அமெரிக்காவில் தனியாருக்கு சொந்தமான விமானம் ஒன்றில் பெண் பயணி ஒருவரை அங்குள்ள பொலிஸ் தரதரவென இழுத்து வெளியேற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெட்ராய்ட் பெருநகர விமான நிலையத்தில் குறித்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடந்துள்ளது. இங்கு புறப்பட தயாராக நின்ற டெல்டா விமானத்தில் பெண்மணி ஒருவர் திடீரென்று புகுந்து தமது இருக்கைக்கு நேர் மேலே இருக்கும் பொருட்கள் வைக்கும் பகுதியில் தனியாக அதிக இடம் வேண்டும் என கேட்டு முதலில் பிரச்னை செய்துள்ளார்.
இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. குறித்த பெண்மணி விடாப்பிடியாக தமக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று வற்புறுத்தியே வந்துள்ளார். இதனிடையே அந்த பெண்மணி உரிய அனுமதி பெறாமல் விமானத்தில் பயணிக்க முயன்றுள்ளதாகவும் அவரது பெட்டி உள்ளிட்ட பொருட்களை சோதனைக்கு உட்படுத்தவில்லை எனவும் தெரிய வந்தது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து குறித்த பெண்மணியுடன் விவதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர் அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்துள்ளார். மேலும் விமானத்தில் இருந்து வெளியேறவும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனிடையே குறித்த டெல்டா நிறுவனம் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவும் அவர்கள் வந்து அந்த பெண்மணியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால் அவர் விமானத்தை விட்டு வெளியேற மறுத்து அடம்பிடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பொலிசார் அவரை வலுக்கட்டாயமாக இழுத்து விமானத்தில் இருந்து வெளியெற்றியுள்ளனர்.
தொடர்ந்து சக பயணிகளுக்கு தொல்லை தந்த குற்றத்திற்காகவும் விமான நிலைய சட்டத்திட்டங்களுக்கு எதிராக செயல்பட்டதாகவும் கூறி கைது செய்துள்ளனர்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு தகவல்கள் தினம் தினம் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இவரின் மரணம் தொடர்பில் பல தரப்பிலும் புதிது புதிதான காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன.
மேலும் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நடிகை கௌதமி பிரதமர் மோடிக்கு இரண்டு முறை கடிதமும் எழுதியுள்ளார்.
இவ்வாறு தொடர்ந்தும் மரணம் பற்றிய தகவல் வெளிவந்துக் கொண்டிருக்கும் நிலையில் ஜெயலலிதாவின் சகோதரி மகள் அம்ருதா ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை என கேள்விபட்டதும் அவரை பார்க்க பலமுறை முயற்சி செய்தேன். வைத்தியசாலைக்கு சென்ற போதும் பார்க்கவிடாமல் சசிகலா என்னை தடுத்துவிட்டார்.
அம்மாவை இப்போது பார்க்க முடியாது என மூன்று முறை காவலாளிகளை வைத்து என்னை திருப்பி அனுப்பிவிட்டார்.வைத்தியசாலையில் அப்படி என்ன ரகசிய சிகிச்சை என்று தெரியவில்லை.
அவரது மரணத்தில் மர்மம் உள்ளது. இதனை அரசு விசாரிக்க வேண்டும்.
ஜெயலலிதாவின் சொத்திற்கு ஆசைப்பட்டு சசிகலா விஷம் கொடுத்தது உண்மையாக தான் இருக்கும். சசிகலா ஜெயலலிதா அம்மாவின் பெயரை பயன்படுத்தி பல ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளார் என அம்ருதா கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவ குழுமத்தின் சர்வர்களை Legion என்ற ஹேக்கர்கள் குழு ஊடுருவி தகவல்களை திருடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் அலுவலகத்தின் டுவிட்டர் பக்கம், அந்த கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தி, தொழிலதிபர் விஜய் மல்லையா, என்டிடிவின் ஊடகவியலாளர்களான ரவிஸ் குமார் மற்றும் பரக்கா தத் ஆகியோரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கங்களை Legion என்ற ஹேக்கர்கள் குழுவானது ஊடுருவி குறித்த நபர்களின் தகவலை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து, வாசிங்டன் போஸ்ட் மற்றும் பேக்டரி டெய்லி ஆகிய ஊடகங்களுக்கு Legion என்ற ஹேக்கர்கள் குழுவின் உறுப்பினர் ஒருவர் குறித்த டுவிட்டர் பக்கங்களை முடக்கியது தாங்கள் தான் என்றும் பேட்டியளித்துள்ளார்.
