, தளபாடப்பற்றாக்குறை என்பன காரணமாக மரநிழல்களிலும், நிலத்திலும் இருந்தே மாணவர்கள் கல்வி கற்கின்றனர். எனவே, மாகாண, மத்தி அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிட்டு மாணவர்களின் கல்விக்கு உதவவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘வேண்டும் வேண்டும் ஆசிரியர் வேண்டும், கிராமப் புறப் பாடசாலைகளை புறக்கணிக்காதே, கல்வி அமைச்சரே எமது பிள்கைளின் எதிர்காலத்தை பாழாக்காதே, நல்லாட்சி அரசே எமது பிள்கைளை படிக்கவிடு’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களும் எழுப்பினர்.

இதேவேளை, இவ் விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தாவிடின் தாம் எதிர்வரும் நாட்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் பேவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களால் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண முதலமைச்சர், வடமாகாண கல்வி அமைச்சர், கல்வி இராஜாங்க அமைச்சர், வடமாகாண சுகாதார அமைச்சர் உள்ளிட்ட பலருக்கும் மஜர்களும் அனுப்பி வைக்கப்பட்டன.

 

வவுனியா கோவில்குஞ்சிக்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!

 
வவுனியா கோவில்குஞ்சிக்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் உள்ள குறைகளை நவர்த்தி செய்யுமாறு கோரி அப் பாடசாலையின் மாணவர்கள், பெற்றோருடன் கிராமத்தவர்களும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் இன்று(09.01.2017) ஈடுபட்டனர்.

நிர்வாகத்திறன் அற்ற பாடசாலை அதிபரை மாற்றவேண்டும், போதியளவு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், பௌதீக வளங்கள் பாடசாலைக்கு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பாடசாலை வாயிலை மறித்து இன்று காலை இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பாடசாலையில் 56 மாணவாகள் கற்று வந்த நிலையில் அம் மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கைகள் இடம்  பெறாமையினால் பெற்றோர் வேறு பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளை மாற்றி வருவதாகவும் இதன் காரணமாக பாடசாலை மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்கரர்கள் தற்போது 33 மாணவர்களே குறித்த பாடசாலையில் கற்று வருவதாகவும் தெரிவித்தனர்

இந் நிலையில் இப்பாடசாலையில் இருந்த ஆசிரியர்களில் நான்குபேர் மகப்பேற்று விடுமுறையிலும் மற்றைய ஆசிரியர் இடமாற்றம் பெற்றும் சென்றுள்ள நிலையில் அதிபரும் ஒரு ஆசிரியருமே 9ம் ஆண்டுவரை உள்ள இப்பாடசாலையில் கற்பித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

எனவே தமது பாடசாலையில் கற்கும் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை கருத்தில் கொண்டு உடனடியாக ஆசிரியர்களை நியமிக்வேண்டும் எனவும் இம் முறை புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு சிறந்த ஆசிரியரை நியமிக்குமாறும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அத்துடன் இப் பாடசாலையில் வட மாகாண சுகாதார அமைச்சரின் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட ஆசிரியர் விடுதி பயன்படுத்தப்படாமல் பாழடைந்து வருவதாகவும் தெரிவித்த பெற்றோர் இதற்கு ஆதிபரின் நிர்வாகத்திறன் அற்ற செயற்பாடே காரணம் எனவும் தெரிவித்தனர்.

இந் நிலையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் உதவி வலய கல்விப்பணிப்பாளர் திருமதி மாலதி முகுந்தன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களின் கோரிக்கைகளை செவிமடுத்ததுடன் இம் மாத இறுதிக்குள் அதிபரை மாற்றம் செய்வதுடன் மகப்பேற்று விடுமுறையில் உள்ள ஆசிரியர்களுக்கான பதிலீட்டு ஆசிரியர்களை உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி நியமிக்க ஆவண செய்வதாகவும் உறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டம் 11 மணியளவில் கைவிடப்பட்டிருந்தது.

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவன் ம.தர்மசீலன் 3A சித்திகளுடன் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்று சாதனை!!

நேற்று முன்தினம் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தர முடிவுகளின்படி உயிர் முறைமைகள் தொழினுட்பப் பிரிவில் வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவன் செல்வன் மணிவேல் தர்மசீலன் 3A சித்திகளை பெற்று மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் அகில இலங்கை ரீதியில் 5ம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

மிகவும் வறுமை நிலையிலும் பெற்றோர்களினதும் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் இம் மாணவன் இச் சாதனையை படைத்துள்ளமை இங்கு பெருமைப்படவேண்டிய விடயம்.

நகர்ப்புற பாடசாலைகளுக்கு நிகராக கிராமப்புற பாடசாலை மாணவர்களாலும் சாதிக்கமுடியும் என்பதை இம் மாணவன் நிரூபித்துள்ளார்.

மிகவும் வறிய நிலையில் உள்ள இம் மாணவன் மேற்படிப்பைத் தொடர்வதற்கு நல்லுள்ளம் கொண்டவர்கள் தம்மால் முடிந்த உதவிகளை வழங்குமாறு தாழ்மையுடன் கெள்ளுக்கொள்கின்றோம்.

உதவி செய்ய விரும்புவோர் செட்டிகுளம் பாடசாலை அதிபரின் கீழுள்ள தொலையேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு நேரடியாக உதவிகளை செய்யமுடியும்

தொடர்புகளுக்கு : 0772365649

தனது வெற்றிகுறித்து மணிவேல் தர்மசீலன் வவுனியா நெற் இணையத்திற்கு வழங்கிய பேட்டியில் பின்வருமாறு தெரிவித்தார்..

எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கின்றது. கஸ்ரப்பட்டுத்தான் படித்தேன். ஆனால் இப்படி வருவேன் என எதிர்பார்க்கவில்லை. எனது அம்மா, அப்பா தோட்டம் செய்து தான் என்னை படிக்க வைத்தார்கள். நானும் அவர்களுடன் இணைந்து விடுமுறைநாட்களிலும், மாலைவேளைகளிலும் தோட்டம் செய்துதான் படித்தேன்.

எனது கிராமம் செட்டிகுளம், நித்திக்குளம் என்ற மிகவும் பின் தங்கியது. இக் கிராமத்தில் இருந்து எனது பாடசாலை 9 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது. அதில் இரண்டு கிலோமீற்றர் தூரம் வாகனப் போக்குவரத்து இல்லை. நடந்து சென்று பிரதான வீதிக்குச் சென்று பேரூந்தில் ஏறி தான் பாடசாலை சென்று படித்தேன். சில நாட்களில் முதலாம் பாடம் முடிந்த பின் கூட நான் பாடசாலை போன சம்பவம் கூட இடம்பெற்றுள்ளது.

பிரத்தியேக வகுப்புக்கு இரண்டு பாடத்திற்கு சென்றிருந்தேன். அதற்கு 15 கிலோமீற்றர் பேரூந்தில் சென்றே படித்தேன். இப்படியான ஒரு பின்தங்கிய கிராமத்தில் இருந்து ஒரு விவசாயியின் மகன் வடமாகணத்தில் முதலிடம் பெற உழைத்தவர்களை என்னால் மறக்க முடியாது.

எனது பாடசாலை அதிபர், எனக்கு கற்பித்த ஆசிரியர்கள், நான் நடந்து செல்லும் போது சில சந்தர்பங்களில் என்னை ஏற்றி பேரூந்து வரும் பாதையில் இறக்கிவிட்ட இந்த ஊர் மக்கள், எல்லாவற்றுக்கும் மேலாக தமது வியர்வை சிந்தி என்னை படிக்க வைத்த அம்மா, அப்பா எல்லோருக்கும் எனது நன்றிகள்.

எதிர்காலத்தில் பரீட்சை எழுதவுள்ள எனது தம்பி, தங்கையர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், ஒரு விவசாயி மகனான என்னால் நடந்து சென்று இவ்வளவு கஸ்ரத்திற்கு மத்தியில் சாதிக்க முடிந்திருக்கின்றது என்றால் ஏன் உங்களால் முடியாது. நிச்சயமாக ஒவ்வொரு மணித்துளிகளையும் பயனுள்ளதாக பன்படுத்துங்கள். வெற்றி பெறுவீர்கள் எனத்தெரிவித்தார்.

பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்த இம் மாணவனை வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துவதில் பெருமைக்கொள்கின்றோம்.

சென்ற ஆண்டும் செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவன் செல்வன் யோகேந்திரன் யனுசன் இயந்திரவியல் தொழிநுட்பப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் 1ம் இடத்தைப் பெற்றுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மகாவிஷ்ணு தேவஸ்தான வைகுண்ட ஏகாதசி!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மகாவிஷ்ணு தேவஸ்தானத்தில் நேற்று 08.01.2017 ஞாயிற்றுக்கிழமை வைகுண்ட ஏகாதசி விரதம் மிக சிறப்பாக இடம்பெற்றது !
காலை 108 சங்காபிசேகமும்இரவு எழுமணிளவில் முதலாம் ஜாமப்பூசையும்இரவு எட்டரை மணிக்கு இரண்டாம் ஜாமப்பூசையும்
நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் மூன்றாம் ஜாம பூஜையின் பின் சொர்க்க வாசல் திறக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
தொடர்ந்து இன்று 09.01.2017 திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் நான்காம் ஜாம பூசை இடம்பெற்று காலை ஆறுமணியளவில் வசந்த மண்டப பூஜையின் பின்னர் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது .

வவுனியாவில் காணாமல்போன கிணறு கண்டுபிடிப்பு!!

 
வவுனியா நகரின் பிரதான வீதியிலிருந்த குளாய்க்கிணறு இன்று(09.01.2017) வவுனியா நகரசபையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வவுனியா நகரசபையின் செயலாளர் ஆர். தயாபரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

கடந்த வாரம் வவுனியா நகரின் பிரதான வீதியின் அருகே காணப்பட்ட பொதுக்கிணறு ஒன்று காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டிருந்தது.

இன்று சம்பவ இடத்திற்குச் சென்று நகர சபையின் ஊழியர்களின் உதவியுடன் தோண்டிப்பார்த்தபோது குளாய்க்கிணறு இருப்பது தெரியவந்தது. எனினும் அதை எவரும் பயன்படுத்தவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அப்பகுதியில் குளாய்க்கிணறு பொருத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றோம். இன்னும் இரண்டு வராங்களில் அந்தப்பகுதியில் குளாய்க்கிணறினை புனர்நிர்மானித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்படவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

வவுனியா சகாயமாதபுரம் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் ஜனாதிபதியின் இரண்டு வருட சேவைபூர்த்தியை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடு!

வவுனியா சகாயமாதபுரம் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் இலங்கை சனநாயக  சோஷலிச  குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் இரண்டு வருட சேவைபூர்த்தியை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடு இன்று(08.01.2017) காலை ஆலய பிரதமகுரு  சிவஸ்ரீ சிவசங்கர குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

ஆலய   நிர்வாக உறுப்பினர்கள்  மற்றும்  கிராம பொதுமக்களின்  பங்கு பற்றலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில்  விசேட பூஜை  வழிபாட்டினை தொடர்ந்து   ஆலயத்தை சூழவுள்ள பகுதிகளில் மரக்கன்றுகள்  நாட்டபட்டது.

படங்கள் :சிவசங்கர்