யாஹூவில் நிகழ்ந்த ஊடுருவலால் ஒரு பில்லியன் பேர் பாதிப்பு!!

கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற கணினி வலையமைப்பு ஊடுருவல் (ஹேக்கிங்) சம்பவத்தில், ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயன்பாட்டாளர்களின் கணக்குகள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என யாஹூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பரில் வெளிப்படுத்தப்பட்ட, 2014 ஆம் ஆண்டு நடந்த ஒரு ஊடுருவலில் சுமார் 500 மில்லியன் கணக்குகள் ஊடுருவப்பட்டதாக யாஹூ கூறியிருந்தது.

ஆனால், 2013 சம்பவத்துக்கும், இந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான 2014ம் ஆண்டு ஊடுருவல் தொடர்பான சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்று இணையதள தள பெரு நிறுவனமான யாஹூ தெரிவித்துள்ளது.

பெயர்கள், தொலைப்பேசி எண்கள் மற்றும் கடவுச்சொற்கள் (பாஸ்வேர்ட்கள்) திருடப்பட்டதாகவும், ஆனால் வங்கி மற்றும் கட்டணம் குறித்த தகவல்கள் திருடப்படவில்லை என்றும் யாஹூ தெரிவித்துள்ளது.

தற்போது, வெரிசான் என்ற நிறுவனம் மூலம் யாஹூ கையகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த ஊடுருவல் குறித்து போலிஸ் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளது.

மீராஜாஸ்மின் விவாகரத்து செய்ய முடிவு?

மலையாள நடிகைகள் பலருக்கு குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக அமையவில்லை. காவ்யா மாதவன், ஜோதிர்மயி, மஞ்சு வாரியர், ஊர்வசி, சரிதா, மம்தா உள்பட பலர் கணவரை பிரிந்துள்ளனர்.

தற்போது நடிகை மீரா ஜாஸ்மினும் இந்த பட்டியலில் சேர்கிறார். இவர் தமிழில் ரன், சண்டக்கோழி, ஆய்த எழுத்து, திருமகன், மம்பட்டியான் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். மலையாளத்திலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார்.

மீராஜாஸ்மினுக்கும் துபாயில் பொறியியலாளராக பணியாற்றிய அனில்ஜான் டைட்டஸ் என்பவருக்கும் கடந்த 2014ம் ஆண்டு எதிர்ப்புகளுக்கு இடையில் திருமணம் நடந்தது.

அனில்ஜான் டைட்டசின் முதல் மனைவி தன்னை விவாகரத்து செய்யாமல் கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் போலீஸ் பாதுகாப்போடு இந்த திருமணம் முடிந்தது. ஆனாலும் திருமணத்தை பதிவு செய்ய அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

திருமணத்துக்கு பிறகு மீராஜாஸ்மின் சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு கணவருடன் துபாயில் குடியேறினார். மகிழ்ச்சியாக நகர்ந்த இவர்கள் குடும்ப வாழ்க்கையில் புயல் வீசத்தொடங்கி உள்ளது. மீராஜாஸ்மின் கணவரை பிரிந்து திருவனந்தபுரம் வந்து விட்டார். ஒரு வருடமாக இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.

தற்போது மலையாள படங்களில் மீராஜாஸ்மின் நடிக்க ஆரம்பித்துள்ளார். 10 கல்பனகள் என்ற படத்தில் அவர் நடித்துள்ளார். தொடர்ந்து பூமரம் என்ற படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். மீராஜாஸ்மின் மீண்டும் நடிக்க வேண்டும் என்று கணவரை வற்புறுத்தியதாகவும் அதற்கு அவர் சம்மதிக்காததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகவும் மலையாள பட உலகில் பேசப்படுகிறது.