மேலும் குறித்த ஹேக்கர்கள் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் சர்வர்களிலுள்ள தகவல்களையும் திருடியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
தாங்கள் ஊடுருவி பெற்றுக்கொண்ட எல்லா தகவல்களையும் வெளியிட்டால் இந்தியாவில் குழப்பம் ஏற்படும் என்பதால் அவற்றை வெளியிடாமல் தவிர்த்துள்ளோம் என்று Legion என்ற ஹேக்கர்கள் குழுவின் உறுப்பினர் ஒருவர் வாஸ்சிங்டன் போஸ்ட் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஹேக்கர்களுடைய அடுத்த குறி இந்திய அரசின் மின்னஞ்சல் சேவையை வழங்கக்கூடிய sansad.nic.in என்ற சர்வர் தான் என்று அந்த ஹேக்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது
தென்னாபிரிக்காவில் விபத்தில் உயிரிழந்த நபரொருவர் மீண்டும் உயிர் பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் மருத்துவனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த சமயத்தில் திடீரென குறித்த நபரின் உடல் அசைவதை ஊழியர்கள் அவதானித்துள்ளனர்.
பின்னர் மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் அவரது இதய துடிப்பு குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
பின்னர் குறித்த நபரை அவரச சிகிச்சை பிரிவிற்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட சமயத்தில் அவர் உயிரிழந்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் காலங்களில் வங்கக் கடலில் அதிக அளவில் புயல்கள் உருவாகும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அலகாபாத் பல்கலைக் ஸ்ரீகழகத்தை சேர்ந்த அசுதோஸ் மிஸ்ரா தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளால் கடல் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வங்கக்கடல் பகுதியில் இனி வெப்ப மண்டல புயல்கள் அதிக அளவில் உருவாகுமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள புயலுடன் ஒப்பிடும்போது, இந்த புயல்களின் சக்தியும் அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
2014ஆம் ஆண்டு இது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு ஏர்த் சயன்ஸ் என்னும் அறிவியல் பத்திரிகையில் கட்டுரை ஒன்றையும் இந்த குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, 1891ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையான சுமார் 122 ஆண்டுகளில் இந்திய கடல் பகுதியில் ஏற்பட்ட புயல்கள் தொடர்பில் ஆய்வு செய்து குறித்த கட்டுரை எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அண்மைய நாட்களாக வங்கக்கடலில் ஏற்பட்ட புயலின் காரணமாக பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த இரு நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட வர்தா புயலின் காரணமாக இலங்கை உள்ளிட்ட தமிழகத்தில் பாரிய சேதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சீனாவில் கோடீஸ்வர தொழிலதிபரின் மகன் 6 லட்சம் கோடி சொத்துகளை வேண்டாம் எனப் புறக்கணித்துள்ளமை குடும்பத்தாருக்கு பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
இதனால் தனது சொத்துக்களை பாதுகாப்பதற்காக நம்பிக்கையான ஒருவரை சிறுவனின் தந்தையார் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
டாலியன் வான்டா குழுமத்தின் தலைவர் வாங் ஜியான்லின் (62). இவரது குழுமம், வணிக வளாகங்கள், உல்லாச பொழுதுபோக்கு பூங்காக்கள், ஸ்போர்ட்ஸ் கிளப், திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ளது. இவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 6 லட்சம் கோடியாகும்.
இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வாங் ஜியான்லின், வயதாகி விட்டதால் சொத்துகளை நிர்வகிக்கும் பொறுப்பை எனது மகனிடம் ஒப்படைக்க முடிவெடுத்தேன்.
