16 அறுவை சிகிச்சைகள்: ஓராண்டின் பின் குணமான வங்கதேச மர மனிதன்!!

மர மனிதன் என அறியப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த அபுல் பாஜாந்தர், கடந்த ஒரு வருட கால சிகிச்சையின் பின்னர் குணமாகியுள்ளார்.

வங்கதேசத்தின் தென்கிழக்கு கடலோர மாவட்டமான கால்னா பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி அபுல் பாஜாந்தர் (24), எபிடர்மாடிஸ்பிளாசியா வெருசிபார்மிஸ் எனும் அரியவகை மரபு நோயால் பீடிக்கப்பட்டிருந்தார்.

இந்த நோயினால் அவரது கை மற்றும் கால்களில் மருக்கள் வளர்ந்து, கடினமான தோல் வேர்கள் போல் வளர்ந்ததன் காரணமாக அவரை மக்கள் மர மனிதன் என அழைத்தனர்.

இந்த நோய் தாக்கியதன் பின்னர், பெற்றோரின் மறுப்பையும் மீறி ஹலிமா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு 3 வயதில் ஒரு குழந்தையும் தற்போது உள்ளது.

குழந்தை பிறந்த பின்னரே அபுலுக்கு கை, கால்களில் மருக்கள் நீளமாக வளர ஆரம்பித்தன. இதனால் அவரால் முச்சக்கரவண்டி ஓட்டும் தொழிலிலும் ஈடுபட முடியாமற்போனது.

அபுலுக்கு வந்த நோய் குறித்து அறிந்த டாக்கா மருத்துவக் கல்லூரி இலவச சிகிச்சை அளிக்க முன்வந்தது. அதன் அடிப்படையில், கடந்த ஒரு வருடமாக அபுல் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு அறுவைசிகிச்சை நிபுணர் சமந்தாலால் சென் தலைமையில் 16 அறுசை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு மருக்கள் அகற்றப்பட்டுள்ளன.

இன்னும் சில அறுவைசிகிச்சைகளின் பின்னர் அபுல் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அபுலின் சிகிச்சைகளுக்காக நல்லுள்ளம் படைத்த பலரும் உதவிகளை செய்துள்ளனர்.

மரநோய் தாக்கம் என அறியப்படும் மிகவும் அரிதான மரபணு மாற்ற நோயினால் உலகத்தில் நால்வர் பீடிக்கப்பட்டுள்ளனர். இந்நோயினால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவர் கடந்த ஆண்டு உயிரிழந்தார்.

மருத்துவ உலகில் இந்த நோய் தாக்கி முழுவதும் குணமான முதல் நபர் அபுல் மட்டும் தான்.

80 மாணவர்களது பெறுபேறுகள் இடைநிறுத்தம்!!

இம்முறை கஸ்டப் பிரதேசங்களில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றிய 80 மாணவர்களது பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பரீட்சைகள் திணைக்களத்திற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.

கோட்டா முறையில் கஸ்டப் பகுதி பாடசாலை மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்துக்கான அனுமதி வழங்கப்படுகின்றது.

இந்தநிலையில் இந்த சிறப்புச் சலுகையைப் பெற ஏனைய பகுதி மாணவர்கள் கஸ்டப் பிரதேசங்களுக்கு சென்று பரீட்சைகளை எழுதுவதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, கல்வி அமைச்சினால் இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், இந்த விவகாரம் குறித்து ஆறு அதிபர்களை பணி நிறுத்தம் செய்ய கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 2 1/2 வயதுக் குழந்தையை கொன்ற தாய்!!

தமிழகத்தின் கடலூர் அருகே கள்ளக்காதல் ஜோடி உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த இரண்டறை வயது குழந்தையைக் கொன்று தண்ணீர் தொட்டிக்குள் வீசியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மஞ்சக்குப்பம் புவனேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் முகமது அலி, இவர் தள்ளுவண்டியில் நூடுல்ஸ் வியாபாரம் செய்து வருகிறார்.

சமீபத்தில், இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அஷா என்பவருக்கும் திருமணம் முடிந்து இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 4 மாதங்களுக்கு முனர் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

இதைத் தொடர்ந்து, முகமது அலி வேலூரைச் சேர்ந்த சகீலா பானு என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார், குழந்தை முகமது அலியிடம் வளார்ந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 3 ஆம் திகதி குழந்தை காணாமல் போயுள்ளது. முகமது அலியும், உறவினர்களூம் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது முகமது அலி வீட்டின் தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை சடமாக மீட்கப்பட்டுள்ளது.

இதையறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில், குழந்தை கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, பொலிசார் குழந்தை சகிலா பானுவுடன் இருந்தபோதுதான் கொல்லப்பட்டது என தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சகிலா பானு கூறிய வாக்குமூலம் அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது.

பொலிசார் விசாரணையில், சகிலா பானுவுக்கும் பூவராக மூர்த்திக்கும் கடந்த 2 மாதங்களாக கள்ளக்காதல் இருந்துள்ளது. முகமது அலி வியாபாரத்துக்கு வெளியே சென்ற பிறகு இருவரும் வீட்டில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 3 ஆம் திகதி கடந்த 3ஆம் திகதி சகிலா பானு வீட்டிற்கு சென்ற பூவராக மூர்த்தி அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது குழந்தை ஆஷா சத்தம்போ ட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பூவராக மூர்த்தி குழந்தை ஆஷாவை கழுத்தை நெரித்து கொன்று யாருக்கும் தெரியக் கூடாது என்பதற்காக இருவரும் சேர்ந்து குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் வீசியுள்ளனர்.