கணவரை விவாகரத்து செய்ய வக்கீல்களுடன் அவர் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. விவாகரத்து குறித்து இருவரும் இன்னும் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை. மீராஜாஸ்மின் திருமண முறிவு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வடமாகாண கல்வித்திணைக்களத்தின் செயல்பாட்டால் ஏமாற்றத்துக்குள்ளான ஆரம்ப பிரிவு மாணவர்கள்! போட்டி நிகழ்ச்சியை காட்சி நிகழ்ச்சியாக்கிய அதிகாரிகளின் அசமந்தம்!

வடமாகாண கல்வித்திணைக்களத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டால் ஆரம்பக்கல்வி மாணவர்கள் உளப்பாதிப்பிற்குட்பட்டுள்ளனர். என எமது இணையத்துக்கு வந்த செய்தியின் உண்மை தன்மை பற்றி கல்வித்துறையினர் ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை  கருத்தில் கொண்டு இந்த  செய்தி பிரசுரிக்கப்படுகின்றது.

ஆரம்பக்கல்வி மாணவர்களிடம் திறண்களை வளர்க்கும் நோக்கில் வருடம்தோறும் திறண்விருத்திப்போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. அதற்கான போட்டிகள், போட்டிவிதிகள் ,போட்டிக்கான திகதிகள் அடங்கிய சுற்றுநிருபம் வருடஆரம்பத்திலேயே சகல ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டு அறிவுறுத்தல்களும் வழங்கப்படும்.

ஆனால் இவ்வாண்டு அவ்வாறான ஏற்பாடுகளைச்செய்ய மாகாண ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் முன்வரவில்லை. இவ்வாறான அதிகாரிகளின் அசமந்தப்போக்கு ஆரம்பக்கல்வி மாணவர்களை பெரும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது.

 ஒவ்வொரு  வருடமும் நடத்தப்பட்டு வந்த ஓரிரு போட்டிகளை இவ்வாண்டு நாடாத்தியதுடன் அதனையும் சீராக நடத்தவில்லை என ஆசிரியர்கள்,பெற்றோர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

கடந்த புதன்கிழமை 07.12.2016.அன்று கிளிநொச்சி பலநோக்கு கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் நடை பெற்ற சிறுவர்அரங்க நிகழ்வு தக்க சான்றாக அமைந்துள்ளது.

இதுவரைகாலமும் போட்டி நிகழ்வாக நாடாத்தப்பட்ட சிறுவர் அரங்கு ஆரம்பக் கல்வி மாணவர்களின் பரிசளிப்பு நிகழ்வில் மேடையேற்றப்பட்டு பரிசில்களும், பங்குகொண்டமைக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

கோட்டம் மற்றும் ,வலய மட்டத்தில் போட்டியாக நடத்தப்பட்ட நிகழ்வு மாகாணமட்டத்தில் போட்டி நிகழ்வாக நடாத்தாது காட்சியாக மேடையேற்றியமை குறித்து அங்கு வருகைதந்திருந்த அதிபர்கள்  ஆசிரியர்கள் சிலர்  தமக்குள் ஆதங்கப்பட்டனர்.

பன்னிரண்டு வலயங்களின் பன்னிரண்டு நாடகங்களும் சுமார் பி.ப.3.30 மணிக்கே நிறைவடைந்தன. இறுதியாக நடைபெற்ற நாடகத்தை தமது பிள்ளைகளை அழைத்து வந்த பெற்றோர்களும் அதிகாரிகள் ஒருசிலருமே கண்டுகளித்தனர்.

சிறுவர்நாடகம் போட்டியாக நடத்தப்பட்டால் சிறுவர்கள் உளப்பாதிப்பிற்குள்ளாவார்கள் என்றால் சித்திரம், விரைவுகணிதம், வினாடிவினா போன்ற நிகழ்ச்சிகள் போட்டியாக நடாத்தப்பட்டு அதேமேடையில் அவர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் அணிவிக்கும்போது நாடகத்தில் பங்கு கொண்டபன்னிரண்டு வலயங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் உள்ளம்பாதிப்படையும்.

 சித்திரம்,விரைவுகணிதம்,வினாடிவினா என்பன மாகாணமட்டத்தில் போட்டியாக நடாத்தி சான்றிதழ்களும் பதக்கமும் வழங்கலாம் என்றால்  சிறுவர்நாடம்  ஏன் போட்டியாக நடாத்தக்கூடாது.

