சம்சுங் நிறுவனம் அண்மையில் Galaxy Note 7 ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகம் செய்து பாரிய பின்னடைவை சந்தித்திருந்தமை அனைவரும் அறிந்ததே.
ஆனால் அத்துடன் நின்றுவிடாது அதன் பின்னரான குறுகிய காலத்தில் ஏறத்தாழ மூன்று வகையான கைப்பேசிகளை அந் நிறுவனம் அறிமுகம் செய்துவிட்டது.
இந்நிலையில் தற்போது Samsung Galaxy C9 Pro எனும் மற்றுமொரு புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
இக் கைப்பேசியானது 6 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Snapdragon 652 Processor, பிரதான நினைவகமாக 6GB RAM, 64GB சேமிப்பு கொள்ளளவு என்பவற்றினைக் கொண்டுள்ளன.
இவற்றுடன் தலா 16 மெகாபிக்சல்களைக் கொண்ட பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும் நீண்ட நேரத்திற்கு மின் சக்தியை வழங்கக்கூடிய 4,000 mAh மின்கலமும் இணைக்கப்பட்டுள்ளது.
இக் கைப்பேசியின் விலையானது 474 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பதுளை – மடுல்சீமை, ஊவாக்கல தோட்ட பகுதியில் பெண் ஒருவர் தனது இரு பச்சிளம் குழந்தைகளையும் கத்தியால் குத்தியதோடு தற்கொலைக்கு முயற்சித்துள்ள சம்பவம் குறித்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளதாகவும், குடும்பத் தகராறு காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் மடுல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் ஒரு வயது மற்றும் ஆறு மாதங்களேயான இரு பச்சிளம் குழந்தைகளையே குறித்த பெண் தாக்கியதோடு தன்னைத் தானே குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள இரண்டு பிள்ளைகளும், குறித்த பெண்ணும் பதுளை பொது வைத்தியசாலையில் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக மடுல்சீமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பாகிஸ்தான் அணி வீரரான யூனிஸ்கான், 35 வயதுக்கு பிறகு 13 சதங்களை எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.
பாகிஸ்தான்- மேற்கிந்திய தீவுகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது. நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது.
முதலில் வந்த வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்கவே, ஆசாத் ஷபிக் மட்டும் 68 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து வந்த யூனிஸ்கான் சூப்பராக விளையாடி 33வது சதத்தை எட்டினார், இது 35 வயதுக்கு பிறகு எடுக்கும் 13வது சதமாகும்.
இவர்கள் 35 வயதுக்கு பிறகு 12 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. யூனிஸ்கான் 127 ஓட்டங்கள் (205 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார், முதல்நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 304 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
அமெரிக்காவில் பிறந்த பெண் குழந்தை ஒன்று ‘உலகிலேயே மகிழ்ச்சியான குழந்தை’ என்ற பட்டத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.
மினிசொட்டா மாகாணத்தில் டேவிட் மற்றும் லாரன் என்ற தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த 2014ம் ஆண்டு லாரன் மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார்.
எனினும், பல்வேறு உடல்நலக்குறைவு காரணமாக லாரன் பிரசவத்திற்கு முன்னதாகவே பல பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வந்துள்ளார்.
28 வாரங்கள் முடிந்த நிலையில் லாரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வயிற்றில் குழந்தைக்கு இதய துடிப்பு சீராக இல்லை என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.
மேலும், குறிப்பிட்ட திகதிக்கு முன்னதாக குழந்தை பிறக்கும் என்பதால் தைரியமாக இருக்க வேண்டும் என லாரனுக்கு மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.
இந்நிலையில், பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
பொதுவாக, குழந்தை பிறக்கும்போது 2.5 முதல் 5 கிலோ எடை இருந்தால் தான் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என மருத்துவர்கள் கூறுவார்கள்.
ஆனால், லாரனுக்கு பிறந்த குழந்தை 1.7 கிலோ எடை மட்டுமே இருந்ததால் பெற்றோர் மிகவும் கவலையில் ஆழ்ந்தனர். மேலும், குழந்தையின் எதிர்காலத்தை எண்ணி மிகவும் வேதனை அடைந்தனர்.
இந்நிலையில், குழந்தை பிறந்து சரியாக 5 நாட்களுக்கு பிறகு ‘உன்னை புகைப்படம் எடுத்து அப்பாவுக்கு அனுப்பலாமா?’ என தனது குழந்தையிடம் லாரன் பேசியுள்ளார்.