இதனை வாக்குமூலமாகவும் பூவராகமூர்த்தி பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

200,000 டொலர் மோசடி : கனேடிய பொலிஸாரிடம் சிக்கிய இலங்கைத் தம்பதி!!

பண மோசடியில் ஈடுபட்ட இலங்கை தம்பதி கனடா பொலிஸில் சரணடைந்துள்ளதாக செய்தியொன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இன்னொருவரின் வீட்டை அடகு வைத்து இரண்டாவது தடவையாகவும் கடன் பெற்ற கணவனும், மனைவியும் வேறு வழி இல்லாமல் கனடா பொலிஸில் சரணடைந்துள்ளனர்.

கணவன் – வயது 57, மனைவி வயது – 54 ஆகியோரே போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடி செய்துள்ளனர்.

2015ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அளவில் முதல் தடவை விண்ணப்பித்து பெருந்தொகை ரொக்க பணத்தை கடன் பெற்றனர்.

இதே போல 200,000 டொலர்களை புதிதாக விண்ணப்பித்து கடன் பெற்ற நிலையிலேயே மாட்டிக் கொண்டுள்ளனர்.

வீட்டு உரிமையாளர் உண்மையான ஆவணங்களை காண்பித்து சட்ட நடவடிக்கை எடுத்தார். இருவரின் புகைப்படங்களையும் பொலிஸார் வெளியிட்ட நிலையிலேயே வேறு வழி இல்லாமல் இவர்கள் சரணடைந்தனர்.

பின்ஞ் அவனியூ வேஸ்ட் நீதிமன்றத்தில் இவர்கள் மீதான வழக்கு அடுத்த மாதம் 24ம் திகதி இடம்பெறவுள்ளது. 5000 டொலர்களுக்கு மேல் மோசடி செய்ததாக வழக்கிடப்பட்டுள்ளது.

வவுனியா கற்பகபுரத்தில் 130 பேருக்கு காணி அனுமதிப்பத்திரங்கள்!!

 
வவுனியா புதிய கற்பகபுரம் பகுதியில் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்களில் 130 பேருக்கு இன்று (08.01.2017) காலை 10.30 மணியளவில் காணி அனுமதிப்பத்திரம் வழங்கிவைக்கப்பட்டது.

கடந்த கால யுத்தம் காரணமாக நலன்புரி நிலையங்களில் உறவினர்களின் வீடுகளில் தங்கியிருந்தவர்களுக்கு புதிய கற்பகபுரம் பகுதியில் காடழிக்கப்பட்டு தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு பல வருங்களின் பின்னர் இன்று காணி அனுமதிப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், சிறிரேலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா, வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, அப்பகுதி கிராமசேவையாளர், காணி உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்திச்சங்கம், மாதர் அபிவிருத்திச்சங்கம், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா நெளுக்குளம் இளையநிலா இளைஞர் கழகத்தின் மைதான புனரமைப்பும், கட்டிட திறப்பு விழாவும்!!

 
தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் கழக சம்மேளனம், மற்றும் இலங்கை இளைஞர் பாராளுமன்றம் ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் “Youth Got Talent” மக்கள் கருத்திட்டத்தில் 1500 வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா பிரதேச செயலக பிரிவில், நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் இளையநிலா இளைஞர் கழகம் மற்றும் தேசிய இளையர் சேவைகள் மன்றத்தின் நிதி மற்றும் மக்கள் பங்களிப்புடன் நிறைவு பெற்ற மைதான புனரமைப்பும்,கட்டிட புனரமைப்பு என்பவற்றின் திறப்பு விழா இன்றைய தினம்(08.01.2017) இளைஞர் சேவை அதிகாரி அஜித் சந்திரசேன தலைமையில் கிராம மக்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இன்றைய நிகழ்வின் பிரதம அதிதியாக வட மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதிகளாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோதாராலிங்கம், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா க.சந்திரகுலசிங்கம்(மோகன்), இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கௌரவ அதிதிகளாக முன்னாள் செட்டிகுள பிரதேச சபை உறுப்பினர் திரு ஜெகதீஸ்வரன்(சிவம்), இளைஞர் கழக வவுனியா பிரதேச சம்மேளன தலைவர் திரு.ரவி, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டீபன், கிளிநொச்சி மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் திரு.கமலதாசன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர் திரு.சந்திரபத்மன்(பாபு) ஆகியோருடன் கிராம மட்ட அமைப்புகளின் தலைவர், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியா தவசிகுளம் முத்துமாரியம்மன் ஆலய சிரமதானமும், கலந்துரையாடலும்!!

 
வவுனியா தவசிகுளம் முத்துமாரியம்மன் ஆலயத்தின் சிரமதானப் பணியும், ஆலயத்தின் வளர்ச்சி தொடர்பான கலந்துரையாடலும் இன்றையதினம்(08.01.2017) ஆலயத் தலைவர் பாபு தலைமையில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் உறுப்பினர் வ.பிரதீபன் ஒழுங்கமைப்பில் ஆலயத்தில் நடைபெற்றது.

கலந்துரையாடலில் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதா க.சந்திரகுலசிங்கம்(மோகன்), தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டீபன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளரும், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீகரன் கேசவன், கழகத்தின் உப தலைவர் பி.கெர்சோன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 4.5 மில்லியன் பெறுமதியான பொருட்கள் பயனாளர்களுக்கு வழங்கல்!!