 

நாடகம் காட்சியாக நடைபெறுமென எந்தப் பாடசாலைக்கும் அறிவிக்கவில்லை. ஒவ்வொருநாடகமும் நிறைவடைய பரிசில் வழங்கியமையால் மண்டபத்தில் சொற்ப பார்வையாளர்களுடன் தமது பிள்ளைகள் நாடகத்தை நிகழ்த்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பெற்றோர் கவலையுடன் தெரிவித்தனர்.

 போட்டிக்காக. தினக்கூலிக்குவேலைசெய்யும் நாங்கள் பெருந்தொகைப்பணத்தை செலவுசெய்து வந்த எமக்கு பெரும் ஏமாற்றமாக போய்விட்டது  என தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

நிகழ்வுக்கு இடையில்வந்த மாகாணக்கல்விப் பணிப்பாளர் இறுதி வரை நின்று நிகழ்வுகளைப்பார்க்கவில்லை.

நிகழ்வுகள் 9.00தொடங்கி 3.30வரை நடைபெற்றபோதும் மதிய உணவு வழங்கப்படவில்லை சிற்றூண்டி மட்டுமே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

வடமாகாண கல்வித்துறையில் அக்கறையுள்ள வடமாகாண   கல்வித்  திணைக்களமே! வடமாகாண கல்வி அமைச்சே!  இதுபோன்ற பொறுப்பற்ற ஏற்பாடுகளுக்கு  யார் பொறுப்பு கூறப்போகிறீர்கள்.

 மாணவர்களின்  திறன்களை விருத்தி செய்வதற்கென ஒதுக்கப்படும்  நிதியினை வினைத்திறனாக    பயன்படுத்த    உங்களுக்கு  பயிற்சி அளிக்க யார்  வரப்போகிறார்கள் !பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

* வாகீசன்*

வவுனியா கோவில்குளம் சிவன் கோவிலில் இடம்பெற்ற சொக்கப் பானை உற்சவமும் கார்த்திகை விளக்கீடும்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று முன்தினம் 13.12.2016  சொக்கப்பானை உற்சவமும் கார்த்திகை விளக்கீடு நிகழ்வும் சிறப்பாக  இடம்பெற்றது.

வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து  அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  உள் வீதி வலம்  வந்து  சொக்கப்பானை  உற்சவத்தில் கலந் கொண்டு  மீதும் வெளிவீதியை  வளம் வந்த நிகழ்வு இடம்பெற்றதோடு  கார்த்திகை  விளக்கீடு  நிகழ்வும் இடம்பெற்றது.

 

ஜனாதிபதிக்கு பேஸ்புக்கில் தொடரும் அச்சுறுத்தல்!!

ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் இன்னுமொரு பேஸ்புக் நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இணையத்தள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் கடந்த வாரம் பேஸ்புக் பக்கத்துடன் தொடர்புடைய நிர்வாகி கைது செய்யப்பட்டிருந்தார். அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் கைது செய்யப்பட்டு ஒரு வாரம் நிறைவடைவதற்கு முன்னர் இன்னும் ஒரு பேஸ்புக் நிர்வாகி கைது செய்யப்படவுள்ளமை தொடர்பில் தற்போது வரையில் செய்தி வெளியாகியுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பவர் 23 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

பேஸ்புக் பக்கத்தின் ஊடாக போலி தகவல்கள் வெளியிட்டு இனவாத கருத்துக்கள் வெளியிட்டமையே அவருக்கு எதிரான குற்றச்சாட்டாகும்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை குற்ற விசாரணை திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இலங்கைக்கும் வந்துவிட்டான் போகிமான்!!