தாயார் பேசியதை கேட்ட அக்குழந்தை திடீரென முகமெல்லாம் பிரகாசம் மலர குபீரென வாய்விட்டு சிரித்துள்ளது. தனது குழந்தை சிரித்ததை லாரன் தவறாமல் புகைப்படம் எடுத்துள்ளார்.
பொதுவாக, பிறந்த குழந்தை 5 நாட்களில் சிரிப்பது என்பது மிகவும் அரிதாகவே நிகழும். ஆனால், பிரசவ திகதிக்கு முன்னதாகவே பிறந்த அந்த குழந்தை தாயாருக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் வாய் விட்டு சிரித்துள்ளது பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லாரன் தனது குழந்தைக்கு பெரயா எனப்பெயரிட்டு அப்புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வரை 3 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளதுடன் ‘இது தான் உலகிலேயே மகிழ்ச்சியான குழந்தை’ எனக் கூறி சுமார் 35 ஆயிரம் பேர் அப்புகைப்படத்தை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் கழுத்தறுத்து கொன்றுள்ள சம்பவம் ஒரு ஆண்டிற்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார்குடியை சேர்ந்த 35 வயதான பெனிட்டா என்ற பெண்ணே இக்குற்றச்செயலில் ஈடுப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு மீனாட்சிசுந்திரம், பெனிட்டா தம்பதியினரின் இரண்டு குழந்தைகள் வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர்.
பெனிட்டா குளியல் அறையில் ரத்தக்காயங்களுடன் கிடந்துள்ளார். பொலிசார் நடத்திய விசாரணையில் மர்மநபர்கள் குழந்தைகளை கொலை செய்துவிட்டதாக பெனிட்டா கூறியுள்ளார்.
இந்நிலையில் வழக்கு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட பொலிசாருக்கு பெனிட்டா மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
கணவனுடன் ஏற்பட்ட தகராறில் தனது பிள்ளைகளை கொலை செய்து தானும் தற்கொலை செய்ய முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார்.
கந்தரோடையில் இருந்து யாழ்ப்பாணம் – பல்கலைக்கழக விடுதிக்கு, சென்று கொண்டிருந்த போதே கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்கள் இருவரினதும் பூதவுடலுக்கு இன்று காலை முதல் மாணவர்கள், பிரதேச மக்கள், மதகுருமார்கள், அரசியல்வாதிகள் என பல தரப்பட்ட தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்று வந்த அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஷனின் இருவரினதும் சடலங்கள் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதற்கு அமைய அவர்களது வீடுகளில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை நடராசா கஜன் என்ற 23 வயதுடைய மாணவனின் பூதவுடல் அவரது சொந்த இடமான கிளிநொச்சியிலுள்ள 155 ஆம் கட்டையில் வைக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளியான கஜனின் பூதவுடலுக்கு இன்று அதிகாலை முதல் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர், மாணவர்கள் உட்பட பலர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
இதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்திலும் கருப்புக்கொடிகள் தொங்கவிடப்பட்டுள்ளதுமன்,உயிரிழந்த மாணவர்களின் உருவப் படங்கள் பொறிக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி பதாதைகளும் தொங்கவிடப்பட்டுள்ளன.
இந்தியாவின் டெல்லி மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள் ராகுல் நர்வேகர்- ஆர்.ஜெ பல்லவி. பல்லவி கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளி, ஆனால் எந்தவொரு காரணத்திற்காகவும் அவர் துவண்டுபோகவில்லை, மாறாக அதை எதிர்த்து தன் வாழ்க்கையை மீட்க போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு பக்க பலமாக அவரின் கணவர் ராகுல் இருந்து வருகிறார்.
இந்த கணவனும் மனைவியும் வாழ்க்கையை எப்போதும் பாசிடிவ்வாகவே பார்க்க வேண்டும், எந்த பிரச்சனை வந்தாலும் தன்னம்பிக்கையோடு தைரியமாக எதிர்த்து சமாளிக்க வேண்டும் என்ற வார்த்தைகளுக்கு எடுத்துகாட்டாக வாழ்ந்து வருகின்றனர்.
பல்லவியின் தன்னம்பிக்கை குணத்தை பார்த்து மருத்துவமனையில் ஊழியர்கள் மிகவும் ஆச்சரியமடைந்துள்ளனர்.