 
வவுனியாவில் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (08.01.2017) காலை 9 மணியளவில் மாவட்ட செயலகத்தில் திட்டப்பணிப்பாளர் கிருபாசுதன் தலைமையில் தேசிய நல்லினக்க ஒருமைப்பாட்டுக்குமான திட்டத்தினை அமுல்படுத்தும் முகமாக 4.5 மில்லியன் பெறுமதியான பொருட்கள் 181பயணாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

120 பயனாளிகளுக்கு 5லீட்டர் பால் கான் , 61 பயனாளிகளுக்கு 10லீட்டர் பால் கான், 20 பயணாளிகளுக்கு புல் வளர்ப்பிற்கான உபகரணங்கள், கால் நடை சங்கத்திற்கு பால் சேகரிப்புகான 1.37 மில்லியன் பெறுமதியான பட்டா ரக வாகனம் என்பனவற்றை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் , வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகன புஸ்பகுமார , வடமாகாண சபை உறுப்பினர்களான ஜெயதிலக, G.T.லிங்கநாதன் , வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் கா.உதயராசா ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்.

கமலை பற்றிய கேள்வி : கோபத்தில் பேட்டியிலிருந்து வெளியேறிய கௌதமி!!(வீடியோ)

சமீபத்தில் வானொலி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை கௌதமி தன்னிடம் கேட்கப்பட்ட ஒரு சில கேள்விகால் கோபம் அடைந்து பேட்டியை இடைநிறுத்தம் செய்து வெளியேறியுள்ளார்.

பேட்டியின் போது அவரிடம், கமலை எதற்காக பிரிந்தீர்கள்? ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மோடிக்கு எழுதப்பட்ட கடிதம். இவைகளை விளம்பரத்திற்காக செய்தீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

இதனால் கோபம் அடைந்த கௌதமி, நான் பேட்டியை முடித்துக்கொள்கிறேன். முதல் முறையாக ஒரு பேட்டியிலிருந்து வெளியேறுவது இப்போதுதான் என கூறியுள்ளார்.

வெளியாகிய AL பெறுபேறுகளின் பின்னர் மாணவர்கள் தமது எதிர்காலத்தை திட்டமிடுவது எப்படி?

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்பொழுது வெளியாகியுள்ளன. பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு விசேடமான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு சித்தியெய்திய மாணவர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்களை பட்டப்படிப்பிற்கு தெரிவு செய்வதற்கான போட்டிப் பரீட்சை இது என்பதால் பல்கலைக்கழக அனுமதி கிடைக்கும் மாணவர்களை விட அனுமதி கிடைக்காத மாணவர்கள் தொகையே அதிகமாகும்.

பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களை எப்படி நகர்த்துவது? அல்லது அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் எனும் கேள்வியும் எழுகின்றதல்லவா? பிரதானமாக கீழ்வரும் ஐந்து விடயங்களில் ஈடுபட அவர்கள் உந்தப்படலாம்..

1. இன்னுமொரு தடவை முயற்சித்தல்.
2. வெளிவாரியாகப் பதிவு செய்தல்.
3. டிப்ளோமா கற்கைகளை தொடருதல்.
4. தொழில் தேடித் திரிதல்.
5. சுய தொழில் செய்ய முயற்சித்தல்.

இவற்றில் தமக்கு எது பொருத்தமோ அவற்றை மாணவர்கள் தேர்ந்தெடுப்பர். ஆனால் எது மிகப் பொருத்தமாக இருக்கும் என்பதை கற்றவர்கள் மற்றும் துறைசார் விடயம் தெரிந்தவர்கள் மாணவர்களுக்கு அறிவுரையாக வழங்க வேண்டும்.

கவலைக்குரிய விடயம் என்னவெனில் எம்சார் மக்களிடையே ஒரு பொதுவான அபிப்பிராயம் இருக்கிறது. A/ L படித்தால் கம்பஸ் போக வேண்டும். இல்லையேல் அத்துடன் படிப்பை விட்டு வேலைக்கு போக வேண்டும். இந்த அடிப்படைவாத மனநிலை மாணவர்களிடம் மட்டுமல்ல பெற்றோரிடமும் இருந்தால் அவை மாற வேண்டும்.

இன்னுமொரு தடவை முயற்சித்தல்..

முதல் தடவைப் பெறுபேறுகளில் கணிசமான முன்னேற்றத்தை கண்டவர்களும்.. இன்னுமொரு தடவை அதிக புள்ளிகளைப் பெறுவேன் எனும் தன்னம்பிக்கை உடையவர்களும்.. மறு தடவை முயற்சித்தல் நன்று.

பாடசாலைக்காலத்தோடு உடனடியாகவே அடுத்த தடவை முயற்சிக்கும் போது அவர்களுக்கான ஞாபக சக்தி அதிகமானதாக இருக்கலாம். குறிப்பேடுகள், மாதிரி வினாத்தாள்கள் கைவசம் இருக்கலாம். ஆகவே இவர்களுக்கு அடுத்த தடவை முயற்சித்தல் என்பது இலகுவானதாகவும் இருக்கலாம்.

ஆனால் வீட்டாரின் அல்லது விருப்பமுடையோரின் அழுத்தத்தினால் வேண்டா வெறுப்புடன் அடுத்த தடவை முயற்சிப்பது என்பது காலத்தை வீணடிக்கும் செயலாக அமைந்து விடும் என்பதையும் கவனத்திலெடுக்க வேண்டும்.

வெளிவாரியாக பதிவு செய்தல்..

உயர்தரத்தில் சித்தி பெற்று பல்கலைக்கழக அனுமதி கிடைக்காதவர்கள், அதே அரச பல்கலைக்கழகங்களில் வெளிவாரியாக பதிவு செய்ய முடியும்.

