தாய்லாந்தில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களினால் அரியவகை விலங்கு இனம் ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மீன்பிடி வலை ஒன்றிலேயே குறித்த விலங்கினம் பிடிக்கப்பட்டுள்ளது.
ஈராக்கின் பக்தாத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 77ஆக அதிகரித்துள்ளது.
பக்தாத்தின் கர்பலா பிரதேசத்தில் உள்ள எரிப்பொருள் நிரப்பு நிலையம் ஒன்றை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவத்தினால் மேலும் 40 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இத் தாக்குதலிற்கு ஜ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீனாவில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படும் மின் உற்பத்தி நிலையமொன்றில் ஏற்பட்ட அனர்த்தத்தில் சிக்கி 67 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் ஜியாங்சி மாகாணத்திலுள்ள மின் உற்பத்தி நிலைமொன்றில் குளிரூட்டும் தொகுதி வைக்கப்பட்டுள்ள கோபுரத்தில் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த கோபுரத்தின் கட்டுமானப் பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மேடைகள் சரிந்து வீழ்ந்துள்ளன.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்காக 32 தீயணைப்பு வண்டிகளும் 212 தீயணைப்பு வீரர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்னிந்திய நடிகர் ஒருவர் தன்னுடைய கையில் பன்றிக்குட்டியுடன் வங்கி ஒன்றுக்கு முன்னால் வரிசையில் நின்றிருக்கும் புகைப்படம் எடுக்கப்பட்டதை தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தன்னுடைய அடுத்த திரைப்படமான அதிகோவில் இந்த பன்றிக்குட்டி நடிப்பதாக ரவி பாபு தெரிவித்துள்ளார். தெலுங்கில் அதிகோ என்றால் அங்கே என்று அர்த்தம்.
இந்தியாவில் ஊழல் மீதான கடும் நடவடிக்கை காரணமாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து, வங்கிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்பது வழக்கமாகிவிட்டது.
இந்த பன்றிக்குட்டியை ஒரு கணினி வரைகலை கூடத்திற்கு அழைத்து சென்று கொண்டிருந்தபோது, எரிபொருள் நிரப்ப பணம் இல்லை என்பதை நான் உணர்ந்தேன் என்று தெரிவித்துள்ளார் பாபு.
சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படம் பரவலாக பரவி வருகிறது. இந்த பன்றிக்குட்டியின் பெயர் புன்ட்டி, ரவி பாபுவின் திரைப்படத்தில் நடிக்கும் 25 பன்றிகளில் இதுவும் ஒன்று.
இவைகள் வேகமாக வளரக்கூடியவை. அதனால், பன்றிக்குட்டியின் கதாபாத்திரம் அதே அளவு தெரியவேண்டும் என்பதற்காக சில பன்றிக்குட்டிகளை நானே வளர்த்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார் ரவி பாபு.
துருக்கி நாட்டின் ஜனாதிபதியான எர்டோகன் கட்சி கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை தாக்கல் செய்தது. அதில், 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுமிகளை ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு பிறகு அவர்களையே திருமணம் செய்துக்கொண்டால் அதற்கு தண்டனை கிடையாது என அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் இதில் ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, சிறுமியை மிரட்டி அல்லது பலவந்தமாக பலாத்காரம் செய்தால் மட்டும் அது தண்டனைக்குரிய குற்றம் எனவும் அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தைப்பருவத்தில் திருமணம் செய்து வைக்கும் பழக்கம் பரவலாக இருப்பதால், இதற்கு தீர்வு காணும் நோக்கத்தில் இந்த சட்டம் கொண்டு வரப்படுவதாக அரசு கூறுகிறது. ஆனால், குழந்தை பாலியல் வல்லுறவை இது சட்டப்பூர்வமாக்கும் என்று விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்
இந்த மசோதாவிற்கு துருக்கி நாட்டின் பல்வேறு உரிமை அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த மசோதா குறித்து விமர்சகர்கள் கூறுகையில்,
“துருக்கி நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவிகிதம் அதிகரித்துள்ள நிலையில், இதுபோன்ற சட்டங்கள் குற்றங்களை மேலும் அதிகரிக்கும்.
ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் அவர் மிரட்டப்பட்டாரா? பலவந்தப்படுத்தப்பட்டாரா? என்பதை நிரூபிப்பது கடினம். ஒரு பெண்ணை அடைய விரும்பும் ஒரு ஆண்மகன் அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டால் போதும் அவள் தனக்கு கிடைத்துவிடுவார் என்ற தவறான எண்ணம் ஆண்கள் மத்தியில் அதிகரித்துவிடும்.
மேலும் 18 வயதுள்ள சிறுமிக்கு இந்த புதிய சட்டம் பொருந்தும் என்பதால், இதன் மூலம் குழந்தை திருமணத்தை அரசாங்கமே ஆதாரிப்பது போன்ற ஒரு நிலை ஏற்பட்டு விடும்” என்றனர்.
இதனிடையே, ஆளும் கட்சி கொண்டு வந்த சர்ச்சைக்குரிய இந்த புதிய சட்ட மசோதாவிற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் அளித்தது. இதையடுத்து குழந்தை திருமண மசோதா மீது பாராளுமன்றத்தில் இறுதி வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக கடும் எதிர்ப்பு நிலவி வந்ததால், துருக்கி அரசு மசோதாவை திடீரென திரும்ப பெற்றது.
வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு சற்று முன்பாக துருக்கி பிரதமர் பினாலியில்டிரிம் மசோதாவை திரும்ப பெறுவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த மசோதா துருக்கி பாராளுமன்ற கமிட்டியின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சில வருடங்களுக்கு முன் கைபேசி உலகை தன் வசம் ஆக்கிரமித்து வைத்திருந்தது நொக்கியா நிறுவனம்.
சிறிது இடைவெளிக்குப் பிறகு 5ஜி தொழில்நுட்பத்துடன் 2017 ஆம் ஆண்டு முதல் மீண்டும் சந்தையில் களமிறங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கைபேசி உலகில் மைல்கல்லாக இருந்த நொக்கியா நிறுவனம் தொடுதிரை தொழில்நுட்பத்தினைக் கொண்ட கைபேசி வரை அறிமுகம் செய்தது.
அதன்பின் மைக்ரோசொப்ட் நிறுவனத்துடன் இணைந்து விண்டோஸ் மொடல் போன்களை வெளியிட்டது, அதன்பின், சந்தையில் காணாத நொக்கியா தற்போது அன்ட்ரொய்ட் இயங்குதளத்தில் 5ஜி தொழில்நுட்பத்துடன் இயங்கக் கூடிய ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தவுள்ளது.
2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பார்சிலோனாவில் நடக்கவிருக்கும் ‘மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ்’ என்னும் வருடாந்த தொழில்நுட்ப விழாவில் புதிய மொபைல்கள் குறித்த அறிவிப்புகளை நொக்கியா வெளியிடவுள்ளதென எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக நொக்கியா எச்எம்டி குளோபல் என்ற புதிய தொழிநுட்ப நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நொக்கியா வெளியிடவுள்ள ஸ்மார்ட் போனில் 5ஜி தொழில்நுட்பம், விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆகுமெண்ட்டட் ரியாலிட்டி போன்றவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இரு சிம் கார்டுகளை பயன்படுத்தும் வகையில், 5.2 மற்றும் 5.5 இன்ச் அளவுடைய தொடுதிரையில், மெட்டாலிக் வடிவமைப்பில் ஐபி 68 என்னும் வாட்டர் ஃபுரூப் தரத்துடன் வடிவமைக்கப்படவுள்ளது.
