சுவிஸ்லாந்தில் இலங்கை தமிழர் கடையில் நூதன மோசடி : நபர் தொடர்பில் எச்சரிக்கை!!

சுவிட்சர்லாந்தின் தலைநகர் பெர்ன் (Bern) மாநிலத்தில் உள்ள இலங்கைத் தமிழர் ஒருவரின் கடையில் மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் புத்தி பேதலித்தவர் போல இருக்கின்ற போதிலும் அங்குள்ள இலங்கைத் தமிழர் ஒருவரின் கடையில் பொருட்களை திருடியதாக கூறப்படுகின்றது.

எனினும் குறித்த நபர் புத்தி பேதலித்தவர்போல காட்டிக்கொள்வதால் அவர் திருடியபோது பிடித்து அறிவுரை கூறி வர்த்தகர் அனுப்பி வைத்துள்ளார். எனினும் குறித்த நபர் மீண்டும் இலங்கைத் தமிழரின் கடையில் தொடர்ந்து திருடியதால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் பெர்ன் (Bern) வர்த்தக்ர்கள் குறித்த நபர் தொடர்பில் அவதானமாயிருக்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

O/L பரீட்சையில் தமிழ்மொழி பரீட்சைக்கு தோற்றிய 88 வயது சிங்கள பாட்டி!!

இலங்கையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 88 வயது சிங்கள பாட்டி தமிழ் பரீட்சை எழுதியுள்ளமை பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பரீட்சை எழுதிய சிங்கள இனத்தைச் சேர்ந்த பாட்டி 40 வருடங்கள் ஆசிரிய சேவையை முடித்து 1996 இல் ஓய்வு பெற்றவர் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பாட்டி க.பொ.த சாதாரணதர இரண்டாம் மொழி தமிழ் பரீட்சை தோற்றியுள்ளமைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

நடிகர் மனோஜின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் அஞ்சலி!!

தமிழ் திரையுலகின் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜின் மறைவுக்கு தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை,

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன், இசைஞானி இளையராஜா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் நேற்று(25) மாலை மாரடைப்பால் காலமானார்.

குடும்பத்துடன் சென்னை சேத்துப்பட்டில் வசித்து வந்த மனோஜுக்குச் சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், நேற்று இரவு மனோஜுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானார்.

இந்நிலையில் சினிமா பிரபலங்கள் பல்லரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் இயக்குனர்கள் தியாகராஜன், பேரரசு, நடிகர்கள் பார்த்திபன், சூர்யா, ரோபோ சங்கர், பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்ட பலரும் மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

உயிரிழந்த மனோஜின் உடல் அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளதுடன் இன்று மாலை தகனம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 48 வயதான நடிகரும் இயக்குனருமான மனோஜ் மறைவு திரையுலகிலும், இரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருமண நிகழ்வுக்கு சென்ற இளைஞன் மர்மமான முறையில் மரணம்!!

காலியில் சதுப்பு நிலத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரந்தெனிய, படபொல பகுதியில் உள்ள சதுப்பு நிலத்தில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக படபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கரந்தெனிய மண்டகந்த பகுதியை சேர்ந்த தனுஷ்க குணவர்தன என்ற 24 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

படபொல, கொண்டகல பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கடந்த 16 ஆம் திகதி வீட்டை விட்டு சென்றுள்ளார்.

எனினும் தனது மகன் இன்று வரை வீடு திருப்பவில்லை என உயிரிழந்த இளைஞனின் தாயார் எல்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

அதற்கமைய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் இளைஞனின் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர். சம்பவம் குறித்து படபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வரதட்சணை கேட்டு துன்புறுத்தல் : பொலிஸ் நிலையத்தில் கணவனை புரட்டி எடுத்த வீராங்கனை!!

இந்தியாவின் அரியானா மாநிலம், ஹிகார் பகுதியை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை ,பொலிஸ் நிலையத்தில் வைத்து கணவனை புரட்டி எடுத்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்திள்ளது.

இது குறித்த காணொளியும் சமூகவலைத்தளத்தில் பரவி வருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அரியானா மாநிலம், ஹிகார் குத்துச்சண்டை வீராங்கனை ஸ்வீட்டி பூரா. இவரது கணவர் கபடி வீரரான தீபக் ஹூடா.

இந்நிலையில் தனது கணவர் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகவும், தன்னை துஷ்பிரயோகம் செய்வதாக கூறி ஸ்வீட்டி பூரா நீதிமன்றில் விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்தார்.