உண்மையில் பல்கலைக்கழக அனுமதி பெற்று உள்வாரியாக பரீட்சை எழுதும் மாணவர்கள் பெறுகின்ற பட்டத்திற்கு நிகரானதாகவே.. வெளிவாரியாக பரீட்சை எழுதும் மாணவர்களும் பெறுகிறார்கள். கற்கைக்கான கால எல்லைகளும் கிட்டத்தட்ட ஒரே அளவிலேதான் இருக்கின்றன.

உள்வாரி மாணவர்களுக்கு பல்வேறுபட்ட கட்டுப்பாடுகள் இருந்தாலும்.. அவ்விதமாக அதிகளவான கட்டுப்பாடுகள் வெளிவாரி மாணவர்களுக்கு இருப்பதில்லை.

தமக்கென ஒரு வேலைவாய்ப்பைப் பெற்று, அதனூடாக கிடைக்கும் வருமானத்தோடு, வீட்டோடு இருந்தபடி இப் பட்டப்படிப்பை தொடரக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது.

அரச வேலைவாய்ப்புக்கான போட்டிப் பரீட்சைகள் என்றாலும் சரி நேர்முகத் தேர்வுகள் என்றாலும் சரி பட்டம் தான் பார்க்கப்படுகிறதே தவிர, உள்வாரியா? வெளிவாரியா? என்பது கவனிக்கப்படுதல் அரிது. இதனை உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதி கிடையாத மாணவர்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்.

ஒப்பற்ற இலவசக்கல்வியைப் பெறுகிறோம். காசுக்காக அரச கல்வித்துறைசார் பல்கலைக்கழக பட்டங்களை விற்காத நாட்டில் வாழ்கிறோம். பல வழிகளிலும் பட்டக்கல்வியை பூர்த்தி செய்யக்கூடிய வசதி வாய்ப்புகள் இருக்கின்றன. பட்டதாரியானால் உரிமையுடன் வேலை வாய்ப்பைக் கோரி மனுக்களை சமர்ப்பிக்கவும் ஆர்ப்பாட்டம் செய்யவும் துணிகிறோம். இப்பேற்பட்ட பெறுமதியானதாகக் கருதப்படும் வெளிவாரியை மாணவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டிய பொறுப்பும் படித்தோருக்கு உண்டல்லவா.?

இவ்வளவும் இருந்தும்.. உயர்தரம் சித்தி அடைந்து பல்கலைக்கழக அனுமதி கிடைக்காது விட்டவுடன் மனமுடைந்து போகிறார்கள். இருப்பினும் அதனை ஒரு சவாலாக நினைத்து பல்வேறு வழிகளிலும் முயற்சித்து வெளிவாரிப் பட்டங்களை பெற்றுக்கொள்ளும் மாணவர்களும் இருக்கிறார்கள். ஆனால் ஒப்பீட்டளவில் குறைவென்பது மனவருத்தமே..

டிப்ளோமா கற்கைகளைத் தொடருதல்..

க.பொ.த. உயர்தரச் சித்தியுடன்.. பல அமைச்சுக்களினூடாகவும் டிப்ளோமா கற்கைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும். அவை பெரும்பாலும் தொழில் வாய்ப்புக்கான துறைசார் பாடநெறிகளைக் கொண்டிருக்கும்.

பல்கலைக்கழக பட்டக்கல்விக்கான காலப்பகுதிகளை விட இவை குறைவானவையாகவே பெரும்பாலும் இருக்கும். அந்தந்த அமைச்சுக்கான டிப்ளோமாதாரிகளுக்கு அவ் அமைச்சுக்களினூடாக கோரப்படுகின்ற வேலைவாய்ப்புக்களை பெறுவதும் இலகுவானதாகும்.

உயர்தரத்தில் கற்றுக்கொண்ட பாடங்களுக்கு பொருத்தமாகவும்.. வேலை வாய்ப்பை இலகுவாகப் பெறக்கூடியதாகவும் இருக்கின்ற டிப்ளமோ பாட நெறிகளை இம் மாணவர்கள் தொடருவதே அவர்களுக்கு பொருத்தமானதாக இருக்கும்.

அத்துடன்.. அரச தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழில் வழிகாட்டல் நிறுவனங்களும் இயங்குகின்றன. இவர்கள் மூலமாகப் பெறப்படும் சான்றிதழ்கள் பொருத்தமான வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருப்பதோடு அவர்களே வேலைத் தளங்களையும் இனங்காட்டித் தருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்றும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களின் குறுகிய கால கற்கை நெறிகள் அரச சார்பற்ற நிறுவனங்களின் பயிற்சி நெறிகள் என்பனவையும் மாணவர் நலன் கருதி செயற்படுகின்றன. இவற்றை மாணவர்கள் கண்டறிய தெரிந்தவர்கள் சுட்டிக்காட்டல் வேண்டும்.

தொழில் தேடித் திரிதல்..

க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகிய மறு தினமே.. தொழில் வாய்ப்புக்களை தேடித் திரிவதற்கென ஒருபகுதி மாணவர்கள் தயாராகி விடுவார்கள்.

இவர்களில் பெரும்பாலானவர்கள்.. கற்றல்ச் சூழலில் ஈடுபாடு அற்றவர்களாகவும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்டவர்களாகவும் இருப்பார்கள். அத்துடன் குறிப்பிட்ட தொழிலை மட்டும் தேடுபவர்களாக இருக்க மாட்டார்கள். எதுவானாலும் செய்யத் தயார் எனும் மனநிலையுடன் காணப்படுவார்கள்.