தற்போது பல்லவி மருத்துவமனையின் ICU வார்டில் இருந்து கொண்டே ICU – LOVE STORIES என்னும் புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகத்தை அவரின் பிறந்தநாளன்று அவரின் கணவர் ராகுல் ICU வார்டிலேயே வெளிட்டிருக்கிறார்.
இது பற்றி ராகுல் கூறுகையில், பல்லவி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட நாங்கள் முடிவு செய்தோம்.
அதன் படி கேக் வெட்டி, அவர் எழுதிய புத்தகத்தை ICU வார்டிலேயே வைத்து வெளிட்டுள்ளோம் என அவர் கூறியுள்ளார்.
புற்றுநோயுடன் போராடும் பல்லவி விரைவில் அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
இந்தியாவில் வெள்ளை புலி ஒன்று தமிழ் மொழிக்கு மட்டுமே அடிபணியும் அதிசய நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
சென்னையிலிருந்து உதய்பூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்ட ராமா என்ற வெள்ளை புலியே இவ்வாறு நெகிழவைத்துள்ளது.
டெல்லியில் பிறந்த வெள்ளை புலி குட்டியிலேயே சென்னை வண்டிலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.
புலி குட்டியிலிருந்தே தமிழில் பயிற்சி பெற்றதால் தான் தமிழ் மொழிக்கு அடிபணிவதாக கூறப்படுகிறது.
தற்போது, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் உயிரியல் பூங்காவில் மக்கள் பார்வைக்கு ராமா வெள்ளை புலி வரவுள்ளது.
இந்நிலையில், உதய்பூர் உயிரியல் பூங்கா அதிகாரிகளின் கோரிக்கை படி வண்டலூர் பூங்காவில் ராமாவுக்கு பயிற்சியளித்த ஊழியர் ராஜஸ்தான் சென்று அங்குள்ள ஊழியருக்கு சில தமிழ் சொற்களை கற்பித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளி மாணவிகள் குழுவாக சேர்ந்து புகைப்பிடிக்கும் பரபரப்பு வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீடியோவில் பள்ளி மாணவிகள் யாருக்கும் தெரியாமல் மாடியில் சிகரெட் பிடிக்கின்றனர். இந்நிகழ்வை உடனிருந்த மாணவி ஒருவர் போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
மற்றொரு வீடியோவில், மாணவி ஒருவர் புகைப்பிடித்து கொண்டிருக்கிறார். அது வீடியோவாக பதிவு செய்வதை கண்டவுடன் அங்கிருந்து ஓடிவிடுகிறார்.
இரண்டு சம்பவமும் ஓரே இடத்திலே நடைபெற்றுள்ளது என தெரிகிறது. மாணவிகள் 9 அல்லது 10ம் வகுப்பு படிப்பவர்கள் போல் தெரிகின்றனர். வீடியோவில் அவர்கள் தமிழில் பேசுவது தெளிவாக கேட்கின்றது.
தற்போது வெளியாகியுள்ள குறித்த வீடியோ இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் படுகொலைகள் என கருத வேண்டிய சாட்சியங்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. பொலிஸ் காவலரணில் நிறுத்தாமல் செல்வோரை துரத்தி பிடிக்கவே, பொலிஸாருக்கு அதி நவீன 1000சீசீ மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. காவலரணில் நிற்காமல் வேகமாக போனவர்கள் துப்பாக்கி பிரயோகம் செய்துக்கொண்டு போனதாக தகவல் இல்லை.
இந்நிலையில் ஏன் சுட வேண்டும் என தெரியவில்லை. ஆகவே அவர்களை துரத்தி சென்று வழிமறித்து பிடிக்க வேண்டும். அப்படியே சுட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் முதலில் ஆகாயத்தை நோக்கியும்,பின்னர் முழந்தாளுக்கு கீழேயும் சுட வேண்டும் என்ற விதிகள் மூன்றாம் வகுப்பு குழந்தைக்கும் தெரியும். இவை பயிற்சி பெற்ற இந்த போலிசாருக்கு தெரியவில்லை என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
கொழும்பு கொட்டாஞ்சேனையில் இன்று இடம்பெற்ற தனது அமைச்சின் “அரசசேவை உங்களுக்காக” என்ற தொனிப்பொருளிலான நடமாடும் சேவையில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சில வாரங்களுக்கு முன் மலையகத்தில் புசல்லாவையில் ஒரு இளைஞர் பொலிஸ் காவலில் இருந்தபோது மரணமடைந்தார். இப்போது யாழ்ப்பாணத்தில் இந்த இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
நம் நாட்டுக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா. சபையின் சிறுபான்மை விவகார அறிக்கையாளர் ரீடா ஐஷக் இங்கே இருக்கும் போதே இந்த சம்பவம் நிகழ்ந்திருந்தால் இன்னமும் நிலைமை கேவலமாக இருந்து இருக்கும்.