ஸ்மார்ட்போனில் வெற்றி பெற்ற விளையாட்டாக திகழ்ந்து வரும் “போகிமான் கோ” என்ற விளையாட்டு உத்தியோகப்பூர்வமாக இலங்கை மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது என வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இன்று தெரிவித்துள்ளது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் , பூட்டான் மற்றும் பங்களாதேஷில் உள்ள விளையாட்டாளர்கள் இந்த விளையாட்டை app ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விளையாட்டு ஆரம்பத்தில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா பயனர்களுக்கு மட்டுமே கிடைத்திருந்தது.

குறித்த விளையாட்டை தடை செய்யுமாறு கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் உள்ள சிலர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

உலக அளவில் 600 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் கடந்த மாதம் போகிமான் கோ பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய கலைஞர்களை வரவேற்கும் நிகழ்வு!!

 
கொழும்பில் இடம்பெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டிற்கு வருகைதந்தை இந்திய இஸ்லாமிய தமிழ் இலக்கிய கலைஞர்கள் இன்று 14.12.2016 காலை 11.30 மணியளவில் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத் தலைவர் திரு தமிழ்மணி அகளங்கன் தலைமையில் சுத்தானந்த இந்து இளைஞர்கள் சஙகத்தில் வரவேற்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே .மஸ்தான், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் திரு. சந்திரகுமார், வவுனியா மாவட்ட கலைஞர்கள் வவுனியா இஸ்லாமிய கல்வியாளர்கள், மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரீனிவாசன், பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து வருகைதந்த கலைஞர்களை வரவேற்று வவுனியா பண்பாட்டினையும் எடுத்துரைத்தனர்.

வவுனியா கலைஞர்களுடனான சந்திப்பினை நிறைவுசெய்த இந்திய கலைஞர் குழவினர் யாழ்ப்பாணத்தினை நோக்கிச் சென்றனர்.

இம்மாநாட்டிற்கு வருகைதந்த கலைஞர்கள் இலங்கையில் பல பாகங்களுக்கும் சென்று கலைஞர்களைச் சந்தித்துவருவது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ஐயா ‘41808’இற்கு ஒரு தீர்வை பெற்றுத்தாருங்கள் : குடும்பத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில்!!

யாழ்ப்பாணம் பொது நூல் நிலையத்திற்கு முன்பாக இன்று(14.12.2016) காலை தொடக்கம் ஒரு குடும்பத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குடும்பம் கொக்குவிலை சேர்ந்தவர்கள் என்றும், தமது காணிப் பிரச்சினைக்கு ஜனாதிபதி தீர்வை பெற்று தரக்கோரியும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் குடும்பப் பெண்ணும் அவரது குழந்தை மற்றும் முதியவர் ஒருவரும் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஒஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்!!

2009 இல் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இரு ஒஸ்கர் விருதுகளைப் பெற்றார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். இம்முறையும் ஒஸ்கர் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

”பீலே – பர்த் ஆஃப் ஏ லெஜண்ட்” என்கிற ஆங்கிலப் படத்திற்கு இசையமைத்த ரஹ்மான், அந்தப் படத்துக்காக சிறந்த இசை, சிறந்த பாடல் (Ginga) என இரு விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

ஒஸ்கர் விருதின் இறுதிப் பரிந்துரைப் பட்டியல் ஜனவரி 24 அன்று வெளியிடப்படும். அதில் சிறந்த 5 படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும். பிப்ரவரி 26 அன்று விருதுகள் வழங்கும் விழாவில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும்.

இயற்கை அனர்த்தங்களை குறைப்பதற்காக பூமியை குளிர வைக்க விஞ்ஞானிகள் முயற்சி!!

பூமியின் வெப்பநிலை அதிகரித்து வரும்நிலையில், அதனைக் குளிர்விக்க விஞ்ஞானிகள் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

சூரியனிலிருந்து வெளிவரும் அபாயகரமான புற ஊதாக் கதிர்களைத் தடுத்து பூமியின் வெப்பநிலையை அதிகரிக்காமல் பாதுகாத்து வருவது ஓசோன் படலம்.