இவர்களுக்கும் பெரியவர்களினால் சரியானதொரு வழிகாட்டல் தேவைப்படும். தொழில் என்பது மனதிற்கு பிடித்ததாகவும் உடல் தகுதிக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும் என்பதைத் தெளிவு படுத்தல் வேண்டும். எதிர்காலத்தில் நின்று நிலைக்கக்கூடியதான தொழிலை சரியாக இனங்காட்டிக் கொடுத்தல் வேண்டும்.

அவர்களது குடும்ப நிலைக்கேற்ற தொழில் நிறுவனங்களோடும்.. முதலாளிமார்களோடும் இவர்களை தொடர்பு படுத்தி விடுவதே பொருத்தமானதாக இருக்கும்.

சுய தொழில் செய்ய முயற்சித்தல்..

இவர்கள் பெரும்பாலும் உயர்தரப் பரீட்சை எழுதியவுடன் தொழில் சார்ந்து சிந்திப்போராக இருப்பர். பெற்றோர் வழிவரும் தொழிலாகவும்.. நண்பர்கள் ஊடாக தாம் விரும்புகின்ற தொழிலாகவுமே இவர்கள் தெரிவு செய்யக்கூடிய சாத்தியப்பாடு இருக்கிறது.

இம்மாணவர்கள் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பர். வசதி படைத்தவர்களாகவும் இருப்பர். அல்லது கடன்பட்டாவது தொழிலில் முன்னேறும் மனவுறுதி கொண்டவர்களாக இருப்பர்.

எது எப்படி இருப்பினும் இவர்களை பெற்றவர்களும் மற்றவர்களும் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. காரணம் கட்டுப்பாடுகள் நிறைந்த பாடசாலைச் சூழலிலிருந்து தற்போது பரந்துபட்ட சமூகச்சூழலோடு இணைக்கப்படுகிறார்கள். பெருந்தொகை பணத்தைக் கையாள்வார்கள். எனவே இவர்களுக்கும் பொருத்தமுடையோரின் ஆலோசனைகள் தேவைப்படலாம்.

ஆகவே.. பல்கலைக்கழக அனுமதி கிடைத்த மாணவர்களுடன் சேர்ந்து நாமும் சந்தோசப்படுவதுடன்.. அனுமதி கிடைக்காத மற்றும் உயர்தரத்தில் சித்தியடையாத மாணவர்கள் தொடர்பாகவும் சிந்தித்தல் அவசியமாகிறது.

இவர்கள் ஒருவித தோல்வி மனப்பாங்கில் வேதனைக்குட்பட்டவர்களாக இருப்பார்கள். சிந்தனைச் சிதறல் கொண்டவர்களாக இருப்பார்கள். தடுமாற்றக்குணத்துடன் முடிவுகளை எடுக்கச் சிரமப்படுவார்கள். ஆகவேதான் இவர்களுக்குப் பொருத்தமான ஆலோசனைகள் இந்த நேரத்தில் தேவையென்பது வலியுறுத்தப்படுகிறது.

-முல்லைத்தீபன்-

பேருந்து ஒன்றில் இருந்து வீழ்ந்த நபர் பரிதாபமாக பலி!!

தனியார் பேருந்து ஒன்றில் இருந்து நபர் ஒரவர் வீழ்ந்து பரிதாபமாக பலியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (07.01) மாலை இடம்பெற்றுள்ளதாகவும், புஜாப்பிடி பிரதேசத்தினை சேர்ந்த நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், 60 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மகாவிஷ்ணு தேவஸ்தானத்தில் இடம்பெறவுள்ள வைகுண்ட ஏகாதசி!

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மகாவிஷ்ணு தேவஸ்தானத்தில் இன்று 08.01.2017 ஞாயிற்றுக்கிழமை  வைகுண்ட ஏகாதசி விரதம் மிக சிறப்பாக இடம்பெறவுள்ளது !

  •  இன்று காலை 108  சங்காபிசேகமும்
  • இரவு எழுமணிளவில் முதலாம் ஜாமப்பூசையும்
  • இரவு எட்டரை மணிக்கு இரண்டாம் ஜாமப்பூசையும்
  • நள்ளிரவு  பன்னிரண்டு மணியளவில்  மூன்றாம் ஜாம பூஜையின் பின் சொர்க்க வாசல் திறக்கும் நிகழ்வும்  இடம்பெறும்.
  • தொடர்ந்து 09.01.2017 திங்கட்கிழமை அதிகாலை   3.30  மணியளவில் நான்காம் ஜாம பூசை இடம்பெற்று   காலை ஆறுமணியளவில்  தீர்தோற்சவமும் இடம்பெறும் .

வைகுண்ட ஏகாதசி விரதத்தின் சிறப்புகள் !

08.01.2017 ஞாயிற்றுக்கிழமை வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கப்பட இருக்கிறது. அதனால் ஏகாதசி பற்றிய முழுமையான ஒரு பார்வை ஜெ.மயூரசர்மா( M.A) பிரதமகுரு வவுனியா கோவில்குளம் மஹாவிஷ்ணு தேவஸ்தானம்

தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான் முரன் என்னும் அசுரன். இதனால் அவனை அழித்து தங்களை காக்குமாறு ஈசனை துதித்தனர். அவர்களை மகாவிஷ்ணுவை சரணடைய கூறினார் சிவபெருமான். அதன்படி அனைவரும் விஷ்ணுவை சரணடைந்தனர். அவர்களை காக்க எண்ணிய மகாவிஷ்ணு, அந்த அசுரனோடு போர் புரியத் தொடங்கினார். போர் 1000 ஆண்டுகள் கடுமையாக நீடித்தது. அதன் பிறகு மிகவும் களைப்படைந்தவராய் மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார். அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு, ‘முரன்’ பகவானை கொல்லத் துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. இவளை அசுரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது. விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட நாராயணன், அந்த சக்திக்கு “ஏகாதசி” எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார்.