இத்துடன் ஸ்னாப்ட்ராகன் 430 ப்ரோசசோர், 13 மெகாபிக்சல் திறனுள்ள பின்பக்க கமராவையும், 5 மெகாபிக்சல் முன்பக்க கமராவையும், 3 ஜிபி ரெம், 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு வசதியும் கொண்டிருக்கும் என நொக்கியா தெரிவித்துள்ளது.
தொலைபேசி சேவை வழங்குநர் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்யும் வகையில் இணைய டேட்டாவுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இணைய டேட்டா மூலம் வைபர், வட்ஸ் அப், பேஸ்புக் போன்றவைகளில் அழைப்பு பெற்றுக் கொள்வதனால் தொலைபேசி அழைப்புக்கான சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கு நட்டம் ஏற்படுகிறது.
அதற்கமைய அதன் நட்டத்தை ஓரளவு சமப்படுத்துவதற்காக இணையத்தள சேவை கட்டணத்தை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக எதிர்வரும் புரட்சிகரமான பயணம் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார். இவ்வாறான சந்தர்ப்பத்தில் இணையத்தள சேவை கட்டணம் அதிகரிக்கபடுவது ஏன் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்வாறான கட்டணங்கள் அதிகரிப்பின் ஊடாக டெலி கம்யூனிகேஷன் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு சில வருமானத்தை பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு கட்டணம் அதிகரிக்கப்பட்டதாக நிதியமைச்சர் குறிப்பிட்டார்.
தொலைப்பேசி சிம் அட்டை ஒன்றை பதிவு செய்யும் போது 250 ரூபாய் அறிவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளாகவும், தொலைப்பேசி ஊடாக ஏற்படுகின்ற அவசியமற்ற பிரச்சினைகளை வேறு பக்கம் திருப்பிக் கொள்வதற்காக தான் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முகநூலில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை விமர்சித்த இளைஞர் ஒருவரைபொலிஸார் கைதுசெய்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் சுட்டுச் சம்பவத்திற்கு பின்னர் வவுனியாமாவட்டத்தினைச் சேர்ந்த ந. ஜக்சன் என்ற இளைஞரே யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியைகடுமையான பல விமர்சனங்களை முன் வைத்து விமர்சித்திருந்தார்.
அந்த விமர்சனத்தின் பின்னர், குறித்த நபர் நேற்று புதன்கிழமை யாழ். நீதிமன்றில்அவருக்கு எதிரான காசு சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றிற்கு வருகை தந்திருந்த போது,நீதிபதியினால் அடையாளப்படுத்தப்பட்டதன் பின்னர் பொலிஸார் அவரை கைதுசெய்துபொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருந்தனர்.
மேற்படி நபர் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிலையில்,இன்று வியாழக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொள்வார்கள் என்றும், அதன்பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை அவர்கள்மேற்கொள்வார்கள் என்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
யுவதி ஒருவர் நீர்தேக்கத்தில் குதித்து உயிரை மாய்த்து கொள்ள முயற்சித்த போது ரயில் பாதையில் சிக்கி உயிர் தப்பியுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் தலவாக்கலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
தலவாக்கலை ரயில் பாலத்திலிருந்து மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்குள் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள இந்த யுவதி முயற்சித்துள்ளார்.
பத்தனையில் அமைந்துள்ள பிரபல ஆசிரியர் பயிற்சி கலாசாலை ஒன்றின் பயிலுனர் ஆசிரிய மாணவியே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
நீர்த் தேக்கத்தில் குதிக்க முயற்சித்த யுவதி தவறுதலாக புகையிரத பாதை கொங்கிரீட் தடுப்புக்காவலரணிற்குள் சிக்குண்ட நிலையில் இருந்த போது பொலிஸார் அவரை மீட்டுள்ளனர்.