அனைத்து சொத்துகள் மற்றும் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு ஓய்வெடுக்கும் திட்டம் குறித்து எனது மகனிடம் பேசினேன். ஆனால், எனது தொழில்களையும், சொத்துகளையும் நிர்வாகம் செய்ய அவன் மறுத்துவிட்டான்.
மேலும், அவனுக்கு என்னைப் போல தொழிலதிபராக ஆசையில்லை என்று உறுதியாக தெரிவித்துவிட்டான். ஒவ்வொரு இளைஞனுக்கும் தனிப்பட்ட கனவு உள்ளது.
அதற்கான தேடல்களுக்கு முன்னுரிமை கொடுக்க அவனுக்கு முழு சுதந்திரம் உள்ளது. எனவே, அவன் சுயமாக எடுத்த முடிவில் நான் தலையிட விரும்பவில்லை.
பல லட்சம் கோடி மதிப்புள்ள இந்த சொத்துகளை நிபுணத்துவம் கொண்ட மேலாளர்களின் கையில் ஒப்படைத்துவிட்டு, நிர்வாகத்தை மேற்பார்வையிட மட்டும் முடிவு செய்துள்ளோம். அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளேன் என்றார்.
வாங் ஜியான்ஸின், இந்தியா வந்திருந்தபோது பிரதமர் மோடியை சந்தித்து ஹரியாணாவில் 1,000 கோடி டாலரை முதலீடு செய்ய உறுதியளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பூமிக்கு வெளியே உள்ள குப்பைகளை அகற்ற மிகப்பெரிய மீன்வலையை விண்கலம் மூலம் ஜப்பான் விண்வெளிக்கு ஏவியுள்ளது.
ஜப்பானின் தெற்குப்பகுதியில் உள்ள டேனிகாஷிமா தீவில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்திற்கு அந்த வலை விண்கலம் மூலம் ஏவப்பட்டுள்ளது.
அந்த விண்கலத்தில் உள்ள மிகப்பெரிய மீன்வலை மூலம் விண்வெளியில் பூமியைச் சுற்றி வரும் கைவிடப்பட்ட ஏவுகணைகள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை நீக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 1957 ஆம் ஆண்டு முதன்முதலாக சோவியத் ரஷ்யா ஸ்புட்னிக் என்ற ஏவுகணையை விண்வெளிக்கு ஏவியது.
அதுமுதல் தற்போது வரை பல்வேறு நாடுகளும் விண்வெளிக்கு ஏவுகணைகளை ஏவி வருகின்றன. அவற்றின் பயன்பாடு முடிந்து கைவிடப்பட்ட ஏவுகணைகள் முதல் பல்வேறு பொருட்களும் பூமியை சுற்றி வருகின்றன.
இந்நிலையில் அவற்றை அப்புறப்படுத்த விண்வெளிக்குக் கொண்டு செல்லப்படும் வலை ஸ்டீல் மற்றும் அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருவியில் இருந்து வெளிவரும் மின்சாரத்தின் மூலம் பூமியைச் சுற்றி வரும் குப்பைகளின் இயக்கத்தை மெதுவாக்கி, அவற்றை கைப்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
மத்தியதரைக் கடலில் தத்தளித்த 1,164 அகதிகளைத் தாம் மீட்டதாக இத்தாலிய கடலோர பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை (12.12.2016) ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போதே நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த அகதிகளை மீட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆறு இரப்பர் படகுகளிலும் ஒரு மரப்படகிலும் பயணித்துக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பதை அவதானித்த கடலோர பாதுகாப்புப் படையினர், ரேடியோ கருவி மூலம் நாவ்ஃபோர் மெட் மிஷன் என்கிற ஐரோப்பிய யூனியனின் மீட்புக் கப்பல்களிடம் உதவி கோரியுள்ளனர்.
மீட்புக் கப்பல்களும் படகுகளும் உடனடியாக குறித்த பகுதிக்கு விரைந்து சென்றதையடுத்து அகதிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
அவர்கள் லிபியாவிலிருந்து பயணித்ததாகத் தெரியவந்துள்ளது.