 

எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து நாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம். மார்கழி மாத சுக்கில பட்ச (வளர்பிறை) ஏகாதசி வைகுண்ட ஏகாதசி எனப்படுகின்றது. மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம்’ என்பது திருமால் வாக்கு என அவர்கள் நம்புகின்றனர். கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் என்னும் பதினொரு இந்திரியங்களால் செய்யப்படும் தீவினைகள் எல்லாம் இந்த பதினோராவது திதியில் விரதம் இருந்தால் அழிந்து விடும் என்பது நம்பிக்கை. ஏகாதசியன்று பகல் உறக்கம், இருவேளை சாப்பிடுதல், உடலுறவு என்பவற்றைத் தவிர்த்து விரதம் மேற்கொள்கின்றனர். ஒரு வருடத்தில் வரும் 24 ஏகாதசிகள்: வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் ஆரம்பித்து தொடர்ந்து வரும் விரத நாட்களிலும் (ஒவ்வொரு ஏகாதசியிலும்) விரதமாக இருந்தால் நமக்கு கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாது. சரியான முதலீடாக தேர்ந்தெடுத்தால் பயன்பல மடங்கு கிடைக்கும் என்பதை உணர்ந்தவர்கள் தானே நாம். எனவே ஏகாதசி விரதத்தில் முதலீடுசெய்வோம்.

 

மார்கழி தேய்பிறை ஏகாதசி “உற்பத்தி ஏகாதசி”” எனப்படும். பகையை வெல்ல உதவும். தை மாத வளர்பிறை ஏகாதசி “புத்ரா”” எனப்படும். இன்று கடைபிடிக்கும் விரதம் புத்திரபாக்யம் தரும். வம்சாவளி பெருக்கம் தரும் சந்தான ஏகாதசி ஆகும். தை தேய்பிறை ஏகாதசி “ஸபலா”” எனப்படும். இன்று பழங்கள் தானம் செய்வதால் ஒளிமயமான வாழ்க்கை அமையும். இல்லறம் இனிக்கும். மாசி மாத வளர்பிறை ஏகாதசி “ஜயா”” எனப்படும். அகால மரணம் அடைந்த மூதாதயர்கள் மோட்சம் பெறுவர். மன உளைச்சல் அகலும். வாழ்க்கையில் ஏற்படும் விரக்தி நம்மை விட்டு நீங்கும். மாசி மாத தேய்பிறை ஏகாதசி “ஷட்திலா”” எனப்படும். இன்று கொய்யாப்பழம் அல்லது கொட்டைப்பாக்கை வைத்து பூஜை செய்தால் பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கும். ஏழை பிராமணருக்கு இரும்பு வடைச் சட்டியில் எள்ளுடன் தானம் தர வேண்டும். மேலும் பாதுகை, கூடை, கரும்பு, நீருடன் தாமிரக்குடம், பசு முதலியவையும் சேர்த்து ஆறு பொருள் தானம் தந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆறுவகை தானம் செய்வதால் “ஷட்திலா”” என இந்த ஏகாதசி அழைக்கப்படுகிறது. பங்குனி தேய்பிறை ஏகாதசி “விஜயா”” எனப்படும். இந்த நாளில் 7 வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்று என அடுக்கு முறையில் பரப்பி கலசம் வைத்து மஹாவிஷ்ணுவை ஆவாகணம் செய்து பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறுவீர். வெளிநாட்டில் உள்ள நமது சொந்தங்கள் சிறப்படையும். கணவனை பிரிந்துவாடும் நங்கைகள் கணவனுடன் வெளிநாடு சென்று வாழ்க்கையை ஆரம்பிப்பர்.

 

பங்குனி வளர்பிறை ஏகாதசி “ஆமலகீ”” எனப்படும். இன்று நெல்லி மரத்தடியில் பரசுராமன் படம் வைத்து பூஜை செய்து நெல்லி மரத்தை 108 சுற்று சுற்றி பூப்போட்டால், புண்ணிய நதிகளில் நீராடிய பலனும், ஆயிரம் பசுதானம் செய்த அளவு பலனும் கிடைக்கும். சித்திரை மாதம் வளர்பிறை ஏகாதசி “காமதா”” எனப்படும். நமது விருப்பத்தை பூர்த்தி செய்யும் மேன்மை உண்டாகும். திருமண யோகம் தரும். சித்திரை தேய்பிறை ஏகாதசி “பாபமோசனிகா”” எனப்படும் பாபத்தை போக்கும்.

நல்ல பேற்றினை ஏற்படுத்தும். துரோகிகள் விலகுவர். வைகாசி வளர்பிறை ஏகாதசி “மோஹினீ”” எனப்படும். உடல் சோர்வு நீக்கும். பெண்களுக்கு உதிரப்போக்கை கட்டுப்படுத்தும். ரத்த சோகை அகலும். வளர்ச்சிக்காக காணும் கனவுகள் (சிந்தனைகள்) வெற்றிபெறும். வைகாசி தேய்பிறை ஏகாதசி “வரூதினீ”” எனப்படும். உடல் ஆரோக்கியம் தரும். சவுபாக்யம் எனும் அனைத்தும் கிடைக்கும்.