மேலும் ஹிகார் பொலிஸ் நிலையத்தில் கணவர் மீது முறைப்பாடு செய்தார். இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க நேற்று முன்தினம் தீபக் ஹூடா தனது குடும்பத்தினருடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்திக் கொண்டு இருந்தபோது ஸ்வீட்டி பூராவும் தனது குடும்பத்தினருடன் பொலிஸ் நிலையத்திற்கு வந்தார்.

பொலிஸ் நிலையத்தில் இருந்த தனது கணவரை கண்ட ஸ்வீட்டி பூரா திடீரென ஆவேசம் அடைந்து கணவரின் தலையை கெட்டியாக பிடித்து கொண்டு கழுத்தில் சரமாரியாக குத்து விட்டார்.

கணவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தபோதும் ஸ்வீட்டி , விடாமல் அவரை அடித்து உதைத்தார். இதனைக் கண்டு திகைத்துப் போன பொலிஸார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஸ்வீட்டியை விலக்கி விட்டனர்.

ஸ்வீட்டி தாக்கியதில் கணவர் கழுத்தில் 3 இடங்களில் காயம் ஏற்பட்டு உள்ள நிலையில் மனைவி , கணவருக்கு சரமாரியாக குத்து விட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரப்பரப்பை ஏற்படுத்தியது.

21 வயது பெண் கடத்தப்பட்டதால் பரபரப்பு : வீடு திரும்புகையில் காத்திருந்த அதிர்ச்சி!!

மாத்தறை வெலிகம பகுதியில் 21 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். நேற்று இரவு கூர்மையான ஆயுதங்களுடன் வந்த இருவர் இந்த கடத்தலை செய்துள்ளனர்.

ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தனது பணி நேரத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

அதேவேளை சந்தேக நபர்கள் பெண்ணை கடத்துவதற்கு முன்பு அவரது கணவரை துரத்திச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி ஒருவர் பலி!!

யாழில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது அரச பேருந்து மோதியதில் விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார். ஊர்காவற்துறை, புளியங்கூடல் தெற்கு பகுதியை சேர்ந்த குருசாமி கணேசலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 22 ஆம் திகதி காலை 9.00 மணியளவில் ஊர்காவற்துறை – பாலக்காட்டு சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தார்.

இதன்போது வீதியை கடந்துள்ளார். இந்நிலையில் வேகமாக வந்த அரச பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து அவர் மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.

பின்னர் 22ஆம் திகதி ஊர்காவற்துறை வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று காலை 8.00 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் சிக்கிய பெண்!!

இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி 20 மில்லியன் ரூபாவிற்கும் மேல் மோசடி செய்த பெண்ணை கம்பஹா சிறப்பு புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.

வெயங்கொட பகுதியை சேர்ந்த அவர், பல்வேறு நபர்களிடமிருந்து 3 மில்லியன், 4 மில்லியன் மற்றும் 5 மில்லியன் ரூபாய் பணத்தைப் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜப்பான், நியூசிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்தப் பணத்தை மோசடி செய்துள்ளார். இந்தப் பெண்ணுக்கு எதிராக இதுவரை 22 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவரிடம் இருந்து 24 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளும் கைப்பற்றப்பட்டன.

மயானத்தில் 14 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வு : 42 வயது நபர் கைது!!

14 வயது சிறுவனை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் திருமணமான 42 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம், மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹுளந்தாவ தெற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் புத்தம பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், ஹுளந்தாவ தெற்கில் உள்ள தனது மனைவியின் வீட்டிற்கு வந்துள்ளார். இதற்கிடையில், சிறுவன் வயல்களுக்கு அழைத்துச் சென்ற அவர், அங்கு மயானத்தில் வைத்து கடுமையாக பாலியல் வன்கொடுமை உட்படுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தன்னுடைய பெற்றோருக்கு அந்த சிறுவன் தெரிவித்ததை அடுத்து, திருமணமானவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த மொனராகலை பொலிஸார், சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தனர்.

நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!!

கண்டி – அக்குரணை பிரதேசத்தில் இடம்பெற்ற நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை 01.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி, வேன் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஆகியன ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் மோட்டார் சைக்கிள்களின் செலுத்துனர்கள் இருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின் சடலம் மீட்பு!!

வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் கிணற்றில் இருந்து இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவர் வீழ்ந்து இருந்ததை அவதானித்த ஊர் மக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் பெண் ஒருவரின் சடலத்தை மீட்டதுடன், திடீர் மரண விசாரணை அதிகாரி க.கரிபிரசாத் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.

வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியைச் சேர்ந்த 30 வயது இளம் யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தங்க விலையில் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு வெளியான முக்கிய தகவல்!!

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.

அதற்கமைய நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது, இன்றையதினம்(25) தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 894,962 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,570 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 252,600 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலையானது28,940 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 231,550 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 27,630 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 221,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 237,500 ரூபாவாகும். இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 219,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை மேற்குறிப்பிட்ட விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் சிறுமி ஒருவரை ஈவிரக்கமின்றி கட்டிவைத்து தாக்குதல் : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, குடத்தனை பொற்பதியில் 14 வயது சிறுமி ஒருவரை , பெண் ஒருவர் ஈவிரக்கமின்றி மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பாக, தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பருத்தித்துறை சட்ட வைத்திய அதிகாரி, மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி ஒருவர், நேற்று முன்தினம் (23) மாலை, அயலில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார்.

இதன்போது, இனிப்பு வகையை கையாடியதாகக் கூறி, கடையின் உரிமையாளரான ஒரு பெண், சிறுமியை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் உடல் காயங்களுக்கு உள்ளான சிறுமி, அன்று இரவே பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை சட்ட வைத்திய அதிகாரி, சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதைக் கண்டறிந்து,

தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, வைத்தியசாலையில் உள்ள பருத்தித்துறை பொலிஸார் மூலம் மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மருதங்கேணி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றபோது, அவர் மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு தாக்கப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

சம்பவத்தில் சிறுமையை தாக்கிய பெண்ணின் வீட்டிற்கு பொலிஸார் சென்றபோது, வீடு பூட்டியிருந்ததால், தொலைபேசி மூலம் அவருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த பொது அமைப்பு ஒன்று, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் தொலைபேசி வழியாக முறையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

14 வயது சிறுமிக்கு 33 வயது நபருடன் காதல் : பேருந்தில் சிக்கிய ஜோடி!!

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதிகும்புர கஹம்பான பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்ற 33 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று திங்கட்கிழமை (24) அன்று மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் தாயார் பொலிஸில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, இருவரும் எம்பிலிபிட்டியவிலிருந்து மொனராகலைக்கு வரும் பேருந்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபரை மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வைத்திய பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காதலனின் வீட்டின் மதில் இடிந்து விழுந்ததில் யுவதி பரிதாபமாக உயிரிழப்பு!!

களுத்துறை, பனாபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மதில் இடிந்து விழுந்ததில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

வாதுவை, மொரொன்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தன்று, இந்த யுவதி தனது காதலனின் பாட்டியிடம் நலம் விசாரிப்பதற்காக பனாபிட்டிய பிரதேசத்தில் உள்ள காதலனின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இதன்போது வீட்டின் மதில் யுவதியின் மேல் இடிந்து விழுந்துள்ளது.

படுகாயமடைந்த யுவதி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் ஏற்கனமே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

80 வயது முதியவரான சாதாரண தர பரீட்சார்த்தி கணித வினாத்தாள் தொடர்பில் வெளியிட்ட அதிருப்தி!!

2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் 80 வயது முதியவர் ஒருவர், கணிதத் தேர்வு வினாத்தாள் குறித்து அதிருப்தி தெரிவித்ததை அடுத்து, கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்திக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊடகங்களிடம் பேசிய அந்த முதியவர், பொறியாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கணிதப் பாடத்திற்கான வினாத்தாள்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுவதாக கூறினார்.

“முன்னர், கலை, வணிகம் மற்றும் பொறியியல் துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தனித்தனி கணிதத் தேர்வுத் தாள்கள் வழங்கப்பட்டன.

இருப்பினும், இப்போது பொறியாளர்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாள்கள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படுகின்றன. இது நியாயமற்றது மற்றும் பல ஆண்டுகளாக இது நடந்து வருகிறது,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பொதுவான வினாத்தாளுக்கு பதிலாக, பாடப் பிரிவுகளுக்கு ஏற்றவாறு கணித வினாத்தாள்களை வழங்கும் முறையை மீண்டும் தொடங்குமாறு அந்த முதியவர் கல்வி அதிகாரிகளை வலியுறுத்தினார்.

மேலும், தனியார் வகுப்பு முறையை ஒழிக்க வேண்டும் என்றும், தனியார் வகுப்பு ஆசிரியர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும், பாடசாலைகளில் கற்பிக்க அவர்களை நியமிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.