21 வயதான குறித்த யுவதி வட்டகொட மடகும்புர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓராண்டு காலமாக நீடித்து வந்த காதல் உறவு முறிவடைந்த காரணத்தினால் ஏற்பட்ட மன விரக்தியினால் யுவதி தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக பொலிஸார் நடத்திய ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
காயமடைந்த யுவதி லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கை வான்பரப்பினை விண்வெளி மையம் கடந்து செல்லும் நிகழ்வை இன்று அவதானிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 6.40 மணியளவில் இலங்கையின் வான் பரப்பில் விண்வெளி மையம் கடந்து செல்லும் என நாசா அறிவித்துள்ளது.
இதனை வெற்றுக் கண்களால் பார்வையிட இலங்கையர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
எனினும் சீரற்ற காலநிலையால் மழையோ அல்லது முகில் கூட்டங்களோ அதிகமாக இருந்தால் பார்வையிடுவதில் சிக்கல் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பூமியில் நடக்கும் அனைத்து விதமான விடயங்களும் விண்வெளி ஆய்வு மையத்தின் ஊடாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பூமியிலுள்ள பல சுவாரஸ்சிய தகவல்கள் இதன்மூலம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மிகப் பெரிய இராட்சத கடல் ஆமை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தில் கடற்கரையோரத்தில் ஆமை இனங்காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் கடற்பிரதேசத்தில் காணப்படும் கடல் ஆமைகளில் இது மிகவும் பெரியதென தெரிவிக்கப்படுகிறது.
வழமையான ஆமைகளை விடவும், இந்த ஆமை மிகவும் வலிமை கொண்டதாக காணப்படுகிறது.
இந்த ஆமையை வீணை ஆமை அல்லது கடின தோல் கொண்ட ஆமை என கூறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது காலத்தையும் பணத்தை மற்றவர்களுக்காக செலவு செய்து தானங்களை வழங்க விரும்பும் மனிதர்கள் அதிகளவில் வாழும் 5 நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் பிரபல நிறுவனமான கோல் அப் நிறுவனம் 146 நாடுகளை அடிப்படையாக கொண்டு இது தொடர்பாக நடத்திய ஆய்வுகளை நடத்தியுள்ளது.
இது ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் தொடர்பான அறிகுறியை வெளிப்படுத்துவதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மியன்மார், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை ஆகிய நாடுகள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் முன்னணியில் இருக்கும் நாடுகளாகும்.
இலங்கையர்கள் பின்பற்றும் மதங்களே அவர்கள் உதவும் மனநிலைமைக்கு காரணம் எனவும் இலங்கையில் பௌத்தம் மற்றும் இந்து மதங்கள் பெருமளவில் பின்பற்றப்படுவதாக கோல்அப் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த இரண்டு மதங்களும் தானம் வழங்குவதை ஊக்குவிக்கின்றன. இலங்கை மக்கள் எப்போதும் முகத்தில் சிரிப்புடன் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் பின்நிற்பதில்லை எனவும் கோல் அப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஒரு மாத காலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. உலக மக்களின் 1.4 பில்லியன் மக்கள் சமூக சேவைகளுக்கு நிதி வழங்கியுள்ளனர். ஒரு பில்லியன் மக்கள் சமூக சேவைகளுக்காக உழைப்பு ரீதியான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
2.2 பில்லியன் மக்கள் அனாதரவாக இருக்கும் நபர்களுக்கு உதவியுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அறவிடப்படும் தண்டப்பணம் அதிகரிக்கப்படவுள்ளதாக பொய்யான வதந்திகளை நம்பி ஏமார வேண்டாம் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு அதுகமான மக்கள் வருகை தருவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிரி தெரிவித்தார்.
வேரகல மற்றும் நாராஹேன்பிட அலுவலகங்களில் அதிகமான மக்கள் வருகை தருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தண்டப்பணம் எந்த சந்தர்ப்பத்திலும் அதிகரிக்கப்படமாட்டாது என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இயங்கும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கணினி கட்டமைப்பு தற்காலிகமாக செயலிழந்துள்ளதாக தெரியவருகிறது.