 

ஆனி மாத வளர்பிறை ஏகாதசிக்கு “நிர்ஜனா”” என்று பெயர். பீம ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. பீமபூஜை என்பதே ஆழ்மனதில் இறைவனை இருத்தி பூஜை செய்வது ஆகும். எனவே இந்த நாளில் உளப்பூர்வமாக பீமனையும் இணைத்து வழிபாடு செய்தால் வாழ்க்கையில் அனைத்து வெற்றியும் கிட்டும். வருடம் முழுவதும் உள்ள ஏகாதசி விரத பலன் கிடைக்கும். ஏனெனில் பீமன்வாயு அம்சம். ஆனி மாத தேய்பிறை ஏகாதசி “அபரா”” எனப்பெயர்படும். இன்று மகாவிஷ்ணுவின் திரி விக்கிரமப் பிரதிமையை பூஜை செய்தால் ஸ்ரீகேதாரிநாத், பத்ரிநாத் யாத்திரை சென்ற பலனும், கயாவில் தர்ப்பண்ம் செய்த பலனும், பிராயாகையில் புண்ணிய ஸ்நானம் செய்த பலனும் சிவராத்திரி விரத பூஜை பலனும் ஒருங்கே செய்த பலன் கிடைக்கும். ஆடி மாத வளர்பிறை ஏகாதசி “தயினி”” எனப்படும். இஷ்ட நற்சக்திகளை தர வல்லது. முன்னோர்களின் ஆசியையும், அவர்களது எதிர்பார்ப்புகளை நம் மூலம் செயல்படுத்தி நம்மை வெற்றியாளராக்குவது ஆகும்.
ஏழைகளுக்கு வஸ்திரதானம் செய்வதால் குடும்ப ஒற்றுமை ஓங்கும். ஆடி மாத தேய்பிறை ஏகாதசிக்கு “யோகினி”” என்று பெயர். இன்று வெண்கலம் அல்லது பித்தளை விளக்கு வசதி உள்ளவர்கள் வெள்ளி விளக்கு தானம் செய்ய கனவிலும் நினைக்காத கற்பனைக் கெட்டாத வாழ்க்கை அமையும். ஆவணி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு “புத்ரதா”” என்று பெயர். குழந்தைகள் கல்வியில் சிறக்கவும் விரும்பிய மேல்படிப்பு அமையவும், சிறந்த மாணவ- மாணவிகளாக திகழவும் செய்வார்கள். ஆவணி மாத தேய்பிறை ஏகாதசிக்கு “காமிகா”” எனப்படும். இன்று விரதம் இருந்து தனி துளசியால் மஹா விஷ்ணுவை அர்ச்சித்து வழிபாடு செய்ய சொர்ணம் வீட்டில் தங்கும் (தங்கம் நம் வீட்டில் தங்கும்). வீட்டில் பூஜை முடித்த பின் ஆலயம் சென்று ஐந்து நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் மன பயம் அகலும், மரண பயம் அகலும், கொடிய துன்பம் விலகும். ஆவணி மாத ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பழங்கள் மட்டுமே உண்டு விரதம் கடைபிடிக்க வேண்டும். காய்கறிகள் பயன்படுத்தக்கூடாது. புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசிக்குப் “பத்மநாபா”” எனப்படும்.
இந்த நாளில் விரதம் இருப்பதன் மூலம் இந்திரனும், வருணனும் இணைந்து வரம் தருவார்கள். நமது வீட்டு கிணறு, ஆழ்குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும். ஊருக்கும் தண்ணீர் பஞ்சம் வராது. புரட்டாசி மாத தேய்பிறை ஏகாதசிக்கு “அஜா”” என்று பெயர். அரிச்சந்திரன் இந்த நாளில் விரதம் இருந்து இழந்த நாட்டையும், மனைவி மக்களையும் பெற்று பல்லாண்டுஅரசு செய்தான். எனவே, நாமும் இவ்விரத நாளில் விரதம் கடை பிடித்தால் குடும்பத்துடன் ஆனந்தமாக இருப்போம். புரட்டாசி மாத ஏகாதசி விரத நாளில் கண்டிப்பாக தயிர் உபயோகிக்கக் கூடாது (சேர்க்கக்கூடாது). ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசிக்கு “பாபாங்குசா”” எனப்படும் வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பினி நீங்கும், நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும். ஐப்பசி மாத தேய் பிறை ஏகாதசிக்கு “இந்திரா”” எனப் பெயர் இன்று விரதம் இருந்து மூதாதயருக்கு சிரார்த்தம் செய்தால் அவர்கள் இந்திர வாழ்வு வைகுண்டத்தில் பெறுவதால் நம்மையும் மனங்குளிர இறைவன் வைக்க வேண்டுமென அருகில் உள்ள பகவானிடம் பரிந்துரை செய்வார்கள். ஐப்பசி மாத ஏகாதசி நாளில் பால் சாப்பிடக் கூடாது. கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசிக்கு “ப்ரமோதினீ”” என்று பெயர். கைசிக ஏகாதசி என்றும் அழைக்கப்படுகின்றது. இன்று கிடைக்கும் அனைத்து பழங்களையும் பகவானுக்கு நிவேதனம் செய்து வேண்டிக் கொண்டால் மங்கள வாழ்வு மலரும், பூலோக சொர்க்க வாழ்வு கிடைக்கும். கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசிக்கு “ரமா”” என்பர்.
இன்று இருக்கும் விரதம் இருபத்தியோரு தானம் செய்த புண்ணியம் தரவல்லது. வருடத்தில் கூடுதலாக வரும் 25தாவது ஏகாதசி “கமலா”” எனப்படும். கமலம் என்றாள் தாமரை. தாமரை மலரில் இருந்து அருள் தரும் அன்னை மகாலட்சுமியை இந்த நாளில் பூஜித்தால் நிலையான செல்வம் நிரந்தரமாக நம்வீட்டில் இருந்து வரும். ஆக பெருமாளின் 25 சக்திகளுக்கும் தனித்தனி விரதமாக இருப்பதும் (வைகுண்ட ஏகாதசியில்) “மோட்ச ஏகாதசியில்”” உண்ணாமல் அன்று முழுவதும் மட்டுமின்றி முன்பின் நாட்கள் பகலில் உறங்காமல் இருந்து செய்யும் வைகுண்ட ஏகாதசி விரதம். அனைத்து ஏகாதசியின் பலனையும் தரும். எனவே அனைவரும் இந்தப்புண்ணிய விரதத்தினைக் கடைப்பிடித்து வாழ்வில் நல்ல நிலையினை அடைவோமாக. “சர்வர்த்தன நாம சங்கீர்த்தனம் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா”