ஆனால், தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் கார்பன்டைஒக்சைட் கலந்த புகை மற்றும் பசுமை இல்ல வாயுக்களால் ஓசோன் படலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு, பூமியின் வெப்பநிலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

இதனால் அண்டார்ட்டிகா உள்ளிட்ட பனி பிரதேசங்களில் பனி உருகி கடல் மட்டம் அதிகரிக்கிறது. கடல் மட்டம் அதிகரிப்பால் கடலோர பகுதிகள் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

பருவநிலையிலும் மாறுபாடுகள் ஏற்பட்டு இயற்கை அழிவு அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்படுகின்றது.

பூமியின் வெப்பநிலை அதிகரிப்பைக் குறைக்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆய்வில் புதிய முயற்சியாக ஹார்வார்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கால்சைட் தூசுகளை வளிமண்டலத்தில் தூவுவதன் மூலம் பூமியின் வெப்பநிலையை குறைக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.

இதற்கு முன்பு சல்பர்டைஒக்சைட் மூலம் பூமியின் வெப்ப நிலையைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, அந்த முறையில் ஓசோன் படலத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கருத்துத் தெரவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது கண்டறிந்துள்ள கால்சைட் முறையால் வளிமண்டலத்தின் பாதுகாப்பு அரணாக விளங்கும் ஓசோன் படலத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த கால்சைட் தூசுப்படலம் வளிமண்டலத்தில் உள்ள வெப்ப காரணிகளை ஈர்க்கும் தன்மை கொண்டதாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

பருவநிலை மாற்றம் கட்டுக்குள் வராவிட்டால் நாடுகள் பல நீரில் மூழ்கும் அபாயம்!!

பருவநிலை மாற்றம் காரணமாக பூமி அதிக அளவு வெப்பமாகி, பனிப்பாறைகள் உருகி வருகின்றன. இதனால் கடல் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலை நீடிக்குமானால் பல்வேறு நாடுகள் அழியும் நிலை ஏற்படும்.

இதனால், உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

ஐ.நா. வில் நடைபெற்று வரும் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டின் போது, பூமியின் வெப்பநிலையை கட்டுக்குள் கொண்டுவர சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி பூமியின் வெப்பநிலை அதிகரிப்பை சுமார் 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று தீர்மானித்துள்ளன.

இதனால் 2050 ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை 100 சதவீதம் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டமைப்பில் இலங்கை, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், கென்யா உள்ளிட்ட நாடுகள் கலந்து கொண்டன.

கல்லறையின் முன் நடைபெற்ற திருமணம்!!

சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதிக்கு முன்பு கொளத்தூரைச் சேர்ந்த ஒரு ஜோடி திருமணம் செய்து கொண்டுள்ளது.

கடந்த 5ஆம் திகதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார் . அவரது உடல் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பிரான்சிஸ்- ரெஜூலா ப்ரீத்தி ஜோடிக்கு வரும் பெப்வரி 1ஆம் திகதி திருமணம் நடக்க இருந்தது.

இந்த திருமணத்தில் கலந்து கொள்வதாக ஜெயலலிதா தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாம். இதனிடையே, ஜெயலலிதா மரணம் அடைந்தார்.

இந்த நிலையில், இன்று மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு பிரான்சிஸ் ரெஜூலா ப்ரீத்தி ஜோடி உறவினர்களும் வந்து திருமணத்தை நடத்தியுள்ளனர்.

சமாதி முன்பு இருவரும் மாலை மாற்றிக் கொண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு உறவினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதேவேளை, இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் அநாதரவாக நின்ற 12 வயதுச் சிறுவன்!!

வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்பாக அநாதரவாக நின்றிருந்த 12 வயதுடைய சிறுவன் வவுனியா சிறுவர் நன்னடத்தை பராமரிப்புத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று பிற்பகல் 2 மணியளவில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்பாக அநாதாரவாக 12 வயதுடைய சிறுவன் நின்று கொண்டிருப்பதாக முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் சமூக செயற்பாட்டாளர் ஒருவருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்குச் சென்ற சமூக செயற்பாட்டாளர் சிறுவனிடம் வினவியபோது, தனது பெயர் சண்முகலிங்கம் சதீஸ்குமார், வயது 12, தொட்டிலடி, ஒட்டிசுட்டானிலிருந்து வந்ததாகவும்

தனது சகோதரன் தன் மீது தாக்குதல் மேற்கொண்டபோது வீட்டிற்கு சொல்லாமல் பேருந்தில் ஏறி வவுனியாவிலிருக்கும் உறவினரின் வீட்டிற்கு வந்துள்ளதாகவும், உறவினரின் வீட்டிற்குச் செல்வதற்கு வழி தெரியாமல் நின்றிருந்ததாகவும் குறித்த சிறுவன் தெரிவித்துள்ளார்.

சிறுவனது இடது கையில் முறி காயம் ஏற்பட்டு கை கட்டுடனும் மேலங்கி அற்ற நிலையிலும் காணப்பட்டுள்ளார்.

அதையடுத்து வவுனியா இலுப்பையடியிலுள்ள சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்கள அதிகாரியிடம் சிறுவன் உடனடியாக ஒப்படைக்கப்பட்டுள்ளான் என தெரியவருகின்றது.

உலகில் சுமார் 18,000 பறவை இனங்கள் இருப்பதாக புதிய ஆய்வில் தகவல்!!

உலகில் சுமார் 18,000 பறவை இனங்கள் இருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுவரை ஒரே இனத்தைச் சேர்ந்தவை என்று கருதப்பட்டு வந்த பல பறவைகள், தனி இனங்களைச் சேர்ந்தவை என்று இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதாவது, ஒரே தோற்றமுடைய பல பறவைகள் குறிப்பிட்ட இனத்தின் உட்பிரிவைச் சேர்ந்தவை என்று கருதப்பட்டு வந்தது.

தற்போது அவை தனி இனங்களைச் சேர்ந்தவை என அறியப்பட்டுள்ளதால், உலகில் சுமார் 18,000 பறவை இனங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும், தனி இனங்களையும், ஒரு இனத்தின் உட்பிரிவுகளையும் எவ்வாறு தரம் பிரித்து அறிய வேண்டும்; அந்தந்த இனங்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது போன்றவற்றில் புதிய ஆய்வு முறைகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது.

பறவைகளின் உருவம், சிறகுகளின் நிறம் ஆகியவற்றைப் பகுப்பாய்வதில் மாற்று முறைகளைப் பயன்படுத்த வேண்டும் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அனைத்து பறவை இனங்களும் பெருகும் வகையில், இயற்கைக் சூழலைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு மனிதர்க்கு உள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்றும் 10 விடயங்கள்!!

அன்றாட வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தாலும் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாக இருக்கிறது.அதிலும் உடல் அழகை மேம்படுத்த பலரும் பல வழிகளில் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் போது இந்த அழகான விடயம் நம்மிடம் எளிதில் வந்துவிடுகிறது. கடைபிடிக்க வேண்டிய 10 வழிமுறைகள்:-

1. நீங்கள் மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள். ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவற்றை மாற்றிக் கொள்ளுங்கள். இவை உங்களை அழகாக காட்டும்.

2. பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ளுங்கள். மற்றவர்களுடன் அன்பாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள். இந்த அன்பான பழக்கவழக்கம் உங்கள் முகத்தை அழகாக காட்டும்.

3. வாய்விட்டு சிரியுங்கள். இதன் மூலம் உங்களை சுற்றி வசீகர அலை பரவும். உங்களின் சிரித்த முகம் பலரையும் சுண்டி இழுக்கும். இதனால் நீங்கள் மற்றவர்களுக்கு அழகாக தெரிவீர்கள்.

4. உடலில் கவனத்தை செலுத்துங்கள். உடலை கட்டுக்கோப்பாக ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். இதனால் உற்சாகமாக இருக்கமுடியும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை பலருக்கும் பிடிக்கும்.

5. திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களது திறமை உங்களை தனித்து காட்டும். முகம் அழகானவர்களை விட திறமையால் அழகாக தெரியும் பலரையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

6. பிறரை குறை கூறும் பழக்கத்தை விட்டு விடுங்கள். சிறிய விடயங்களையும் பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள். பாராட்டி பேசும் உள்ளத்தை பலருக்கும் பிடிக்கும்.

7. உன்னால் முடியும் என்று நம்பிக்கை ஊட்டும் சொற்களை மற்றவர்களுக்கு கூறுங்கள். அதே சமயம் உன்னால் முடியாது என்று கூறுபவர்களை கண்டு கொள்ளாதீர்கள். நம்பிக்கை எண்ணமே உங்களை தனித்தன்மையுடன் காட்டும்.

8. உங்களுக்கு உங்களையே பிடிக்காமல் இருக்கலாம். முதலில் அதை விட்டுவிடுங்கள். நிறம், உயரம் ஆகியவற்றை பற்றி கவலைப்படுவதை விட்டு விட்டு உங்களை நீங்களே நேசியுங்கள். இது உங்களை அழகாக காட்டும்.

9. உங்களுக்குள்ளே ஒரு குரல் இது முடியாது என்று அவநம்பிக்கையை ஏற்படுத்தும். உங்களை முடங்கிப் போகச் செய்யும். அதனால் நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

10. உங்களை அழகுப்படுத்திக் கொள்ளுங்கள். நடை, உடை போன்றவற்றில் கவனமாக இருத்தல், பாதங்களை சீராக வைத்துக் கொள்ளுதல், நறுமணம் வீசும் பொருட்களை பயன்படுத்துதல் போன்றவற்றில் முன்னேற்றத்தை ஏற்படுத்துக் கொள்ளுங்கள்.

கணினிக்கு நிகரான வேகம் கொண்ட ஸ்மார்ட் போன் விரைவில்!!

அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் மைக்ரோசொஃப்ட் “சர்ஃபேஸ் ப்ரோ” ஸ்மார்ட்போன்கள் கணினிக்கு நிகரான வேகத்தில் இயங்கும் என கூறப்படுகிறது.

மைக்ரோசொஃப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 2017 ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் வெளியாக துவங்கியுள்ளன. ஆனால் குறித்த மொபைல் போன் தொடர்பான விபரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை.

தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் இது சர்ஃபேஸ் போன் தான் என்றும், இது ஒரு ஹைப்ரிட் போனாக இருக்கும் என்பது தெரியவந்திருக்கிறது.

உலகம் அறிந்த முன்னணி பதிப்பாக காணப்படும் மைக்ரோசொஃப்ட் தான் தயாரித்து வரும் உயர் ரக ஸ்மார்ட்போன் ஆப்பிள் ஐ போனை விடவும் பெறுமதியானது என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மைக்ரோசொஃப்ட் சர்ஃபேஸ் போன் குவால்காம் நிறுவனத்தின் அடுத்த தலைமுறைக்கான வழிகாட்டியாக இருக்கும் என்றும் இது வாடிக்கையாளர்களின் மொபைல் போன் பயன்பாட்டை அடியோடு மாற்றிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த மொபைல் போன் அடுத்த ஆண்டு மைக்ரோசொஃப்ட் வெளியிட இருக்கும் விண்டோஸ் 10 இன் செயற்பாடுகளை உள்வாங்கியிருக்கும் எனவும் நம்பப்படுகின்றது.

புதிய இயங்குதளம் என்பதால் இந்த ஸ்மார்ட்போன் அதிக சக்தி வாய்ந்ததாக இருப்பதோடு அதிநவீன வடிவமைப்பையும் கொண்டிருக்கும். விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டிருப்பதால் இந்த ஸ்மார்ட்போனினை கணினியாகவும் மாற்ற முடியும்.

குறித்த ஸ்மார்ட் போன் அடுத்த ஆண்டு மதல் நடைமுறைக்கு வரலாம் என நம்பப்படுகின்றது.

இந்த ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போனின் விலை 699 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.47,179) முதல் 1100 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.74,244) வரை இருக்கும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.