தம்முடன் பயணித்தவர்களில் 6 பேர் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக எதிர்காலத்தில் நாட்டிற்குள் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழை போதியளவு கிடைக்காமையினால், பெரும்பாலான குளங்களுக்கு போதியளவு நீர் கிடைக்கவில்லை. அதனால் நாட்டின் நீர் நிலைகளின் நீர்மட்டம் 30 தொடக்கம் 35 வீதமாகவே காணப்படுகின்றது.
பராக்கிரம சமுத்திரம், இகினிமிடிய, தெதுறு ஓயா, லுணுகம்வெஹர மற்றும் மின்னேரியா ஆகிய நீர்த்தேக்கங்களில் 50 வீத நீர்மட்டமே காணப்படுகின்றது.
கவ்டுல்ல, கந்தளாய், ராஜங்கனை, பதவிய மற்றும் மஹகனதராவ ஆகிய குளங்களின் நீர் மட்டம் 30 தொடக்கம் 35 வீதமாக காணப்படுவதாக நீர்பாசனத் திணைக்களத்தின் தரவுகள் குறிப்பிடுகின்றன.
நிலவும் நீர்த்தட்டுப்பாடு காரணமாக 40 விவசாயப் பண்ணைகளில் மாத்திரமே தற்போது பயிற்செய்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
50 தொடக்கம் 60 வீதமே தற்போது பயிற்செய்கையை முன்னெடுக்க முடியும் என நீர்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியது.
பெரும்போகத்தில் 8 இலட்சம் ஏக்கரில் பயிற்செய்கை முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் இம்முறை 2 இலட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் காணியிலேயே முன்னெடுக்க முடிந்துள்ளதாக விவசாயத் திணைக்களம் குறிப்பிட்டது.
இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரம் சுப்பர் ஸ்டார் ரஜினி தென்னிந்திய சினிமா மட்டுமில்லாது பொலிவுட்டும் கொண்டாடும் மிகப்பெரிய கலைஞர்.
இந்நிலையில், பொலிவுட்டில் அமீர்கானின் கடுமையான உழைப்பில் உருவாகியிருக்கும் ‘தங்கல்’ படத்தை ரஜினிக்கு பிரத்யேகமாக திரையிட்டு காண்பிப்பதற்காக சமீபத்தில் சென்னை வந்திருந்தார் அமீர்கான்.
ரஜினி, தனுஷ் உட்பட அவரின் குடும்பத்தார் அனைவருக்கும் ‘தங்கல்’ படத்தை திரையிட்டு காண்பித்தார். படத்தை பார்த்து முடித்துவிட்டு அப்படத்தில் சிறப்பாக நடித்திருந்த அமீர்கானை பாராட்டினார், அவர் அந்த கதாபாத்திரத்திற்காக உழைத்திருப்பதை குறிப்பிட்டு பாராட்டினாராம்.
இதனால், மனம் குளிர்ந்த அமீர்கான், ரஜினியிடம் வரும் 23 ஆம் திகதி வெளியாகவிருக்கும் ‘தங்கல்’ படத்தின் தமிழ் டப்பிங்கிற்கு தன்னுடைய குரலுக்கு ரஜினியை டப்பிங் கொடுக்க வேண்டும் என்று ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார்.
ஆனால், ரஜினியோ, உங்களுடைய தோற்றத்துக்கு என்னுடைய குரல் சரியாக பொருந்தாது என்று அவருடைய வேண்டுகோளை அன்போடு மறுத்தாராம்.
பிறகுதான், வேறொருவரை வைத்து தமிழில் டப்பிங் செய்து வெளியிடவிருக்கிறார்களாம், ‘தங்கல்’ படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலராக 65 வயதான போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் ஆன்டோனியோ கட்டரஸ் பதவியேற்றார்.