 

 

வவுனியா தமிழரசுக்கட்சி மாவட்ட கிளையின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்!!

 
இலங்கை தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட கிளையின் வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிர்வாக தெரிவும் இன்று (07.01.2017) காலை 10 மணியளவில் குருமண்காட்டில் அமைந்துள்ள (தாயகம்) மாவட்ட காரியாலயத்தில் மாவட்ட கிளையின் தலைவரும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சருமாகிய Dr.ப.சத்தியலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது புதிய நிர்வாக சபையில், தலைவராக Dr.ப.சத்தியலிங்கம், செயலாளராக சி.சிவசோதி இவர்களுடன் இணைந்து 25 நிர்வாகக் குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

வவுனியா நகர், செட்டிகுளம், வவுனியா வடக்கு ஆகிய பிரிவுகளை சேர்ந்த பல அங்கத்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இதன்போது வவுனியாவில் அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்மந்தனின் உருவப்படம் சில விசமிகளால் எரிக்கப்பட்டதற்கு ஏகமனதாக வவுனியா மாவட்ட தமிழரசுக்கட்சியின் பொதுச்சபையினால் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ் இந்துக் கல்லூரியில் 25 மாணவர்கள் 3A சித்திகளைப் பெற்று சாதனை!!

கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டன.

இதனடிப்படையில்யாழ் இந்துக் கல்லூரியில் கஜரோகணன் கஜானன் கணிதத் துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுக் கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார். மற்றும் இரவீந்திரன் பானுப்பிரியன் மாவட்ட மட்டத்தில் மூன்றாமிடத்தையும், சிவபாலன் சங்கீர்த்தனன் நான்காமிடத்தையும், செல்வரத்தினம் லாவர்த்தன் ஐந்தாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

மேலும் 14 மாணவர்கள் கணிதத் துறையில் 3A சித்தியையும் பெற்றுள்ளனர்.

உயிரியல் துறையில் திருஞானசம்பந்தன் ஆகாசன் மாவட்ட மட்டத்தில் மூன்றாமிடத்தையும், யோகேந்திரராசா சாகித்தியன் நான்காமிடத்தையும், திருமாறன் இளமாறன் ஐந்தாமிடத்தையும், மேலும் நான்கு மாணவர்கள் 3A சித்தியையும் பெற்றுள்ளனர்.

நீச்சல் குளத்தில் விழுந்து பலியான இரட்டைக் குழந்தைகள்!!

அவுஸ்ரேலியா நாட்டில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து இரட்டை குழந்தைகள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்ரேலியாவில் உள்ள சிட்னி நகரில் 23 மாதம் மட்டுமே ஆன இரட்டை குழந்தைகளுடன் பெற்றோர் வசித்து வந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் உள்ள நீச்சல் குளத்திற்கு அருகில் குழந்தைகள் இருவரும் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர்.

குழந்தைகளின் தாயார் வீட்டிற்குள் இருந்ததாக கூறப்படுகிறது. சில நிமிடங்களுக்கு பிறகு குழந்தைகளின் சத்தம் எதுவும் கேட்காததால் வியப்படைந்த தாயார் அங்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது, நீச்சல் குளத்தில் இரண்டு குழந்தைகளும் முழ்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறியுள்ளார்.

தாயாரின் அலறலை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்துச் சென்று குழந்தைகளை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.

ஆனால், குழந்தைகள் இருவரும் சுயநினைவின்றி இருந்ததால் அவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக் கொண்டு சென்றனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட குழந்தைகள் இருவரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்துள்ளனர். ஆனால், துரதிஷ்டவசமாக ஆண் குழந்தை அன்றே உயிரிழந்துள்ளது.

இச்செயதியை கேட்டு தாயார் கதறி அழுதுள்ளார்.

மேலும், மற்றொரு பெண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்களாக சிகிச்சை அளித்த நிலையிலும் இரண்டாவது குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது.

இரண்டு குழந்தைகளையும் இழந்துள்ள பெற்றோர் இருவரும் இதுவரை சோகத்தில் இருந்து மீளவில்லை. பெற்றோரின் எதிர்கால தேவைக்காக அப்பகுதி மக்கள் உயிரிழந்த குழந்தைகளின் பெயர்களில் சுமார் 25,000 டொலர் வரை நிதி வசூல் செய்துள்ளனர்.

மேலும், குழந்தைகள் இருவரு உயிரிழந்தது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.