எங்களுக்கு இராணுவம் வேண்டாம். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் சிவில் பொலிஸ் எங்கள் நண்பர்கள் என்று இன்று சொல்ல தொடங்கி இருக்கும் யாழ்ப்பாணத்து மக்களை மீண்டும் பொலிஸ் மீது அவநம்பிக்கை கொள்ள வைக்கும் சம்பவங்கள் இவை.
பொலிஸ் துறை தொடர்பில் புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்த, குற்றம் இளைத்தோர் மீது கடும் நடவடிக்கைகள் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு எடுக்க வேண்டும்.
சிகரட்டின் விலை 55 ரூபா வரை அதிகரிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிகரட்டிற்காக எதிர்காலத்தில் நூற்றுக்கு 15 வீத வரியை அறிவிடவுள்ளதாகவும் இதன்போது சிகரட் ஒன்றின் விலை 55 ரூபாவாக அதிகரிக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போது சிகரட் ஒன்றின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் சுருட்டு மற்றும் பீடி ஆகியவற்றின் பாவனையையும் குறைக்க வேண்டியுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் வசித்து வரும் தேய்வேந்திரன் சிறி காந்தன் (வயது 29) என்பவர் கடந்த 18.10.2016 காணாமல் போயுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாரிடம் ஊறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா உக்குளாங்குளத்தில் கல்வி நிலையத்திற்கு மேலதிக வகுப்பிற்கு சென்றிருந்த தனது பிள்ளையை கூட்டிவரச் NP BDJ 2134 இலக்கமுடைய மோட்டார் வண்டியில் சென்றவர் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.
காணாமல் போனவர் அண்மையிலேயே வெளிநாடு ஒன்றில் தொழில் புரிந்து நாடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காணாமல் போனவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியாவில் நேற்று (21.10.2016) மாலை 4 மணிக்கு கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் பொது நோக்கு மண்டபத்தில் மீன்பிடி போக்குவரத்துத்துறை, கிராமிய அபிவிருத்தித் திணைக்கள, வீதி அமைச்சர் ப.டெனீஸ்வரனால் தெரிவு செய்யப்பட்ட 40 முன்னாள்போராளிகள், அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி. ரி.லிங்கநாதன், செ.மயூரன், வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், கிராமிய அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர், அமைச்சின் செயலாளர், என பலரும் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், தண்ணீர் இறைக்கும் இயந்திரம் மாடு வளர்ப்பிற்கான காசோலை, தலா ஒரு பயனாளிக்கு ஜம்பதாயிரம் ரூபாவீதம் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கிராம பொது அமைப்புக்கள், முன்னாள் போராளிகளின் குடும்பங்கள், அரசியல் கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு வாழ்வாதார உதவிகளைப் பெற்றுக்கொண்டனர்.
சிறீரெலோ இளைஞர் ஒன்றியத்தினால் நேற்று (21.10.2016) காலை 11.30 மணியளவில் வவுனியா பொதுவைத்தியசாலையில் இரத்ததான நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.
நேற்றுமுன்தினம் வவுனியா வைத்தியசாலையில் இரத்த வங்கியில் இரத்தம் பற்றாக்குறை என்று வெளியான தகவலை முன்னிட்டு சிறீரெலோ கட்சியின் செயளாளர் நாயகம் ப.உதயராசாவின் அறிவுறுத்தலுக்கு அமைய இளைஞர் அமைப்பினரின் அவசர ஒழுங்கமைப்பிலேயே இந்நிகழ்வு இடம்பெற்றதெனவும் இதில் பங்குபற்றிய இளைஞர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸதர்கள் அனைவருக்கும் சிறீரெலோ கட்சியின் செயளாளர் நாயகம் ப.உதயராசா மற்றும் இளைஞர் ஒன்றியத்தின் தலைவர் ப.கார்த்திக் ஆகியோர் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.