ஐ.நா. பொதுச்செயலர் பான் -கி-மூனின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய பொதுச்செயலரை தேர்ந்தெடுக்க கடந்த ஜூலை முதல் பல்வேறு கட்டங்களாக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மொத்தம் 13 வேட்பாளர்கள் பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிட்டனர். அவர்களில் 7 பேர் பெண்கள். இதில் இறுதி கட்டமாக 10 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அவர்களில் புதிய பொதுச்செயலரை தேர்ந்தெடுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த அக்டோபர் 5ம் திகதி இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில், போர்ச்சுகலின் முன்னாள் பிரதமரும் ஐ.நா.வின் அகதிகள் அமைப்பின் முன்னாள் தலைவருமான ஆன்டோனியோ கட்டரஸ் ஐ.நா. புதிய பொதுச்செயரலராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், ஐ.நா.வின் புதிய பொதுச்செயலராக ஆன்டோனியோ கட்டரஸ் நேற்று பதவியேற்றார்.
193 உறுப்பினர்கள் முன்னிலையில் ஐ.நா. சாசனத்தின் நகல் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. 9வது பொதுச் செயலாளராக கட்டரஸிற்கு, பான் கிமூன் பதவியேற்பு செய்து வைத்தார். ஆன்டோனியோ கட்டரஸ் ஐ.நா.,வின் 9 வது பொதுச்செயலர் ஆவார்.
சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் சிவனொளிபாதமலையின், ஹெமில்டன் வனப்பகுதியில் காணாமற்போன ஐந்து பேரும் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லதண்ணி பொலிஸாரும் விஷேட அதிரடைப் படையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை (12) இவர்கள் ஹெமில்டன் வனப்பகுதிக்குள் பிரவேசித்திருந்த நிலையில் அன்றைய தினம் இரவு முதல் காணாமால் போயிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாம் வழிதவறி இருப்பதாக இவர்கள் பொலிஸ் அவசர இலக்கமான 119 இற்கு அழைப்பை ஏற்படுத்தி தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைக்கு தரைப்படை மற்றும் விமானப்படையினரும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 412 ரக விமானம் மூலம் காணாமல் போனவர்கள் இருந்த இடத்தை நேற்று மாலை அடையாளம் கண்டதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் கிஹான் செனவிரத்ன கூறினார்.
எவ்வாறாயினும் விமானப் படையினரால் அவர்கள் ஐவரும் இருந்த இடத்தை நெருங்க முடியாததன் காரணமாக, அவர்கள் இருந்த இடத்தை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கும் இராணுப் படையினருக்கும் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் இன்று (13.12.2016) இரவு 8 மணியளவில் இராசேந்திரன்குளம் ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
இன்று (13.12.2016) இரவு 8 மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பயணம் மேற்கொண்போது அதே பாதையில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கில் பாதையில் மற்றைய பக்கத்திற்கு மாற முற்ப்பட்ட வேளை இரு மோட்டார் சைக்கில்களும் விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் ஒரே குடும்பமாக பயணித்த நால்வரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அகிலேஸ்வரன் வயது 35, பிரியதர்சினி வயது 30, திஷா வயது 05, திஷாளன் வயது 02 ஆகிய நால்வரே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் குடும்பத்தலைவருக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டுள்ளதாகவும் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அப்பாவி சிறுவர்கள், பெண்கள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர், எனினும் இன்னும் போர் முடிந்தபாடில்லை.
ஐ.எஸ்.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து சிரியாவின் முக்கிய நகரான அலெப்போவை கைப்பற்ற இராணுவத்தினர் கடுமையாக போராடி வருகின்றனர்.
இராணுவத்தினர் முன்னேறிவரும் நிலையில், மக்களை கேடயங்களாக ஐ.எஸ்.எஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சிறுவர்களை உயிருடன் எரிப்பது போன்றும், படுகொலை செய்வதும் போன்ற வீடியோ வெளியாகி அதிர வைத்துள்ளது.
பலரும் டுவிட்டரில் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை பற்றி பேசி வருகின்றனர். பெண் ஒருவர், அனைவருக்கும் இதை நான் கூற விரும்புகிறேன், அலெப்போவில் படுகொலைகள் நடந்து வருகின்றன, இதுவே என்னுடைய கடைசி வீடியோவாக கூட இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.