விமான நிலையத்திற்காக வழங்கப்பட்டுள்ள தொலைப்பேசி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மந்தமான நிலைமையே இதற்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குடிவரவு, குடியகல்வு நடவடிக்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் சற்று நேரத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
மஸ்கெலியா கோர்த்தி தோட்டத்தில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகிய 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று சிறார்களும், 32, 36 மற்றும் 42 வயதான மூவர் உள்ளிட்ட ஆறு பேர் மின்னல் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கத்திற்கு இலக்கானவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அனர்த்தம் நேற்று (23) மாலை 4.30 அளவில் இடம்பெற்றுள்ளது.
மின்னல் தாக்கத்திற்கு இலக்கானவர்களின் நிலை பாரதூரமாக இல்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் தற்போது அவல நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
சுத்தமான குடிநீர் இன்றியும் சுகாதாரமான மலசலகூட வசதிகளின்றியும் பிள்ளைகளுக்கு அடிப்படை வசதிகளும் இன்றி இருபது வருடமாக தமக்குரிய இருப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்டாமல் அகதி வாழ்வினை வாழ்ந்து வருகின்றனர்.
நாட்டில் ஏற்பட்ட யுத்தம் முடிவிற்கு கொண்டவரப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும் இப்பகுதி மக்களை நெடுங்கேணி சின்னஅடம்பனில் மீள் குடியேற்றம் செய்வதற்கு வவுனியா மாவட்ட செயலகம் ஏற்பாடுகள் மேற்கொண்டு வருகின்றது.
எனினும் இம்மாதம் இப்பகுதி மக்களை மீள்குடியேற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். எனினும் தற்போது மீள்குடியேற்றப்பணிகள் மேற்கொள்ள காலதாமதமாகும் என்று தெரிவித்து வருகின்றனர்.
தற்போது நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளவர்கள் கருத்து தெரிவிக்கையில்..
தமக்கு சுத்தமான, சுகாதாரமான சூழ்நிலையினை ஏற்படுத்தித்தருமாறும் பெண்கள் மலசல கூடத்திற்கு குளப்பகுதிக்கு சென்று வருவதாகவும். தற்போது மழை காலமாவதால் அங்கு விஷப்பாம்புகள் படையெடுத்து வருவதாகவும் தமக்கான மலசல கூடத்தினை அமைத்து அல்லது தற்போது பாவனையற்றிருக்கும் மலசலகூடத்தினை திருத்தி பாவனைக்குரியதாக மாற்றித்தருமாறும் சுத்தமான குடிநீர் பெற்றுத்தர ஆவண செய்து தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அத்துடன் தமக்கு வழங்கப்பட்ட மின்சாரம் நேற்று துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கையினை மேற்கொள்வதில் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாகவும் துண்டிக்கப்பட்ட மின்சாரத்தினைப் பெற்றுத்தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இடம்பெயர்ந்து அடிப்படை வசதிகளற்ற நிலையிலும் பாதுகாப்பற்ற வீடுகளிலும் இம் மக்கள் பெரும் சொல்லெண்ணாத்துன்பத்தினை அனுபவித்து வருகின்றனர்.
மழைகாலம் ஆரம்பித்துள்ளதால் நுளம்பு பெருக்கத்தினைக்கட்டுப்படுத்துவதற்கும் சிறுவர்களைப் பாதுகாப்பதற்கும் நுளம்பு வலைகளைப் பெற்றுத்தருமாறும் கோரியுள்ளனர்.
வரும் காலம் பருவ மழையிலும் இரண்டு தசாப்தகாலம் அகதிவாழ்விற்கு விடைதெரியாமலிருக்கும் இம்மக்களின் அவல நிலையினை கருத்திற்கொண்டு உதவிபுரியுமாறும் இம்மக்கள் அவலக்குரல் எழுப்பியுள்ளனர்.